(தொகுப்பிலிருக்கும் 61வது கதை)
சிராவஸ்தியின் ஜேதவனத்தில் இருக்கையில் இந்தக் கதையை புத்தர் சொல்கிறார்.
ஒரு நாள், பிக்ஷை சேகரிப்பதற்காகச் சீடர்கள் நகருக்குள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இந்தச் சீடர் வீடொன்றின் வாயிலில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் கண்டார். பெண்ணின் மித மிஞ்சிய அழகு, அவள் அணிந்திருந்த அற்புதமான ஆடையால், அலங்காரத்தால் மேலும் பிரகாசித்தது. மடத்துக்குத் திரும்பிய பின்னரும், அவள் முகமும் அவள் அழகும் அவருக்குள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவரால் எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடியவில்லை. தியானத்திலோ வேறு சிந்தனையிலோ ஈடுபட முடியவில்லை என்கிறது கதை.
தான் அவளை விரும்பத் தொடங்கிவிட்டதாக அவர் நினைத்தார். அன்றிலிருந்து, காதல் அம்புகள் அவரைத் துளைக்கத் தொடங்கின; அந்தப் பெண் மீதான ஆசையால் அவர் நோய்வாய்ப்பட்டது போலானார். ஒரு காட்டு மானைப்போல உடல் மிகவும் மெலிந்து போனார். அவரது ரத்த நாளங்கள் வெளியில் தெரியத் தொடங்கின. அவரது தோல் மஞ்சள் நிறமாகியது. பௌத்தத்தின் நான்கு நிலைகளில் எதிலும் அவரால் ஒன்ற முடியவில்லை; இயல்பான எண்ணங்களாலும் மகிழ்ச்சியை அடையவில்லை. ஆசிரியர்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துச் சேவைகளையும் கடமைகளையும் கைவிட்டார்; கட்டளைகளையும் அறிவுரைகளையும் விசாரித்து அறிந்து கொள்வதையும் தியானத்தையும் கைவிட்டார்.
அவருடன் வசித்த மற்ற சீடர்கள் இவரிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தனர். ‘சகோதரரே, ஒரு காலத்தில் நீங்கள் அமைதியாகவும், சாந்தமான முகத்துடனும் இருந்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் முகம் அப்படி இல்லை. என்ன காரணம் என்று எங்களிடம் சொல்லலாமா?’ என்று கேட்டனர்.
‘சகோதரர்களே, எனக்கு எதிலும் மகிழ்ச்சி இல்லை’ என்று அந்த சீடர் பதிலளித்தார்.
அவர்கள் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர்: ‘மகிழ்ச்சி கொள்ளுங்கள், சகோதரரே! புத்தர் வாழும் காலத்தில் நீங்கள் பிறந்திருப்பது அரிதான விஷயம்: உண்மையான தம்மத்தைக் கேட்பதும், கேட்கும் வகையில் மனிதனாகப் பிறந்திருப்பதும் அரிதான விஷயம். நீங்கள் அவற்றை அடைந்துவிட்டீர்கள்; எனினும், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏங்குகிறீர்கள். விம்மி அழுகிற உங்கள் உறவினர்களை விட்டுவிட்டு, பௌத்த மதத்தின் விசுவாசியாகி துறவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எனில் இப்போது நீங்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி தாழ்நிலையை அடைகிறீர்கள்? புழுக்கள் தொடங்கி மடமை நிறைந்த அனைத்து உயிரினங்களுக்கும் இத்தகைய தீய உணர்வுகள் பொதுவானவை. இந்த உணர்வுகள் அனைத்தும் அவற்றின் தோற்றத்தில் லோகாயதமானவை என்பதால், அவை உண்மையில் அடிப்படையில் சாரமற்றவை.
ஆசைகளால் துக்கமும் விரக்தியும்தான் மிஞ்சும். அதனால், துன்பம் எப்போதும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆசை என்பது எலும்புக்கூடு அல்லது இறைச்சித் துண்டு போன்றது. ஆசை என்பது வைக்கோல் துடைப்பத்தில் ஏற்றிய தீப்பந்தம் அல்லது தணலின் ஒளி போன்றது. ஆசை ஒரு கனவு போல், கடனைப்போல், மரத்தின் கனி போல் அழிந்துபோகக் கூடிய ஒன்று. ஆசை என்பது கூரிய முனை கொண்ட ஈட்டியைப் போல் குத்தும் அல்லது பாம்பைப் போல் கொத்தும். ஆனால் நீங்கள், புத்தரின் நன்னெறி உபதேசங்களைக் கேட்டு துறவு வாழ்க்கையை உறுதியாகத் தழுவிக் கொண்டவர்; இப்போது நீங்கள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உணர்ச்சிகளின் வசப்பட்டுவிட்டீர்கள். அதிலிருந்து மீண்டுவாருங்கள்’.
சீடர்கள் பலரும் அவருக்கு அறிவுரைகளும் விளக்கமும் தந்தனர். ஆனால், அவர் அந்தத் தாக்கத்திலிருந்து வெளிவர இயலவில்லை. ஆகவே அந்த சீடர்கள் அவரை தம்ம மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த பேராசானிடம் அழைத்து வந்தனர்.
‘சகோதரர்களே, இந்தத் துறவியின் விருப்பத்துக்கு மாறாக நீங்கள் இவரை இங்கு அழைத்து வந்ததுபோல் தெரிகிறது. என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள விழைகிறேன்.’
அதற்கு அவர்கள் கௌதமரிடம் ‘இந்த சீடர் தன்னால் மனநிறைவுடன் இருக்க இயலவில்லை என்று எங்களிடம் அவர் கூறுகிறார்’ என்றனர். எதையொட்டி இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது என்பதை அந்த சீடரிடம் கேட்டறிந்து கொண்டார்: ‘ஒரு பெண்ணின் மேல் எனக்கு ஆசை ஏற்பட்டுவிட்டது. அவளை அடைய வேண்டும் என்ற எண்ணம் என்னை வியாபித்திருக்கிறது’.
அந்தத் துறவியை நோக்கி குருவான கௌதமர் கூறினார்: “சிஷ்யா, பெண்கள் காம உணர்வைத் தூண்டுபவர்கள்; காமம் பொறுப்பைப் புறக்கணிக்கத் தூண்டும் உணர்வு; அது அற்பமானது என்பதுடன், இழிவானதும்கூட. இத்தகைய போதையூட்டும் உணர்வுக்கும் கட்டுக்கடங்காத ஆசைக்கும் நீங்கள் அடிபணிந்து போகாதீர்கள்’ என்று கூறி, கடந்த பிறவியில் நடந்த கதை ஒன்றைச் சொன்னார்.
0
முன்பொரு காலத்தில் பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்தார்; அப்போது, போதிசத்துவர் காந்தார ராஜ்ஜியத்தின் தட்சசீல நகரில் அவதரித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று அங்கு இயங்கி வந்தது. மூன்று வேதங்களிலும் அனைத்துக் கல்வியிலும், கலைகளிலும் போதிசத்துவர் தேர்ச்சி பெற்றார். ஆசிரியராக அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அவர் திறனறிந்து அவரிடம் மாணவனாகச் சேர்ந்து பயிலப் பலரும் தேடி வந்தனர்.
அந்த நாட்களில் வாராணசியில் வசித்த ஒரு பெற்றோருக்கு ஆண் மகன் ஒருவன் பிறந்தான்; மகன் பிறந்ததும் அவர்கள் அக்னி வளர்த்து பூஜைகள் செய்தனர். அன்று தொடங்கி, அந்தச் சிறுவனுக்குப் பதினாறு வயது ஆகும்வரையிலும் அந்த அக்னியை அணையாமல் பாதுகாத்து பூஜை செய்துகொண்டிருந்தனர். பதினாறாவது பிறந்த நாளன்று பெற்றோர் அவனை அழைத்து, அணையாமல் அவர்கள் பாதுகாத்திருக்கும் அக்னியைப் பற்றியும் அதனுடைய முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
அக்னியைப் பூஜித்து வாழும் தவ வாழ்க்கையை அவன் தெரிந்தெடுக்கப் போகிறானா அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாக இயல்பான, சாதாரண வாழ்க்கையை வாழப்போகிறானா? இரண்டில் எதை அவன் தேர்வு செய்யப்போகிறான்? பிரம்ம உலகத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று அவன் விரும்பினால், அதில் அவன் உறுதியாக இருந்தால், ‘இங்கு நாங்கள் வளர்த்துப் பூஜித்து வரும் அக்னியை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று, அங்கு அந்த நெருப்பு அணையாமல் பாதுகாத்து, இறைவனை வணங்கி இடைவிடாமல் பூஜித்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்; அல்லது குடும்ப வாழ்க்கை என்ற மகிழ்ச்சியை விரும்பினால் தட்சசீல நகருக்குச் சென்று கல்வியையும் கலைகளையும் கற்று லோகாயத வாழ்க்கையை எப்படி நடத்துவது, இருக்கும் சொத்துகளை எப்படி நிர்வகிப்பது என்பதை உலகப் புகழ்பெற்ற ஆசிரியரிடம் மாணவனாகச் சேர்ந்து படித்து வா’ என்று சொன்னார்கள்.
‘அக்னி பகவானை வழிபடுவதில் நிச்சயம் நான் தோல்வியடைவேன்; ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று அந்த இளைஞன் பெற்றோரிடம் கூறினான்.
எனவே, அவனது பெற்றோர் வாழ்த்துகள் கூறி தட்சசீலத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்குக் கல்வி பயில்வதற்கான கட்டணமாக ஆயிரம் காசுகளையும் கொடுத்தனுப்பினர். விடைபெற்ற அந்த இளைஞன் பல நாட்கள் பயணத்துக்குப் பின்னர் தட்சசீலத்தை அடைந்தான். இவன் தேடிவந்த குருவைத் தேடி தன்னுடைய விழைவைத் தெரிவித்தான்.
போதிசத்துவர் அந்த இளைஞனுக்கு முறையாக அனைத்தையும் சொல்லித் தந்தார். கல்வி கற்று முடியும் வரையிலும் அவரின் வீட்டிலேயே தங்கியிருந்து படித்தான். கற்க வேண்டிய அனைத்தும் கற்று முடித்துவிட்டதாக குரு கூறியதும், அவரிடம் விடைபெற்று, திரும்பவும் பல நாட்கள் பயணத்துக்குப் பின்னர் வாராணசியை அடைந்து, பெற்றோரைக் கண்டு வணங்கி நின்றான்.
எனினும், அவனது பெற்றோர்கள் அவன் இல்லற வாழ்க்கையை, மற்ற அனைவரையும் போல் மேற்கொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தனர். உலகத்தைத் துறந்து, அக்னியை வணங்கி காட்டில் அவன் தவ வாழ்க்கை மேற்கொள்வதையே விரும்பினர். இந்த எண்ணம் அந்தப் பெற்றோர் மனத்தில் வலுவாக ஊன்றிவிட்டது.
ஆகவே, புலன் உணர்வின் எழுச்சியால் மனிதர்க்கு ஏற்படும் ஆபத்துகளையும், காம உணர்வுக்கு ஆட்படுவதால் ஏற்படும் தீமைகளையும் மகனுக்குச் சொல்லித் தரவேண்டும்; அதன் மூலம் இல்லற வாழ்க்கையில் அவனுக்கு இருக்கும் விருப்பத்தைத் திசைதிருப்பி, காட்டுக்குச் செல்லும் விருப்பத்தை அவனுக்குள் தூண்டலாம் என்று அவன் தாய் விரும்பினாள். இதைக் கற்றறிந்த குருதான் செய்ய முடியும் என்று நினைத்தாள். அவனைத் திரும்பவும் அந்த குருவிடம் அனுப்ப முடிவெடுத்தாள். அந்த நோக்கத்துடன் மகனை நோக்கி, ‘கல்வியை முழுமையாகக் கற்றுக் கொண்டாயா?’ என்று கேட்டாள்.
‘ஆமாம்’ என்றான் மகன்.
‘அனைத்தும் கற்றாயா?’
‘ஆமாம், அம்மா’என்றான் இளைஞன்.
‘எனில், துயரம் குறித்த பாடங்களை விட்டுவிடவில்லையே’.
‘ நீங்கள் சொல்வதுபோல் எதுவும் அவர் கற்பிக்கவில்லையே’.
‘நிச்சயமாக…?’
‘ஆமாம், அம்மா. அப்படி எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை’.
‘அப்படியா? எனில், வாழ்க்கைக்கு முக்கியமான அந்தப் பாடம் இல்லாமல், எப்படி உன் கல்வி முழுமை பெறும்? முடிந்துவிட்டதாகச் சொல்ல முடியும்? ஆகவே, அன்பு மகனே, நீ உன் குருவிடம் உடனே திரும்பிச் செல். விடுபட்ட இந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்ட பின்னர் திரும்பி வா’ என்றாள் அந்தத் தாய்.
அந்த மகனும் தாயின் சொல்லைத் தட்டாமல், ‘சரி அம்மா’ என்று கூறிவிட்டு மீண்டும் தட்சசீலம் நோக்கிப் புறப்பட்டான்.
(தொடரும்)