Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை)

… கதையின் தொடர்ச்சி

போதிசத்துவருக்கு வயதான தாய் இருந்தார்; அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும். அவரால் அவருக்கான வேலைகளைச் செய்து கொள்ள முடியாது. அம்மாவை மகன்தான் குளிப்பாட்டுவார்; ஆடைகள் அணிவிப்பார்; சாப்பாடு ஊட்டுவார்; அவருக்கான சேவைகள் அனைத்தையும் செய்து பராமரித்து வந்தார்.

எனினும் அவர் இப்படி ஒரு முதியவளை வைத்துப் பராமரிப்பதை அருகில் வசித்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அவர்களால் அடிக்கடி ஏளனம் செய்யப்பட்டார். அதனால், அவர் அந்த இடத்தைவிட்டு வெளியேறி, ஒரு வனத்தில் வசிப்பதற்கு முடிவு செய்தார். அதன்படி, காட்டில் தனிமையான ஓரிடத்தில், நீர் ஏராளமாகக் கிடைக்கும் ரம்மியமான இடத்தைக் கண்டறிந்து குடிசை ஒன்றை அமைத்தார். நெய், அரிசி, தேவையான ஏனைய பொருட்களையும் அந்த இடத்தில் சேகரித்து வைத்துக்கொண்டார். அதன் பின்னர் தாயைப் புதிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே அன்புடன் நிம்மதியாக வாழ்ந்தார்.

தட்சசீலத்துக்குச் சென்ற அந்த இளைஞன், முன்னர் அவரைச் சந்தித்திருந்த இடத்தில் ஆசிரியரைக் காணாததால், அவரைக் குறித்து அருகில் வசிப்பவர்களை விசாரித்தான். அவர் தன் தாயுடன் வனத்தில் வசிப்பதை அவர்கள் மூலமாக அறிந்து, காட்டில் அவரைத் தேடிக் கண்டுபிடித்து மரியாதையுடன் அவரை வணங்கி நின்றான்.

அவருக்கு ஒரே வியப்பு. ‘சீடனே, எப்படி இங்கு வந்தாய்? நீ இவ்வளவு விரைவில் இங்குத் திரும்பி வரவேண்டிய காரணம் என்ன?’ என்று இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.

‘குருவே, உங்களிடம் நான் கற்ற பாடங்களில் துயரம் தொடர்பான பாடங்களைக் கற்கவில்லை என்று நினைக்கிறேன்’ என்று அந்த இளைஞன் பதிலுரைத்தான்.

‘அப்படியா? சரி, நீ அந்தத் துயரம் சார்ந்த பாடங்களைக் கற்க வேண்டும் என்று யார் சொன்னது?’

‘என் அம்மாதான் குருவே’ என்றான்.
போதிசத்துவர் யோசித்தார். இப்படி எந்த நூல்களும் இல்லை; சொல்லித்தரப் பாடங்களும் இல்லையே என்று எண்ணினார். புலனுணர்வுத் தூண்டுதல்களால், காமத்தால் ஏற்படும் ஆசையால் விளையும் தீமைகள் குறித்து மகன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தத் தாய் விரும்பியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே, மாணவனிடம், நல்லது, இங்கு தங்கியிரு. உரிய நேரத்தில் அது குறித்த நூல்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

பிறகு மாணவனை அழைத்து சில உத்தரவுகளைக் கூறினார். ‘சீடனே இன்று முதல் நீ தான் என் அம்மாவை, உன் தாயைப் பார்த்துக் கொள்வதுபோல் இங்கு இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். உன் கைகளால் அவளைக் குளிப்பாட்ட வேண்டும். தலை முடியை அலசி கட்டிவிட வேண்டும், உணவளிக்க வேண்டும். மற்ற தேவைகளையும் கவனித்துக் கொள்ளவேண்டும். முக்கியமான ஒன்று. அம்மாவின் கைகள், கால்கள், தலை மற்றும் முதுகு ஆகியவற்றைத் தேய்த்துக் குளிப்பாட்டும்போதோ, அவளது கை, கால்களைப் பிடித்துவிடும் போதோ, ‘ஆஹா, அம்மணி, நீங்கள் இப்போது, இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். அப்படியெனில், உங்களுடைய இளமையில் எவ்வளவு அழகாக இருந்திருப்பீர்கள்!’ என்று சொல்லவேண்டும்.

அம்மாவின் கைகளையும் கால்களையும் தேய்த்துக் கழுவும்போதும், வாசனைத் திரவியம் பூசும்போதும், அவளுடைய அழகைப் புகழ்ந்து பேசவேண்டும். முக்கியமான விஷயம். இதற்கு அம்மா என்ன சொல்கிறாள் என்பதை ஒவ்வொரு வார்த்தையையும் கூச்சப்படாமல் மறைக்காமல் என்னிடம் சொல்லவேண்டும். இந்த விஷயத்தில் நான் சொல்வதுபோல் நீ கீழ்ப்படிந்து நடந்தால், துயரம் தொடர்பான பாடத்தில் தேர்ச்சி பெறுவாய். சொல்வதைக் கேட்கவில்லை என்றால், நீ எப்போதும் அந்தப் பாடத்தைக் கற்றுணர முடியாது’.

குருவின் அறிவுரைகளையும் கட்டளைகளையும் ஏற்று அந்த இளைஞன் அவர் சொன்னபடி அனைத்தையும் செய்தான். அந்த முதிய பெண்மணியின் அழகைத் தொடர்ந்து பாராட்டியபடியே அவளுக்குச் சேவைகள் செய்தான். ‘அம்மணி உங்கள் கால்கள் இந்த வயதிலும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றன. இளமையில் அவை இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். உங்களுடைய வசீகரமான தோற்றத்துக்கு இணையாக எவரும் இருந்திருக்க மாட்டார்கள் இல்லையா?’

அந்த இளைஞனின் சொற்கள் முதியவளைத் திகைப்பில் ஆழ்த்தின; அவள் குழம்பிப் போனாள். இவனுடைய நோக்கம் என்ன? எனினும், அவள் மீது அவன் காட்டும் அக்கறையையும் கவனிப்பையும் அவள் மதித்து ரசித்தாள். அவளை இப்படி அழகான ஒரு பெண்ணாக, விரும்பக்கூடிய ஓர் உயிராகக் கருதி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த இளைஞன் இவ்வாறு தினந்தோறும், முதியவளின் தோல் நிறத்தையும், உடலழகையும் புகழ்ந்தும், அவளது விரல்களைத் தொடும்போதே அவனது உணர்வுகள் தூண்டப்படுகின்றன என்பது போலெல்லாம் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தான். அவளுக்குச் சந்தேகம் தீர்ந்துவிட்டது. அந்த இளைஞனுக்குத் தன்னிடம் ஓர் ஈர்ப்பு உண்டாகிவிட்டது என்பதாக அவள் கருதத்தொடங்கினாள். வயது மூப்பின் காரணமாக அவளுக்குள் உறங்கிக் கிடந்த இளம்பருவத்து நினைவுகளையும் நிகழ்வுகளையும், இளைஞனின் சொற்கள் தூண்டிவிட்டன. தொலைந்துபோன உணர்வுகள் மீண்டும் துளிர்த்ததும், அவன் தன்னை விரும்புகிறான்; தானும் அந்த இளைஞனை விரும்பத் தொடங்கிவிட்டோம் என்று உறுதியாக நினைத்தாள்.

அதனால் ஒரு நாள் அவனது புகழுரைகளில் மகிழ்ந்தவளாய், ‘இளைஞனே நீ என்னை விரும்புகிறாயா?’ என்று கேட்டாள்.
அதற்கு அவன், ‘ஆமாம், நிச்சயமாக’ என்றான்.

‘எனில், நாம் இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் இருப்பதுபோல் ஏன் இருக்கக்கூடாது’.

‘இல்லை, அது என்னால் முடியாது’.
‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’.

‘உங்கள் மகன் என்னுடைய குரு. அவர் இதை அனுமதிக்க மாட்டார். அவர் கண்டிப்பானவர். கோபக்காரர்’ என்று இளைஞன் பதிலளித்தான்.

‘அப்படியா, நம் இருவரின் விருப்பத்துக்கு இடையில் அவன் வருவானென்றால், அவனைக் கொன்றுவிடேன்’.

‘இல்லை அவ்வாறு என்னால் செய்ய இயலாது. அவரிடமிருந்து நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டுள்ளேன். எனது இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக எனது ஆசிரியரை நான் எப்படிக் கொல்ல முடியும்?’

‘சரி, உனக்கு என்மேல் உண்மையாகவே ஆசை இருந்தால், உன்னால் முடியாதென்றால் அவனை நானே கொன்றுவிடுவேன்.’

காம உணர்வு எவ்வளவு கொடியது; வயதில் மிகவும் மூத்தவளாக இருந்தும் தன் ஆசை மகனின் உயிரைப் பறிக்கத் தூண்டும் அளவுக்கு எவ்வளவு கொடியது!

அதிர்ச்சியடைந்த இளைஞன், குருவான போதிசத்துவரைச் சந்தித்து, அவர் கட்டளை இட்டிருந்தது போல் உரையாடல் அனைத்தையும் அவரிடம் கூறினான். ஆசிரியர் மாணவன் சொன்னவை குறித்து யோசித்தார். பின்னர், தனக்குத் தெரிந்த சோதிட அறிவைப் பயன்படுத்தி, தன்னுடைய அம்மாவுக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் இருக்கிறது என்று ஆராய்ந்தார். அவரது கணக்கின் படி அன்றிரவு இறந்துபோய்விடுவாள்.

ஆகவே, இளைஞனைப் பார்த்து திட்டம் ஒன்றைக் கூறினார். ‘என் அம்மா கூறியதை நினைத்து நீ அஞ்ச வேண்டாம். நான் அவளுக்கு ஒரு சோதனையை வைக்கப்போகிறேன். நீ அதற்கு ஒத்துழைக்க வேண்டும்’.

வனத்துக்குச் சென்று அத்தி மரம் ஒன்றின் அடிப்பகுதியை வெட்டி வந்தார். மனித உருவத்தின் அளவுக்கு அதனைச் சீர் செய்தார். தலைப்பகுதியைச் சிறப்பாக வடிவமைத்தார். பின்னர் தன்னுடைய படுக்கையில் அதைக் கிடத்தி மேலே போர்வையைப் போர்த்தி, ஒரு மனிதன், அதாவது அவர் படுத்திருப்பதுபோல் அமைத்தார். அறையின் கதவுக்கு வெளியில் சிறிது தூரம் வரையில் நீளும் அளவுக்குக் கயிறு ஒன்றை எடுத்து ‘உடலுடன்’ பிணைத்தார்.

அந்த இளைஞனை அழைத்து, அவன் கையில் சிறு கோடரி ஒன்றைக் கொடுத்து, ‘இதை எடுத்துக்கொண்டு என் அம்மாவிடம் செல். அவரை இங்கு அழைத்து வந்து அவள் கையில் கோடரியைக் கொடுத்து, இந்தக் கயிற்றைப் பிடித்தபடி உள்ளே செல்லுங்கள் என்று சொல்’ என்றார்.

அதன்படி அந்த முதியவளிடம் சென்ற இளைஞன், ‘அம்மணி, ஆசிரியர் நன்கு தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவர் அருகில் செல்வதற்கு உங்களுக்கு வழிகாட்டக் கயிறு ஒன்றைக் கட்டியுள்ளேன். நீங்கள் சொன்னதுபோல் அவரைக் கொல்லவேண்டும் என்றால் இதுதான் சரியான நேரம். இதோ கோடரி, இதைப் பிடியுங்கள்’ என்று சொல்லி அறை வாசல் வரை அவளை அழைத்து வந்து, கையில் கயிற்றின் முனையை எடுத்துக் கொடுத்தான்.

‘நீ என்னை ஏமாற்றிவிட மாட்டாயே?’
‘நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? நிச்சயம் இல்லை.’

கைகளும் கால்களும் நடுங்க எழுந்து நின்ற அந்த முதியவள், கைகளில் கோடரியை வாங்கிக் கொண்டாள். இளைஞனின் கைகளைப் பிடித்தபடி அறையின் வாயில் வரை வந்தவள், கயிற்றைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். மாணவன் வெளியில் போய்விட்டான். போதிசத்துவர் அறைவாயிலுக்கு வந்து நின்று கொண்டார்.

படுத்திருந்த உருவத்தின் தலைப்பக்கமாக நின்றுகொண்டு, கோடரியின் ஒரே வீச்சால் தலையை வெட்டி மகனைக் கொல்ல நினைத்து, கோடரியை அந்த உருவத்தின் தொண்டையில் இறக்கினாள் அந்த முதியவள். ‘தட்’ என்று கேட்ட சப்தம், அது மரம் என்பதை வெளிப்படுத்தியது.

வெளியில் மறைந்து நின்றிருந்த போதிசத்துவர், ‘என்ன செய்கிறாய், அம்மா?’ என்று வேகமாகக் கூவினார். தவறு செய்து விட்டோமே என்ற உணர்வில் ‘ஆ’ என்று அலறியபடி கீழே விழுந்தவள் உடனேயே இறந்துவிட்டாள்.

அவள் வீட்டிலேயே, குறிப்பிட்ட தருணத்தில் இறந்துபோவாள் என்பது சோதிடக்கூற்று. அவள் உடலை எடுத்துச் சென்று, அம்மாவுக்கு மகன் செய்ய வேண்டிய முறையான சடங்குகள் அனைத்தையும் செய்து சிதைக்கு போதிசத்துவர் எரியூட்டினார். நெருப்பு அவள் உடலை எரித்து சாம்பலாக்கியது. அவளது அஸ்தியில் உதிர்ந்த காட்டு மலர்கள் அன்பைச் சொரிந்தன.

குடிலுக்குத் திரும்பிய ஆசிரியர், அங்கு வாயிலில் அமர்ந்திருந்த மாணவனைப் பார்த்தார். ‘மகனே, துயரத்துக்கென்று தனியே பாடம் ஏதுமில்லை. நீ பார்த்துக் கொண்டிருந்தாயே, காமத்தால் விளைந்த தீங்கு, உணர்வை அடைக்க முடியாததால், அதைப் பகுத்தறிய முடியாததால் ஏற்பட்ட தீமை, அதிலிருந்து எப்படி நம்மைக் காத்துக் கொள்வது என்பதே பாடம். உன் தாய், துயரம் தொடர்பான நூல்களைக் கற்றுக்கொண்டு வா என்று என்னிடம் அனுப்பியதாக நீ கூறினாய். காம உணர்வு என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை நீ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். காம உணர்வின் மோசமான உச்சத்தை உன் கண்களால் பார்த்தாய். அதன் தீய விளைவை உணர்ந்திருப்பாய். ஆகவே, நீ திரும்பி உன் பெற்றோரிடம் செல்லலாம்’ என்று சொல்லி தனது மாணவனை வாராணசிக்கு வழியனுப்பி வைத்தார்.

குருவிடம் விடைபெற்று சொந்த நகருக்குத் திரும்பிப் பெற்றோரைக் கண்டான். அவன் பெற்றோர் அவனை அன்புடன் வரவேற்றனர். அவன் தாய், ‘ மகனே, துயரத்தின் பாடத்தை நீ இப்போது கற்றுக் கொண்டாயா?’

‘ஆமாம், அம்மா’.

‘சரி, இப்போது சொல், உன்னுடைய இறுதித் தெரிவு என்ன? அக்னியை வழிபடுவதற்கு இந்த லோகாயத உலகை விட்டு விலகி வனத்துக்குச் செல்லப்போகிறாயா அல்லது பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடப் போகிறாயா?’

‘இல்லை அம்மா, காம உணர்வு எவ்வளவு மோசமானது என்பதை என் கண்களால் பார்த்துவிட்டேன். என்னால் இல்லற வாழ்வைத் தேர்வுசெய்ய இயலாது. நான் துறவு மேற்கொள்கிறேன்’.

கட்டுக்கடங்காத காமம், தனக்குள் விழும் அனைத்தையும்
விழுங்கிக் கொள்ளும் நெருப்பைப் போன்றது.

உணர்வெழுச்சி, கட்டுக்கடங்கா கோபத்தை உருவாக்குகிறது.
உணர்வைத் துறக்காமல், என்னால்
துறவறத்தில் அமைதி காணமுடியாது.

பெற்றோரை விட்டுப் பிரிந்து வனத்தில் தவ வாழ்க்கை மேற்கொண்டு, பிரம்ம உலகத்தில் தனக்கொரு இடத்தை அவன் உறுதிசெய்துகொண்டான் என்று கதையைக் கூறி முடித்தார் ததாகதர்.

‘சகோதரரே, இந்தக் கதையின் மூலமாகக் காமம் எவ்வளவு கொடியது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி நம்மை அது துயரத்திலும் ஆழ்த்திவிடும்.’

அதன்பின்னர், தம்மத்தின் நான்கு உன்னத உண்மைகளைச் சீடர்களுக்கு அவர் உபதேசித்தார். உரையின் முடிவில், அருகநிலையை அடைவதற்கான முதல் பாதையை அந்த சீடரால் அடைய முடிந்தது.

‘அந்தப் பிறவியில் என் தாயாக கபிலானியும் தந்தையாக மகாகாஸ்யபரும், மாணவராக ஆனந்தனும் பிறந்திருந்தனர். நான் ஆசிரியராக அவதரித்திருந்தேன்.” என்று தொடர்புகளையும் விளக்கிக் கூறினார் புத்தர்.

(இந்தக் கதையின் ஒரு வடிவம் – ரைஸ் டேவிட்ஸின் மொழியாக்கத்தில் உள்ளது- பெண்களை மோசமான சித்திரிப்பதாக அவர்கள் மீதான வெறுப்பையும் அல்லது தவறான எண்ணத்தையும் வெளிப்படுத்துவதாக அல்லது மோசமான குணங்கள் கொண்டவர்களாகச் சித்திரிக்கிறது.
பெண்கள் அல்ல, பெண்களை மையப்படுத்தும் காம உணர்வுதான் மோசமானது என்று புத்தரின்/ பௌத்தத்தின் போதனைகளுக்கு இணையான ஒரு மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டுள்ளேன். (Robert Chalmers என்பவர் மொழிபெயர்த்து, Eric Van Horn என்பவர் கூறிய வடிவம்.

அதுபோல் மூத்த பிக்குனியான மஹாகபிலானி ஒரு முக்கியமான, மரியாதைக்குரிய பௌத்தப் பிக்கு. பாலி நியதிகள் கூறும் ஜாதகக் கதைகளில் உயிரினங்களின் முந்தைய அவதாரங்களையும், முற்பிறப்பின் கர்மாவையும் பகுப்பாய்வு செய்வதில் முதன்மையான பிக்குணியாகக் கூறப்படுகிறார். எனினும், இந்தக் கதையில் மோசமானவளாக ஏன் சித்திரிக்கப்படுகிறார் என்பதில் தெளிவில்லை. இருவரும் துறவு நிலையை அடைவதற்கு முன்பாக, அவர், பின்னாளில் மகாகாஸ்யபர் என்ற அருகராக மாறப்போகிற பிபாலியைத் திருமணம் செய்துகொண்டவர். ஆனந்தர் புத்தரின் உறவினர், அவரது உதவியாளர். புத்தர் அவருக்கு ‘தர்மத்தின் பாதுகாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியிருந்தார்).

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *