Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 69வது கதை)

‘நாகம் கக்கிய விஷம்’

இந்தக் கதைகள் பலவற்றிலும் கூறப்படுபவை புத்தரும் அவரது சீடர்களும் அறிவொளிக்கான பாதையில் முன்னகர்ந்து கொண்டிருந்த முற்பிறப்பில் நடந்த நிகழ்வுகள். அந்தக் கதைகளில் பார்க்கமுடிகிற பாராட்டத்தக்க குணம் எது என்பதைப் பார்த்து, எடுத்துக் கொள்கிறோம். இந்தக் கதையில் சாரிபுத்தரை விஷப் பாம்பாகப் பார்க்கிறோம். அந்தப் பிறப்புக்குரிய இயல்பான குணத்தால் மனிதனைத் தீண்டி பெரும் தீங்கு விளைவிக்கிறார். பெரும்பாலான மக்கள் அப்படித்தான். நம்மிடம் பல குணங்கள் கலவையாக இருக்கின்றன. அவற்றில் சில பயனுள்ளவை, நன்மையைத் தருபவை. சில தீங்கு விளைவிக்கக்கூடியவை. இந்தக் குணங்களை நன்மை பயக்கும் விதத்தில் பயன்படுத்தி, இரக்கம், ஞானம் போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும், நம்மிடமிருக்கும் தீய குணங்களைக் கைவிடுவதுமே நோக்கமாக இருக்க வேண்டும்.

கௌதம புத்தர் இந்தக் கதையை ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது சீடர்களுக்குக் கூறுகிறார். சங்கத்தின் தம்மம் சார்ந்த போதனை பிரிவுக்குத் தலைவராக இருந்தவர் சாரிபுத்தர். அவருடன் தொடர்புடைய கதை இது. சங்கத்தின் மூத்தவரான இவர் ஒரு குறிப்பிட்ட வகை இனிப்புப் பண்டங்களை மிகவும் விரும்பிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அந்த மடாலயம் அமைந்திருக்கும் பகுதியின் மக்களுக்கு இந்தச் செய்தி தெரியவருகிறது. மடாலயத்தின் மீதும், பிக்குகள் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்த அந்நகரத்தின் மக்கள் அந்தப் பண்டத்தை அதிக அளவில் தயார் செய்து சங்கத்துக்கு எடுத்து வந்து பிக்குகளுக்கு அளித்தனர். சாரிபுத்தரும் துறவிகள் அனைவரும் போதுமான அளவு வயிறு நிரம்பச் சாப்பிட்ட பிறகு எப்போதும் அவை மீந்துவிடும். ஆகவே, அந்தப் பண்டங்களைக் கொண்டுவந்தவர்கள் துறவிகளிடம், ‘ஐயா, இவற்றை நீங்கள் கிராமப்புறத்தில் இருக்கும் துறவிகளுக்குக் கொஞ்சம் எடுத்துச் செல்லலாமே’ என்று வேண்டிக் கொள்வார்கள்.

இவ்வாறான வழக்கமான நாளொன்றில், மக்கள் அன்புடன் கொடுத்த உணவை அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். ஓர் இளம் துறவி மட்டுமே இன்னமும் சாப்பிடவில்லை. அந்த இளைஞன் சங்கத்தில் மூத்தவரான சாரி புத்தருடன் ஒன்றாக வசிப்பவன். ஏதோ பணியை ஒட்டி அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்றிருந்தான். துறவிகள் அவனுக்காகப் பண்டத்தைத் தனியே எடுத்து வைத்தனர். ஆனால், அவன் உரிய நேரத்துக்குள் வரவில்லை. தாமதமாகிக் கொண்டிருந்தது. உரிய நேரத்தில் அவனால் வர முடியாது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

மடாலயத்தில் இருக்கும் துறவிகள் மதியத்துக்கு மேல் உணவு உண்ணக்கூடாது; உணவை மறுநாளுக்கு என்று சேமித்தும் வைக்கக்கூடாது என்பது விதி. ஆகவே, இளைஞனுக்காக வைத்திருந்த அந்தப் பண்டத்தை, அதை அதிகம் விரும்பும் சாரிபுத்தரிடம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்ததை சாரிபுத்தர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதே, இறுதியில் அந்த இளம் துறவி கிராமத்திலிருந்து வந்துவிட்டான். ஆனால், அவனுக்கு உணவு இல்லை. ஆகவே, என்ன நடந்தது என்பதை அந்த இளைஞனுக்கு மூத்தவர் விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘சகோதரரே, நீங்கள் வரத் தாமதமாகும் என்று நாங்கள் கருதினோம். எனவே, சேமிக்கக் கூடாது என்பதால் பிக்குகள் என்னிடம் கொடுத்த பண்டத்தை இப்போதுதான் சாப்பிட்டு முடித்தேன்’ என்றார்.

‘ஓ! இனிப்புப் பண்டம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்’ என்பதே அந்த இளைஞனிடம் இருந்து வந்த பதில்.

அந்தப் பதில் மூத்தப் பிக்குவான சாரிபுத்தரை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது. மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார். ஆகவே மனத்தில் ஓர் உறுதி எடுத்துக் கொண்டார்.

‘இன்று முதல், இந்த இனிப்புப் பண்டத்தை ஒருபோதும் நான் சாப்பிடமாட்டேன். இது எனது சபதம்’ என்று உணர்ச்சி வசப்பட்டு சாரிபுத்தர் உரத்துப் பேசினார். அந்த நாளிலிருந்து ஒரு நாளும் அவர் அந்தக் குறிப்பிட்ட இனிப்பு பண்டத்தைச் சாப்பிடவே இல்லை என்று மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. மூத்தப் பிக்குவான சாரிபுத்தர் உண்மையில் அந்தப் பண்டத்தை அந்த நிகழ்வுக்குப் பின் தொடவே இல்லை! சாரிபுத்தரின் இந்தப் புறக்கணிப்பு பிக்குகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சங்கத்தில் பேசப்படும் பொதுவான விஷயமாக மாறியது. துறவிகள் தம்ம மண்டபத்தில் தொடர்ந்து இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் தம்ம மண்டபத்தில் பேராசான் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிக்குகள் தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். அவர் சீடர்களிடம், ‘சகோதரர்களே, நீங்கள் இவ்வளவு தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் என்னவென்று நானும் அறிந்துகொள்ளலாமா?’ என்று உசாவினார். பிக்குகளும் கௌதமரிடம் நடந்ததை விவரமாக எடுத்துரைத்தனர். ஆசானுக்கு அப்போதுதான் அந்தச் செய்தி தெரிய வருகிறது. எனினும், அவர் திகைப்புறவில்லை. சிறிது தயங்கி யோசித்தபடியே புத்தர், ‘அப்படியா? சகோதரர்களே, சாரிபுத்தர் எதையாவது கைவிடுகிறார் என்றால் அது குறித்துத் தீவிரமாக யோசிக்காமல் அதைச் செய்யமாட்டார். அதுபோல், அப்படி ஏதேனும் முடிவு எடுத்துவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் மீண்டும் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்’ என்று அவர்களிடம் கூறினார். ‘இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அவருடைய முந்தைய பிறப்பில் நடந்த ஒரு நிகழ்வை நான் கூற முடியும்’ என்றார். உடனே பிக்குகள் அந்த நிகழ்வை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மூத்தப் பிக்குவை அறிந்துகொள்கிறோம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டனர். புத்தர் கடந்த காலத்து நிகழ்வை அவர்களுக்கு ஒரு கதையாகக் கூறினார்.

0

அந்தக் காலத்தில் வாராணசியை பிரம்மதத்தன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பாம்புக்கடியைக் குணப்படுத்துவதில் திறமையான மருத்துவர்கள் பலர் இருந்தனர். அத்தகைய சிறந்த மருத்துவர்கள் இருந்த குடும்பம் ஒன்றில் போதிசத்துவர் பிறந்தார். விவரம் புரியும் அளவுக்கு நன்கு வளர்ந்ததும், தமது குடும்பத்தின் உறுப்பினர்கள் போலவே வாழ்வாதாரத்துக்காகக் குலத்தொழில் போன்ற பாம்புக் கடிக்கு மருத்துவம் செய்வதைப் பின்பற்றினார்.

ஒருநாள் அந்த ஊரில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது. அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவரைத் தேடிவந்து, விஷத்தை முறிக்க அவரை அழைத்துச் சென்றனர். கடிபட்டவரை சோதித்த மருத்துவர் அவர்களைப் பார்த்து, ‘வழக்கமாக மருத்துவம் பார்ப்பவர்கள்போல், விஷத்துக்கான மருந்தை நோயாளிக்கு அளித்து விஷத்தை முறிப்போமா… கடித்த பாம்பையே பிடித்துவந்து, அதைக்கொண்டு கடிபட்ட இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்ச வைக்கலாமா?’ என்று கேட்டார்.

‘இதில் என்ன வேறுபாடு என்று எங்களுக்குத் தெரியவில்லை. இவன் சாகக்கூடாது. ஆனால், நீங்கள் சொல்வதைப் போல் அந்தப் பாம்பைப் பிடித்து வந்து விஷத்தை உறிஞ்ச வைப்பது நல்ல யோசனையாகத் தெரிகிறது. அப்படியே செய்யுங்கள்’ என்றனர்.

போதிசத்துவரான அந்த மருத்துவர் பாம்பைப் பிடித்து வரும்படிக் கூறினார். கிராமத்தவர்களும் எப்படியோ தேடிப் பிடித்து அவரிடம் அதைக் கொண்டு வந்தனர். மருத்துவர் அதைப் பார்த்து, ‘பாம்பே, இந்த மனிதனை நீ கடித்தாயா?’ என்று கேட்டார்.

‘ஆமாம், நான் இவரைத் தீண்டினேன்’ என்று பாம்பு ஒப்புக்கொண்டது.

‘சரி, நீ கடித்த இடத்தின் வழியாக உனது விஷத்தை நீயே இப்போது உறிஞ்சி எடுத்துவிடு’ என்று கூறினார் மருத்துவர்.

‘என்னது… விஷத்தை உறிஞ்சுவதா? நான் ஒருவரைத் தீண்டுவதற்காக வெளிப்படுத்தும் விஷத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று பாம்பு சப்தமாகப் பேசியது.

அதன் பின்னர் மருத்துவர் விறகுகளைக் குவித்து தீ மூட்டி நெருப்பை உண்டாக்கச் சொன்னார். ஜுவாலையாக நெருப்பு எரியத் தொடங்கியதும் அவர் பாம்பைப் பார்த்து உத்தரவிடுவதுபோல் கூறினார்: ‘பாம்பே, நீ இந்த விஷத்தை உடனே உறிஞ்சி எடுத்துவிடு. அல்லது இந்த நெருப்பில் புகுந்து இறந்து போக வேண்டும்’ என்றார்.

‘இந்த நெருப்பில் இறங்கி நான் இறந்து, அழிந்தாலும் கவலையில்லை; ஆனால், நான் ஒருமுறை கடித்து வெளிப்படுத்திய விஷத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ளமாட்டேன்’ என்றது அந்தப் பாம்பு. அத்துடன் பின்வரும் சொற்றொடரையும் உரக்கக் கூறியது:

கொட்டிய விஷத்தை
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
மீண்டும் உறிஞ்சி எடுப்பது
அவமானம் தரும் விஷயம்.
பணிந்து வேண்டி உயிருடன்
இருப்பதைக் காட்டிலும் சாவை வரவேற்கலாம்.

இதைச் சொல்லிவிட்டு பாம்பு நெருப்பை நோக்கி நகர்ந்தது; ஆனால், பாம்பு நெருப்பில் இறங்கிவிடாமல் மருத்துவர் அதைத் தடுத்துவிட்டார். பின்னர் தன்னிடமிருந்த மருந்துகளைப் பயன்படுத்தியும் மந்திரங்களை உச்சரித்தும் பாம்பால் கடிபட்டவனின் உடலில் இருந்து விஷத்தை முறித்தார். அவன் இறந்து போகாமல் தடுத்துக் குணப்படுத்தினார். அதன்பின்னர் அந்தப் பாம்புக்கு நன்னெறிகளைப் போதித்தார். ‘இதன் பின்னர் நீ யாரையும் கடித்துவிடாதே’ என்ற அறிவுரையுடன் அதை வனத்துக்குள் கொண்டு விடச் சொன்னார்.

‘தெரிந்ததா சீடர்களே? சாரிபுத்தர் ஏதாவது ஒன்றைக் கைவிட்டுவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றாலும் எடுத்த முடிவை மாற்றிக்கொண்டு திரும்பவும் அந்த வழக்கத்தைப் பின்பற்ற மாட்டார்’ என்று கதையை முடித்தார் ததாகதர்.

‘அந்தப் பிறவியில் சாரிபுத்தர் பாம்பாகப் பிறந்திருந்தார்; நான் அந்த மருத்துவராக அவதரித்திருந்தேன்’ என்று யார் யார் எப்படிப் பிறந்திருந்தனர் என்ற தொடர்புகளையும் அவர் விளக்கினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *