(தொகுப்பிலிருக்கும் 70வது கதை)
ஏழு முறை பிக்குவான கதை
ஜேதவனத்தில் கௌதமர் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார் என்று பதிவாகியுள்ளது. சிராவஸ்தியைச் சேர்ந்த ஒரு விவசாயி பிக்குவாக ஆசைப்பட்டு, அதன்பின் அந்த வாழ்க்கைப் பிடிக்காமல் துறவி ஆடையைத் திரும்ப அளித்துவிட்டு மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகிறார். மீண்டும் பிக்குவாகிறார். அருக நிலையை எட்டுகிறார்.
பொதுவாக இவ்வாறு ஒருவர் துறவு ஏற்று, அதன்பின்னர் அந்த வாழ்க்கையை விட்டு விலகினால் மீண்டும் அவர் பிக்குவாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார். ஆனால், பிற்காலத்தில் தேரவாத பௌத்ததில் இது அனுமதிக்கப்பட்டது. அத்துடன் அந்த பிக்கு, மனத்தையும் லோகாயத வாழ்வையும் அலசும் அபிதம்ம பிடகத்தையும் படித்தார் என்று வருகிறது. ஆகவே இந்தக் கதை புத்தர் இறந்த பின்னர் நடந்த கதையாக இருக்கலாம் என்று மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன.
0
சித்தஹத்தா சாரிபுத்தர் என்ற மூத்த பிக்குவை குறித்த கதை இது. புத்தருக்கு நெருக்கமான சாரிபுத்தர் அல்ல இவர். சிராவஸ்தியின் நல்லதொரு குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத் தொழிலான விவசாயத்தில் ஈடுபடுகிறார். இந்த இளைஞருக்கு அதில் மிகவும் ஆர்வம்.
ஒருநாள் வயலில் உழவு வேலைகளை முடித்துவிட்டு அந்த இளைஞன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஓரிடத்தில் புத்த பிக்கு ஒருவர் அன்று அவருக்குக் கிடைத்த பிட்சை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். போதுமான அளவு உண்டபின், எஞ்சியிருந்த உணவை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாமா என்று பார்த்தபோது அப்போது அந்த வழியாக இந்த இளம் விவசாயி சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பிக்கு அந்த இளைஞனை அழைத்து அவனுக்கு உணவை அளித்தார்.
அந்த இளைஞன் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போல் அது இருக்கவில்லை. உயர்ந்த தரத்தில் மிகவும் சுவையுடையதாக இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே அந்த இளைஞன், ‘என் வயலில் நான் பகல், இரவு பாராது உழைக்கிறேன். பலவிதமான வேலைகளைச் செய்கிறேன். எனினும், இதைப்போன்ற உணவைச் சுவைத்ததே இல்லையே. பிக்குவாக மாறினால், இதைப்போன்ற நல்ல உணவை தினமும் சாப்பிட இயலும் என்று நினைத்தான். ஆகவே சங்கத்துக்குச் சென்று பிக்குவாகத் தீட்சை பெற்று அதில் இணைந்து கொண்டான்.
அந்த புதிய பிக்குவுக்கு சித்தஹத்தா சாரிபுத்தர் என்ற பெயரளிக்கப்பட்டது. எனினும் படிக்கவேண்டிய, அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. உயர்வான விஷயங்களைச் சிந்தித்தல், கடுமையாகப் படித்தல், கட்டுப்பாடுகளை அனுசரித்தல், நூல்களை மனனம் செய்தல், தியானத்தில் அமர்தல் போன்றவை அவர் வயலிலும் இல்லத்திலும் செய்த வேலைகளைக் காட்டிலும் மிகவும் சிரமமானவையாக அயர்ச்சியைத் தரக்கூடியவையாக இருந்தன. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உணர்வுகளின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்ட அவர் துறவி ஆடையைக் களைந்து சங்கத்திலிருந்து வெளியேறினார்.
மீண்டும் உடல் சார்ந்த உழைப்புக்கு, சலிப்பூட்டும் லோகாயத வேலைகளுக்குத் திரும்பினார். முன்னம் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையே சாப்பிடத் தொடங்கினார். ஏற்கெனவே அவர் சாப்பிட்டுச் சலித்துப் போயிருந்த உணவு, இப்போது சில நாட்கள் மடாலயத்தில் சுவைத்துச் சாப்பிட்ட உணவை எண்ணி ஏங்க வைத்துவிட்டது. எனவே அவர் திரும்பவும் சங்கத்துக்குச் சென்று பிக்குவாக இணைந்துகொண்டார்.
மீண்டும் துறவி வாழ்க்கை நூல்களைப் படிக்கத் தொடங்கினார். நூல்களைப் படித்து, அவற்றை உள்வாங்கிச் சிந்திக்கும் சிரமமான, அயர்ச்சி தரும் செயல் அவரை மீண்டும் துறவி ஆடையைத் துறக்க வைத்தது. சாதாரண மனிதனின் வாழ்க்கை எளிமையானது, லகுவானது, மன அழுத்தம் தராதது என்று நினைத்தார். எனினும், அந்த உழைக்கும், சாதாரண மனிதனின் வாழ்க்கை முன்னர் அவருக்கு அளித்த அதே அனுபவத்தையே மீண்டும் அளித்தது. மடாலய வாழ்வில் கிடைத்த உணவுக்காக அவர் ஏங்கினார். ஆகவே அவர் திரும்பவும் சங்கத்தில் சேர்ந்தார்.
என்னவாக அவர் வாழ்ந்தாலும், அது சாதாரண விவசாயியோ, புத்தப் பிக்குவோ, அவருக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை என்பதுடன், எதற்கும் தேவையான முயற்சியை அளிப்பதற்கு அவருக்குச் சோம்பல். எனவே இப்படியே இருப்பதால் நன்மையா, இந்த நிலையிலிருந்து மீண்டும் வெளியேறுவதா என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறாக மொத்தத்தில் அவர் ஆறு முறை துறவி நிலையிலிருந்து விலகி, ஏழு முறைகள் துறவியாகத் தீட்சை பெற்றார். ஆனால், ஒன்று. ஒவ்வொரு முறை அவர் பிக்குவாக இருக்கும் போதும் பல நூல்களைப் படிக்க வேண்டியிருந்தது. அவற்றை மனனம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறாக அந்த நூல்கள் அனைத்தையும், அபிதம்ம பிடகத்தின் ஏழு தொகுதிகளையும் படித்தார்; அவற்றில் தேர்ச்சியும் பெற்றார். தம்மம் குறித்த விஷயங்களை, பாடல்களைத் தொடர்ந்து உச்சாடனம் செய்தார். முதலில் அவருக்கு புறவுலகம் சார்ந்தவையாகத் தோன்றிய அவை, அவருக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்தின. அவரது உள்முகப் பார்வை சீரடைந்தது. விகசித்தது. அவரால் அருக நிலையை அடைய முடிந்தது.
இதை அவர் தனது சக துறவிகளுடன் பகிர்ந்துகொண்டார். அவர்கள் இவரை வியப்புடன் பார்த்து ஏளனமாகக் கேட்டனர்: ‘உங்களைப் போன்ற ஒருவர், தொடர்ச்சியாகத் துறவு நிலையிலிருந்து வெளியேறி மீண்டும் உள்ளே வந்த ஒருவர், ஆசைகளைத் துறந்து எப்படி அருக நிலையை அடைய முடியும்?’
‘ஆமாம், சகோதரர்களே. அது சிரமம் தான். ஆனால் முடியாத ஒன்றல்ல. நான் இப்போது சாதாரண உலக வாழ்க்கை என்ற நிலையைத் தாண்டி மேலே வந்துவிட்டேன்’.
அவர் அருகராக மாறிய பிறகு, தம்ம மண்டபத்தில் இவரைக் குறித்து பிக்குகள் மத்தியில் பெரும் பேச்சு எழுந்தது: ‘பிக்குகளே, சித்தஹத்தா சாரிபுத்தர் இப்போது அருகநிலையின் அனைத்து மகிமைகளை அடையக்கூடியவராக விதிக்கப்பட்டிருக்கிறார்; எனினும், அவர் ஆறு முறை சங்கத்தைத் துறந்து சென்றவர்; உண்மையில், அந்த நிலை மிகவும் தவறானது. அவர் மீண்டும் துறவைத் துறந்து செல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்?’
தம்ம அரங்குக்கு வந்த ஆசான் கௌதமர், பிக்குகள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வினவினார். சித்தஹத்தரைப் பற்றி அவரிடம் விளக்கமாகச் சொல்லப்பட்டது; அப்போது அவர் இவ்வாறு கூறினார்: “பிக்குகளே, உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தோரின் இதயம் லேசானது; என்றாலும் அதை அடக்குவது கடினம்; லோகாயத விஷயங்கள் எளிதில் நம்மைக் கவரக்கூடியவை. வேகமாக நம்மைப் பற்றிக் கொள்பவை. ஒருமுறை அவ்வாறு பற்றிக்கொண்டால், பயிற்சி பெறாத ஒரு மனிதனால் அதிலிருந்து உடனடியாகவோ குறுகிய காலத்திலோ விடுபட முடியாது. திறன் மிக்கவராக இருந்தால் மட்டுமே, மனத்தை நம் சொல்படி கேட்கவைக்க முடியும்; அப்படி முடிந்துவிட்டால், மகிழ்ச்சியையும் இனிய உணர்வையும் அது கொடுக்கிறது: ’பெருவிழைவால் அலைபாயும் பலவீனமான மனத்தை அடக்குவது நல்லது; ஒருமுறை அடக்கிவிட்டால், உள்ளம் பேரின்பத்தால் நிறைகிறது.’
மனத்தின் அலைபாயும் குணத்தின் காரணமாக, அதன் மேல் வைத்த பிரியத்தின் காரணமாக ஒரு மண்வெட்டியைக்கூடத் தூக்கி எறிய முடியாதவராக ஒருவர் இருந்தார்; அவர், விவேகம் நிறைந்த நல்லவராக இருந்தும் இச்சையின் காரணமாக லோகாயத நிலைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், அவர் ஏழாவது சந்தர்ப்பத்தில் உணர்வெழுச்சியை வென்று பேராசையை அடக்கினார்’ என்று கூறிய கௌதமர் கடந்த காலக் கதை ஒன்றைப் பிக்குகளின் வேண்டுதலை ஏற்றுக் கூறத் தொடங்கினார்.
0
கடந்த காலத்தில் பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தான். அப்போது, போதிசத்துவர் தோட்ட வேலை செய்பவர்களின் குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து வந்தார். அவரிடம் சிறந்ததொரு மண் வெட்டி இருந்தது. அதை அவர் பிரியமாக வைத்திருந்தார். அந்த மண்வெட்டியைக் கொண்டுதான் நிலத்தைப் பண்படுத்துவார்; சமையல் தேவைக்கான காய்கள், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரி போன்ற பல காய்கறிகளைப் பயிரிட்டு வந்தார்; அவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சிரமமானதொரு வாழ்க்கையை நடத்திவந்தார். அந்த வாழ்க்கைக்கு மண்வெட்டியைத்தான் நம்பியிருந்தார். அதைத் தவிர உலகில் அவருக்கு வேறு எதுவும் இல்லை! ஆகவே, அவரை குட்டால பண்டிதர் (மண்வெட்டி துறவி) என்ற பெயர் வைத்து அழைத்தனர்.
‘மிகக் கடினமான உழைக்கிறோம். எனினும் கிடைக்கும் பலன் மிகக்குறைவு’ என்று எண்ணிய அவர் இந்தச் சிரமமான வாழ்க்கையைத் துறந்து அறிவைத் தேடிச் செல்லலாம், துறவியாகலாம் என்று ஒருநாள் தீர்மானித்தார். ஆனால், இந்த மண்வெட்டியை என்ன செய்வது? வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது அதுதானே. ஆகவே, அவருக்கு மட்டுமே தெரிந்த ஓரிடத்தில் அந்த மண்வெட்டியை மறைத்து வைத்தார்; எண்ணியபடி ஏகாந்த வாழ்க்கையை, துறவு வாழ்க்கையை வாழ்வதற்குச் சென்றார்.
ஆனால் அந்தத் துறவு வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. உளவலிமையும் அர்ப்பணிப்பும் தேவையாக இருந்தது. இதன் காரணமாக அவரது பழைய வாழ்க்கையும் மண்வெட்டியும் அவர் மனத்தில் தோன்றின. ஆசை அவர் மனத்தை ஆக்கிரமித்தது, வென்றது; ஆகவே அந்தப் பழைய, மழுங்கிப் போன மண்வெட்டிக்காகத் துறவைத் துறந்து சாதாரண உலக வாழ்க்கைக்குத் திரும்பினார்.
மீண்டும் மீண்டும் இது நடந்தது; அவர் ஆறு முறை மண்வெட்டியை மறைத்து வைத்துவிட்டு துறவுக்குச் சென்று மீண்டும் அதிலிருந்து விலகிவந்தார். ஏழாவது முறை அவ்வாறு நிகழும்போது அவர் சிந்தித்தார்; இந்த மழுங்கிய மண்வெட்டி நம்மை மீண்டும் மீண்டும் இப்படி நிலைதடுமாறச் செய்கிறதே… ஏன் அப்படி என்று யோசித்தார். அதன் மேலுள்ள ஆசைதான் அதற்குக் காரணம்; நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை; மேலும் முன்னகர்ந்து செல்ல முடியவில்லை; அடுத்தமுறை மீண்டும் சாதாரண மனிதனாக மாறுவதற்கு இது நம்மைத் தூண்டுவதற்கு முன்பாக, இதைத் தொலைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
எனவே, மண்வெட்டியுடன் ஆற்றங்கரைக்குச் சென்றார்; ஆற்றுப் பக்கம் முதுகைக் காட்டியபடி நின்றார். விழும்போது பார்த்தால், மீண்டும் அதை எடுத்து வந்துவிடுவோமோ என்ற பயத்தில், ஆற்றின் பக்கம் பார்க்காமலேயே, மண்வெட்டிக் காம்பைப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கி மூன்று முறை வேகமாகச் சுழற்றி யானையின் பலத்துடன் பின்பக்கமாகவே ஆற்று நீரில் வீசினார். நீரோட்டத்தில் அது இழுத்துச் செல்லப்படும் வரையில் கண்களை இறுக மூடியபடி, அந்தப் பக்கம் திரும்பாமல் இருந்தார். பின்னர் திரும்பிப் பார்க்கையில் மண்வெட்டி மறைந்துபோயிருந்தது. பெரும் திருப்தியும் மகிழ்வும் அவருக்கு ஏற்பட்டது; இதற்கு முன்னர் இப்படி அவர் உணர்ந்ததே இல்லை. சிறையிலிருந்து வெளிவந்தது போன்ற உணர்வு. ஆகவே, சிங்கத்தின் கர்ஜனை போன்ற உரத்த குரலில் சப்தமாக ‘சித்தாம் மே, சித்தாம் மே’ என்று முழங்கினார். ’நான் வென்றுவிட்டேன்! நான் வென்றுவிட்டேன்!’
சரியாக அந்த நேரத்தில், வாராணசி அரசன் எல்லையில் எழுந்த ஒரு குழப்பம் ஒன்றை அடக்கி, தீர்வு கண்டுவிட்டு வந்து கொண்டிருந்தார். அரண்மனைக்குச் செல்லும் வழியில், ஆற்றில் நீராடிவிட்டு உற்சாகத்துடன் முகத்தில் வெற்றி பிரகாசிக்க யானையில் சென்றுகொண்டிருந்தார். போதிசத்துவரின் கூக்குரலைக் கேட்டதும் ’வெற்றி, வெற்றி என்று கூக்குரலிடும் அந்த மனிதன் யார்? அவன் யாரை வென்றான்? எனக்கு வியப்பாக இருக்கிறது. அவனை என் முன் அழைத்து வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்.
எனவே மண்வெட்டி துறவியான போதிசத்துவரை அரசர் முன் அழைத்து வந்தனர். ‘எனது நல்ல குடிமகனே. நான் தான் வெற்றி பெற்றவன் என்று நினைக்கிறேன். இப்போதுதான் எல்லைப் பிரச்சனையில் எதிரிகளை வென்று, வெற்றியுடன் அரண்மனைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நீ யாரை வென்றாய் என்று சொல்’.
அரசனிடம் நடந்ததைப் பகிர்ந்து கொண்டார் போதிசத்துவர்: ’அரசனே. ஆசையே முதல் எதிரி. உங்களுக்குள் எழும் இச்சைகளை நீங்கள் வெற்றி கொள்ள இயலவில்லை என்றால், நீங்கள் அடைந்திருக்கும் இதுபோன்ற ஆயிரம் ஏன் நூறாயிரம் வெற்றிகளும் வீணே. எனக்குள்ளிருந்த ஆசையை வென்றதன் மூலம் என் உணர்வுகளை வென்று கட்டுப்படுத்தினேன். அதனால் தான் அவ்வாறு கூவினேன்’.
பேசிக்கொண்டிருக்கையிலேயே ஓடிக்கொண்டிருந்த நீரின் மீது அவர் கவனம் குவித்தார். மனத்தை ஒருமுகப்படுத்தினார். அவருடைய ஆசைகள் மனத்தளவில் அவர் எவ்வித மேம்பாடும் அடையவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தார். அவருடைய உள்முகப்பார்வை மேலும் விரிவானது; மெய்மை கடந்த நிலையை அடைந்த அவரால், அதீத சக்தியால் காற்றில் எழு முடிந்தது. அந்தரத்தில் நிலையாக இருந்தபடி அவர் அரசனுக்கு தம்மத்தைப் போதித்தார்.
0
தம்ம உபதேசத்தைக் கேட்டதும், அரசனது மன இருளில் ஒளி புகுந்தது. இதயத்தின் சிற்றின்ப ஆசைகள் தணிந்தன; அவரது இதயம் உலகத்தைத் துறப்பதில் குறியாக இருந்தது; ஆதிக்க மோகம் அவரை விட்டு நீங்கியது. ‘இப்போது நீங்கள் எங்குச் செல்லவிருக்கிறீர்கள்?’ என்று அரசன் போதிசத்துவரிடம் கேட்டார்.
‘இமயமலைக்குச் செல்கிறேன் அரசே. அங்குத் துறவிகளின் வாழ்க்கையை வாழவேண்டும்.’
‘அப்படியானால் நானும் துறவியாகி உங்களுடன் வருவேன்’ என்றார் அரசன். போதிசத்துவருடன் அவரும் புறப்பட்டார். அரசனுடன் மொத்தப் படையும், நகரத்துப் பிராமணர்களும், குடும்பத்தலைவர்களும், பொது மக்கள் அனைவரும் புறப்பட்டனர்.
அவர்களின் மன்னன், குட்டால பண்டிதர் உபதேசித்த தம்மத்தைக் கேட்டு சந்நியாச வாழ்க்கையை வாழப் புறப்பட்டுவிட்டார். அவரை வரவேற்க நகரத்துக்கு வெளியில் சென்ற அனைவரும் அவருடன் சென்றுவிட்டனர் என்ற செய்தி வாராணசிக்குப் போனது.
‘நாம் அரசனின்றி இங்கே என்ன செய்வது?’ என்று வாராணசி மக்கள் அழுதனர். அதன்பிறகு, 60 கி.மீ சுற்றளவு கொண்ட அந்த நகரத்திலிருந்து அனைத்துக் குடிமக்களும் நீளமான ஒரு மனிதச் சங்கிலியாக நகரத்தை விட்டு வெளியேறி அரசனைத் தொடர்ந்து சென்றனர். போதிசத்துவருடன் இமயமலைக்குச் சென்றனர்.
அப்போது தேவலோகத்தின் அரசன் சக்ராவின் அரியணை வெப்பமடையத் தொடங்கியது. அவர் கீழே குனிந்து பார்த்தார்; குட்டால பண்டிதர் பெரும் தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தார். அனைவரையும் அந்த மலையடிவாரத்தில் எப்படித் தங்க வைப்பது என்று யோசித்தார். எனவே தேவர்களின் கட்டடக் கலைஞரான விஸ்வகர்மாவை வரவழைத்தார். ‘குட்டால பண்டிதர் ஒரு பெரும் துறவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் பெரும் பரிவாரமே வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு முறையான குடியிருப்புகள் வேண்டும். நீங்கள் இமயமலை அடிவாரத்துக்குச் செல்லுங்கள். அங்கே சமதளமான இடமொன்றை அறிந்து, உங்கள் சக்தியால் போதிய நீளமும் அகலமும் கொண்ட துறவிகளின் வசிப்பிடம் ஒன்றை அமைத்துக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார். ‘அப்படியே ஆகட்டும் அரசே’ என்றபடி விஸ்வகர்மா புறப்பட்டுச் சென்றார்.
விஸ்வகர்மா குறுகிய காலத்தில் துறவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பெரும் பர்ணசாலை ஒன்றைக் கட்டியெழுப்பினார். அமைதியைக் குலைக்கக்கூடிய விலங்குகளையும் பறவைகளையும் அமானுஷ்ய சக்திகளையும் அங்கிருந்து விரட்டினார். முக்கியமான நான்கு திசைகளிலும், அந்தக் குடில்களுக்குள் செல்வதற்கும் வெளிவருவதற்கும் வசதியான பாதைகளை அமைத்தார். பின்னர் தேவலோகத்தில் தனது வசிப்பிடம் சென்றார்.
குட்டால பண்டிதர் தனது பரிவாரங்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். தனக்கான இருப்பிடத்தில் நுழைந்து, மற்ற அனைவருக்கும் தங்குமிடங்களையும் ஒதுக்கித் தந்தார். அவர் முதலில் இந்த உலகின் மீதான பற்றைத் துறந்தார்; தனது பரிவாரங்களையும் உலகைத் துறக்கச் செய்தார்.
உள்முகப் பார்வை மூலம் தெய்விக நிலையை எய்திய குட்டால பண்டிதர், மற்றவர்க்கும் தியானம் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அவர்கள் அனைவரும் பல்வேறு நிலைகளில் அருக நிலையை வென்றனர். பிரம்ம சாம்ராஜ்யத்தில் நுழைவதற்கான தகுதியைப் பெற்றனர்.
கதையை இவ்வாறு முடித்த ஆசான், ‘பிக்குகளே மனத்தைப் பேராசை பிடித்துக்கொண்டால் அதிலிருந்து மீள்வது கடினம். நாம் பார்த்ததுபோல் விவேகம் நிறைந்தவர்களும் நல்லவர்களும் அறிவற்றவர்களாகத் தடுமாறி விழுந்துவிடுகிறார்கள்’ என்று கூறி அவர்களுக்கு நான்குவிதமான நன்னெறிகளையும் உபதேசித்து, பேராசையை வெல்வதற்கான வழிமுறைகளையும் போதித்தார்.
அதன் முடிவில், பிக்குகள் பலரும், முதல், இரண்டாவது, மூன்றாவது அருக நிலைப் பாதையை வென்றனர். கௌதமர் தொடர்புகளையும் சுட்டிக்காட்டினார்: ‘ஆனந்தன் அந்த நாட்களில் அரசனாகப் பிறந்தார். புத்தரைப் பின்பற்றுபவர்கள் அப்போதும் அவ்வாறே பிறந்திருந்தனர். நானே குட்டால பண்டிதராகப் பிறந்திருந்தேன்.’
(தொடரும்)