(தொகுப்பிலிருக்கும் 74வது கதை)
‘ஒற்றுமையே நலம்’
சாக்கிய குலத்தினரும் அவர்களுடன் நெருங்கிய குருதி உறவு கொண்ட மற்றொரு குலத்தினரும் ஒரே நதியின் நீரைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். பொதுவான அணை ஒன்றில் நீரைத் தேக்கிவைத்து முறையாகப் பங்கிட்டு வந்தனர். ஒரு வறண்ட பருவத்தை அவர்கள் எதிர்கொண்டனர். மழை பொய்த்துவிட்டது. அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து போய்விட்டது. வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு நீர் தேவைப்படும் நிலைமை. எப்படிப் பங்கீடு செய்துகொள்வது என்று இரு தரப்பினரும் பேசினர். முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முற்றி கைகலப்புக்குப் போய் இப்போது போரிட்டுத் தீர்த்துக் கொள்வது என்று அதற்கான அறிவிப்பும் செய்துவிட்டனர்.
கௌதமரின் காதுக்கு இது எட்டியது. இருதரப்பினரையும் சந்தித்து அவர்களுக்கு இடையிலான பகையைத் தணித்து ஒற்றுமையை உருவாக்கலாம் என்று சென்றார். ரோஹிணி நதியின் இரு கரைகளிலும் இரண்டு குலத்தினரும் திரண்டு நின்றிருந்தனர். வான்வழியாகச் சென்ற அவர் அந்த நதியின் மேல் பத்மாசன நிலையில் தன்னை இருத்திக் கொண்டார்; இரு கரைகளிலும் நின்றிருந்த தனது உறவினர்களைப் பார்த்தார். அவர்களுக்கு உணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்மக்களின் மேல் இருண்மைக் கதிர்களைப் பாய்ச்சினார். அம்மனிதர்கள் திடுக்கிட்டு, கோப உணர்விலிருந்து சுயநினைவுக்கு வந்தனர்.
பின்னர் அந்தர நிலையிலிருந்து இறங்கிய புத்தர் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு தம் மக்களை நோக்கிப் பேசத் தொடங்கினார். அவர் பேசுவதைக் கேட்க அம்மக்கள் கையிலிருந்த ஆயுதங்களைக் கீழே வீசி எறிந்து நெருங்கி வந்தனர். புத்தர், ‘வாழ்க்கை என்பது தண்ணீரைக் காட்டிலும் மதிப்பு மிக்கது’ என்று அவர்களிடம் பேசத் தொடங்கினார்:
‘உறவினர்களே, மரங்கள் ஒன்றாக நிற்கும் போது அவை வலுவாகவும், காற்றை எதிர்த்துத் தாங்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு மரம் தனித்து நின்றால், அதை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்பதும் உங்களுக்குத் தெரியாததல்ல. அதுபோல் உறவினர்கள் ஒற்றுமையுடன் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எதிரிகளுக்கு வாய்ப்பு இருக்காது. மனிதர்கள் இருக்கட்டும். அறிவு இல்லாதவை என்று சொல்லப்படும் மரங்களும் ஒன்றாகத்தான் நிற்கவேண்டும்.
கடந்த காலத்தில் இமயமலையில் சால் மரங்கள் நிறைந்த காட்டின் மீது சூறாவளி ஒன்று வீசியது; என்றாலும், அந்தக் காட்டின் மரங்களும், புதர்களும், புல்பூண்டுகளும், கொடிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை போல் நெருக்கமாக நின்றிருந்ததால், அந்தப் புயலால் ஒரு மரத்தையும் சாய்க்க முடியவில்லை. மரங்களுக்கு எவ்விதப் பாதிப்புமில்லாமல் அவற்றுக்கு மேலாகக் காற்றுக் கடந்து போய்விட்டது.
ஆனால், வனத்துக்கு வெளியில் ஒரு வீட்டின் முன்முற்றம் ஒன்றில் ஒரு பெரிய மரம் நின்றிருந்தது; பல கிளைகள் கொண்ட, வலிமையான மரம். என்றாலும் அது தனித்து நின்றதால், புயல் காற்று அதை வேரோடு பிடுங்கி வீழ்த்திவிட்டது. எனவே, நீங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதே நன்மை பயக்கும்’ என்றார். கடந்த காலத்துக் கதை ஒன்றையும் நான் சொல்கிறேன் என்று முற்பிறவியில் நடந்த நிகழ்வையும் அவர் சொல்லத் தொடங்கினார்.
0
பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. முதல் அரசன் இறந்த பின்னர், அந்த இடத்தில் ஆட்சி செய்வதற்குத் தேவலோக அரசன் சக்ரா புதிய மன்னனை அனுப்பினார். அரச பதவி ஏற்றதன் பின்னர், புதிய மன்னனான வைஸ்ரவானா அனைத்து மரங்களுக்கும், புதர்களுக்கும், செடி கொடிகள், பூண்டுகளுக்கும் செய்தி அனுப்பினார்; அத்துடன் மரங்களின் வசிக்கும் தேவதைகள் அவற்றுக்குப் பிடித்தமான மரத்தை வசிப்பிடமாகத் தேர்வு செய்து கொள்ளும்படியும் கூறினார்.
அந்த நாட்களில் போதிசத்துவர் இமயமலையில் இருந்த சால் மரக்காட்டில் மர தேவதையாக அவதரித்து வசித்து வந்தார். மன்னரின் உத்தரவின் படி மரங்களைத் தேர்ந்தெடுத்து வசிப்பதில் அவர் தனது உறவினர்களான தேவதைகளுக்கு அறிவுரை வழங்கினார்; திறந்தவெளியில் தனித்து நிற்கும் மரங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார். அந்தச் சால் மரக் காட்டில் மரங்கள் அடர்த்தியாக இருந்த இடத்தில் அவர் வசித்தார். ஆகவே, அவரது வசிப்பிடத்தைச் சுற்றி மரங்கள் நெருக்கமாக இருக்குமிடத்தில் தேர்ந்தெடுத்துத் தங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
போதிசத்துவரின் யோசனைச் சரியானது என்று எண்ணிய விவேகமுள்ள மர தேவதைகள் அவர் வசித்த மரத்தைச் சுற்றி இருந்த மரங்களில் தங்கிக் கொண்டனர். ஆனால், அது பிடிக்காத அறிவிலிகளான சில தேவதைகள் இப்படி நினைத்தன: ‘நாம் ஏன் காட்டில் வசிக்க வேண்டும்? மனிதர்கள் உலவும் இடங்களில் நமது வசிப்பிடத்தைத் தேடுவோம்’. ஆகவே, கிராமங்கள், நகரங்களில், தலைநகரத்தின் புறப்பகுதியில் வசிப்பிடங்களைத் தேடினர். அத்தகைய இடங்களில் வசிக்கும் தேவதைகளை மக்கள் கொண்டாடுவார்கள். மிகப் பெரிய அளவில் வழிபாடும் சிறந்த முறையில் அர்ப்பணங்களும் நமக்குச் செய்வார்கள் என்று எண்ணினர். எனவே, அவை வனத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன. மனிதர்கள் வசிக்கும் இடங்களை அடைந்தன. திறந்தவெளியில் வளர்ந்திருந்த பிரும்மாண்டமான மரங்களைக் கண்டு அவற்றில் தங்கின.
அப்போது ஒரு நாள் நாடு முழுவதும் பெரும் புயல் வீசியது. பல ஆண்டுகளாக மண்ணில் ஆழமாக வேரூன்றி வளர்ந்திருந்த தனியாக நின்றிருந்த பெரும் மரங்களாலும் இந்தக் காற்றைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவை வலிமையான மரங்கள். எனினும் அவற்றின் கிளைகள் முறிந்தன. அடி மரங்களும் முறிந்தன. புயற்காற்று அவற்றை வேரோடு பிடுங்கி நிலத்தில் தள்ளியது.
ஆனால், சால் மரக் காட்டில், நெருக்கமாக அடர்ந்து, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தாற்போல் வளர்ந்திருந்த மரங்களை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை; அங்குக் காற்றின் சீற்றம் தணிந்து போனது. ஒரு மரத்தையும் காற்றால் சாய்க்க முடியவில்லை.
அவை குடியிருந்த மரங்கள் காற்றில் விழுந்துபோனதால் வசிப்பிடம் இல்லாத இரங்கத்தக்க நிலைக்கு அந்தத் தேவதைகள் தள்ளப்பட்டன. தமது குழந்தைகளை கைகளில் எடுத்துக்கொண்டு இமயமலையை நோக்கிப் பயணம் செய்தன. அங்கு அவை சால் மரக் காட்டின் தேவதைகளைச் சந்தித்து தமது துயரங்களை எடுத்துக் கூறின. சோகமான நிலையில் அவை திரும்பியிருப்பதை போதிசத்துவரிடம் வன தேவதைகள் கூறின. ‘அனுபவமும் விவேகமும் நிறைந்த சொற்களை அவை கேட்கவில்லை. இந்த நிலை அவை தாமே வரவழைத்துக் கொண்டது’ என்று அவர் கூறினார். பிரும்மாண்டமானதாக மரங்களின் அரசன் என்று சொல்லத்தக்கதாக இருந்தாலும் தனித்து நிற்பதைக் காற்று தூக்கிச் செல்கிறது.
ஆகவே, நண்பர்களே உறவினர்களாகிய நாம் எவ்வகையிலும் வனத்தைப்போல் ஒற்றுமையாக இருக்கவேண்டும், அன்புடன் இணக்கமாகவும் ஒற்றுமையாகவும் எப்படி வாழலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்’ என்று கூறிய ததாகதர், விரோதம் பாராட்டுவதையும் சண்டையையும் கண்டித்தார். ஒற்றுமையையும் தன்னடக்கத்தையும் ஊக்குவிக்கும் பாடங்களை அவர்களுக்குக் கற்பித்தார். தம்ம நெறியையும் போதித்தார். அவர்களுக்கு இடையிலான தகராற்றையும் அமைதியான முறையில் தீர்த்துவைத்தார்.
பாடம் முடிந்தது. புத்தரது சீடர்கள் அந்த நாட்களில் தேவதைகளாகப் பிறந்திருந்தனர். விவேகம் நிறைந்த அந்தத் தேவதையாக நானே அவதரித்திருந்தேன் என்று ஆசான் முற்பிறவித் தொடர்புகளையும் விவரித்தார்.
(தொடரும்)