தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல் படிக்க வசதியான இடமொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் போனது. டப்ளினில் இருந்து புறப்படும்போதே டாக்டர் உர்விக்கைச் சந்தித்து இதன் விஷயமான நீண்ட உரையாடல் நிகழ்த்தியிருந்தார் கால்டுவெல். யாரைச் சந்திக்க வேண்டும், என்ன பேசவேண்டும், என்ன காரியங்கள் மேற்கொள்ள வேண்டும், என்னென்ன தயார் செய்ய வேண்டுமென்று கப்பல் பயணம் முழுவதும் பலநூறு முறை ஒத்திகைப் பார்த்திருந்தார்.
எனவே வீடடைந்து புத்துணர்வு பெற்ற கையோடு, அவர் கால்கள் கிரவெல்லி எவிங்கின் தேவாலயம் நோக்கி நகர ஆரம்பித்தன. கிரவெல்லி எவிங் கிளாஸ்கோவில் தேவாலயச் சபையொன்றில் ஊழியம் செய்துவருபவர். எவிங் பற்றி டாக்டர் உர்விக் ஆச்சரியமான பல விஷயங்களைச் சொல்லியிருந்தார். கால்டுவெல் அவற்றையெல்லாம் அசைபோட்டுக் கொண்டே தேவாலயத்திற்குள் நுழைந்தார்.
எவிங் அடிப்படையில் ஒரு கணித ஆசிரியர். நன்கு படிக்கக்கூடியவர். ஆனால் இளமையிலேயே அப்பாவின் பேச்சை மீறி கிருஸ்தவத் திருத்தொண்டில் தம்மை இணைத்துக் கொண்டார். வாழ்வில் பல மனிதர்களைச் சந்தித்தும், பல நூல்களைக் கற்றும், முதிர்ந்த அனுபவத்தால் உரையாற்றும் கிரவெல்லி எவிங்கின் போதகத்திற்கு விஷேச மதிப்பிருந்தது. 1796 முதல் 1799 வரையிலான இடைப்பட்ட மூன்றாண்டுகள் ‘மிஷனரி இதழில்’ ஆசிரியராக வேலை பார்த்தார். அதே ஆண்டில் எடின்பர்க் மிஷனரி மறைப்பணியாளர் சங்கத்தை நிறுவினார். அப்போது அவருக்கு ஆர்த்ரே தேவாலயத்தைச் சார்ந்த இராபர்ட் ஹால்டேனின் அறிமுகம் கிடைத்தது. ஹால்டேன் கிறிஸ்தவமல்லாத தேசத்திற்கு சமயப் பரப்புநர்களை அனுப்புவிக்கும் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொண்டுவந்தவர். கிரவெல்லி எவிங்கை இந்தியா அனுப்புவதற்கு பலவழியிலும் முயற்சி செய்தார். ஆனால் இந்தியாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி அதற்கு ஒருதுணையாக இல்லை. சமயப் பணியை எங்கிருந்து செய்தால் என்ன?
எவிங் தன் சொந்த ஊரிலேயே ஹால்டேனுடன் சேர்ந்து தேவாலயத் திருத்தொண்டில் ஈடுபட்டார். அப்படித்தான் 1799ஆம் ஆண்டு கிளாஸ்கோவிலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்ய நேர்ந்தது. அதே ஊரில் உள்ள இறையியல் கல்விக் கழகத்தில் ஆசிரியப் பொறுப்பேற்று பலருக்கும் வேத பாடங்கள் போதித்தார். எவிங்கிடம் ஒரு விஷேச பண்பு உள்ளது. சமய போதனைகளைத் தாய் மொழியில் பயிற்றுவிப்பது மிகுந்த ஊக்கமளிக்கும் என்பது அவர் நம்பிக்கை. அதை வெற்றிகரமாகச் செய்து வந்தார்.
எவிங்கின் திருச்சபை சுதந்திரமான, சீர்திருத்தம் எண்ணம் கொண்டது. இதில் தான் உறுப்பினர் ஆகவேண்டுமென்று கால்டுவெல்லுக்கு எவ்விதப் பிடிப்பும் இல்லை. உர்விக் சொன்னார், கால்டுவெல் செய்தார் – அவ்வளவுதான். பிரித்து ஆராயும் பக்குவம் இன்னும் வசப்படவில்லை. எவிங்குடன் அறிமுகமான சில நாட்கள், டப்ளின் பாடவேளைகளை அவருக்கு நினைவூட்டின. ‘பேசாமல் அங்கிருந்தே அன்பிற்குரிய உர்விக்கிடம் பாடம் பயின்றிருக்கலாம், இங்கு வந்து தனியாகத் தவிக்கிறோமே’ என்ற அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஆனால் இந்த ஏக்கம் சில வாரங்களில் கரைந்துபோனது. எவிங்கின் போதனையில் கால்டுவெல் மயங்கினார். கிளாஸ்கோவில் அவரைப்போல் மற்றொரு ஊழியக்காரரைக் காண்பது அரிது. கட்டமைப்புடைய சமயக்கல்வியின் நுட்பங்களையும் ஹீப்ரு மொழியையும் எவிங் அறிமுகப்படுத்திவைத்தார்.
இதற்கிடையில் கால்டுவெல்லின் வாசிப்பு சமய நூல்களைப் படையெடுத்தது. நண்பர் வட்டமும் அது சார்ந்து பெருகியது. இளைஞர்கள் நடத்திவந்த பொதுநலக் குழுக்களில் சேர்ந்து சமூகநல காரியங்களில் ஈடுபட்டார். கிளாஸ்கோவிலிருந்து புறநகர் பகுதிகளுக்குப் பயணித்து அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு அடிப்படைக் கல்வி பயிற்றுவித்தார். பிற சமயங்களைப் பின்பற்றும் கிராமவாசிகளுக்கு கிறிஸ்தவத்தின் மகிமையை எடுத்துக் கூறினார்.
மாவட்ட மேற்பார்வைச் சங்கம் என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, வார இறுதியிலும் சமயப் பணிகளிலிருந்து அவர் விலகவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைநேர பள்ளிக்கூடங்களை தாமாக முன்வந்து நடத்தினார். கண்ணும் கருத்துமாக இங்ஙனம் ஓடியோடி உழைத்த இளைஞனின் வயது வெறும் 19. பின்னாட்களில் தென்னிந்தியக் கிராமங்களில் ஊழியம் செய்ய வந்தபோதும் இதே பயிற்சி முறைமைகளைத் தாம் பின்பற்றியதாக கால்டுவெல் எழுதுகிறார்.
இங்குதான் தாமஸ் சாமர்ஸின் உரைகளைக் கால்டுவெல் கேட்கத் தொடங்குகிறார். ஸ்காட்லாந்தில் மிக்க புகழ்பெற்ற பிரஸ்பைட் ஊழியர்களின் பட்டியல் எடுத்தால், முதல் ஐந்து பேரில் இவர் இருப்பார். சாமர்ஸ் ஓர் இறையியல் பேராசிரியர். புனித அந்திரேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும் பணி செய்திருக்கிறார். கிளாஸ்கோவில் உள்ள பல தேவாலயங்களில் ஊழியம் செய்து, தம் பேச்சாற்றலால் நன்கறியப்பட்டவர். ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகமும் டாக்டர் சாமர்ஸ்… டாக்டர் சாமர்ஸ்… என்று பித்துப்பிடித்து அலைகிறது’ என்பது அக்காலத்தில் வாழ்ந்த சாமுவேல் வில்பர்ஃபோர்ஸ் எனும் பாதிரியாரின் மதிப்பீடு. பின்னாளில் இந்தியாவுக்கு வந்து ஊழியம் செய்த அலெக்ஸாண்டர் டஃப் என்பாரும் சாமர்ஸின் மாணவரே. டஃப் பற்றி மேலதிகச் செய்திகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.
சாமர்ஸின் பிரசங்கத்தை மூன்று அங்கமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று தத்துவ சாரம், இரண்டு படிமக் காட்சி, மூன்று உணர்ச்சிப் பிரவாகம். இவையனைத்தும் குழைத்துத் தரும் பேச்சைக் கேட்டால், யார்தான் மயங்கமாட்டார்கள்? கால்டுவெல் இவ்வுரைகளை உன்மத்தம் பிடித்தார்போல கேட்டு ரசித்தார். அவர் சமய வாழ்வில் சாமர்ஸுக்கு இன்றியமையா இடமிருப்பதை இதன்மூலம் அறிகிறோம்.
நேரடிக் களப்பயணம், பிரசங்க ஞானம், நல்லிணக்கக் கூட்ட அனுபவம் என்று கால்டுவெல்லின் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் எல்லா அம்சங்களும் அவ்வோராண்டில் நிகழ்ந்துமுடிந்தன. 1834ஆம் ஆண்டு எல்.எம்.எஸ். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இலண்டன் மிஷனரி சொசைட்டியில் கால்டுவெல் தன்னை இணைத்துக் கொள்ள முடிவெடுத்தார். அவர் நண்பர் லியானும் எல்.எம்.எஸ்.-ல் சேர விரும்பியதால், இருவரும் உடனடியாக இலண்டன் புறப்பட்டனர். சொசைட்டி இவ்விருவரையும் கம்பளம் விரித்து வரவேற்றது.
1795ஆம் ஆண்டு எட்வர்ட் வில்லியம் தொடங்கிய இலண்டன் மிஷனரி சொசைட்டி மீது சமய அறிஞர்கள் பெரும் மரியாதை கொண்டிருந்தனர். சீர்த்திருத்த சித்தாந்தம் கொண்ட இச்சபையின் நோக்கம் பலரையும் கவர்ந்தது ஆச்சரியமில்லை. எட்வர்ட் பல தேவாலயங்களுக்குத் தொடர்ச்சியாக மறைப்பணியின் முக்கியத்துவத்தைக் கடித வாயிலாக அனுப்பிக்கொண்டிருந்தார். கிறிஸ்தவம் பரவாத தேசங்களுக்கு, மறைப்பணியாளர்களை அனுப்பி பரப்புரை செய்வதே எல்.எம்.எஸ். இயக்கத்தின் நோக்கம். அத்தேசத்தின் கல்வி, சுகாதாரம், சமூகநீதி முதலான அடிப்படைக் கட்டுமானங்களை வலுப்படுத்துவதில் எல்.எம்.எஸ். முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.
கால்டுவெல்லுக்கு இதன் செயல்பாடுகளில் நாட்டம் மிகுந்திருக்கலாம். ஆனால் யார் தூண்டுதலால் எல்.எம்.எஸ்ஸில் இணைந்தார் என்பதற்குத் தடயம் இல்லை. இலண்டன் வாழ்க்கை அவர் புரிதலை மேலும் மெருகேற்றியது. கண் திறப்பான பல நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறின. இலண்டன் மாநகரம் சென்று வந்தது தன் சமய வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தனி அத்தியாயம் என்று எழுதுகிறார் கால்டுவெல்.
கால்டுவெல்லும் லியானும் சிறுவர்கள் என்பதால் மேற்படிப்பைத் தொடரும்படி சங்கத்திலிருந்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்க முடிவுசெய்கிறார்கள். ஆனால் விடுமுறைக் காலம் முடிந்து பல்கலைக்கழகம் திறப்பதற்கு வெகுநாட்கள் பாக்கியிருந்தன. இடைப்பட்ட நாட்களை பெட்போர்ட்ஷையரில் இருந்த மறைப்பணியாளர் பயிற்சிப் பள்ளியில் செலவழிக்க நேர்ந்தது. அப்பள்ளியை செசில் என்பார் நடத்தி வந்தார்.
ஒருவழியாக விடுமுறை முடிந்து புத்தொளியுடன் பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்கின. கி.பி. 1451ஆம் ஆண்டு கோதிக் பாணியில் உருப்பெற்ற பிரம்மாண்ட கட்டடம். கால்டுவெல்லுக்கு முன்பே பல அறிஞர்களை உருவாக்கித் தந்த நிறுவனம். ஆடம் ஸ்மித், ஜேம்ஸ் வாட், கெல்வின் பிரபு முதலான ஜாம்பவான்கள் படித்த பல்கலைக்கழகம் இது. கால்டுவெல்லை சமய வாழ்வில் முன்னேறத் தூண்டிய முன்னெடுப்புகளை மட்டுமே இதுகாறும் பார்த்தோம். அவர் ஒரு மொழியியல் ஆய்வறிஞராக உருமாறியது இங்குதான்.
பல்கலையில் சேர்ந்த பிறகு, மாவட்ட மேற்பார்வைப் பணியும் கல்விப் பயிற்றும் வேலையும் கைகூடாமல் போயின. ‘மறைப்பணியாளரின் பணிகளிலிருந்து நாம் வெகுதூரம் விலகிப்போகிறோமோ’ என்று கால்டுவெல் தன் நண்பரிடம் கூறி வருத்தப்பட்டார். ‘இப்போதெல்லாம் முன்புபோல கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஊழியம் செய்ய முடிவதில்லை. ஊருக்கு வெளியே தனியார் கூட்டங்களில் மட்டும் பிரசங்கம் செய்ய அனுமதிக்கின்றனர். அதிலும் நாம் சொந்தமாக பேச முடியாது. யாரோ ஒருவர் எழுது வைத்த குறிப்புகளை அப்படியே ஒப்பிக்க வேண்டியிருக்கிறது’ என்று ஆதங்கப்பட்டார்.
கால்டுவெல் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு முந்தி, அவரின் அடிப்படைக் கல்வி நிலை மோசமாக இருந்தது. உயர் கல்விப் படிப்பதற்கு ஓராண்டு முன்புவரை இலத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் ஒற்றை வார்த்தைகூட உச்சரிக்கத் தெரியாமல் இருந்தார். ஆரம்பக் கல்வியில் தான் பெரிதும் சோபிக்காதது குறித்து வாழ்நாள் முழுவதும் அவருக்கு வருத்தம் இருந்தது. இடையன்குடியில் கல்வி மையப்பட்ட சீர்திருத்தப் பணிகளை முன்னகர்த்தியதற்கு இவையும் காரணமாக இருக்கலாம்.
உடல் நலனைப் பொருட்படுத்தவியலாத சூழலிலும், கல்வியைப் பிரதானப்படுத்தி உழைத்தார். ‘அக்காலக்கட்டத்தில் கிளாஸ்கோ பல்கலையிலேயே கல்வியின் முக்கியத்துவத்தை என்னைப் போல் ஆழமாக உணர்ந்து படித்தவர் யாருமில்லை. ஒவ்வொரு படிநிலையையும் அளவில்லா குதூகலத்துடன் எதிர்கொண்டேன்’ என்கிறார். மேலும் செவ்வியல்தன்மைப்பெற்ற நூல்களை பலரும் பள்ளிப் பருவத்திலேயே படித்துவிட, கால்டுவெல்லுக்கு அவையெல்லாம் புதிதாக இருந்தன.
முதலாண்டு முடிவில் ஊக்கமுடன் படித்ததால் இலத்தீன் மொழியில் இரண்டாமிடமும், கிரேக்க மொழியில் நான்காம் இடமும் பெற்றார். இரண்டாமாண்டில் கிரேக்க இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைக்குப் பல்கலைக்கழகப் பரிசு கிடைத்தது. இளநிலை பாடத்தில் அசாத்திய தேர்ச்சிப் பெற்றதால், சர் ராபர்ட் பீல் பரிசுத்தொகையின் ஒரு பங்கை கால்டுவெல் பெற்றார். புலி இலாவகத்துடன் பாய்ந்து இரையைப் பிடிப்பதுபோல், இளமையில் விட்ட கல்வியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கால்டுவெல்.
பல்கலைக்கழகப் பாடங்களுக்கு இடையே, இறையியல் வகுப்புகளையும் தவறாமல் கவனிப்பது கூடுதல் சுமை. ஆனால் அதை விரும்பி ஏற்றார், கால்டுவெல். டாக்டர் வார்ட்லா மற்றும் எவிங் உடன் சேர்ந்து சுவிஷேசப் போதனைகள் கேட்டார். ஆண்டர்சோனியன் பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் ஹீப்ரு மொழி கற்றார். தூங்கும் நேரம் ஒழித்து ஏதேனும் ஒன்றை ஓயாமல் செய்துகொண்டே இருக்க அவர் மனம் உந்தியிருக்கிறது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மறைப்பணியாளர்கள் இந்தியாவிற்கு வந்து ஊழியம் செய்துள்ளனர். என்றாலும் வரலாற்றுப் பக்கத்தில் எல்லோருக்கும் இடமொதுக்கவில்லை. கால்டுவெல்லை இன்றளவும் நாம் கொண்டாடுவதற்கு விசேஷக் காரணம், அவரின் ஒப்பியல் ஆய்வுகள். உலகம் உவக்க மொழிகளை ஒப்பாய்வு செய்யும் நுட்பத்தை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிசெய்த பேராசிரியர் டேனியல் சாண்ட்போர்ட் என்பார் மூலம் கால்டுவெல் கற்றுக்கொண்டார் என்பது வரலாறு. ஆனால் ஒப்பியல் மொழி ஆய்வினைத் தொடங்கிவைத்த சரடு, இந்தியாவில் மையங்கொண்டது எனச் சொன்னால் நம்புவீர்களா?
வங்கத்தில் ஆசியவியல் சங்கம் நிறுவி, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று, வட இந்தியாவில் மொழியியல் ஆராய்ச்சியை நுணுக்கமாக மேற்கொண்டு, அதன் முடிபுகளை வெளிப்படையாகப் போட்டுடைத்து மேற்குலகை அதிரச்செய்து, அதன்மூலம் மொழியியல் ஆராய்ச்சிக்குப் பலரை உள்ளிழுத்தவர் ஒருவர்.
அவர் வளர்த்துவிட்ட மொழியாராய்ச்சி ஐக்கிய ராஜ்ஜியத்தில் தனித் துறையாக வளர்ந்து, மறைப்பணியாளர்களுக்குப் பாடமாகக் கற்பிக்கப்பட்டு, அதிலொருவர் தென் இந்தியாவிற்கு வந்து, திராவிட மொழிகளை ஆராய்ச்சி செய்து, நடுக்குறும் முடிவுகளை வெளியிட்டதுதான், இந்தியாவில் ஒப்பீட்டு மொழியியலின் சுருக்கமான வரலாறு எனச் சொல்லி முடிக்கலாம்.
அதில் இரண்டாமவரை நம்மெல்லோருக்கும் தெரியும். முதாலமவர் யார்?
(தொடரும்)
______________
படம்: தாமஸ் சாமர்ஸ் (Thomas Chalmers)