Skip to content
Home » திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அந்த முன்னோடியின் பெயர், வில்லியம் ஜோன்ஸ். 1746ஆம் ஆண்டு இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பிறந்தார். ஜோன்ஸின் தந்தையார் மிகச் சிறந்த கணிதவியல் அறிஞர்; ஐசக் நியூட்டனின் நண்பர். இளம் வயதிலேயே ஜோன்ஸ் தன் தந்தையை இழந்து, தாயார் மேரி ஜோன்ஸின் ஆதரவில் வளர்க்கப்பட்டார். 25 வயதிற்குள் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு வாய்த்தது. பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரு, இத்தாலியன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் சீன மொழிகளில் நல்ல மொழிப் பிரவாகம் பெற்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அரேபிய மற்றும் பாரசீக மொழிகள் அறிமுகமாயின. இந்தியா வருவதற்கு முன்பே ‘பாரசீக மொழி இலக்கண’ நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.

ஆனால் அடிப்படையில் இவர் ஓர் இலக்கிய மாணவரோ, மொழியியல் பின்புலம் கொண்டவரோ கிடையாது. முறையாகச் சட்டம் பயின்றவர். 1783ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் நீதிபதிப் பதவிக்கு விண்ணப்பித்துத் தேர்வானார். அடுத்த மாதமே அனா மேரியாவை திருமணம் செய்துகொண்டு ‘முதலை’ எனும் கப்பலில் ஏறி இந்தியா நோக்கி பயணத்தைத் தொடங்கினார். அனாவும் பன்மொழிப் புலமை மிக்கவர். ஒருவேளை ஜோன்ஸ் அதன் காரணமாகவும் ஈர்க்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தடைய, ஐந்து மாதகாலம் கடலில் பயணிக்க வேண்டும்.

வில்லியம் ஜோன்ஸ்
வில்லியம் ஜோன்ஸ்

இடைப்பட்ட இந்நெடிய பயணத்தில் ஜோன்ஸ் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் இந்தியா தொடர்புடையனவாக இருந்தது. தரையிறங்கியதும் செய்யவேண்டிய பணிகளை 16 அம்சத் திட்டமாக எழுதிவைத்தார். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராயும் மூச்சிறைக்கும் வேலை அது. 1787இல் ஜோன்ஸ் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘வேறெந்த ஐரோப்பியரும் கற்றுக்கொள்ளாத அளவு, இந்தியா குறித்து நான் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார். ஆனால் அவரின் முன்மொழிவுகளில் மொழியியல் திட்டங்கள் எதுவும் இல்லை. காலம்தான் அந்த ஓவியத்தை நீட்டி நெளித்து வரைந்தது.

நம்பர் 8, கார்டன் ரீச், கல்கத்தா. சாகும்வரை இந்த விலாசத்தில்தான் ஜோன்ஸ் வசித்தார். இவருக்கு முன்பே பல கீழைத்தேய அறிஞர்கள் இந்தியாவில் வாழ்ந்தது உண்டு. ஆனால் மொழியியல் புலத்தில் ஜோன்ஸ் பெற்ற அறிவும், முன்மொழிந்த திட்டங்களும் மற்றெல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. வங்கம் வந்த நான்காவது மாதத்திலேயே ஆசியவியல் சங்கத்தை நிறுவினார். மனித நாகரீகத்தின் தோற்றம் குறித்தும், வரலாற்றுப் புரிதலின் அவசியத்திற்கும் கீழைத்தேயங்களில் இருந்து அகழாய்வைத் தொடங்குவது அத்தியாவசியம் என்று மேலை உலகம் கருதிய காலம் அது. அத்தேடல்களுக்கு வழிவகுப்பதாய் ஆசியவியல் சங்கம் விளங்கியது.

இந்தியா மற்றும் இந்துமதம் குறித்து மேலும் அறிந்துகொள்ள, சம்ஸ்கிருத வாசிப்பு அவசியம் என்று ஜோன்ஸ் அறியாமலில்லை. ஆனால் தன் பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் நேரம் கிடைக்காமல் தள்ளாடினார். மேற்கொண்டு பகவத் கீதையை சம்ஸ்கிருத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த நண்பர் சார்ல்ஸ் வில்கின்ஸின் தொடர்பினால், தாமாக அம்மொழியைக் கற்க வேண்டிய அவசியம் இன்றி இருந்தார். ஐயங்கள் அனைத்தையும் அவரிடம் கேட்டுத் தெளிந்தார். ஆனால் பகவத் கீதை வெளியிட்ட பிறகு, வில்கின்ஸின் உடல்நிலைக் கவலைக்கிடமானது. இந்திய வெயிலில் அனலிடைப்பட்ட புழு போல வெள்ளையர்கள் வாடினர். எனவே வில்கின்ஸ் உடனடியாக தன் தாயகம் திரும்பினார்.

ஜோன்ஸின் சம்ஸ்கிருதப் பற்றுக்கோடாக இருந்த ஒரே கோலும் தகர்ந்துவிட்டது. வேறுவழியின்றி புதுமொழி கற்கும் கோதாவில் இறங்கினார். ஆனால் சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மிலேச்சர்களுக்கு தங்கள் மொழியைக் கற்றுக்கொடுக்க மாட்டோம் என மறுத்து ஒதுக்கினர். தனக்கேற்ற ஆசிரியரைக் கண்டடைய வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்தது. இறுதியில் கல்கத்தாவிலிருந்து 60 மைல் தொலைவில் உள்ள கிருஷ்ணாநகரில் வசிக்கும், வைத்திய வகுப்பைச் சார்ந்த பண்டிதர் ராம்லோச்சனிடம் பாடம் கேட்கத் தொடங்கினார் ஜோன்ஸ். அக்காலத்தில் கிருஷ்ணாநகர் சமஸ்கிருதப் பாடம் கற்கும் முக்கிய மையமாகச் செயல்பட்டது. அவர் போதிக்கும் சம்ஸ்கிருதப் பாடங்களைப் புரிந்துகொள்ள ஆங்கிலேயம் பரிட்சயமுள்ள சிறுவன் ஒருவனை மொழிபெயர்ப்பு வசதிக்காக உடன் வைத்துக் கொண்டார்.

ராம்லோச்சன்
ராம்லோச்சன்

அரும்பாடுபட்டு சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்ட ஜோன்ஸ் 1789ஆம் ஆண்டு தன் பெரும் உழைப்பைச் செலுத்தி, காளிதாசரின் சாகுந்தலம் நூலை மொழிபெயர்த்தார். காளிதாசரின் கவிப்புலமையை மெச்சி, இந்தியாவின் ஷேக்ஸ்பியர் எனப் பட்டமளித்துச் சிறப்பித்தார். ஐரோப்பாவில் இந்நூல் வெளியான ஏழு ஆண்டுகளில், மூன்று முறை மறுஅச்சுக்குச் சென்றது என்றால் அதன் வரவேற்பை யோசித்துப் பாருங்கள். ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் நூலையும், மனுஸ்மிருதியின் 7 பாகங்களையும் 1794ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

தன் வாழ்வின் நெடிய மொழி அனுபவத்தைக் கொண்டு கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளோடு, சம்ஸ்கிருதம் ஒப்புமையுடையது எனும் கருத்தைப் பலமாக முன்வைத்தார். ஜோன்ஸிற்கு 28 மொழிகள் அத்துப்படி. 1786ஆம் ஆண்டு கோட்பாட்டு ரீதியில் இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தபோது மேற்குலகம் அதிர்ச்சிக்கு உள்ளானது. கோதிக், செல்டிக் மற்றும் பாரசீக மொழிகளோடு சம்ஸ்கிருதத்தை ஒப்பிட இடமுண்டு என்று ஜோன்ஸ் வாதிட்டார். கலீலியோ, கோப்பர்நிக்கஸ் முதலானோரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் விமர்சையாக வரவேற்கப்பட்டதுபோல், ஒப்பியல் மொழியாய்வில் பெரும் உடைப்பாக இவ்வுண்மை ஒலித்தது. இருமொழிகளின் சொற்களையும், உச்சரிப்புகளையும், இலக்கண அம்சங்களையும் ஒப்பிடுவதன்மூலம் அவ்விரு மொழிகள் வழங்கப்பெறும் நிலத்தின் வரலாற்றுத் தொடர்பையும் பண்பாட்டுத் தொடர்பையும் இடப்பெயர்வுகளையும் புரிந்துகொள்ளலாம் என ஜோன்ஸ் மேற்கொண்டு வாதிட்டார்.

இத்தனைத் தீவிரமான ஆய்வுக் கோவைமேல் இனி ஒரு சருகும் சேரமுடியாதபடி அவர் உடல்நிலை மோசமானது. மலேரியா காய்ச்சலுக்கான அத்தனை அறிகுறிகளும் அவருக்கு இருந்தன. ஆனால் ‘வசந்தத்தில் வரும் காய்ச்சல், வருடம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்’ என்ற பழங்கால நம்பிக்கையால் மருத்துவம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட்டார். இரண்டு வாரம் கழித்து, கல்லீரல் அழற்சியால் தன் 47வது வயதில் எதிர்பாராமல் இறந்துபோனார். இடைப்பட்ட சொச்ச காலத்தில், மொழியியல் துறைக்கு அவர் ஆற்றிய தொண்டுகளால் நவீன ஒப்பீட்டு மொழியியலின் தந்தை என்று அவரை நினைவு கூறுகிறோம். இவர் வாயிலாக மொழியியல் படிப்பின் முக்கியத்துவமும் சிறப்பம்சமும் மேலை நாட்டில் கொடிகட்டிப் பறந்தது.

அந்தக் கொடியின் அசைவில் கால்டுவெல்லும் பறந்தார். மனம் போன போக்கில் படித்துக்கொண்டிருந்த அவரை, டேனியல் சாண்ட்போர்ட்டின் உரைகள் ஒப்பீட்டு மொழியியல் வசம் கட்டிப் போட்டன. சாண்ட்போர்ட் ஒரு கிரேக்கப் பேராசிரியர். அன்றைய காலத்தில் ஜெர்மனில் மட்டுமே போதிக்கப்பட்டுவந்த மொழியியல் பாடங்களை கிளாஸ்கோவில் பிரத்தியேகமாகப் பயிற்றுவித்தார். வேற்றுமொழி பேசுபவர்களைக் கண்டால் ஒருகணம் அப்படியே நின்று, அவர்களைப் பற்றி குறைந்தளவேனும் ஆராய்ந்து, உலகிற்கு உதவக்கூடிய ஏதேனும் ஒன்றை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என கால்டுவெல் விரும்பினார். அந்த விதைதான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுத விருட்சமாக உருப்பெற்றது.

இறையியல் படிப்பில் ஏட்டுக் கல்விக்கு அதிக ஊக்கமில்லை. மேன்மைத் தாங்கிய பாதிரியார்களின் பிரசங்கத்திலிருந்தே அதிகம் படிக்க வேண்டியிருந்தது. கால்டுவெல்லுக்கு இச்சூழல் ஒவ்வாமை அளித்தது. முட்டிமோதி பரிட்சையில் தேறினார்களே அன்றி, ஒன்றும் படித்திலர் என்று வேதனைப் பட்டார். ஆனால் கால்டுவெல் மட்டும் இக்கடிவாளங்களை உடைத்தெறிந்து, தீவிரமாகப் படித்தார். ரிச்சர்ட் ஹூக்கரின் எழுத்துக்களும் சிந்தனைகளும் அவரை வசீகரித்தன. டேனியல் வாட்டர்லேண்ட் முதலான இங்கிலாந்து தேவாலயப் படிப்பினைவாதிகளை ஆர்வமோடு படித்தார். முதல் ஆண்டிலேயே இவ்வெழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினாலும், முழுமனத்தோடு ஏற்றுக்கொள்ள ஐந்து ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. தான் சார்ந்த பிரிவையும், பிற கிறித்துவப் பிரிவுகளையும் சமரசமின்றி எடைபோட்டார். சரியான புரிதலுக்கு வரும்வரை மெளனம் காப்பதே சரியென்று நினைத்தார். ஆனால் இவர் மாறிமாறி படிப்பதைக் கண்டு, கால்டுவெல் முரண்பாடு கொண்டவன் என சக மாணவர்கள் முத்திரை குத்தினார்கள்.

‘பிரிவு வேற்றுமைகளை ஏற்றுக்கொள்வதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையுமே போதும். கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் தாண்டி பெரிய வித்தியாசம் இல்லை’ என்றார். பாடங்களும் இறைவனைக் கண்டடையும் வழிகளும் எல்லாவிடத்தும் ஒன்றுபோல்தானே இருக்கின்றன என அயற்சிக் கொண்டார். ஒவ்வொரு மத நிறுவனமும் இறைத்தூதர்களுக்கு வெவ்வேறு வழிமுறைகளைப் பயிற்றுவிக்கின்றன; வெவ்வேறு மத ஆச்சாரங்களை அனுஷ்டிக்கின்றன. அப்படியிருந்தும் உண்மையான கடவுட்பற்றும், வைராக்கிய உணர்வும் எல்லோரிடத்தும் மிகுவதில்லை. தான் உயர்வாக மதித்த மறைப்பணியாளர்கள் கூட இதில் சோபிக்கவில்லை என வருத்தத்துடன் கால்டுவெல் எழுதுகிறார்.

இங்கிலாந்தைவிட்டுப் புறப்பட்டபோது, நான் கிறிஸ்தவ மதப்பிரிவின் எவ்வித தனி அபிப்பிராயங்களுக்கும் இடங்கொடுக்காமல், வேத வார்த்தைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகமாகவே இருக்க விரும்பினேன். பிரிவு பேதங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே சரியெனப்பட்டது. மற்றவர்கள் வேண்டுமானால் சண்டையிட்டுக்கொள்ளட்டும். நான் நடுநிலையாகத்தான் இருக்கப் போகிறேன் என்று தன் நினைவலையில் குறிப்பிட்டார்.

கிளாஸ்கோவில் பட்டம் பெற்ற பின்னர், இந்தியா செல்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டி கால்டுவெல் இலண்டன் புறப்பட்டார். சமயப் பணிக்காக கடல் தாண்டிச் செல்ல நினைத்த போது, அன்னையின் பாசம் வளர்ப்புப் பூனைபோல் அவர் காலைச் சுற்றி நின்றது. இசபெல்லா அப்போது படுத்த படுக்கையாகக் கிடந்தார். தன் உயரமான உடலை மெல்லச் சுருட்டி அன்னையின் தலைமாட்டில் முகம் புதைத்தார், கால்டுவெல். இசபெல்லா அவரைக் கழுத்தோடு கட்டியணைத்து, பாசம் தழும்ப ஒரு முத்தமிட்டார். ‘கொஞ்சமும் குறுகுறுப்பின்றி உன்னை அப்படியே இறைவனிடம் ஒப்படைக்கிறேன். போய் வாடா கண்ணே’ எனச் சொல்லி தழுதழுத்தார். இதற்குப்பின் கால்டுவெல் இசபெல்லாவைச் சந்திக்க விதி வாய்ப்பளிக்கவில்லை.

இன்னும் பல காரணங்கள் அவருக்குத் தடையாக வந்து விழுந்தன. இரண்டு சகோதரிகள் காசநோயினால் இறந்துபோனார்கள். கால்டுவெல்லின் உடல்நிலையும்கூட மோசமாகத்தான் இருந்தது. பரிசோதித்துப் பார்த்த இரு மருத்துவர்களும் ஒன்றுபோல எல்.எம்.எஸ்.ஸிடம் மறுப்பு தெரிவித்தார்கள். தொடர்ச்சியான வாசிப்பினால் உடல் ஆரோக்கியம் ஒடுங்கியது. இந்தியத் தட்பவெப்பத்தில் என்ன வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எச்சரித்தார்கள். கால்டுவெல்லின் தொடர் ஊக்கத்தைக் கண்டு இரண்டாவது மருத்துவர் இந்தியா செல்வதற்குப் பரிந்துரைக் கொடுத்தார்.

பல போராட்டங்களைக் கடந்து இலண்டன் மிஷனரி சொசைட்டி சார்பாக மதறாஸில் ஊழியம் செய்ய கால்டுவெல் பணிக்கப்பட்ட கதை இதுதான். சொசைட்டி அவர்மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்தது. மிடுக்கான ஆடையும், 20 யூரோ மதிப்புள்ள புத்தகங்களையும் கையோடு கொடுத்தார்கள். கால்டுவெல்லோடு எல்.எம்.எஸ்.-ஐச் சார்ந்த இருவர் இந்தியாவிற்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்விருவருமே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். திரு. லியான் பெனாரஸுக்கும், திரு. ரசல் திருவிதாங்கூருக்கும் பணியமர்த்தப்பட்டார்கள்.

குடும்பத்தைப் பிரிந்து இத்தனை தூரம் செல்வது இதுதான் முதல்முறை. இதுவே கடைசி முறையாகவும் அமையலாம். ஆனால் நோய் கவ்விய குடும்பத்தை கண்ணீரோடு பார்த்த பார்வை கடைசியாக இருந்துவிடக் கூடாது. இத்தனை மனப்போராட்டத்தின் மத்தியில், என் இலட்சியப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா? பயணம் எப்படி வேண்டுமானாலும் திசை திரும்பலாம். செல்லுமிடத்தில் எத்தனை இடர்கள் வந்தாலும் சமாளிக்க வேண்டும். மகிழ்ச்சியும் மயக்கமும் கலந்தாற்போல கலக்கத்துடன் கடலை வெறித்துப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார், கால்டுவெல். இராட்சத திமிங்கலம் போல ‘மேரி அன்’ கப்பல் அலைகளை விழுங்கிக் கொண்டு முன்னால் வந்தது.

ஆகஸ்ட் 30, 1837ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தன் பயணத்தை கால்டுவெல் தொடங்கினார்.

(தொடரும்)

______________
படம்: Mary Ann, painting by J. Scott, National Maritime Museum, Greenwich

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *