Skip to content
Home » திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

Charles Philip Brown

கேப்டன் டர்புட் மிகச் சிறந்த சாகசக்காரர். இல்லையென்றால் இந்த ஒற்றை மனிதரை நம்பி இந்நெடும் பயணத்திட்டத்தை ஒப்படைத்திருப்பார்களா?

‘மேரி அன்’ பர்மா தேக்கு இழைத்துக் கட்டிய டச்சுக் கப்பல். பல ஆண்டுகள் இராணுவத்தில் போர்க்கலனாக இருந்தது. பயணம் தொடங்கி இரண்டு வாரம் ஆகியும் மேரி அன் இன்னும் நெடுங்கடலைச் சேரவில்லை. கடல்பரப்பை அடைவதற்குள் பல இடர்பாடுகள் ஏற்பட்டன. பலத்த மழை, சூறாவளிக் காற்று – எல்லாம் எதிர்பார்த்தவைதான்.

அன்றிரவு சுமார் பதினோரு மணியிருக்கும். காற்று பலமாக அடித்தது. ஊதுகொம்பு ஒன்றை வைத்து, டர்புட் அவசரகதியில் எல்லோரையும் எழுப்பிக்கொண்டிருந்தார். கப்பல் திடீரென திசை மாறுவதை ஊகித்து, தூக்கத்திலிருந்து கண்விழித்தார் கால்டுவெல். ஒவ்வொரு நிமிடமும் அபாய மணி ஒலித்தது. அங்கியை மாட்டிக்கொண்டு மேலே வந்த கால்டுவெல்லுக்கு பேரதிர்ச்சி.

பிரேசில் நாட்டிலிருந்து வந்த ‘ஹவ்ரே’ எனும் கலம் கால்டுவெல் பயணித்த மேரி அன் மீது மோதியிருந்தது. இரண்டு கப்பல்களிலும் விளக்குகள் இல்லாததுதான் மோதலுக்குக் காரணம். இடிபாடுகளைப் பரிசோதிக்கவும் போதிய வெளிச்சம் இல்லை. பொழுது விடிந்த பிறகுதான் ‘ஹவ்ரே’வின் கதி தெரியவந்தது. மேரி அன் சிறிய சேதங்களுடன் தப்பிவிட்டது. ஆனால் மோதலுக்குள்ளான பிரெஞ்சு நாட்டுக் கப்பல் கடலில் மூழ்கி, அதிலிருந்த பலரும் மாயமானார்கள். நான்கு பேர் இறந்தும்போனார்கள். சிறிய சேதங்களைச் செப்பனிட்டுச் செல்ல, மேரியை ப்ளைமவுத் நோக்கிச் செலுத்தினார், டர்புட்.

மேரி அன்னை மெருகேற்ற இரண்டு வாரகாலம் தேவைப்பட்டதால், ப்ளைமவுத் துறைமுகத்திலேயே தங்கவேண்டியிருந்தது. இச்சிறிய வேளையில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் அன்பைப் பெற்றார் கால்டுவெல். இறை ஊழியர் என்றறிந்து பலரும் அவரை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தனர். செழிப்பான வங்கி அதிகாரி ஒருவர், கால்டுவெல்லைத் தன் வீட்டில் தங்கவைத்துக்கொண்டார். சிறிதும் ஓய்வின்றி ஒன்பது இடங்களில் அருளுரை வழங்கிய கால்டுவெல், மீண்டும் கப்பலேறிய பிறகுதான் ஓய்வெடுக்க முடிந்தது. ப்ளைமவுத்தில் இந்தியவியல் குறித்து வாசிக்க சில புத்தகங்கள் வாங்கினார்.

கப்பலேறுவதற்கு முன் மனம் கலங்கியிருந்த கால்டுவெல், இப்போது முழுவதுமாக மாறிவிட்டார். இப்பயணத்தின் விளைவாக, பல நாட்களாய் அவரைப் பாடுபடுத்திவந்த வறட்டு இருமல் அகன்றது. ‘ஒருவேளை வீட்டில் தங்கியிருந்தால் நானும் என் சகோதரிகளைப் போல் காசநோயால் மடிந்திருப்பேன். அவ்வாறு நிகழாமலிருக்க இந்தியப் பயணம் எனக்கு நிறைய உதவி செய்தது’ என்று தன் சகோதரருக்குக் கடிதம் எழுதினார்.

இக்கப்பல் பயணத்தில்தான் கால்டுவெல்லுக்கு சார்ல்ஸ் பிலிப் ப்ரெளனின் நட்பு கிடைக்கப்பெற்றது. சி.பி.ப்ரெளன் என்று அறியப்படும் சார்ல்ஸ் பிலிப் ப்ரெளனின் தந்தை சமயப் பரப்பாளராக 1786இல் இந்தியாவிற்கு வந்தவர். அவர் கல்கத்தாவில் பணிசெய்த போதுதான் ப்ரெளன் பிறக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைசெய்ய வேண்டும் என்ற இலட்சியத்தோடு சம்ஸ்கிருதம் படித்து, தங்கப் பதக்கம் பெற்றார் ப்ரெளன். 1817ஆம் ஆண்டு மதராஸ் வந்திறங்கியபோது தெலுங்கு என்றொரு மொழி இருந்ததே அவருக்குத் தெரியவில்லை. 1820இல் சர் தாமஸ் மன்றோ மதராஸ் மாகாண ஆளுநர் ஆனபோது, ஆங்கிலேய அதிகாரிகள் அனைவரும் குறைந்தபட்சம் ஓர் உள்ளூர் மொழியேனும் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார். இக்கட்டளையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் கோதண்டராம பட்லு என்ற உபாத்தியாயரின் உதவியோடு தெலுங்கு மொழி கற்றுக்கொள்கிறார்.

16 மாதங்களில் தெலுங்கு மொழியில் நல்ல மொழிப் பிரவாகம் பெற்றார். 1824ஆம் ஆண்டு வாக்கில் வேமனாவின் இலக்கியப் படைப்புகளை ஆழ்ந்து வாசித்தார். அழிவின் விளிம்பிலிருந்த தெலுங்கு மொழி காவியங்கள் இவரால் உயிர்ப்புப் பெற்றன. எழுத்தர்களைப் பணிக்கு நியமித்து, ஆந்திர மகாபாரதமு மற்றும் ஆந்திர மகாபாகவதமு போன்ற நூல்களை அச்சில் வெளியிட்டார்.

1835இல் சிறிய இடைவேளை எடுத்து இலண்டன் சென்றவர் மூன்று ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டு, 1838இல் மீண்டும் மதராஸ் வருகிறார். இந்தப் பயணத்தின்போது இலண்டனில் உள்ள இந்திய விடுதி நூலகத்திலிருந்து 2106 தென்னிந்திய கையெழுத்து நூல் பிரதிகளை மீட்டு மதராஸ் நூலகத்திற்கு கொண்டுவந்ததாக அவரின் தன் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே பயணம்தான் கால்டுவெல்லையும் ப்ரெளனையும் இணைத்தது.

கால்டுவெல்லுக்கு தெலுங்கு கற்றுத்தர ப்ரெளன் பிரியப்பட்டார். ஆனால் தான் தமிழ்நாட்டிற்குச் செல்வதைக் காரணம்காட்டி வேண்டாம் என ஒதுங்கினார். பின்னர் ப்ரெளன் உதவியால் அடிப்படைச் சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்டார். ப்ரெளனிடம் கற்ற பாடங்கள் வாழ்க்கை முழுவதும் சம்ஸ்கிருதம் படிக்கவும், தமிழ் உச்சரிப்புக்களைப் புரிந்துகொள்ளவும் அவருக்கு உதவியிருக்கிறது. தென்னிந்தியா குறித்தும், அம்மக்களின் கலாச்சாரம் குறித்தும் கால்டுவெல் நிறைய கேட்டுத் தெரிந்தார். ப்ரெளனின் புத்திக்கூர்மையில் ஆச்சரியப்பட்டாலும், அவர் சொல்லும் ஆய்வுப்பூர்வமான விஷயங்களில் கால்டுவெல்லுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது.

ப்ரெளன் குறித்து கால்டுவெல்லின் சிந்தனைகள் கலவையாக உள்ளன. தெலுங்கு மொழி இலக்கண நூல் எழுதியது, சம்ஸ்கிருதத்தில் உரைநடை எழுதியது, தெலுங்கு மொழிக்கு எட்டுத் தொகுப்பில் அகராதி எழுதியது (வெளியாகவில்லை) என்று சிலாகித்துப் பேசும் அதே சமயம், ப்ரெளன் என்ற தனிநபரிடம் காணப்படும் கசப்பான உண்மைகளையும் எடுத்துரைக்கிறார். தன் மேம்பட்ட அறிவினால் ப்ரெளனுக்குச் சற்றே கர்வம் இருந்தது. பிறர் கருத்துகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கமாட்டார். இந்தியா குறித்து மேலதிகம் தெரிந்துகொள்ள விரும்பி கப்பலின் மேல்தளத்தில் அவரோடு பேசச் செல்லும் கால்டுவெல்லுக்கு, பெரும்பாலும் ‘ம்ம்’ கொட்டும் வேலை மட்டுந்தான் இருந்தது. அவர் பேசுவது தவறே என்றாலும் எதிர்க்கத் தெம்பின்றி மெளனம் காத்தார். கால்டுவெல் வார்த்தைகளில் சொல்வதானால் ‘சில வேளைகளில் என்னைப் பேசியே கிறங்கடிப்பார்; சில வேளைகளில் பேசியே உயிர்ப்பிப்பார்; சில வேளைகளில் அயர்ந்து என் சிற்றறைக்கு ஓடவும் வைப்பார்.’

கால்டுவெல் நினைத்தால் அவர் கருத்தை மறுத்துப் பேசியிருக்கலாம். ஆனால் ப்ரெளன் மீதிருந்த மரியாதை அவர் கைகளைப் பிணைத்துவிட்டது. பின்னாட்களில் ப்ரெளனிடம் தான் காணத்தவறிய நற்குணங்கள் இன்னவன்று எழுதுவதால் ‘முரண்பாடுகளால் முளைத்த நட்பில் குறிஞ்சி மலர் பூப்பதும் எதார்த்தம்தான்’ என்று அறிய அறிகிறோம். கவித்துவ நடையில் இம்முரண்பாடு குறித்து அவர் எழுதியதாவது : ‘அப்போது எனக்குத் தெரியாது இந்தச் சிங்கம் ஓர் அழகிய முரணின் குடியிருப்பு என்று. அந்தச் சிங்கத்தின் பிடரியை நான் அப்போது விளையாட்டாகக் கூட கோதி விளையாட விரும்பவில்லை. பழகப் பழகத்தான் தெரிந்தது, அது சிங்கத்தின் பிடரி அல்ல – ஓர் அன்பான மனிதரின் தாடி மயிர் என்று..’

ப்ரெளனின் உரையாடலில் இருந்து கேள்வி கேட்கும் பழக்கத்தைக் கால்டுவெல் வளர்த்துக்கொண்டார். அவரோடான உரையாடல்கள் இந்தியா குறித்து அறிமுகம் செய்துவித்தாலும், தனக்கு அவர் தவறான வழிகாட்டி என்ற குறை நீடித்தது. சரியோ, தவறோ தவிர்க்க முடியாத இப்பழக்கம் கால்டுவெல்லின் இந்தியப் பயணத்திலும் இந்தியாவில் அவர் வாழ்ந்த வாழ்க்கையிலும் எதோவொரு தாக்கத்தை உண்டாக்கியது.

வாரக்கணக்கான கடல் பயணம் சலிப்புத் தட்டியது. சிறிய கப்பல் என்பதால், பயணிகளின் எண்ணிக்கையும் மிகச் சொற்பம். இனி அவர்களிடம் புதிதாகப் பேச வேறொன்றுமில்லை எனும் சூழலில் ப்ளைமவுத்தில் தான் வாங்கிய நூல்களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினார், கால்டுவெல். இந்தியர்களின் உருவ வழிபாட்டு முறை அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயப்பணியாரளாக அதன் தோற்ற, வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள விரும்பினார். தான் தெரிந்துகொண்டதைக் கப்பல் பயணிகளுக்கு அவ்வப்போது அருளுரையாக வழங்கினார். காலை பத்தரை மணிக்கு ஒரு வழிபாடு. அதையடுத்து சிறிய அருளுரை. தொடர்ந்து ஓர் உரையாடல். நாளின் இறுதியில் மாலை ஏழரை மணிக்கு ஒரு வழிபாடு. இந்த நடைமுறையைக் கப்பல் பயணத்திலும் கறாராகப் பின்பற்றினார். அமைதியான தூக்கம் பெறுவது எட்டாக்கனியாக இருந்தது.

பலதரப்பட்ட மக்களின் ஊடாகப் பழகியதால், இக்கப்பல் பயணம் கால்டுவெல்லுக்கு வேறெந்த மதபோதகரும் தரவியலாத அனுபவத்தை வழங்கியது. கிறிஸ்தவத்தின் பல பிரிவுகள் மேனாட்டு மக்களையே அச்சுறுத்தும்போது, பிளவுபட்ட கிறிஸ்தவ நோக்கத்தோடு நாம் மூன்றாம் உலக நாட்டு மக்களை அணுக முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆகவே மதப் பிரிவுச் சண்டைகளை, இங்கிலாந்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். நான் வேத வசனங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவனாக இந்தியாவிற்குள் நுழையப்போகிறேன் என்றார். அலெக்ஸாண்டர் டஃப் சொன்னபடி ஆங்கிலேயக் கல்வியின் மூலம் இந்தியாவின் உயர் சாதியினரை கிறிஸ்தவத்தின்பால் ஈர்க்கலாம் என்பதைத் தம் கொள்கையாக்கிக் கொண்டார்.

சில நாட்கள் ஆரவாரமாக இருந்தன. சில நாட்கள் விட்டத்தைப் பார்த்தே கழிந்தன. எப்போதாவது அரிதில் தென்படும் தூரத்து நிலங்களைப் பார்த்தால், பறந்து களைத்த பறவையின் சிறகுகள் ஓய்விற்கு ஏங்குவதுபோல் துள்ளிக் குதித்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள மதீரா தீவுக் கூட்டங்களை அத்தனை வாஞ்சையோடு சிலாகித்தார். கால்டுவெல் இந்தியா பயணித்த நாட்களில் சுயஸ் கால்வாய் நடைமுறைக்கு வரவில்லை. 1869ஆம் ஆண்டில்தான் சூயஸ் திறக்கப்படுகிறது. ஆகவே ஆப்பிரிக்காவை நீட்டி நெளித்துச் சுற்றுகிறார்.

வெப்பமண்டலப் பகுதிகளை நெருங்க நெருங்க, அடர்த்தியான ஆடைகளை விட்டொழித்துத் தளர்வான ஆடைகள் அணியத்தொடங்கினார். பயணத்திற்கு முன்பு இந்திய வழிகள் குறித்து கால்டுவெல்லிடம் பலவாறாகச் சொல்லியிருந்தார்கள். அப்பேற்பட்ட அரக்கர்களையோ அசுரர்களையோ அவர் காணவில்லை. மாறாக குருவிபோல் காட்சிதரும் பறக்கும் மீன்களைப் பார்த்து அதிசயித்தார். கிளாஸ்கோ பனியில் மங்கலாகத் தெரிந்த முழுநிலவை இங்கு தெள்ளித் தெளிவாகப் பார்த்தார். நிலவைப் பார்க்கும்போதெல்லாம் வீட்டின் ஞாபகம் பீறிட்டது. கடல் பயணத்திற்கு நடுவே கடிதம் அனுப்பவும் வழியில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது எதிர்ப்பட்டு வரும் இங்கிலாந்து கப்பல்களில் அதுவரை எழுதிய கடிதங்களைக் கோவையாக்கிக் கொடுப்பார்.

கடல் பயணம் குமட்டல் எடுக்கும்போதெல்லாம், புத்தகங்கள் துணைக்கு வந்தன. புத்தகங்கள் சலிப்புத்தட்டும் போதெல்லாம் அருளுரைகள் கைக்கொடுத்தன. கப்பலின் திரைச்சீலைகளைக் கிழித்து பந்தல் போட்டு, மேடை அமைத்து சபை உருவாக்கினார்கள். பயணிகள் ஒத்துழைப்பால் தளர்ச்சி அடையாமல் பயணித்துக் கொண்டிருந்தார் கால்டுவெல். ஆனால் உடற்பயிற்சியும் மருந்து மாத்திரைகளும் சரியாக எடுத்துக் கொள்ளாததால், உண்டதெல்லாம் வாந்தியாக வெளிவந்தன. உடல் மெலிந்தார்.

புஞ்சால் எனும் இடத்தை அடைந்ததும், அத்தீவு மக்களிடம் பேசுவதற்கு முயன்றார்கள். ஆனால் அம்மக்களிடம் பேச, இவர்களின் உடல்நலச் சான்று காட்டி அனுமதி பெற வேண்டும் என்று அப்பகுதியின் தலைவர் விதி வகுத்திருந்தார். அதைத் தாண்டி பேச்சுவார்த்தை நடத்தினால் கோட்டையிலிருந்து குண்டு எறியும் அபாயம் உண்டு. இதற்குப் பலவித காரணங்கள் சொல்லப்பட்டன. பெரியம்மை, தட்டம்மை, காலரா போன்ற தொற்றுநோய் அச்சமென்று பிறர் குறிப்பிடுகின்றனர். ஆனால் பிற மதச் சிந்தனைத் தொற்றிவிடக்கூடாது என்ற உள்ளூர் தலைவரின் அச்சமே முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என்று கால்டுவெல் கருதினார். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் புரிந்துகொள்ளலாம். ஒன்று கால்டுவெல்லின் அனுமானம் தவறாக இருக்கலாம். இல்லை மதப் பிரச்சாரங்களின் வீச்சு அன்றைக்கு அதிகமாக இருக்கலாம்.

ஒருநாள் லிவர்பூல் நகரத்தைச் சார்ந்த கப்பலொன்று தூரத்தில் வருவதைப் பார்த்தனர். மேரி அன்னிலிருந்து சிறிய படகு ஒன்றை அனுப்பி தங்கள் வசமிருந்த கடிதங்களைக் கொடுத்துவிட்டு, புதிய செய்திகள் கேட்டுவருமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அக்கப்பல் பம்பாயிலிருந்து வந்தது. பம்பாயிலும் மதராஸிலும் காலரா தொற்றுப் பரவி வருகிறது என்றும், மற்றொரு ரங்கூன் போர் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பீதியைத் தூக்கிப் போட்டனர். ‘மேரி அன்’ சாவகசமாய் கேட்டுவிட்டு, மீண்டும் நகர்ந்தது.

(தொடரும்)

______________
படம்: Charles Philip Brown, Wikimedia Commons

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *