ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமத்துவத்தைக் கொண்டுவரும் எதுவொன்றும் அச்சமூகத்தில் தனித்துவமானதாகவே இருக்க முடியும். அந்த வகையில் சினிமா இந்தியச் சமூகத்திற்குத் தனித்துவமானது. பிறப்பின் அடிப்படையில் படிநிலை ஏற்றத்தாழ்வை விதியாகக் கொண்ட சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியச் சமூகம் அமைந்திருக்கிறது. சாதியப் பாகுபாடு இந்தியச் சமூகத்தின் அனைத்து இடங்களிலும் வெளிப்படுவதாக இருக்கிறது. ஊர், தெரு, கோவில், கல்விச்சாலை, வேலைசெய்யும் இடம், குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் என அனைத்து இடங்களிலும் சாதியும் அது சார்ந்த பாகுபாடும் உண்டு.
ஆனால், சினிமா கொட்டகை இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைத்து மக்களும் பொதுவாகப் புழங்கும் ஒரு புதிய வெளியைக் கொண்டுவந்தது. அனைத்து மக்களுக்கும் பொதுவான கதையையும் சினிமா கொண்டுவந்தது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சினிமா ஒரு முக்கிய பொழுதுபோக்குச் சாதனமாக உருவெடுத்தபோது, அங்கு சினிமா அரங்கத்தில் கறுப்பின மக்கள் சமமாக நடத்தப்படவில்லை. அவர்களுக்குத் தனி இருக்கைகளும், அவர்களுக்கென்றே தனி புறவழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. 1913ஆம் ஆண்டு, ஒரு கறுப்பினப் பெண் தன்னை அரங்கத்தில் அனுமதிக்காதது குறித்துத் தொடுத்த வழக்கு ஒன்றில் அந்த நாட்டின் நீதிமன்றம் நிறவெறிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற பாகுபாடுகள் சினிமா அரங்கத்தில் கடைபிடிக்கப்படவில்லை.
சினிமா அரங்கத்தின் இந்தத் தனித்துவத்தைப் பற்றிப் பேசும்போது, சினிமாவிற்கு முந்தைய நிகழ்த்துக் கலை இந்தியாவில் எப்படி இருந்தது என்பதையும் பரிசீலிக்க வேண்டும். சினிமாவிற்கு முன்பு இந்தியாவில் வெகுஜன மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்த்துக்கலை வடிவமாக இருந்தது கூத்து. இந்தக் கூத்தில் பெரும்பாலும் புராணக் கதைகள், பிராந்திய அளவிலான தொன்மைக் கதைகள் ஆகியவைதான் நிகழ்த்தப்படும் என்றாலும், கூத்து நடக்கும் ஊரில் ஆதிக்கமாக இருக்கும் சாதியின் பெருமைகளையும் அதன் தலைவர்களின் சிறப்புகளையும் தவறாமல் பாட வேண்டும். இது எழுதப்படாத விதியாக இருந்தது.
இதனைப் புரிந்துகொள்ள கா.அ.மணிக்குமார் எழுதிய ‘முதுகுளத்தூர் படுகொலை’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடி அருகிலுள்ள அருங்குளம் என்ற ஊரில் நடந்த அய்யனார் கோவில் திருவிழாவில் அரிச்சந்திரா நாடகம் போட மதுரையிலிருந்து ஒரு நாடகக்குழு வந்திருந்தது. அருங்குளம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் என்று சொல்லப்படும் பள்ளர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். தேவர்கள் பள்ளர்களைவிடக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.
அந்த ஊரின் இரு சமூகத்தைச் சேர்ந்த ஆள்களும் நாடகம் பார்த்தார்கள். நாடகம் முடியும்போது, நாடகக்குழுவில் இருந்த ஆர்மோனியக்காரர் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தில் இருந்த பள்ளர்களில் ஒருவர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையில் நாடகத்தைப் பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது. சமகாலத்தில்கூட, ஒரு கிராமத்தில் நடக்கும் விழாக்களில் குறிப்பிட்ட சாதியால் கொண்டாடப்படும் நடிகர்களின் பாடல்களும், அந்தச் சாதியின் பெருமைகளை உயர்த்திப்பிடிக்கும் பாடல்களும் அதிகமாக ஒலிக்கப்படுவதைக் காண்கிறோம். ஊர் திருவிழாக்களில் நடக்கும் ‘ஆடலும் பாடலும்’ நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சாதியின் தலைவர்களைப்போல் வேடமணிந்து நடிப்பதையும், அதற்கு அந்த ஊர் மக்கள் அமோக வரவேற்பு அளிப்பதையும் நாம் இப்போதும் காண்கிறோம்.
இந்நிலையில்தான் சினிமா அரங்கம் என்பது சாதி கடந்து தமிழ்ச் சமூகத்தை ஒரு பொதுவெளியின்கீழ் கொண்டுவந்தது. கார்த்திகேசு சிவதம்பி சொல்வதுபோல், சினிமா அரங்கம் என்னும் அந்த வெளி சமூக ஏற்றத்தாழ்வுகளின்படி அல்லாமல், வாங்கும் திறனின் அடிப்படையில் இருந்தது. கையில் காசிருக்கும் யாரும் திரைப்படத்தைக் காணலாம். இது சினிமாவுக்கு ஒரு ஜனநாயகத் தன்மையை அளித்தது.
ஆனால், சினிமா அரங்கம் சாதி கடந்து வெகுஜன மக்களை உள்ளிழுத்துக்கொண்டதுபோலவே, ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவின் கருப்பொருளும் சாதி கடந்த பொதுத்தன்மை உடையதாக இருந்தது. சினிமாவின் ஆரம்பகட்டத்தில் புராணக்கதைகளும் வரலாற்றுப் பாத்திரங்களும்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து காதல், திருமணம், அன்னைப் பாசம், அண்ணன் தங்கை உறவு போன்ற தனிமனிதச் சிக்கல்கள் சார்ந்துதான் தமிழ் சினிமாவின் கதைகள் இருந்தன. திமுகவின் எழுச்சி சினிமாவின் கதைகளில் சுயமரியாதை, மறுமணம், மதவாதிகளின் அற்பத்தனம், தமிழ் அடையாளம் போன்ற கருத்துகளையும் கொண்டுவந்தது.
ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1970களுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ் சினிமா பெரும்பாலும் படப்பிடிப்பு ஸ்டுடியோக்களுக்கு உள்ளேதான் முடங்கிக்கிடந்தது. 1970களில் ஸ்டுடியோ என்னும் நிறுவனத்தைத் தமிழ் சினிமா கடந்து, சுயேச்சையான தயாரிப்பாளர்கள், சுயேச்சையான சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைச் சார்ந்து இயங்க ஆரம்பித்தது. இந்தப் பின்னணியில்தான் கேமரா கிராமங்களை நோக்கித் திரும்பியது.
தமிழ்நாட்டின் கிராமப்புறச் சூழலையும், கிராமியப் பண்பாட்டையும் காட்சிப்படுத்தும் சினிமா உருவாகத் தொடங்கியது. தமிழகக் கிராமத்தின் சூழல், பண்பாடு, பேச்சு வழக்கு, உடை, அசலான கிராமத்து மனிதர்கள் ஆகியவற்றைச் சினிமாவில் கொண்டுவந்ததில் இயக்குநர் பாரதிராஜா முக்கியமானவர். கிராமமே கதையின் மையமாக இருக்கும் திரைப்படங்களும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.
கிராமத்தின் யதார்த்தத்தைச் சித்தரிக்க முயன்றபோது, சாதியக் கூறுகள் தவிர்க்க முடியாமல் இடம்பெற்றது. ஏனெனில், சாதியக் கட்டமைப்பே கிராமத்தின் யதார்த்தமாக இருக்கிறது. இதனால், சாதியை மறைத்துவிட்டு கிராமங்களின் அசலான யதார்த்தத்தைச் சித்தரிக்க முடியாது. உதாரணமாக, பாரதிராஜா இயக்கி 1977ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படத்தில், மையக் காதப்பாத்திரமான பெண்ணின் பெயர் ‘மயில்’. இந்தப் பெயர் தென் மாவட்டங்களில் வாழும் பிறமலைக் கள்ளர் சாதியில் பிரதானமாகப் புழக்கத்தில் உள்ள பெயராகும். மேலும், படத்தில் ‘என்ன சேர்வை எப்படி இருக்க?’ என்பதுபோன்ற வசனங்கள் அந்தக் கிராமத்தில் இருக்கும் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இதுபோல், தனது ஆரம்பகாலப் படங்களில் சாதியை நுண்விவரங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த பாரதிராஜா, ‘மண்வாசனை’ போன்ற படத்தில் அதனை வெளிப்படையாகவே காட்சிப்படுத்தினார். ‘மண்வாசனை’ திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு, அதுசார்ந்த வீராப்பு, முறைமாமன் மீது மஞ்சள் நீர் ஊற்றுவது, பள்ளிக்கே அரிவாளை எடுத்துக்கொண்டு செல்வது, ‘வெந்த சோத்துக்கும் விதி வந்த சாவுக்கும் பிறந்தவன் நீயில்லடா. நீ கருப்பசாமித்தேவர் வம்சம்டா’ என்று வசனம் பேசுவது எனச் சாதியை வெளிப்படையாகத் திரையில் காட்சிப்படுத்தினார் பாரதிராஜா.
இதேபோல், ‘முதல் மரியாதை’, ‘பசும்பொன்’, கிழக்குச் சீமையிலே’ போன்ற திரைப்படங்களில் பாரதிராஜா மிக வெளிப்படையாகச் சாதியை முன்வைத்துப் படங்களை இயக்கினார். இவ்வாறாகக் கிராமப்புறத்தின் இனவரைவியல் தன்மைகளை திரையில் காட்சிப்படுத்தத் தொடங்கி, பின்னர் சாதியை ஓர் அடையாளமாக முன்வைக்கும் படங்களை இயக்கினார் பாரதிராஜா.
இதனைத் தொடர்ந்து, 1990களில் சாதிப் பெயர்களை வெளிப்படையாகக்கொண்ட ‘தேவர் மகன்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘மறவன்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. சாதியின் மேன்மையைப் பேசும் பாடல்களும் இதில் முக்கியமானது. ஏனெனில் திரைப்படப் பாடல்கள் நவீனத் தமிழ் வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது. வீடுகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் மைக் செட் போட்டுப் பாடல்களை ஒலிக்கவிடுவது ஒரு முக்கியப் பண்பாட்டு நடைமுறையாக இருக்கிறது. இதனால் சாதியை உயர்த்திப்பிடிக்கும் பாடல்கள் ஒவ்வொரு தெருவையும் வீட்டையும் சென்றடைந்தன.
மேற்கூறிய திரைப்படங்கள், வணிக ரீதியாக வெற்றியடைந்தாலும் இல்லாவிட்டாலும், சாதியை ஒரு பேசுபொருளாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாவதை இயல்பாக்கம் செய்தன. குறிப்பிட்ட சாதிக்கெனத் தனித்துவமான இனவரைவியல் பன்மைகள் இருப்பதாகக் காண்பித்தன. ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ‘உலகத்திலே தாய்மாமன் என்கிற அருமையும் பெருமையும் இந்த ஒத்தக் கூட்டத்துக்குத்தான் இருக்கு’ என்ற வசனம், கள்ளர் சாதியில் ‘தாய் மாமன்’ சிறப்பு என்பது அந்தச் சாதிக்கே உரிய இனவரைவியல் சிறப்பம்சம் என்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
சாதி சார்ந்த திரைப்படங்கள், கதையாடலில் சாதியை விமர்சனமற்றுக் காட்சிப்படுத்தியது, சாதி சார்ந்த கொலை, அரசியல், மற்ற நடவடிக்கைகள் என அனைத்துக்கும் ஒரு சமூக இருப்பை உறுதிசெய்து அதுதான் யதார்த்தம் என நம்பும்படியாகச் செய்து, அதை ஒரு கலாசாரமாகவே மாற்றிவிட்டது. இந்தக் கலாசாரமயமாக்கம் திரும்பத் திரும்ப அதேபோன்ற படங்களை எடுக்கத் தூண்டுகோலாக அமைந்தது.
இவ்வாறு 1990களில் வெளிவந்த சாதி சார்ந்த படங்களால், சாதி கடந்து மக்களைத் திரை அரங்கத்திற்கு ஈர்க்கும் சினிமாவின் ஜனநாயகத்தன்மையில் ஒரு கீறல் விழுந்துவிட்டதாக ஆய்வாளர் ஹியூகோ கோரிஞ்ச் குறிப்பிடுகிறார். ஆனால் இந்தச் சாதிய சினிமாக்கள் துல்லியமாகப் பார்வையாளர்கள் மனநிலையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தின? சமூக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருந்தது? என்பவை முக்கியமான கேள்விகளாகும்.
சினிமாவில் சாதிய அடையாளங்கள் எந்தெந்த வகைகளில் காட்சிப்படுத்தப்பட்டன, இது சினிமா பார்வையாளர்களிடத்தில் என்ன மனநிலையை ஏற்படுத்தியது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு பார்வையாளர்கள் மத்தியிலும் இத்தகைய சினிமாக்கள் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியதா, இல்லையென்றால், அதனை எப்படி விளங்கிக்கொள்வது, இத்தகைய சினிமாவைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் சாதிய மனநிலையை வளர்த்துக்கொண்டார்களா போன்ற கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடையளிக்க முயன்றுள்ளேன்.
சாதி ரீதியான மனநிலை உருவாக்கத்தில் சினிமா மற்றும் யதார்த்த வாழ்வனுபவத்தின் பங்களிப்பு எத்தகையது என்கிற விவாதத்தையும் இத்தொடரில் காண்போம். இதனையும் தனிநபர் அனுபவ அறிவின் அடிப்படையில் இல்லாமல், சமூக உளவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கமாகக் காணவிருக்கிறோம்.
(தொடரும்)

