Skip to content
Home » சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சாதி சார்ந்த மனநிலையை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இது உண்மையென்றால், வெவ்வேறு சாதியப் படிநிலைகளைச் சேர்ந்த நபர்களுக்கு வெவ்வேறு மனநிலைகள்தான் இருக்க முடியுமா, ஒரு திரைப்படத்தின் குறிப்பிட்ட காட்சியை ஒவ்வொரு சாதியக் குழுவைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்கிறார்களா என்கிற கேள்விகளுக்கான விடையை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும்.

சில திரைப்படக் காட்சிகளைக் கொண்டு இவற்றுக்கான பதில்களைப் புரிந்துகொள்ளலாம். ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் ‘மலைச்சாமி தேவராக’ சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அவர் தெருவில் நடந்து செல்லும்போதெல்லாம், ‘செங்கோடன்’ என்கிற செருப்புத் தைக்கும் தொழிலாளியாக நடித்திருக்கும் ஏ.கே. வீராச்சாமி, தனது துண்டை எடுத்து கைகளில் பிடித்துக்கொண்டு மலைச்சாமியின் காலில் விழுவார். இந்தக் காட்சி சித்தரிக்கப்பட்ட விதம் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், 1980களில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார வாய்ப்புகள், ஆதிக்கச் சாதி என்று சொல்லப்படும் இடைநிலை சூத்திர சாதியைச் சேர்ந்த நிலக்கிழார்களை நம்பி இருந்ததால், இவ்வாறு காலில் விழுவது வழக்கமானதுதான் என்றும், இந்த ‘யதார்த்த உண்மையைத்தான்’ பாரதிராஜா இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில், சிறைக்குச் சென்று வரும் பூலோகராசாவை (நடிகர் கலையரசன்) அவனது மச்சான் பறையடித்து சீர் செய்து வரவேற்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருக்கும். சிறைக்குச் சென்று வந்த பூலோகராசாவும் அவனது மச்சானும் தெருவில் ஆடிக்கொண்டே வர, பறை இசைக் கலைஞர் ஒருவர் ஓரமாக நடந்துவருவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். உசிலம்பட்டி, போடிநாயக்கனூர் போன்ற ஊர்களில் வாழும் பிறமலைக் கள்ளர் சமூகத்தில், இவ்வாறு சிறைக்குச் சென்று திரும்பும் நபருக்கு அவனது உறவினர் சீர் செய்து வரவேற்கும் வழக்கம் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை இயக்குநர் அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் காட்சிகளைக் காணும் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிகள்தான் ஏற்படும் என்று நம்மால் கூற முடியுமா? இல்லை.

இந்தக் காட்சிகளில் முக்கியக் கதாபாத்திரங்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தேவர் சமூகப் பின்னணியில் வளர்ந்த இளைஞர்களும், மக்களும் இந்தக் காட்சிகளில் இடம்பெறும் மலைச்சாமித் தேவர், பூலோகராசா ஆகிய கதாபாத்திரங்களுடன் தங்களை அடையாளம் காண்கிறார்கள். நம்மைப் போன்ற ஒருவர் அல்லது நமது குழுவைச் சேர்ந்த ஒருவர் இவர் என்று இந்தக் கதாபாத்திரங்களை அடையாளம் காண்கிறார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கையில் தேவர் சமூக மக்கள் நிலமற்ற கூலி விவசாயிகளாகவும், தங்களது பிழைப்பிற்காகக் கூலி வேலை அல்லது சிறு தொழிலை மட்டுமே சார்ந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக அல்லது மாதச் சம்பளம் பெறும் வேலைகளில்தான் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், மலைச்சாமி தேவர் போல் ‘ஊருக்கே படியளக்கும்’ பெரும் நிலவுடைமையைக் கொண்ட நிலக்கிழாராகவோ அல்லது பூலோகராசாவைப்போல் பணக்கார வீட்டைச் சேர்ந்த ஊதாரியாகவோ இருப்பதில்லை. இருந்தாலும், இந்தக் கதாபாத்திரங்களுடன் தங்களை ஐக்கியப்படுத்தி அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இது எப்படி நடக்கிறது?

இதனை, தன்நிலை (Subjectivity) என்கிற சமூகவியல் கருத்தாக்கத்தைக் கொண்டு விளக்க முடியும். தன்நிலை என்பது ஒரு மனிதன் தனது சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, தனது அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் வழியாகச் சமூகத்தின் (புறநிலை) மீது என்ன மாதிரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறான் என்பதாகும். சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சமூகத்தை நான் என்னவாகப் பார்க்கிறேன், இந்தச் சமூகத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதுதான் அது.

அதாவது, தன்நிலை என்பது ‘நான்’ என்கிற சுயம் குறித்த உணர்வு என்று புரிந்துகொள்ளக்கூடாது. அது தவறானது. தன்நிலை என்பது மற்றவர்களுடன் ஒருவனுக்கு இருக்கும் உறவைக்கொண்டு, அந்த உறவில் ஏற்படும் அனுபவங்களைக் கொண்டு கட்டமைக்கப்படுவதாகும். இதனால், தன்நிலை என்பது அடிப்படையில் பன்மைத்துவமானது. ஏனெனில், நமது வாழ்க்கை அனுபவம் வெவ்வேறு சமூகக் காரணிகளைச் சார்ந்ததாக இருக்கிறது.

நான் என்கிற ஓர் ஆண் (அல்லது பெண்); குறிப்பிட்ட ஊரை (நகரம் அல்லது கிராமம்) சேர்ந்தவனாக இருக்கும் நிலையில், ஒரே சமயத்தில் அவன், தந்தைக்கு மகன், பாட்டிக்குப் பேரன், ஒரு பெண்ணின் கணவன், குழந்தைகளுக்குத் தந்தை, தம்பி தங்கைகளுக்குச் சகோதரன் அல்லது வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். மேலும், பள்ளியில் மாணவனாக இருக்கிறான் அல்லது ஆசிரியராக இருக்கிறான் அல்லது அப்பள்ளியில் பியூன் போன்ற அலுவலகப் பணியாளராக இருக்கிறான். அத்துடன் குறிப்பிட்ட சாதி, மதம், தேசிய இனத்தைச் சார்ந்தவனாகவும் இருக்கிறான். இவ்வாறு பல்வேறு நபர்கள், சமூக அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சிக்கலான உறவுநிலையில் ஒரே நேரத்தில் இருக்கிறான். அதன் வழியாகத்தான் இந்தச் சமூகம் குறித்த கருத்தை அவன் பெறுகிறான் .

இந்த நபர்கள் மற்றும் சமூக நிறுவனங்களுடனான ஊடாட்டத்தின் வழியாகவே ஒருவரது தன்நிலை கட்டமைக்கப்படுகிறது. அதாவது, அலுவலகம், பள்ளி, ஊர், குடும்பம் போன்ற சமூக நிறுவனங்கள் அல்லது பல்வேறு தனிநபர்களுடனான ஒருவருடைய ஒப்பீட்டு ரீதியான சார்புநிலை (Relative Positions) என்ன என்பதைப் பொறுத்தும், இவை அனைத்துக்கும் உடனான ஒருவருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்துமே, ஒருவரது தன்நிலை கட்டமைக்கப்படுகிறது. அதனால்தான் அது பன்முகத்தன்மையுடையதாக இருக்கிறது.

இதன்படி ஒருவர் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தன்னிலை என்பது முழுக்க முழுக்க சாதிய அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது அல்ல. மேலே குறிப்பிட்டதுபோல், தேவர், வன்னியர் போன்ற இடைநிலை சாதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள், அல்லது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலமுள்ள குறு விவசாயிகளாக இருக்கிறார்கள். இவர்களது குடும்பங்கள் கல்வியிலும், சமூக மூலதனத்திலும் பின்தங்கியதாகவே இருக்கின்றன. பெரும்பாலும் இந்தச் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். இவ்வாறு ஒருவரது தன்நிலை என்பது சொத்துடைமை, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், நிலம் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாகவே இருக்கிறது.

ஆனால் இத்தனை பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கை யதார்த்தத்தை, சாதியை மையமாக வைத்துக் காட்சியமைக்கும்போது, அங்கே சாதி ஓர் அழுத்தமான மேல்நிலைக் காரணியாக மாறுகிறது. மலைச்சாமி தேவரைக் காணும் போதெல்லாம் செங்கோடன் அவரது காலில் விழுவது போன்ற காட்சி, சாதி சார்ந்து இந்த இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை முதன்மைப்படுத்திக் கட்டமைக்கப்பட்டதாகும்.

மதயானைக்கூட்டம் திரைப்படம் முழுக்க முழுக்க பிறமலைக் கள்ளர் சாதியைச் சேர்ந்த உறவினர்கள் மத்தியில் இருக்கும் உள்முரண்பாடு மற்றும் வன்முறையைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட காட்சியில் பறை இசைக் கலைஞர் பற்றிய விவரங்கள் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை என்றாலும், ஒரு தலித் இளைஞரால் இதனைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலான சாதி சார்ந்த திரைப்படங்கள், குறிப்பிட்ட ஒரு சாதியின் பெருமை அல்லது அதற்குள் இருக்கும் உள்முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவதாகவே இருந்தன என்று சொல்லப்படுவதுண்டு. அவை மற்ற சாதிகளை ‘தாழ்த்தி’ப் பேசவில்லை என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஆனால், சாதி அமைப்பு என்பது அருவமானதல்ல; அது எப்போதும் ஒரு சாதி மற்ற சாதிகளுடன் கொண்டுள்ள சார்புநிலையை ஆதாரமாகக் கொண்டுதான் இயங்குகிறது. இதனைத்தான் அம்பேத்கர், ‘சாதி என்கிற ஒன்றே இல்லை. இருப்பதெல்லாம் சாதிகள்தான். சாதி அமைப்பு என்பது ஒருவர் மற்றவருடன் கொண்டுள்ள சார்புநிலைதான். சாதி என்பது பன்மையில் மட்டுமே இருக்க முடியும்’ என்கிறார்.

பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் தலித் கதாபாத்திரங்கள் அடிபணிந்தவர்களாகவும், அடங்கி நடப்பவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆளுமைகளாகச் சித்தரிக்கப்படவில்லை. ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தில் ‘தேவர் சாதி ஜமீன்தார்தான் நம்மை வாழ வைக்கிறார்’ என்று பேசக்கூடிய தலித் ஒருவன் கதாநாயகனாகவும், ‘நாம் அவர்கள் வயலில் வேலை பார்க்கிறோம், அதனால்தான் அவர்கள் நமக்குக் கூலி கொடுக்கிறார்கள்’ என்று பேசக்கூடிய கதாபாத்திரத்தை வில்லனாகவும் சித்தரித்திருப்பார் இயக்குநர் சேரன். அடிபணியும் தலித் நல்லவர், சுயமரியாதை பேசும் தலித் ஆபத்தானவர் என்று பொருள்படும் படியாக இருக்கிறது இந்தச் சித்தரிப்பு.

சாதி அமைப்பு என்பது வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலான ஒப்பீட்டு ரீதியிலான சார்புநிலை உறவுகளுக்குள்தான் இயங்க முடியும். இந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சாதி குறித்த அழுத்தமான சித்தரிப்பு என்பது மற்ற சாதிகளை இருட்டடிப்பு செய்வதன் மூலமோ அல்லது அவற்றைத் தாழ்த்துவதன் மூலமோதான் செய்யப்படமுடியும். மற்றவர்களைக் குடிகளாகத் தாழ்த்தாமல் ஒரு மன்னன் முடிசூட்டிக்கொள்ள முடியாது அல்லவா, அது போன்றதுதான் இதுவும்.

இதிலிருந்து, நாம் சில திட்டவட்டமான கருத்துகளுக்கு வந்து சேர முடியும். சினிமாவில் சாதி காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தைச் சித்தரிப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவை முழு யதார்த்தமல்ல; சிதைக்கப்பட்ட யதார்த்தம் மட்டுமே. சிக்கலான வாழ்க்கை அனுபவத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தன்நிலை என்பது சாதி சார்ந்த சித்தரிப்புகளைத் துல்லியமாக அடையாளம் காண்பது மட்டுமல்ல, சாதி சார்ந்த விடுபடல்களையும் இருட்டடிப்புகளையும்கூட அடையாளம் காண்கிறது.

சாதி அமைப்பு சார்புநிலையான உறவைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால், ஒருவரின் இருப்பும் வாழ்க்கை அனுபவமும் தனித்து இயங்க முடியாது. மற்ற சாதிகளுடனான உறவுநிலையில்தான் அது இருக்கமுடியும். இதனால்தான் ஒரே காட்சியை வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இரு வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறார்கள். மேலும், இரண்டு மனிதர்களுக்கு இடையிலான பன்முகத்தன்மை கொண்ட சமூக உறவை, சாதி சார்ந்ததாக மட்டும் சுருக்கிச் சித்தரிக்கும்போது, சாதி என்பது முதன்மையான அம்சமாக மாறுகிறது. இதனால் சிக்கலான வாழ்க்கை அனுபவத்தை இது சாதி அனுபவமாகச் சுருக்குகிறது. இப்படிப் பரந்த வாழ்க்கை அனுபவத்தைச் சாதிய அனுபவமாக மட்டுமே சுருக்குவதுதான் சாதியச் சினிமாவின் அடிப்படையாக இருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *