Skip to content
Home » சினிமாவும் சாதியும் #6 – மதுரை பாணி படங்கள்

சினிமாவும் சாதியும் #6 – மதுரை பாணி படங்கள்

‘வதந்தி 2’ வெப் சீரிஸில் நடித்தது குறித்துப் பேசிய நடிகர் சசிகுமார், ‘முதன்முதலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், மதுரையைச் சார்ந்த கதையென்றாலே எங்களை ரவுடிகளாகத்தான் திரையில் காட்டுவார்கள்’ என்று கூறினார்.

அதேபோல், 2001 முதல் 2011 வரை மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நன்மாறன், ஒருமுறை பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘சென்னையில் உள்ள மக்கள் நான் மதுரையைச் சேர்ந்தவன் என்பது தெரிந்ததும், ‘உங்கள் ஊரில் உள்ளவர்கள் எப்போதும் முதுகில் அருவாளை வைத்திருப்பார்களா?’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள்’ என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களின் ‘பொதுப்புத்தியில்’ மதுரையைப் பற்றி இப்படியான ஒரு கருத்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதுரை குறித்து இவ்வாறான பொதுப்புத்தியைக் கட்டமைத்ததில் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு வெளியான சினிமாக்களின் பங்கு மிக முக்கியமானது.

முதலில், இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். இங்கே நாம் ‘மதுரை’ என்று குறிப்பிடுவது மதுரை மாவட்டத்தை மட்டுமல்ல; தேனி, சிவகங்கை முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி வரை பரவியுள்ள தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும்தான். அதேபோல் ‘மதுரை பாணி சினிமா’ என்று சொல்லப்படுவது பெரும்பாலும் தேவர் சமூகத்தை மையமாகக் கொண்டதாகவே இருக்கிறது. ஏனெனில், தமிழ்நாட்டின் சமூக நிலப்பரப்பு அத்தகையதாகவே உள்ளது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளும் தாழ்த்தப்பட்ட சாதிகளும்தான் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கின்றன. வடமாநிலங்களைப்போல் தமிழ்நாட்டில் சத்திரிய சாதிகள் என்று தனியாக ஏதுமில்லை. இதனால் தங்களுக்குத்தான் அரசாண்ட வரலாறு இருப்பதாக ஒவ்வொரு சாதியும் உரிமை கோருகின்றது. இங்கே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் பொருளாதார வாழ்க்கை, எந்த வகையிலும் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படும் தலித் மக்களின் பொருளாதாரத்தைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதாக இருக்கவில்லை. அதனால் சமூக அரசியல் துறையில் இந்தச் சமூகங்களுக்கு இடையில் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கான சச்சரவுகள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன.

சாதி ரீதியான ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியானதாக இல்லை. இங்கே சாதிய ஆதிக்கம் என்பது பிராந்தியங்களுக்கு ஏற்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியான வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இந்தப் பகுதியில் அடர்த்தியாக வாழ்கிறார்கள். இதனால் இந்தப் பகுதியில் சாதிய முரண்பாடுகள் என்பது இந்த இரு சாதிகளுக்கு இடையில்தான் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையிலும், தென் மாவட்டங்களில் தேவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் (பள்ளர்கள்) இடையிலும் சாதிய முரண்பாடுகள் இருக்கின்றன.

அந்த வகையில்தான் தென் மாவட்டங்களில் தேவர் சமூக மக்கள் அடர்த்தியாக வாழ்வதால், மதுரையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே, தவிர்க்க இயலாமல் அவை தேவர் சாதியைக் கதைக்களமாகக் கொண்டதாகவே இருக்கின்றன. மேலும் இந்தப் படங்களில் இடம்பெறும் காட்சிகளில் முத்துராமலிங்கத் தேவரின் சிலை அல்லது புகைப்படங்கள், நடிகர் கார்த்திக் ரசிகர் மன்றம் சார்ந்த எழுத்துகள் அல்லது போஸ்டர்கள், சுபாஷ் சந்திர போஸின் புகைப்படம் போன்றவற்றை இடம்பெறச் செய்வதன் மூலம், சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் சாதியப் பின்புலம் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ என்ற படத்தில் ‘செக்கானூரணி’ என்ற ஊரின் மையத்தில் இருக்கும் தேவர் சிலை, நேதாஜி ஆட்டோ சங்கம் என்கிற பெயர்ப் பலகை, முத்துராமலிங்கத் தேவர் பெயரைக் கொண்ட கலையரங்கம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதேபோல், சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில், தொடக்கக் காட்சியிலே முத்துராமலிங்கத் தேவர் பெயரைக் கொண்ட பேருந்து நிலையம், நடிகர் கார்த்திக்கின் போஸ்டர், பார்வர்ட் பிளாக் கட்சியின் கூட்டம், அதன் கட்சிக்கொடி, சுபாஷ் சந்திர போஸின் புகைப்படங்கள், தேவரின் சிலை ஆகியவையெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களின் மூலம் கதாபாத்திரங்கள் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

இவ்வாறு, கதாபாத்திரங்களைக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவையாகச் சித்தரிப்பது, நிலப்பரப்பில் உள்ள இடங்களைக் குறிப்பிட்ட சாதி அடையாளம் சார்ந்ததாகக் காட்சிப்படுத்துவது ஆகியவை அந்தச் சாதிக்குப் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாக இருக்கிறது. இது அந்நிலத்தில் அந்தக் குறிப்பிட்ட சாதிதான் ஆதிக்கமாக இருப்பதாகக் காண்பிப்பதுடன், அந்தப் பன்முகப்பட்ட நிலத்தின் கலாசாரம், பண்பாடு, வழிபாடு, பொது வாழ்க்கை, கொண்டாட்டங்கள் போன்றவை எல்லாம் அந்தக் குறிப்பிட்ட ஒரு சாதிக் குழுவிற்குரியது என்று பார்வையாளர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், ‘வீரம்’, ‘மானம்’ ஆகியவை மனிதர்களின் தனிப்பட்ட குணங்களாக அல்லாமல், குறிப்பிட்ட ஒரு சாதிக்குரிய பண்பாகவும் ‘மதுரை பாணி’ சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டன.

உதாரணமாக, ‘வெயில்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் குரல் ‘இவர்தான் எங்க அப்பா சிவனாண்டித்தேவர். எங்க சாதிக்கே உண்டான வீம்பும் வீராப்பும் உள்ள மனுசன்’ என்று கூறும். அதேபோல் ‘பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சொந்தச் சாதியின் எதிர்ப்பையும் மீறி வேறு சாதிப் பெண்ணை மணம் முடிக்கிறார் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மருது (நடிகர் சம்பத்). இவர்தான் பருத்திவீரனின் தந்தை. இந்தக் கதாபாத்திரம் சாதிக்கு எதிராகப் பேசும்போதுகூட, ‘காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் தேவனுக்குப் பழக்கமில்லையே’ என்று சொல்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படத்தில் வரும் அறிமுகப் பாடலில், ‘பொண்ணும் போரும் வந்தா போர்க்களம்தான் போவேன்டா; ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா’ என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். மானம், வீரம், பெண்களைக் காப்பது போன்ற நற்குணங்கள் எல்லாம் தேவர் சாதிக்கே உரியது என்பதாகத்தான் இந்தத் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம் தமிழினத்திற்குரியதாகப் பாடிய காவியக் குணங்கள் எல்லாம் குறிப்பிட்டதொரு சாதியின் குணங்களாக இந்தத் திரைப்படங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

பெருந்திரையில் இந்தக் காட்சிகளும் பாடல் வரிகளும் திரையிடப்படும்போதும், தொலைக்காட்சி, ரேடியோ, ஊர் திருவிழாவில் ஒலிபெருக்கி உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேரும்போதும், இவை வெகுஜன மக்களின் மனங்களில் ஒரு திரட்சியான உணர்வை உருவாக்குகின்றன.

மதுரையை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களின் மற்றொரு முக்கியமான அம்சமாக இருப்பது அதீத வன்முறையாகும். எப்போதும் ஆட்கள் அருவாளுடன் நடமாடுவது, சிறிய தகராறுகளுக்காக உறவினர்களையே கொலை செய்ய நேரிடுவது போன்ற சித்தரிப்புகள் இப்படங்களில் இடம்பெற்றிருக்கும். இந்த வன்முறைகளும் கொலைகளும் அரசியல் லாபம், பொருளாதார லாபம் தொடர்புடையதாக இல்லாமல், முன்பகை, பழிவாங்கும் உணர்ச்சி போன்ற காரணங்களால் தூண்டப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தில் அழகரும் (ஜெய்) பரமனும் (சசிகுமார்) செய்யும் முதல் கொலை, அரசியல் காரணங்களுக்காக, மற்றவரின் தூண்டுதலால் நடந்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதற்குப் பின்னர் கதையில் நடக்கும் அத்தனை வன்முறைகளும் துரோகம், பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவற்றால் உந்தப்பட்டதாகவே இருக்கும். ‘பழக்கத்துக்காகக் கொலை பண்ணோம்’ என்கிற வசனம் இந்தத் திரைப்படத்தால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

‘காதல்’ திரைப்படத்தில் கதாநாயகி பூப்பெய்தியதால் நடத்தப்படும் சடங்கு ஒரு பாடலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பாடலில், பூப்பெய்திய சடங்கின்போது அளிக்கப்படும் கறி விருந்தில் இறைச்சி குறைவாக வைத்ததைக் காரணங்காட்டி பெரிய கைகலப்பு நடப்பது போன்றதொரு காட்சி இருக்கும். மதுரையைச் சேர்ந்த அந்தக் குறிப்பிட்ட சாதியினர் மிகச் சிறிய விஷயங்களுக்காகக்கூட வன்முறையைக் கையாள்வார்கள் என்பதாக அந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு, தென் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘மதுரை பாணி’ திரைப்படங்கள், அந்த நிலப்பரப்பை குறிப்பிட்ட ஒரு சாதியின் அடையாளமாகவும் அந்நிலப்பரப்பின் பண்பாடு, கலாசாரம் மற்றும் கொண்டாட்டங்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்தச் சாதிக்குரியதாகவே இருப்பதாகவும் கட்டமைத்திருக்கின்றன. இதற்கு இணைகோடாகத் தென் தமிழகம் இயல்பாகவே வன்முறைக் கலாசாரத்தை வாழ்வியலாகக் கொண்டதாகவும், அங்கே வாழும் மக்கள் நவீன விழுமியங்களுக்கு இன்னும் பழக்கப்படாதவர்களாக இருப்பதாகவும் இந்தத் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, தென் தமிழக நிலப்பரப்பும் அதன் உள்ளார்ந்த கலாசாரமாக இருக்கும் வன்முறையும் குறிப்பிட்ட அந்தச் சாதியின் (தேவர் சாதியின்) ‘இயல்பான பண்பு’ என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திற்குப் பொதுச் சமூகத்தின் மத்தியில் ஓர் அங்கீகாரத்தையும் இந்த மதுரை பாணி திரைப்படங்கள் பெற்றுத்தந்துள்ளன.

மேற்கூறிய விவாதங்கள் அனைத்தும், இந்த மதுரை பாணி திரைப்படங்கள் சாதிய யதார்த்தங்களைச் சித்தரிப்பதில், ‘மற்ற சினிமாக்களிலிருந்து எந்த வகையில் தனித்துவமாக வேறுபடுகின்றன?’, ‘இத்திரைப்படங்கள் சித்தரித்த ‘தென் தமிழக யதார்த்தம்’ என்பது அசலானதா அல்லது மிகைப்படுத்தப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒன்றா?’, ‘மதுரை என்கிற தென்தமிழகம் நவீனத் தமிழ்ச் சமூகத்தின் ‘மற்றமையாக’ (The other) இருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகளுக்கு இட்டுச் செல்கின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *