Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

ஆரக்ஷன்

தமிழைப் போலவே இந்தியாவின் இதர மொழித் திரைப்படங்களிலும் தலித் சமூகத்தின் சித்தரிப்பு பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்பில்தான் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயப் பின்னணியில் கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களால் அவதிப்படும் அவர்களின் பரிதாப வாழ்க்கை உருக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை மௌனமாக சகித்துக் கொண்டும் தங்களுக்குள் முனகிக்கொண்டும் முற்பட்ட சாதியினரிடம் முறையிட்டுக் கொண்டிருக்கும்படியான உதிரிப் பாத்திரங்களாகவே அவை அமைக்கப்பட்டிருக்கும். ஆதிக்கச் சாதியில் உள்ள ஒரு பிரதான பாத்திரம் மட்டும் இவர்களை கரிசனத்துடன் அணுகுவதாக இருக்கும். சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர, இப்படிப்பட்ட ‘ஸ்டீரியோடைப்’ முற்போக்குடன்தான் பெரும்பாலான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

சேரன் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தில், தான் சார்ந்திருக்கும் கள்ளர் சமூகத்தின் பெருமையைப் பேசும் விஜயகுமார், ‘நம்ம சாதிக்காரங்க மட்டுமே இருந்த அந்தக் காலத்துல, நல்லது கெட்டதுக்கு நாலு சாதிக்காரங்க வேணுமின்னு இவங்களையெல்லாம் கூட்டியாந்து, இருக்கறதுக்கு இடமும் பாக்கறதுக்கு வேலையும் கொடுத்து அதைப் பார்த்து ரசிச்சானே.. உன் பாட்டனும் என் பாட்டனும்… அவங்க தேவன்டா..” என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த கருணையுடன் (?!) வசனம் பேசுவார். இது எத்தனை அபத்தமான, ஆபத்தான கருத்தியலைக் கொண்டது என்பதைக் கேட்கும் போதே உணர முடியும். தங்களின் சொகுசான வாழ்க்கைகாக வீட்டு உபகரணங்களை வாங்கிப் பராமரிக்கும் ஒருவரின் நோக்கம், அவை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்குமே ஒழிய, அதன் மீதுள்ள பாசமாகவா இருக்க முடியும்?

காந்திய சினிமா vs அம்பேத்கரிய சினிமா

‘பாரதி கண்ணம்மா’ படத்தின் ஹீரோவான பார்த்திபன், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ஒரு அடிமையின் மனநிலையில் தன்னுடைய முதலாளியை உயர்வாகவே கருதுவார். ‘நம்ம சனங்க கஷ்டப்படும்போது சோறு போடறது அவங்கதானே?’ என்பார். தனக்கு ஏற்படும் கோபத்தை மௌனமாக விழுங்குவார். ‘அவங்க ஒண்ணும் சும்மா தரலை. நம்மளோட உழைப்பை உறிஞ்சிக்கிட்டுதான் கொஞ்சமா தூக்கிப் போடறாங்க’ என்று சற்று விழிப்புணர்வோடு பேசும் ‘மாயன்’ என்கிற பாத்திரம் வெறும் உதிரியாகவே வந்து போகும்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை ‘ஹரிஜன்’ என்கிற பெயரில் அரவணைத்துக்கொள்ள முயன்றார் காந்தி. அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய நேரங்களிலும் மதமாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் இந்து மதத்தின் பெரும்பான்மை பலத்தில் பிரிவினை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் செய்த தந்திரம் என்று விமர்சிக்கப்பட்டது. ‘ஹரிஜன்’ என்கிற அடையாளம் எங்களை அவமதிப்பதாக இருக்கிறது’ என்று தலித்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
‘நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்’ என்று முழங்கிய அம்பேத்கர், ஆயிரக்கணக்கான பட்டியல் இன மக்களோடு புத்த மதத்தைத் தழுவினார். ‘அதிகாரத்தில் இருப்பவர்களிடம் விண்ணப்பங்களை அளிப்பதின் மூலம் ஒருபோதும் இழந்த உரிமைகளைப் பெற முடியாது. சமரசமற்ற போராட்டங்கள் மூலம் அது முடியும்’ என்பது அவரின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று.

‘தமிழ்… தமிழ்ன்றாங்க… ஆனா சாதின்னா மட்டும் கத்தியைத் தூக்கிட்டு வந்துடறாங்க’ என்பது பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் வசனம். ஒரு மதத்தை, மொழி அடையாளத்தை அதன் பெருமிதத்தோடு கட்டிக் காக்க முயற்சி செய்யும் அதே வேளையில் அதனுள் இருக்கும் உள்முரண்களும் கறாராக விமர்சிக்கப்பட்டாக வேண்டும். அந்தப் பிரச்னைகள் களையப்பட்டாக வேண்டும். ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் நோய்களை மறைத்துக்கொண்டு புற ஒப்பனையின் மூலம் சரி செய்ய முயற்சி செய்வது நிரந்தரமான தீர்வாகாது. தலித் சமூகத்தைச் சித்தரிப்பதாக சொல்லப்பட்ட திரைப்படங்களும் இந்த வகையில் பெரும்பாலும் ‘காந்திய’ வழியிலான சினிமாக்களாகவே இருந்தன. ‘நம்மள நம்பியிருக்கறவங்களை நாமதானே காப்பாத்தணும்” என்கிற கருணையைப் பெருந்தன்மையுடன் அளிப்பதாக இருந்தன. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று திரண்டு போராடுவது, அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் சக்தி அதற்குள் இருந்தே உருவாவது போன்ற சித்தரிப்புகள் அரிதாகத்தான் இருந்தன.

இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை மேம்போக்காகவோ, தட்டையாகவே உருவாக்கும் போக்கிலிருந்து விலகி அவற்றைக் கூர்மையுடன் மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் இருந்தன. குறிப்பாக தொன்னூறுகளில் இந்தப் போக்கு பரவலாக நிகழ்ந்தது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைப் போராட்டத்தில் இடஒதுக்கீடு என்கிற அம்சம் முக்கியமானது. பழங்குடிகள் மற்றும் பட்டியல் இனத்தவரைத் தவிர இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் கல்வி, பொருளாதாரம், சமூகம் போன்றவற்றில் பின்தங்கியிருந்தவர்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ‘மண்டல் ஆணைக்குழு’, ‘இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தந்த பரிந்துரையை 1990-ம் ஆண்டு வி.பி.சிங் அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் வட இந்தியா முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன. 1993-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்தப் பரிந்துரையைத் தங்களின் தீர்ப்பில் உறுதி செய்த பிறகு அமலுக்கு வந்தது.

சமூக அரசியலில் நடந்த இத்தனை முக்கியமான ‘இடஒதுக்கீட்டு’ பிரச்னையை மையப்படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு. இந்த வரிசையில் 2011-ல் வெளியான ‘Aarakshan’ என்கிற இந்தித் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். அமிதாப்பச்சன், சைஃப் அலி கான், தீபிகா படுகோன், மனோஜ் பாஜ்பயி உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம், வெகுசன வடிவத்தையும் நாடகீயத் தன்மையையும் கொண்டிருந்தாலும் படம் முழுவதும் இடஒதுக்கீடு தொடர்பான உரையாடல்களும் காட்சிகளும் இருந்தன. படத்தின் ஒட்டுமொத்த மையம் அதனையொட்டியே இருந்தது.

சமூக அரசியலைப் பேசும் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் சர்ச்சைகள்

‘ஆரக்ஷன்’ திரைப்படத்தை இயக்கியவர் பிரகாஷ் ஜா. இவர் உருவாக்கிய பல திரைப்படங்களும் ஆவணப்படங்களும் சமூக அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருந்தன. 1984-ல் வெளியான ‘Damul’ என்கிற திரைப்படம், பீகாரில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட உழைப்புச் சுரண்டலை மையமாகக் கொண்டிருந்தது.

‘ஆரக்ஷன்’ திரைப்படம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு சமூகத்தில் என்ன மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தியது என்பதைக் காட்சிகளாகவும் வசனங்களாகவும் கொண்டிருந்தது. இதன் மையம் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு ஆதரவாக இருந்தாலும் எதிர் தரப்பின் குரல்களையும் சமநிலையுடன் கூடவே பதிவு செய்திருந்தது. இதனாலேயே இந்தத் திரைப்படம் சர்ச்சைகளையும் சந்தித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா போன்ற இடங்களில் படம் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவராக ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சைஃப் அலி கானை நடிக்க வைப்பது எங்களை அவமானப்படுத்துகிறது’ என்று கான்பூரைச் சேர்ந்த ஒரு தலித் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சர்ச்சைக்குரிய சில பகுதிகளை அகற்ற இயக்குநர் ஒப்புக் கொண்ட பின்னர் தடை செய்யப்பட்டிருந்த இடங்களில் பிரச்னை நீங்கியது.

இடஒதுக்கீட்டைப் பேசிய படம் ‘ஆரக்ஷன்’

தனது உயர்கல்வியை சிறப்பான தேர்ச்சியோடு முடிக்கும் தீபக் குமார் (சைஃப் அலி கான்), தனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்காக ஒரு கல்லூரிப் பணிக்காக நேர்காணலுக்குச் செல்கிறான். ஆனால் அங்கு அவனுடைய வர்க்கநிலை, சாதி போன்றவை மறைமுகமாக விசாரிக்கப்பட்டு பணிவாய்ப்பு மறுக்கப்படுவதால் கோபமாக வெளியேறுகிறான். அவனுக்கு கல்வி கற்பித்த பிரபாகர் ஆனந்த் (அமிதாப்பச்சன்) ஒரு நல்லாசிரியர். சாதியப் பாரபட்சம் பார்க்காமல் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கல்வி கற்பிப்பது ஒன்றே தனது கடமை என்று கருதுபவர். தான் முதல்வராக இருக்கும் கல்லூரியில் தீபக் குமாருக்கு வேலை வாங்கித் தருகிறார்.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது. அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதை வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். முற்பட்ட மாணவர்கள் இதை எதிர்ப்பதால் கல்லூரி வளாகம் கலவர பூமியாக மாறுகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தையே பிரதானமாகக் கருதும் முதல்வர், தீபக்கைக் கண்டிக்கிறார். ‘இடஒதுக்கீடு தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?. அதைச் சொல்லுங்கள் முதலில்” என்றொரு கறாரான கேள்வியை முன்வைக்கிறான் தீபக். தன்னை சாதியவாதியாக அவன் முத்திரை குத்த முயல்வதைக் கண்டு மனம் கொதிப்படையும் பிரபாகர், தீபக்கை வெளியேறச் சொல்கிறார்.

ஒரு பத்திரிகையாளரின் நேர்காணலில், இடஒதுக்கீடு பற்றிய கேள்வி ஒன்றுக்குத் தன் மனதில் பட்டதை நேர்மையாகப் பதிவு செய்கிறார் பிரபாகர். அவர் பணிபுரியும் தனியார் கல்லூரி நிர்வாகம், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அவர் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுமாறு நெருக்கடி தருகிறது. பிரபாகர் அதற்கு மறுத்துவிடுகிறார். அவருக்கு எதிரான சக்திகள் செய்யும் சதிவேலைகள் காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார். நண்பரின் குடும்பம் செய்யும் துரோகம் காரணமாக தன்னுடைய வீட்டையும் அவர் இழக்க நேர்கிறது. அவருக்கு எதிராக இயங்கும் துணை முதல்வர், கல்வியை வணிகமாக்கும் நோக்கத்துடன், பிரபாகரின் வீட்டை லாபம் கொழிக்கும் கல்வி நிலையமாக மாற்றுகிறார்.

‘அனைத்து வகை பிரிவினருக்கும் அரசாங்கமே இலவசமாக கல்வி அளிக்க வேண்டும்’ என்கிற கொள்கையை உடைய பிரபாகர், தான் இழந்த வீட்டுக்கு எதிரேயுள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கத் துவங்குகிறார். மாணவர்களிடையே அவருடைய செல்வாக்கு கூடுகிறது. கோபித்துக்கொண்டு சென்ற தீபக் குமாரும் மன்னிப்பு கேட்டு அவருக்கு உதவி செய்கிறான். இதனால் தனியார் கல்வி நிலையம் தனது செல்வாக்கை இழக்கிறது. இறுதியில் இலவசக் கல்வியை அளிக்கும் ஒரு கல்லூரியின் முதல்வராக ஆனந்த் பிரபாகர் நியமிக்கப்படும் காட்சியுடன் படம் நிறைகிறது.

கருத்தியல் ரீதியாக படத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் படத்தின் மையம் வசனங்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் வலுவாகக் கடத்தப்பட்டிருக்கிறது. “ஏன் இப்படி கோபப்படறே?” என்று நாயகி கேட்கும் போது ‘இது ஆயிரம் வருட வரலாறு. நான் யாருன்னு இவங்க தொடர்ந்து எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருக்காங்க” என்கிறான் தீபக். தனது நண்பனுடன் உணவைப் பாதியாகப் பங்கிட முயற்சி செய்யும் போது, “முழுசையும் நீயே வெச்சுக்கோ” என்று முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த நண்பன் எரிந்து விழுகிறான். அது இடஒதுக்கீட்டு சதவீதம் தொடர்பான கோபம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் “ஏற்கெனவே எஸ்.சி, எஸ்.டி ரிசர்வேஷன் எங்களுக்குப் பிரச்னையா இருக்கு. இதுல இப்ப உங்களை வேற ஏத்துக்கணுமா?” என்று ஓபிசி இடஒதுக்கீடு குறித்து எரிச்சலாகக் கேட்கிறார். “நீங்களும் படிச்சு மெரிட்ல வாங்கடா” என்று ஆத்திரப்படும் நண்பனிடம் “சரி.. ஆனா போட்டி சமமா இருக்கணும்.. உங்க அப்பாவை வந்து எங்க சேரில வாழச் சொல்லு.. உங்க சொகுசு வசதிகளையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு எங்களை மாதிரி வாழ ஆரம்பியுங்க.. அப்புறம் போட்டி போடலாம்” என்று ஹீரோ கொதிப்புடன் சொல்லும் பதில் யதார்த்தமாக இருக்கிறது. ஹீரோவின் சாகசத்தின் மூலம் அல்லாமல் மாணவர்களே ஒன்று திரண்டு போராடும் கிளைமாக்ஸ் காட்சி ஆறுதலை அளிக்கிறது.

இடஒதுக்கீட்டைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உரையாடிய தமிழ்த் திரைப்படங்கள் ஒன்றாவது இருக்குமா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஜீரோ சதவீதம்தான் அதற்குப் பதிலாக இருக்கும் போலிருக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

2 thoughts on “தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்”

  1. உங்களின் உண்ணத முயற்சியை பாராட்ட வார்த்தைகள் போதா நீர் நீடுளி வாழ்க🙏🙏🙏

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *