Skip to content
Home » டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம், கூச்சல் நகரமெங்கும் விரவிக் கிடந்தது. சாலைகளில் நெருப்புக் குண்டுகள் வீசப்பட்டன. வீதிகளில் புரட்சி அலை வீசிக்கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். பழைய அதிகார அமைப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய, சமத்துவ சமூகத்தை நிறுவும் முயற்சியில் இருந்தனர்.

எவை எல்லாம் மக்களை ஒடுக்கும் கருவிகளாகப் பார்க்கப்பட்டனவோ அத்தனையையும் அடித்து நொறுக்கத் தயாராக இருந்தனர். மதங்கள், மத குருமார்கள், அரசாங்கம், அதிகாரிகள் என எல்லாமும் விமர்சிக்கப்பட்டன.

கடவுளைக்கூடப் புரட்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஆவியும் ஆன்மாவும் உண்மை இல்லை. உழைக்கும் மக்களைக் கட்டுப்படுத்த உயர்குடியால் உருவாக்கப்பட்ட பொய்கள் அவை. இந்தச் சமூக ஒழுங்கே சாமானியர்களை அடிமைப்படுத்த செல்வந்தர்கள் உருவாக்கிய கட்டமைப்புதான் எனச் சொல்லப்பட்டது.

மறுபக்கம், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், மடாதிபதிகளும் செய்வது அறியாது திகைத்தனர். அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது. பிரிட்டன் வீழும் தருவாயில் இருக்கிறது. இப்படியே சென்றால் புரட்சியாளர்கள் மொத்தமாக நம்மை வாரிச் சுருட்டிவிடுவார்கள். நமது அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் பாதுகாக்க நாமும் சண்டையிட்டாக வேண்டும். அவர்களிடம் ஆள் பலம் இருக்கலாம். நம்மிடம் ஆயுத பலம் இருக்கிறது. யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்துத் துவையுங்கள். யாரெல்லாம் எதிர்த்துப் பேசுகிறார்களோ அத்தனைப் பேரையும் புரட்டி எடுங்கள்.

உத்தரவு பறந்தது. முற்போக்குப் பேசியவர்கள் தாக்கப்பட்டனர். கடவுளைப் பழிப்பவர்கள் கண்டிக்கப்பட்டனர். இருபக்கமும் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்தச் சமயத்தில் அந்த 30 வயது நபர் லண்டனின் பதற்றச் சூழலில் இருந்து வெளியேறி இங்கிலாந்தின் கிராமம் ஒன்றில் குடியேறினார். சுற்றியும் ஆள் நடமாட்டமில்லாத இடம். உதவிக்குக் கூப்பிட்டால்கூட யாரும் வர முடியாது. முற்றிலும் தனிமை. ஆனால் அப்படியொரு இடம்தான் அவருக்குத் தேவைப்பட்டது.

இத்தனைக்கும் அவர் ஏழையில்லை. புகழ்பெற்ற மருத்துவரின் பேரன். மிகப்பெரிய நிலச்சுவாந்தாருடைய மகன். கேம்ப்ரிட்ஜில் கல்வி பயின்றவர். திருச்சபையில் மிகப் பெரிய சமய குருமாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியாமல் தனிமையைத் தேடி வந்திருந்தார்.

அவருக்குள் பூகம்பம் வெடித்துக்கொண்டிருந்தது. மனதுக்குள் சுனாமி வீசியது. அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணம். அதில் எழுதப்பட்டுள்ள சொற்கள்தான் அவரைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தன. அடிக்கடி தலைவலி வந்தது. உடல் வலி வாட்டியது. கைகளில் நடுக்கம். பலமுறை படுத்த படுக்கையாய் ஆகவும் நேர்ந்தது.

அந்த நோட்டுப்புத்தகத்தில் உள்ள விஷயம் வெளியே தெரிந்தால் என்னவாகும்? இங்கிலாந்தே இரண்டாய் உடைந்துவிடுமே? எந்தப் பக்கத்தில் இருந்து தாக்குவார்கள் என்றே சொல்லமுடியாதே? ஒருவகையில் இது நான் சார்ந்திருக்கும் சமூகத்திற்குச் செய்யும் துரோகம் இல்லையா? ஏற்கெனவே நாலாபுறமும் புகைந்து கொண்டிருக்கிறது. கொலைகாரக் கும்பல் சாலையில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையில் இந்த நோட்டுப் புத்தகம் கிடைத்தால் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல ஆகிவிடாதா?

இதில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் வெளியே தெரிந்தால் திருச்சபை என்னை மன்னிக்காது. நாத்திகவாதி எனத் தூற்றுவார்கள். அறத்திற்குப் புறம்பானவன் என வசைபாடுவார்கள். மொத்தமாய் ஒதுக்கிவிடுவார்கள். இதற்கு நானே ஒதுங்கிவிடலாம் என முடிவெடுத்துதான் இங்கு வந்திருக்கிறேன்.

அப்படியென்றால் அந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிடலாமே? விட்டு ஒழிந்தது என நினைத்துவிடலாமா? அதுவும் முடியாது. இது நான் கண்டடைந்த கருத்துகள். சொல்லப்போனால் உண்மைகள். ஆனால் சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போடும் வல்லமை படைத்த உண்மைகள். அதனால்தான் என்னை அலைக்கழிக்கிறது.

அந்த நோட்டுப் புத்தகத்தை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்தார். அந்த வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையே தவிர்த்தார். தனது படிப்பறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கண்ணாடியை மாட்டிவைத்துக்கொண்டு வீட்டின் அருகே யாரெல்லாம் வந்துபோகிறார்கள் எனக் கண்காணித்தார். தூங்குவதுகூட அச்சமாயிருந்தது. இப்படித்தான் அவரது வாழ்க்கை கழிந்தது. ஒருநாட்கள், இரு நாட்கள் அல்ல. 22 ஆண்டுகள்.

ஆம், தான் கண்டுபிடித்த உண்மையை 22 ஆண்டுகள் பாதுகாத்து வைத்தார் அந்த மனிதர். அவர் வேறு யாரும் இல்லை. வரலாற்றில் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக அறியப்பட்ட சார்லஸ் டார்வின்.

டார்வின் இந்த அளவு அஞ்சி நடுங்குவதற்கு அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? அப்படி அவர் என்ன கண்டுபிடித்திருந்தார்?

அவர் கண்டுபிடித்த உண்மை எளிமையானது. உயிரினங்களைக் கடவுள் படைக்கவில்லை. அவை சில இயற்கை விதிகளின்கீழ் பரிணமித்து தோன்றின. இதுதான். இந்தக் கருத்துக்கள்தான். இதற்காகத்தான் அவர் இன்றைக்கும் தூற்றப்படுகிறார். மதநம்பிக்கைவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார். சில அறிஞர்களாலும் விமர்சிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தக் கருத்தை அவர் சொன்னபோதே அது ஒன்றும் புதிய கருத்து இல்லை. டார்வினுக்கு முன்பே பரிணாமம் பற்றிய பார்வை இருந்தது. கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை என்ற கருத்தாக்கம் இருந்தது. பிறகு ஏன் டார்வினை மட்டும் எல்லோரும் தூற்ற வேண்டும். டார்வினைக் கண்டு மட்டும் ஒருசாரார் ஏன் அலறவேண்டும்?

இதைத் தெரிந்துகொள்ள நாம் டார்வினையும் அவர் கண்டடைந்த உண்மைகளையும் அவை தோன்றிய சமூக–அரசியல் பின்னணியையும், அந்தக் கருத்துகள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் டார்வினின் வாழ்க்கையை முழுதாக ஆராய வேண்டும்.

டார்வின் தான் கண்டடைந்த உண்மையை நினைத்து, மனம் வெதும்பி, நண்பர் ஒருவருக்கு எழுதிய கடித்ததில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘வேறு யாரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்? இயற்கையை அத்தனை அழகானதாய், தெய்வீகம் வாய்ந்ததாய் கருதுகிறோம். இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கடவுள் பார்த்து பார்த்துப் படைத்தார் எனப் பூரிக்கிறோம். ஆனால் நானோ இயற்கையின் மற்றொரு முகத்தை, அதன் குரூரத்தைக் காட்ட விழைகிறேன். நான் நிச்சயம் சாத்தானின் பணியாளாகத்தான் இருக்க முடியும்.’

உண்மையில் டார்வின் சாத்தானின் பணியாளா?

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *