கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000 பேர் கேம்பிரிட்ஜில் வசித்தனர்.
கேம்பிரிட்ஜ் அமைந்திருக்கும் பகுதியே செல்வச் செழிப்புடன் காணப்பட்டது. அங்கே ஓடிய கேம் நதி இங்கிலாந்தின் முக்கிய வணிகப் பாதைகளுள் ஒன்று. இதனால் மாணவர்கள் போக, அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் வந்துபோகும் இடமாக கேம்பிரிட்ஜ் இருந்தது.
அங்கிருந்த மக்கள் ஆங்கிலோ-கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள். இங்கிலாந்து திருச்சபைக்குக் கட்டுப்பட்டவர்கள். இதனால் அவர்கள் வாழ்வும் கேம்பிரிட்ஜை மையப்படுத்தியே இருந்தது.
கேம்பிரிட்ஜின் கீழ் உள்ள கல்லூரிகளின் மாணவத் தலைவர்கள், பேராசிரியர்கள் எல்லோருமே அமைச்சரவையில் ஏதோ ஒரு பதவியில் இருந்தனர்.
கேம்பிரிட்ஜ்தான் உள்ளூர் தேவாலயப் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருந்தது. பாதிரியார்களே உள்ளூர் நீதிபதிகளாகவும் இருந்தனர். இதனால் விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுக் கூச்சலிட்டால் பல்கலைக்கழக மாணவர்கள்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து சட்டஒழுங்கைக் காப்பாற்றச் செல்வார்கள்.
பல்கலைக்கழகமே வரிகளை விதித்தது. சந்தைப் பொருட்களின் விலையை நிர்ணயித்தது. மதுவிடுதி உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள் எனப் பலரும் பல்கலைக்கழகத் துணை வேந்தரிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்தக் காரியத்தையும் செய்ய முடியும். இதைத்தவிர சிறப்புப் பாதுகாவலர்கள் என்ற சிலரையும் பல்கலைக்கழகம் நியமித்திருந்தது. நகர மக்களைக் கண்காணிப்பதுதான் இவர்களது வேலை. இவர்களால் யார் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நுழைய முடியும். யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்க முடியும். கைது செய்ய முடியும்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே முழு அதிகாரம் பெற்றவர். அவர் திருச்சபையின் மூத்த அதிகாரிகளில் ஒருவராக இருப்பார். அரசரின் ஆலோசகராகவும் செயல்படுவார். அபராதம் விதிப்பது, சிறை தண்டனை கொடுப்பது எனப் பலவற்றையும் நினைத்த நேரத்தில் நிறைவேற்றுவார்.
இத்தகைய இடத்தில்தான் ஜனவரி 1828 அன்று டார்வின் இணைந்தார். டார்வினுக்கு கேம்பிரிட்ஜ் கட்டுப்பட்டித்தனம் வாய்ந்த தனது பள்ளிக்கூடம் போலத்தான் தோன்றியது.
0
பல்கலைக்கழகத்தில் இரண்டு வித மாணவர்கள் அவருக்கு அறிமுகமானார்கள். ஒருசாரார் முரடர்கள். வகுப்புகளுக்குச் செல்லாமல் எந்நேரமும் குடி, கூத்து, சூது எனத் திரிபவர்கள். இரண்டாவது சாரார் ஒழுக்கச் சீலர்கள். படிப்பு, பிரார்த்தனை என்று வாழ்பர்கள்.
இரண்டாம் வகை மாணவர்களைத்தான் பல்கலைக்கழகம் ஊக்குவித்தது. புத்திசாலியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை என அவர்களுக்குத்தான் பதவிகள் வழங்கப்பட்டன.
டார்வினுக்கோ முதலாம் வகை மாணவராக இருக்கத்தான் விருப்பம். ஆனால் அதற்கு வேண்டிய நிதி தந்தையிடம் இருந்து கிடைக்கப்போவதில்லை என்பதால் இரண்டாம் வகையினரில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவுசெய்தார்.
அங்கு அவருக்கு முதலில் அறிமுகமானவர், ஆடம் செட்க்விக். இவர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பாதுகாவலர்களில் ஒருவர். ஆனாலும் மதிப்பு மிக்கவர். செட்க்விக் பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை. கடைநிலைச் சமூகத்தில் இருந்து வந்தவர். ஆனால் கடின உழைப்பால் உயர்ந்தவர். கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு புவியியல் பேராசிரியராக உயர்ந்தார். லண்டன் புவியியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவிபெற்றார். ஒரு மாணவர் கடினமாக உழைத்தால் என்னவாக ஆகலாம் என்பதற்கு உதாரண புருஷராக விளங்கினார். அதனால் டார்வினுக்கு இவர் மேல் மதிப்பு இருந்தது.
அதேசமயம் பல்கலைக்கழகத்தின் ஒழுக்க விதிகளை மாணவர்களிடம் அமல்படுத்துவதில் இரக்கமே காட்டாதவராகவும் செட்க்விக் இருந்தார்.
குறிப்பாக செட்க்விக்குக்குப் பெண்கள் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. மாணவர்களை எப்போதும் பெண்களைவிட்டு விலகியே இருக்கும்படி அறிவுறுத்துவார். பெண்களுடன் பழகும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவார். மாணவர்களிடம் பழகும் பெண்களுக்கும் சிறை, கசையடிகளைப் பெற்றுத் தருவார்.
இதனால் டார்வினும் பெண்கள் யாரிடமும் பழகக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனாலும் அவரால் தனது காதலை மறக்க முடியவில்லை. ஃபேனியை விட முடியவில்லை. ஃபேனி அவரது நினைவுகளில் தங்கி மனதை வாட்டினார். ஃபேனியை இழந்துவிடுவோமோ என்கிற தவிப்பு டார்வினுக்குள் எழுந்தது.
ஃபேனி ஏற்கெனவே டார்வின் மீது கோபத்தில் இருந்தார். எடின்பர்க்கில் மருத்துவர் படிப்பை விட்டுவிட்டு கேம்பிரிட்ஜில் இணைந்ததை டார்வின் அவரிடம் சொல்லவில்லை. அதனால் வந்த கோபம். டார்வின் ஃபேனியின் வீட்டிற்குச் செல்வதை அப்போது குறைந்திருந்தார். அதுவும் கோபத்தில் சேர்ந்துகொண்டது. டார்வின் ஃபேனிக்குக் கடிதங்கள் எழுதுவார். ஆனால் ஃபேனி பதில் அளிக்க மாட்டார். அப்படியே பதில் கடிதம் எழுதினாலும் வேண்டுமென்றே தாமதப்படுத்துவார். கேட்டால் நேரில் சந்திக்கும்போது பேசிக்கொள்வோம் என்பார்.
அப்போது வசந்தகாலம் தொடங்கி இருந்தது. வெட்ஜ்வுட் குடும்பம் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தது. ஃபேனி டார்வினை அந்தச் சுற்றுலாவுக்கு வரும்படி அழைத்தார். அவர் வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் டார்வினால் சுற்றுலாவுக்குச் செல்ல முடியவில்லை. ஃபேனி மனம் உடைந்துபோனார். டார்வினுடன் பேசுவதை முழுமையாக நிறுத்தினார்.
0
ஃபேனியுடனான காதல் முறிவு ஆரம்பத்தில் வருத்தியது. ஆனால் கேம்பிரிட்ஜ் வாழ்க்கை டார்வினுக்கு மாற்றுத் தீர்வை வழங்கியது. எடின்பர்க்கைப்போல கேம்பிரிட்ஜிலும் ஏகப்பட்ட சங்கங்கள் இருந்தன. ஆனால் எல்லாமும் பொழுதுபோக்கு சங்கங்கள். உணவுச் சங்கங்கள், மது சங்கங்கள், கிரிக்கெட் விளையாட்டு சங்கம், படகு ஓட்டிகள் சங்கம் என கேம்பிரிட்ஜ் களைகட்டியது. அதில் ஒரு சங்கம்தான் வண்டு காதலர்கள் சங்கம்.
டார்வின் இந்தச் சங்கத்தில்தான் உறுப்பினராக இணைந்தார். டார்வினுக்கு வண்டுகளின் மேல் ஆர்வம் இருந்தது. ஃபேனியை மறக்க இந்த ஆர்வமே உதவியது.
அப்போது இங்கிலாந்து முழுவதுமே வண்டுகளைச் சேகரிக்கும் பழக்கம் அதிகரித்திருந்தது. இங்கிலாந்து சமூகம் தொழிற்வளர்ச்சியில் முன்னேறி வந்த நிலையில், இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருந்தது. இதையெடுத்து இயற்கையுடனான ஈடுபாட்டை அதிகரிக்க, பெரும் நகரங்களில் இருந்து பலரும் கிராமப்புறங்களுக்கு வந்து வண்டுகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கான கையேடுகள் எல்லாம் விற்பனையில் இருந்தன. இந்த ஆர்வம் கேம்பிரிட்ஜிலும் பரவியது. மதகுருமார்களே வண்டுகள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தனர். வண்டுகள், கடவுளின் பரந்துபட்ட படைப்பின் ஒரு அங்கம் எனப் போதித்தனர். இதனால் டார்வினும் எந்தத் தடையும் இல்லாமல் வண்டுகள் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினார்.
அங்கே அவருக்கு ஒரு நண்பரும் கிடைத்தார். அவரது பெயர், வில்லியம் டார்வின் ஃபாக்ஸ். சொல்லப்போனால் இவர் டார்வினின் தந்தை வழி சொந்தக்கார இளைஞர். இவருடன்தான் டார்வின் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.
ஃபாக்ஸ் ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக கிறிஸ்து கல்லூரியில் படித்து வந்தவர். அதனால் சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அங்கு இருக்கும் தாவரங்கள், விலங்குகள் என அனைத்தையும் டார்வினுக்கு அறிமுகம் செய்தார். டார்வினுக்கு ஃபாக்ஸை மிகவும் பிடித்துப்போனது. இயற்கை வரலாற்றுக் கலைக்களஞ்சியம் என அவரை மெச்சும் அளவுக்குப் பிடித்துப்போனது. எராஸ்மஸ், கிரான்ட் இருவரது கலவையாகவும் ஃபாக்ஸ் தோன்றினார்.
விடுமுறை நாட்களில் இருவரும் கேம் நதிக்கரையைச் சுற்றி வண்டுகளைச் சேகரித்தனர். வண்டுகளை எப்படிப் பிடிக்க வேண்டும், அவற்றின் தோற்றம், நடத்தைகளை வைத்து எப்படி வகைபிரிக்க வேண்டும், எப்படிச் சேகரிக்க வேண்டும் என அனைத்தையும் ஃபாக்ஸிடம் இருந்து டார்வின் கற்றுக்கொண்டார். உள்ளூர் வண்டுகள் எவை, அரிய வண்டுகள் எவை என்பது வரை ஃபாக்ஸ் தெரிந்து வைத்திருந்தார்.
டார்வினும் தீவிரத்துடன் வண்டுகளைச் சேகரித்தார். ஒருமுறை மரத்தின் மேல் வண்டுகளைப் பிடிக்கச் சென்றபோது இரண்டு அரியவகை வண்டுகளைக் கண்டுபிடித்தார். இரண்டையும் ஒவ்வொரு கைகளில் பிடித்து வைத்துக்கொண்டார். சட்டென்று அவரது பார்வைக்கு மூன்றாவது வண்டு அகப்பட்டது. அதையும் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கையில் வைத்திருந்த வண்டை வாயில் போட்டுவிட்டார். அந்த வண்டு ஒருவகை திரவத்தைப் பீய்ச்சியடித்து டார்வினை அலறவிட்டது. இந்த அளவுக்கு டார்வினின் ஆர்வம் கட்டுக்கடங்காமல்போனது.
மேலும், வண்டுகளின் மீதான காதல்தான் மற்றொரு முக்கிய நபரை டார்வினின் வாழ்க்கைக்குள் அழைத்து வந்தது. அவரது பெயர் ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ.
ஹென்ஸ்லோ 32 வயதே ஆன இளைஞர். ஆனால் தாவரவியல் பேராசிரியர். அறிவியல் மேல் அத்தனை ஈடுபாடும் நிபுணத்துவமும் கொண்டிருந்தவர். அவரது வீடு, அறிவியல் ஆர்வளர்கள் புழங்கும் இடமாக இருந்தது.
பல்வேறு அறிவியல் நிபுணர்கள் அங்கு கூடி விவாதித்தனர். ஃபிலினியன் சமூகத்தைப்போல அடிதடி, நாத்திகம் என்றெல்லாம் இல்லாமல் சட்டத்துக்குக் உட்பட்டு மிகவும் கட்டுக்கோப்பாக இயங்கும் அறிவு சார்ந்த இடமாக ஹென்ஸ்லோவின் வீடு இருந்தது. ஹென்ஸ்லோவின் வீட்டிற்கு டார்வினும் செல்லத் தொடங்கினார்.
டார்வினை அவர்கள் மரியாதையாக நடத்தினர். அவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் உடனடியாக பதில் அளித்தனர். டார்வினின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தனர்.
இவை எல்லாமே டார்வினுக்கு இயற்கை அறிவியல்மீதான நாட்டத்தை அதிகரித்தது. அறிவையும் ஆன்மிகத்தையும் வளர்க்கும் இடமாக கேம்பிரிட்ஜ் தோன்றியது. திருச்சபை, ஆய்வுகள், அறிவியல் இவைதாம் தம் வாழ்நாள் நோக்கம் என டார்வின் முடிவு செய்தார். ஹென்ஸ்லோ டார்வினைப் புதிய உலகிற்குள் அழைத்துச் சென்றார்.
(தொடரும்)