Skip to content
Home » டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தவாதிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்களைத் தாண்டி இறை மறுப்பாளர்கள், கத்தோலிகர்களையும் அரசு அதிகாரிகளாகப் பணியமர்த்தலாம் என்கிற சட்டம் நிறைவேறி இருந்தது. இது ஆங்கிலோ திருச்சபை மட்டத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

இப்படியே சென்றால் சமூகத்தின் மீதான நம்முடைய கட்டுப்பாடு முற்றிலுமாகத் துடைத்து எறியப்படும். பிறப்பு, மதம் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்படும் உரிமை இல்லாமலேயே போய்விடும் என்ற பயத்தைத் திருச்சபை அதிகாரிகள் உணரத் தொடங்கினர்.

விளைவாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், திருச்சபை எதிர்ப்பாளர்களைக் கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கியது. மதத்துக்கு எதிரே சிறிய கேள்வியை எழுப்பினால்கூட கடும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

இத்தகைய சூழலில்தான் டார்வினின் மனதுக்குள் மதம் குறித்த இரண்டு கேள்விகள் நிழலாடத் தொடங்கின. முதலாவது கேள்வி, உண்மையிலேயே இறைவன் இருக்கிறாரா? அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது. இரண்டாவது கேள்வி, கிறிஸ்தவ மதத்தினால் சமூகத்தில் ஏதேனும் பயன் விளைகிறதா? அப்படிப் பயன் இல்லை என்றால், அம்மதத்தினைப் பின்பற்றுவது சரியா?

டார்வின், இறையியலில் நம்பிக்கை வைத்திருந்தாலும் அவருடைய அறிவியல் மனம் எல்லாவற்றையும் கேள்விக்கேட்டுக்கொண்டே இருந்தது. இறைவனாக இருந்தாலும் தர்க்கத்தின் அடிப்படையில் அதற்கு ஒரு விளக்கம் தேவைப்பட்டது. இதனால் இந்தக் கேள்விகளுக்கு எப்படியாவது பதில்களைக் கண்டடைய வேண்டும் என டார்வின் விரும்பினார்.

ஆனால் யாரிடம் இந்தக் கேள்விகளை கேட்பது? இப்படியான சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன எனத் தெரிந்தாலே பெரிய பிரச்னையாகி சிறைக்குக்கூடச் செல்ல நேரிடுமே எனப் பயந்தார். இதனால் கேள்விகளை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார். நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் விவாதித்தார்.

கேம்பிரிட்ஜில் டார்வினுக்கு ஹெர்பெர்ட் என்று ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் முதலில் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

‘உண்மையிலேயே உனக்குள் புனித ஆவி இயங்குவதை அறிய முடிகிறதா? என்னால் முடியவில்லை.’

ஹெர்பெர்ட் அமைதியாகப் பதிலளித்தார்.

‘என்னாலும் முடியவில்லை. ஆனால் புனித ஆவி இருப்பது உண்மை’.

டார்வினுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. இருப்பது உண்மை என்றால் அதற்கான ஆதாரங்கள் எங்கே?

அவருடைய மனநிலை ஊசலாடத் தொடங்கியது. நிதானம் தவறியது. புத்தகங்களில் விடையைத் தேடலாமா என யோசித்தார். கிறிஸ்தவம் குறித்து பல புத்தகங்களை வாசித்தார். அப்போதுதான் அவருக்கு வில்லியம் பேலி என்பவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது.

வில்லியம் பேலி, கிறிஸ்தவ சிந்தனையாளர். கிறிஸ்தவம் குறித்து ஏராளமான விவாதங்களை முன்னெடுத்தவர். அவரது நூல்கள் இறைவன் இருக்கிறார் என்பதற்கான ஆணித்தரமான ஆதாரங்களாகச் செயல்பட்டன. இவ்வளவு ஏன், கேம்பிரிட்ஜில் பாடமாகவே வைத்து போதிக்கப்படும் அளவுக்கு அவரது ‘Evidences of Christianity’ எனும் நூல் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அந்த நூலைத்தான் டார்வின் புரட்டிக்கொண்டிருந்தார். அதில் அவருக்கு, கிறிஸ்தவம் சமூகத்திற்கு ஏன் அவசியம் எனும் பதில் கிடைத்தது. அது வெறும் சமயம் சார்ந்த பதில் மட்டுமல்ல. சமூகம் சார்ந்த பதிலும்கூட.

கிறிஸ்தவம் இல்லாத சமூகம் சீர்குலைந்துவிடும் என்றார் பேலி. ஏனென்றால் கிறிஸ்தவமே சமுதாயத்தில் சமநிலையைத் தக்க வைக்க உதவும் தத்துவம் எனக் கூறினார்.

‘கிறிஸ்தவம் தண்டனை, பரிசு என்கிற நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை ஒழுங்கில் வைத்துள்ளது. நரகம், சொர்க்கம் பற்றிய பயம் இல்லை என்றால் யாராவது நியாயத்துடன் நடந்துகொள்வார்களா? அறத்தைப் பின்பற்றுவார்களா?

நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மரணத்திற்குப் பின் தண்டனைகளும் பரிசுகளும் உண்டு என்றால் சமூகம் தானாகவே ஒழுங்கைப் பின்பற்றும். நம் சமூகத்தில் செல்வமும் அதிகாரமும் நியாயமற்ற முறையில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்பட்டவர்களைக் கோபம் கொள்ள வைக்கும். அந்தக் கோபத்தைத் தணிக்கும் வேலையைக் கிறிஸ்தவம் செய்கிறது. ஏழைகள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையை ஏற்றுக்கொள்வதற்கான நியாயத்தை கிறிஸ்தவம்தான் வழங்குகிறது. தமக்கு வேண்டிய அனைத்தும் மறுமையில் கிடைக்கும் எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையே நம் மனித வாழ்வை இயங்க வைக்கிறது. கடினமான வாழ்வை அறத்துடன் இணைக்கிறது’ என்றது அந்த நூல்.

இந்தப் பதில் டார்வினுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. மிகவும் தெளிவான விளக்கம். சமூகத்திற்கு மதம் ஏன் முக்கியம் என்பதற்கான விளக்கம். ஆனால் சமூக ஒழுங்கைப் பராமரிப்பதற்குத்தான் சொர்க்கம், நரகம் எனும் நம்பிக்கைகள் இருக்கின்றன என்றால், அவற்றை உருவாக்கியதாகச் சொல்லப்படும் கடவுள் இருக்கிறாரா எனும் கேள்வி இன்னும் ஆழமடைகிறதே எனத் டார்வினுக்குத் தோன்றியது. இதற்கான பதிலை எங்கே கண்டடைவது?

அப்போது அவரது மனதில் வேறு ஒருவர் ஞாபகத்திற்கு வந்தார். அவர், வேறு யாரும் இல்லை. தாவரவியல் பேராசிரியர் ஹென்ஸ்லோ. வண்டுகள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட டார்வின், ஹென்ஸ்லோவுக்கு அறிமுகமாகி அவரது வீட்டில் நடக்கும் சந்திப்புகளில் கலந்துகொண்டு வந்தார் என்று பார்த்தோம்.

ஹென்ஸ்லோவுக்கு அறிவியல், ஆன்மீகம் இரண்டிலுமே புலமை இருந்தது. கிறிஸ்தவமும் அறிவியலும் நேரெதிர் விஷயங்கள் என டார்வின் சொல்லிக்கொண்டிருக்க, அறிவியலும் மதமும் ஒரே உண்மையைத்தான் கூறுகின்றன என்றார் ஹென்ஸ்லொ. அதனால் தன்னுடைய கேள்வியை ஹென்ஸ்லோவிடம் கேட்க முடிவு செய்தார் டார்வின்.

அப்போது ஹென்ஸ்லோ பூக்களை ஆராய்ந்துகொண்டிருந்தார். டார்வின் மெதுவாகத் தனது கேள்வியை ஹென்ஸ்லோவை நோக்கி வீசினார்.

‘பூக்களின் மகரந்தத்தில் கூம்பு போன்ற பகுதி இருக்கிறது. அது வெடித்து ஏராளமான பரல்களை வெளியிடுகிறது. இந்தப் பரல்கள் மீண்டும் செடிகளாக உருமாறுவதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறுகின்றன? அவற்றின் உள்ளேயே அந்த ஆற்றல் இருந்தால்தானே அவற்றால் செடியாக உருமாற முடியும்?’ எனக் கேட்டார் டார்வின்.

‘இல்லை’ என்றார் ஹென்ஸ்லோ.

‘மகரந்தத்தின் சிறிய துகள்களான இந்தப் பரல்கள்தான் புதிய உயிரைக் கட்டமைக்கும் அடிப்படைச் சாரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவற்றுக்கு உள்ளார்ந்த ஆற்றல் எதுவும் கிடையாது. உயிருக்கு வேண்டிய ஆற்றல் அதன் உள்ளே இருந்து வருவதில்லை. வெளியில் இருந்து தரப்படுகிறது. இறைவன்தான் அவற்றைத் தருகிறார்’ என்றார் ஹென்ஸ்லோ.

‘ஓர் உயிரற்ற பருப்பொருள் எப்படித் தனித்து இயங்கும் பண்பைப் பெற்றிருக்க முடியும்? அதற்கு ஓர் உந்து சக்தி வெளியில் இருந்து வர வேண்டும் இல்லையா? அந்தச் சக்திதான் கடவுள்’ என்று விளக்கினார்.

இது ஓரளவுக்கு நல்ல பதில்தான். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எங்கே? தர்க்கங்கள் எங்கே? டார்வினால் ஹென்ஸ்லோவின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதனை மறுக்கவும் இல்லை. இதைப்பற்றி மேலும் தேடிப் பார்த்துவிட்டு விவாதிப்போம் என விட்டுவிட்டார்.

இறுதியாக டார்வின் தேடிய பதில் அவர் கல்லூரியை முடித்தவுடன்தான் கிடைத்தது.

0

1831, ஜனவரி மாதம்.

கேம்பிரிட்ஜில் மூன்று வருடங்கள் நிறைவடைந்தன. இறுதித் தேர்வு தொடங்கியது. படிப்பதற்கு ஏராளமான பாடங்கள் இருந்தன. முதலில் கிரேக்க இலக்கியங்கள் படிக்க வேண்டும். அடுத்தது கிறிஸ்தவம் பற்றிய பாடம். அதன்பின் அரசியல் தத்துவம், இயற்பியல், கணிதம், வானியல்.

கொஞ்சம் கஷ்டம்தான். தத்துவம், இலக்கியம், கிறிஸ்தவம் பற்றிக்கூட கவலை இல்லை. எழுதிவிடலாம். கணிதமும் இயற்பியலும்தான் சிக்கல். ஆனால் என்ன செய்வது? எழுதித்தானே ஆக வேண்டும். ஏனோதானோ என எழுதி வந்தார்.

தேர்ச்சி பெறுவோமா என்பதே சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் மீண்டும் அத்தனை பாடங்களையும் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்.தேர்ச்சி பெறாதா பாடத்தை மட்டும் படித்து எழுதுவது என்பதெல்லாம் கிடையாது. உள்ளுக்குள் பயம். என்ன நடக்குமோ?

தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்து பார்த்தார். அதிர்ந்தேவிட்டார். ஆம், டார்வின் அத்தனை பாடங்களிலும் தேர்ச்சி. அதுமட்டுமில்லாமல் தேர்வு எழுதிய 178 மாணவர்களில் 10வது இடத்தை வேறு பிடித்திருந்தார். நினைத்தே பார்க்கவில்லை இப்படியெல்லாம் நடக்கும் என்று. சந்தோஷமாக இருந்தது. ஒருவழியாக இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தாயிற்று.

ஆனாலும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இன்னும் திருச்சபைக்கான தேர்வு இருக்கிறது. அதில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் நினைத்ததுபோல் சொந்த ஊரிலேயே பாதிரியாராகப் பணியாற்ற முடியும். ஆனால் அதற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தன. அதுவரை மகிழ்ச்சியாக ஊர் சுற்றலாம் என முடிவு செய்தார். ஹென்ஸ்லோவைப் போய் சந்தித்தார்.

ஹென்ஸ்லோ டார்வினுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். ’எப்படியோ இளங்கலையில் தேறிவிட்டாய். மகிழ்ச்சி. அடுத்து நீ நினைத்ததுபோல் திருச்சபை தேர்விலும் வெற்றிபெற வேண்டும். அச்சம் வேண்டாம். அவசரம் வேண்டாம். உனக்குப் பிடித்தவை எல்லாம் தானாக வந்து சேரும். ஓய்வு நேரங்களை வீணாக்காமல் நிறைய வாசி. வாசிப்பு முக்கியம். அதுதான் புதிய கதவுகளைத் திறக்கும். அதேபோல பயணங்கள் செல். புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல். ஓரிடத்தில் தேங்கிவிடாதே’ என்றார்.

டார்வினுக்கு நம்பிக்கையாக இருந்தது. எல்லாமும் நினைப்பதுபோல நடக்கிறதே என மனம் குதூகலித்தது. ஹென்ஸ்லோ சொன்னதுபோல் வாசிக்கலாம் என முடிவு செய்தார்.

நேராக அறைக்குத் திரும்பி, வில்லியம் பேலி எழுதிய Natural Theology or Evidences of the Existence and Attributes of the Deity எனும் நூலை எடுத்தார். அவ்வளவுதான். டார்வினின் மனதை அத்தனை நாட்கள் அரித்துக்கொண்டிருந்த கேள்விக்கான பதில் அந்த நூலில்தான் இருந்தது. இறைவன் இருக்கிறாரா இல்லையா? நம்மை படைத்தது இறைவன் தானா?

பேலி டார்வினுக்கான பதிலை நூலில் விளக்கினார்.

‘நம்மைப் படைத்தது இறைவன்தான். இந்த உலகைப் படைத்ததும் இறைவன்தான். இந்த உலகம் மகிழ்ச்சியின் உறைவிடம். இந்த உலகில் தோன்றிய அனைத்துக்கும் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள தேனீக்கள், வண்டுகள், புறாக்கள், முயல்கள் என உயிர்களை எல்லாம் பாருங்கள். அவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்குப் ஏற்றவாறு இருக்கின்றன. இவையே கடவுள்தான் அவற்றைப் படைத்தார் என்பதற்கான ஆதாரம் இல்லையா? ஒவ்வொரு உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றின் உடல் சிக்கலான இயக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் எப்படித் தானாக நடைபெறும்? யாராவது ஒருவர் இயக்க வேண்டும் இல்லையா? இவைதான் கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாட்சி’ என்றது அந்த நூல்.

டார்வினுக்கு எல்லாக் குழப்பமும் தீர்ந்தது.

ஆம், உண்மைதான். எல்லா உயிர்களும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. யாராவது ஒருவர் பார்த்துப் பார்த்து படைத்தால்தானே அது சாத்தியம்? அதுமட்டுமில்லாமல் இத்தனை சிக்கலான உடல் அமைப்புகள் எப்படித் தானாக உருவாக முடியும்? கடவுள்தான் அவற்றை உருவாக்கி இருக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது நான் நம்புகிறேன் என்றார் டார்வின்.

மகிழ்ச்சியுடன் திருச்சபை தேர்வுக்குத் தயாரானார். இனி மனதில் குற்றம் இல்லை. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத் தேவையில்லை. பூரண மனதுடன் தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பணியாற்றலாம் என்று முடிவுக்கு வந்தார்.

ஆனால் டார்வினுக்குத் தெரியாது. இப்போது எந்த ஆதாரங்களைக் கொண்டு கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்பதை ஏற்றுக்கொண்டாரோ, அதே ஆதாரங்களை உண்மையில்லை என்று பின்னாளில் உடைத்தெரியப்போவதும் அவர்தான் என்று.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *