Skip to content
Home » டார்வின் #9 – கனவுப் பயணம்

டார்வின் #9 – கனவுப் பயணம்

பயணம். ஹென்ஸ்லோ சொன்னதில் இருந்து டார்வினின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இந்தச் சொல். பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. திருச்சபைத் தேர்வுக்கு நாட்கள் இருக்கின்றன. ஏன் பயணம் செல்லக்கூடாது? படிப்பதற்காக வீட்டை விட்டுக் கிளம்பியதில் இருந்து ஏராளமான முறை ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் இந்த முறை சுற்றுலாப் பயணம் கிடையாது. ஆய்வுப் பயணம். அறிதல் பயணம்.

கடவுளின் இருப்பு குறித்த கேள்விக்குப் பதில் கிடைத்தவுடன், அதைத் தர்க்கப்பூர்வ ஆதரங்கள் கொண்டு நிறுவ வேண்டும் என நினைத்தார் டார்வின். எவ்வாறு செய்வது என்று சிந்தித்தபோது பயணங்கள் மூலம் வழி பிறக்கலாம் எனத் தோன்றியது. அதனால், கேனரி தீவுகளுக்குப் பயணக்க முடிவு செய்தார்.

கேனரி தீவுகள், ஆப்ரிக்கக் கண்டத்தில் அமைந்திருக்கும் சிறுசிறு தீவுகளின் தொகுப்பு. ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றைப் பற்றிய விவரங்களை வான் ஹம்போல்ட் எழுதிய பெர்சனல் நரேட்டிவ் எனும் நூலில் டார்வின் படித்திருந்தார்.

அந்தப் புத்தகம், தென் அமெரிக்கக் காடுகள், அங்கே வாழும் எண்ணற்ற உயிரினங்கள் பற்றி விவரிக்கும் புத்தகம். ஹென்ஸ்லோவுக்கு பிடித்த புத்தகம். அதில் வருவதுபோல பயணம் செல்ல வேண்டும் என்று ஹென்ஸ்லோ அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். குறிப்பாக ஆப்ரிக்க காடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஹென்ஸ்லோவுக்கு விருப்பம். டார்வினுக்கும் ஏற்கெனவே தென் அமெரிக்க, ஆப்ரிக்கக் காடுகளில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், தனது ஆய்வுப் பயணத்தை ஏன் கேனரி தீவுகளுக்கே வைத்துக்கொள்ளக்கூடாது என தீர்மானித்தார்.

இதைப் பற்றி நண்பர்களிடம் சொன்னார். யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஹேன்ஸோ உடனடியாக உற்சாகம் கொண்டார். டார்வினுக்குப் பரம சந்தோஷம். இதுபோதும்.

அடுத்தது அந்தத் தீவுகளுக்கு எப்படிச் செல்வது என விசாரிக்கத் தொடங்கினார். தொலைதூரப் பயணம் என்றால் அப்போது கப்பல் மட்டுமே வழி. ஆனால் கப்பல் பயணத்திற்கு நிறையச் செலவுகள் பிடிக்கும். இதற்கு நண்பர்களின் ஆதரவு வேண்டும். இன்னும் சிலரிடமும் திட்டத்தை விவரித்து அவர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தார்.

ராம்ஸேவிடம் சென்று பயணம் பற்றிச் சொன்னார். ராம்ஸே கேம்பிரிட்ஜில் ஆசிரியராக இருந்தவர். டார்வினின் வண்டுகள் சேகரிப்பு கூட்டாளி. டார்வின் சொன்னவுடன் மறுபேச்சே இல்லாமல் உடனே வருவதாகச் சம்மதித்தார் ராம்ஸே. அடுத்து சார்லஸ் விட்லி, ஜான் மவுரிஸ் ஹெர்பெர்ட், லினர்ட் ஜெனின்ஸ் என்று தன்னுடன் அறிவியல் மட்டத்தில் இயங்கிய நண்பர்களை எல்லாம் அழைத்தார் டார்வின். எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் சூழல் அனுமதிக்குமா? சொல்கிறோம் எனச் சொல்லி விட்டார்கள்.

பரவாயில்லை. இப்போதைக்கு விஷயத்தைக் காதில் போட்டாயிற்று. எல்லாம் தானாக நடக்கும். அடுத்த வேலையைப் பார்க்கலாம் எனப் பணம் திரட்ட முடிவு செய்தார்.

பணத்திற்கு எங்கே செல்வது? தந்தையிடம் கேட்கலாமா? தந்தை தருவரா? முதலில், பயணம் செய்வதற்குத் தந்தை அனுமதிப்பாரா? ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன.

தயங்கித் தயங்கிக் கேட்டார். ஆச்சரியமூட்டும் வகையில் ராபர்ட் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் முழுப் பணத்தையும் தர முடியாது எனச் சொல்லிவிட்டார். கேனரி தீவுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதிகம் செலவாகும். நான் எனது பங்காக சிறிய தொகையைத் தருகிறேன். மீதிச் செலவுகளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். உனக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்துக்கொள். இன்னும் ஒருவருட காலம் இருக்கிறது. அதற்குள் வேண்டிய ஏற்பாடுகளை செய் என்று அறிவுறுத்தினார்.

டார்வினுக்கு உற்சாகமாக இருந்தது. பாதி கிணறு தாண்டியாயிற்று.

அடுத்து, கப்பல் நிறுவனங்களிடம் விசாரிக்க வேண்டும். பல இடங்களில் எறி இறங்கினார். எவ்வளவு செலவாகும்? எத்தனை நாட்கள் பயணிக்க நேரிடும்? எங்கே தங்குவது? பல முகவர்களைச் சந்தித்துப் பேசினார்.

மனதுக்குள் பயணம் பற்றிய சித்திரம் வளர்ந்துகொண்டே இருந்தது. கடல் அலைகளைக் கப்பல் கிழித்துக்கொண்டு செல்லும் காட்சிகள் கற்பனையில் தோன்றி மறைந்தன. பெரிய கனவொன்று உருகொண்டு வந்தது.

0

ஏப்ரல் 22. இங்கிலாந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. மக்கள் போராட்டத்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பீரங்கிகள் முழங்கின. டார்வின் எந்தச் சலனமும் இல்லாமல் கேம்பிரிட்ஜுக்குச் சென்று தம் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின், நேராக ஹென்ஸ்லோவைச் சந்தித்து பயண ஏற்பாடுகளை விவரித்தார். ஹென்ஸ்லோ டார்வினைப் புவியியல் வகுப்புகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார்.

‘தீவுகளை ஆராய்வதற்கு புவியியல் ஞானம் அவசியம். உடனே செட்க்விக்கிடம் சென்று உன் பயணத் திட்டம் பற்றிச் சொல். அவர் உதவுவார்.’

செட்க்விக்குக்கு டார்வினின் திட்டத்தைக் கேட்டவுடன் வியப்பாக இருந்தது. வந்த புதிதில் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிய மாணவன், இன்று இயற்கை ஆர்வலராக உலகை வலம் வர நினைக்கிறானே! வரும் வெளிக்கிழமையில் இருந்து பாடத்தைத் தொடங்கலாம் என அனுப்பி வைத்தார்.

இருவரும் புவியியல் பாடங்களை லண்டனில் இருந்து ஆரம்பிக்க முடிவு செய்தனர். பின் அங்கிருந்து கிளம்பி மலைகளும் காடுகளும் நிரம்பிய வட இங்கிலாந்துக்குச் செல்லலாம் எனத் திட்டம்.

முதல் வேளையாகப் பாறைகளை அளவிட உதவும் கருவியான சாய்வுமானியை (Clinometer) வாங்கிக்கொண்டனர். பின், சுற்றி இருக்கும் மலைத் தொடர்களுக்குச் சென்று, சாய்வுமானியை எப்படிப் பயன்படுத்துவது என்று செட்க்விக் டார்வினுக்குப் பயிற்றுவித்தார்.

செட்க்விக்கின் பாடங்கள் டார்வினை ஆச்சரியத்தில் லயிக்க வைத்தன. அறிவியலை இப்படி ஆழமாகவும் ஆச்சரியமூட்டும் வகையிலும் சொல்லித் தர முடியுமா? அதிசயித்துப்போனார் டார்வின்.

அடுத்து, இருவரும் லண்டனில் இருந்து புறப்பட்டு வேல்ஸுக்குச் சென்றனர். அங்கே இருந்த பழைமை வாய்ந்த பாறைகளை ஆராய்ந்தனர். புதைபடிமங்கள் அதிகம் காணப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். பாறைகளின் வகைகளை எப்படி அடையாளம் காண வேண்டும், பாறை அடுக்குகளை எப்படிப் பயில வேண்டும் என்பது போன்ற புவியியல் ஞானங்கள் டார்வினுக்குப் போதிக்கப்பட்டன.

கொஞ்சம் கொஞ்சமாக புவியியலின் நெளிவு சுளிவுகள் எல்லாவாற்றையும் கற்றுக்கொண்டார் டார்வின். பாறைகளில் இருந்து பெறப்படும் சிறுசிறு கூறுகளை எல்லாம் இணைத்து எப்படிப் பெரும் சித்திரத்தை வரைய வேண்டும் என அறிந்துகொண்டார். பாறைகளை வைத்து பூமியின் வரலாற்றை அறியும் கலையில் தேறினார்.

பாறைகளை ஆராயும்போது நிலத்தில் புதைந்திருந்த பண்டைய பாலூட்டிகளின் எலும்புகள் டார்வினுக்குக் கிடைத்தன. குறிப்பாக, காண்டாமிருகங்களின் பற்கள் நிறைய காணப்பட்டன. அப்போது வேல்ஸில் காண்டாமிருகங்கள் கிடையாது. ஆனால் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே அவருக்கு வியப்பாக இருந்தது. இங்கே இங்கிலாந்திலேயே இத்தனை உயிர்படிமங்கள் கிடைக்கின்றன என்றால் உயிரினங்களின் உறைவிடம் என அறியப்படும் ஆப்ரிக்காவில் எவ்வளவு கிடைக்கும்?

நினைக்கும்போதே வியப்பாக இருந்தது. பயணத்தின் மீதான வேட்கை கூடிக்கொண்டே சென்றது. கிளம்புவதற்கு ஆறு மாதங்கள் இருந்தன. அத்தனை நாட்களும் ஒரு நொடியில் ஓடிவிடாதா என ஏங்கினார். ஆனால் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு கதவாக அடைபடத் தொடங்கியது.

முதலில் அவர் பெரிதும் எதிர்பார்த்த ஹென்ஸ்லோ பயணத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஹென்ஸ்லோ தம்பதிக்குக் குழந்தை பிறந்ததிருந்தது. தந்தையானவுடன் பொறுப்புகள் கூடின. இந்தச் சமயத்தில் பயணம் தனக்குச் சரிப்பட்டு வராது என மறுத்துவிட்டார்.

ஆனால் இதைவிட மோசமான சம்பவம் அடுத்து அரங்கேறியது. டார்வின் செட்க்விக்குடனான புவியியல் பயணத்தை முடித்துவிட்டு கேம்பிரிட்ஜ் திரும்ப இருந்தபோது, அவரது நண்பர் ராம்ஸே இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது.

டார்வின் உடைந்தே போனார். அவரால் நம்பவே முடியவில்லை. போகும்போது நலமுடன் இருந்தாரே. திரும்பியவுடன் வந்து பார் என வழி அனுப்பினாரே. இப்போது வருவதற்குள் சென்றுவிட்டாரே? துக்கம் வாட்டியது.

நண்பனின் மரணத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கேம்பிரிட்ஜ் திரும்பலாம் என்று இருந்தவர், கடைசி நேரத்தில் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டுக்குச் சென்றுவிடலாம் என முடிவு செய்தார். சகோதரிகளுடன் நேரம் செலவிட்டால் மனம் ஆறுதலடையும் எனத் தோன்றியது.

வேல்ஸில் இருந்து நேராக சொந்த ஊரான ஷ்ரூஸ்பரிக்குக் கிளம்பினார். போகும் வழியெல்லாம் அவர் மனம் சஞ்சலத்தில் இருந்தது. எவ்வளவு ஆசையாகத் திட்டமிட்ட பயணம். இப்படி முடிந்துவிட்டதே. நான் அதிகம் விரும்பிய ஹென்ஸ்லோ, ராம்ஸே இருவருமே வர முடியாமல் ஆகிவிட்டது. நாம் மட்டும் செல்ல வேண்டுமா? அப்படி சென்றாலும் நம் மனம் ஆய்வுகளில் நிலைக்குமா? முடியவே முடியாது.

பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தார். வீட்டை அடைந்தவுடன் பயணம் பற்றிய அனைத்து குதூகலமும் அடங்கியிருந்தது.

பலவீனமாக வீட்டுக்குள் நுழைந்தார். சகோதரிகள் இருவரும் டார்வினை வரவேற்றனர். அவருக்குக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகக் கையில் கொடுத்தனர். சோர்வுடன் கடிதத்தைப் பிரித்தார். ‘லண்டனில் இருந்து.. ஹென்ஸ்லோ எழுதிக்கொள்வது…’

டார்வினுக்குப் பெரிதாய் ஆர்வமில்லை. வேறு என்ன இருக்கும்? பயணம் ரத்து. அதானே? அதைத்தான் நானே முடிவு செய்துவிட்டேனே. இப்போதைக்கு எந்தப் பயணமும் வேண்டாம். தேர்வு வருகிறது. அதற்குத் தயாராகப்போகிறேன். தேர்ச்சி பெற்று பாதிரியாராகி…

மனதில் ஏதேதோ எண்ணங்களை ஓடவிட்டபடி கடிதத்தில் எழுதியிருப்பதைப் படித்த டார்வினுக்கு தலை சுற்றியது. ஆம், கேனரி தீவுகள் பயணத் திட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் கடிதம் அதைப் பற்றியது அல்ல.

‘உலகை அளக்கப் புறப்படும் பீகில் கடற்பயணத்தில் உனக்கொரு இடம் கிடைத்திருக்கிறது. உடனே தயாராகு டார்வின்’ என எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *