‘இங்கிலாந்தில் இருந்து புறப்படும் கப்பல், தென் அமெரிக்கக் கண்டத்தினை ஆராயச் செல்கிறது. கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஜ்ராயின் துணைக்கு ஓர் ஆள் வேண்டும். உட்கார்ந்து கதைகள் பேச, விஷயங்களை விவாதிக்க ஒரு துணை. அவ்வளவுதான். ஆனால் அந்த நபருக்கு இயற்கையில் ஆர்வம் இருக்க வேண்டும். இயற்கையை ஆராயத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பயணம். ஒரு மாதத்தில் கப்பல் கிளம்புகிறது. ஃபிட்ஜ்ராய் எதிர்பார்ப்பது துடிப்பான ஓர் இளைஞரை. அதற்கு நீதான் சரியான ஆள் எனத் தோன்றுகிறது. அதனால்தான் உன்னை அழைத்திருக்கிறார்கள். உடனே சம்மதம் சொல் டார்வின்’.
ஹென்ஸ்லோவின் கடிதத்தைப் படித்த டார்வினுக்குக் கைகால் புரியவில்லை. வந்திருக்கும் கடிதம் நிஜம்தானா? அரசு சார்பில் உலகைச் சுற்றப்போகும் கப்பலுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேனா? ஆனால் நான் ஒன்றும் ஆய்வாளன் கிடையாதே. மாணவன்தானே! பிறகு ஏன் என்னை அழைக்க வேண்டும்?
உண்மையில் அது டார்வினுக்கு வந்த பிரத்தியேக அழைப்பு கிடையாது. கேம்பிரிட்ஜில் ஹென்ஸ்லோவின் நண்பராக ஜார்ஜ் பீகாக் என்பவர் இருந்தார். அவருடைய நண்பர் பிரான்சிஸ் பியூஃபோர்ட். அவர்தான் கப்பலின் வரைப்பட அதிகாரி. அவர்தான் ஃபிட்ஜ்ராயின் துணைக்கு ஓர் இயற்கை ஆய்வாளர் வேண்டும் என்று கேட்டிருந்தார். உண்மையில் இந்த அழைப்பு ஹென்ஸ்லோ உட்பட பலருக்கும் சென்றிருந்தது. ஆனால் யாரும் செல்ல முடியாத சூழல். இதனால் டார்வினுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஹென்ஸ்லோதான் டார்வினைப் பரிந்துரைத்திருந்தார்.
டார்வின் உற்சாகம் கொண்டார். வாழ்வில் எப்போதாவது கிடைக்கும் அரிய வாய்ப்பு. தவற விட முடியுமா? நிச்சயம் போயாக வேண்டும். அப்படியென்றால் திருச்சபைத் தேர்வு? அது கிடக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தந்தை ஒப்புக்கொள்வாரா? போகக்கூடாது என்று சொல்லிவிட்டால்? படிப்புதான் முக்கியம் என்று மறுத்துவிட்டால்?
ராபர்ட்டும் அதைத்தான் சொன்னார்.
‘என்னால் அனுமதிக்க முடியாது’.
‘ஹென்ஸ்லோ, பீகாக் யார் சொன்னாலும் என் மனதை மாற்ற முடியாது. இந்தப் பயணம் அர்த்தமில்லாதது. ஆபத்தானது. இந்தப் பயணத்தால் எதையும் சாதிக்க முடியாது. கடலோடிகளுடன் உலகைச் சுற்றி வருவது உன்னைத் திருச்சபை வாழ்வுக்குத் தகுதியில்லாதவனாக மாற்றிவிடும். உனக்கென நல்ல வாழ்க்கை அமையாமல் போய்விடும். நீ போகக்கூடாது. உட்கார்ந்து பரீட்சைக்குப் படி.’
டார்வின் எவ்வளவு எடுத்து சொல்லியும் ராபர்ட் கேட்கவில்லை. அவருக்குப் பயணத் திட்டத்திலேயே ஏதோ பிரச்னை இருப்பதாகத் தோன்றியது. அரசுப் பயணம் என்றால் யாராவது கடைசி நேரத்தில் இயற்கையாளரை நியமிப்பார்களா? அப்பறம், கேப்டன் பிட்ஜ்ராய். அவனுக்கு என்னமோ 26 வயதாமே? அந்த வயதில் ஒருவனால் கப்பலைச் செலுத்த முடியுமா? தேவையில்லாமல் சென்று மாட்டிக்கொள்ளாதே.
டார்வினால் தாங்க முடியவில்லை. நான் என்ன சுற்றுலாவா செல்கிறேன்? இயற்கையை அறிவதற்குத்தானே இந்தப் பயணம். இதில் என்ன தவறு? செலவுக்கூட உங்களிடமா பணம் கேட்டேன்? அரசே பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறது. எனக்கு வேண்டியதெல்லம உங்கள் சம்மதம் மட்டும்தான். அதைத் தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். நான் போகத்தான் போகிறேன்.
மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஆனால் செய்யவில்லை. தந்தையின் விருப்பத்தை மீறி செல்வதற்கு டார்வினுக்குத் துணிச்சல் இல்லை. வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.
மனம் கனத்தது. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் எனத் தோன்றியது. அப்போது டார்வினின் தாய்வழி மாமா ஜோஸ் வெட்ஜ்வுட்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவருக்குச் சில மருந்துகளைக் கொடுத்தனுப்ப வேண்டும் என ராபர்ட் எண்ணினார். தானே அந்த மருந்துகளை எடுத்துச் செல்வதாக டார்வின் புறப்பட்டார்.
அப்போதுதான் கவனித்தார். மருந்துகளுக்கு மத்தியில் ஒரு கடிதம். ராபர்ட் ஜோஸுக்கு எழுதியது. பிரித்துப் படித்துப் பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது.
‘டார்வின் பயணம் செல்வதில் ஆர்வமாக இருக்கிறான். ஆனால் எனக்கு விருப்பமில்லை. அந்தப் பயணம் முட்டாள்தனமானது என எண்ணுகிறேன். இருந்தாலும் உன் கருத்தையும் சொல். உனக்குச் சரியென்று தோன்றினால் நானும் சம்மதிக்கிறேன்.’
டார்வினுக்கு வியப்பாக இருந்தது. நிஜமாகவா? ஜோஸ் மாமா சொன்னால் தந்தை கேட்டுக்கொள்வாரா? ஜோஸ் மாமா ஒன்றும் கெடுபிடி ஆள் கிடையாது. அவருக்குப் பயணங்கள் பிடிக்கும். நான் செல்வதற்கும் ஒப்புக்கொள்வார். அவர் எடுத்துச் சொன்னால் தந்தையும் ஒப்புக்கொள்வதாகக் கூறுகிறார். இப்போது மாமாவின் கையில்தான் எல்லாமும் இருக்கிறது. நேராக மாமாவிடம் சென்று பேசுவோம் என விரைந்தார்.
ஜோஸ் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. உடனே சம்மதம் தெரிவித்தார். கையோடு ராபர்ட்டுக்கு கடிதமும் எழுதினார்.
‘உங்கள் கவலை எனக்குப் புரிகிறது ராபர்ட். ஆனால் இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. இந்தப் பயணம் டார்வினுக்குப் புதிய ஞானத்தை வழங்கும். புதிய பார்வையைத் தரும். உலக அனுபங்களே ஒருவரைச் சிறந்த மனிதராக்கும். அதனால் இந்தப் பயணம் டார்வினின் திருச்சபை வாழ்வை செம்மையாக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் மில்லை. எனக்கு டார்வின் பயணம் செல்வதில் பூரண சம்மதம். இருந்தாலும் இறுதி முடிவை நீங்களே எடுக்க வேண்டும்’.
அவ்வளவுதான். இடையூறுகள் அனைத்தும் காணாமல் போகின. ராபர்ட்டும் ஒப்புக்கொண்டார். பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருவதாகவும் வாக்களித்தார்.
டார்வின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். ஒருநொடியில் எல்லாம் இப்படி மாறிவிட்டதே. உண்மையில் எனக்கான விதி இந்தப் பயணம்தான் போலிருக்கிறது. உடனே ஃபிட்ஜ்ராய்க்குச் சம்மதம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதினார். உள்ளுக்குள் பயமாக இருந்தது. நான் தாமதமாக்கிய நேரத்திற்குள் வேறு யாராவது நியமிக்கப்பட்டிருந்தால்? இல்லை. இருக்காது. பீகாக்தான் சொல்லியிருக்கிறாரே. உனக்காக மட்டுமே அந்த இடம் என்று. அதனால் நம்பிக்கையுடன் இருந்தார்.
ஹென்லோவைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நேராக கிளம்பிச் சென்றார். ஹென்ஸ்லோ உற்சாகத்துடன் வரவேற்றார். கிளம்புவதற்கு முன் ஃபிட்ஜ்ராயிடம் சென்று அறிமுகம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்.
ஃபிட்ஜ்ராய் லண்டனில் இருந்தார். ஓரிரு நாட்களில் சென்று அவரை சந்திக்கலாம் என்று டார்வினுக்குத் திட்டம். அதற்குள் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று வீடு திரும்பினார். அங்கே அவரது மேஜையில் மற்றொரு கடிதம். பிட்ஜ்ராயிடம் இருந்து.
‘உன் கடிதம் பெற்றேன் டார்வின். என்னை மன்னித்துவிடு. யாரோ கப்பலுக்கு உன்னைத் தேர்வு செய்துவிட்டதாக தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்குத் துணை ஒருவர் வேண்டும் என்று கேட்டது நிஜம்தான். ஆனால் என் நண்பர் ஒருவருக்குத்தான் அந்த இடத்தைத் தரலாம் என இருக்கிறேன். அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் ஏற்கவில்லை என்றால் உன்னை அழைத்துச் செல்கிறேன். குழப்பத்திற்கு மன்னித்துவிடு. இப்படிக்கு ஃபிட்ஜ்ராய்.’
அவ்வளவுதான். டார்வினுக்கு எல்லாமே சுக்குநூறாக உடைந்ததுபோல் ஆனது.
(தொடரும்)