செப்டெம்பரில் கிளம்புவதாக இருந்த கப்பல், சில காரணங்களுக்காகத் தாமதமாகி டிசம்பர் 27, 1831 அன்றுதான் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டது. டார்வின் குதூகலத்துடன் கிளம்பினார். சாகசப் பயணம் என்கிற எண்ணம் அவரைப் பரவசப்படுத்தியது. உற்சாகத்துடன் இங்கிலாந்துக்கு விடை கொடுத்தார்.
ஆனால் கப்பல் கிளம்பிய மறுநாளே யதார்த்தம் முகத்தில் அறைந்தது. டார்வின் அடுத்த பத்து நாட்களுக்கு நகரகூட முடியாமல் படுக்கையில் விழுந்தார். வாந்தியும் மயக்கமும் அவரைப் படுத்தி எடுத்தன. அறையை விட்டு வரவே முடியவில்லை. வெறும் பிஸ்கட்டையும் உலர் திராட்சையையுமே தின்று சமாளித்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் ஃபிட்ஜ்ராய் மாலுமிகளை வாட்டி வதக்கினார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கடமையைச் செய்யாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகளுக்குக் கசையடி வழங்கினார். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 134 கசையடிகள். இந்தக் காட்சிகளும் டார்வினுக்குக் திகிலைக் கொடுத்தன.
அப்போதுதான் கடல் பயணத்தின் கொடூரமும் கேப்டனின் குரூரமும் டார்வினுக்கு உறைத்தது.
1832 புத்தாண்டு பிறந்தபோது உலகமே கொண்டாடியது. டார்வினோ துவண்டு கிடந்தார். இந்தப் பயணத்திற்கு வந்திருக்கவே கூடாதோ, தந்தை சொல்வதைக் கேட்டு வீட்டிலேயே இருந்திருக்க வேண்டுமோ என்கிற எண்ணம்தான் அவர் மனதில் ஓடியது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மனமும் உடலும் தெளிவடைந்து நம்பிக்கை பிறந்தது.
கப்பல் முதல் நிறுத்தமாக ஆப்ரிக்காவுக்கு 300 மைல் தொலைவில் கேப் வெர்டே தீவுகளிலுள்ள செயின்ட் ஜாகோ எனும் இடத்தில் நின்றது. அந்தத் தீவு முழுவதுமே எரிமலைப் பாறைகளால் ஆனது. கருநிறத்தில் மிளிர்ந்தது. ஆச்சரியத்துடன் கால் வைத்த டார்வினுக்கு இங்கிலாந்தில் காணக் கிடைக்காத தாவர வகைகள் எல்லாம் கண்களில் பட்டன. சின்னக் குழந்தையைப் போல குதூகலத்துடன் தொட்டு மகிழ்ந்தார். வெப்ப மண்டல உயிரினங்களைப் பார்த்துப் பரவசப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அவர்கள் தீவில் இருந்த ஊர்களுக்குள் செல்லத் தொடங்கினர். டார்வினுக்கு உதவுவதற்காக உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார். அவர் டார்வினிடம் துப்பாக்கியை எடுத்து வரும்படி கூறினார். டார்வின் ஏன் என்று வினவியதற்கு, இங்கு கருப்பினத்தவர்கள் அதிகம் எனப் பதிலளித்தார். இந்தப் பதில் டார்வினைத் திடுக்கிட வைத்தது. டார்வின் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் விலங்குகளை வேட்டையாட மட்டுமே. மனிதர்களை, குறிப்பாகக் கருப்பினத்தவர்களை கொல்ல துப்பாக்கி என்ற எண்ணம் அவருக்கு அதிர்ச்சியூட்டியது. அந்த உதவியாளர் உள்ளூர் மக்களைப் பற்றி பயமுறுத்தும் கதைகளையே சொல்லி அழைத்துச் சென்றார். ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது. அவர் சென்ற ஊர்களில் இருந்த குழந்தைகள் எல்லாம் டார்வின் வியக்கும்விதத்தில் புத்திசாலிகளாக இருந்தனர். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டறிந்தனர். அவர்களுடைய ஆர்வம் டார்வினையும் தொற்றிக்கொண்டது. ஒருமாதம் அந்தத் தீவில் தங்கி ஆய்வுகள் செய்தார் டார்வின்.
பிறகு கப்பல் மீண்டும் அடுத்த நிறுத்தம் நோக்கிப் புறப்பட்டது. கடலில் பயணிக்கும்போதே கடல் உயிரிகளைப் பிடிப்பதற்கு சிறிய வலை ஒன்றை வைத்திருந்தார் டார்வின். அதை வைத்து செல்லும் வழியிலேயே தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
பிப்ரவரி 16 அன்று கப்பல் நிலநடுக்கோட்டைக் கடந்தது. இதைக் கொண்டாடும் வகையில் அன்றைக்கு வித்தியாசமான சடங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கப்பலில் டார்வினையும் சேர்த்து மொத்தம் 32 பேர் முதல்முறை கடல் பயணம் செய்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் அந்தச் சடங்கு நடந்தது. முதலில் அவர்களது கண்கள் கட்டப்பட்டன. பிறகு முகத்தில் வண்ணங்களைப் பூசினர். அப்படியே கப்பலில் ஒரு தொட்டியில் இருந்த கடல் நீரில் அனைவரையும் முக்கி எடுத்தனர். இதுதான் வரவேற்புச் சடங்கு என்றார் ஃபிட்ஜ்ராய். அன்றைக்கு கப்பலின் கேப்டன் வழக்கத்திற்கு மாறாகக் கலகலப்பாக எல்லோருடனும் கொண்டாடினார்.
0
அடுத்ததாக பீகில் பிரேசில் நோக்கிப் பயணித்தது. பிப்ரவரி 28 அன்று ஆல் செயின்ட்ஸ் விரிகுடாவில் நின்றது. டார்வின் முதன்முதலில் தென் அமெரிக்கக் கண்டத்தில் காலடி எடுத்து வைத்தார். அவர்கள் சென்றது மிகச் சிறிய ஊர். ஆனால் அது திருவிழாக்காலம். மக்கள் தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். டார்வின் உற்சாகத்துடன் ஊருக்குள் நுழைந்தார். அங்கிருந்த தாவரங்கள், பூக்கள், சிறு பூச்சிகள் அனைத்தும் டார்வினை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அத்தனை அழகிய தோற்றங்களில், பல வித குணங்களில் அவை இருந்தது டார்வினை உற்சாகம் கொள்ள வைத்தது. ஆனால், அவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போதுதான் அந்த அழகிய ஊருக்கு மறுபக்கமும் இருப்பது வெளிப்பட்டது.
அன்றைக்கு டார்வினும் அதிகாரிகளும் ஒரு வியாபாரியின் வீட்டில் தங்கும்படி ஏற்பாடு. சென்று பார்த்தால், முழுக்க முழுக்க அந்த வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் கருப்பின அடிமைகள். குறைந்த விலைக்கு ஆடு மாடுகளைவிட அடிமைகள்தான் கிடைப்பார்கள் என்றார் அந்த வியாபாரி. அதிகாரிகள் கொண்டுச் சென்ற சுமைகளை எல்லாம் அவர்கள்தான் சுமந்து வந்தனர். வண்டிகள்கூட இல்லை. அடிமை வாழ்வை மறக்கப் பாடல்கள் பாடிக்கொண்டு அவர்கள் நடந்து வந்தனர். டார்வினுக்கு அந்த ஊரில் இருந்த நாட்கள் எல்லாம் அடிமைத்தனம் பற்றிய எண்ணங்களே மனதில் ஓடின.
மீண்டும் அவர்கள் கப்பலுக்குத் திரும்பியபோது அடிமைத்தனம் சரியா, தவறா என்பது பற்றிய விவாதம் எழுந்தது. ஃபிட்ஜ்ராய் அடிமைமுறைக்கு ஆதரவாகப் பேசினார். பிரேசில் மக்கள் அடிமைகளைப் பண்புடன் நடத்துவதாக வாதிட்டார். டார்வினோ அடிமைமுறையை முற்றிலும் ஒழிப்பதே ஒரே தீர்வு என்று சண்டையிட்டார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்தது. ஒருகட்டத்தில் ஃபிட்ஜ்ராய் கோபத்துடன் வெளியேறினார்.
அன்றைக்கு கப்பல் முழுவதுமே டார்வினுக்கும் ஃபிட்ஜ்ராய்க்கும் இடையில் நடைபெற்ற விவாதம்தான் பேசுபொருளானது. படை வீரர்கள்கூட டார்வின் ஃபிட்ஜ்ராயை எதிர்த்துப் பேசியதை வியந்து பார்த்தனர். ஃபிட்ஜ்ராய் டார்வினை கப்பலில் இருந்து துரத்திவிடுவார் என்று பலரும் முடிவு செய்தனர். ஆனால் ஃபிட்ஜ்ராய் அப்படிச் செய்யவில்லை. பணியாள் ஒருவரை விட்டு தன் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். டார்வின் தொடர்ந்து கப்பலில் இருக்கலாம் என்று உறுதியளித்தார்.
0
ஏப்ரல் 5 அன்று பீகில் ரியோ துறைமுகத்தில் நின்றது. டார்வின் சில அதிகாரிகளுடன் நூறு மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு எஸ்டேட்டுக்குள் சென்றார். அந்த எஸ்டேட்டின் உரிமையாளர் மிகவும் நாணயத்துடன் டார்வினை அழைத்துப் பேசினால். ஆனால் உள்ளே சென்றால் மீண்டும் அடிமைகள். அந்த உரிமையாளர் அடிமை ஒருவர் இழைத்த குற்றத்திற்காக அவரது குழந்தையை விற்கப்போவதாக மிரட்டினார். மேலும் அன்றைக்கு அடிமை வணிகமும் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் என முப்பது கருப்பின அடிமைகள் விற்கப்பட்டனர். பெண்கள் பலர் அவர்களது கணவர்களைப் பிரிந்து கண்கானா இடங்களுக்குச் செல்ல நேர்ந்தது. டார்வினுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி ஒருவரால் தன்னிடம் கண்ணியமாகவும் அதேசமயம் மற்றொருவரிடம் கொடூரனாகவும் நடந்துகொள்ள முடியும் என்று தோன்றியது. மனிதர்கள், குறிப்பாக ஐரோப்பியர்களின் இரட்டை மனநிலையை டார்வின் வெறுத்தார்.
ஏப்ரல் 25 அன்று டார்வின் போடாபோகோ விரிகுடாவில் சில உயிரிகளைச் சேகரிக்கச் சென்றார். உடன் யாரும் வரவில்லை. கப்பலில் இருந்து படகில் அவர் தனியாகப் பயணித்தபோது ராட்சத அலை ஒன்று வீசியது. படகு தலைகீழாக கவிழ்ந்தது. அவர் கொண்டு சென்ற புத்தகங்கள், கருவிகள், துப்பாக்கி உறைகள் எல்லாம் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. எப்படியோ சமாளித்து கரை சேர்ந்தார். கப்பலுக்குத் திரும்பலாம் என்று நினைத்தால் கப்பல் ஏற்கெனவே அங்கிருந்து கிளம்பி இருந்தது.
தனியாக அவர் தங்க நேர்ந்தது. அங்கேயே இருந்து மெல்லுடலிகள், நிறம் மாறும் கணவாய் மீன்கள் போன்றவற்றைக் குறிப்பு எடுத்துக்கொண்டார். அதேபோல கடல்புறத்தில் இருந்து உள்ளே சென்றவுடன் அங்கிருந்த காட்டில் புதுமையான குரங்குகள், கிளிகள், தவளைகள், ஒளிரும் புழுக்கள், பல்லிகள் எனப் பலவற்றை கண்டு, அவற்றின் குணாம்சங்களைப் பதிவு செய்தார்.
கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து பீகல் திரும்பி வந்தது. கப்பலைப் பார்த்த உற்சாகத்தில் உள்ளே சென்றவருக்குத் திடுக்கிடும் செய்திகள் காத்திருந்தன.
டார்வின் இல்லாத ஒருவார காலத்தில் கப்பலில் திடீரெனப் பரவிய கடும் காய்ச்சலால் மூன்று பேர் இறந்துவிட்டனர். அதில் ஒருவர் டார்வினுக்குச் சமீபத்தில்தான் நெருங்கிய நண்பராகி இருந்தார். இதனால் கப்பலில் இருந்த பலரும் பயணத்தை முடித்துவிடலாம் என்று குரல் கொடுக்க, ஃபிட்ஜ்ராய் ஒப்புக்கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் அரசு தேர்வு செய்து அனுப்பிய மருத்துவரும் இயற்கை ஆய்வாளருமான ராபர் மெக்கார்மிக், கேப்டனின் அனுபவமின்மைதான் இத்தகைய மரணங்களுக்குக் காரணம் எனச் சண்டையிட, ஃபிட்ஜ்ராய் அவரைக் கப்பலில் இருந்து வெளியேற்றினார். இப்போது கப்பலில் இருந்தது ஒரே இயற்கையாளர்தான். டார்வின்.
உண்மையில் கப்பலில் எல்லோருமே அசெளகரியத்தில்தான் இருந்தனர். ஃபிட்ஜ்ராய் எல்லோரிடமும் கடுமையாக எரிந்துவிழுந்தார். டார்வின் மட்டுமே எந்தத் தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமாக உலாவினார். டார்வினுக்கு மட்டுமே கப்பலில் விரும்பிய இடங்களுக்குச் சென்று, விரும்பிய நபர்களுடன் பேசுவதற்கு அனுமதி இருந்தது. மற்றவர்கள் எல்லாம் அடிமைகள்போல நடத்தப்பட்டனர்.
0
ஜூலை 26 பீகல் மாண்டேவிடியோவில் நின்றது. அங்கே புரட்சி யுத்தம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் துருப்புகள் அங்கே தங்கியிருந்த இங்கிலாந்து வணிகர்களைப் பாதுகாக்கச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போரில் கருப்பின வீரர்களும் அரசுக்கு எதிராகக் கிளம்பி இருந்தனர். அங்கிருந்த கோட்டை ஒன்று கருப்பின வீரர்களால் கைப்பற்றப்பட்டது. அந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்ற அரசுப் படை சண்டையிட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு உதவுவதற்கு பிரிட்டிஷ் படை வருவதாக ஏற்பாடு. அதுவரை கப்பலில் இருந்த கடற்படை வீரர்களைத் தங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார் அரசு தளபதி ஒருவர்.
ஃபிட்ஜ்ராய் கப்பலில் இருந்து ஐம்பத்தி இரண்டு வீரர்களை கோட்டையைப் பாதுகாக்கும்படி அனுப்பினார். டார்வினும் அவர்களுடன் துப்பாக்கிகளையும் வாள்களையும் தூக்கிக்கொண்டு சென்றார். புரட்சியாளர்கள் அங்கிருந்த ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றிருந்தனர். வீதிகளில் பீரங்கிகள் அணிவகுத்து நின்றன. கைதிகளை எல்லாம் விடுவித்து அவர்களுக்கும் ஆயுதங்கள் தரப்பட்டிருந்தன. ஆனால் பீகில் வீரர்கள் பெரிதாக மெனக்கெடவில்லை. சில மணி நேரங்களிலேயே கோட்டையைக் கைப்பற்றி வாசலில் விருந்து உண்ண ஏற்பாடு செய்தனர். டார்வின் மட்டும் சண்டை முடிந்தவுடன் கப்பலுக்குத் திரும்பிவிட்டார். விரைவிலேயே பிரிட்டிஷ் ஆதரவு படை வந்து சேர, வீரர்கள் கப்பலுக்குத் திரும்பினர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் புரட்சியாளர்கள் வந்து துப்பாக்கி சண்டை ஆரம்பித்தது.
இந்தமுறை கப்பல் நிற்கவில்லை. அங்கிருந்து நகர்ந்தது. டார்வினுக்கு அங்கு அரங்கேறிய காட்சிகள் சில கேள்விகளை விதைத்தன. மக்கள் பல இடங்களில் சுதந்திரத்திற்காகச் சண்டையிடுவது நியாயம்தான். ஆனால் குழப்பமும் கலவரமும் சூழந்த சூழ்நிலையில் சுதந்திரமாக வாழ்வதைவிட அமைதியாக சர்வாதிகாரத்திலேயே வாழ்ந்துவிடலாம் இல்லையா என்கிற எண்ணம் டார்வின் மனதில் எழுந்தது.
0
ஆகஸ்ட் 19 அன்று கப்பல் வெள்ளை விரிகுடா (Bahia Blanca) அருகே வந்தது. அங்கே கூட்டம் கூட்டமாக முள் தாடை புழுக்கள் காட்சி தந்தன. அவற்றின் முட்டைகளைச் சேகரித்து கப்பலிலேயே ஆய்வு செய்தார் டார்வின். அவருக்கு எடின்பர்க்கில் கிரான்டுடன் இருந்த நினைவுகள் வந்துபோயின. அவர் மீண்டும் குழாயுடலிகளை ஆராய நேர்ந்தது. அதேபோல தட்டைப் பாறைகளையும் ஆராய்ந்தார். அந்த உயிரிகள் ஆயிரக்கணக்கான தனித்தனி உயிரிகளால் உருவாகியுள்ளன. ஆனால் ஒற்றைக் கருமுட்டையைக் கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன. அப்படியென்றால் இயற்கையில் ‘தனித்தன்மை’ என்பதற்கு அர்த்தம் என்ன என்கிற கேள்வியை டார்வின் எழுப்பினார்.
டார்வின் தென் அமெரிக்க நிலங்களை ஆய்வு செய்தபோது அவர் சென்ற இடங்களை எல்லாம் அவருக்கு முன்னமே பிரான்ஸைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்சைட் டி’ஆர்பிக்னி என்பவர் சில மாதங்கள் தங்கி ஆய்வு செய்திருந்தது தெரியவந்தது. இதைக் கேட்கும்போதே டார்வினுக்குக் கலக்கமாக இருந்தது. ஒன்று, டி’ஆர்பிக்னி தமக்கு முன்னமே சிறந்த விஷயங்களை எல்லாம் கண்டறிந்துவிடுவாரோ என்கிற அச்சம். இரண்டாவது பிரெஞ்சு அரசாங்கம் பிரிட்டிஷ் அரசைவிட அறிவியல் ஆய்வுகளுக்கு இத்தனை நிதியை ஒதுக்கி ஊக்கப்படுத்துகிறதே என்கிற ஆச்சரியமும்.
பீகில் பயணம் தொடங்கி ஒருவருடம் நிறைந்திருந்தது. கப்பல் இன்னமும் தென் அமெரிக்கக் கண்டத்தின் கால்வாசியைக்கூட ஆராயவில்லை. எப்போது முக்கியமான இடங்களில் காலடி எடுத்து வைப்போம் என ஏங்கிக்கொண்டிருந்தார் டார்வின். மேலும், கப்பலில் தொலைதூரம் செல்லச் செல்ல டார்வினை வீட்டு நினைவுகளும் வாட்டின. இங்கிலாந்தில் இருந்து கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன. இங்கிலாந்தின் அரசியல் நிலைமை, நோய்தொற்று, நண்பர்கள் பற்றிய தகவலகள் எல்லாமும் அவருக்குக் கடிதங்கள் மூலம் தெரிய வந்தன.
கேம்பிரிட்ஜ் நண்பர்களிடம் இருந்து வந்த கடிதம் ஒன்றில், அவர்கள் எல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டதாக எழுதப்பட்டிருந்தது. எல்லோரும் வேலை, திருமணம் என வாழ்க்கையில் ஒரு நிலைக்குச் சென்றுவிட, நாம் இப்படி சுற்றிக்கொண்டிருக்கிறோமே என்கிற எண்ணம் அவரை வாட்டியது. தான் விரும்பியபடி கிராமம் ஒன்றில் பாதிரியாராக வாழ முடியாதோ என்று வருத்தம் மனதில் குடிகொண்டது. அவர் வாழ நினைத்த அமைதியான வாழ்க்கை அவரை விட்டுப் போய்விடுமோ என அஞ்சினார். ஆனால் மறுபக்கம் அறிவியல் அவரை மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. குறிப்பாகத் தென் அமெரிக்க கண்டங்களில் அவர் கண்டடைந்த புதைபடிமங்களும், அவர் வாசித்த புத்தகங்களும் டார்வினுக்குள் உயிர்களைப் பற்றிய புதிய கேள்வியைத் தோற்றுவித்து, அவரது கண்டுபிடிப்பைப் சீர்ப்படுத்தி வந்தன.
(தொடரும்)