அந்தக் கடிதத்தைப் படித்தவுடன் டார்வின் துள்ளிக் குதித்தார். உடலெங்கும் உற்சாகம் கரைபுரண்டது. இத்தனை நாட்கள் பட்ட சிரமத்திற்கு எல்லாம் பதில் கிடைத்ததுபோலத் தோன்றியது. ஆம், பீகல் பயணத்தில் டார்வின் மேற்கொண்ட ஆய்வுகளுக்கான முதற்கட்ட பலன் அவரை வந்தடைந்தது.
டார்வின் தான் சேகரித்த உயிரினங்களை எல்லாம் இங்கிலாந்துக்கு ஹென்ஸ்லோவின் முகவரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். சில மாதங்கள் ஆகியும் ஹென்ஸ்லோவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சேகரிப்புகள் எல்லாம் என்ன ஆனது? கடலில் விழுந்துவிட்டதா? கைமாறி வேறு முகவரிக்குச் சென்றுவிட்டதா? இல்லை, தன்னுடைய மாதிரிகள் ஹென்ஸ்லோவுக்குத் திருப்தி அளிக்கவில்லையா? டார்வின் குழம்பிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் ஹென்ஸ்லொவிடம் இருந்து அந்தக் கடிதம் வந்தது. அவருடைய சேகரிப்புகள் அனைத்தும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்ததாக ஹென்ஸ்லோ கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் அனுப்பிய தாவரங்கள் பயனுள்ளதாக இருப்பதாகவும், புதைபடிமங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் எழுதியிருந்தார். ஆனால் இதுமட்டுமல்ல விஷயம். அடுத்து அவர் சொன்ன விஷயங்கள்தான் டார்வினைக் கனவுலகில் சஞ்சரிக்க வைத்தன.
டார்வின் அனுப்பிய புதைபடிமங்கள் பிரிட்டனின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஹென்ஸ்லோ குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக டார்வின் கண்டைந்த மெகாத்தீரியம் (megatherium) என்ற விலங்கின் புதைபடிமங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், ‘உன் பெயர் இறவாப் புகழ் பெறப்போகிறது’ என்றும் வாழ்த்தி இருந்தார்.
இதுதான் டார்வினைக் களிப்புகொள்ள வைத்தது. பீகல் பயணம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது. இந்த நாட்களில் டார்வின் கடுமையான உழைப்பை நல்கி இருந்தார். ஆனால் அவை எத்தகைய பலனைத் தரும் என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் இருந்தது. தான் சேகரித்த விஷயங்கள் உண்மையில் மதிப்பு வாய்ந்ததா? அல்லது வெற்று மாதிரிகளா? இத்தனை உழைப்புக்கும் பயனில்லாமல் போய்விடுமா? உள்ளுக்குள் பயம் வாட்டியது. இப்போது ஹென்ஸ்லோ அனுப்பிய கடிதம் அத்தனை சந்தேகங்களையும் தவிடுபொடியாக்கியது. தன் பணிகளில் அத்தனை நிறைவை டார்வின் உணர்ந்தார். இதே உற்சாகத்துடன் தன் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினார்.
0
பீகல், படகோனியாவை அடைந்தது. அங்கிருந்து டார்வின் குழுவினர் நிலத்திற்குள் பயணம் சென்றார். அப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளதாக்குகள் இருந்தன. அவற்றையொட்டி சமவெளிகளும் காணப்பட்டன. அங்கே ஆச்சரியம்படுவிதமான தொல்படிமங்கள் டார்வினுக்குக் கிடைத்தன. அவை, கடலில் வாழும் கிளிஞ்சல்களின் மிச்சங்கள். சரளைக் கற்களும் கிடைக்கப் பெற்றன. இங்குதான் கேள்வியே எழுந்தது. கடல்வாழ் உயிரிகளின் மிச்சங்கள் கிடைக்க அது, கடற்கரையை ஒட்டிய பகுதி கிடையாது. கடலில் இருந்து சுமார் 100 மைல்கள் தூரத்தில் உள்ள இடம். எங்கே எப்படி கிளிஞ்சல்கள் வந்தன? இவற்றுக்கும் இந்த நிலப்பரப்புக்கும் என்ன சம்மந்தம்?
ஃபிட்ஜ்ராய் ஒரு விளக்கம் கொடுத்தார். கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழிப் பேரலை தோன்றி நிலம் முழுவதையும் கடல் சூழ்ந்தது. கடல் நீர் வற்றியவுடன் இவை இங்கேயே புதைந்திருக்க வேண்டும் என்றார். ஆனால் டார்வினுக்கு அந்தப் பதில் உவப்பானதாக இல்லை. இந்த விளக்கம் பைபிளில் வரும் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இது சரியான பதிலா என்று தெரியவில்லை. மாற்றாக, சார்லஸ் லைல் எனும் விஞ்ஞானி கூறிய கூற்றுதான் சரியாகப்பட்டது.
சார்லஸ் லைல் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியலாளர். அவர் எழுதிய ‘Principles of Geology’ எனும் நூலைத்தான் கடற்பயணம் முழுவதிலும் டார்வின் படித்துக்கொண்டிருந்தார். அந்த நூலில் லைல் கடலில் இருந்து நிலம் வெளிவருவதற்கான சாத்தியம் இருப்பதாக ஒரு கூற்றை முன்வைத்தார். இத்தாலியில் கடலில் மூழ்கிய பழங்காலக் கோயில் ஒன்று திடீரென்று ஒரு பெருஞ்சீற்றத்தின்போது வெளிவந்தது. அப்படியாக கடலுக்கு அடியில் உள்ள நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துதான் நிலப்பரப்புகள் உருவாகி இருக்க வேண்டும் என்றார் லைல். டார்வினுக்கு அந்தப் பதில்தான் சரி என்று தோன்றியது. ஆனால் அதற்கான ஆதாரம் போதுமானதாக இல்லை.
0
கப்பல் போர்ட் ஃபெமின், மவுன்ட் சார்மியின்டோ ஆகியவற்றைக் கடந்து பசிபிக் கடலை அடைந்தது. அங்கிருந்து மத்திய சிலேவுக்குச் பயணித்தது. ஜூலை 23, வல்பரைசோவில் கப்பல் நின்றது. டார்வினுக்கு ஆண்டிஸ் மலைத் தோடரில் ஏற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆண்டிஸ் மலைத் தொடர் என்பது வெனிசுலாவின் வடக்கில் தொடங்கி கொலம்பியா, ஈகுவேடார், பெரு, பொலிவியா, அர்ஜெண்டினா, சிலே என விரியும் மலைத் தொடர். மொத்தம் 30 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் பரப்பளவு கொண்டது. அந்த மலைத்தொடரில் பயணிக்க வேண்டும் என்பது டார்வினின் அவா. அதற்காக அவர் தயாராகி வந்தார். கப்பல் வல்பரைசோவை அடைந்தவுடன் சில குதிரைகளுடன் கிளம்பிவிட்டார்.
ஆண்டிஸ் மலைத்தொடர் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது. ஆனால் பனிக்காலத்தில் மேலே ஏறுவது ஆபத்தானது என உள்ளூர் மக்கள் எச்சரித்தனர். அதனால் மலை அடிவாரத்தைப் பார்வையிடலாம் என்ற எண்ணத்தில் புறப்பட்டார் டார்வின். முதலில் அவர் சமவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியது இருந்தது. மலையில் ஏறத் தொடங்கும்போது அதிக அளவிலான எரிமலைப் பாறைகளைக் காண நேர்ந்தது.
ஆண்டிஸிலும் அவருக்கு நிறையப் புதைபடிமங்கள் கிடைத்தன. ஆனால் அங்கே கிடைத்தவையும்கூட கடல் உயிரிகளுடையதுதான். இது இன்னமும் டார்வினுக்கு ஆர்வத்தைத் தூண்டியது. சமவெளிகளில் சரி, மலைகளின் மேல் எப்படிக் கடல் உயிரிகள்? இந்த மலை கடலுக்கு அடியில் இருந்திருக்குமா? மேலும் ஆராயலாம் என்கிற ஆர்வம் வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவரை உடல் உபாதைகள் வாட்டத் தொடங்கின. திடீரென்று காய்ச்சலும் வயிற்றுபோக்கும் ஏற்பட, சோர்ந்துபோய் வல்பரைசோவுக்குத் திரும்பினார் டார்வின். அங்கேயே கிட்டத்தட்ட ஒரு மாதம் படுக்கையில் இருந்தார்.
டார்வினுக்கு உதவுவதற்காக கப்பலில் இருந்த வைத்தியர் ஒருவர் மருந்துகளுடன் வந்தார். ஆனால், அவருடன் அதிர்ச்சி செய்தி ஒன்றும் வந்து சேர்ந்தது. அந்தச் செய்தி ஃபிட்ஜ்ராய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை டார்வினுக்குத் தெரியப்படுத்தியது.
0
ஓய்வுகளற்ற தொடர் பயணமும் ஆய்வுகளும் ஃபிஜ்ட்ராயைச் சோர்வடைய செய்தன. பிரிட்டன் அரசு வேறு ஃபிட்ஜ்ராய் அளவுக்கு அதிகமாகச் செலவழிப்பதாகக் குற்றம்சாட்டி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அந்தக் கடித்தத்தைப் படித்துவிட்டு ஃபிட்ஜ்ராய் மனம் உடைந்துபோனார். பதற்றத்தில் அவர் ஏற்கெனவே அளக்கை செய்த இடங்களுக்கு சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்த, கப்பலில் உள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுவும் ஃபிட்ஜ்ராயை மனம் தளர வைத்தது. இவை எல்லாம் சேர்ந்து தற்கொலை எண்ணத்தை உருவாக்கியது. அதற்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கேப்டன் பதவியைத் தாற்காலிகமாகக் கப்பலில் இருந்த விக்ஹாம் என்கிற அதிகாரிக்குத் கொடுத்துவிட்டு ஓய்வுக்குச் சென்றுவிட்டார். விக்ஹாமோ மேற்குக் கடற்கரை பகுதிகளில் ஆய்வுகளை முடித்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவித்துவிட்டார்.
இந்தச் செய்தி டார்வினைத் திடுக்கிட வைத்தது. ஃபிட்ஜ்ராய் கேப்டனாக இருந்தபோது டார்வினின் விருப்பதுக்கு ஏற்றவாறு பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. தென் அமெரிக்காவை முடித்துவிட்டு பசிப்பிக் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்புவதாகத் திட்டம். ஆனால் விக்ஹாமோ வந்த வழியிலேயே திரும்பி இங்கிலாந்து செல்லலாம் என்று சொல்லிவிட்டார். டார்வினுக்கு மனம் பொறுக்கவில்லை. ஒருபக்கம் வீட்டு ஞாபகம் படுத்தி எடுப்பதும் உண்மைதான். ஆனாலும் அதைவிட ஆய்வுகள் அவரை வாட்டி எடுத்தன.
பேசாமல் கப்பலில் இருந்து விடைபெற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் பயணிக்கலாமா என்று யோசித்தார். அவ்வாறு செய்வதென்றால் பிரேசில் சென்று அங்கிருந்து இங்கிலாந்து திரும்ப பதினைந்து மாதங்கள் எடுக்கும். அதற்குப் பணம்? பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார். அந்த அளவுக்கு அவருக்கு ஆய்வுகள் மேல் காதல் துளிர்விட்டிருந்தது. இந்த முடிவை அவர் விக்ஹாமுக்குத் தெரிவிக்கலாம் என்று நினைத்தபோதுதான் ஃபிட்ஜ்ராய் மனநிலை தேறி வந்துவிட்டார் என்ற மற்றொரு செய்தி அவரைக் கிட்டியது. மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஃபிட்ஜ்ராய், பசிப்பிக் கடல் வழியாக எல்லா ஆய்வுகளையும் முடித்துவிட்டுதான் பீகல் இங்கிலாந்து திரும்பும் என்று டார்வினுக்கு தகவல் அனுப்பினார். மேலும் டார்வின் உடல்நிலை சரியாகி வரும்வரை கப்பல் அங்கேயேதான் நிற்கும் என்றும், டார்வின் இல்லாமல் பயணிக்காது என்றும் உறுதிமொழி அளித்தார். அந்த அளவு ஃபிட்ஜ்ராய்க்கும் டார்வின் தவிர்க்க முடியாத நபராகிப்போனார்.
0
பீகல் வடதிசை நோக்கிப் பயணித்தது. பிப்ரவரி 20, 1835 அன்று அவர்கள் வால்டிவியா காடுகளில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது ஒட்டுமொத்த ஊரையும் உலுக்கியெடுத்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டது. திடீரென்று பூமி அதிரத் தொடங்கியது. பின் நிலம் மேல் எழும்பியது. டார்வின் நிற்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார்.
அந்த அதிர்வு இரண்டு நிமிடங்கள்தான் நீடித்தது. ஆனால் ஒரு யுகமே முடிந்ததுபோல தோன்றியது. அவர் மீண்டும் நகரத்துக்குத் திரும்பியபோது எல்லா வீடுகளும் சிதிலமடைந்து காணப்பட்டன. சிலேயின் கரையை ஒட்டிய பகுதிகள் எல்லாம் பாழாய் போயிருந்தன.
சிலே வரலாற்றில் இதுவரை காணாத நிலநடுக்கம் எனச் சொல்லப்பட்டது. உடைந்த இடங்களில் இருந்தெல்லாம் புகைமூட்டம் விண்ணைத் தொட்டது. இடிபாடுகளில் தீ பற்றிக்கொண்டு எரிந்தது. 20 அடி அலை நிலத்திற்குள் வந்து நகரத்தையே துடைத்து எடுத்துச் சென்றது.
இந்த அழிவுக்கு மத்தியில்தான் டார்வினுக்கு அறிவியல் தரிசனம் ஒன்றும் கிட்டியது. டார்வின் மலைத் தொடரில் எப்படி கடல் உயிரிகளின் மிச்சங்கள் கிடைக்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தார் அல்லவா? அதற்கான பதில் இந்த நிலநடுக்கத்தில் அவருக்குக் கிடைத்தது.
நில அதிர்வுக்குப் பின் டார்வின் சிலேவின் கரைகளில் நடந்து சென்றபோது கடலுக்கு அடியில் வாழும் சிப்பிப் படுகைகள் நகரம் முழுவதும் பரவி கிடந்ததைக் கவனித்தார். அந்த நொடியில், நில அதிர்வுதான் கடலுக்கு அடியிலுள்ள நிலத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். அப்படியென்றால் திடமான பூமியால் மேலே எழ முடியும் என்பதை இது காட்டுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது தென் அமெரிக்க கண்டமே இப்படி மெதுவாக கடலில் இருந்து வந்துதான் உருவாகி இருக்க வேண்டும். அப்படியென்றால் இதுதான் லைலின் கூற்றுக்கான ஆதாரம்.
மேலும், ஆண்டிஸ் மலைத் தொடருமே இப்படியான விளைவுகளால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இருக்க வேண்டும். அதனால்தான் கடலின் தொல்லுயிர் எச்சங்கள் மலையின் மேல் கிடைக்கின்றன என்பதாகத் தீர்மானித்தார்.
இதன்மூலம் முக்கியமான முடிவு ஒன்றை அவர் பதிவு செய்தார். நிலம் என்பது திடமான, மாற்றமடையாத விஷயமல்ல. கொதிக்கும் பாறைகளுக்கு மேல் ஓடுகள்போல மிதந்து கொண்டிருக்கும் ஒன்றாக இருக்கலாம். மேலும், இந்தப் பேரிடர்கள் வெறும் அழிவை மட்டும் கொண்டுவரவில்லை. அவைதான் மலைகளையும் கண்டங்களையும் வடிவமைக்கும் படைப்பு இயந்திரங்களாக இருந்திருக்கின்றன எனக் கூறினார்.
(தொடரும்)