Skip to content
Home » டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

டார்வின் #15 – முடிவல்ல ஆரம்பம்

மார்ச் 12, 1835. மீண்டும் ஆண்டிஸ் மலையைக் கடக்கத் தீர்மானித்தார் டார்வின். இந்தமுறை வல்பரைசோவில் கிளம்பி தெற்கே பயணிப்பதாகத் திட்டம். பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.10 கோவேறு கழுதைகள், கொஞ்சம் உணவு, இரண்டு வழிகாட்டிகளுடன் கிளம்பினார் டார்வின். குளிர் வாட்டியது. 13,000 அடி உயரத்தில் போர்டிலோ கணவாயை கடக்கும்போது அடித்த காற்று உடலைத் துளைத்துச் சென்றது. அங்கிருந்து ஒவ்வொரு குன்றாக மேலே ஏறிச் சென்றார். பாறை இடுக்குகளுக்குள் இரவைக் கழித்தார். வானம் தெளிவாக இருந்தது. ஆண்டிஸ் மலைத்தொடர் வெள்ளி நிறத்தில் மிளிர்ந்தது.

ஆண்டிஸில் கல்மரக் காட்டை (petrified forest) தரிசித்தார் டார்வின். அது என்ன கல்மரக் காடு? கற்களாய் மாறிய மரங்கள் நிறைந்த வனம்தான் கல்மரக் காடு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அட்லான்டிக் நிலப்பகுதியை கடல்கொண்டது. அங்கிருந்த காடுகள் சேற்றிலும் சகதியிலும் மூழ்கி, எரிமலைக் குழம்புகளால் சூழப்பட்டு, புவி அழுத்தத்தால் கற்களாக உருமாறின. இன்று பூமியின் வரலாற்றைச் சுமந்து நிற்கும் தொல்படிம சாட்சியங்கள் அவை.

டார்வின் அங்கிருந்து சில மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டார். இரண்டு பெரிய பெட்டிகள் நிறையச் சேகரிப்புகள் இருந்தன. இவைதான் இங்கிலாந்துக்கு அனுப்ப இருந்த கடைசி பெட்டி. இதற்குப் பின்னும் சேகரிப்புப் பணி தொடரும். ஆனால் அவற்றைத் தானே கொண்டு செல்வதாகத் திட்டம். அந்த மாதிரிகளை அனுப்பும்போதே, சீலேவின் கண்டடைந்த நிலவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் ஹென்ஸ்லோவுக்கு எழுதினார் டார்வின்.

மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டது. தந்தையிடம் செலவுக்கு 100 பவுண்டுகள் பணம் கேட்டு. கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி இருந்தது. ஆண்டிஸ் மலையைக் கடக்கவே 60 டாலர் ஆகிவிட்டது. ஆய்வுகளைத் தொடர வேண்டும் எண்றால் மீண்டும் பணம் தேவை. ஆறு மாதங்களில் இது இரண்டாவது கடிதம். ஆனாலும் வேறு வழி தெரியவில்லை என்று குறிப்பிட்டார் டார்வின்.

0

ஜூலை 6 அன்று பீகல் பெரு நோக்கி பயணித்தது. வழியில் அங்கே அரங்கேறிய அரசியல் காட்சிகளை எல்லாம் அவதானித்தார் டார்வின். தேவாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களைப் புரட்சியாளர்கள் கொன்று குவித்தார்கள். லீமாவில் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று நபர்களை நிர்வாணத்துடன் அடித்து ஓடவிட்டார்கள் கிளர்ச்சியாளர்கள். எல்லாமும் மனதிலும் குறிப்பேட்டிலும் பதிவு செய்யப்பட்டன.

லீமாவில் சில வாரங்கள் நின்றது பீகல். கப்பலில் அறையில் படுத்தபடியே பவளத்தீவுகள் பற்றி சிந்தித்தார் டார்வின்.

அந்தக் காலத்தில் கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் பவளத் தீவுகளும் பாறைகளும் இருப்பது தெரியாமல் மோதி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கை. எப்படி இந்தப் பவளப்பாறைகள் நடுக்கடலில், அதுவும் தீவுகள்போல அமைந்துள்ளன என்பதுதான் பலருடைய கேள்வி. இதைத்தான் டார்வின் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

பொதுவாக பவளத் திட்டுகள் அணைந்த எரிமலையின் மேல்தான் உருவாகும். எரிமலையின் உச்சியைச் சுற்றி கடலில் வளையம்போல அமைந்திருக்கும். பார்ப்பதற்கே பரவசமூட்டும் காட்சியாக தோன்றும். லைல் உள்ளிட்ட பலரும், கடலுக்கு அடியில் இருந்து எரிமலை உயரும்போது அதன் மேல் பவளங்கள் தோன்றுவதாகக் கருதினர். ஆனால் டார்வினோ அதற்கு நேர்மாறாகச் சிந்தித்தார்.  எரிமலை கடலுக்குள் அமிழும்போது ஏன் பவளத் திட்டுகள் மேல் நோக்கி வளரக்கூடாது என யோசித்தார்.

கடல் உயிரிகளின் தொல்எச்சங்கள் மலைகளின் மேல் கிடைக்கிறது என்றால் நிலம் உயர்கிறது என்று பொருள். அந்தச் சமயத்தில் பூமியின் வேறுபகுதி கீழ்நோக்கி அமிழும் இல்லையா? ஏன் அப்படி பசிப்பிக்கில் இருந்த எரிமலைகள் மூழ்குவதால் பவளத்திட்டுகள் வந்திருக்கக்கூடாது? பவளத்திட்டுகளை உண்டாக்கும் உயிரிகளுக்குச் சூரிய ஆற்றல் தேவை. அதனால் அவை மேல் நோக்கி வளரலாம் என்று ஊகித்தார் டார்வின். அதுதான் பின்னாளில் உண்மையானது.

1950களில் பசிபிக் பெருங்கடலில் இருந்த பவளத் திட்டினை விஞ்ஞானிகள் குடைந்து பார்த்தபோது கீழே எரிமலைப் பாறைகள் இருப்பது தெரியவந்தது. கடல் நடுவே இருக்கும் எரிமலைகளின் இயக்கம் நின்று போன பிறகு அவற்றின் உச்சியில் பவளப் பாறைகள் வளர்கின்றன. நாளடைவில் எரிமலைகள் கீழே அமிழ்ந்துவிடும்போது, உச்சியில் இருக்கும் பவளத் திட்டுகள் மாத்திரம் கடல்மட்டத்துக்கு மேலே வளையல் போன்ற அமைப்பில் தோற்றம் அளிக்கின்றன எனக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்.

இதனைத் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நுட்பமான அவதானிப்பு, கூர்நோக்கு, நிலவியல் அறிவு ஆகிய திறன்களின் வழியே கண்டுபிடித்தார் டார்வின்.

இப்படித்தான் டார்வினின் பவளத்தீவுகள் கோட்பாடு உருவானது. டார்வின் என்றால் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு முன்பே டார்வின் கண்டுபிடித்த கோட்பாடு இது.

0

பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தன. கப்பல் தென் அமெரிக்காவுக்கு விடை கொடுத்தது. அடுத்ததாக பசிப்பிக், ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களுக்குச் செல்லவதாகத் திட்டம். இவற்றை எல்லாம்விட ஒரு தீவின் வரவை நோக்கிதான் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் டார்வின். அதுதான் கலாபகஸ் தீவுகள்.

கலாபகஸ் என்பது பசிப்பிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம். 13 பெரிய தீவுகள், 6 சிறிய தீவுகள் என மொத்தம் 19 தீவுகள். இதுபோக கடல் நடுவே இருக்கும் நிறைய குட்டித் தீவுகளும் பாறைத் திட்டுகளும்கூட அதில் அடக்கம். கலாபகஸ் தீவுக்கூட்டம் எரிமலையின் இயக்கத்தால் உருவானது. அங்கே இருக்கும் எரிமலைகள் 20 மில்லியன் ஆண்டுகளாகக் கனன்று கொண்டுள்ளன. அந்தத் தீவின் பெரும்பகுதி இன்னும் இயங்கிகொண்டிருக்கும் எரிமலையின் வாய்ப்பகுதியாக இருக்கிறது. இதனாலேயே அங்கே மனிதர்கள் வசிப்பதில்லை. மேலும், அந்தத் தீவுக்கூட்டத்தைச் சூழ்ந்துள்ள கடற்பகுதியில் மூன்று பெருங்கடல் நீரோட்டங்கள் சங்கமிக்கின்றன. அதனால் இப்பகுதி உலகிலேயே வளமிக்க கடல் உயிர்க்கோளமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே அங்கே சென்று உயிரினங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று விருப்பம்கொண்டார் டார்வின்.

செப்டம்பர் 15, பீகல் கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் ஒன்றான சதம் தீவை நெருங்கியது. கருமை நிறம் பூசிய நிலத்தில் நண்டுகளும் கடல் உடும்புகளும் படையெடுத்து நின்றன. கரைகளில் ராட்சத ஆமைகள் கூட்டம் கூட்டமாய் நீந்தின. பீகல் குழு ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தது.

கலாபகஸ் தீவுகளில் 26 விதமான நிலப் பறவைகளையும் 11 நீர்ப் பறவைகளையும் கண்டார் டார்வின். பிரம்மாண்டமான ஆமை, ஃபிஞ்ச் எனப்படும் சிறிய பறவை, கோர்மொரான்ட் எனப்படும் நீர்க்காக்கை, கலாபகஸ் லாவா பல்லி, இகுவானா எனப்படும் கடல் உடும்பு, நிலத்தில் வாழும் நத்தை, பிரம்மாண்டமான சப்பாத்திக்கள்ளி போன்றவை தீவுகள் எங்கும் காணக் கிடைத்தன. பனிப்பிரதேசங்களில் காணப்படும் பென்குயின், சீல் எனப்படும் கடல் நாய் ஆகியவையும் இருந்தன. ஆமை, உடும்பு, பாம்பு இவற்றில் வெவ்வேறு இனங்களைப் பார்த்தாலும் தவளையையோ தேரையையோ காணவில்லை. பூச்சிகளும்கூட அங்கு இல்லை.

அங்கு டார்வினை ஆச்சரியம் கொள்ளவைத்தது ஆமைதான். ஆமைகளில் நிலத்தில் வாழும் இனங்களும் நீரில் வாழ்பவையும் இருந்தன. ஒவ்வொரு தீவிலும் இருக்கும் ஆமையும் உருவத்தில் சிறிய மாற்றங்களைக் கொண்டிருப்பதைக் கவனித்தார் டார்வின். அவற்றின் ஓடுகள் 7 அடி உயரத்தில்கூட இருந்தன. கழுத்தை நீட்டி சப்பாத்திக் கள்ளிச் செடிகளை அவை தின்றன.

அடுத்தது அங்கிருந்த பறவைகள். குருவியைப் போன்ற உருவம்கொண்ட ஃபிஞ்ச் பறவை ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு விதமாக இருப்பதைப் பார்த்தார் டார்வின். ஆனால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதை உணரவில்லை. ஒவ்வொரு தீவிலும் இருந்த ஃபிஞ்ச் பறவையின் அலகும் அளவும் வித்தியாசமாக இருந்ததால் அவை வெவ்வேறு பறவைகள் என்று நினைத்துக்கொண்டார். சொல்லப்போனால், ஃபிஞ்ச் பறவையை மாக்கிங் பேர்ட் என்று தவறுதலாக எண்ணினார். கலாபகஸ் தீவில் பூச்சிகள் இல்லை என்பதால் ஃபின்ச் பறவைகள் நிலத்தைத் தோண்டுவதற்கு ஏதுவாகவும், கடினமான கொட்டைகளை உடைப்பதற்கு ஏதுவாகவும் வலிமையான அலகுகளைக் கொண்டிருந்தன.

அங்கிருந்த பறவைகள் மனிதர்களைக் கண்டு அஞ்சவில்லை. அவர்களுக்கு மிக அருகிலோ, கையிலோகூட வந்து உட்கார்ந்தன. கனத்த தடியினால் அடித்து அவற்றை எளிதில் கொன்றுவிட முடிந்தது. மனித வாசம் அற்ற அந்தத் தீவுகளில் அந்த அளவுக்கு பறவைகளின் பண்புகள் மாறி இருப்பதைக் கவனித்தார் டார்வின். அங்கிருந்து பறவைகளையும் ஆமைகளையும் உணவாக உட்கொள்வதற்கு கப்பலுக்கு எடுத்துச் சென்றனர் குழுவினர்.

செப்டம்பர் 23, சார்லஸ் தீவை அடைந்தது பீகல். அங்கே கைதிகள், நாடு கடத்தப்பட்டவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆங்கிலேயர் ஒருவரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தனர். அங்கே இருந்த கைதிகளிடம் டார்வின் உரையாடினார். அவர்கள் ஒவ்வொரு தீவுகளிலும் அதற்கே உரிய வகையில் ஆமைகள் இருந்ததை டார்வினுக்குச் சுட்டிக்காட்டினர். அவற்றின் ஓடுகளை வைத்தே ஒவ்வொரு ஆமையும் எந்தத் தீவைச் சேர்ந்தவை எனச் சரியாகக் கணித்தனர். இதனால் ஓடுகளைப் பத்திரமாக எடுத்துக்கொண்டார் டார்வின்.

செப்டம்பர் 28 அன்று அவர்கள் அல்பேமர்லே தீவை அடைந்தனர். கலாபகஸின் மிகப் பெரிய தீவு இதுதான். அங்கிருந்து ஜேம்ஸ் தீவுக்குக் கப்பல் புறப்பட்டது. அங்கேயும் வித்தியாசமான ஆமைகள், பறவைகள் தென்பட்டன. கப்பல் கிளம்புவதற்கு முன் மூன்று தீவுகளில் இருந்து ஆறு வகை ஃபிஞ்ச் பறவைகள், பூக்கள், தாவரங்களைச் சேகரித்துக்கொண்டார் டார்வின். எல்லாவற்றையும் பார்க்கும்போது, அருகருகே இருக்கும் இந்தத் தீவுக்கூட்டங்களுக்கு இடையே காணப்படும் உயிரினங்களுக்கு இடையில் எப்படி இத்தனை வித்தியாசம் என்று குழப்பம் வந்தது. இந்தக் குழப்பம்தான் அவருக்கு மிகப்பெரிய புதிரை விடுவிக்கும் பதிலைக் கொடுத்தது.

அக்டோபர் 20 அன்று பீகல் கலாபகஸை விட்டுக் கிளம்பியது. காற்று வீசும் திசையிலேயே கப்பல் பயணித்ததால் 3000 மைல்களை வெறும் மூன்று வாரத்தில் கடந்து தாகித்தியை (Tahiti) அடைந்தது பீகல்.

தாகித்தியில் மிஷனரிகளுடன் டார்வின் தங்க நேர்ந்தது. தாகித்தி தீவு முழுவதுமே பழந்தோட்டங்களும் தென்னை மரங்களும் நிரம்பி இருந்தன. மிஷனரிகள் தாகித்தியின் தோற்றத்தையே மாற்றியிருந்தனர். டார்வின் இங்கிலாந்தில் இருந்து கிளம்புவதற்கு முன் வன்முறை நிறைந்த பகுதியாகக் கருதப்பட்ட தாகித்தி, இப்போது அன்பார்ந்த மக்களால் நிறைந்திருந்தது. அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது. குடும்பங்களுக்குக் கல்வி வழங்கப்பட்டன. சிசுக் கொலை, மனிதர்களைப் பலியிடும் நடைமுறை எனப் பூர்வகுடி பழக்கவழக்கங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டிருந்தன. டார்வினுக்கு இத்தகைய மாற்றம் புதிய கேள்வியைத் தோற்றுவித்தது. மிஷனரிகள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நிலைக்க வைப்பதற்காக உலகம் முழுவதும் பணியாற்றுகின்றனர் என்பதுதான் உண்மை. ஆனால் தாகித்தியில் அவர்கள் செய்திருப்பது சமூக சீர்திருத்தம் இல்லையா?

இந்தக் கேள்விக்கு நேரெதிரான பதிலையும் விரைவிலேயே டார்வின் கண்டார். தாகித்தியில் இருந்து மறுநாளே பீகல் நியூசிலாந்துக்குக் கிளம்பியது. அங்கே ஒருவாரம் இருந்து கிறிஸ்துமஸைக் கொண்டாடிவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் டாஸ்மானியவை அடைந்தபோது தாகித்தியில் கண்ட காட்சிக்கு நேரெதிரான சித்திரத்தை டார்வின் கண்டார். அங்கே குடியேறிய இங்கிலாந்து மக்கள் அங்கிருந்த பூர்வகுடிகளை எல்லாம் அழித்திருந்தனர். பிழைத்தவர்கள் எல்லாம் தொலைதூரத் தீவுகளுக்கு துரத்தப்பட்டிருந்தனர். டாஸ்மானிய பூர்வகுடி இனமே முற்றிலும் துடைத்து எறியப்பட்டிருந்தது. இது காலனியாதிக்கத்தின் மற்றொரு முகத்தை டார்வினுக்குக் காட்டியது.

ஐரோப்பியக் குடியேற்றம் பூர்வகுடிகளை எப்படியெல்லாம் அழித்தொழித்தது என்பதை டார்வின் புரிந்துகொண்டார்.

0

ஏப்ரல் 1, 1836 அன்று பீகல் இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகோஸ் தீவுகளை அடைந்தது. அது நிலநடுக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள இடம். பவளச் சொர்க்கம் என அறியப்படும் இடம். அங்கே அருகருகே பல பவளத் தீவுகள் காணப்பட்டன. இதைப் பார்க்கத்தான் டார்வின் காத்திருந்தார். தான் கண்டடைந்த பவளத்தீவுகள் தொடர்பான கோட்பாட்டைச் சோதித்துப் பார்க்கும் முனைப்பில் இருந்தார்.

டார்வினும் ஃபிட்ஜ்ராயும் இணைந்து பவளத்திட்டுகளின் தோற்றத்தை ஆராய விரும்பினர். இதற்கு அவை எத்தனை ஆழத்திற்குப் படர்ந்துள்ளன என்பதை அறிய, கயிறு ஒன்றில் எடையைக் கட்டி கடலுக்குள் இறக்கினர். கீழே தரை தட்டுப்பட்டால் பவளத்திட்டுகள் அமைந்திருக்கும் மலை மேல் நோக்கி வருகிறது என்று பொருள். தட்டுப்படவில்லை என்றால் எரிமலை அமிழ்கிறது என்று பொருள்.

ஃபிட்ஜ்ராய் கயிற்றை இறக்க, 7000 அடியை அடைந்தபின்னும் தரை தட்டுப்படவில்லை. இதன்மூலம் இந்தத் திட்டுகள் மூழ்கும் மலையின் உச்சியில் மேல் நோக்கி வளர்வது உறுதியானது. டார்வின் தன் முதல் கோட்பாட்டை அங்கே வெற்றிகரமாக ஊர்ஜிதம் செய்தார்.

0

பீகல் பயணம் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தபோது கப்பல் மொரிஷியஸை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்த எல்லோருக்கும் வீட்டு நினைவு வந்துவிட்டது. இன்னும் பயணம் முடிவதற்கு ஆறு மாத காலம் இருந்தது. அடுத்த மூன்று வாரங்களுக்குக் கப்பலில்தான் பயணம். டார்வின் தான் அவதானித்த எல்லாவற்றையும் நினைவுப்படுத்தி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு இன்னமுமே தன் ஆய்வின்மீது சந்தேகம் இருந்தது. தனது சேகரிப்புகளை ஹென்ஸ்லோ வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அறிவியல் என்னை விட்டுவிட்டது என அர்த்தம். அவ்வாறு நேர்ந்தால் நானும் அறிவியலைவிட்டு விலகிவிடுவேன் என்று எழுதி வைத்தார்.

ஆனால் அறிவியல் டார்வினைக் கைவிடவில்லை.

பீகல் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனை அடைந்தபோது டார்வினுக்கு நற்செய்திகள் காத்திருந்தன. டார்வினின் சகோதரி கேத்ரீன் அனுப்பிய கடிதங்களில் டார்வினின் பெயர் ஏற்கெனவே இங்கிலாந்து இயற்கையாளர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். டார்வின் புவியியல் குறித்து எழுதிய கடிதங்களை அவருக்கே தெரியாமல் ஹென்ஸ்லோ தொகுத்து, புத்தகமாக வெளியிட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக அந்தப் புத்தகம்தான் அறிவியலாளர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது எனக் கூறினார் கேத்ரீன்.

டார்வினின் தந்தை ராபர்ட்கூட மகனின் கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் போற்றுவதை எண்ணி பெருமைகொண்டார். தன் பங்குக்குச் சில புத்தகங்களை வாங்கி தெரிந்தவர்களுக்கு எல்லாம் வழங்கினார்.

டார்வினுக்கு மனம் நிறைந்தது. இதுதான். இதற்குத்தான் இத்தனை உழைப்பும் ஏக்கமும். ஊரார் என்னைப் போற்றுவது இருக்கட்டும். தந்தை இப்போதுதான் என்னை நினைத்து முதன்முதலில் பெருமைகொள்கிறார். இதுபோதும். டார்வின் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

0

டார்வின் கேப் டவுனை வலம் வந்தபோது அந்நகரம் முழுவதும் வணிகர்களும் மாலுமிகளுமே நிறைந்திருந்தனர். அங்கேயும் பூர்வகுடிகள் எல்லோரும் துரத்தப்பட்டிருந்தனர்.

கேப்டவுனில் சர் ஜான் ஹெர்ஷலைச் சந்தித்தார் டார்வின். ஹெர்ஷல் கணிதம், வானியல், வேதியியல் எனப் பல்துறைநிபுணர். கேப்டவுனில் தங்கி நட்சத்திரங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார். நகரத்துக்கு வெளியே ஓக் மரங்கள் சூழ்ந்த அமைதியான கிராமத்து வீடு ஒன்றில் டார்வினும் ஃபிட்ஜ்ராயும் ஹெர்ஷலைச் சந்தித்தனர்.

மூவரும் மணிக்கணக்கில் உரையாடினர். உரையாடல் எரிமலைச் சீற்றம், கண்டப் பெயர்ச்சி, பூமியை இயக்கும் விசை எனப் பல விஷயங்களுக்குத் தாவிக்கொண்டிருந்தது. அப்போது லைல் எழுதிய ‘Principles of Geology’ புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, ஹெர்ஷல் முக்கியமான ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினார்.

உயிரினங்களின் தோற்றமும் அழிவும் பற்றிய பகுதி அது. பூமியின் நிலப்பரப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும்போது, அதற்கேற்ப தாவரங்களும் விலங்குகளும்கூட மாறுமோ என்கிற கேள்வியை முன்வைத்து லைல் விவாதித்திருப்பார். நிலரப்புகளுக்கு ஏற்ப தாவரங்களும் விலங்குகளும் மாறாது. பதிலாக, ஒவ்வொரு விலங்கும் அவை வாழும் இடத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாறும்போது அவை மாறுவதில்லை, அழிந்துவிடுகின்றன. பழைய உயிரினங்கள் இறந்தவுடன் புதிய உயிரினங்கள் மர்மமான வகையில் தோன்றுகின்றன என்று குறிப்பிட்டிருப்பார் லைல். அவை எப்படித் தோன்றுகின்றன என்பதுதான் மர்மங்களுக்கு எல்லாம் மர்மம் என்றார் ஹெர்ஷல். இதுதான் டார்வினுக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

அது என்ன மர்மம்? உயிரினங்கள் இறப்பதற்கான காரணம் தெரியும்போது அது தோன்றுவதற்குப் பின்னும் இயற்கைக் காரணிகள் இருக்கும் இல்லையா? அதை மட்டும் மர்மம் என நாம் எப்படி விட்டுவிட முடியும்? அதைக் கண்டுபிடிப்பதுதான் எனது உண்மையான பணியாக இருக்க வேண்டும் எனத் தீர்மானம் கொண்டார் டார்வின். இங்குதான் அவருக்கு உயிரினங்களின் தோற்றத்தை அறிய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.

0

கப்பல் கேப்டவுனில் இருந்து புறப்பட்டு அட்லாண்டிக்கில் பயணித்தது. அதுவரை  சேகரித்த விஷயங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி தொகுக்க ஆரம்பித்தார் டார்வின். மீன்கள் தனியாக, பாலூட்டிகள் தனியாக, ஊர்வனங்கள், பறவைகள், பூச்சிகள்  தனித்தனியாக என மொத்தம் 12 வகையான பட்டியல்களைத் தயாரித்தார். பூச்சிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான வகைகள் இருந்தன.

ஒவ்வொரு மாதிரிக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த மாதிரி எங்கே கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றின் குணாம்சம் என்ன என்று அனைத்தையும் குறித்து வைத்தார்.

மீண்டும் கலாபகஸ் உயிரினங்களை ஆராய்ந்தபோது ஒவ்வொரு உயிரினமும் தனித்தன்மையுடன் இருப்பது தெரிந்தது. அது எப்படி கலாபகஸ் உயிரினங்கள் சிறு இடைவெளிகளுக்கு இடையேயான தீவுகளில் இத்தனை பெரிய வேறுபாடுகளுடன் இருக்கின்றன? இவை அனைத்தும் ஒரே இனத்தின் வெவ்வெறு வகைகளா? இல்லை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவையா? இயற்கையாளர்கள் உயிரினத்திற்குள் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன என ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாடுகளின் எல்லை என்ன? இந்த வேறுபாடுகள்தான் உயிரினத் தோற்றத்தின் தொடக்கமா? புதிய இனம் தோன்றுவதற்கான தொடக்கப்புள்ளியா? அப்படியென்றால் உயிரினங்களின் தோற்றம் குறித்த மர்மம் கலாபகஸ் தீவில்தான் ஒளிந்திருக்கிறதா? சிந்தனையில் ஆழ்ந்தார் டார்வின்.

0

கப்பல் மகர ரேகையைக் கடந்து தெற்கு அட்லாண்டிக்கில் பயணித்தது. ஃபிட்ஜ்ராய் மீண்டும் ஒருமுறை பிரேசில் பக்கம் திரும்பி தான் ஆய்வு செய்திருந்த தீர்க்கக் கோடுகள் பற்றிய குறிப்புகளை உறுதி செய்துகொண்டார். கப்பலில் எல்லோரும் எப்போது வீடுகளுக்குத் திரும்புவோம் எனக் காத்திருந்தனர்.

ஆகஸ்ட் 6, பீகல் இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டது. டார்வினுக்கு ஆவல் தொற்றிக்கொண்டது. வீட்டுக்குத் திரும்ப வேண்டும். சகோதரிகளிடம் பயணம் குறித்த கதைகளைப் பேச வேண்டும். தந்தையுடன் தேநீர் அருந்த வேண்டும். வீட்டின் பின்புறத்தில் உள்ள ஊஞ்சலில் ஆட வேண்டும். என்ன மனம் இப்படி மாறுகிறது? இங்கிலாந்தில் புறப்படுவதற்கு முன் எப்போது பயணிப்பேன் எனக் காத்திருந்தேன். தென் அமெரிக்கக் காடுகளைக் காணத் துடித்தேன். இப்போது காடுகளும் தீவுகளும் எரிமலைகளும் அலுத்துப்போய் இங்கிலாந்தின் பச்சைப் புல்வெளிகளுக்கு ஏங்குகிறதே மனம். என்னவகையான மனநிலை இது? டார்வின் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். 

கப்பலில் இருந்தவர்களும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். பயணம் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைய இருந்தது. வழியில் ஏராளமான அதிசயங்களையும் ஆபத்துகளையும் பீகல் குழுவினர் சந்தித்திருந்தனர். புயல், புரட்சி, போராட்டம் எல்லாவற்றையும் தாண்டி வந்தனர். இப்போது வீடு திரும்ப காத்திருந்தனர். விட்டு வந்த தந்தை, தாய், மனைவி, குழந்தைகளுடன் இணைவதற்கு ஏங்கி நின்றனர்.

கப்பல் இங்கிலாந்துக்கு அருகில் வர வர, எல்லோரும் குரல் எடுத்து கத்தி ஆரவாரம் செய்தனர். கையில் இருந்த நாணயங்களைக் கடலில் வீசிக் கொண்டாடினர். பணத்தாள்களைச் சுருட்டித் தீயிட்டுக் கொளுத்தினர். சொந்த ஊருக்கு முன்னால் வேறு எதுவும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அக்டோபர் 1836 பீகல் இங்கிலாந்தை அடைந்தது. டார்வின் தான் சேகரித்த பொக்கிஷயங்களை எல்லாம் எடுத்துக்கொண்டார். எங்கெல்லாம் சென்றோம், எங்கே எல்லாம் தங்கினோம், எப்படியெல்லாம் உயிர் பிழைத்தோம் எனத் தினசரி நிகழ்வுகள் குறித்த நாட்குறிப்புகளே அவரிடம் 700 பக்கங்களுக்கு இருந்தன. அதுவே நிச்சயமாக சிறந்த பயண நூலாக வரும்.

அதைவிட அதிக பக்கங்களுக்கு ஆய்வுக் குறிப்புகள் இருந்தன. 1300 பக்கங்களுக்கு புவியியல் ஆய்வுகள், 400 பக்கங்களுக்கு உயிரியல் ஆய்வுகள், பெட்டிகள் நிறைய உயிர் மாதிரிகள் கொட்டிக் கிடந்தன. கிட்டத்தட்ட 1529 உயிரினங்களை அவர் பதப்படுத்தி இருந்தார். 4000 வகையான எலும்புகள், தோல்கள், உலர்ந்த உயிரினங்கள் அவரிடம் இருந்தன. உயிருடன் கலாபகஸ் ஆமை ஒன்றும் இருந்தது. எல்லாமே அறிவுச் செல்வங்கள். எல்லாவற்றையும் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால், இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதா?

நிச்சயமாக இல்லை. இந்தச் சேகரிப்புகள் எல்லாம் வெறும் தொடக்கம்தான். உண்மையான வேலை இனிமேல்தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் லண்டனுக்குக் குடிபெயர வேண்டும். அங்கே உள்ள அறிவியல் சங்கங்களில் எல்லாம் இணைய வேண்டும். மாதிரிகளைக் காட்சிப்படுத்த வேண்டும். கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்த வேண்டும். ஏற்கெனவே ஹென்ஸ்லோவிடமும் எராஸ்மஸிடமும் பேசியாயிற்று. நண்பர்கள் உதவியுடன் புவியியல் சங்கங்கள், பூச்சிகள் சங்கங்கத்தில் எல்லாம் இணைவதற்குப் பெயர் கொடுத்தாயிற்று.

அங்கே சென்று இந்தப் பட்டியல்களைச் சமர்ப்பிப்பதுடன் நின்றுவிடக்கூடாது. என்னிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. நான் கொண்டு வந்த தொல்லுயிர் எச்சங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை? அவை வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது? எதனால் அவை அழிந்தன? எப்படி விலங்குகளும் பறவைகளும் தொலைதூர தீவுகளில் பரவின? இவற்றுக்கு எல்லாம் விடை தேட வேண்டும். இதைவிட முக்கியமான விஷயம் உயிரினங்களின் தோற்றம். அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். இவை எல்லாம் முடிந்தால்தான் என்னுடைய பயணம் நிறைவடையும்.

பீகல் கப்பலில் இருந்து இறங்கி இங்கிலாந்துக்குள் காலடி எடுத்து வைத்தபோது இருந்தது பழைய டார்வின் இல்லை. இது புதிய டார்வின். உலகைப் புரட்டிப்போட இருந்த பல உண்மைகளைத் தோலுறிக்க காத்திருந்த டார்வின். ஆனால் அந்த உண்மைகள்தான் பின்னாளில் அவரைப் பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தப்போகின்றன என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *