Skip to content
Home » டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

உயிரினங்கள் உருமாறுகின்றன என்கிற சிந்தனை டார்வினுக்கு முன்பே சமூகத்தில் இருந்தது. லமார்க் அதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருந்தார். கிரான்ட் போன்ற புரட்சிகரவாதிகள் அச்சிந்தனையைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால் திருச்சபை வட்டாரங்கள் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. உயிர் கடவுளின் படைப்பு. சிக்கலான இயக்கத்தைக் கொண்ட உயிர்களின் உடல் அமைப்பு தானாக உருவாக முடியுமா? யாராவது பார்த்துப் பார்த்துச் செய்தால்தான் கச்சிதமான பண்புகளை உருவாக்க முடியும். அதனால் இயற்கையும் உயிர்களும் கடவுளின் படைப்பே என்று வாதிட்டனர். டார்வின் ஆரம்பத்தில் கிரான்டின் சிந்தனையை ஏற்றுக்கொண்டாலும் பின்னாளில் கடவுளின் பக்கத்திற்குத் தாவினார். ஆனால் கலாபகஸ் உயிரினங்கள் டார்வினை மீண்டும் கடவுளிடம் இருந்து இழுத்து வந்தன.

டார்வின் கொண்டு வந்த தொல்லுயிர் எச்சங்களை ஆராய்ந்த ரிச்சர்ட் ஓவன், அதில் கிடைக்கப்பெற்ற விலங்குகளை எல்லாம் அறிவித்தார். இதில் முதலாவது டாக்ஸோடான் எனும் விலங்குடையது. நீர்யானை போன்ற உருவமும் எலியைப் போன்ற பற்களும் கொண்ட விலங்கு அது. அடுத்தது, மெகாத்தீரியம் எனும் குதிரை அளவுடைய எறும்புத் திண்ணி போன்ற விலங்கு. இதைத்தவிர மைலோடோன், மைலோடன், ஸ்கெலிடோதெரியம், மெக்ராச்சீனியா, குளோசோதெரியம், கிளிப்டோடன், ஈக்வஸ் என வெவ்வேறு விலங்குகளும் கண்டறியப்பட்டன.

இந்தத் தொல்லுயிர் எச்சங்களுக்கு எல்லாம் ஓர் ஒற்றுமை இருந்தன. இவை அனைத்தும் தற்போது இருக்கும் விலங்குகளின் உருவத்துடன் பொருந்திப்போயின. உதாரணமாக, கிளிப்டோடனுக்கு இன்றைய நல்லங்கு போன்ற உருவம் இருந்தது. மெக்ராச்சீனியா எனும் விலங்கின் தொல்லுயிர் எச்சம் அப்போது தென் அமெரிக்காவில் காணப்பட்ட குவானக்கோ, லாமா என்கிற ஒட்டகம் போன்ற விலங்குகளுடன் பொருந்திப்போயின. ஆனால் அவற்றுக்கு இடையே சிறிய மாற்றங்களும் இருந்தன. ஒட்டகத்தைப்போல இருந்த மெக்ராச்சீனியாவின் மூக்கு துதிக்கைபோலக் கொஞ்சம் வளைந்து இருந்தது. நல்லங்குபோல இருந்த கிளிப்டோடன், அளவில் எருதைப் போன்று பெரிதாக இருந்தது. இதுதான் டார்வினுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அது எப்படி இன்றைய விலங்குகளுக்கும் தொல்லுயிர் எச்சங்களுக்கும் இடையில் ஒரே போன்ற ஒற்றுமையும் சிறிய வேறுபாடுகளும் இருக்க முடியும்? புதிய விலங்குகள் படைக்கப்படுகின்றன என்றால் முற்றிலும் புதிய தோற்றத்தில்தானே இருக்க முடியும்? ஆனால் அவை அழிந்த விலங்குகளைப்போலவே இருக்கின்றனவே?

அப்படியென்றால் இன்றைய விலங்குகள் அனைத்தும் தொல்லுயிர் எச்சங்களில் கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் வாரிசுகளா? மறைந்த விலங்குகள் அவற்றைப்போலவே உள்ள உயிரினங்களால்தான் மாற்றி அமைக்கப்படுகின்றனவா எனக் கேள்வி எழுப்பினார்.

இதேசமயத்தில் குட் மேற்கொண்ட கலாபகஸ் பறவைகள் மீதான ஆய்வுகளும் வெளிவந்தன. கலாபகஸில் இருந்து கொண்டு வந்த பறவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பதுபோல் முதலில் தெரிந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தபோது பறவைகளின் அலகுகளில்தான் மாற்றங்கள் இருப்பது தெரிந்தது. இதனை ஆராய்ந்த குட், இவை அனைத்துமே ஃபிஞ்ச் பறவைகளின் வெவ்வேறு இனங்கள் என விளக்கம் கொடுத்தார்.

ஃபின்ச் பறவைகளின் அலகுகள் அவற்றின் இருப்பிடங்களில் கிடைக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. இப்படியாக மொத்தம் பதினேழு ஃபின்ச் பறவை இனங்கள் கலாபகஸில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன என்றார் குட்.

இந்தக் கண்டுபிடிப்பும் டார்வினுக்குள் கேள்வியை எழுப்பியது. எப்படி அருகருகே உள்ள தீவுகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஃபிஞ்ச் இனங்கள் இருக்க முடியும்? அவை எப்படி அந்தத் தீவுகளில் கிடைக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு அலகுகளைக் கொண்டிருக்க முடியும்? அப்படியென்றால் ஒரே ஃபிஞ்ச் இனம்தான் மாற்றம் அடைந்து வெவ்வேறு இனங்களாக உருமாறினவா? அடுத்தடுத்த கேள்விகள் உருவாகின.

டார்வினுக்கு இந்தக் கேள்விகள் எழுந்த அதேசமயத்தில்தான் லண்டனில் ‘இயற்கை என்பது கடவுளின் வடிவமைப்பு’ என்ற வாதமும் நொறுங்கிக் கொண்டிருந்தது. மதகுருக்கள் அறிவியலிலும் தத்துவத்திலும் தலையிடக்கூடாது என்கிற வாதங்கள் ஒலித்தன. இயற்கை இறையியல் எனும் வாதம் சிதறிக்கொண்டிருந்தது. அந்தச் சிதிலங்களில் இருந்து புதுவிதமான அறிவியல் வளர்ந்துவந்தது. இயற்கை என்பது கடவுளின் மாயாஜாலத்தால் அல்ல, கடவுளின் விதிகளால் இயங்குகிறது என்கிற சிந்தனை உருவானது.

0

அன்றைக்கு முக்கியமான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறிவியல், இலக்கியம், அரசியல், தொழில் என வெவ்வேறு துறைகளில் உள்ள எல்லா முக்கியஸ்தர்களும் அங்கே கூடி இருந்தனர். அந்தக் கூட்டத்தில் டார்வினையும் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார் லைல். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது கணினியின் தந்தை என அறியப்படும் சார்லஸ் பாபேஜ்.

பாபேஜ் மிகச் சிறந்த கணித மேதை. கண்டுபிடிப்பாளர். சீர்த்திருத்தவாதி. அதைவிட முக்கியம், அவர் அரசியல் சிந்தனையாளரும்கூட. அதனால் விருந்தில் உணவு வகைகளுடன் அரசியல் கருத்துக்களும் சுவைபட பரிமாறப்பட்டன.

பாபேஜ் அப்போது சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘The Ninth Bridgewater Treatise’. அந்தப் புத்தகம், இயற்கையை கடவுள் வடிவமைத்தார் என்கிற கருத்தைக் கிண்டல் செய்தது. மாறாக கடவுள் சில விதிகளை உருவாக்கி இயற்கையைத் தன்னியல்பாக இயங்க வைத்துள்ளார் என்று எடுத்துரைத்தது.

பாபேஜ், கால்குலேட்டரை உதாரணமாக வைத்து தன் கருத்தை விளக்கினார். கால்குலேட்டரில் நாம் எண்களை அழுத்தி கணக்குப்போடும்போது ஒவ்வொருமுறையும் அதைக் கண்டுப்பிடித்தவர் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். ஒவ்வொரு கணக்குக்கும் இப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கட்டளைகளைக் கொடுத்துவிட்டால் போதும். கால்குலேட்டர் தானே கணக்குகளுக்கான பதிலைத் தந்துவிடும். அதுபோல கடவுளும் இயற்கையை இப்படித்தான் இயங்க வேண்டும் என்று ஒருமுறை புரோகிராம் செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போய்விட்டார் என்றார் பாபேஜ்.

கடவுள் குறளிவித்தை காட்டுபவர் அல்ல என்றார் பாபேஜ். ஒவ்வொருமுறை புதிய விலங்கைப் படைக்க விரும்பும்போதும் அவர் மாயாஜாலம் நிகழ்த்தி வரவழைப்பதில்லை. கடவுள் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். அவர் படைப்புக்கான அத்தனை விதிகளையும் ஆரம்பத்திலேயே இயற்கையில் நிறுவிட்டார். இதனால் புதிய உயிரினங்கள் உருவாக கடவுளின் நுழையீடு தேவையில்லை. அவை தானாகே வந்துவிடுகின்றன. கடவுளின் நீண்டகால புரோகிராமிங் திட்டத்தின் அடிப்படையில் அந்தப் படைப்பு நிகழ்கிறது என்றார்.

இத்தனைக்கும் பாபேஜ் ஒன்றும் கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுளுக்கு முன்னோக்குப் பார்வை உண்டு என்பதைத்தான் நிரூபிக்க முயன்றவர். கடவுளை மந்திரவாதிபோலக் காட்சிப்படுத்தாமல், கூர்நோக்கு சிந்தனை கொண்டவராகக் கெளரவ பிம்பம் கொடுக்க முயன்றவர்.

இது டார்வினுக்குப் புதிய திறப்பைக் கொடுத்தது. இயற்கை என்பது அற்புதங்களால் அல்ல, விதிகளால் மட்டும் இயங்கக்கூடியது என்ற சிந்தனையை ஏற்றுக்கொண்டார் டார்வின். மாற்றம் என்பதைப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று புரிந்துகொண்டார். இதன்மூலம் உயிரினங்களின் தோற்றத்துக்குப் பின்னும் ஏன் விதிகள் இருக்கக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கினார் டார்வின்.

இத்துடன் மொழியியல் சிந்தனையும் டார்வினுக்குள் தாக்கம் செலுத்தியது. டார்வினுடைய தாய் வழி உறவினர், ஹென்ஸ்லே. அவர் ஒரு மொழியியல் ஆய்வாளர். மொழிகள் எப்படிக் காலப்போக்கில் மாறுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தவர். மொழிகளைத் தொல்லுயிர் எச்சங்களுடன் ஒப்பிட்டார் ஹென்ஸ்லே. ஒவ்வொரு மொழியும் அன்றாடப் பயன்பாட்டின்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வேறு வடிவத்தை எடுக்கின்றன. அனால் அவை சில தடயங்களை விட்டுச் செல்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் தோற்றத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்றார்.

இதையும் ஏற்றுக்கொண்டார் டார்வின். உண்மைதான், சொற்கள் கடந்த காலத்தைச் சுமந்து நிற்கின்றன. சொற்களை ஆராய்ந்தால் மொழியின் கடந்த காலத்தைக் கண்டறிந்துவிடலாம். அதேபோல பாறைகளும் கடந்த காலத்தைச் சுமந்து நிற்கின்றன. பாறைகளை ஆராய்ந்தால் பூமியின் கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதே வழியில் தொல்லுயிர் எச்சங்களே உயிர்களின் கடந்த கால உண்மையைத் தாங்கி நிற்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் உயிர்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்ற முடிவுக்கு வந்தார் டார்வின்.

இதன்படி பார்க்கும்போது தொல்லுயிர் எச்சங்கள் கடந்த கால விலங்குகளுக்கும் இன்றைய விலங்குகளுக்கும் ஒற்றுமையைக் காட்டின. எல்லா விலங்குகளுக்கும் உடல் அமைப்புகளில் ஒரே விதமான அடிப்படைத் திட்டம்தான் இருக்கிறது என்பதைக் கவனித்தார் டார்வின். வவ்வாலின் இறக்கைகள் ஆனாலும் சரி, திமிங்கலத்தின் செதில்களானாலும் சரி, மனிதக் கைகளானாலும் சரி. அவற்றுக்கு ஒரே எலும்புகள்தான் இருக்கின்றன. இவை அனைத்தும் எந்த ஒரு விலங்கும் தனித்துவமான படைப்புகள் இல்லை என்பதைக் காட்டுகின்றன. அப்படியென்றால் விலங்குகள் அனைத்தும் பொதுமூதாதையரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி வந்திருக்கின்றனவா? அவை மாறுவதற்கு ஏதுவான விதிகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பினார் டார்வின்.

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது விலங்குகளின் தோற்றத்துக்கு உருமாற்றம்தான் (Transmutation) காரணமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு டார்வின் வந்தடைந்தார். ஆனால் அந்த உருமாற்றம் நிகழ்வதற்கு என்ன காரணம்? பாபேஜ் போன்ற சிந்தனையாளர்கள் சொல்வதுபோல் கடவுள் உருவாக்கிய விதிகளா? அல்லது வேறு எதுவும் இருக்கின்றனவா? இந்தக் கேள்விதான் டார்வினை முக்கியமான ஒரு கோட்பாடு நோக்கி அழைத்துச் சென்றது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *