Skip to content
Home » டார்வின் #18 – உயிராற்றல்

டார்வின் #18 – உயிராற்றல்

இங்கிலாந்தின் முக்கியமான இயற்கை ஆய்வாளராக மாறிக்கொண்டிருந்தார் டார்வின். தொல்லுயிர் எச்சங்கள் குறித்த ஆய்வுகளும் ஃபிஞ்ச் பறவைகள் குறித்த அறிக்கைகளும் டார்வினைத் தீவிர அறிவியல் உலகுக்குள் அழைத்துச் சென்றன. புவியியல் கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் என எல்லா இடங்களிலும் டார்வினின் கண்டுபிடிப்புகள் விவாதிக்கப்பட்டன. டார்வினின் ஃபிஞ்ச் பறவைகள் ஆராய்ச்சியைப் பாராட்டும் வகையில் எல்லாப் பத்திரிகைகளிலும் ‘சார்லஸின் ஃபிஞ்சுகள்’ என்கிற பெயரில் செய்தி வெளியிட்டன. இப்படியான பாராட்டுகளும் கெளரவங்களும் அமைதியாக கிராமம் ஒன்றில் பாதிரியராக வேண்டும் என்ற எளிமையான ஆசை வைத்திருந்த டார்வினை ரணகளம் வாய்ந்த அறிவியல் உலகுக்குள் முழுவதுமாக இழுத்து வந்தன.

கலாபகஸில் இருந்து கொண்டு வந்த உயிரினங்கள் அவை அங்கே இருந்த தீவுகளுக்கு ஏற்றாற்போல் தனித்தன்மையுடன் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தின. அவ்விலங்குகள் தனித்தனி இனங்களாக மாறியுள்ளன என்பதையும் காட்டின. இதனால் விலங்குகள் தனித்துவிடப்படும்போது அவை புதிதான ஒன்றாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக டார்வின் புரிந்துகொண்டார்.

ஆனால் எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது?

இதற்கான பதிலை அவர் தேடிக்கொண்டிருந்தபோது உயிர்கள் குறித்து மற்ற விஞ்ஞானிகள் வைத்திருக்கும் வாதங்களையும் ஆராய்ந்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பலரும் ஜடப்பொருளுக்கு வெளியில் இருந்து கடவுள் தரும் ஆற்றலே உயிர் என்பதுபோல கூறிவந்தனர். ஆனால் ஜெர்மன் விஞ்ஞானியான ஜொஹானஸ் முல்லர் என்பவர் மட்டும் உயிர் என்பது வெளியில் இருந்த கடவுளின் சக்தியால் வரும் விஷயம் அல்ல. உயிரினங்கள் தன்னிச்சையாக இயங்கும் ஆற்றலை உள்ளுக்குள்ளேயே கொண்டிருக்கின்றன என்கிற வாதத்தை முன்வைத்தார்.

ஓர் உயிர் கருவிலேயே அதற்கான இயங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அந்த உள்ளார்ந்த ஆற்றல்தான் உயிரினங்களின் வளர்ச்சியையும் ஒழுங்கமைப்பையும் நிர்வகிக்கிறது என்றார் முல்லர். இதனை உயிராற்றல் என்று அழைத்தார்.

உயிராற்றல் குறித்து வேறு சில விளக்கங்களையும் கொடுத்தார் முல்லர். ஒரு உயிரி, கருவாக இருக்கும்போது அதன் உயிராற்றல் மிக வலிமையாக இருக்கும். ஆனால் கருவை வளரச் செய்யும்போது அந்த ஆற்றல் எல்லா இடங்களுக்கும் பரவ நேர்க்கிறது. அப்போது உயிராற்றலின் தீவிரம் குறையத் தொடங்குகிறது. இதனால் வளர்ச்சியும் தாமதப்படுகிறது. இதனால்தான் நமக்கு வயதாக ஆக, வளர்ச்சி குறைவாக நடைபெறுகிறது. அதேபோல ஒரு விலங்கு உற்ற வளர்ச்சியை அடைந்துவிட்டால், ஆற்றல் முழுமையாக தீர்ந்துபோய், அவ்விலங்கு இறக்க நேர்கிறது என்றார்.

டார்வினுக்கு இந்தக் கருத்து ஏற்கும்விதமாக இருந்தது. உயிரினங்கள் எவ்வாறு மாற்றம் அடைகின்றன என்கிற கேள்விக்கு முல்லரின் பதிலைப் பொருத்திப் பார்த்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் விவாதித்தார்.

டார்வினின் நண்பரான ரிச்சர்ட் ஓவன் இந்த வாதத்தை ஏற்கவில்லை. உயிர்கள் தாமாகவே வடிவமைத்துக்கொள்ளும் என்பது உண்மை இல்லை என்றார் ஓவன். உயிர் ஆற்றல் என்ற ஒன்று உடலில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அவற்றுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு மனிதக் கரு வளரும்போது உயிராற்றலினால் அதற்குக் கை, கால்கள் உருவாவதாக சொல்கிறீர்கள். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆற்றல் புதிய மாறுதல்களை ஏற்படுத்தாது. உதாரணமாக மனிதக் கருவிற்குத் திடீரென இறக்கைகளை முளைக்கச் செய்யாது. அதனால் உயிராற்றல் என்ற ஒன்று இருந்தால் அது தன்னிச்சையாக இயங்காது. கடவுளின் வழிகாட்டலில்தான் இயங்கும் என்று வாதிட்டார்.

ஆனால் டார்வின் விடுவதாக இல்லை. முல்லரைப்போல வேறு சில விஞ்ஞானிகளின் வாதங்களையும் நாடினார். அப்போது, செல்களின் உட்கருவைக் கண்டுபிடித்த தாவரவியலாளர் ராபர்ட் பிரவுனின் கூற்று அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. ராபர்ட் பிரவுன், உயிர் என்பது நமக்குள் சிறிய துகள்களாக இருக்கின்றன என்பதுபோன்ற ஒரு வாதத்தை முன்வைத்தார். விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் கருமுட்டைகளை ஆராய்ந்து வந்த அவர், முட்டைகளுக்குள் தாமாகவே இயங்கும் சிறிய துகள்கள் இருப்பதாகக் கூறினார். ஒரு பவளச் சிற்றுயிரியின் (Polyp) முட்டை உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் துகள்கள் சீறி வருவதை நாம் பார்க்க முடியும். அவைதான் உயிரின் மூலம். இதனால் உயிர் ஒரு பொருளின் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது வெளியே இருந்து வருவதில்லை என்று கூறினார்.பல புரட்சிகர சிந்தனையாளர்களும் அவரது கூற்றை உள்வாங்கி ‘உயிருள்ள அணுக்கள்’ நம்முள் இருக்கின்றன. அவைதான் நம்மை இயக்குகின்றன என்று கூறிவந்தனர்.

டார்வினுக்கும் இந்த வாதம் ஏற்புடையதாக இருந்தது. உயிரற்ற பொருட்களுக்கு கடவுள் ஆற்றல் தருகிறார் என்பதில் இருந்து, இயற்கை தன்னைத்தானே ஒழுங்கமைத்துக்கொள்ளும் ஆற்றலை உள்ளே வைத்திருக்கிறது என்ற மதச்சார்பற்ற கருத்துக்கு வந்து சேர்ந்தார் டார்வின்.

ஆனால் டார்வினின் திருச்சபை நண்பர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.

அவர்கள் உயிர் தானாக இயங்கவில்லை. கடவுள்தான் இயக்குகிறார் என்று கூறி வந்தனர். அதிகார வர்க்கத்தில் இருந்த அவர்களுக்கு உடலில் காணப்படும் அணுக்கள்தான் மனிதனை இயக்குகின்றன, கடவுள் இல்லை என்பதுபோன்ற கருத்துக்கள் அரசியல் ரீதியாக பிரச்னை தரக்கூடியதாக இருந்தன. அதிகாரம் என்பது சாதாரண மக்களிடம் இருந்து வருகிறது. மேலே கடவுளிடம் இருந்தோ, அரசரிடம் இருந்தோ வருவதில்லை என்ற அரசியல் கூற்றுக்கு நிகரானதாக அந்த அறிவியல் கூற்றுகள் இருக்கின்றன அல்லவா? அதனால் திருச்சபை விஞ்ஞானிகள் எதிர்த்தனர்.

மேலும், திருச்சபை விஞ்ஞானிகள் பரிணாம மாற்றத்தையும் அறமற்றது எனக் கருதினார்கள். விலங்குகள் அனைத்தும் வேறு ஒரு விலங்கிடம் இருந்து உருமாறி தோன்றுகின்றன என்றால் மனிதர்களும் ஏதோ ஒரு விலங்கில் இருந்து உருமாறி வந்தார்கள் என்றுதான் அர்த்தம். அதை ஏற்கும்பட்சத்தில் மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டிய நிலை வருகிறது இல்லையா? அப்படி மனிதர்களை விலங்குக்கு நிகராகப் பாவிக்கும்போது கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார் எனும் வாதம் அடிப்பட்டுபோகிறது. மேலும் மனிதனின் விசேஷத்தன்மையும் கேலிக்கு உள்ளாகிறது. இது மீண்டும் கடவுளின் பெயரால் மனிதர்களை அடக்கி ஆண்டு வரும் அதிகார வர்க்கத்தைப் பாதிப்பதாக அமையும். அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் நீதிநெறிகளையும், சமூக விழுமியங்களையும் கேள்வி எழுப்புவதுபோல் ஆகிவிடும். இதனால் பரிணாம மாற்றக் கொள்கையையும், உயிர் என்பது தன்னிச்சையாக இயங்குகிறது என்கிற சிந்தனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

ஆனால் டார்வின் பரிணாம மாற்றத்தை அப்படிப் பார்க்கவில்லை. பரிணாமத்தின் மூலம்தான் மனிதர்கள் மேன்மை அடைகிறார்கள் என்று கருதினார். மனிதர்கள் விலங்குகளில் இருந்து வந்திருப்பதால் விலங்குகளின் குணம் இருப்பது உண்மைதான். ஆனால் பரிணாம மாற்றம் மனிதர்களை மேம்படுத்திக்கொண்டேதான் செல்கிறது என்று வாதிட்டார் டார்வின்.

கீழேயுள்ள விலங்குகளில் இருந்து பரிணமித்துதான் மனிதர்கள் எனும் உயர்ந்த நிலை தோன்றி இருக்கிறது. இதனால் பரிணாமம் மனிதர்களை மேல்நோக்கி அழைத்துச் செல்கிறது என்றார் டார்வின்.

இத்துடன், பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது எல்லா மனிதர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புலனாகும் என்பதும் டார்வினின் கருத்து. ஆனால் அவ்வாறு சொல்வது அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் அடிமைத்தனம், இனவாதம் போன்றவற்றையும் எதிர்ப்பதுபோல் ஆகிவிடும். இதனால் டார்வின் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது அதிகாரவர்க்கத்தில் இருக்கும் தன் நண்பர்களையே பகைத்துக்கொள்வதுபோல் ஆகிவிடும் என்று அஞ்சினார் டார்வின். ரகசியமான ஒரு நோட்டுப் புத்தகத்தில்தான் அனைத்தையும் குறித்துக்கொண்டார். இதனை டார்வினின் சிவப்பு நோட்டுப் புத்தகம் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், பரிணாம மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. போதுமான தரவுகளும், ஆதாரங்களும் இல்லாமல் திருச்சபை விஞ்ஞானிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதும் அவரது எண்ணமாக இருந்தது.

0

இதற்கிடையில் உயிரினங்கள் எப்படி அழிகின்றன என்கிற கேள்வியும் டார்வினுக்குள் எழுந்தது. ஓர் உயிரினம் அழிந்தால்தானே புதிய உயிரினங்கள் தோன்ற முடியும்? அப்படியென்றால் பழைய உயிரினம் எப்படி அழிகின்றன என்பதை அறிந்துகொள்வது முக்கியமல்லவா? தேட ஆரம்பித்தார் டார்வின்.

இதற்கும் முல்லர் கூறிய உயிராற்றல் எனும் கருத்து பொருந்திப்போனது. இதன்படி பார்க்கும்போது தனி உயிர்களுக்குள் எப்படி உயிராற்றல் இயங்குகிறதோ அதேபோல ஒட்டுமொத்த இனத்தை அடிப்படையாக வைத்தும் உயிராற்றல் இயங்குவதாகத் தோன்றியது. ஒவ்வொரு இனத்தின் உயிராற்றலுக்கும் தனி ஆயுட்காலம் இருக்கிறது. அது தீர்ந்தவுடன் குறிப்பிட்ட இனங்கள் அழிந்துவிடுகின்றன என்று கருதினார் டார்வின்.

அதேபோல விலங்குகள் அழிவதற்குச் சுற்றுச்சூழல்தான் காரணம் என்கிற வாதமும் அப்போது விஞ்ஞானிகளிடம் இருந்தன. இதையும் ஆராய்ந்து பார்த்தார் டார்வின்.

வீட்டு விலங்குகள் எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்கின்றன. நாய்கள், பூனைகள், ஆடுகள், கால்நடைகள், குதிரைகள், கழுதைகள், இவை எல்லா நாட்டிலும், எல்லாச் சூழலிலும் இருக்கின்றன. ஆனால் அவை அழியவில்லையே ஏன்? இதன்படி பார்க்கும்போது சுற்றுச்சூழலால் விலங்குகள் அழிவது உண்மையில்லை என்ற முடிவுக்கு வந்தார் டார்வின்.

மேலும் தொல்லுயிர் எச்சங்கள் தொடர்பான ஆய்வுகளும் ஒரு குறிப்பிட்ட விலங்கினம் காலநிலைமாற்றமோ, சுற்றுச்சூழல் மாற்றமோ இல்லாமலேயே அழிந்துபோகிறது என்பதை அவருக்குக் காட்டியது.

இத்துடன் உயிரினங்களின் வடிவமைப்பும் உயினங்களின் அழிவில் பங்காற்றுகின்றனவா என்ற கேள்வியும் டார்வினுக்குள் எழுந்தது. சிறிய நுண்ணுயிரிகள் கிட்டத்தட்ட அழிவற்றவையாக இருக்கின்றன. ஆரம்பகால கடல் வாழ்வில் இருந்தே அவை இன்னும் அழியாமல் இருக்கின்றன. ஆனால் பாலூட்டிகளோ அழிந்து தொல்லுயிர் எச்சங்களாக மிஞ்சுகின்றன. இதனால் நுண்ணுயிரிகளுக்கு பாலூட்டிகளைவிட ஆயுட்காலம் அதிகம். இதன் காரணம் அதன் எளிய வடிவமாக இருக்கலாம் என யோசித்தார்.

ஏற்கெனவே உயிராற்றல் உடல் முழுக்க பரவும்போது தீர்ந்துவிடுகிறது என்கிற ஒரு வாதம் இருக்கிறது இல்லையா? அதன்படி சிக்கலான உயிர்களுக்குள் உயிராற்றல் அதிக இடங்களுக்குப் பரவுவதால் அவை தீர்ந்துபோகின்றன. எளிய உயிரினங்களில் உயிராற்றல் வலிமையாக இருப்பதால் அவை அழியாமல் இருக்கலாம் எனக் கருதினார்.

இந்த ஆய்வு முடிவுகளை புவியியல் கழகத்தில் ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார். தென் அமெரிக்காவில் கிடைத்த தொல்லுயிர் எச்சங்களில் காணப்படும் உயிர்களையும், அப்போது அவற்றுடன் வாழ்ந்த எளிய மெல்லுடலிகளையும் (Molluscans) ஒப்பிட்டு சிக்கலான உடல் அமைப்பைக் கொண்ட பிரமாண்ட விலங்குகள் குறைந்த ஆயுட்காலமே வாழ்ந்திருக்கின்றன. இதனால் சிக்கலான உயிரினங்களைவிட எளிய உயிரினங்களுக்கு ஆயுட்காலம் அதிகம் எனப் புவியியல் கழகத்தில் உரையாற்றினார். ஆனால் அதற்குக் காரணம், உயிராற்றல் என்றோ, உருமாற்றம் என்றோ அங்கே அவர் குறிப்பிடவில்லை. இது அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றிவிடும் என்று தவிர்த்துவிட்டார்.

ஆனால் இது இன்னொரு கேள்வியையும் உருவாக்கியது. ஒவ்வொரு உயிரினத்தின் உயிராற்றல் தீர்ந்தவுடன் அந்த உயிரினம் இறந்துவிடுகிறது என்றால், எப்படிப் புதிதான உயிரினம் தோன்றுகின்றன? அந்தப் புதிய உயிரினத்துக்கு வேண்டிய உயிராற்றல் எங்கிருந்து வருகிறது? ஒரு உயிரினத்துடன் உயிராற்றல் தீர்ந்துவிடுமானால் எப்படி புதிய உயிரினம் தோன்ற முடியும்?

அடுத்தடுத்த கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. டார்வினுக்கு மீண்டும் கலாபகஸ் தீவுகளின் உயிரினங்களிடம்தான் விடை இருப்பதாகத் தோன்றியது. அவைதான் உயிரினங்கள் மாற்றம் அடைந்து உருவாவதை நிரூபிக்கின்றன. இதனால் தாம் சேகரித்து வந்த உயிரினங்களில் வேறு எவை எல்லாம் மூதாதையரிடம் இருந்து பரிணாமம் அடைந்து வந்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார் அவர். ஹென்ஸ்லோவை அழைத்து கலாபகஸ் தாவரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனித் தீவுகளுக்கு ஏற்ப தனி இனங்களாக இருக்கின்றனவா என்று கேட்டார். மேலும் அங்கே கண்டடைந்த மீன்களை ஆராயும் வேலையையும் நண்பர் ஜெனினிடம் வழங்கினார்.

இந்தச் சமயத்தில் ஜான் குட் வாயிலாக வேறு சில உண்மைகள் தெரிய வந்தன. டார்வின் சேகரித்து வந்த பறவைகளை ஆராய்ந்த குட், படகோனியா தீக்கோழிகள் (Rhea) முற்றிலும் புதிதான இனத்தைச் சேர்ந்தவை என்றார். அவற்றுக்கு டார்வினைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘ரியா டார்வினி’ எனப் பெயரும் வைத்தார். ஆனால் பெயரைவிட இன்னொரு விஷயம்தான் டார்வினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டார்வின் சேகரித்து வந்த தீக்கோழி இனத்தில் சிறிய தீக்கோழிகளும், பெரிய தீக்கோழிகளும் தனித்தனி இனங்கள் என அறிவித்தார் குட். அதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் அவரை இரண்டும் அருகருகே வாழ்ந்து வந்தன. இது டார்வினின் சிந்தனையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

அதுவரை கலாபகஸ் தீவுகள் போன்று தனித்தனி இடங்கள்தான் புதிய உயிரினங்களை உருவாக்குகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தார் டார்வின். ஆனால் படகோனியாவில் இரண்டு தீக்கோழி இனங்கள் அருகருகே இருந்தது அவருக்கு அதிர்ச்சியூட்டியது. இது எப்படிச் சாத்தியம்? இவை இரண்டுக்கும் இடையில் எந்த இடைவெளியும் தடையும் இல்லாமல் எப்படிப் பரிணாம மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனச் சிந்திக்கத் தொடங்கினார்.

ஒருவேளை திருச்சபைவாதிகள் சொல்வதுபோல் கடவுள்தான் அவற்றைப் படைத்திருக்கிறாரா? இருக்காது. ஒருவேளை கடவுள் படைத்திருந்தால் வெவ்வேறு தோற்றத்திலான விலங்கை படைக்காமல், ஒரே மாதிரியுள்ள இரண்டு இனங்களை ஏன் படைக்க வேண்டும்? இதனால் ஒரே விலங்கு பரிணாம மாற்றத்தில்தான் இரண்டு இனங்களாகப் பிரிந்துள்ளது என்று தெளிவாகிறது. ஆனால் பரிணாம மாற்றம் என்றால் சிறிது சிறிதாக அல்லவா நடைபெற வேண்டும்? அவ்வாறு பார்க்கும்போது பெரிய தீக்கோழிக்கும் சிறிய தீக்கோழிக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து வந்திருக்க வேண்டிய மற்ற தீக்கோழிகள் எங்கே? இந்தக் கேள்விதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒருவேளை பரிணாம மாற்றம் என்பது படிப்படியாக நிகழக்கூடியது இல்லையா?

ஒரு புதிய உயிரினம் திடீரென இன்னொரு உயிரினத்தில் இருந்து தோன்றிவிடுகிறதா?

மருத்துவர்கள் குழந்தைகள் பிறக்கும்போது அவற்றின் உடலில் உருவ மாற்றம் ஏற்படுவதை ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். சில குழந்தைகள் பிறக்கும்போது மூன்று கைகள், ஒட்டிய கால்கள் ஆகியவற்றுடன் பிறக்கின்றன. இதேபோலத்தான் பெரிய தீக்கோழி இனம் திடீரென ஒரு சிறிய தீக்கோழி இனத்தைப் பெற்றெடுத்து புதிய இனத்தைப் படைத்துவிடுகிறதா?

தென் அமெரிக்காவில் பிரம்மாண்ட தொல்லுயிர் எச்சங்களில் காணப்படும் விலங்குகள் எல்லாம் இன்றைக்கும் வாழும் சிறிய அளவிலான அதேபோன்ற விலங்குகளை இப்படித்தான் உருவாக்கினவா?

ஆனால் கலாபகஸில் காணப்பட்ட ஃபிஞ்ச் பறவைகளில் உள்ள அலகுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவை மாற்றம் அடைந்திருக்கின்றன என்பதையே காட்டுகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்ளவது? அப்படியென்றால் தனித்த இடத்தில் வாழ்ந்தால் பரிணாம மாற்றம் சிறிது சிறிதாகவும், ஒரே இடத்தில் வாழும்போது பரிணாம மாற்றம் பெரிய மாற்றமாமவும் நிகழுமா? இப்படி நிகழக்கூடாதே. இயற்கையின் விதியில் முரண்பாடுகள் இருக்காதே. டார்வின் குழம்பிப்போனார்.

டார்வினுக்கு நேரம் குறைவாக இருப்பதுபோல் தோன்றியது. உருமாற்றம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை முடித்துவிட்டு, பீகல் நாட்குறிப்புகளைப் புத்தகமாக மாற்ற வேண்டும். இதைவிடப் பெரிய திட்டம் வேறு ஒன்று இருக்கிறது. பீகல் பயணத்தில் கண்டெடுத்த விலங்குகளை எல்லாம் நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து அவற்றை எல்லாம் தொகுத்து படங்களுடன் பெரிய புத்தகம் ஒன்றை வெளியிட வேண்டும். இதன்பின் பீகலில் கண்டடைந்த கடல் உயிரிகள், எரிமலைகள் குறித்த புத்தகம். இப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். ஆய்வு வேலைகளை ஆரம்பித்தத்தில் இருந்தே அவர் வெளியே செல்லவில்லை. விருந்துகளில் கலந்துகொள்ளவில்லை. அதிகம் வேலை செய்வதால் மன அழுத்தத்திலேயே சுற்றினார். வயிற்று வலி வேறு வாட்டியது.

அதேசமயம் இத்தனை ஆய்வுகளை முன்னெடுக்க அவருக்குப் பணம் வேறு தேவைப்பட்டது. தந்தை தரும் பணமெல்லாம் போதவில்லை. அரசிடம் நிதியுதவி கேட்க வேண்டும் என்று நினைத்தார்.

பிற விஞ்ஞானிகள் எப்படி நிதி பெறுகிறார்கள் என்று ஒவ்வொருவராக சென்று கேட்டறிந்தார். நிதி பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் கேட்டறிந்தார். அரசு நிதி கிடைப்பது அத்தனை சுலபம் கிடையாது என்றே எல்லா விஞ்ஞானிகளும் கூறினர். அதிர்ஷ்டமும் அதிகார வர்க்கத்தின் துணையும் இருந்தால்தான் நிதி கிடைக்கும் என்றனர்.

அவர்கள் சொன்ன இரண்டுமே டார்வினிடம் இருந்தன. ஹென்ஸ்லோ அவருக்கு கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த விக் எம்பியான தாமஸ் ஸ்பிரிங் ரைஸ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் சில நிமிடங்கள்தான் பேசினார் டார்வின். அந்தச் சந்திப்பிலேயே ஆண்டுக்கு 1000 பவுண்டுகள் ஆய்வு நிதி வழங்க ஒப்புக்கொண்டார் ஸ்பிரிங் ரைஸ்.

இத்தனைக்கும் டார்வின் அப்போது முழுமையான விஞ்ஞானிகூட கிடையாது. சரியான நபர்களிடம் இருந்த நட்பு டார்வினை அவர் விரும்பிய விஷயங்களைப் பெற வைத்தது. நிதி கிடைத்த கையுடன் ஆய்வுகளை முடுக்கிவிட்டார் டார்வின்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *