உயிரினங்கள் ஏன் மாறுகின்றன? எப்படி மாறுகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்துவிட்டால் உயிரினங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று டார்வினுக்குத் தோன்றியது.
முதலில் எளிமையான கேள்விகளில் இருந்து ஆரம்பித்தார் டார்வின். எப்போது உயிரினங்களில் மாற்றம் ஏற்படுகிறது? இனப்பெருக்கம் மூலம் புதிய தலைமுறையை உருவாக்கும்போது. அப்படியென்றால் எதனால் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்? பெற்றோர்களுடைய பண்புகள் கலப்பதால் மாறுபாடுகள் (Variation) தோன்றி இருக்கலாம். ஏன் இந்த மாறுபாடுகள் நிகழ வேண்டும்? பயன்பாடு இருப்பதால்தான் மாறுபாடுகள் நிகழ வேண்டும். இந்த மாறுபாடுகள் ஏதோ ஒரு வகையில் பிழைத்திருக்க உதவுவதால் இந்த மாற்றம் ஏற்படலாம் இல்லையா? இதனால் உயிரினங்கள் பிழைத்திருக்க வேண்டி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தார் டார்வின்.
இப்போது டார்வினுக்குச் சட்டென்று இன்னொரு விஷயம் புரிந்தது. விலங்கினங்களின் அழிவு திடீரென உயிராற்றல் தீர்ந்துபோனதால் ஏற்படுவது அல்ல. உயிரினங்கள் வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்றவாறு மாறுபாடுகளைப் பெறாமல் போவதால் நிகழ்வதாக இருக்கலாம். இதனால் மாற்றம் என்பதே தகவமைப்புத் திறனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற முடிவை வந்தடைந்தார் டார்வின்.
ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருந்தது. புதிய மாறுபாடுகள் உருவான விலங்கினம் மீண்டும் தன் பழைய இனத்துடன் கலக்கும்போது அந்த மாற்றம் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது அல்லவா? இதனை எப்படித் தடுப்பது? இது நடக்காமல் இருக்க, தனித்துவிடுதல் அவசியம். உதாரணமாக கலாபகஸ் தீவுகளில் தனித்துவிடப்பட்ட பறவை இனம், அவற்றுக்கு இடையே கலந்து புதிய பண்புகளைப் பெறுகிறது. இப்படிப் புது பண்புகள் உருவாக, உருவாக கொஞ்சம் கொஞ்சமாக அவை மூதாதையர் பறவையைவிட வித்தியாசமாக மாறுகின்றன. எவ்வளவு காலத்துக்கு ஓர் உயிரினம் தனித்த இடத்தில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றின் வித்தியாசங்களும் அதிகம் இருக்கும். இப்படித்தான் புதிய உயிரினம் உருவாகிறது என்ற புரிதலுக்கு வந்துவிட்டார்.
ஆனாலும் இந்த மாற்றம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் டார்வினுக்குத் தோன்றியது. உதாரணமாக குரங்குகளில் ஏற்படும் மாற்றம் இறக்கை முளைப்பதுபோன்று முற்றிலும் அந்நியமாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு விலங்கினத்துக்கும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்று இருக்கிறது. இதனால் மாற்றம் ஏற்படும்போது இந்த அடிப்படைக் கட்டமைப்பின் மேல்தான் நிகழ வேண்டும் என்று புரிந்துகொண்டார்.
டார்வின் தொடர்ந்து யோசித்தார். விலங்குகளும் தாவரங்களும் எப்படி வந்திருக்கலாம் என வரலாற்றை அறியும் வகையில் ஒரு மரம் ஒன்றை வரைந்தார். அந்த மரத்தின் தண்டுதான் மூதாதையர். மூதாதையரில் இருந்து கிளை தொடங்குகிறது. ஒவ்வொரு கிளையும் புதிய உயிரினமாக விரிகிறது. கிளையின் முனைதான் அந்த உயிரினம் அழிந்துபோவதன் அடையாளம். அப்படியென்றால் உயிர் என்பது பல காலத்துக்கு முன்பு ஒருமுறை தொடங்கி, தொடர்ந்து முடிவில்லாமல் கிளைவிடுகிறது. ஒருவேளை உயிர் பலமுறை தொடங்கி இருந்தால், இங்கே நிறையத் தொடர்பில்லாத மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிந்தித்தார் டார்வின்.
உயிர்களைப் பற்றிய தேடல் டார்வினுக்கு மனிதர்களைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொண்டே வந்தது. மதவாதிகள் சொல்வதுபோல் மனிதர்கள் மேம்பட்டவர்கள், கடவுளின் வாரிசுகள் என்பதெல்லாம் சிரிப்புமூட்டுவதாக இருந்தது. மனிதர்களையும் விலங்குகளுக்கு நிகராக வைத்தார் டார்வின்.
ஒரு விலங்கு மற்றதைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறது எனச் சொல்வது அபத்தம். மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே உயரிய அறிவாற்றல் இருப்பதாகக் கருதுவது முட்டாள்தனம். ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதற்கே உரிய புத்திசாலித்தனம் இருக்கிறது. தேனீக்களுக்கு பூக்களைப் பிரித்தரிந்து தேன் எடுக்கும் உள்ளுணர்வு இருக்கிறது. தாவரங்களுக்கு சூரிய ஒளி இருக்கும் திசையை நோக்கி வளரும் நுண்ணறிவு இருக்கிறது. இதனால் மற்ற விலங்குகள் மனிதர்களுக்குக் கீழானவை என்று சொல்லக்கூடாது. மனிதர்களும் மற்ற விலங்குகளும் சமமானவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார். மேலும் பரிணாம மாற்றம் விலங்குகளை உயர்த்துகிறது என்ற கருத்தில் இருந்தும் அவர் பின்வாங்கினார். விலங்குகள் மாற்றம் அடையும்போது அவை மேல் நோக்கி நகர்வதில்லை. மரம் கிளை விரிப்பதைப்போல எல்லாத் திசைகளிலும் பரவுகின்றன. இதனால் உயிரினங்களுக்கு இடையில் மேல் கீழ் என்பது இல்லை. இதனால் மனிதர்கள் எல்லா விலங்குகளையும்விட உச்சத்தில் இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடாது என்றார்.
ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் அவர் வெளியே தெரிவிக்கவே இல்லை. ரகசியமாகவே வைத்துக்கொண்டார். குறிப்பாக அறிவியல் உலகில் அவரது செல்வாக்கு உயர உயர அவரது ரகசியங்களும் பாதுகாக்கப்பட்டன.
அப்போது புவியியல் கழகத்தில் இருந்து டார்வினுக்குப் புதிய பொறுப்பு ஒன்று தேடி வந்தது. ஆய்வுகள் ஒருபக்கம் நடைபெறும் அதே நேரத்தில், புவியியல் கழகத்தில் அவ்வப்போது உரையாற்றுவதிலும் ஈடுபட்டு வந்தார் டார்வின். அவரது பங்களிப்பைக் கெளரவிக்கும் விதமாக புவியியல் கழகத்தின் செயலாளராகப் பதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் டார்வின் அதை ஏற்கவில்லை. ஆய்வு பணிகளுக்கே நேரம் போதாமல் தள்ளாடுகிறேன். இதில் நிர்வாகப் பதவிகளை எப்படிக் கையாள முடியும் என நினைத்தார்.
உடல்நிலை வேறு அவரை வாட்டத் தொடங்கியது. நெருக்கமான லண்டன் வீதி மூச்சு முட்டியது. வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் வேறு கூடியது. மருத்துவர்கள் அவரைக் கிராமப்புறத்தில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தார். இதையே காரணம்காட்டி பதவிகள் வேண்டாம் என மறுத்தார். ஆனால் புவியியல் கழக உறுப்பினர்கள் விடுவதாக இல்லை. குறிப்பாக அப்போது புவியியல் கழகத்தின் தலைவராக இருந்த வில்லியம் வீவெல், தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் டார்வினையும் அவரது ஆய்வுகளையும் புகழ்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். பீகல் பயணம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான சாதனை என்று புகழாரம் சூட்டினார். இப்படி எல்லாப் பக்கங்களிலும் தன்னுடைய படைப்பைப் புவியியல் கழகம் எடுத்துச் செல்ல, தர்மசங்கடம் காரணமாக செயலாளராகப் பணியாற்ற ஒப்புக்கொண்டார்.
அதேசமயம் அங்கே தனது பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் பற்றி மூச்சுகூட விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். உண்மையில் டார்வினுக்கு அங்கிருந்தவர்களின் நட்பு பிடித்திருந்தது. ஆனால் சிந்தனை பிடிக்கவில்லை. அங்கே இருந்த எல்லோரும் பரிணாம வளர்ச்சியை அசிங்கமான, அறமற்ற, ஆபத்தான கோட்பாடாகப் பார்த்தனர். டார்வினின் நண்பர் செட்ஜ்விக், பரிணாமக் கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். செட்ஜ்விக்கைப் பொறுத்தவரை அறிவியல் என்பது மக்களை அறத்துடன் வழிநடத்தும் கருவியாக வேண்டும். கடவுளையும் சமூக ஒழுங்கையும் கட்டிக்காப்பதாக இருக்க வேண்டும். சமூகத்தைச் சீர்குலைக்கும் விதமாக, கேள்வி எழுப்புவதாக இருக்கக்கூடாது என்பது அவர் கருத்து.
புவியியல் கழகத்தின் தலைவர் வீவெல் டார்வினிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘பூமியின் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் தூங்குவதற்கும், உழைப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடவுளுக்குத்தான் மனிதர்கள் மேல் எத்தனை பிரியம் பாருங்கள்’ என்று கூறினார். கொந்தளித்துவிட்டார் டார்வின். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் பிரபஞ்சமே மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்று அகந்தை பிடித்து அலைவார்கள்போல என வசைபாடினார்.
அதேசமயம் இதை எதையுமே அவர் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. அவருக்கு மூத்த விஞ்ஞானிகளின் அங்கீகாரம் வேண்டி இருந்தது. புகழ் ஏக்கம் இருந்தது. இதனாலேயே சமூகத்தில் ஒருவிதமாகவும், தனிப்பட்ட முறையில் இன்னொருவிதமாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார். பொதுவில் எல்லோரையும் மதித்து நடப்பார். தனிப்பட்ட முறையில் எல்லோரையும் பரிகாசிப்பார். இதுதான் டார்வின்.
அப்போது இங்கிலாந்தின் பழமைவாத ஆங்கிலிக அதிகாரத்தை விக்குகளும் இடதுசாரிகளும் அரசியல் ஊடாக எதிர்த்தபோது, டார்வினோ அறிவியலின் ஊடாக மறைமுகமாக எதிர்த்துக்கொண்டிருந்தார். டார்வினைப் பொறுத்தவரை மனித மூளை என்பதே விலங்குகளிடம் இருந்து, ஏன் புழுக்களிடம் இருந்துகூட பொதுமையை பெற்று உருவாகியுள்ளது. இப்படி இருக்கும்போது மனிதன் உன்னதமானவன் என்கிற கொள்கையே போலித்தனம் வாய்ந்தது இல்லையா என்பதுதான் டார்வினின் வாதம்.
இத்தகைய கருத்துகள் மனிதனின் புனிதத்தை, மேன்மையை அழிப்பதாக இருப்பதால், கடவுளின் நீதி நெறிகளை கேள்வி எழுப்புவதால், பாவம், புண்ணியம், தண்டனை எல்லாவற்றையும் விமர்சிப்பதால்தான் அவற்றைப் பற்றி மூச்சுவிடாமல் ரகசியம் காத்தார். ஒருவேளை அவை வெளியே தெரிந்தால், தன்னை தீவிரவாதியாக, நாசகரவாதியாக பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சினார்.
அதேசமயம் டார்வினுக்கு தன் கருத்தின் மீது நூறு சதவிகித நம்பிக்கை இருந்தது. உயிரினங்கள் மீதான ஆய்வு மட்டும் வெளியே வந்தால் உடல்கூறியல், உள்ளுணர்வியல், மரபுசார் ஆய்வு, தத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் எனப் புரிந்தது. இதனாலேயே ஆய்வுகளை விட்டுவிடாமலும் பிடிவாதமாகத் தொடர்ந்தார்.
(தொடரும்)

