புதிய உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன? இந்தக் கேள்விதான் டார்வினுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. உயிரினங்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உருமாறுகின்றன என்பது வெளிப்படை. ஆனால் ஒரு புதிய மாற்றம் தோன்றியவுடன் அவை எப்படி நிலைத்து நிற்கின்றன? அந்த மாற்றத்தைக் கொண்ட விலங்கு தம் இனத்துடன் கலக்கும்போது அந்த மாற்றம் மீண்டும் மற்ற பண்புகளுடன் கலந்து மறைந்துவிடாதா? அப்படி மறையாமல் இருக்க அவை தனித்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை கலாபகஸ் தீவுகளில் கண்டெடுக்கப்பட்ட உயிரினங்கள் காட்டுகின்றன. ஆனால் தென் அமெரிக்கத் தீக்கோழிகள் வேறு பதிலைக் கூறுகின்றனவே. அவை ஒரே இடத்தில் இருந்தபடியே வெவ்வேறு இனங்களாகப் பரிணமித்துள்ளனவே. அப்படியென்றால் பரிணாம மாற்றம் வேறு வழியிலும் நிகழ்கிறதா? குழப்பமாக இருந்தது டார்வினுக்கு.
இதற்கான பதிலைப் பல விஞ்ஞானிகளிடம் தேடிக்கொண்டிருந்தார் டார்வின். ஆனால் அவருக்கான பதில் எதிர்பாராத சாதாரண விவசாயிகளிடம் இருந்து கிடைத்தது.
1838ஆம் ஆண்டு டார்வினைச் சந்திக்க வந்தார், வில்லியம் யாரெல். யாரெல், லண்டனில் பத்திரிகைகளை விநியோகம் செய்யும் முகவர். விவசாயியும்கூட. அறிவியலில் ஆர்வம் காரணமாக அவ்வப்போது தம் பண்ணை விலங்குகளைக் கூர்ந்து கவனித்து சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவர், டார்வினைத் தன் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே ஏகப்பட்ட விலங்குகள் இருந்தன. நாய்கள், ஆடுகள், மாடுகள், வாத்துகள், கோழிகள், மீன்கள். இதில் டார்வினைக் கவர்ந்தது நாய்கள். பண்ணை வீட்டில் ஏராளமான நாய் வகைகள் இருந்தன. செல்லமாக வளர்க்கக்கூடிய நாய்கள், வேட்டை நாய்கள், கால்நடைகளைக் பாதுகாக்கும் காவல் நாய்கள், நாய்களின் கலப்பினங்கள், இன்னும் பல. இவற்றைப் பார்த்தபோது டார்வினுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நாய்களை எல்லாம் எங்கே இருந்து வாங்குகிறீர்கள் என்று கேட்டார் டார்வின். இவை அனைத்தும் பண்ணையில்தான் பிறந்தன என்றார் யாரெல். எப்படி வித்தியாசமான நாய்கள் இங்கே பிறக்கின்றன என்றார் டார்வின். நாங்களே தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி நாய்களை உருவாக்குவோம் என்றார் யாரெல்.
அவ்வளவுதான். சட்டென்று டார்வினுக்கு அத்தனை நாட்கள் தேடிக்கொண்டிருந்த விடை கிடைத்ததுபோல் இருந்தது. ஒரு மாற்றம் அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு யாராவது ஒருவர் தேர்வு செய்தால் ஒரே இடத்தில் வெவ்வேறு இனங்களை உருவாக்கிவிட முடியும்! தீக்கோழி குறித்த பதில் இங்கே டார்வினுக்குக் கிடைத்தது.
இதன்பின் லண்டனைச் சுற்றியுள்ள நிறையப் பண்ணைகளுக்குச் சென்றார் டார்வின். அங்கு விலங்கு வளர்ப்பாளர்களிடம் எல்லாம் உரையாடினார். குறிப்பாக லண்டனில் புறா வளர்ப்பாளர்கள் அதிகம் இருந்தனர். அவர்களைச் சந்தித்து எப்படிப் பல தோற்றங்களில் புறாக்களை வடிவமைக்கிறார்கள் என்று கேட்டறிந்தார்.
அப்போது டார்வினின் நண்பர்களில் ஒருவரும், பறவை வளர்ப்பாளருமான சர் ஜான் செப்ரைட் டார்வினிடம் சொன்னார், ‘நீ என்ன மாதிரியான புறா வேண்டும் என்று சொல் டார்வின், நான் உருவாக்கித் தருகிறேன். நீ கேட்கும் வகையிலான சிறகுகளை மூன்று வருடங்களில் என்னால் உருவாக்கிவிட முடியும். நீ கேட்கும் உடல் அமைப்பை ஆறு மாதங்களில் என்னால் உருவாக்கிவிட முடியும். நாம் செய்ய வேண்டியது தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்ய அனுமதிப்பது. அவ்வாறு செய்யும்போது நாம் விரும்பும் பண்புகளைப் பெறலாம் டார்வின்’ என்றார்.
இதன்மூலம் டார்வினுக்கு ஒன்று புரிந்தது. இயற்கையில் தோன்றும் பண்புகள் தன்னிச்சையானவை. நாம் ஏற்கெனவே நினைத்ததுபோல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அவை வருவதில்லை. தன்னிச்சையான அந்தப் பண்புகளைத் தேர்ந்தெடுத்து நாம் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கும்போது அந்தப் பண்பு தொடர்ந்து அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. இதைக் கொண்டு நாம் விரும்பிய தோற்றத்தில் விலங்குகளை உருவாக்கலாம்.
இதேபோல இயற்கையிலும் விலங்குகளிடம் மாற்றங்கள் தோன்றுகின்றன. இப்படித் தோன்றிய பல்வேறு மாற்றங்கள் கலக்கும்போது புதிய வடிவங்களில் தலைமுறைகள் உருவாகின்றன. இவை நீண்டகாலத்துக்குத் தொடரும்போது அவை மூதாதையரிடம் இருந்து பிரித்து தனித்த உயிரினமாகவே மாறிவிடுகின்றன. இப்படித்தான் உயிர்கள் பிறக்கின்றன என்று புரிந்துகொண்டார்.
ஆனால் இங்கே ஒரு கேள்வி வந்தது. மனிதர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் விலங்குகளை இணைய வைக்கிறோம். நாம் பார்ப்பதற்கு வித்தியாசமாக, அழகாக இருக்கும் பண்புகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது நமக்குப் பயன்படும் பண்புகளைக் கொண்ட விலங்குகளைத் தேர்வு செய்கிறோம். அவற்றை இணைய விட்டு நமக்குப் பிடித்த தோற்றத்தில், பயன்பாட்டில் விலங்குகளை உருவாக்குகிறோம். ஆனால் இயற்கை எப்படி விலங்குகளை இணைய வைக்கிறது? ஒருவேளை இயற்கையும் தேர்வு செய்கிறதா? அவ்வாறு தேர்வு செய்தால் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறது? அழகையும் பயன்பாட்டையும் வைத்துதான் இயற்கையும் தேர்ந்தெடுக்கிறதா?
இதற்கான பதிலும் செப்ரைட்டிடம் இருந்தே கிடைத்தது.
இனப்பெருக்கத்தின் வேறு சில கூறுகளையும் டார்வினுக்குக் கூறினார் செப்ரைட். விலங்குகள் இடும் எல்லாக் குட்டிகளும் பிழைப்பதில்லை டார்வின். பலவீனமான வாரிசுகள் இனப்பெருக்கம் செய்வதற்கு முன்பே இறந்துவிடுகின்றன. அதேபோல் பெண் உயிரினங்கள் வலிமையான ஆண்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஒருவேளை அவை பலமான குட்டிகளைத்தான் விரும்புகின்றனபோல என்றார்.
ஆஹா. இதுதான் பதிலாக இருக்குமோ என்று உரைத்தது டார்வினுக்கு.
இயற்கை அழகுக்காகவோ பயன்பாட்டிற்காகவோ விலங்குகளைத் தேர்வு செய்வதில்லை. அது வலிமையை அடைப்படையாக வைத்து விலங்குகளைத் தேர்வு செய்கிறது. விலங்குகளில் ஏற்படும் மாற்றங்கள் நாம் நினைத்ததுபோல் சூழலுக்குப் பயனுள்ளதாக மட்டுமே இருப்பதில்லை. பயனுள்ள மாற்றம், பயனற்ற மாற்றம் என இரு வகைகளுமே விலங்குகளிடம் தோன்றுகின்றன. இதில் பலவீனமான மாற்றங்கள் பிழைப்பதில்லை. கடுமையான குளிர்காலமோ, வேறு விலங்குகளோ அவற்றைக் கொன்றுவிடுகின்றன. அவற்றைத் தாக்குப்பிடிக்கும் வலுவான வாரிசுகள் மட்டுமே பிழைத்துக்கொள்கின்றன. இப்படித்தான் வலிமையான சந்ததிகள் உருவாகின்றன. இப்படி ஆயிரம் ஆண்டுகளாக வலுவான, பிழைக்க உதவும் மாற்றங்கள் மட்டுமே நிலைத்து, அவையே பல்வேறு உயிரினங்களாகப் பிரிந்துள்ளன என்ற முடிவுக்கு வந்தார் டார்வின்.
இப்படித்தான் இயற்கைத் தேர்வு குறித்த கோட்பாடு அவரது மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக்கொண்டிருந்தது. ஆனால் உடனே இதை முழு உண்மை என்று அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சோதித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். விலங்குகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அதன்பின்தான் முடிவுக்கு வர வேண்டும் என்று தீர்மானித்தார்.
சோதனைகளைத் தொடங்கினார்.
அருகில் இருந்த விலங்கியல் பூங்காக்களுக்குச் சென்றார். அங்கே விலங்குகளைக் கூர்ந்து கவனித்தார். விலங்கியல் பூங்காவில் இரண்டு காண்டா மிருகங்கள் ஒன்றோடு ஒன்று உதைத்துக்கொண்டு விளையாடின. அதேபோல ஒராங்குட்டான் வகை மனிதக் குரங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குரங்குக்கு ஆடை உடுத்திவிட்டிருந்தனர் நிர்வாகிகள். பார்ப்பதற்கு மனிதர்களைப்போன்றே தோன்றியது அந்தக் குரங்கு. அதன் நடத்தைகளும் மனிதர்களைப்போன்றே இருந்தது.
நம் குழந்தைகள் என்னவெல்லாம் குறும்பு எல்லாம் செய்யுமோ அவை அத்தனையையும் அந்தக் குரங்கும் செய்தது. அந்தக் குரங்கிடம் ஆப்பிள் தருவதுபோல ஏமாற்றியபோது தரையில் உருண்டு பிறண்டு அடம்பிடித்து அழுதது. உதைத்தது. பிறகு பழத்தைக் கொடுத்தவுடன் ஆசுவாசம் அடைந்தது சிரித்தது. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து குழந்தையைப்போல் சாப்பிட்டது.
இந்தக் காட்சிகள் டார்வினுக்குள் பல கேள்விகளை தோற்றுவித்தன. எப்படி அந்தக் குரங்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது? எப்படி அந்தக் குரங்கு மனிதர்களைப்போன்றே விஷயங்களைப் புரிந்துகொள்கிறது?
டார்வின் தன் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதினார்:
ஓராங்குட்டான் அழுதது. மனிதர்கள் பேசிய வார்த்தையைப் புரிந்துகொண்டது. தெரிந்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்தியது. கோபத்தில் கொந்தளித்தது. கவலைகொண்டது. இதைத்தான் மனிதர்களும் செய்கிறார்கள். காட்டில் வாழும் பழங்குடி மக்கள் கிட்டத்தட்ட அந்தக் குரங்கைப்போலத்தான் நடந்துகொள்கிறார்கள். ஆடையில்லாமல், பண்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். பின் ஒருகட்டத்தில் அவர்கள் சில சூழல்களின் அடிப்படையில் நாகரிகம் அடைகிறார்கள். இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு விஷயங்கள் புரிகின்றன. ஒன்று, மனிதர்கள் மட்டுமே புத்திசாலிகள் அல்ல. விலங்குகளுக்கும் மொழி புரிகிறது. உணர்வுகள் இருக்கின்றன. இரண்டாவது, குரங்குகளும் மனிதர்களின் பண்பு ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன என்றால், மனிதர்கள் ஏன் குரங்கில் இருந்து வந்திருக்கக்கூடாது!
(தொடரும்)

