Skip to content
Home » டார்வின் #21 – திருமணம்

டார்வின் #21 – திருமணம்

பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. அந்த ஆய்வுப் பணிகள் டார்வினின் மன அழுத்தத்தைக் கூட்டின. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் என்பதுபோல இருந்தது. பயண ஞாபகங்கள் வேறு படுத்தின. கடலில் இருக்கும்போது எப்போது வீடு திரும்பலாம் என மனம் தவித்தது. இப்போது வீட்டில் இருக்கும்போது அடுத்த பயணம் எப்போது என ஏங்குகிறது. என்ன மடத்தனமான மனம் இது?

நெருக்கமான லண்டன் வீதிகள் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. பயணத்தின் கடுமையான சூழலில்கூட பெரிதாகப் பாதிப்படையாத உடல்நிலை லண்டனில் வீட்டுக்குள் இருக்கும்போது பாதிக்கத் தொடங்கியது. மருத்துவர்களிடம் சென்று விசாரித்ததில் பரம்பரை வியாதி என்று விளக்கம் கொடுத்தனர். தந்தை ராபர்ட்டுக்கு இருந்த அதே வயிற்று உபாதை உங்களுக்கும் வந்துவிட்டது. ஓய்வு மட்டுமே உடலைத் தேற்றும் என்றனர். டார்வினோ நிலைகொள்ளால் ஓடிக்கொண்டிருந்தார். இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டு எப்படி ஓய்வு எடுப்பது?

எதிர்காலம் குறித்த சிந்தனை வேறு டார்வினை அச்சுறுத்தியது. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? பாதிரியாராக வேண்டும் என்பது அல்லவா என் கனவு? அமைதியான வாழ்க்கையை அல்லவா நான் விரும்பினேன்? இப்போது ஏன் தேவையில்லாமல் இந்த ஆய்வுகளை இழுத்துப்போட்டுக்கொண்டு, நண்பர்களையும் பகைத்துக்கொண்டு, உடல்நிலையையும் கெடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்? பேசாமல் விட்டுவிடவா? கேம்பிரிட்ஜில் யாரையாவது பிடித்து பேராசிரியர் வேலை ஒன்று வாங்கிக்கொண்டு ஹென்ஸ்லோவைப் போல கிராமப்புற வீடு ஒன்றில் வாழ்க்கையை ஓட்டிவிடவா? அமைதியான வாழ்க்கை. நிலையான வருமானம். இது போதாதா? ஏன் இந்த ஆய்வுகள், தொந்தரவுகள், தலைவலிகள்?

லைலைச் சந்தித்தபோது மனதில் குழம்பிய கேள்விகளை முன்வைத்தார் டார்வின். லைலோ டார்வினுக்கு கேம்பிரிட்ஜ் வாழ்க்கை வேண்டாம் என்று அறிவுறுத்தினார். நீ இப்போது இருக்கும் பரபரப்பு வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியான கிராம வாழ்க்கையை வாழலாம் என்று விரும்புகிறாய். ஆனால் கிராம வாழ்க்கை உன் மூளையை மழுங்கடித்துவிடும். உடலைச் சோம்பலேற்றிவிடும். உனக்குள் இருந்து வெடித்து வெளிவரும் கருத்துக்கள் அத்தனையும் அணைந்துவிடும். உன் சிந்தனைகள் முக்கியமானவை. இயற்கையின் ரகசியங்களை வெளிக்கொணர்பவை. சிரமங்கள் பாராமல் நீ இப்போது செய்திருக்கும் வேலையையே தொடர்ந்து செய்தால் எக்காலத்துக்கும் உன் புகழ் அழியாமல் நிலைக்கும். அதனால் லண்டனிலேயே தொடர்ந்து இரு என்று வலியுறுத்தினார் லைல். வேண்டுமென்றால் திருமணம் செய்துகொள். அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் ஏற்படும் எனப் பரிந்துரைத்தார்.

அப்போதுதான் திருமணம் பற்றிய எண்ணம் டார்வினுக்கு எழுந்தது.

திருமணம் உண்மையிலேயே டார்வினுக்குப் பிடித்த விஷயம். திருமணம் செய்யாதவர்கள் கம்பளிப்பூச்சியைப்போல இலக்கற்று திரிபவர்கள் என்று சொல்பவர் டார்வின். ஆனால் திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கை? அதிகம் பொறுப்பும் நிறைய பொறுமையும் வேண்டும் இல்லையா? அதனால் திருமணத்தால் விளையும் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டிருந்தார்.

திருமணம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? கடவுளின் அனுகிரகம் இருந்தால் குழந்தைகள் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் நம்மைப் பார்த்துக்கொள்ள ஒரு துணை கிடைக்கும். கடைசிக் காலத்தில் உட்கார்ந்து பேச தோழி ஒருவர் கிடைப்பார். நம்மை நேசிக்க, நம்முடன் விளையாட, வீட்டைப் பார்த்துக்கொள்ள நண்பர் ஒருவர் கிடைப்பார். முடியாத நேரத்தில் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு தாய் கிடைப்பார். இதுவே திருமணமானால் எதையெல்லாம் இழக்க வேண்டியது வரும்? பயணிக்கும் சுதந்திரத்தை இழக்க வேண்டியது வரும். நண்பர்களுடன் ஊர் சுற்ற முடியாது. வாசிக்கவும், அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடவும் முடியாது. உறவினர்களைச் சந்திக்கும் கட்டாயம் ஏற்படும். சின்னச் சின்ன விஷயங்களும் பூதாகரமாகும். கோபம் வரும். தேவையில்லாத கூச்சல்கள் வரும். செலவு பிடிக்கும். மன அழுத்தம் ஏற்படும். பொறுப்புகள் கூடும். சோம்பேறியாகிவிடுவோம். குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதால் புத்தகங்கள் வாங்க காசு இருக்காது. குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய கடமை இருப்பதால் அதிகம் வேலை செய்ய வேண்டியது வரும். அதிகம் வேலை செய்வது உடல் நலனுக்கு நல்லது அல்ல. இதனால் திருமணமும் நல்லதல்ல. இப்படிப் பட்டியல்போட்டுப் பார்த்தார்.

டார்வினுக்கு இன்னுமே சில கனவுகள் இருந்தன. அமெரிக்காவுக்கு ஆய்வு பயணம் செல்ல வேண்டும். உயிரினங்களின் உருமாற்றம் பற்றிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும். திருமணம் ஆனால் சுதந்திரமாகச் சுற்ற முடியுமா? சுதந்திரமாக அறிவியலில் ஈடுபட முடியுமா? திருமணத்திற்காக அறிவியலை விட்டுவிட முடியாது. அறிவியல் இல்லாமல் குடும்பஸ்தனாக இருப்பது சிறையில் இருப்பதுபோல் அபாயமானது. அதேபோல் பணமில்லாமலும் திருமணம் செய்யக்கூடாது. ஏழையாகத் திருமணம் செய்தால் மனைவியைக் குறைகூறிக்கொண்டே திரியும் சாதாரண வாழ்க்கையில் சிக்கிவிடுவோம். அதனால் அறிவியலுக்கும் பாதகம் வராமல், வருமானத்துக்கும் வழி கிடைக்கும் ஒரு துணை கிடைத்தால் திருமணம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்.

ஆனால் யாரை திருமணம் செய்யலாம்? தெரியாத நபர்களைத் திருமணம் செய்வதில் டார்வினுக்கு விருப்பமில்லை. தெரிந்த உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்தால்தான் பாதுகாப்பு என்று நினைத்தார். காதலிலும் அப்போது நம்பிக்கையில்லை. ஆனால் தன்னை கடைசி வரை பார்த்துக்கொள்ளும் பெண் வேண்டும் என்று விரும்பினார். நல்ல குடும்பத்தில், நல்ல குணத்துடன், கஷ்ட காலங்களில்கூட தன்னுடன் நிற்கும் பெண் எங்கே கிடைப்பார்? சட்டென்று அவருக்கு தோன்றியது, வெட்ஜ்வுட் குடும்பம்.

வெட்ஜ்வுட் குடும்பம் தாய்வழிச் சொந்தக்காரர்கள். நிறையப் பெண்களும் திருமணத்துக்குக் காத்திருந்தனர். எல்லோரும் அறிவானவர்களும்கூட. சொத்து பத்தும் உள்ளது. இதனால் அங்கேயே தம் துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்தார்.

ஆனால் வெட்ஜ்வுட் குடும்பத்தில் யாரைத் தேர்வு செய்யலாம்? அவரது மனதில் உடனே தோன்றிய பெண், எம்மா வெட்ஜ்வுட்.

சிறுவயதில் இருந்தே எம்மாவை டார்வினுக்குத் தெரியும். ஆனால் அவர் மேல் தனியாக எந்தப் பிரியமும் இருந்தது இல்லை. எம்மா பொறுமையானவர். அதிர்ந்தும் பேசாதவர். எல்லோரிடமும் அன்புடன் பழகுவார். சகோதர சகோதரிகளைத் தாயைப்போல பார்த்துக்கொள்வார். அவரைத் திருமணம் செய்துகொண்டால் தன்னையும் அரவணைப்பார் எம்மா என்று நினைத்தார் டார்வின்.

அப்போது வெட்ஜ்வுட் குடும்பம் தங்கள் சொந்த வீட்டில் இருந்து லண்டனில் டார்வினின் சகோதரன் எராஸ்மஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகேயே குடியேறி இருந்தது. அதனால் சகோதரனைப் பார்க்கச் செல்லும் சாக்கில் அடிக்கடி எம்மாவையும் சாந்தித்தார் டார்வின். அப்போதுதான் எம்மாவுடன் பழகத் தொடங்கினார் டார்வின். பீகல் பயணத்துக்கு முன்பு எம்மாவப் பற்றி யோசித்ததுகூட கிடையாது. ஆனால் இப்போது அவருக்காகவே வெட்ஜ்வுட் வீட்டிற்கு நினைத்தபோதெல்லாம் சென்றார். எம்மாவுக்கும் தம் மீது விருப்பம் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

உண்மையில் எம்மாவுக்கும் டார்வினைப் பிடித்திருந்தது. ஆனால் அவ்வளவாகப் பேசியதில்லை. டார்வினின் ஆய்வுகள் மீதும், அவரது அறிவியல் ஆர்வம் மீதும் வெட்ஜ்வுட் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு இருந்தது. இதனால் எம்மாவுக்கும் டார்வின் என்றால் பிடிக்கும்தான். ஆனால் திருமணம் செய்யும் அளவுக்கு மனதில் வைத்துப் பார்த்ததில்லை. தந்தை யாரைச் சொல்கிறாரோ அவரையே திருமணம் செய்வதாக இருந்தார் எம்மா. அந்த ஒருவர் தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் டார்வின்.

0

ஜூலை 1838 அன்று சொந்த ஊருக்குக் கிளம்பினார் டார்வின். தந்தையிடம் சென்று தன் ஆசைகளை வெளிப்படுத்தினார். ராபர்ட்டுக்கு சந்தோஷம்தான். ஆனாலும் சில அறிவுரைகளை சொன்னார்.

திருமணம் நல்லதுதான். ஆனால் சில சிக்கல்களும் இருக்கின்றன. நாமும் வெட்ஜ்வுட் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக ஒன்றாக இருப்பவர்கள். மணவாழ்க்கையில் இணைந்தவர்கள். ஆனாலும் மதத்தால் வேறானவர்கள். வெட்ஜ்வுட் குடும்பத்தினர் தீவிர கிறிஸ்தவர்கள். நம்மைபோல் சுதந்திர சிந்தனை கிடையாது. உண்மையில் நீ எம்மாவை மணக்க வேண்டும் என்று விரும்பினால் மதம் பற்றிய உனது விமர்சனங்களை அவளிடம் வெளிப்படுத்தாதே. கிறிஸ்தவ நம்பிக்கையாளனைப்போல காட்டிக்கொள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். திருமணத்தில் யாராவது ஒருவருக்கு வெறுப்பு உண்டானாலே வாழ்க்கை வீணாகிவிடும். அதனால் எதனையும் யோசித்துச் செய். ஆனால் எம்மா மிகவும் அன்பானவள். அவள் தன் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்கிறாள். உன்னையும் இறுதிவரை நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்பதையும் நினைவுவைத்துக்கொள் எனக் கூறி முடித்தார்.

தந்தை சொல்வதை கேட்டவுடன் எம்மாதான் தனக்குச் சரியான பெண் என டார்வினுக்குத் தோன்றியது. ஆனால் எம்மா தன்னை ஏற்றுக்கொள்வாரா? பேசிப்பார்க்கலாம் எனத் தீர்மானித்தார்.

ஜூலை 29 அன்று எம்மாவைச் சந்தித்தார் டார்வின். எம்மாவும் டார்வினும் நிறையப் பேசினார்கள். ஒன்றாக நேரம் செலவழித்தார்கள். டார்வின் கிளம்பும் முன்பே எம்மாவிடம் மதம் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருந்தார் ராபர்ட். டார்வினும் சரி என்று தலையாட்டிவிட்டுத்தான் வந்திருந்தார். ஆனால் இறுதியாக பேச்சு மதம் பக்கம் சென்றது. அப்போது தனக்கு கிறிஸ்தவத்தின் மேல் இருக்கும் சந்தேகங்களையும், தன்னுடைய அறிவில் கண்டுபிடிப்புகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார் டார்வின்.

சொல்லிவிட்டுதான் யோசித்தார். அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ? தந்தை பேச்சை இப்போதாவது கேட்டிருக்க வேண்டுமோ? எல்லாம் முடிந்துவிட்டதோ?

ஆனால் டார்வின் பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. எம்மாவுக்கு டார்வினின் நேர்மை பிடித்திருந்தது. வெளிப்படையான அணுகுமுறை பிடித்திருந்தது. மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தாண்டி டார்வினைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனாலும் கடவுளை நிராகரித்துவிடாதீர்கள். கடவுளை விட்டு நீங்கள் விலகினால் மறுமையில் நரகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று அஞ்சியபடியே கூறினார். எம்மாவின் உண்மையான அக்கறை டார்வினுக்குப் பிடித்தது. மகிழ்ச்சியாகத் தலையாட்டினார். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணத்திற்கு எம்மாவின் தந்தை 5000 பவுண்ட் வரத்தட்சணையும், ஆண்டுக்கு 400 பவுண்ட் பணமும் தர முன்வந்தார். டார்வினின் தந்தை ராபர்ட்டும் 10,000 பவுண்டுகள் தருவதாகக் கூறினார். இதன் மூலம் டார்வினுக்கு எதிர்காலத்தின் மீதிருந்த அச்சம் விலகியது. பாதுகாப்பாக உணர்ந்தார்.

ஆனால் உடனடியாகத் திருமணம் வேண்டாம் என்று கூறினார் எம்மா. நோயுற்ற பெற்றோரைத் தான் பார்த்துக்கொண்டிருப்பதால் கொஞ்சம் தாமதிக்கலாமா எனக் கேட்டார். டார்வினுக்கு வருத்தம்தான். ஆனாலும் சம்மதித்தார்.

இருந்தாலும் திருமண திட்டமிடல்களை அவர் நிறுத்தவில்லை. எம்மாவிடம் திருமணத்திற்குப் பிறகு எங்கே வாழலாம் என்று கேட்டறிந்தார். ஆய்வுகள் காரணமாக லண்டனிலேயே வீட்டை வாடகைக்கு எடுக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர். தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எம்மாவையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் டார்வின். அறிவியல் சங்கங்களில் நடைபெற்ற விருந்துகளில் எல்லாம் இருவரும் ஒன்றாக வந்து கலந்துகொள்ளும்படி அழைப்புகள் வரத் தொடங்கின.

டார்வினும் எம்மாவும் லண்டனில் வீடு தேடத் தொடங்கினர். ப்ளூம்ஸ்பரியில் நல்ல வீடு ஒன்று அமைந்தது. புத்தாண்டின்போது புத்தகங்கள், தொல்லுயிர் எச்சங்கள் என எல்லாவற்றையும் புதுவீட்டில் கொண்டு வந்து கொட்டினார் டார்வின். வீட்டையே ஒரு அருங்காட்சியகம்போல வைக்க வேண்டும் என்று டார்வினின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதில் எம்மாவுக்கும் சம்மதம்தான்.

திருமண வேலைகளுக்கு மத்தியிலும் தனது கருத்துக்களை எழுதிக்கொண்டே இருந்தார் டார்வின். எம்மாவுடன் இருக்கும்போதும் நடுநடுவில் அறிவியல் கருத்துக்கள் உதிக்கும். பக்கத்திலேயே ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். காதலிக்கும்போதுகூட மனித மூளையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதைதான் எம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பார்.

டார்வின் எம்மாவிடம் ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்லிவிட்டார். பீகல் பயணத்தில் இருந்தே எனக்குத் தனிமை பிடித்துவிட்டது. பெரும்பாலும் என் கற்பனைகளில்தான் நான் வாழ்கிறேன். எனக்குள் எழும் எண்ணங்களும் கருத்துக்களுமே எனக்கு மக்கள் மத்தியில் இருப்பதைவிட சந்தோஷம் தருகிறது. அதனால் என்னை வெறுத்துவிடாதே எனக் கேட்டுக்கொண்டார்.

தன் உடல் உபாதைகளைப் பற்றியும் எம்மாவிடம் விளக்கமாகச் சொல்லிவிட்டார் டார்வின். உண்மையில் நான் எதிர்பார்ப்பது அறிவுத் துணையை அல்ல. என்னைப் பார்த்துக்கொள்ளும், என் மீது அக்கறை செலுத்தும், வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அன்பான மனைவிதான். ஆனால் நீ உன் விருப்பம்போல் இருக்கலாம். நான் எதையும் கட்டுப்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

எம்மாவுக்கும் டார்வினின் எதிர்பார்ப்புகளில் பூரண சம்மதம் இருந்தது. ஜனவரி 24, 1839 அன்று திருமணம் திட்டமிடப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. டார்வின் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் திருமணம் திட்டமிட்டிருந்த நாளில்தான் அந்த விழா. மிகப்பெரிய கெளரவம் அது. அதைத் தவிர்க்க டார்வின் விரும்பவில்லை. கடைசி நேரத்தில் திருமணத்தைத் தள்ளி வைத்தார்.

பின் ஐந்து நாட்கள் கழித்து ஜனவரி 29 அன்று புனித பேதுரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. ஆங்கிலிக சடங்குகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் எம்மாவின் நம்பிக்கையை எதிர்க்கக்கூடாது என அவர் விருப்பப்படியே திருமணம் செய்துகொண்டார் டார்வின். திருமணம் முடிந்த கையுடன் அப்போதே எம்மாவை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டார். சில நிமிடங்கள்கூட தாமதிக்கவில்லை. சிலர் கோபித்துக்கொள்ளவும் செய்தனர். ஆனால் புதிய வாழ்க்கை ரயிலில் தொடங்கட்டும் என்று கிளம்பிவிட்டார் டார்வின். அந்த ரயிலில் கிடைத்த வறுத்த ரொட்டியுடனும் குடிநீருடனும்தான் அவர்களது மண வாழ்க்கை தொடங்கியது. அந்தப் பயணம் இறுதிவரை இணைபிரியாமலேயே தொடர்ந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *