Skip to content
Home » டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

விலங்குகள் உருமாற்றம் அடைகின்றன. விலங்குகள் பிறக்கும்போதே மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்கின்றன. மனிதர்கள் இவற்றில் தமக்கு வேண்டிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்து அவர்கள் விரும்பிய தோற்றத்தில், பயன்பாட்டில் உயிரினங்களை உருவாக்குகின்றனர். இயற்கையும் இதேபோல ஏன் தேர்வு செய்யக்கூடாது?

ஆனால் இயற்கை எப்படித் தேர்வு செய்யும்? மனிதர்களுக்கு மூளை இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. இன்னின்ன பண்புகள் வேண்டும். இன்னின்ன வேண்டாம் என முடிவு செய்யலாம். இயற்கைக்கும் மூளை இருக்கிறதா? இயற்கையும் சிந்திக்கிறதா? இயற்கையும் தன்னுணர்வுடன் இது வேண்டும். இது வேண்டாம் என முடிவு செய்கிறதா?

இல்லை. விலங்குகள் பல்வேறு பண்புகளுடன் பிறக்கின்றன. அதில் பலமான பண்பும் உண்டு. பலவீனமான பண்பும் உண்டு. இவற்றில் பலவீனமான பண்புகள் இறந்துவிடுகின்றன. பலமான பண்புகள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்போது அந்தப் பண்புகள் எல்லாம் கலந்து தனித்த உயிரினமாக மாற்றம் அடைகிறது. இப்படித்தான் உயிர்கள் தோன்றுகின்றன எனக் கண்டுகொண்டார் டார்வின். ஆனாலும் இதுபோதுமானதாக இல்லை.

ஒரு மாற்றம் பலவீனமானதா இல்லையா என்பதை இயற்கை எப்படி முடிவு செய்கிறது? குறைபாட்டுடன் பிறக்கும் விலங்குகளைத்தான் பலவீனமான பண்புகள் என்று சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால் பிறக்கும் குட்டிகளில் ஒன்றிரண்டுதானே பலவீனமுடன் பிறக்கும்? அழிய வேண்டும் என்றால் அவை மட்டும்தானே அழிய வேண்டும்? ஆனால் இயற்கையில் ஒன்றிரண்டு குட்டிகள்தானே பிழைக்கவே செய்கின்றன. இதனால் இயற்கை தேர்வு நடைபெறுவதில் வேறு ஒரு அம்சமும் இருக்கிறது என்று தோன்றியது டார்வினுக்கு.

சிந்தித்துக்கொண்டே இருந்தார் அவர். சரியான விடை கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தார். விலங்குகள் பூங்காவிற்குச் சென்று தொடர்ந்து எல்லா விதமான விலங்குகளையும் கண்காணித்தார். ஆனால் அங்கெல்லாம் கிடைக்காத ஞானம், இங்கிலாந்து சமூகத்தின் அவல நிலையை அவதானித்தபோது கிடைத்தது.

1838ஆம் ஆண்டு. இங்கிலாந்தில் வறுமை தாண்டவம் ஆடியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே மால்தஸ் தத்துவத்தின் அடிப்படையில் பணிவீடுகள் உருவாகி மக்களைக் கசக்கிப் பிழிந்தன எனப் பார்த்தோம் அல்லவா?

இதனை எதிர்த்து ஒரு புரட்சிகர மக்கள் இயக்கம் (Chartists) உருவானது. ஏழைகளுக்கு எதிரான குரூரத்தை நியாயப்படுத்துவதே மால்தஸின் கருத்து எனக் கூறி வந்த அந்த இயக்கம், பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்தது. விக்குகளோ மால்தஸ் கோட்பாட்டை நியாயப்படுத்துவதற்காக வாதங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். மால்தஸின் சிந்தனை சரியா தவறா என்கிற கேள்வி நண்பர்களிடம் இருந்தும், சிந்தனையாளர்களிடம் இருந்தும் டார்வினை நோக்கி வீசப்பட்டன.

இதனால் டார்வின் மீண்டும் மால்தஸின் ஜனத்தொகை பற்றிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். உணவு உற்பத்தியைவிட மக்கள் தொகை வேகமாக வளர்ச்சியடைகிறது. கட்டுக்கடங்காமல் செல்லும் இந்த ஜனத்தொகையைக் கட்டுக்குள் வைக்க பசி, நோய்மை, போர் ஆகியவை இயல்பாகவே சமூகத்தில் நடக்கின்றன என்பதுபோல வாதங்களை முன்வைத்திருந்தார் மால்தஸ்.

இதைப் படித்தவுடன் இயற்கைத் தேர்வு கோட்பாட்டுக்கான பதில் கிடைத்ததுபோல் பொறி தட்டியது டார்வினுக்கு.

ஜனத்தொகையை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும் என மால்தஸ் வாதிட்டிருந்தார். அப்படி நடக்காததற்குக் காரணம், மனிதர்களுக்குள் நடைபெறும் தொடர் போட்டிகளும், பிழைத்திருப்பதற்கான போராட்டமும்தான் என்று சொன்னார். இதேதான் இயற்கையிலும் நடக்கிறதா எனச் சிந்திக்கத் தொடங்கினார் டார்வின்.

அவர் அதுவரை யோசித்து வைத்திருந்த தர்க்கங்கள் எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வந்தன. இயற்கைத் தேர்வு எப்படி நடைபெறுகிறது எனக் கண்டுபிடித்துவிட்டேன். போட்டிகளின் வழியே அது நடைபெறுகிறது எனக் குதூகலித்தார் டார்வின்.

விலங்குகளும் தாவரங்களும் அதிகமான வாரிசுகளை உருவாகுகின்றன. அதில் சிறந்த தகவமைப்புதிறன் கொண்ட பண்பு மட்டுமே பிழைக்கிறது. மற்றவை போட்டியின் காரணமாக மடிகின்றன. இதில் பலமான பண்பு என்பது அந்தப் போட்டியில் பிழைத்திருக்க உதவும் பண்புதான். பலவீனப் பண்புகள் என்பது குறைபாடுகளோ, உருச்சிதைவுகளோ கிடையாது. போட்டியில் வெல்லப் பயன்படாத பண்புகள், அவ்வளவுதான். உதாரணமாக அடர்ந்த முடிகளை கொண்டு பிறக்கும் ஒரு நாய்க்குட்டிக்கு அது உபயோகமானதா இல்லையா என்பது அது வளரும் இடத்தைப் பொறுத்தது. வெப்பமான பகுதியில் பிறந்தால் அது சுமை. குளிர் பிரதேசத்தில் பிறந்தால் அது வரம். இதனால் பண்புகளில் கெட்ட பண்பு, நல்ல பண்பு என நாம் பிரிப்பது சூழலைப் பொறுத்து மாறுகிறது.

போட்டியில் வென்ற விலங்குகளுக்கே இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு அமைகிறது. இதனால் அந்தப் பண்புகள் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்படும் வாய்ப்பும் அமைகிறது. இப்படிப் புதிய பண்புகள் அடுத்தடுத்த தலைமுறையில் தொடர்ச்சியாக ஒன்று சேர்ந்து புதிய விலங்காக பரிணமிக்கின்றன என்ற புரிதலுக்கு வந்தார் டார்வின்.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். விலங்குகளுக்குள் பிழைத்திருப்பதற்கான போட்டி இயற்கையில் நடைபெறுகிறது என்று ஏற்கெனவே பல விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இங்கே டார்வினுடைய கூற்று எங்கே வேறுபட்டு தனித்து நிற்கிறது என்றால், போட்டி வெவ்வேறு விலங்கினங்களுக்கு இடையே மட்டும் நடைபெறவில்லை. ஒரே இனத்திற்கு உள்ளாகவும் நடைபெறுகின்றன என்றார் டார்வின்.

உணவுக்காக ஒரே விலங்கினங்களுக்கு இடையிலும் போட்டை நடைபெறுகிறது. இந்த இடைவிடாப் போட்டிகள்தான் பிழைக்க உதவாத பண்புகளை அகற்றுகின்றன. இங்கே கடவுளோ வேறு எந்தச் சக்தியோ பிரக்ஞையுடன் விலங்குகளைத் தேர்வு செய்யவில்லை. மரணமும் போராட்டமும்தான் விலங்குகளைத் தேர்வு செய்கின்றன. இயற்கைத் தேர்வு என்பது போராட்டத்தின் அடிப்படையில்தான் நிலவுகிறது என்று முடித்தார் டார்வின்.

இந்தக் கருத்து அப்போது சமூகத்தில் நிலவிய விஷயங்களுக்கும் பொருந்திப்போவதாக இருந்தது. இங்கிலாந்தில் வறுமையின் தாக்கத்தால் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த பலரும் இறந்தனர். தாக்குப் பிடித்து வேலை செய்தவர்கள் மட்டுமே வாழ வழி கிடைத்தது. இதேபோல விலங்குகளும் பிழைத்திருக்க போராடுகின்றன என்றார் டார்வின். இயற்கை யாருக்கும் எந்தக் கருணையும் காட்டுவதில்லை. போட்டி மட்டுமே இயற்கையையும் சமூகத்தையும் இயக்கும் சக்தி என்றார்.

அதேபோல் வறுமைப் போராட்டத்தில் பலர் இடம்பெயரவும் தொடங்கி இருந்தனர். வேலையில்லாத பல தொழிலாளர்கள் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய காலனி நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் மூலம் உள்ளூரில் வறுமையைக் குறைக்க முடியும் என்று சொன்னது அரசு.

அதேபோலத்தான் இயற்கையிலும் தாவரங்களும் விலங்குகளும் இடம்பெயர்கின்றன என்று தோன்றியது டார்வினுக்கு. உணவு கிடைக்காத விலங்குகள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. அங்கே ஏற்கெனவே இருந்த உயிரினத்துடனும் போட்டிப் போடுகின்றன. அங்கேயும் பிழைக்கும் உயிரினம் மட்டுமே நீடிக்கிறது என்று கூறினார்.

ஆங்கிலேயர்களின் பரவலான இடம்பெயர்தல் பூர்வீக குடிகளை அழிக்கும் நிகழ்வுகளையும் அரங்கேற்றின. இது மனித குலத்தில் அழிவை ஏற்படுத்துகிறது என்று சில சிந்தனையாளர்கள் வாதாடிய நிலையில், இந்த அழிவையும் இயற்கைப் போராட்டத்தின் ஒரு பகுதி எனக் கருதினார் டார்வின். ஆனால் இந்தப் போட்டி அழிவுக்கான பாதையல்ல, படைப்புக்கான விஷயம். விலங்குகள் புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்கே போட்டி ஏற்பட்டு புதிய உயிரினங்கள் உருவாகின்றன. இதேபோல் மனிதர்களும் வேறு இடங்களில் ஊடுருவும்போது அங்கே போட்டி ஏற்பட்டு அவர்களுடைய மேன்மை வெளிப்படுகிறது. இதனால் நெருக்கடி என்பது படைப்புக்கான வாய்ப்பு என்றார் டார்வின்.

இந்தக் கருத்து மிகவும் குரூரமானதுதான். ஆனால் இதுதான் இயற்கையில் நடைபெறுகிறது என்று அடித்துச் சொன்னார் டார்வின். அவருடைய கருத்துக்கு விக் அரசியலும் பின்புலமாக இருந்தது. விக் ஆதரவாளர்கள் போட்டியையும் சுதந்திர வணிகத்தையுமே ஆதரித்தனர். தோற்பவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. டார்வினினும் அதையொட்டியே தன் கோட்பாட்டையும் உருவாக்கியதால் போட்டி என்பது ஆரோக்கியமானது என்றே அவருக்குத் தோன்றியது.

இயற்கையில் இரக்கமற்ற போட்டிகளும், கணக்கில் அடங்காத அழிவுகளும் நிகழ்கின்றன. ஆனால் இவற்றில் இருந்துதான் ஒரு தகுதி வாய்ந்த வடிவம் பிறக்கிறது. இந்த தகுதி வாய்ந்த வடிவமே புதிய உயிராக மாற்றம் கொள்கிறது. இதனால் பரிணாம வளர்ச்சி என்பது இயற்கைத் தேர்வின் அடிப்படையில் நிகழும் ஓர் படைப்பியக்கம் என்று தன் கோட்பாட்டை உருவாக்கினார் டார்வின்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *