Skip to content
Home » டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் அப்போது மனிதப் பரிணாம மாற்றத்தை ஆராயத் தொடங்கி இருந்தார். இயற்கைத் தேர்வு எனும் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்திவிட்டோம் என்ற திருப்தி அவருக்கு இருந்தது. அதேசமயம் பயமும் தொற்றிக்கொண்டது. நான் அறிவியல் அடிப்படையில் உயிரினங்கள் உருமாறுவது எப்படி என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் இதை வெளியே சொல்லலாமா? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்? அறிவியலாளர்கள் என்ன கூறுவார்கள்? நான் சொல்லும் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்குப் போதிய வாதங்களும் ஆதாரங்களும் இருக்கின்றனவா? மேலும் விலங்குகள் உருமாறி தோன்றுகின்றன என்கிற உண்மையை நான் கூறினால், அடுத்து வரப்போகும் கேள்வி மனிதர்களும் அப்படித்தான் வந்தார்களா என்பதாகத்தான் இருக்கும். எங்கே அதற்கான சான்றுகளைக் காட்டு என்று ஒரு கும்பல் வந்து நிற்கும். அதனால் மனிதர்கள் தோன்றியதற்குப் பின்னான காரணிகளையும் நான் ஆராய வேண்டும் எனத் தேடிக்கொண்டிருந்தார் டார்வின். இதற்காக மனிதக் குரங்குகளை ஆராயும் வேலையில் ஈடுபட்டார்.

லண்டனில் இருந்த விலங்கியல் பூங்கா ஒன்றுக்குத் தினமும் சென்றார். அங்கிருந்த பபூன், ஓரங்குட்டான் போன்ற குரங்கினங்களின் நடத்தைகளை நாள் முழுவதும் அமர்ந்து ஆராய்ந்தார். வேண்டுமென்றே குரங்குகளிடம் வம்பிழுத்து அவற்றின் உணர்வுகளைக் கவனிப்பார். ஓராங்குட்டான் குரங்கின் கூண்டில் எறி அமர்ந்துகொண்டு ஆய்வுகள் செய்வார். அவை மனிதர்களுக்கு ஒப்பாக என்னென்ன குணங்களை வெளிப்படுத்துகின்றன என்று தேடினார்.

இப்படி ஆழ்ந்து கவனித்தபோது அவற்றின் செயல்கள், அவை வெளிப்படுத்திய வெட்கம், கோபம், விளையாட்டு போன்ற பல்வேறு உணர்வுகள் மனிதர்களின் உணர்வுகளுக்கு அருகிலேயே இருந்தன என்று தெரிந்தது. இந்த அவதானிப்பு, உணர்வுகள் என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது அல்ல என்பதைக் காட்டியது. இதனால் பபூன் குரங்குகளும் ஓராங்குட்டான்களும் மனிதர்கள் உருவான அதே முப்பாட்டன்களிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் டார்வின்.

ஆனால் நாம் எப்படி குரங்குகளைவிட புத்திசாலி உயிரினம் ஆனோம் என்கிற கேள்வியும் டார்வினுக்கு இருந்தது. அதற்கான பதிலும் இயற்கைத் தேர்வில்தான் கிடைத்தது. இயற்கைத் தேர்வின் அடிப்படையில் எல்லா உறுப்புகளும் உருவாகி வந்திருக்கின்றன என்றால், நம் மூளையும் அப்படித்தான் உருவாகி இருக்க வேண்டும். அந்த மூளை சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து குரங்குகளைவிட மேம்பட்டுச் சிந்திக்கும் திறனை நாம் பெற்றிருக்க வேண்டும் என்று டார்வினுக்குத் தோன்றியது.

இது இன்னொரு கேள்விக்கும் இட்டுச் சென்றது. மனித மூளை பரிணாம மாற்றத்தின் வாயிலாக வந்திருக்கிறது என்றால், நம் சிந்தனையும் அதன் விளைவாகத் தோன்றியதா? அப்படியென்றால் கடவுள் நமக்குக் கொடுத்ததாக நம்பப்படும் எண்ணங்கள், உள்ளுணர்வுகள், தன்னுணர்வுகள், விழுமியங்கள் அனைத்தும்கூட பரிணாமத்தின் விளைவால்தான் வந்தனவா? மனிதர்களின் அறிவாற்றல் என்பது தெய்வத்தின் கொடை எனக் கூறுவது பொய்யா?

இதுகுறித்த ஆராய்ச்சிகளில் இறங்கினார் டார்வின். முதலில் உள்ளுணர்வுகள் என்பது என்ன என்று யோசித்தார் டார்வின். சில விஷயங்களை நாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகச் செய்கிறோம். அதுதான் உள்ளுணர்வுகள். இந்த உள்ளுணர்வுகள் நாம் பிழைத்திருக்க அவசியமாக இருக்கின்றன. ஒரு தாய்க்குக் குழந்தையின் மேல் வரும் பாசம் உள்ளுணர்வு. விலங்கைப் பார்த்தவுடன் பயம் வருவது ஓர் உள்ளுணர்வு. முத்தமிடுதல், கடித்தல், வெட்கம் உள்ளிட்ட பாலியல் நடத்தைகளும்கூட உள்ளுணர்வுகளே. இவையே நாம் இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. நாம் பிழைத்திருக்க உதவுகின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உள்ளுணர்வுகள் இருக்கின்றன. ஒரு காக்கை எப்படிக் குயிலின் கூட்டில் முட்டையிடுகிறது? குளவி எப்படிக் கம்பளிப் பூச்சியின் முட்டைகளைத் தின்று வளர்வதற்கு ஏதுவாக முட்டைகளை இடுகிறது. அதற்கும் உள்ளுணர்வுகள்தான் காரணம். ஆனால் உள்ளுணர்வு எங்கே இருக்கிறது? உள்ளுணர்வு என்பது நினைவுகளா? அது மூளையில் சேகரிக்கப்பட்டுள்ளதா? குழந்தைகளுக்குக் கடத்தப்படுமா?

சிந்தனை என்பது மூளை உருவாக்கும் செயல்பாடு என்றால், நமது உணர்ச்சிகள் எங்கிருந்து தோன்றின? பயம் என்பது ஓர் உணர்ச்சி. பயம் வந்தால் இதயம் வேகமாகத் துடிக்கிறது, வியர்த்து ஊற்றுகிறது, தசைகள் நடுங்குகின்றன. இவை எல்லாம் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டிருப்பதைக் காட்டுகின்றன. இதனால் பயம் போன்ற உணர்ச்சிகளும் மூளையில் தோன்றும் விஷயங்களா? அவை பயனுள்ளதாக இருப்பதால் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றதா என்ற கேள்விக்கு வந்தார் டார்வின்.

இதேபோல தன்னுணர்வு (Consciousness) எங்கிருந்து தோன்றுகிறது என்ற கேள்வியும் டார்வினுக்கு வந்தது. இந்தத் தன்னுணர்வுகளே அன்றாட மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றன. சிந்தனையை வடிவமைக்கின்றன. இதனால் தன்னுணர்வுகளையும் மூளைதான் உருவாக்க வேண்டும். தன்னுணர்வுகள் மூளையில் இருந்து தோன்றியவை என்றால் அவற்றைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் அறவிழுமியங்களும் ஏன் மூளையில் இருந்தே தோன்றி இருக்கக்கூடாது என்ற கேள்வி உதித்தது டார்வினுக்கு.

அற விழுமியங்கள் என்பது என்ன? நாம் இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யக்கூடாது எனும் கட்டுப்பாடு. ஒழுக்க விதிகள். இந்த ஒழுக்க விதிகள் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாகியுள்ளன என்கிறனர் அறிஞர்கள். அவற்றைக் கடவுள் உருவாக்கியதாக சொல்கிறார்கள் மதவாதிகள். உண்மையில் இந்த ஒழுக்க விதிகளை ஒட்டி தன்னுணர்வு அமைந்தது எனக் கருதுவதற்குப் பதில், தன்னுணர்வின் ஊடாக ஒழுக்க விதிகள் தோன்றி இருக்கலாம் என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

மனிதக் குரங்குகளைக் கவனித்தபோது அவை மந்தை மனநிலையை வெளிப்படுத்துவது தெரிந்தன. ஒரு குட்டிக் குரங்கு நடந்து செல்லும்போது பாதையில் சிறு பள்ளம் இருக்க தடுக்கி விழுகிறது. இதனால் அங்கே செல்லக்கூடாது என்று தாய் குரங்கு கண்டிக்கிறது. இதனால் குட்டிகள் அடுத்தமுறை அந்தப் பக்கம் செல்ல தயங்குகின்றன. இதை அந்தக் கூட்டத்தில் இருந்த மற்ற குரங்குகளும் பின்பற்றுகின்றன. இதைக் கவனிக்கும்போது அந்த மந்தை ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சமூக விதிகளை உருவாக்குவதுபோல் தோன்றியது டார்வினுக்கு. மந்தை விலங்குகளுக்குக் கட்டளைக்கு அடிபணியும் தேவை இருப்பதாகப் பார்த்தார் டார்வின். இந்தக் கட்டளைகளே ஏன் சமூக விதிகளாக மனிதர்களுக்கும் உருவாகி இருக்கக்கூடாது என்று சிந்தித்தார் அவர்.

மந்தையாக வாழும் விலங்குகள் சேர்ந்து இயங்குவது அவசியம். அதனால் அவற்றுக்கு விதிகளும் அவசியம். மந்தையில் ஒரு விலங்கு மட்டும் குழுவின் விதிகளை மீறினால் மொத்த கூட்டத்துக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் விதிகளை மீறும் விலங்கை அந்த மந்தை விலக்கி வைக்க முயற்சிக்கிறது. இதனாலேயே விதியை மீறும் விலங்கு எங்கே மந்தை தம்மை விலக்கிவிடுமா என அஞ்சுகிறது. இதனால் மந்தை விதிகளை அது பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மனிதர்களும் சமூகமாக இயங்கும் விலங்குகள்தான் என்பதால் நமக்கும் பிழைத்திருக்க சமூக விதிகள் தேவை. இந்த விதிகள்தான் பின்னால் அறவிழுமியங்களாக மாற்றம் அடைந்துள்ளதோ என யோசித்தார் டார்வின்.

இதனால் அறநெறி என்பது பைபிளில் இருந்து வந்தது அல்ல. ஆழமான விலங்கு உள்ளுணர்வின் மூலம் வந்துள்ளது என்றார் டார்வின். நல்லது எது, தீயது எது என்பது நமக்குள் தோன்றியது அல்ல. அவை இயற்கையில் வாழ்ந்ததன் ஊடாக நாம் கண்டுகொண்ட பிழைத்திருக்கும் உத்திகள். இதனால் கடவுள் நம்பிக்கையும்கூட மனித சமூகத்துக்கு பயனுள்ளதாக இருப்பதாலேயே பரிணமித்து வந்துள்ளது என்றார்.

டார்வினின் இந்தச் சிந்தனை மனதையும் மூளையையும் பரிணாமத்துடன் இணைத்தன. கடவுளைக்கூட மனித மூளையின் படைப்பாகக் காட்டின. இதுவே அவரைத் திடுக்கிட வைத்தது. தன்னுடைய சிந்தனைகள் ஒவ்வொன்றும் மனிதர்களைக் கடவுளின் கரங்களில் இருந்து விடுவிப்பதாகத் தோன்றியது. தன் கருத்துக்கள் புரட்சிகரச் சிந்தனையை நோக்கி நகர்கின்றன எனப் புரிந்துகொண்டார் டார்வின். இந்தச் சிந்தனை தன்னை பொருள்முதல்வாதியாகக் காட்டிவிடும் என அஞ்சினார்.

அது என்ன பொருள்முதல்வாதம்?

கடவுள், ஆன்மா என்பதெல்லாம் பொய். அவை உருவாக்கியதாக கூறும் விஷயங்களும் பொய். இப்பிரபஞ்சத்தில் பருப்பொருள் மட்டுமே உண்மை. பொருளே அனைத்தையும் தோற்றுவிக்கிறது. பொருளே எல்லா வடிவங்களாகவும் இருக்கிறது. இதனால் எண்ணங்களும் மூளையில் இருந்து வரும் விஷயம்தான். கடவுளுக்கோ புனித ஆவிக்கோ இங்கே வேலை இல்லை என்பதுதான் பொருள்முதல்வாதக் கருத்து. இதனைப் புரட்சிகரவாதிகள், நாத்திகவாதிகள் மட்டுமே பேசி வந்தனர். அதனால் அந்தக் கருத்து அரசை கவிழ்க்க நினைக்கும் கருத்தாக, திருச்சபைக்கு எதிரான கருத்தாகப் பார்க்கப்பட்டு வந்தது. அந்தக் கருத்துக்கே நாம் வந்து சேர்ந்திருக்கிறோமே என்று நினைத்தார் டார்வின்.

இத்தனைக்கும் டார்வின் கண்டடைந்த விஷயங்கள் புதிது கிடையாது. ஏற்கெனவே கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் வட்டாரத்தால் வெறுக்கப்பட்டு வந்த ஜான் எலியாட்சன் எனும் பேராசிரியர் கல்லீரல் எப்படிப் பித்த நீரை உற்பத்தி செய்கிறதோ அதேபோல மூளை கருத்துக்களை உண்டாக்குகிறது என்றார். கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையை நாம் இயற்கையின் விளைவாகப் பார்க்கிறோம். எண்ணங்களை மட்டும் நாம் ஏன் கடவுள் கொடுத்தாகக் கருத வேண்டும் என்று வாதிட்டார். இப்படி, எலியாட்சன் பொது இடங்களில் பொருள்முதல்வாத நாத்திகக் கருத்துக்களை விவாதித்து வருவதைப் பார்த்த பழமைவாத விஞ்ஞானிகளும், மதகுருக்களும் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அதிகாரத்தில் இருந்த மதவாத விஞ்ஞானிகள் அவருக்குப் பெண் நோயாளிகளுடன் தொடர்பு இருப்பதாகப் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பதவி விலக வைத்தனர். இப்படிப் பொருள்முதல்வாதிகள் கண்டிக்கப்படுவதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இதனால் தன் கருத்தை அவர் வெளியே சொல்லக்கூடாது என்று உறுதியாக இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் ஹென்ஸ்லோ, லைல் போன்று மதநம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகள்தான் அவரது நெருங்கிய நண்பர்கள். ஆசான்கள். விஞ்ஞான உலகில் அவர் பெற்று வந்த முக்கியத்துவம் அனைத்தும் அவர்கள் வழி வந்தது என்பதையும் டார்வின் அறிவார். அதனால் அவர்களைப் பகைத்துக்கொள்ள டார்வின் என்றைக்கும் விரும்பியதில்லை. மேலும் இந்தச் சமயத்தில்தான் அவர் லண்டனின் உயர்குடி வட்டங்களுடன் நெருக்கமாகிக்கொண்டிருந்தார். தினமும் அவர்களைப் பார்க்கச் செல்வது, அவர்களுடன் நேரம் கழிப்பது, பிரபலமான மனிதர்களுடன் உரையாடுவது என டார்வினின் அந்தஸ்து ஏறிக்கொண்டிருந்தது. இதை இழக்கவும் அவர் விரும்பவில்லை.

அவருக்கு இருந்ததெல்லாம் தேடல்கள். எப்படி இயற்கை இயங்குகிறது? எப்படி மனிதர்கள் வந்தார்கள்? எப்படி உணர்வுகள் தோன்றின? இப்படி நிறையத் தேடல்கள். இந்தத் தேடல்களுக்கான பதில்களைத்தான் அவர் கண்டறிந்துகொண்டிருந்தார். அந்தப் பதில்கள்தான் அவரைப் புரட்சிகர உண்மைகளுடன் தொடர்புகொண்டிருக்கின்றன. இதனாலேயே தன்னை மததுவேஷவாதி என சமூகம் ஒதுக்கிவிடக்கூடாது என்று டார்வின் பயந்தார்.

அதற்காக தன் கருத்தை அவரால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மற்றவர்களின் கருத்து என்ன, அவர்கள் வைக்கும் எதிர்வாதங்கள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா? இதனால் ரகசியமாகத் தன் கருத்தை உறவினர் ஹென்ஸ்லேயிடம் மட்டும் கூறினார். ஹென்ஸ்லேவைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அவர் டார்வினின் உறவினர். எம்மாவின் சகோதரர். அறிவியலும் அறிந்தவர். அதனால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும் என்பது டார்வினின் நோக்கம்.

டார்வின் எண்ணங்கள் பரிணாம மாற்றத்தின் விளைவு, கடவுள் நம்பிக்கையே பரிணாமத்தின் கூறுதான் என்று சொன்னவுடனேயே ஹென்ஸ்லே மறுத்துவிட்டார். மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரித்துக்காட்டுவது கடவுள் மீதான நம்பிக்கைதான். எல்லா மனிதர்களுக்கும் கடவுள் நம்பிக்கை பிறக்கும்போதே அருளப்பட்டிருக்கிறது. அதனால்தான் டார்வினின் கூற்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று வாதாடினார். டார்வினுக்கு உடனே கோபம் வந்துவிட்டது. தென் அமெரிக்காவில் தான் சந்தித்த ஃபியூஜியன் பழங்குடி மக்களுக்குக் கடவுள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. கடவுள் பற்றிய ஞானம் உலகளாவியது என்றால், எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா என்று பதிலடி கொடுத்தார். ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் அவரால் தன் கருத்தை வலியுறுத்த முடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டார்.

இதுபோன்ற சமயங்களில் எல்லாம் டார்வின் கலீலியோவைதான் நினைத்துக்கொள்வார். கலீலியோ தனது கண்டுபிடிப்புகளைச் சொன்னதற்காக மதவாதிகளால் அச்சுறுத்தப்பட்டார். ஆனால் கலீலியோவின் வானியல் கண்டுபிடிப்புகள்தான் மக்களை அறியாமையில் இருந்து வெளியேற்றின. என் கண்டுபிடிப்புகள் வெளியே தெரிந்தால் நானும் கலீலியோவைப்போல அச்சுறுத்தப்படுவேன். ஆனால் என் கருத்துக்களும் எதிர்காலச் சந்ததியினருக்கு வெளிச்சமூட்டும். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறேன் என நினைத்துக்கொண்டார் டார்வின்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *