Skip to content
Home » டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வினின் மனதில் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஏற்கெனவே முழுவடிவம் எடுத்திருந்தது. எழுதி வெளியிடுவதுதான் பாக்கி. இதுவரை யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை. உறவினர் ஹென்ஸ்லேயிடம் சொன்னதில் பிரயோஜனம் இல்லை. அதனால் அறிஞர்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தார் டார்வின். கோட்பாடு வெளியானால் ஏற்கப்படலாம். தூற்றவும் படலாம். எதுவாக இருந்தாலும் வெளிவந்தால்தான் தெரியும். அதனால் வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்தார். ஆனால் அடுத்தடுத்து நடந்த இரண்டு நிகழ்வுகள் டார்வினை மீண்டும் யோசிக்க வைத்தன.

மே 1839. பீகல் பயணம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. டார்வினின் முதல் புத்தகமான Journal and Remarks நூல் வெளியானது. பீகல் பயணத்தில் தான் சந்தித்த அனுபவங்களையும் அவதானிப்புகளையும் விவரிக்கும் நூல் இது. ஃபிட்ஜ்ராய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூன்று தொகுப்புகளாக வெளியாகின. இதில் மூன்றாவது தொகுப்பில் டார்வினின் நூல் இடம்பெற்றது. தென் அமெரிக்க மலைகளில் தான் கவனித்த விஷயங்களை வைத்து மலைப்பிரதேசங்கள் கடலுக்கு அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எழுகின்றன என்பதுபோன்ற வாதங்களை வைத்திருந்தார் டார்வின். விமர்சனங்கள் வரத் தொடங்கின.

ஒருபக்கம் டார்வினுக்கு நல்ல பாராட்டுகள் வந்தன. அவர் கல்லூரி பருவத்தில் வியந்த லைல், அலெக்ஸாண்டர் ஹம்போல்ட் போன்றோர் டார்வினின் புத்தகத்தை மிகச் சிறந்த புத்தகம் எனப் பாராட்டித் தள்ளினர். ஜெர்மன் மொழியில் அப்புத்தகத்தை மொழிபெயர்க்கும் கோரிக்கைகள்கூட வந்தன. ஆனால் இன்னொரு பக்கம் டார்வினைக் கடுமையாக சாடிய விமர்சனங்களும் வெளியாகின. குறிப்பாக டார்வின் பெரிதாக மதித்த செட்ஜ்விக், கடவுளின் படைப்பை அறிவது மெதுவான, அமைதியைக் கோரும் பணி. ஏனோதானோ என ஊகத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பது பாவம் என்று எழுதியிருந்தார். செட்ஜ்விக், பழைமைவாத கிறிஸ்தவர். பைபிளில் சொன்னபடி நோவா பெரு வெள்ளத்தின் முடிவில்தான் மலைகள் தோன்றின என்ற பழைய நம்பிக்கையில் இருந்தவர். அதனால் டார்வினின் ஆராய்ச்சிகளைத் திட்டி வைத்திருந்தார். இதைத்தவிர சில விமர்சகர்கள், டார்வின் முன்வைத்த வாதங்கள் எல்லாம் பொதுமைப்படுத்தல்களாக இருக்கின்றன எனக் குற்றம்சாட்டினர். இதிலேயே மனம் உடைந்துபோனார் டார்வின்.

மலைகள் எப்படி உருவாகின என்கிற விளக்கத்தையே சில மதவாத அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றால், பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்டால் என்னவாகும்? யோசித்தார் டார்வின்.

அதேபோல அப்போது இங்கிலாந்தின் அரசியல் சூழலும் மோசமாக இருந்தது. லண்டன் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் இணைந்து எல்லோருக்கும் வாக்குரிமை வேண்டும் எனப் போராடிக் கொண்டிருந்தனர். நகரத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. கிளர்ச்சியாளர்களும் சோசியலிசவாதிகளும் இணைந்துகொண்டு திருமணம், சொத்து, அரசு ஆகியவற்றை நிராகரிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தனர். லமார்க்கிய அறிவியலும் போராளிகளால் பரப்புரை செய்யப்பட்டது. கலவரம் வெடித்து அறிவியல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. டார்வின் அப்போது பிரிட்டிஷ் சங்கக் கூட்டத்திற்காக பர்மிங்காம் சென்றார். அங்கே துப்பாகி ஏந்திய போலீசார் பாதுகாப்பில்தான் பயணிக்கவே முடிந்தது. இந்தச் சூழ்நிலையில் தன் கோட்பாடு வெளியானால் என்ன எதிர்வினை ஏற்படும் என்கிற அச்சமும் எழுந்தது.

இதனால் மீண்டும் ரகசியம் காக்கத் தொடங்கினார். தன் கோட்பாட்டை மனதுக்குள்ளேயே வைத்திருந்தார். அவ்வப்போது மிக நெருங்கிய நண்பர்களிடன் சொன்னால் என்னவென்று தோன்றும். ஹென்ஸ்லோவிடம் சொல்லலாமா என யோசிப்பார். ஆனால் அவருமே மதம், சமூக ஒழுங்குக்கு எதிரான அறிவியலை ஏற்க மட்டார் என்று தோன்றியது. கேம்பிரிட்ஜ் அறிஞர்களைப் பொறுத்தவரை உண்மை என்பது கடவுளிடம் அழைத்துச் செல்வதாகத்தான் இருக்க வேண்டும். அறத்தைப் பாதுகாக்கும், பாரம்பரியத்தையும் உயர்தர மக்களின் அதிகாரத்தையும் உயர்த்திப் பிடிக்கும் உண்மையாக இருக்க வேண்டும். சமூகத்தையும் அரசியலையும் தலைகீழாகப் புரட்டிப்போடும் உண்மையாக இருக்கக்கூடாது என நினைத்துக்கொண்டார் டார்வின்.

இந்தத் தவிப்பே மீண்டும் உடல்நிலையை மோசமாக்கியது. வெளியேகூடச் செல்ல முடியவில்லை. நண்பர்களைப் பார்ப்பதைக்கூடத் தவிர்த்தார். எம்மா வேறு ஆறு மாதங்கள் கர்ப்பம். வீட்டிலேயே இருவரும் இருந்தனர். எந்நேரமும் எழுத்து, எழுத்து, எழுத்து என்றே நாட்கள் கழிந்தன. காலையில் ஏழு மணிக்கு எழுவது, இரவு வரை எழுதுவது, பின் உறக்கத்துக்குச் செல்வது. இதுதான் டார்வினின் அன்றாடம். மாலையில் சிறிது நேரம் ஜெர்மன் மொழி கற்றுக்கொள்ள நேரம் செலவிடுவார். தூங்கும் முன் இசை கேட்பார்.

வெளியே செல்வது அப்போது ஆபத்தானதாகவும் இருந்தது. பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தம் கேட்டும், உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைக் கேட்டும் வேல்ஸில் பேருரிமை கிளர்ச்சி இயக்கம் மேற்கொண்ட எழுச்சி தோல்வியில் முடிந்தது. அதன் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இது போராட்டங்களை மேலும் வலுப்படுத்தியது. தேசமே பற்றிக்கொண்டு எரிந்தது. எங்கேயும் செல்ல முடியாத நிலை.

டிசம்பர் 27 டார்வினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வில்லியம் எராஸ்மஸ் டார்வின் எனப் பெயரிட்டனர். தந்தையான அனுபவம் புதுவிதமாக இருந்தது. குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்ந்தார். குழந்தை வெளிப்படுத்தும் பாவனைகளை ரசித்தார். ஆனால் அங்கேயும் அறிவியல்மூளைதான் வேலை செய்தது. குழந்தைகளின் முகபாவங்களைக் குறிப்பெடுத்து அதைக் குரங்குகளின் பாவனைகளோடு ஒப்பிடுவார்.

உடல்நிலை காரணமாக பறவைகள் பற்றி அவர் எழுதத் திட்டமிட்டிருந்த புத்தகம் தள்ளிப்போனது. பவளத் திட்டுகள் பற்றிய இன்னொரு புத்தகம் பாதியில் நின்றது. அடிக்கடி வயிறு வலித்தது. வாந்தி வந்தது. சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லை. எடை குறைந்துகொண்டேபோனது. வலு குன்றியது. மருத்துவர்களால் அவருக்கு என்ன பிரச்னை எனக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால் சரியான சிகிச்சையும் எடுக்க முடியவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அவருக்கு ராயல் புவியியல் சங்கத்தில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதைக்கூடக் கொண்டாடும் மனநிலையில் டார்வின் இல்லை. உடல்நிலை குறித்த கவலையும் பரிணாமக் கோட்பாடு குறித்த தயக்கமும்தான் அவர் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தன. நோய்மையால் வாடிய டார்வின் குணமடைய சில நாட்கள் ஆகும் என்றனர் மருத்துவர்கள்.

அவர்கள் சொன்னவாறு நாட்கள் எடுத்தன. ஆனால் ஓரு நாள், இரு நாள் அல்ல. இரண்டு ஆண்டுகள். அப்போதுதான் கொஞ்சம் எழுந்து நடமாடும் அளவு தெம்பு வந்தது. 1841ஆம் ஆண்டு டார்வினுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனி எலிசபெத் எனப் பெயரிட்டனர். குழந்தைகளின் வரவு மட்டுமே டார்வினுக்கு ஆறுதலாக இருந்தது. பேசாமல் லண்டனைக் காலி செய்துவிட்டு அமைதியாக ஏதாவது ஒரு கிராமத்தில் குடியேறிவிட்டு, அங்கிருந்து மிச்ச ஆய்வுகளை முன்னெடுக்கலாம் என்று யோசித்தார்.

ஆனால் பரிணாமக் கோட்பாடு மூன்று ஆண்டுகளாகத் தமக்குள்ளேயே இருப்பதும் பாடாய்படுத்தியது. யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று மனம் ஏங்கியது. ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். பென்சிலைக் கூர்த்தீட்டினார். எழுதத் தொடங்கினார்.

உயிரினங்கள் மாற்றம் அடைகின்றன. விவசாயிகள் விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து எப்படிக் குறிப்பிட்ட பண்புகளைப் பெறுகிறார்களோ அதேபோல இயற்கையும் தேர்வு செய்கிறது. விலங்குகளின் எண்ணிக்கை போட்டியை உருவாக்குகிறது. அதில் வலுவானது பிழைக்கிறது. இதுதான் இயற்கைத் தேர்வு. அதேபோல உயிரினங்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. லமார்க் சொல்வதுபோல் உயிரினங்கள் பரிணாம மாற்றத்தின் மூலம் ஏணிப்படிபோல் மேல் ஏறிச் செல்வதில்லை. எல்லா உயிர்களும் ஒற்றை மூதாதையரில் இருந்து தோன்றியுள்ளன. எல்லா உயிர்களும் பிற உயிர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. மரத்தின் கிளைபோல உயிரினங்கள் விரிகின்றன.

தனது கோட்பாட்டைப் பல உதாரணங்களுடன் விளக்கினார் டார்வின். இன்றைய விலங்குகளுக்கும் தொல்லுயிர் எச்சங்களில் உள்ள மூதாதையருக்கும் இடையே தொடர்புகள் உண்டு. விலங்குகளில் உடலில் பயன்படாமல் இருக்கும் உறுப்புகள் மாற்றம் அடைந்ததால் பயன் இழந்துபோன மிச்சங்கள். இப்படிப் பல சான்றுகளை அடுக்கினார். இதன் மூலம் உயிர்களின் தோற்றத்தை இயற்கை விதிகளின்கீழ் விவரிக்கலாம் என்று குறிப்பிட்டார். ஆனால் இத்துடன் அவர் நிறுத்தவில்லை. இங்கேதான் புத்திசாலித்தனமாக ஒரு வேலை பார்த்தார்.

தம்முடைய கோட்பாடு கிறிஸ்தவத்துக்கு எதிரானது அல்ல என்பதற்கான வாதங்களையும் சேர்க்கத் தொடங்கினார். கடவுள் அதிசயங்களை இயற்றுபவராக இல்லாமல், அண்டத்தின் விதிகளை அவர் வடிவமைத்திருக்கிறார். அந்த விதியின் கீழ்தான் உயிரினங்கள் உருவாகின்றன. அதனால் பரிணாம விதிகள் கடவுளுக்குப் பெருமைதான் சேர்க்கின்றன என்பதாக வாதம் வைத்தார். தனது வாதம் சார்லஸ் பாபேஜ் செய்ததுபோல் கடவுளுக்கு உயரிய அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று நினைத்தார் டார்வின்.

ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக, கடவுளைக் குரூரமானதாக காட்டுவதுபோல அவரது கோட்பாடு தோன்றியது. இயற்கையில் போட்டியை உருவாக்கி, ஒவ்வொரு விலங்கையும் அழிய வைத்து ஏதோ சில உயிர்களை மட்டும் காப்பாற்றும்படி இருக்கிறதா கடவுளின் விதி? கடவுள் ஏன் இத்தனை வலிகளைத் தர வேண்டும்? கடவுள் ஏன் துன்பங்களை உருவாக்க வேண்டும்? கடவுள் என்ன அத்தனை குரூரமானவரா என்று அவருக்குள்ளேயே கேள்விகள் எழுந்தன. இதற்கும் பதில் சொல்லும் வகையில் சில வாதங்களை உருவாக்கினார். வேட்டையாடுதல், நோய்மை, மரணங்களுக்குக் கடவுள் காரணமில்லை. இயற்கைதான் காரணம். ஆனால் இந்த மரணம், பட்டினி, போராட்டங்களால்தான் சிறந்த உயிரினம் உருவாகிறது என்று எழுதினார். ஆனால் படித்துப் பார்த்தபோது தன்னுடைய வாதங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதுபோல் தோன்றின.

எப்படி முயற்சித்தும் தன்னுடைய கண்டுபிடிப்பின் உண்மையையும் அதேசமயம் திருச்சபை நண்பர்களைத் திருப்திப்படுத்தும் வாதத்தையும் அவரால் ஒன்று சேர்க்க முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

டார்வினுடைய பீகல் குறிப்பேடு ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. பீகல் விலங்குகள் பற்றி அவர் எழுதுவதாக சொன்ன புத்தகம் குறித்த எதிர்பார்ப்பும் அறிவியலாளர்களிடையே உருவாகி இருந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு கோட்பாட்டை வெளியிட்டுத் தன் வளர்ச்சியில் தாமே முட்டுக்கட்டை போட்டுக்கொள்வது சரியா என்று யோசித்தார். எழுதிய நோட்டுப் புத்தகத்தை மூடினார். அப்படியே ஓரமாக வைத்தார்.

0

1842ஆம் ஆண்டு ஜூலையில் இங்கிலாந்து மீண்டும் போர்க்களமானது. பேருரிமை கிளர்ச்சியக்கப் போராளிகள் பணிவீடுகளை எதிர்த்தும் குறைந்த ஊதியங்களைக் கண்டித்தும் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. போராட்டக்கார்களை அடக்குவதற்காக ராணுவம் லண்டன் நகரை முற்றுகையிடப்போவதாகத் தகவல் வந்தது. டார்வின் எம்மாவையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு லண்டனைக் காலி செய்ய முடிவெடுத்தார்.

இங்கிலாந்தில் இருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கென்ட் மாகாணத்தில், டவுன் என்கிற அழகிய கிராமம் ஒன்றில் பண்ணை வீட்டை வாங்கினார். பெட்டிப் படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானார்.

ஆகஸ்ட் 14 ராணுவப் பட்டாளம் லண்டனைச் சுற்றி வளைத்தது. வீதியெங்கும் போராட்டக்காரர்கள் திரண்டு ராணுவத்தை எதிர்க்கத் தயாராக இருந்தனர். டார்வின் கிளம்பிய நேரம் அருகில் இருந்த ரயில் நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர். அதனால் அவரது பயணம் ரத்தானது. டார்வின் தங்கியிருந்த கோவர் வீதியையும் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் மாட்டிக்கொண்டார் டார்வின். தன் மீதும் தாக்குதல் நடக்குமோ என அஞ்சினார். அதற்குள் ராணுவம் வந்துவிட்டது. கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டையில் லண்டன் நகரமே களேபரமானது. ராணுவ வீரர்கள் போராடும் மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். ஒவ்வொருவராகச் செத்து விழுந்தனர். பேருரிமை இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் போராட்டம் நிற்கவில்லை. வெல்லிங்கடன் பிரபு மேலும் படைகளைக் கொண்டு வந்து லண்டனில் குவித்தார். அதிகப்படியான போலீஸார் வந்து இறங்கினர். அறிவியலாளர்களும்கூட ராணுவத்திற்கு ஆதரவாக உதவிகளைச் செய்தனர். தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கிலாந்து வீதிகளில் குவிந்துகொண்டே இருந்தனர். அறிவியல் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

டார்வின் எப்படியாவது வெளியேறினால் போதும் எனக் காத்திருந்தார். இந்த நேரம் பார்த்து எம்மா மீண்டும் கர்ப்பமானார். டார்வினால் அதற்கு மேல் தாமதிக்க முடியவில்லை. செப்டம்பர் 14 அன்று லண்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ரயில்கள் இயங்கத் தொடங்கின. அன்றைக்கே எம்மாவையும் குழந்தைகள் வில்லியம் ஆனியையும் அழைத்துக்கொண்டு லண்டனில் இருந்து தப்பிச் சென்றார் டார்வின்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *