செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன செய்வது? நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீதியெங்கும் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் இரைச்சல். இந்தக் களேபரத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது.
லண்டனில் இருந்து சுமார் இரண்டு மணி நேர தொலைவில் இருந்த கென்ட்டில், டவுன் எனும் கிராமத்தில் குடியேறினார் டார்வின். அங்கே யார் கண்ணிலும் படாத அமைதியான வாழ்க்கை. அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட 12 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும். அத்தனை தொலைவு. இப்படி ஓர் அமைதியான, ஆள் நடமாட்டம் இல்லாத, இயற்கை சூழ்ந்த இடத்தில் இருப்பதுதான் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் நல்ல இடம் என டார்வினுக்குத் தோன்றியது.
அந்தக் கிராமம் மிகச் சிறியது. பழமை வாய்ந்தது. ஒரு பழைய தேவாலயம், நாற்பது வீடுகள் அவ்வளவுதான் மொத்த ஊரே. அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் விவாசாயிகள், கைவினைக் கலைஞர்கள். வேறு தொழில்கள் கிடையாது. ஒரே ஒரு கடை, ஒரு உணவகம், தபால் நிலையம், மது விடுதி. இவ்வளவுதான்.
டார்வினின் பண்ணை வீடு விசாலமாக, ஏராளமான அறைகளைக் கொண்டிருந்தது. அவருக்கு ஏற்றாற்போல் வாசிப்பதற்குத் தனி அறையும், வெதுவெதுப்பாக நெருப்புமூட்டும் இடமும் இருந்தது. இதுபோதும் வாழ்நாளைக் கழிப்பதற்கு என்று நினைத்தார்.
புது வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்திலேயே மூன்றாவது குழந்தை பிறந்தது. ஆனால் இரண்டு வாரத்தில் இறந்துபோனது. குடியேற்றம் துக்கத்தில் தொடங்கியது.
டார்வினும் எம்மாவும் கிராமத்துக்கு ஏற்றார்போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டனர். லண்டனைப்போல இல்லாமல், இங்கே வசிக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தனர். கெளரவமும் உறவுகளும் முக்கியமாகப்பட்டது. எம்மா வீட்டைப் பார்த்துக்கொள்ள, டார்வின் எஸ்டேட்டைப் பார்த்துக்கொண்டார்.
வீட்டுக்கு யார் வந்தாலும் எம்மாதான் பதிலளிப்பார். டார்வின் அமைதியாக தன் அறையில் அமர்ந்தபடி எந்நேரமும் வாசிப்பும் எழுத்துமாக இருந்தார். ஆரம்பத்தில் டார்வினின் வாசிப்பறையை எட்டிப் பார்ப்பதே கிராம மக்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. அங்கே யாருக்கும் பெரிதாகப் படிப்பறிவு கிடையாது. புதிதாய் குடியேறி இருக்கும் ஒருவர் அறை முழுவதும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார் என்றவுடன் ஆர்வத்துடன் பார்க்க வந்துவிட்டனர். டார்வினுக்கு இது தொந்தரவாக அமைந்தது. உடனே பணியாட்களைக் கொண்டு பெரிய சுவர்களை எழுப்பினார். கண்ணாடி ஒன்றை மாட்டி, யாரெல்லாம் வந்து செல்கிறார்கள் என்று கவனித்தார்.
வேலைகள் வரிசை கட்டி நின்றன. எரிமலைகள் பற்றி ஒரு புத்தகம் திட்டமிட்டிருந்தார். பீகல் உயிரினங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தொகுக்க நினைத்தார். இதைத்தவிர தாவரங்கள் பற்றி ஒரு புத்தகம், கடல் உயிர்கள் பற்றி ஒரு புத்தகமும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும்விட பரிணாம மாற்றம் குறித்த சிந்தனையே முதன்மையாக இருந்தது.
கிடைக்கும் ஒவ்வொரு உயிரையும் ஆராய்ந்தார் டார்வின். பரிணாமக் கோட்பாட்டை வெளியிடுவது இப்போதைக்கு நடக்காது என்று தெரிந்தது. ஆனாலும் தாமதிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிடாமல் சான்றுகளைச் சேகரிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். பீகல் பயணக் குறிப்புகள் புத்தகத்திற்கே டார்வின் பொதுமைப்படுத்துகிறார் என்ற விமர்சனம் வந்துவிட்டது. இத்தனைக்கும் நிறையத் தரவுகளையும் சான்றுகளையும் வைத்து எழுதிய நூல் அது. அந்தத் தவறு இப்போது நடக்கக்கூடாது என்று முடிவாக இருந்தார். சான்றுகளைச் சேகரிப்பதற்காகவே கடுமையாகச் சிரமங்கள் மேற்கொண்டார்.
கிராமத்தில் இருந்த இயற்கைச் சூழல் உயிர்களை ஆராய்வதற்கு இன்னும் பயனுள்ளதாக அமைந்தது. அங்கே இருந்த புவியியல், பருவநிலை, விலங்குகள், பூக்கள், பூச்சிகள், புழுக்கள் என்று ஒன்றுவிடாமல் ஆராய்ந்தார். அவை அடுத்தடுத்த தலைமுறைகளில் என்னென்ன மாற்றங்களை அடைகின்றன என கூர்ந்து கவனித்து எழுதினார். இதன்மூலம் உயிரினங்களின் வடிவம் நிரந்தரமானது அல்ல, மாறக்கூடியது என்பதைத் தொடர்ந்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார். அவருடைய மொழி மிகச் சாதாரணமானதாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் பரிணாமம் குறித்த குறிப்புகள் வெடிக்கும். வெளியில் சாதாரண இயற்கையாளர்போலக் காட்டிக்கொள்ளவார். உள்ளுக்குள் ஆபத்தான கருத்துகளுடன் வலம் வருவார்.
அதற்காக நண்பர்களிடம் சுத்தமாக உறவை முறித்துக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது, விஞ்ஞானிகளுக்கு ஆய்வு தொடர்பான தரவுகளைச் சேகரித்து தருவது, நண்பர்களுக்கு வேலை வாங்கித் தருவது எனப் பலவற்றையும் செய்துகொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் டார்வினுக்கு அறிமுகமான நபர்தான் ஜோசப் ஹூக்கர். டார்வினைவிட ஆறு வயது இளையவர். இளம் தாவரவியலாளர். அப்போது அண்டார்ட்டிக்காவில் ஆய்வுப் பயணத்தை முடித்துவிட்டு வந்திருந்த ஹூக்கர், டார்வினை அடிக்கடிச் சந்தித்து ஆய்வு தொடர்பான விவாதங்களை நடத்தி வந்தார். இது இருவருக்கும் இடையே நல்ல நட்பை மலர வைத்தது. டார்வினைச் சுற்றி இளம் தலைமுறையினர் வட்டம் உருவாகத் தொடங்கியது.
0
1843 ஜூலை எம்மாவின் தந்தை ஜொசியா வெட்ஜ்வுட் இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது. டார்வினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜோசியாவின் மத நம்பிக்கைகள் டார்வினுக்கு ஒவ்வாது. ஆனால் இளம் வயதில் இருந்தே டார்வினை ஊக்கப்படுத்தி, பீகலில் பயணிக்க தந்தையின் அனுமதி பெற்றுத் தந்தவர் ஜோசியாதான். அந்த விதத்தில் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டவராக உணர்ந்தார் டார்வின்.
டார்வினுக்கு ராபர்ட் வாட்டர்ஹவுசில் இருந்து கடிதங்கள் வரத் தொடங்கின. வாட்டர்ஹவுஸ், லண்டனில் டார்வின் கொண்டு வந்த பீகல் பாலூட்டிகளை ஆய்வு செய்து வந்தவர். டார்வின் அவரிடம் விலங்கினங்களை வகைப்படுத்தும்படி கூறி இருந்தார். ஆனால் அது பாரம்பரியமுறையில் இருக்கக்கூடாது என்றிருந்தார்.
அப்போது பாரம்பரியமாக இருந்த வகைப்படுத்தல், விலங்குகளை படிக்கட்டுகளில் அடுக்குவதுபோல் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்தது. மனிதர்களை எல்லா விலங்குகளுக்கும் மேல் வைத்தது. கடவுளை அதற்கும் உச்சத்தில் வைத்தது. டார்வின் அதனை எதிர்த்தார். இப்படியான வகைப்படுத்தல் உண்மையை மூடி மறைப்பதாகக் கூறினார். முதலில் ஏன் எல்லாவற்றையும் வகைப்படுத்த வேண்டும்? வகைப்படுத்துதல் சரியா? வகைப்படுத்துதல் இயற்கையில் புதைந்திருக்கும் உண்மையையும், விலங்குகளுக்கு இடையேயான தொடர்பையும், எல்லோரும் ஒரே மூதாதையர்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும். பூமியில் மறைந்த தொல்லுயிர் எச்சங்களையும் இன்றைய பாலூட்டிகளையும் இணைக்க வேண்டும். இவற்றை வைத்து மரத்தில் இருந்து கிளைகள் விரிவதுபோல் எல்லா உயிர்களும் அமைய வேண்டும் என்றார் டார்வின்.
இந்தக் கருத்தைத்தான் வாட்டர்ஹவுஸ் எதிர்த்தார். டார்வினின் கருத்துகள் தன்னை அச்சுறுத்துவதாகக் கூறினார். இயற்கையில் தெய்வீக அம்சம் பொருந்திய மனிதன்தான் மேலே இருப்பான். பிற விலங்குகள் கீழே இருக்கும். சிற்றுயிர்கள் அடியில் இருக்கும். இதுதான் உன்னதமான வகைப்பாடு எனக் கூறி கடிதம் எழுதி இருந்தார்.
தன்னுடைய மாதிரிகளை இப்படித் தவறாகப் பயன்படுத்துகிறாரே என டார்வினுக்குக் கோபமாக வந்தது. வாட்டர்ஹவுசுடன் தொல்லுயிர் எச்சங்களை ஆய்வு செய்து வந்த ராபர்ட் ஓவனும் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து விலங்கினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்ற கருத்தை கடுமையாகத் தாக்கினர். மேலும் வாட்டர்ஹவுஸ் தனது வகைப்பாட்டை வெளியிட்டப்போது அதில் டார்வின் பெயர் குறிப்பிடப்படாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் டார்வினை ஆத்திரமூட்டியது. ஆனால் இதைவிட அவருக்கு இருந்த கோபம் அவர் பயன்படுத்திய முறை. வாட்டர்ஹவுஸ் பழைய வகைப்பாட்டில் இருந்து பல குறைகளைக் களைந்து மேம்பட்ட வகைப்பாட்டை உருவாக்கி இருந்தார். இதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாமும் பரிணாம மாற்றத்தின் வழி வந்தது என்பதைச் சொல்லவில்லை. இதுதான் டார்வினுக்குக் கோபம்.
வாட்டார்ஹவுஸ் விலங்கினங்களைத் தனித்தனி வட்டங்களாக வட்டங்களாக வரைந்து வகைப்படுத்தி இருந்தார். அவற்றுக்கு இடையே பொதுமையான பண்புகளை மட்டும் வைத்து ஒற்றுமையைக் காட்டியிருந்தார். ஆனால் அவை ஒரே மூதாதையரிடம் இருந்து வந்ததால் உள்ள தொடர்பு என்று எங்கேயும் கூறவில்லை. மேலும் இரண்டு விலங்கினங்களுக்கு இடையே எந்த இடைப்பட்ட உயிரினமும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டிருந்தார். இது முட்டாள்தனமான கருத்து என்றார் டார்வின். உண்மையில் இடைப்பட்ட உயிரினத்தை உயிரோடு இருக்கும் உயிர்களிடம் தேடக்கூடாது. தொல்லுயிர் எச்சங்களில் தேட வேண்டும். சமகாலத்தில் வாழ்ந்து அழிந்த உயிர்களில் தேட வேண்டும். ஏனென்றால் ஒரு விலங்கு மற்றொன்றாக மாற்றம் அடையும்போது உருவான இடைப்பட்ட உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன. இந்த உண்மை புரியாத வரை லண்டன் விஞ்ஞானிகள் எல்லோரும் அறிவாற்றவர்களே எனக் கோபத்தில் கொந்தளித்தார் டார்வின்.
(தொடரும்)

