Skip to content
Home » டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

இயற்கைத் தேர்வு கோட்பாட்டைக் கண்டடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்தன. எதிர்வினைகளுக்குப் பயந்து அந்தக் கோட்பாடு டார்வினின் மனதுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ரகசியம் காக்கவும் டார்வினால் முடியவில்லை. யாரிடமாவது சொன்னால் தேவலாம் என்று நினைத்தார். தன்னுடன் கடிதத்தில் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் ஹூக்கரிடம் சொல்லலாம் என முடிவு செய்தார்.

ஹூக்கரைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். டார்வின் டவுனுக்குக் குடிபெயர்ந்தவுடன் அறிமுகமான இளம் ஆய்வாளர்களில் ஒருவர் ஹூக்கர்.

ஹூக்கர் அப்போதுதான் முக்கியமான அறிவியல் பயணம் ஒன்றை முடித்துவிட்டு திரும்பி இருந்தார். ஏராளமான தீவுகளுக்குச் சென்று தாவரங்களையும் ஆய்வு செய்திருந்தார். ஹூக்கருக்கு டார்வினின் படைப்புகள் மேல் மரியாதை அதிகம். டார்வின் எழுதிய பீகல் குறிப்பேட்டைப் படித்துவிட்டுதான் பயணமே சென்றவர் ஹூக்கர். அப்போதில் இருந்து டார்வினுக்குக் கடிதம் எழுதி வந்தார். தெற்கு அரைக்கோளத்தில் இருக்கும் தாவரங்களை எல்லாம் ஒப்பிட்டு ஹூக்கர் எழுதிய ஆய்வுக் கட்டுரை டார்வினுக்குப் பிடித்துப்போனது. அதன்பின் இருவரும் தொடர்ந்து உரையாடினர். பல விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர். அந்த நம்பிக்கையில்தான் டார்வின் தன் ரகசியத்தை அவரிடம் திறந்து காண்பிக்க நினைத்தார்.

விலங்கினங்களில் நடைபெறும் மாற்றம், தான் கண்டடைந்த இயற்கைத் தேர்வு, உயிர்களின் தோற்றம், எல்லா விலங்குகளும் ஒரே மூதாதையரில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் என எல்லாவற்றையும் விளக்கி கடிதம் ஒன்றை எழுதினார் டார்வின். தான் ஏழு வருடங்களாக உயிரினங்களின் ஆதாரங்களைச் சேகரிப்பதாகவும், உயிரினங்கள் நிலையானவை அல்ல என்பதில் ஊர்ஜிதமாக இருப்பதாகவும், ஆனால் தன்னுடைய கருத்தை வெளியே சொல்வது ஒரு கொலையை ஒப்புக்கொள்வதைப்போல் அச்சமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். தான் கிறிஸ்தவத்தை அதிகம் விரும்புவதாகவும், இதனால் தன்னுடைய கோட்பாட்டை வெளிப்படுத்துவதில் குற்றவுணர்வுடன் இருப்பதாகவும், இருப்பினும் தன் ஆய்வு முடிவுகள் விலங்கினங்கள் மாறுவதைத்தான் உண்மையென நிறுவுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

ஹூக்கருக்கு அனுப்பிவிட்டு பதில் வருமா எனக் காத்திருந்தார் டார்வின். ஹூக்கர் ஒன்றும் புரட்சிகர சிந்தனைகள் கொண்டவர் இல்லை. கடுமையான மதப்பற்று கொண்டவர். இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் கடவுளின் கைவண்ணம் இருப்பதாக நம்பக்கூடியவர். ஒன்று, தன் கோட்பாட்டை படித்துவிட்டு ஹூக்கர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது என்னுடன் பேசுவதையே முழுதாக நிறுத்திவிட வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும் எனக் காத்திருந்தார்.

ஆனால் டார்வின் நினைத்ததுபோல் ஹூக்கர் அவரை விட்டு விலகவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. உயிரினங்களிடம் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான். ஆனால் ஓர் உயிரினம் மற்றொன்றாக உருமாறும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பதில் அளித்திருந்தார் ஹூக்கர்.

இது ஒன்றும் டார்வின் கருத்தை ஏற்கும் பதில் இல்லைதான். ஆனால் இதுவே டார்வினுக்குப் நிம்மதியைத் தந்தது. அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் எல்லாம் பரிணாமம் குறித்துப் பேசும்போது கடும் தாக்குதல்தான் பதிலாக வரும். இத்தனைக்கும் தன்னுடைய கோட்பாடாகப் பரிணாமத்தை டார்வின் முன்வைத்தது கிடையாது. பரிணாம மாற்றம் என்ற பொதுவான வார்த்தையைக் கேட்டாலே காதை மூடிக்கொள்வார்கள். கறாராக நிராகரிப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் ஹூக்கர் டார்வினை நிராகரிக்கவில்லை. அவரது கருத்தில் உடன்பாடில்லை என்பதை நாகரீகமாகச் சுட்டிக்காட்டினார். இதுவே நம்பிக்கையைத் தந்தது. பரிணாம மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்ள ஒரு நண்பர் கிடைத்துவிட்டார் என மகிழ்ந்தார் டார்வின். அன்றிலிருந்து தனது ரகசிய எண்ணங்களை ஹூக்கரிடம் விவாதிக்க ஆரம்பித்தார்.

டார்வினுக்குப் பரிணாம மாற்றம் பற்றி தன் மனதில் உள்ள எண்ணங்களை நீண்ட கட்டுரையாக எழுத வேண்டும் எனத் தோன்றியது. சிறிதாகத் தொடங்கியவர் ஓரிரு வாரங்களிலேயே ஒரு புத்தகமாகப் பிரசுரிக்கும் அளவுக்கு 200 பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டார். கட்டுரை முடிந்தவுடன் கவலை தொற்றிக் கொண்டது. இதை யார் படிப்பார்கள்? யார் பிரசூரிப்பார்கள்? ஒருவேளை பிரசூரிக்காமலே போய்விட்டால்?

அப்போது அடிக்கடி டார்வினின் உடல்நிலை மோசமாகிவந்த சமயம். எதற்கெடுத்தாலும் உடல் படுத்தும். மருத்துவ சிகிச்சைகள் எதுவும் உதவவில்லை என்பதால் இறந்துவிடுவோம் என்கிற அச்சமே டார்வினுக்கு இருந்தது. உடனே பிரசுரிக்கலாம் என்றால் அதுவும் அப்போதைக்கு நடக்காது என்று தோன்றியது. நண்பர்கள் தன் கோட்பாட்டைக் கேட்டுவிட்டு தன்னை நிராகரித்துவிட்டால்? இதனால் தன் கட்டுரையைப் பிரசுரிப்பது தொடர்பாக கடிதம் ஒன்றை மனைவிக்கு எழுதினார் டார்வின்.

‘அன்புள்ள எம்மா. இது நான் உனக்கு எழுதிக்கொள்ளும் ரகசியக் கடிதம். நான் பரிணாம மாற்றம் பற்றி ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன். அது உனக்கே தெரியும். புத்தகமாக வெளிவரும் அளவு பெரிய கட்டுரை அது. ஒருவேளை அதைப் பிரசுரிப்பதற்கு முன்பே நான் இறந்துவிட்டால் என் புத்தகத்தை நீதான் பிரசுரிக்க வேண்டும். இந்தக் கடிதத்துடன் கூடவே 400 பவுண்ட் தொகையை வைத்திருக்கிறேன். எந்தப் பதிப்பகத்திடம் தர வேண்டும் என்பதையும் கூறி இருக்கிறேன். நான் இறந்தவுடன் நீ என் நண்பர்களில் லைல், ஃபோர்ப்ஸ், ஹென்ஸ்லோ, ஹூக்கர், ஓவன், இவர்களில் எவரையாவது தொடர்புகொண்டு என் கட்டுரையைப் பிரசுரிக்க உதவி கேள். இவர்கள் எல்லோரும் என் கருத்துக்கு எதிரானவர்கள்தான். ஆனாலும் நான் இறந்தபின் எனக்காக உதவுவார்கள் என நம்புகிறேன்.’

கடிதத்தை முடித்தார் டார்வின். அதை ஓர் உரையில் வைத்து தன் மனைவியிடம் கொடுத்தார். நான் இறந்தவுடன்தான் இந்தக் கடிதத்தைத் திறந்து படிக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டார்.

0

டார்வின் பரிணாமக் கோட்பாட்டை ரகசியமாகப் பாதுகாத்து வர, இன்னொருபுறம் காலம் மாறிக்கொண்டிருந்தது. 1840ஆம் ஆண்டு புரட்சியாளர்கள் மட்டுமே ஏற்றுகொண்டிருந்த பரிணாமம் குறித்த கருத்து விஞ்ஞானிகளையும் ஈர்க்கத் தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்தது ராபர்ட் சேம்பர்ஸ் என்பவர் எழுதிய Vestiges of the Natural history of Creation என்கிற புத்தகம். 1844ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம் பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது.

சேம்பர்ஸ், பரிணாமம் உள்ளிட்ட அறிவியல் கருத்துக்களைச் சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஆர்வம் கொண்ட அறிவியலாளர். கோள்கள் உருவானதில் இருந்து மனிதர்கள் உருவான வரை எளிமையான நடையில், எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில், ஏராளமான உதாரணங்களுடன் விவரித்திருந்தார். வழக்கமாக அறிவியல் என்றால் வறட்சியான, அறம் சார்ந்த கருத்துக்களைக் கொண்டது என்கிற கருத்தை மாற்றி, ஆர்வமூட்டும் வகையில் அவரது புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

நிறைய விஞ்ஞானிகளே சேம்பர்ஸின் புத்தகத்தைக் கொண்டாடத் தொடங்கினர். சாதாரண வாசகர்களுக்கும் புத்தகம் பிடித்துப்போனது. கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகளும் திருச்சபை தலைவர்களும் மட்டும்தான் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தனர். டார்வினும் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்துப் பிரமித்துப்போனார்.

அந்தப் புத்தகத்தில் நிலவியல், உயிரியல் இரண்டிலும் இருக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை எடுத்து ஒவ்வொன்றையும் சுவைபட விளக்கி, கடவுள் படைப்பை நிகழ்த்தவில்லை எனச் சொன்னார் சேம்பர்ஸ். புத்தகத்தின் பெயரில் உள்ள வெஸ்டீஜஸ் என்றால் சுவடுகள் என்று பொருள். கடவுளின் கச்சிதமான வடிவம்தான் உயிரினங்கள் எனச் சொல்லி வந்த அறிவுச் சமூகத்திடம் விலங்குகள் உடலில் உதவாத சில பாகங்கள் இருக்கின்றன. அவை வெறும் உடல் உறுப்புகள் அல்ல. சுவடுகள். விலங்குகள் உருமாறுகின்றன என்பதற்கான சுவடுகள் எனப் பல உதாரணங்களுடன் விளக்கினார் சேம்பர்ஸ். டார்வினுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் தயங்கித் தயங்கி யோசித்த பரிணாமக் கொள்கையை இன்னொருவர் எழுதி புத்தகமாக வெளியிட்டது. அதுவும் எளிமையான நடையில் வெளியிட்டது டார்வினுக்கு ஆச்சரியமூட்டியது. அதேசமயம் புத்தகத்தில் இருந்த போதாமைகளையும் சுட்டிக்காட்டினார் டார்வின். குறிப்பாக பரிணாம மாற்றம் இயற்கை தேர்வின் அடிப்படையிலேயே புதிய உயிர்களைத் தோற்றுவிக்கிறது எனும் கோட்பாட்டைப் பற்றி ஒரு வரிகூட இல்லை. அதைப் பற்றி ஆசிரியருக்குத் தெரியவுமில்லை. இதனால் இந்தப் புத்தகம் உண்மைக்கு நெருக்கமாக இல்லை என கூறிவிட்டார் டார்வின். இருந்தாலும் பொதுமக்களுக்குப் பரிணாமக் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சேம்பர்ஸின் எண்ணத்தைப் பாராட்டினார்.

புத்தகம் ஒவ்வொரு பதிப்பாக வெளிவர, வெளிவர அதன் பிரபல்யம் கூடிக்கொண்டே சென்றது. மதவாத விஞ்ஞானிகள் தாங்க முடியாமல் தவித்தனர். குறிப்பாக டார்வினின் நண்பர் செட்ஜ்விக், பரிணாமக் கொள்கை கடவுள் நம்பிக்கை அழித்து, சமுக ஒழுங்கைச் சீர்குலைத்து, திருச்சபையின் அதிகாரத்தைக் கெடுத்துவிடும். சமூகத்தை அழிவு நோக்கி அழைத்துச் செல்லும் புத்தகம் என வசைபாடினார். அவரது வாதத்தில் தர்க்கங்கள் இல்லை. வெறும் முந்தீர்மானமும் வன்மமும் மட்டுமே வெளிப்பட்டன. இதுதான் டார்வினை அச்சுறுத்தியது.

இந்தப் புத்தகம் வெளியானதையொட்டி இன்னொரு வதந்தியும் பரவியது; இந்தப் புத்தகத்தை எழுதியது டார்வின்தான் என்று! ஆம், புத்தகம் வெளியானபோது அதில் ஆசிரியர் பெயர் எதுவும் இல்லை. டார்வின் அவ்வபோது பரிணாமக் கருத்தைச் சிலரிடம் ரகசியமாக விவாதிக்கிறார் என்ற செய்தி அடிக்கடி அறிவு சமூகத்தில் அடிப்பட்டது. அதனால் வெஸ்டீஜஸை டார்வின்தான் எழுதியிருக்கக்கூடும் எனச் சிலர் நம்பினர்.

டார்வினுக்கு உண்மையில் நகைப்பாக இருந்தது. பரிணாமக் கொள்கை என்றாலே டார்வின்தான் என நினைத்து பரவி வரும் வதந்தியை நான் பெருமையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது இத்தனை குறைகள் உள்ள புத்தகத்தை நான் எழுதியிருப்பதாக நம்புகிறார்களே என அவமானப்பட வேண்டுமா என்று கிண்டலாகக் கூறினார். டார்வினின் பெயர் அடிப்பட்டவுடன் சேம்பர்ஸே தனது ஆறாவது பதிப்பைக் கையெழுத்திட்டு டார்வினுக்கு அனுப்பினார். அப்போதுதான் அந்தப் புத்தகத்தை எழுதியது யார் என்ற உண்மையே டார்வினுக்குத் தெரியவந்தது.

புத்தகம் வெளியானபோது பத்திரிகையாளர் ஒருவர் சேம்பர்ஸை ரகசிய பேட்டிக் கண்டார். அதில் ஏன் புத்தகத்தில் தங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை எனக் கேட்டிருந்தார். இதற்கு சேம்பர்ஸ், தனக்கு பதினொரு காரணங்கள், அதாவது பதினொரு பிள்ளைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். டார்வினும் அதற்குத்தான் பயந்துகொண்டிருந்தார். டார்வினுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள். இப்போது நான்காவது முறையாக எம்மா கர்ப்பம். இதைத்தவிர விஞ்ஞான உலகில் டார்வினுக்கு நல்ல பெயர் வேறு இருந்தது. புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தாவரங்கள், விலங்குகளுக்கு எல்லாம் டார்வினுடைய பெயரைச் சூட்டும் அளவுக்குச் செல்வாக்கு உயர்ந்தது. புவியியல் கழகத்தில் துணைத் தலைவராகவும் இருந்தார். பல இளம் விஞ்ஞானிகளுக்கு ஆதர்ச நாயகனாகவும் விளங்கினார். இத்தனை பெருகைகளையும் ‘பரிணாம மாற்றம்’ எனும் ஒற்றை வார்த்தையால் இழந்துவிட டார்வினுக்குத் துணிவில்லை.

மேலும் டார்வின் தன் கோட்பாட்டை வெளியிடாததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. டார்வினை மறுத்த விஞ்ஞானிகள் எல்லோரும் அவர் மீது வைத்த குற்றச்சாட்டு டார்வின் ஊகத்தின் அடிப்படையிலேயே தன் முடிவுகளை வந்தடைகிறார் என்பதுதான். இதனால் ஒவ்வொரு ஆதாரத்தையும் பலமுறை சோதனைக்கு உட்படுத்தி துல்லியமாகக் கவனித்தபின்னே தன் கருத்தை வெளிக்கொணர வேண்டும் என்று விரும்பினார் டார்வின்.

வெஸ்டிஜஸ் வெளியான தருணத்தில் டார்வின் பறவைகள் பற்றி தனது நண்பரான லினர்ட் ஜெனின்ஸிடம் விவாதித்துக்கொண்டிருந்தார். ஜெனின்ஸிடம் பறவைகள் பற்றி ஏராளமான சிறிய தகவல்களை சேகரிக்கச் சொன்னார் டார்வின். பறவைகளின் உணவு உன்னும் விதம், அலகின் வடிவங்கள், தூங்கும் நேரம் என ஒவ்வொன்றையும் குறித்து வைக்க கட்டளையிட்டார். இவை எதற்குமே உபயோகம் இல்லை என ஜெனின்ஸ் நிராகரித்தார். ஆனால் டார்வினுக்கு இந்த அற்பமான தகவல்களில்தான் ஆழமான உண்மைகள் ஒளிந்திருப்பதாகத் தோன்றின.

சொல்லப்போனால் ஊகம்தான் டார்வினை உண்மையை நோக்கி உந்தித் தள்ளியது. டார்வின் ஒரு இயற்கை கோட்பாட்டாளர். ஆனால் மற்ற கோட்பாட்டாளர்கள் தங்களுடைய கோட்பாடு எந்த அளவுக்கு பெரிதாய் இருக்கிறது என்பதிலேயே கவனம் செலுத்தியபோது டார்வினோ தரவுகளின் துல்லியத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். டார்வினுக்கு ஒரு கோட்பாட்டை உருவாக்குவது எளிது. ஆனால் அதற்கு உதவும் தரவுகளை சேகரித்து, சான்றாகத் திரட்டுவதுதான் கடினம்.

தன் ஊகங்கள் தவறாகிவிடக்கூடாது என்பதற்கு அதிகம் மெனக்கெட்டு சின்னச் சின்னத் தகவல்கலையும் சேகரித்து தொகுத்து அதிலிருந்து உண்மைகளைத் தேடிக்கொண்டிருந்தார் டார்வின். இயற்கைத் தேர்வு கோட்பாட்டை அடைந்தபின்னும்கூட ஏன் உயிரினங்களின் உடலில் வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதில் டார்வினுக்குப் போதுமான திருப்தி இல்லை. இந்த வேறுபாடுகள் தன்னிச்சையாக நடக்கிறதா? அல்லது சூழலுக்கு ஏற்ப அமைகிறதா எனத் தேடிக்கொண்டே இருந்தார். இதற்காகப் பல விநோத உதாரணங்கள், விசித்திரமான தகவல்களைத் தேடி அலைந்தார்.

இங்கிலாந்தில் இருந்து கிளம்பும் பயணிகள், ஆய்வாளர்கள், கப்பல் மருத்துவர்கள், ஆய்வுக் கப்பல்கள் என பலரிடம் சென்று அவர்கள் கண்ட உயிரினங்கள் பற்றித் தகவல் கேட்பார். ஒருகட்டத்தில் பிரிட்டன் அரசே முன்வந்து டார்வின் உலகில் எங்கெல்லாம் சென்று, என்னவெல்லாம் சேகரிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்தால், கப்பலை அங்கேயே அனுப்பி வேண்டிய தரவுகளைச் சேகரித்து வருவதாகச் சொன்னது. அப்போது கிளம்பிய எரிபஸ், டெரர் என்கிற இரு கப்பல்களும் டார்வின் பெட்டி பெட்டியாக எழுதிக் கொடுத்த கேள்விகளைத் தாங்கிச் சென்றன. அந்த அளவுக்கு டார்வினின் தேடல்கள், தரவு சேகரிப்புகள் இருந்தன. ஹூக்கரே ஒருமுறை கிண்டலாகக் கூறினார். மற்றவர்கள் வேண்டாம் என தூக்கிக்போடும் பயனற்ற குப்பைகளை எல்லாம் பயனுள்ள உண்மைகளாக மாற்றும் ஞானம் டார்வினுக்கு இருக்கிறது என்று. அதுதான் உண்மையும்கூட.

இதேசமயம் ஹூக்கரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வலுவடைந்து வந்தது. நட்பு என்பதைத் தாண்டி ஹூக்கரையே சார்ந்து இருக்கும் அளவுக்கு டார்வின் மாறிப்போனார். ஹூக்கரை தன் வீட்டுக்கு வரவழைத்து அடிக்கடி பேசினார். தனக்கு வேண்டிய தரவுகளைச் சேகரித்து வரும்படி கேட்பார். ஹூக்கர் அனுப்பிய கட்டுரைகள், பிரசுரங்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இருந்து தனக்கு வேண்டிய கருத்துகளை எல்லாம் எடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தி, கேள்விகளை உருவாக்கி ஹூக்கருடன் விவாதிப்பார். அதில் கிடைக்கும் விடைகளைத் தனது சிறிய நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொள்வார். இது அவருடைய அன்றாட வழக்கமாகவே இருந்தது. டார்வின் இப்போது பயணிப்பதை முழுமையான நிறுத்தி இருந்ததால், ஹூக்கரிடம் இருந்து தகவல்களைப் பிழிந்து எடுப்பதுதான் அவருடைய ஒரே வேலையாக இருந்தது. இதனால் ஹூக்கரைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தத் தொடங்கினார் டார்வின்.

இதுவே ஹூக்கருக்குக் கவலை கொடுத்தது. டார்வின் தன்னை அதிகம் சார்ந்து இருப்பதாகவும், தன்னிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதாகவும் வருந்தினார். 1845இல் ஹூக்கருக்கு எடின்பர்க்கில் தாவரவியல் பேராசிரியர் பணியும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே செல்லப்போவதாகச் சொன்னார் ஹூக்கர். ஆனால் டார்வின் விடவில்லை. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் தன் வேலைகளை மட்டுமே ஹூக்கர் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹூக்கர் டார்வினிடம் கத்திவிட்டார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *