Skip to content
Home » டார்வின் #27 – வள்ளல்

டார்வின் #27 – வள்ளல்

பீகல் பயணம் நிறைவடைந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. பயண ஞாபகம் வாட்டியது. ஒரே அறையில் நாள் முழுவதும் பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்கவில்லை. வெளியே சென்றால் தேவலாம் எனத் தோன்றியது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. இருக்கும் இடத்திலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் டார்வின்.

டார்வினுக்கு ஆரம்பத்தில் இருந்தே கிராமம் ஒன்றைத் தத்தெடுத்து முன்னேற்ற வேண்டும் என்கிற ஆசை இருந்தது. பல்கலைக்கழக நாட்களில் தன் ஆசானான ஹென்ஸ்லோவின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு கிராமத்தினருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளை அவர் ஏற்பாடு செய்வதைப் பார்த்திருக்கிறார். கல்வி அறிவு குன்றியவர்களுக்குப் பாடம் எடுப்பது, கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, பிரார்த்தனைக் கூட்டம் என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும். ஹென்ஸ்லோ ஒரு பாதிரியாராக இதைச் செய்தார். டார்வினுக்கும் இதேபோல் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் டார்வின்தான் பாதிரியார் கிடையாதே? இதனால் பிரபுவாக மாறி இந்தத் திட்டங்களை நிறைவேற்றலாம் எனத் தீர்மானித்தார் டார்வின். லிங்கன்ஸைரில் சுமார் 324 ஏக்கர் நிலங்களை வாங்கி அப்பகுதியின் பிரபுவாக உயர்ந்தார்.

இதன்பின் தான் விரும்பிய ஒவ்வொரு திட்டங்களையும் கிராம மக்கள் நலன் என்கிற பெயரில் நிறைவேற்றத் தொடங்கினார் டார்வின். முதலில் தனது பகுதியில் இருந்த பாழடைந்த தேவாலயம் ஒன்றைச் சீரமைத்தார். ஞாயிறு பள்ளி என்ற ஒன்றைத் தொடங்கி பிரார்த்தனைக்கு தேவாலையத்துக்கு வருபவர்களுக்குக் கல்வி வழங்கினார். இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். குழந்தைகளுக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கினார்.

ஏழைகளுக்கு, பனிக்காலத்திற்கு வேண்டிய உணவுப்பொருட்களைத் தானம் செய்தார். தனது பண்ணை வீட்டைச் சுற்றி இருந்த நிலங்களை கிராமத்தினருக்கு இலவசமாகக் குத்தகைக்குவிட்டு அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்யும் வகையில் தற்சாற்பு வாழ்க்கையை ஊக்குவித்தார்.

பகல் முழுவதும் பண்ணையில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு மாலையில் மது அருந்துவதே ஒரே பொழுதுபோக்காக இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என நினைத்து நூலகம் கட்டிக்கொடுத்து செய்தித்தாள் வாசிக்க ஏற்பாடுகள் செய்தார். இப்படியாகச் சுற்றுவட்டாரத்தில் வள்ளலாக உருமாறி வந்தார் டார்வின். ஆனால் அவரது வள்ளல் தன்மைக்கும் சோதனை வந்தது.

1845ஆம் ஆண்டு திடீரென்று பூஞ்சை தாக்கியதில் பிரிட்டன் முழுவதும் உருளைக் கிழங்கு விவசாயம் நாசமானது. பூஞ்சைத் தாக்குதல், ரொட்டியையும் உருளைக் கிழங்குகளையும் நம்பி வாழும் எழைகளுக்குப் பேரிடியாக அமைந்தது. அயர்லாந்தில் மட்டும் 5 ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் பேர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் பிரிட்டனைவிட்டு இடம்பெயர்ந்தனர். டார்வினின் கிராமத்தினரும் பாதிக்கப்பட்டனர். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

சோளத்தின் மீதான இறக்குமதி வரியால் சோள மாவின் விலை உச்சத்தில் இருந்தது. இதுவும் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உணவில்லாமல் வாட வைத்தது. தன் பொறுப்பில் இருக்கும் கிராம மக்கள் அவதிப்படுவதைப் பார்த்த டார்வின், இறக்குமதி வரியை விலக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தார். பசியால் வாடிய ஏழைகளுக்கு முடிந்த அளவு ரொட்டிகளை டார்வினும் எம்மாவும் வழங்கத் தொடங்கினர். டார்வின் தனது ஆய்வுமுறையைப் பயன்படுத்தி மாற்று உருளை விதைகளைப் பயிரிட்டார். ஆனால் அதையும் பூஞ்சை தாக்கியது. டார்வினின் திட்டம் எடுபடாமல்போனது.

பண்ணைத் தொழிலில் சில ஆண்டுகளில் லாபம் சுத்தமாக இல்லை. டார்வினுக்குச் சம்பளம் கொடுக்கவே அந்த ஆண்டு வருமானம் இல்லாமல் போனது. டார்வினின் மனைவி எம்மா குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேல்ஸில் தன் தந்தை வீட்டுக்குத் தற்காலிகமாகக் குடிபெயர்ந்தார். டார்வின் மட்டும் வீட்டிலேயே இருந்து நிலங்களைக் கவனித்துக்கொண்டார். அவருடைய வீட்டில் அப்போது கட்டட வேலை நடைபெற்று வந்தது. கூலி கொடுக்கவே பணம் இல்லை. இதனால் டார்வின் நியமித்த மேலாளர் அங்கு வேலை செய்த கூலிகளைப் பணியில் இருந்து நீக்கினார். அப்போது ஒரு கூலியாள் டார்வினிடம் வந்து தனது மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ளதாகவும், தனக்கு வேலை போனால் குடும்பமே வாடும் எனவும் உடைந்து அழ, மேலாளரை அழைத்த டார்வின் இனி யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.

ஆனால் நிலைமை கையை மீறிபோனது. சேமிப்புகள் எல்லாம் கரைந்துகொண்டிருந்தன. இனியும் தன்னால் வள்ளல் வாழ்க்கையை வாழ முடியுமா என்கிற பயம் வந்தது டார்வினுக்கு. முடிந்தவரை மற்ற பண்ணையார்களைப்போல் ஏழைகளைச் சுரண்டாமல், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் தன்னாலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் பொறுப்பேற்க முடியாது என்றும் புரிந்தது.

இந்த நெருக்கடி சில சமூக புரிதல்களையும் டார்வினுக்குக் கொடுத்தது. ஒரு சிலர் மட்டுமே நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தி வைத்திருக்கும் சமூக உறவுமுறையைக் கேள்வி எழுப்ப வைத்தது. அப்போது மூத்த மகன்களுக்கு மட்டுமே தந்தையின் நிலம் எனும் சட்டம் அமலில் இருந்தது. அதை ஒழிக்க வேண்டும் என்றார் டார்வின். மேலும் ஏழைகள் நிலம் வாங்க முடியாத அளவு பத்திர வரி உச்சத்தில் இருந்தது. இதையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இப்போதுதான் டார்வினுக்கு ஏழைகளின் வாழ்க்கையை கீழ் இருந்து மேலே பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது.

டார்வினும் அவரது நண்பர்களும் சோளத்தின் மீதான வரியைக் குறைக்க வைக்கும்படி குரல் கொடுத்தனர். இத்தனைக்கும் அந்த வரி குறைந்தால் பண்ணையில் இருந்து வரும் டார்வினின் வருமானமும் குறையும். ஆனால் ஒருசாரார் மட்டுமே செழிப்பாக இருக்க இன்னொருவர் வாடுவதை டார்வின் விரும்பவில்லை. இயற்கைத் தேர்வில் விலங்குகளுக்கு இடையே போராட்டம் என்பதை உறுதிப்படுத்தினாலும், சமூக நிலையில் வாழ்க்கைப் போராட்டம் மக்களை எப்படி கொன்றொழிக்கிறது என்கிற நிதர்சனத்தை டார்வின் புரிந்துகொண்டார்.

ஏழைகளின் வேண்டுகோளுக்கு ஒருவழியாகப் பாராளுமன்றம் செவி சாய்த்தது. பிரதமர் ராபர்ட் பீல், சோளத்தின் மீதான வரிகளை குறைத்தார். உணவுப் பொருட்கள் விலை குறைந்தன. ஏழைகள் பிழைத்தனர்.

0

இதற்கிடையில் மீண்டும் ஆரோக்கியம் குன்றியது. தினசரி சில மணி நேரங்கள் மட்டுமே பணியாற்ற முடிந்தது. மரண பயம் வாட்டியது. தந்தை ராபர்ட், டார்வினுக்குச் சர்க்கரை இல்லா உணவைப் பரிந்துரைத்தார். வயிற்றில் மின்சாரம் பாய்ச்சி சிகிச்சை வழங்கப்பட்டது. ஏதேதோ மருந்துகள் எடுத்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. வீட்டில் முடங்கினார் டார்வின்.

அந்தச் சமயத்தில் எம்மாவின் தாயார் காலமானார். டார்வினுக்கு காலம் மாறிக் கொண்டிருப்பது புரிந்தது. மெயரில் இருந்த வெட்ஜ்வுட்டின் குடும்ப வீடு விற்கப்பட்டது. சிறுவயதில் விடுமுறைக்குச் சென்று வெட்ஜ்வுட் குழந்தைகளுடன் ஓடி ஆடிய வீடு, சகோதரிகளிடம் அமர்ந்து கதைகள் கேட்ட வீடு, தோட்டத்தில் பூச்சிகளைத் தேடி துலாவிய வீடு. இப்படி வீட்டைச் சுற்றி இருந்த பல ஞாபகங்களும் இருந்தன. ஒரு யுகம் முடிவுக்கு வந்ததாக உணர்ந்தார் டார்வின்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *