டார்வின் ஹூக்கரையே நம்பி எல்லாவற்றையும் செய்து வந்தது அவரைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாக எடின்பர்க் பேராசிரியர் வாய்ப்பு டார்வினின் கட்டுப்பாடினால் ஹூக்கருக்குத் தட்டிப்போனது. கடும் கோபம் கொண்டார் ஹூக்கர். டார்வினுடன் இதற்கு மேல் பணியாற்ற முடியாது என்று கத்திவிட்டார். டார்வின் திகைத்துப்போனார். ஹூக்கர் இதுவரை அதிர்ந்துகூடப் பேசியது கிடையாது. அப்படி இருப்பவர் இப்போது கோபத்தில் கத்துகிறார் என்றால், தாம் எத்தனை சுயநலமாக அவரைப் பயன்படுத்தி இருக்கிறோம் என்று வேதனை கொண்டார். தயங்காமல் மன்னிப்பு கேட்டார்.
ஹூக்கருக்கும் தாம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோமோ எனத் தோன்றியது. மன்னிப்பு கேட்டுவிட்டு ஓரிரு நாட்கள் அமைதியாக இருந்தார். பின் மீண்டும் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தார். இந்தச் சிறிய சண்டைக்குப் பிறகு ஹூக்கர் டார்வினுக்கு இடையேயான நட்பு இன்னும் வலுவடைந்தது. வாரக் கணக்கில் டார்வினின் வீட்டில் தங்கினார் ஹூக்கர். டார்வினின் குழந்தைகளுடன் இணைந்து பியானோ வாசித்தார். வீட்டு வேலைகளைச் செய்தார். குடும்ப உறுப்பினராகவே மாறிப்போனார்.
ஹூக்கர் இவ்வளவு நெருக்கமானவுடன் பரிணாம மாற்றம் குறித்துத் தான் எழுதி வைத்திருந்த கட்டுரையை அவரிடம் படிக்க கொடுத்தால் என்னவென்று தோன்றியது டார்வினுக்கு. இதற்கு முன்னமே பலமுறை தன் கோட்பாட்டை அவரிடம் விவாதித்து இருக்கிறார். ஆனால் சான்றுகள், ஆதாரங்கள், வாதங்கள் என வலுவாக முறைப்படுத்தப்பட்ட 200 பக்கக் கட்டுரையை வாசிக்கக் கொடுப்பது என்பது வேறு. இதனால் ஹூக்கரிடம் கொடுத்து அவர் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்தார்.
ஹூக்கர் கவனமாக முழுக் கட்டுரையையும் வாசித்தார். மிகச் சுருக்கமாகத் தனது பதிலைக் கொடுத்தார்: நீங்கள் படைப்புக் கோட்பாட்டைச் சாடுவது தேவையில்லாதது. ஓர் உயிர் இன்னொன்றாக மாறுகிறது என்றால் இடைப்பட்ட உயிரிகள் எங்கே? பண்ணை விலங்குகளிடம் நடைபெறும் செயற்கைத் தேர்வு பற்றி ஆழமான குறிப்புகள் உள்ளன. ஆனால் இயற்கையில் அதற்கான சான்றுகள் எங்கே?
டார்வினுக்கு ஏமாற்றமாக இருந்தது. மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பது ஊர்ஜிதமாகிறது. அது வீட்டு விலங்காக இருந்தால் என்ன? காட்டு விலங்காக இருந்தால் என்ன? இதற்காகக் காட்டிற்குச் சென்றா வேறுபாடுகளைத் தேட முடியும்? டார்வினுக்குக் கவலையாக இருந்தது.
டார்வின் ஹூக்கரிடம் நல்ல ஆய்வுத் திறமையையும் விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் கண்டார். எதிர்காலத்தில் பரிணாமக் கோட்பாடு தொடர்பான வதங்களை எடுத்துச் செல்லும் திறன் அவருக்கு இருப்பதாக நினைத்தார். தனக்குப் பின்னான அறிவியல் வாரிசாக ஹூக்கர் உருவாக வேண்டும் என்பதுதான் டார்வினுடைய விருப்பம். ஆனால் ஹூக்கரோ பரிணாம மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் மதங்களின் பக்கம் சாய்ந்து கிடக்கிறார். எப்படி அவரை மாற்றுவது?
இயற்கையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சான்றுகள் இருந்தால்போதும், நான் ஏற்கத் தயார் என்றார் ஹூக்கர். டார்வின் எதிர்பார்த்த அந்தச் சான்று பீகல் உயிரினங்களில் இருந்தே கிடைத்தது.
டார்வின் பீகல் பயணத்தில் இருந்து கொண்டு வந்த எல்லா உயிரினங்களையும் ஆய்வு செய்து முடித்திருந்தார். ஒன்றே ஒன்று மட்டும் பாக்கி இருந்தது. அது, பார்னகில் (barnacles) என அழைக்கப்படும் அலசி. அலசி என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஒட்டுடலிகளில் ஒன்று. இவை கடல் அலைகள் மிகுந்த பாறை பகுதிகளிலும் படகுகளின் அடியிலும் காணப்படுகின்றன. சீலேவில் இந்த உயிரியைக் கண்டறிந்தார் டார்வின். ஓரிரு மாதங்கள் ஆய்வு செய்துவிட்டு ஒரு புத்தகம் எழுத வேண்டும் என நினைத்தார். ஆனால் அலசிகளின் ஆய்வே கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எடுத்தது.
டார்வின் அலசியில் மேற்கொண்ட ஆய்வுகள், உயிர்கள் மாறுகின்றன என்பதற்கான சான்றையும் பாலினம் குறித்து அவர் அறியாத புதிய கோணத்தையும் கொடுத்தன.
டார்வின் அலசிகளை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது அவற்றில் சிறிய ஒட்டுண்ணிகள் இருப்பதைக் கண்டார். முதலில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒட்டுண்ணிகளைக் காணும்போதெல்லாம் வெட்டி தூக்கி எறிந்துவிடுவார். ஆனால் ஒருமுறை அப்படி என்னத்தான் அந்த ஒட்டுண்ணிகள் செய்கின்றன என ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. உண்மையில் அவை எதுவும் ஒட்டுண்ணிகள் கிடையாது. ஆண் இனங்கள்!
அலசிகள் என்பவை இருபாலின உயிரி. ஒரே உடலில் ஆண், பெண் இரு உறுப்புகளும் உண்டு. ஆனால் டார்வின் அலசியை ஆராய்ந்தபோது அவற்றில் மேலும் இரண்டு வகைகள் இருப்பதைக் கண்டறிந்தார். இதில் முதல் வகை ஆண், பெண் எனத் தனித்தனிப் பாலினங்களாக வாழும் அலசிகள். ஆனால் இதிலும் விஷயம் இருந்தது. என்னவென்றால், இதில் பெண் அலசிகள் சாதாரண அளவிலும் ஆண் அலசிகள் மிகச் சிறிய அளவிலும் இருந்தன. அதாவது ஒட்டுண்ணிகளைப்போல மிகச்சிறிய அளவில் அவை இருந்தன. அவையும், பெண்களின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தன.
ஆண்கள் ஏன் அப்படி இருக்கின்றன என ஆராய்ந்தபோது அவை சிறிய புழுக்களாக இருக்கும்போதே பெண் உடலில் தன்னைப் பொறுத்திக்கொள்கின்றன என்றும், பின் அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையை வாழ்கின்றன என்றும், அவற்றால் நகரக்கூட முடியாது என்றும் தெரிந்துகொண்டார் டார்வின். அதேபோல இன்னொரு வகை அலசியும் இருந்தது. அவற்றில் ஆண் இனங்கள் இன்னும் சிறியவை. அவற்றுக்கு என்று தனியாக வாய், வயிறு போன்ற உறுப்புகள்கூடக் கிடையாது. பெண்கள் இனப்பெருக்கம் செய்ய விரும்பியபோது வெறும் விந்துக்களை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அவை பயன்பட்டன. மற்ற எல்லாவற்றையும் பெண்கள்தான் பார்த்துக்கொள்ளும். இயற்கையின் அதிசயங்களுக்கு எல்லையே கிடையாது என்று அதிசயித்துப்போனார் டார்வின்.
இது விலங்கினங்களில் இதுவரை தெரிய வராத விஷயம். அதேசமயம் அதிர்ச்சியூட்டும் விஷயமும்கூட. ஏனென்றால் அதுவரை இயற்கையில் ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இனமாகவும், பெண் என்பவள் ஆண்களை சார்ந்து அடங்கி வாழும் இனமாகவுமே கருதப்பட்டது. ஆனால் அலசிகளின் ஆய்வுகளோ ஆதிக்கம் வாய்ந்த பெண்களையும், அவற்றை அண்டி வாழும் பலவீனமான ஆண்களையும் டார்வினுக்குக் காட்டியது. கடவுளின் வடிவமைப்பு இப்படி இருக்க முடியாது என்பதே மதவாதிகளின் வாதம். அந்த வாதத்தைப் பொய்யாக்கும் கூற்றுகளை டார்வின் கண்டடைந்திருந்தார்.
மேலும் அலசிகளில் காணப்பட்ட கூறுகள், அவை சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து வந்திருப்பதை உறுதிப்படுத்தின. இனப்பெருக்கத்தை உறுதி செய்ய இயற்கையே பல மாறுபாடுகளை உருவாக்குவதாக டார்வின் புரிந்துகொண்டார். மேலும் விலங்கினங்களில் பால் அமைப்பு என்பது நிலையானது அல்ல. மாறக்கூடியது என்பதும் டார்வினுக்குப் புரிந்தது. இத்தகைய பாலினப் பரந்து தன்மை அவை தனித்தனியாக உருவாக்கப்பட்டிருந்தால் வந்திருக்காது. ஒரே மூதாதையரில் இருந்து பிரிந்திருந்தால் மட்டுமே சாத்தியம். இதனால் விலங்குகள் பரிணாம மாற்றம் அடைகின்றன என்பதை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தினார் டார்வின்.
இருபாலின உயிரிகளான அலசிகள் சிறிய சிறிய வேறுபாடுகளால் கொஞ்சம் கொஞ்சமாகத் தனித்தனி பாலினங்களாக உருவாகி இருக்கின்றன. முதலில் இருபாலின உயிரிகள் ஆண் உறுப்புகளைத் தொலைத்திருக்கின்றன. அங்கே தனித்த ஆண் உயிரி உருவாகி அந்த இடத்தைப் பற்றி இருக்கிறது.
எல்லா உயிர்களும் இப்படித்தான் தோன்றி இருக்கின்றன என்பதற்கு இதைவிட ஆதாரம் வேறு எதுவும் கிடையாது என்று வாதிட்டார் டார்வின்.
இதை ஹூக்கரை அழைத்துக் காட்டினார். ஹூக்கர் இந்தமுறை எப்படி மறுக்கப்போகிறார் எனக் காத்திருந்தார் டார்வின். ஆனால் ஹூக்கர் எந்த விவாதமும் நடத்தவில்லை. அதிசயித்துப்போய் நின்றார். உயிர்கள் மாற்றம் அடைந்து புதிய உயிரிகள் தோன்றுகின்றன என்பதை நேரில் கண்டுவிட்டேன். இதற்கு மேலும் எனக்கு ஆதாரங்கள் தேவை இல்லை என பரிணாம மாற்றத்தை ஒப்புக்கொண்டார் ஹூக்கர்.
அலசிகளின் ஆய்வு ஹூக்கரையும் டார்வினையும் இணைத்தது. இருவரையும் ஒரே இலக்கு நோக்கித் பயணிக்கத் தயார்படுத்தியது. ஹூக்கரும் டார்வினும் தங்களுடைய எதிர்கால ஆய்வுகள் பாலினம் பற்றியும், மரபுவழி தொடர்ச்சி பற்றியும் இருக்கப்போகின்றன என்பதைக் கண்டுகொண்டனர்.
ஆனால் இருவரும் ஒரே இடத்தில் இருக்கவில்லை. நோக்கம் ஒன்றாக இருந்தாலும் பாதை வெவ்வேறாக இருந்தது. அலசிகளின் ஆய்வுகள் முடிந்தவுடன் ஹூக்கர் இன்னொரு பயணத்திற்குத் தயாரானார். இதைச் சொன்னவுடன் டார்வினுக்கு மறுபடியும் அதிர்ச்சி. ஹூக்கர் தன்னை விட்டுச் சென்றால் ஆய்வுகள் எல்லாமே தொய்வடைந்துவிடுமோ எனத் தயங்கினார். ஆனால் சொல்லவில்லை. ஹூக்கருக்கு என்று தனியாக ஒரு எதிர்காலமும் வாழ்க்கையும் இருக்கிறது. அவரது பயணம் தொடங்கட்டும் என வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார்.
இந்தமுறை ஹூக்கர் வெப்ப மண்டல பகுதிகளை ஆராய இருந்தார். இதற்காக அவர் செல்ல இருந்த இடம் இந்தியா. ஹூக்கருக்கு இமயமலையை ஆராய்வதற்கான நிதி அரசிடம் இருந்து கிடைத்தது. டல்ஹவுசியின் தலைமையில் சிடோன் எனும் கப்பலில் இந்தியா நோக்கி பயணிக்கத் தொடங்கினார் ஹூக்கர்.
இதே சமயத்தில் டார்வினின் முந்தைய படைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடங்கி இருந்தன. உடல் ஆரோக்கியம் மோசமானது. குடும்ப வாழ்க்கையிலும் பல கவலைகள் முளைத்தன. முடங்கிப்போனார் டார்வின்.
(தொடரும்)

