ஹூக்கர் சென்றவுடன் டார்வினின் உடல், மனம், ஆய்வு எல்லாமும் நலிவடைந்தது. தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார். மற்ற நேரங்களில் படுக்கையிலேயே கிடந்தார்.
மனதளவில் சோர்வடைந்திருந்த டார்வினை உற்சாகப்படுத்தியது குழந்தைகளின் விளையாட்டுகளும் சிரிப்பொலிகளும்தான். டவுனுக்கு வந்தவுடன் பிறந்த மூன்றாவது குழந்தை ஓரிருவாரத்தில் இறந்தது எனப் பார்த்தோம். அதன்பின் 1843ஆம் ஆண்டு மகள் ஹென்ரியட்டா பிறந்தாள். அடுத்த இரு ஆண்டுகளில் மகன் ஜார்ஜ் பிறந்தான். ஆறாவது மகள் எலிசபெத் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிறந்தாள்.
மகள் ஆனிக்கு ஏழு வயது நிறைவடைந்தது. படு சுட்டியாக இருந்தாள். டார்வின் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது அவரது அறைக்குள் நுழைந்து ஏதாவது குறும்புத்தனம் செய்துவிட்டு ஓடிவிடுவாள். செய்ய வேண்டிய வேலை இரட்டிப்பாகிவிடும். திட்டிக்கொண்டே துரத்துவார் டார்வின். ஆனால் டார்வினுக்கு ஏதாவது உதவி என்றால் உடனே வந்து நிற்பதும் ஆனிதான். டார்வினுக்கு மாத்திரைகள் எடுத்து தருவது, அம்மா மறைத்து வைத்திருக்கும் புகையிலையைக் கண்டுபிடித்து தருவது என எல்லாமும் ஆனியின் கைங்கரியத்தில்தான் நிகழும்.
டார்வின் 39வது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினார். அவரைப் பார்க்க, லைல், ஓவன் என முக்கிய விஞ்ஞானிகள் வருகை தந்திருந்தனர். டார்வினைப் பார்க்கவே பொறாமையாக இருந்தது. அமைதியான வீடு, நல்ல மனைவி, ஆரோக்கியமான குழந்தைகள், வசதி வாய்ப்புகள், சுதந்திரம், இது போதாது? வெளியில் இருந்து பார்க்க டார்வினின் வாழ்க்கை பிரகாசமாகத் தெரிந்தது. ஆனால் உள்ளுக்குள் கவலைகளும் ஆரோக்கியமும் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருந்தன.
1848ஆம் ஆண்டு டார்வின் தந்தை ராபர்ட்டின் உடல்நிலை மோசமானது. 81 வயதான ராபர்ட் படுக்கையானார். மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. தந்தையின் இறுதி நிமிடங்களைக் காணக் கிளம்பிச் சென்றார் டார்வின். டார்வினுக்குமே அப்போது முடியவில்லை. உடல் மிகவும் களைத்திருந்தது. வயிறு தொடர்ந்து துன்புறுத்தியது.
நவம்பர் மாதம் 14ஆம் தேதி தூக்கத்திலேயே ராபர்ட்டின் உயிர் பிரிந்தது. டார்வினுக்கு அழுகையாக வந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. அப்பா ஏன் அழுகிறார் என்று குழந்தைகளுக்குப் புரியவில்லை. ஆனி மட்டும் தந்தையின் மடியிலேயே அமர்ந்திருந்தார். எம்மாதான் டார்வினை சமாதானப்படுத்தினார். இறுதிச் சடங்குக்குச் செல்வதற்குக்கூட டார்வினுக்குத் தைரியம் வரவில்லை. ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு சென்றபோது ராபர்ட்டை ஏற்கெனவே அடக்கம் செய்திருந்தனர்.
தந்தையின் மரணத்துடன் டார்வினுடைய ஆரோக்கியமும் மோசமடைந்தது. கைகள் நடுங்கின. பலமுறை மயங்கிவிழுந்தார். கண்களில் கருவளையம் தோன்றின. படுக்கையானார். இறந்துவிடுவோம் என்று உறுதியாகத் தெரிந்தது. ஆனால் யாருக்கும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டர். மற்றவர்களைக் கவலையில் ஆழ்த்த டார்வினுக்கு மனம் வரவில்லை.
பைபிள் வசனங்களைப் படித்துக் காட்டித் தைரியமூட்டுவார் எம்மா. ஆனால் டார்வினுக்கு மதத்திலும் நம்பிக்கை போனதால் பற்றிக்கொள்ள கரங்கள் ஏதும் இல்லாமல் தள்ளாடினார். எம்மா பைபிள் வாசகங்களை வாசிக்கும்போதெல்லாம், யாராலும் இறப்பைத் தடுக்க முடியாது. மரணம் இயற்கையின் ஒரு பகுதி என்று இயலாத நிலையிலும் விதண்டாவாதம் செய்வார் டார்வின். எம்மா இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே மாட்டார்.
டார்வினின் நிலைமை வெளியே தெரியாமலேயே இருந்தது. டார்வினின் பீகல் நண்பர் சல்லிவன் திடீரென்று ஒருமுறை சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்கு வந்தபோதுதான் உண்மை தெரிந்தது.
டார்வினின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்துபோனார் சல்லிவன். வற்றிய முகம், ஒடுங்கிய உடல், நடுங்கிய கைகள். நலிந்துபோயிருந்தார் டார்வின். இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவேன் என்று கவலைதொய்ந்த குரலில் பேசினார். சல்லிவனுக்கு கண்ணீர் முட்டியது. என் நண்பனுக்கா இந்த நிலைமை? நாற்பது வயதுகூட ஆகவில்லையே. அதற்குள் என்ன நோய்?
மருத்துவர்களுக்கே தெரியவில்லை என்றார் டார்வின். எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன். மரணத்தின் வாசலில் நிற்கிறேன். மரணம் மட்டுமே என்னை விடுவிக்கும். நான் இப்படி இருப்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் டார்வின்.
ஆனால் சல்லிவன் விடவில்லை. நீ இறக்க மாட்டாய் டார்வின். நான் ஒரு மருத்துவரைச் சொல்கிறேன். ஜேம்ஸ் கல்லி என்பவர் நீர் மருத்துவம் செய்து வருகிறார். அவரைச் சென்று பார்த்தால் எந்த நோயையும் குணப்படுத்திவிடுவார் என்று வற்புறுத்தினார் சல்லிவன்.
டார்வினுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மரணத்துடனான இடைவிடாத போராட்டத்தில் இறுதி முயற்சியாக மருத்துவர் கல்லியைப் பார்க்கப் புறப்பட்டார்.
0
கல்லியின் மருத்துவமனை லண்டனில் இருந்து 140 மைல் தொலைவில் மல்வெர்ன் ஹில்ஸ் எனும் இடத்தில் இருந்தது. ஏழு ஆண்டுகளாக இயங்கி வந்த அந்த மருத்துவமனை நீர் சிகிச்சைக்குப் பெயர் பெற்றிருந்தது. கோடைக் காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வரிசை கட்டி நிற்பர். எல்லாவற்றையும் கல்லி குணப்படுத்திவிடுவதாக பேச்சு. டென்னிஸன், மெக்காலே, டிக்கன்ஸ் போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள்கூட அம்மருத்துவமனை பற்றி எழுதியிருந்தனர். ஆனால் டார்வினுக்கு நம்பிக்கையே வரவில்லை. அது என்ன நீர் மருத்துவம்? இது ஏதோ போலி அறிவியல்போல் அல்லவா இருக்கிறது? அறிவியலுக்குப் புறம்பான சிகிச்சையை ஏற்க முடியாது என டார்வினின் மனம் மறுத்தது.
மேலும் லண்டனில் டார்வினுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் டார்வினுக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இது பரம்பரை நோய் என்றும், அதனைச் சரி செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தனர். ரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் சேர்ந்து, மூட்டில் சிறுநீரக உப்பு படிந்ததால் கீழ்வாதம் வந்திருக்கிறது. உங்களுக்கு யூரிக் அமிலம் வயிறு வரை போய் பாதித்திருக்கிறது. ரத்தத்தில் விஷம் கலந்துவிட்டது. குணப்படுத்தவே முடியாது எனக் கைவிட்டிருந்தனர்.
இதனாலேயே கல்லியின் சிகிச்சையும் தன்னைக் காப்பாற்றாது என்ற உறுதியான எண்ணத்தில் கிளம்பிச் சென்றார் டார்வின். எதற்கும் இருக்கட்டுமே என கல்லி எழுதிய நீர் சிகிச்சை எனும் நூலைப் போகும் வழியில் வாசித்தார்.
நீர் சிகிச்சை என்பது குளிர்ந்த நீரின் மூலம் உடலுக்குள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வயிற்றில் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைக்கும் சிகிச்சை. சிகிச்சையில் பலன் பெறக் குறைந்தது இரண்டு மாதங்கள் எடுக்கும் என கல்லி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். டார்வின் இப்போதும் நம்பவில்லை.
டார்வினின் மொத்தக் குடும்பமும் மால்வெர்னுக்குக் குடிபெயர்ந்தது. மால்வெர்ன் பசுமையான மலை நகரமாக இருந்தது. அமைதியாக, சுத்தமாக இருந்தது. சுண்ணாம்பால் கட்டப்பட்ட வீடுகளே எல்லா இடங்களிலும் காணப்பட்டன. நகரத்துக்கு வெளியே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டார் டார்வின். குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக மலைக்குன்றுகள் அருகிலேயே அவரது வீடு இருந்தது. அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்று கல்லியைச் சந்தித்தார் டார்வின்.
மருத்துவர் கல்லிக்கும் டார்வினின் வயதுதான். அவரும் எடின்பர்க்கில் டார்வின் படித்த அதே ஆண்டில் படித்தவர்தான். எடின்பர்க்கில் கல்வி முடிந்தவுடன் பாரிஸ் சென்று ஹோமியோபதி, ஹைட்ரோபதி, மனநிலை சிகிச்சை எனப் பல்வேறு மாற்று மருத்துவங்களைப் பயின்றுவிட்டு சிகிச்சை கொடுக்கத் தொடங்கினார். டார்வினுக்கு இதில் எந்த மருத்துவ முறைகளிலும் நம்பிக்கை கிடையாது. ஆனால் கல்லியைப் பார்த்தவுடன் நம்பிக்கையானவராகத் தோன்றினார். அவரது பேச்சும் அக்கறையும் போலி மருத்துவர்களைப்போன்று இருக்கவில்லை.
கல்லி மிக கவனமாக டார்வினின் உடலை ஆராய்ந்து, அக்கறையுடன் சிகிச்சை அளித்தார். அங்கே சிகிச்சை வித்தியாசமாக இருந்தது. காலை எழு மணிக்கு முன் எழ வேண்டும். குளிர்ந்த நீரில் நனைத்த துண்டைக் கொண்டு உடலை 2-3 நிமிடங்களுக்குத் துடைக்க வேண்டும். பிறகு நீர் அருந்த வேண்டும். 20 நிமிடம் நடக்க வேண்டும். ஈரமான ஆடையை நாள் முழுவதும் அணிய வேண்டும்.
உணவில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளக்கூடாது. உப்பு, மாமிசம் என எதுவும் கிடையாது. எப்போதாவது புகையிலை பயன்படுத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல ஹோமியோபதி மருந்துகளையும் கல்லி வழங்கினார். பிடிக்கவில்லை என்றாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் டார்வின் பின்பற்றினார். இதிலேயே இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. நட்பு நம்பிக்கையைக் கொடுத்தது. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடலைத் தேற்றியது.
அங்கே இருந்த பிற நோயாளிகளையும் கவனித்தார் டார்வின். அந்த இடம் முழுவதுமே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் நிரம்பி இருந்தனர். ஆனால் தினமும் ஒருவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றபடி இருந்தனர். அந்தச் சூழலே மனதில் நம்பிக்கையை விதைத்தது. மாலை வேளைகளில் மலை ஓரங்களில் நடமாடி மீண்டும் வண்டுகள் சேகரித்தார் டார்வின். குதிரைகள் மேல் ஏறிச் சவாரி செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக கல்லியின் சிகிச்சை வேலை செய்யத் தொடங்கியது. டார்வினின் உடல் தேற ஆரம்பித்தது. உடல் நடுக்கம் நின்றது. எடை கூடியது. பலம் வந்தது. நோய்மை குணமானது. வாழ வேண்டும் என்கிற ஆசை வந்தது.
கல்லி டார்வினின் உடல்நிலைக்கு மன அழுத்தமும், மோசமான ரத்த ஓட்டமும்தான் காரணம் எனக் கூறினார். ஒரு மாதத்தில் முழுவதும் குணப்படுத்திவிடுவேன் என வாக்களித்தார். நடக்கவே முடியாமல் இருந்தவரை ஒருநாளைக்கு ஏழு மைல்கள் நடக்கும் அளவுக்கு தேற்றினார். மே மாதத்தில் முழுவதுமாகக் குணமடைந்தார் டார்வின். மரண வாசலில் நின்றிருந்தவரை அழைத்து வந்து மீண்டும் இங்கிலாந்தில் விட்டார் கல்லி.
இறுதியாக நீர் சிகிச்சை போலி மருத்துவம் இல்லை என ஒப்புக்கொண்டார் டார்வின். அப்போதும்கூட அந்த மருத்துவத்தால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய நோய் குணமடைந்தது. உடலின் துன்பம் அகன்றது. மரண பயத்தில் இருந்து விடுதலை அடைந்துவிட்டேன். இனி என் ஆய்வுகளைத் தொடரப்போகிறேன் எனக் குதூகலித்தார் டார்வின்.
(தொடரும்)

