மால்வெர்னில் இருந்து குணமடைந்த டார்வினின் உடல் தேறிவிட்டது. ஆனால் அவரது கொடிய பரம்பரை நோய் குடும்பத்தில் வேறொரு நபரைப் பாதித்தது. அவரது அன்பான செல்ல மகள் ஆனி.
ஜூன் 1850. டார்வின் தொல்லுயிர் எச்சங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். டார்வினின் மனைவி வழி சொந்தங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்திருந்தனர். மொத்தம் 21 பொடிசுகள். எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீடே கொண்டாட்டமாக இருந்தது. அப்போது பார்த்து டார்வினின் மூத்த மகள் ஆனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. விளையாடிக்கொண்டிருந்தவள் திடீரென மயங்கி விழுந்தாள். வாந்தி எடுத்தவள், சிறிது நேரத்துக்குப் பிரக்ஞையற்றுப் போனாள்.
வயிற்று வலி வாட்டியது. படிக்க முடியவில்லை. காரணமே இல்லாமல் அழுதாள். இரவெல்லாம் தூங்காமல் சிணுங்கிக்கொண்டிருந்தாள். ஆனியின் அறிகுறிகளைப் பார்த்தபோது தன்னுடைய நோய்தான் ஆனியையும் தாக்கிவிட்டது என்று டார்வினுக்குப் புரிந்தது.
ஆனி டார்வினுக்கு செல்லக் குழந்தை என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். டார்வினுக்கு ஆனியைப் பார்க்கும்போதெல்லாம் எம்மாதான் நினைவுக்கு வருவார். அவளது வயதுக்குரிய குறும்புத்தனமும் இருக்கும். அதே சமயம் தாயின் அரவணைப்பும் இருக்கும். தன் வயதுடைய சிறுமிகளைவிட உயரமாக இருந்தாள் ஆனி. பாசத்தைப் பொழிந்தாள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள். டார்வின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உடலைத் துடைத்துவிடுவது, துணியை அலசித் தருவது, அவர் நடைபயிற்சிக்குச் செல்லும்போது கூடவே பாதுகாப்புக்கு செல்வது என எல்லா உதவிகளையும் செய்வாள். மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைச் சட்டென்று புரிந்துகொண்டு அதற்கேற்ப தன் அரவணைப்பை மாற்றிக்கொள்பவள் ஆனி. ஏதாவது கிண்டல் பேசிக்கொண்டு டார்வினைச் சிரிப்பிலேயே வைத்திருப்பாள்.
ஆனால் இப்போது ஆனியின் உற்சாகம் குன்றிக்கொண்டே வந்தது. அக்டோபரில் ஆனியைத் தொடர் காய்ச்சலும் தலைவலியும் படுத்தியது. எம்மா, ஆனியை குடும்ப மருத்துவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. டார்வினுக்கு வந்த அதே பிரச்னை என்பதை மட்டும் கண்டறிந்து சொன்னார். ஆனி வலி பொறுக்க முடியாமல் தாயையும் தந்தையையும் இறுகப் பற்றிக்கொண்டு அழுதாள். ஆனி படும் துன்பத்தால் குடும்பம் நிம்மதி இழந்தது. தன்னைக் குணப்படுத்திய அதே மருத்துவரிடம் ஆனியை அழைத்துச் செல்லலாம் எனத் தீர்மானித்தார் டார்வின்.
ஆனியை அழைத்துக்கொண்டு குதிரை வண்டியில் பயணித்தார் டார்வின். செல்லும் வழியெல்லாம் ஆனி ஒரே அழுகை. எம்மா மீண்டும் கர்ப்பம் என்பதால் வரவில்லை. தனியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமும் குழந்தையைப் பயமுறுத்தியது. டார்வின் ஆனியை அணைத்துக்கொண்டார். செல்லும் வழியெல்லாம் கதைகள் சொலிக்கொண்டே வந்தார். குணமடைந்தவுடன் மருத்துவமனையின் அருகே இருக்கும் மலைக்குன்றுகளில் விளையாடலாம் என உற்சாகப்படுத்தினார்.
மருத்துவமனையை அடைந்தவுடன் கல்லி ஆனியைச் சோதிக்கவில்லை. அதே ஊரில் இருக்கும் ஆருடம் சொல்லும் பெண் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தார். டார்வினுக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. சிகிச்சைக்கும் ஆருடத்திற்கும் என்ன சம்மந்தம்? முட்டாள்தனமான பரிந்துரை அல்லவா இது? ஆனால் ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று அழைத்துச் சென்றார். அந்தப் பெண் ஆனியின் உடலில் கைவைத்துப் பார்த்து வயிற்றில்தான் பிரச்னை என்று கூறினார்.
தன் மகளை எப்படியாவது காப்பாற்றிவிடுமாறு கல்லியிடம் கேட்டுக்கொண்டார் டார்வின். மார்ச் 28, ஆனியைப் பார்த்துக்கொள்ள எம்மாவின் சகோதரி ஃபேனி மால்வெர்னுக்கு வந்தார். வேலை இருந்ததால் ஃபேனியிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் டார்வின்.
டார்வின் அலசிகள் குறித்து கண்டறிந்த விஷயங்களைத் தொகுத்து புத்தகமாக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினார் டார்வின்.
ஏப்ரல் 15 அவரச செய்தி ஒன்று மால்வெர்னில் இருந்து வந்தது. ஆனியின் உடல் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், காய்ச்சல் தீவிரமாகி வாந்தி எடுப்பதால் உடனே கிளம்பி வரும்படி டார்வினுக்கு எழுதியிருந்தார் ஃபேனி. டார்வின் தன் புத்தகத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு இரவே கிளம்பிச் சென்றார்.
அவர் மருத்துவமனையை அடைந்தபோது ஆனியின் உடல் கொஞ்சம் தேறி இருந்தது. ஆனாலும் சோர்வாகக் காணப்பட்டாள். மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது. மொத்தம் 88 நோயாளிகள். ஆனியுன் உடல் மெலிந்திருந்தது. உடல் பலவீனமாக இருந்தது. அமோனியா நாற்றம் குடலைப் புரட்டியது. அந்தச் சூழலைப் பார்த்தவுடனேயே உடைந்துவிட்டார் டார்வின். தேம்பித் தேம்பி அழுதார். பின் தன்னுடைய துக்கம் ஆனியைப் பாதித்துவிடக்கூடாது என அமைதியானார்.
அன்றைய இரவு நிலைமை மீண்டும் மோசமானது. ஆனியின் நாடித் துடிப்பு ஒழுங்கற்று இயங்கியது. சுயநினைவு தப்பியது. மருத்துவர் கல்லி கவலையுடன் டார்வினை அணுகினார். காலை வரை ஆனி பிழைத்திருப்பதே கடினம் என்று கூறினார். தான் எல்லா முயற்சிகளும் எடுத்துவிட்டதாகவும் சிகிச்சையை ஆனியின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
காலை ஆறு மணிக்கு ஆனி மீண்டும் வாந்தி எடுத்தாள். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் அவள் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அன்றைக்கு முழுவதும் போராட்டம் நீடித்தது. மறுநாள் புனித வெள்ளி. அன்றைக்கு ஆனி விடை கொடுத்துவிடுவாள் என நம்பினார் டார்வின்.
ஆனால் அன்றைக்கு இரவு ஆனியின் உடல்நிலை தேறத் தொடங்கியது. காய்ச்சல் நீங்கியது. நாடி துடிப்பு நிலையானது. உணவை உடல் ஏற்றுக்கொண்டது. இரவு முழுவதும் ஆனியைக் கவனித்தபடியே இருந்தார் டார்வின். அமைதியாக உறங்கினாள் ஆனி.
ஞாயிறு வந்தது. ஆனிக்கு இன்னும் வாந்தி நிற்கவில்லை. நிறையத் தண்ணீர் குடித்தாள். கொஞ்சம் தெளிவாகத்தான் தெரிந்தாள். கல்லி ஆனியின் உடலைப் பார்த்துவிட்டு கொஞ்சம் தேறிவிட்டதாகக் கூறிச் சென்றார். ஆனாலும் டார்வினுடைய மனம் பதற்றத்திலேயே இருந்தது. திங்கட்கிழமை அவள் குணமடைந்து வருவதற்கான அறிகுறி நன்றாகவே தெரிந்தது. அவளுடைய வயிறு மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதுவரை இயங்காமல் இருந்த சிறுநீர் பையும் வேலை செய்தது. ஆனால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதுதான் கல்லியைக் கவலைகொள்ளச் செய்தது. வயிற்றுப் போக்கு தொடர்ந்தாலோ, நாடி பலவீனம் அடைந்தாலோ ஆபத்து என எச்சரித்துச் சென்றார் கல்லி.
எம்மாவுக்குத் தினமும் கடிதம் எழுதி ஆனியின் உடல்நிலையை விவரிப்பார் டார்வின். எம்மா, தொலைதூரத்தில் மகளுக்காக எந்நேரமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள். தந்தியை எதிர்பார்த்துதான் அவரது ஒவ்வொரு நாளும் கழியும். ஆனியின் உடல் நிலை தேறி வருவதாக வந்த கடிதம் எம்மாவுக்கு நம்பிக்கை அளித்தது. எம்மா இங்கிருந்தே ஆனிக்கு செய்து தர வேண்டிய சமையல் குறிப்புகளை எழுதி ஃபேனிக்கு அனுப்புவார்.
இழந்த நம்பிக்கை மீண்டு வந்தபோது செவ்வாய் அன்று நிலைமை மாறத் தொடங்கியது. கல்லி எதிர்பார்த்ததுபோலவே கடுமையான வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அதில் ஆனியின் மொத்த வலுவும் வற்றிப்போனது. வலியால் துடிக்க ஆரம்பித்தாள் ஆனி. டார்வினால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை. மகளின் துன்பத்தைப் பார்த்து டார்வினுக்கும் உடல்நிலை மோசமானது. அங்கேயே டார்வினுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாலையில் ஆனி மிகவும் நலிவுற்றாள். இரண்டு முறை சுயநினைவற்று உளறினாள். பாடினாள். புதன்கிழமை காலை அமைதியாகப் படுத்திருந்தாள். அவளது மெலிந்த உடலைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. டார்வின் அவளது பக்கத்தில் அமர்ந்து தேம்பி அழுதார். ஆனியின் சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. மதியம் முற்றிலுமாகச் சுயநினைவு இழந்தாள். பாதிக் கண்களைத் திறந்தபடி விடைபெறுவதற்காகத் தவித்துக்கொண்டிருந்தாள். திடீரென்று மால்வெர்னை இருண்ட மேகங்கள் சூழ்ந்தன. கனமழை வெடித்து பெய்தது. இடிச் சத்தம் மலைத்தொடர் எங்கும் எதிரொலித்தது. போராடிக்கொண்டே இருந்த ஆனி இப்போது போராட்டத்தை நிறுத்தினாள். தன் இறுதி மூச்சை விடுவித்தாள். அமைதியாக விடைபெற்றாள்.
டார்வின் அழுதுகொண்டே ஆனியின் பக்கத்தில் அமர்ந்து இறுதியாக ஒருமுறை அவளுடைய சோர்ந்த நெற்றியில் முத்தமிட்டார்.
0
டார்வின் மெதுவாக ஒரு காகிதத்தை எடுத்து ஆனியின் மறைவை எம்மாவுக்கு எழுதினார். எழுதும்போதே உடைந்து அழுதார். ஆனியின் நினைவுகளைக் கடிதத்தில் வடித்தார். ஆனியின் மிருதுவான உடலை, அவளது வெகுளியான சிரிப்பை, அன்பை, அக்கறையை, குறும்பை இனிமேல் தரிசிக்க முடியாது என்று கவலைகொண்டார். ‘ஆனியைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இனி உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமே’ என முடித்தார்.
இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தார் டார்வின். எம்மாவுடன் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. ஆனியின் இறுதிச் சடங்கைப் பார்க்கும் தைரியம் தனக்குக் கிடையாது எனத் தோன்றியது. உடல் அடக்கம் செய்வதைப் பார்த்துக்கொள்ளும்படி ஃபேனியிடம் சொல்லிவிட்டு, ஆனியின் உடலை இறுதியாக ஒருமுறை பார்த்துவிட்டு விடைபெற்றார்.
ஆனியின் இறப்பை எம்மா அமைதியுடன் ஏற்றுக்கொண்டார். ஆனியின் போராட்டம் முடிவுற்றது என்று ஆறுதல் கூறினார். ஆனால் மனதுக்குள் அவராலும் தாங்க முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அழுதனர்.
மறுநாள் காலை மால்வெர்னில் இருந்த ஒரு கல்லறையிலேயே ஆனி அடக்கம் செய்யப்பட்டாள்.
டார்வினின் மூத்த குழந்தைகள் மட்டும் ஆனியின் இழப்பை உணர்ந்தனர். பதினொரு வயதான வில்லியம் சில நாட்கள் துக்கத்தில் இருந்தான். ஏழு வயதான ஹென்ரியட்டாவுக்குத் தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்கா இனி வரமாட்டாள் என்ற எண்ணமே அழுகையைக் கொடுத்தது. எம்மா தன் குழந்தைகளிடம் ஆனி இனி சொர்க்கத்தில் பாதுகாப்பாக இருப்பாள் என்று கூறி எல்லோரையும் தேற்றினார். ஹென்ரியட்டா நாமும் அங்கே சென்று ஆனியைப் பார்க்க முடியுமா எனக் கேட்டதற்கு, நிச்சயமாக ஒருநாள் ஆனியைச் சந்திப்போம் என ஆறுதல் அளித்தார்.
டார்வினால் ஆனியின் மரணத்தில் இருந்து மீள முடியவில்லை. ஆனி கிறுக்கிய நோட்டுப் புத்தகங்கள், விளையாடிய பொம்மை, தலைமுடி என ஆனி விட்டுச் சென்ற தடயங்களை எல்லாம் நினைவுகளாகச் சேகரித்து வைத்தார்.
ஆனியின் வலியை நேரில் பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையெ என்ற குற்றவுணர்வு டார்வினுக்கு இருந்தது. திரும்பத் திரும்பப் புலம்பினார்.
ஆனியின் மரணம் டார்வினுக்குக் கடவுள் நம்பிக்கையின் மரணமாகவும் இருந்தது. பரிணாமக் கோட்பாட்டைக் கண்டடைந்த பின் அவருக்கு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை போயிருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் அவருக்கான தேடல் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இப்போது உண்மை முகத்தில் அறைந்தது.
எம்மா கிறிஸ்தவ வாசகங்களைக் கூறி ஆறுதல் அளிக்க முயற்சித்தபோது டார்வின் கோபம் கொண்டார். கிறிஸ்தவக் கோட்பாட்டில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக மனிதர்களின் பாவம் பற்றிய கருத்து முற்றிலும் மடத்தனம். மனிதர்கள் நடத்தை தவறுவது பாவம் என்றால் குழந்தைகள் பிறக்கும்போதே குறும்புடனும் நடத்தை தவறியும்தானே நடந்துகொள்கிறார்கள். அதை பாவம் என்று கருதலாமா? அப்படிக் கருதினால் அதற்காக அவர்களுக்கு நரகம் உண்டா? அதனால்தான் ஆனி துன்புற்றாளா? குழந்தைகளுக்கு நரகம் இருப்பதாக சொல்லும் மதத்தை ஏற்றுக்கொள்ளலாமா? பொறிந்து தள்ளினார் டார்வின்.
மனித வாழ்க்கைக்கு கிறிஸ்தவம் பதில் தராது. மனித மனம், அறம், மத நம்பிக்கை அனைத்துமே பரிணாம மாற்றம் உருவாக்கிய மாயை. இயற்கை குரூரமானது. இரக்கமற்றது. ஆனால் இயற்கைதான் நிஜம். நான் மதத்தை முற்றிலுமாகத் துறந்து நம்பிக்கையற்றவனாகிறேன் எனத் தனக்குத்தானே அறிவித்துக்கொண்டார்.
(தொடரும்)

