நவம்பர் 18, 1852. வெல்லிங்க்டன் பிரபு காலமானார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு டார்வின் சென்றிருந்தனர். டார்வினைத் தவிர வேறு பல முக்கியஸ்தர்களும் கூடி இருந்தனர். அவர்களில் ஒருவர் வெஸ்ட்மின்ஸ்டர் குழுவைச் சேர்ந்த தாமஸ் ஹக்ஸ்லி.
ஹக்ஸ்லி 27 வயதே நிரம்பிய இயற்கையாளர். துடிப்பானவர். ஆனால் கோபக்காரர். மற்ற இயற்கையாளர்களைப்போல அவரும் சுற்றுப்பயணம் ஒன்றை முடித்துவிட்டு இங்கிலாந்து திரும்பி இருந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. கடும் வறுமை. பல்கலைக்கழகங்கள் அவரை நிராகரித்தன. அரசு அவரை உதாசீனப்படுத்தியது. அறிவியலுக்கான ராயல் கழகம் நிதி வழங்க மறுத்தது. ஹக்ஸியின் தாய் சமீபத்தில்தான் மறைந்திருந்தார். தந்தை மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இவையும் சேர்ந்துகொண்டு ஹக்ஸ்லியை வாட்டின. மன அழுத்தம் கூடியது. யாராவது தனக்கு உதவி செய்ய மாட்டார்களா என ஏங்கினார். இந்தச் சமயத்தில்தான் வெஸ்மின்ஸ்டர் ரிவீவ் இதழின் ஆசிரியர் ஜான் சேப்மென் ஹக்ஸ்லியை அணுகி ஸ்பென்சர் எழுதிய ஒரு கட்டுரைக்கு விமர்சனம் எழுதச் சொன்னார்.
ஸ்பென்சர், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உருவான குடும்பக் கட்டுப்பாடு கொள்கைக்கு ஆதரவான ஒரு கட்டுரையை எழுதி முடித்திருந்தார். மால்தஸின் மக்கள் தொகை குறித்த கோட்பாட்டு, சமூகத்தில் ஏற்படும் பரிணாம மாற்றம் இரண்டையும் ஒன்றிணைத்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்து மதிப்புரை எழுதும்படி ஹக்ஸ்லியைக் கேட்டிருந்தார் ஜான் சேப்மென்.
கட்டுரையைப் படித்தவுடன் அதில் பேசப்பட்ட கருத்துக்கள் ஹக்ஸ்லிக்கு மிகவும் பிடித்துப்போயின. உடனே ஸ்பென்சரைச் சந்தித்து நண்பரானார். இருவரும் இணைந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர்.
அதே கட்டுரையின் மூலம் ஸ்பென்சருக்கு டார்வினின் அறிமுகமும் கிடைத்தது.
ஸ்பென்சர் எழுதிய கட்டுரையில் மால்தஸையும் பரிணாமக் கோட்பாட்டையும் இணைக்கும் கண்ணி இருந்தது. ஜனத்தொகை உயரும்போது உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது எனும் மால்தஸின் கொள்கை உண்மைதான். ஆனால் தம் சக்திக்கும் அதிகமாகக் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் பாதிக்கப்பட்டு, பலவீனம் அடைந்து, அழிவைச் சந்திக்கிறார்கள். ஏற்கெனவே திட்டமிட்டு, நுண்பார்வையுடன் குடும்ப அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பவர்கள் பிழைக்கிறார்கள் என்று எழுதி இருந்தார் ஸ்பென்சர். இந்தக் கருத்து டார்வினுக்குப் பிடித்துப்போனது. மனிதர்களிடம் இயற்கைத் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்று தேடிக்கொண்டிருந்த டார்வினுக்கு இந்தக் கட்டுரை ஒரு புதிய பார்வையைத் தந்தது. தாமாகவே சென்று ஸ்பென்சரைத் தொடர்புகொண்டார் டார்வின்.
டார்வின் அதுவரை எழுதியிருந்த படைப்புகளைப் படித்துவிட்டு பிரமித்துப்போனார் ஸ்பென்சர். அந்தத் தலைமுறையின் சிறந்த சிந்தனையாளர் டார்வின்தான் எனப் புகழ்ந்து தள்ளினார். ஆனால் அப்போதும் டார்வின் தனது இயற்கைத் தேர்வு கோட்பாட்டை ஸ்பென்சரிடம் சொல்லவில்லை.
இதே சமயத்தில் ஹக்ஸ்லியுடனான அறிமுகமும் டார்வினுக்கு ஏற்பட்டது. டார்வினைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருந்தார் ஹக்ஸ்லி. அவருடன் பணியாற்றும் ஆர்வமும் ஹக்ஸ்லிக்கு இருந்தது. ஆனால் நேரில் பார்த்ததில்லை.
ஹக்ஸ்லி பயணத்தில் இருந்து வந்து வேலை இல்லாமல் இருந்தார் அல்லவா? அப்போது தற்காலிகமாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கடற்குடுவை (Sea Peaches) எனும் உயிரியை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு டார்வினின் அலசிகள் பற்றிய ஆய்வின் முதல் தொகுப்பு கிடைத்தது. படித்தவுடன் மிரண்டுவிட்டார் ஹக்ஸ்லி. அலசிகள் குறித்த மிகச் சிறந்த முழுமையான ஆய்வு என மனதாரப் பாராட்டினார். பின் வெல்லிங்டன் பிரபுவின் மறைவில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார் ஹக்ஸ்லி. 1853ஆம் ஆண்டு புவியியல் கழகத்தில் மீண்டும் டார்வினைச் சந்தித்தபோது அவருடைய படைப்புகளை எல்லாம் மதிப்பாய்வு செய்ய விரும்புவதாகக் கேட்டுக்கொண்டார்.
கொஞ்ச நேரம் பேசியதுமே ஹக்ஸ்லியின் அறிவாற்றலைக் கண்டுகொண்டார் டார்வின். அவரிடம் தான் சேகரித்து வைத்திருந்த உயிர் மாதிரிகளையும் புத்தகங்களையும் கொடுத்து மதிப்பாய்வு செய்து தர முடியுமா எனக் கேட்டார். அப்போது ஹக்ஸ்லி வேறு பணியில் ஈடுபட்டிருந்ததால் டார்வினின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் டார்வினுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். டார்வின்போன்று செல்வாக்கு மிக்க இயற்கையாளர் ஒருவர் தன்னுடைய உதவியைக் கேட்பது எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் பலனளிக்கும் என நினைத்துக்கொண்டார் ஹக்ஸ்லி.
0
அலசிகள் குறித்த டார்வினின் ஆய்வுகளின் முதல் தொகுப்பு வெளியாகி ஆய்வுலகை உலுக்கத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் டார்வினின் முதல் தொகுப்பு பற்றித்தான் பேச்சு. அறிவியலாளர்கள் புகழ்ந்து தள்ளினர். அந்த ஆய்வுகளுக்காக ராயல் கழகம் டார்வினுக்கு ராயல் பதக்கம் வழங்கி கெளரவப்படுத்தியது. டார்வினின் முந்தைய ஆய்வுகளையே கெளரவப்படுத்த வேண்டும் என்று ராயல் கழகம் நினைத்துக்கொண்டிருந்தது. இப்போது அலசிகளின் ஆய்வுத் தொகுப்பு வெளியானதால் உடனே அங்கீகரித்தது. நெகிழ்ந்துப்போனார் டார்வின்.
கொஞ்ச நஞ்ச உழைப்பா அது? பத்து ஆண்டுகள் உழைப்பு. வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து மேற்கொண்ட ஆய்வுகள். நோய்கூறுகள், துக்கம், மன அழுத்தம் எனப் பல்வேறு சுமைகளுக்கு இடையில் முடிக்கப்பட்ட புத்தகம். முதல் தொகுப்புதான் வெளியாகி இருக்கிறது. இதுவே 900 பக்கங்கள். அலசிகளின் அத்தனை பரிமாணங்களையும் ஆராய்ந்திருப்பதாக எல்லாச் செய்தித்தாள்களிலும் புகழுரைகள் வந்தன.
உண்மையில் அந்த ஆய்வுதான் டார்வினின் செல்வாக்கை எங்கோ உயர்த்திக் கொண்டுப்போனது. அதுவரை புவியலாளர்களிடம் மட்டுமே புகழ் பெற்றிருந்த டார்வின், உயிரியலாளர்கள் மத்தியிலும் கவனம் பெற்றார். ஒருவேளை அந்த ஆய்வு வெளியாவதற்கு முன்பே டார்வின் இறந்திருந்தால் நல்ல புவியியலாளராகத்தான் அறியப்பட்டிருப்பார். இப்போது அலசிகள் ஆய்வின் மூலம் உலகின் மிகச்சிறந்த உயிரியலாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். உயிரியல் துறையின் பல்வேறு அமைப்புகள் அவரைப் பாராட்டின. பல இடங்களில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். ராயல் கழகத்தின் உயர்மட்ட விஞ்ஞானிகளில் ஒருவராகவும் இணைந்தார். இதுவே உயிரினங்கள் பற்றி பேசுவதற்கான தைரியத்தை, பலத்தை, அதிகாரத்தை, உரிமையை டார்வினுக்குக் கொடுத்தது. இனி அவர் ஒரு சொல் சொன்னால் அதைப் பரிசீலிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் முற்றிலுமாக நிராகரிக்க மாட்டார்கள்.
ஒருவேளை இதுதான் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி பேசுவதற்கான சரியான நேரமா?
1854 மத்தியில் அறிவியல் தளத்திலும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதுவரை உயர்குடி அறிஞர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அறிவியல் துறைகளில் மத்தியத் தரவர்க்கச் சிந்தனையாளர்கள் நுழைந்தனர். ஆர்வலர்கள் மட்டுமின்றி முறையாக பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற விஞ்ஞானிகளும் அதிக அளவில் ஆய்வுகளில் பங்கேற்றனர்.
மேலும் அப்போது திருச்சபை ஆதரவு விஞ்ஞானிகளும்கூட பரிணாம மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தனர். ஆனால் பரிணாம மாற்றம் அடைவதற்கான விதியைக் கடவுள்தான் படைத்தார் என்று அவர்கள் வாதிட்டு வந்தனர். விஞ்ஞானிகளுக்கு இடையே திருச்சபை விஞ்ஞானிகள், பகுத்தறிவு விஞ்ஞானிகள் என்று இரு பிரிவுகள் உருவாகி இருந்தன.
அறிவியல் சிந்தனையும் மாறிக்கொண்டிருக்கிறது. டார்வினுக்கு உயிரியலாளர் எனும் அந்தஸ்தும் உயர்ந்துகொண்டிருக்கிறது. இதுதான் தம் கண்டுபிடிப்பைப் பேசுவதற்கான நேரம் என முடிவு செய்தார் டார்வின்.
0
ஹூக்கர் இமயமலை ஆய்வுகளை முடித்துவிட்டு திரும்பி இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக டார்வினின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தார். ஆனாலும் திருச்சபை விஞ்ஞானிகள் பிரிவில்தான் அவர் இருந்தார். உயிரினங்கள் மாற்றம் அடைகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன். புதிய உயிர்கள் மாற்றத்தால் தோன்றுகின்றன என்பதையும் ஏற்கிறேன். ஆனால் அதில் கடவுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதுதான் ஹூக்கரின் நிலைபாடு.
டார்வினுமே இன்னும் திருச்சபை விஞ்ஞானிகளின் பக்கத்தில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவில்லை. உயிரின் தோற்றம் குறித்த அவரது கோட்பாட்டை அறிவியல் கோட்பாடு என்ற அளவில் மட்டுமே முன்னிறுத்த விரும்பினார். அந்தக் கோட்பாட்டை சமூகத்துடன் இணைத்துப் பேசிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். சீர்த்திருத்தம் பற்றியோ, திருச்சபை பற்றியோ எந்தக் கேள்வியையும் தம் கோட்பாட்டின் மூலம் அவர் முன்வைக்கவில்லை. தம் கருத்தை இடதுசாரிகளும், புரட்சியாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால் தான் அதைப் பேசப்போவதில்லை என உறுதியாக இருந்தார் டார்வின்.
முதலில் தம் கோட்பாட்டை யாரிடம் சொல்வது என்ற யோசனை டார்வினுக்கு வந்தது. பல நண்பர்களை அலசி பார்த்து அவர் தேர்ந்தெடுத்த நபர்தான், லைல்.
1854ஆம் ஆண்டு லைல் தன்னைப் பார்க்க வந்தபோது உயிரினங்களின் பரிணாம மாற்றம் பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தார் டார்வின். அதிர்ந்துவிட்டார் லைல். டார்வினா இப்படிப் பேசுகிறார்? மிகச் சிறந்த மதப்பற்றாளர் ஆயிற்றே. திருச்சபையின் நெருங்கிய நண்பராயிற்றே. அவரா கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்கிறார். தாங்கிக்கொள்ள முடியவில்லை லைலால்.
அதுவரை டார்வினின் ஆய்வுகளுக்கு இடைவிடாமல் ஆதரவு கொடுத்து வந்தவர். டார்வினது ஆய்வுகள் தமது ஆய்வுகளைச் செழுமைப்படுத்துவதாகக் கூறி வந்தவர். இப்படி ஒரு கருத்தை டார்வின் முன்வைக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஆனால் டார்வின் வைத்த கூற்றுக்கள், ஆதாரங்கள், வாதங்கள் எல்லாம் ஆணித்தரமாக இருந்தன. டார்வின் லைலிடம் கடவுள் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உயிரினங்கள் உருமாற்றத்தால் தோன்றுகின்றன என்பதை மட்டும் சொன்னார். மேலும் அந்தப் பரிணாம இயக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்ட போட்டி, பிழைத்திருத்தல் எனும் மால்தஸின் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கி இருப்பதாகவும், இருப்புக்கான போராட்டம் என்பது இயற்கையின் உலகளாவிய விதி என்றும் வாதிட்டார். இத்துடன் தாம் மேற்கொண்ட பரிசோதனைகள், தான் கண்டடைந்த முடிவுகள் எல்லாவற்றையும் சமர்ப்பித்தார்.
இத்தனை ஆதாரங்களைக் கொடுத்தவுடன் பேச முடியாமல் நின்றார் லைல். மற்ற விஞ்ஞானிகள்போல் கண்மூடித்தனமாக எந்த ஓர் அறிவியல் ஆய்வையும் மறுப்பவர் இல்லை லைல். குருட்டுத்தனமாக எதிர்ப்பவர் இல்லை. அதனால் வாயடைத்துப்போய் நின்றார். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கருத்தை நிராகரிக்கவும் முடியவில்லை. முழுமையாக ஏற்கவும் முடியவில்லை.
இந்தக் கருத்தை ஏற்பது மனிதர்களை சாதாரண விலங்குகளுக்கு நிகராக நிறுத்திவிடும் எனப் பயந்தார். ஆனால் மாற்றம் நிகழ்கிறது என்பதை ஏற்காமல் இருப்பது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வது என்றும் அவருக்குத் தோன்றியது. இந்தக் கோட்பாட்டைக் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆராய முடியுமா என்றும் சிந்தித்தார் லைல். எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் அரை மனதாக டார்வினுடைய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார். ஆம், இயற்கையில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மட்டும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உயிரினங்கள் அதன் மூலமாகத்தான் தோன்றுகின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டார்.
ஆனால் டார்வினுக்கு இதுவே முதல் வெற்றியாகத் தோன்றியது. பெரிய வெற்றியாகவும் தோன்றியது. லைல் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டார். இனி ஒவ்வொருவராக ஒப்புக்கொள்வார்கள். ஒருநாள் அறிவியல் உலகம் முழுவதுமே என் கருத்தை ஏற்றுக்கொள்ளும். உண்மைக்கு முன் எந்தப் பொய்யும் நீடிக்காது என நினைத்துக்கொண்டார் டார்வின்.
(தொடரும்)

