Skip to content
Home » டார்வின் #35 – அவசர நிலை

டார்வின் #35 – அவசர நிலை

1856 வாக்கில் இங்கிலாந்தில் உருவான இளம் தலைமுறை விஞ்ஞானிகள் தங்களை ‘இளம் காவலர்கள்’ என அறிவித்துக்கொண்டனர். ஹக்ஸ்லி, ஹூக்கர், இயற்பியலாளர் ஹான் திண்டால் போன்ற பலரும் அந்த அணியில் இருந்தனர். இவர்களின் முக்கிய வேலை, மதவாதிகளிடம் இருந்து அறிவியலைப் பாதுகாப்பது. எதிரிகளுக்குச் சவால்விடுத்து அவர்களுடைய பிற்போக்கு அறிவியலைத் தோலுரிப்பது. இதைத்தவிர லண்டனில் உள்ள அறிவியலாளர்களுக்கு உரிய அங்கீகாரம், மக்கள் ஆதரவு, நல்ல சம்பளம் ஆகியவற்றைப் பெற்றுத் தருவது.

அப்போதைய விஞ்ஞானிகளுக்கு இடையே இரு பிரிவினர் இருந்ததைப் பார்த்தோம். முதலாவதுழ முற்போக்கு விஞ்ஞானிகள். இரண்டாவது திருச்சபை விஞ்ஞானிகள். இதில் திருச்சபை விஞ்ஞானிகளுக்கே ஆய்வு நிதிகள் வழங்கப்பட்டன. முற்போக்கு விஞ்ஞானிகளுக்கு விண்ணப்பித்தாலும் பெரும்பாலும் நிதி கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் குறைவாக இருக்கும். இதுபோன்று அறிவியல் உலகுக்குள் அரசியலும் மதமும் தலையிடுவதைத்தான் இளம் காவலர்கள் எதிர்த்தனர்.

ஹக்ஸ்லி அறிவியல் உலகில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தார். கடல் உயிரிகளின் நிபுணராக அறியப்பட்டு, பிரிட்டனின் புகழ்பெற்ற ராயல் நிறுவனத்தில் முழுநேரப் பேராசிரியராகவும் நியமனம் ஆகியிருந்தார். டார்வினின் உதவியுடன் லண்டன் பல்கலைக்கழகத்தின் தேர்வாலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  டார்வினுக்கு ஹக்ஸ்லியின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இதனால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஹக்ஸ்லிக்குப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்.

ஆனாலும்கூட ஹக்ஸ்லியும் அவரது கூட்டாளிகளும் விஞ்ஞான உலகில் அந்நியர்களாகப் பார்க்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து கேம்ப்ரிட்ஜ் விஞ்ஞானிகளின் பழமைவாதத்தை விமர்சித்து வந்ததே மூலக் காரணம். டார்வினும் கேம்பிரிட்ஜ் வட்டத்தைச் சேர்ந்தவர்தான். இருந்தாலும் சத்தமில்லாமல் ஹக்ஸ்லிக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தார். பழமைவாதிகளின் அதிகாரத்தை உடைப்பதற்கு வேண்டிய உதவிகளை மறைமுகமாக வழங்கிக்கொண்டிருந்தார்.

ஹக்ஸ்லி வெளிப்படையாகவே மதகுருமார்களை எதிர்த்தார். அதேபோல மதம் சார்ந்த அறிவியல் அமைப்புகளுக்கு மாற்றாக மதசார்ப்பற்ற அறிவியல் சங்கங்களை ஏற்படுத்தவும், அவர்களுக்கென்று தனித்த ஆய்வேடுகளை உருவாக்கவும் இளம் காவலர்களுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த முக்கிய நபர், ரிச்சர்ட் ஓவன். டார்வினின் தொல்லுயிர் எச்சங்களை ஆராய்ந்த அதே ரிச்சர்ட் ஓவன்தான்.  பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயற்கை அறிவியல் சேகரிப்புகளின் கண்காணிப்பாளராக இருந்த ரிச்சர்ட் ஓவன், மதவாதிகள் பக்கத்தில் நின்று இளம் விஞ்ஞானிகளை எதிர்த்தார். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் அறிவியலாளர்களின் பிரதிநிதியாக, பழைய விழுமியங்களின் பாதுகாவலராக, திருச்சபை விஞ்ஞானிகள் கொண்டாடும் நபராக இருந்தார். இதனால் ஹக்ஸி ஓவனைத்தான் தனது முதல் எதிரியாகக் கருதி வந்தார்.

இதற்கு அறிவியலைத் தாண்டி தனிப்பட்ட காரணங்களும் இருந்தன. வெஸ்ட்மின்ஸ்டர் ரிவீவ் எனும் ஆய்விதழில் ஸ்பென்சர் கட்டுரைகள் எழுதினார் என்று பார்த்தோம் இல்லையா? அதில் பரிணாம மாற்றம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு ஸ்பென்சருக்கு உயிர் மாதிரிகள் தேவைப்பட்டன. அறுவை சிகிச்சைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த ரிச்சர்ட் ஓவனிடம் மாதிரிகள் இருந்தன. அதை ஆய்வுக்காகக் கேட்டபோது தனிப்பட்ட முறையில் பரிணாமக் கருத்துக்கு எதிரானவர் என்பதால் ஓவன் மறுத்துவிட்டார்.

அதேபோல பயணத்தை முடித்து வந்திருந்த ஹக்ஸ்லி சரியான வேலையும் நிதியும் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார் இல்லையா? அவர் ஆய்வு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றால் ரிச்சர்ட் ஓவனின் உதவி தேவைப்பட்டது. அதைக் கேட்டபோது கருத்து வேறுபாட்டின் காரணமாக உதவி செய்ய மறுத்துவிட்டார் ஓவன். இதைவிட இன்னொரு விஷயமும் இருந்தது. ஹக்ஸ்லி புவியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். கஷ்டப்பட்டு கிடைத்த வேலை அது. அங்கே ஒருமுறை ஓவன் உரையாற்ற சென்றபோது ஹக்ஸ்லியின் செல்வாக்கை வேண்டுமென்றே மட்டம் தட்டும் விதமாகப் பேசினார். அத்துடன் ஹக்ஸ்லியின் பதவிக்குத் தகுதியானவன் தானே என்பதுபோன்ற விளம்பரங்களைச் செய்தார். இவை எல்லாம் சேர்ந்துதான் ஹக்ஸ்லிக்கு ஆத்திரத்தை மூட்டின. தன்னுடைய வளர்ச்சியைப் பரிகாசிக்கும் ஓவனைத் தனிப்பட்ட முறையிலும் எதிர்க்கத் தொடங்கினார்.

0

டார்வின் தன் கோட்பாட்டை விவரித்தபோது ஹக்ஸ்லி ஏற்கவில்லை எனப் பார்த்தோம் இல்லையா? டார்வினும் ஹூக்கரும் மேலும் சில இளம் விஞ்ஞானிகளுக்கு இயற்கைத் தேர்வை விளக்க வேண்டும் என டவுனில் உள்ள வீட்டுக்கு அழைத்திருந்தனர். அங்கே சென்றவர்களில் ஒருவர் ஹக்ஸ்லி. ஹூக்கரும் டார்வினும் உயிரினக் கோட்பாட்டை விளக்கி சான்றுகளுடன் வாதம் – எதிர்வாதம் செய்ய, ஒவ்வொருவராக டார்வினின் வசம் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் ஹக்ஸ்லி மட்டும் தொடர்ந்து பரிணாமக் கொள்கையை மறுத்துவந்தார். தொல்லுயிர் எச்சங்களில் விலங்குகள் மாறியதற்கான தடயங்கள் இல்லை என்பதும், உயிரினங்கள் மற்றொன்றாக மாறினால் இடைப்பட்ட உயிரினம் எங்கே என்ற கேள்வியும்தான் அவர் பரிணாமக் கோட்பாட்டை ஏற்பதற்குத் தடையாக இருந்தது.

டார்வின் இடைப்பட்ட உயிர்கள் பிழைக்காது என விளக்கம் கொடுத்தும் ஹக்ஸ்லி ஏற்கவில்லை. ஆனால் அடுத்து டார்வின் கூறிய ஒரு விஷயம் ஹக்ஸ்லியை உடனே டார்வின் பக்கம் இழுத்து வந்தது. விஞ்ஞானிகளிடம் உரையாற்றிய டார்வின், தன்னுடைய பரிணாமக் கோட்பாடு ஓவனின் கோட்பாடுக்கு எதிராக அறிவியல் உலகில் முன்னிறுத்தப்படப்போகிறது என்றார். அவ்வளவுதான். ஹக்ஸ்லி உடனே டார்வினின் கட்சிக்குத் தாவிவிட்டார்.

அப்போது உயிரியலாளர்கள் மத்தியில் ரிச்சர்ட் ஓவனின் தொன்ம வடிவம் (archetype) எனும் கோட்பாடுதான் பரவலாக இருந்தது. இதன்படி எல்லா விலங்குகளுக்கும் அடிப்படையான ஒரு கட்டமைப்புத் திட்டத்தை கடவுள் உருவாக்கி வைத்திருக்கிறார். அந்தக் கட்டமைப்பின் மேல் சிறுசிறு மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டவைதான் ஒவ்வொரு விலங்கினமும் என்றார் ஓவன். உதாரணமாகப் பறவைகளின் இறக்கைக்கும், மனித கைகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு ஒன்றுபோலவே இருக்கிறது. இதனால் கடவுளின் தொன்ம வடிவம்தான் உயிர்களின் தோற்றங்களுக்கு அடிப்படை என்றார் ஓவன். ஹக்ஸ்லிக்கு இந்தக் கருத்திலும் உடன்பாடு கிடையாது. இப்போது டார்வினுடைய கோட்பாடு ஓவனை எதிர்க்கப்போகிறது என்றவுடன் டார்வின் பக்கம் நின்றார் ஹக்ஸ்லி.

இளம் காவலர்கள் படையும் முன்னணியில் இருந்து டார்விக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்தது. டார்வினின் கருத்துக்கள் மதத்தில் இருந்து அறிவியலை விடுவிக்கப்போகிறது என இளம் காவலர்கள் அறிவித்தனர்.

0

டவுனில் விஞ்ஞானிகளுடனான சந்திப்புகளுக்குப் பிறகு டார்வின் தன் கோட்பாட்டை எப்படி முன்வைப்பது எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் டார்வினைச் சந்திக்க ஓடி வந்தார் லைல். அவ்வளவு அவசரம். குரலில் பதற்றம். டார்வினைத் தனியாக அழைத்துச் சென்றார் லைல்.

‘டார்வின். காலம் கனிந்துவிட்டது. இனியும் தாமதிக்காதே. உடனே உன் கோட்பாட்டை வெளியிடு. நான் என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்றார் லைல். டார்வினுக்கு ஒன்னும் புரியவில்லை. லைல் இன்னமும் பரிணாமக் கொள்கையை முழுமையாக ஏற்கவில்லை. மேலும் திருச்சபை வட்டாரத்தில் முக்கிய அந்தஸ்தில் இருப்பவர். அவர் ஏன் உடனே தன் கோட்பாட்டை வெளியிட வேண்டும் என்கிறார்?

காரணம் இருந்தது. அப்போது ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலஸ் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. சிறிய கட்டுரைதான். ஆனால் அதில் டார்வின் கண்டுபிடித்து வைத்திருந்த கோட்பாட்டை இரண்டே பத்தியில் சொல்லி இருந்தார் வாலஸ். ‘வீட்டு விலங்குகள் பரிணாம மாற்றம் அடைகின்றன. இதன் வாயிலாக அவை தனித்த உயிரினமாக உருவாகின்றன.’

இதுதான். இவ்வளவுதான். இதற்கு மேல் எந்த விளக்கமும் இல்லை. ஆனால் டார்வின் பல ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து பாதுகாத்து வந்த கோட்பாட்டைச் சிறிய கட்டுரையில் சொல்லிவிட்டார் வாலஸ். எங்கே தன் நண்பர் டார்வினுக்கு முன்னமே வேறு ஒருவர் அக்கோட்பாட்டுக்கான அங்கீகாரத்தை வாங்கிச் சென்றுவிடுவாரோ எனப் பயந்துவிட்டார் லைல். வேகமாகப் புத்தகத்தை வெளியிடுமாறு டார்வினைக் கேட்டுக்கொண்டார்.

டார்வினே ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார். டார்வின் அதற்கு முன்பே வாலஸின் கட்டுரையை வாசித்திருந்தார். ஆனால் அவர் சொல்ல வந்த வார்த்தைகள் புரியாமல் படைப்புக் கோட்பாட்டை ஆதரிக்கும் கட்டுரை என நினைத்துவிட்டார். இப்போது வாலஸும் டார்வினுக்கு இணையான கோட்பாட்டை வந்திடைந்திருந்தார் என்பது டார்வினுக்குப் புரிந்தது. இனியும் தாமதிக்கக்கூடாது என நினைத்தார்.

ஆனால் டார்வினைவிட லைல்தான் அவசரப்பட்டார். சிறிய கட்டுரையாவது எழுதி வெளியிடும்படி வற்புறுத்தினார். தானே முன்னின்று புத்தகத்தைப் பதிப்பித்து தருகிறேன் என்றார். டார்வினுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

லைலுக்கு இன்னமுமே இயற்கைத் தேர்வு கோட்பாட்டில் உடன்பாடு இல்லைதான். இயற்கைத் தேர்வை ஏற்றால் மனிதர்களும் வளர்ச்சி அடைந்த விலங்குகள்தான் என்று ஏற்க வேண்டியது வரும். மனிதர்கள், கடவுளின் செல்லக் குழந்தைகள் இல்லை என்பதை மறுக்க வேண்டியது வரும். ஆனாலும் டார்வினுக்கு உதவுவதற்கு முதல் வரிசையில் நின்றார். ஏன்?

காரணம் இருந்தது. இன்றைய இளம் விஞ்ஞானிகள் ஏற்கெனவே விலங்குகள் நிலையானவை இல்லை என ஏற்றுக்கொண்டுவிட்டனர். விலங்குகள் உருமாறுகின்றன எனப் பேசிக்கொள்கின்றனர். புதிய உயிரினங்கள் எப்படி உருவாகின்றன என்கிற முழுமையான கோட்பாட்டைத்தான் அவர்கள் வந்தடையவில்லை. அதை டார்வின் செய்துவிட்டார். யார் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி வருங்கால விஞ்ஞானிகள் இயற்கைக் கோட்பாட்டை கொண்டாடப்போகின்றனர். படைப்புக் கோட்பாட்டை நிராகரிக்கப்போகின்றனர். இதையடுத்து டார்வினின் கோட்பாட்டில் தனக்கும் ஒரு பங்களிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் லைல். மற்றவர்களுக்கு முன் தானே அந்தக் கருத்தைப் பிரசுரித்து தருவதாகச் சொன்னார்.

லைல் ஆதரவு தந்தவுடன் வேறு சில திருச்சபை விஞ்ஞானிகளும்கூட டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிடுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தக் கோட்பாடு என்ன என்பதுகூட தெரியாது. அவர்கள் எல்லோரும் டார்வின் விலங்குகளின் மாறுபாட்டினை கடவுளின் படைப்போடு இணைத்து ஒரு கோட்பாட்டை உருவாக்கி இருப்பார் என நினைத்தனர். லைல் டார்வினுக்கு ஆதரவாக வந்துவிட்டார் என்றவுடன் அவர்களும் இணைந்துகொண்டனர். சிலர் தாங்களே புத்தகத்தைப் பதிப்பிக்கவும் முன்வந்தனர். ஆனால் டார்வின் மிகப்பெரிய அணுகுண்டு ஒன்றை ஒளித்து வைத்திருக்கிறார் என்று லைலைத் தவிர யாருக்கும் தெரியாது.

லைலிடம் இருந்து கிடைத்த உத்வேகத்தில் திக்குமுக்காடிபோனார் டார்வின். புத்தக வேலைகளைத் தொடங்கினார். வேகமாகத் தனது குறிப்புகளை எல்லாம் திரட்டினார். ஆனால் தன் கோட்பாட்டை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை சுலபமாக இல்லை.

ஏகப்பட்ட தகவல்கள் அவரிடம் இருந்தன. இதில் எதை முன்னிலைப்படுத்துவது, எதை விடுவது என்று தெரியவில்லை. இயற்கைத் தேர்வின் இயங்கியலை மட்டும் விளக்கி சிறிய கட்டுரை எழுதலாமா என நினைத்தார். ஆனால் அதை விஞ்ஞான சமூகம் ஏற்குமா எனத் தெரியவில்லை. ஆயிரம் கேள்விகள் எழும். சான்றுகள் தேவைப்படும். கொடுக்கவில்லை என்றால் நிராகரித்துவிடுவார்கள். அதனால் எல்லாவற்றையும் விளக்கி பெரிய புத்தகமாகவே கொண்டு வருவோம் என முடிவு செய்தார்.

அதேசமயம் வாலஸின் கட்டுரையால் தனக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் போய்விடுமோ என்கிற அச்சமும் டார்வினுக்கு இருந்தது. ஏற்கெனவே பலரும் பரிணாமக் கொள்கையைப் பற்றிப் பேசத் தொடங்கி இருந்ததால் தமக்கு முன் யாராவது புத்தகத்தை எழுதி பதிப்பித்துவிட்டால் என்ன ஆவது என்கிற கேள்வி அவரைப் பயமுறுத்தியது. டார்வினுக்குப் புகழ் அடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஆனால் 20 வருட உழைப்பு வீணாகிவிடுமே? சேகரித்த சான்றுகள் எல்லாம் பயனில்லாமல் போய்விடுமே? அதனால்தான் அஞ்சினார். காலம் தாழ்த்தியது எவ்வளவு பெரிய தவறு என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

கிரீமியப் போர் முடிவுக்கு வந்தது. பிரிட்டன் வெற்றிபெற்று வணிகப் பாதைகளையும் உலக ஆதிக்கதையும் நிலைநாட்டியது. பிரிட்டனின் எதிர்காலம் பிரகாசமாக இருந்தது. உலகமே பிரிட்டனை வியந்தோங்கியது. இந்தச் சமயத்தில் பிரிட்டனில் இருந்து டார்வின் எழுதிய கோட்பாடு வெளியானால் விஞ்ஞான உலகில் பெரிய புரட்சியை உருவாக்கும் என நண்பர்கள் வலியுறுத்தினர். டார்வின் எழுதத் தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *