Skip to content
Home » டார்வின்: அறிவியலில் இருந்து அரசியலுக்கு

டார்வின்: அறிவியலில் இருந்து அரசியலுக்கு

சார்லஸ் டார்வினின் பரிணாமம் பற்றிய கோட்பாடு சமூகத்தில் பெரும் தாக்கத்தை விளைவித்தது. டார்வினின் கருத்துகள் ஒரு பக்கம் மதம் எனும் ஒடுக்குமுறை நிறுவனத்தை அசைத்துப் பார்த்தது உண்மை என்றாலும், அதே கருத்துகள் வேறு வகையில் ஒடுக்குமுறைக் கருவிகள் பரிணமிக்கக் காரணமாக அமைந்தன என்பதும் உண்மை.

Survival of the fittest – நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்படும் பதம். வலிமையுள்ளவை பிழைக்கும் என்பது இதன் தமிழாக்கம். டார்வினின் இயற்கைத் தெரிவுக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தப் பதம், வரலாற்றில் மிகவும் தவறாகக் கையாளப்பட்ட கருத்துக்களில் ஒன்று. உண்மையில் வலிமையுள்ளவை பிழைக்கும் என்ற பதத்தை டார்வின் பயன்படுத்தவில்லை. அவரது மாணவர்களில் ஒருவரான ஹெர்பர்ட் ஸ்பென்சர்தான் Principles of Biology (1864) எனும் புத்தகத்தில் அதைப் பிரயோகித்தார். இப்படியாகச் சமூக டார்வீனிசம் (Social Darwinism) எனும் கொள்கை பிறந்தது. சமூக டார்வீனிசத்தில் ஸ்பென்சரின் வாக்கியத்தை மனித இனத்திற்குப் பொருத்திப்பார்த்து, மனிதர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு வெல்வதை, சக இனத்தினரை அழிப்பதை நியாயப்படுத்த முடிந்தது. சமூகம் பரிணாம மாற்றத்திற்கு உட்பட்டது, இதில் மனிதர்களுக்குள் யுத்தம் நடைபெறுவது சாதாரணம், யுத்தத்தின் வழியாக ஒரு குழு அழிவதும், மற்றொரு குழு வளர்வதும் இயல்பு, இவ்வாறுதான் சமூகம் வளர்கிறது என்ற கருத்து உருவானது. மனிதர்களுக்குள் நிலவும் வேற்றுமை, ஒடுக்குமுறை, வர்க்கம் வேறுபாடுகள் என அனைத்தும் இயற்கையானது என்ற கருத்து இங்கிருந்து வலுவுற்றது.

இந்தக் கருத்து ஏனோதானோ என்று சிந்தனையாளர்களிடம் உதித்துவிடவில்லை. டார்வினின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைந்ததற்கும், அக்காலகட்டத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. டார்வினசத்தை அக்கால வரலாற்றுப் போக்குகளுடன், நாடுகளின் நிலவியல் அமைப்புகளுடன் புரிந்துகொண்டால்தான் சமூக டார்வினிசம் வளர்ந்தெழுந்ததைப் புரிந்துகொள்ள முடியும். முதலில் டார்வின் சொன்னது என்ன? டார்வின் இயற்கைத் தெரிவு எனும் கோட்பாட்டை முன்வைத்தார். பூமியில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிரினங்கள் இருந்து பரிணமித்தவை. இந்தப் பரிணாமம் இயற்கைத் தெரிவு எனும் அடிப்படையில் நிகழ்கிறது. ஓர் உயிரினம் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும்போது அதனுள் பண்பு மாற்றம் நிகழும். இதில் எந்த மாற்றம் அந்தச் சூழலுக்குத் தகுதி வாய்ந்ததாக இருக்கிறதோ அந்தப் பண்புகளைக் கொண்டிருக்கும் உயிரினம் பிழைக்கும். அதனால் அந்த உயிரினம் மட்டும் தனது மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வாய்ப்பு ஏற்படும். சூழலுக்குத் தகுதியில்லாத பண்புகளைப் பெறும் உயிரினங்கள் மடிந்துவிடும். இந்த நிகழ்வு நீண்ட காலத்திற்குத் தொடரும்போது நிலப்பரப்புக்கு உட்பட்டு அவை புதிய உயிரினமாகப் பரிணமிக்கும் என்றார். அதாவது இயற்கையே குறிப்பிட்ட பண்புகளை உடைய உயிரினத்தை மட்டும் தெரிவு செய்கிறது என்றார் டார்வின்.

எதற்குத் தெரிவு செய்கிறது? இங்குதான் டார்வினின் கோட்பாட்டில் உள்ள போதாமைகள் வெளிப்படுகின்றன. பூமியின் வளம் வரம்புக்குட்பட்டது. எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவோ, பிற வளங்களோ கிடைக்காது. அதனால் அவை தங்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொள்கின்றன என்கிற கருத்தை டார்வின் முன்வைத்தார். Survival of Existence என்று அதற்குப் பெயரும் வழங்கினார். டார்வின் கருத்துகள் பரவலாகத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில்தான். உலகெங்கும் வணிகம், அதன் காரணமாகப் போர்கள், படையெடுப்புகள் பரவலாகி வந்த காலம் அது. அரசுகள் வளங்களுக்காகவும், நிலங்களுக்காகவும் சண்டையிட்டன. வளங்களைக் காப்பதன் வேண்டி எல்லைகளும், தேசியவாதம் எனும் கருத்தாக்கமும் உருப்பெற்றுக்கொண்டிருந்தது. இதேசமயம் உலகெங்கிலும் அறிவியல் வளர்ச்சியால் தொழில்மயமாக்கமும் வேகமெடுத்து இருந்தது. போர், தேசியவாதம், தொழில்வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில்தான் இயற்கை பற்றிய புரிதலும் மக்களிடையே உருப்பெற்றது. டார்வினின் கருத்துக்களும் அதே பார்வையில்தான் உள்வாங்கப்பட்டது.

பிரான்சிஸ்கோ மோரேனோ அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புதைபடிம ஆர்வலர். இவர் டார்வினின் ஆய்வுகளைப் படித்துவிட்டு தனது நாட்டிலுள்ள புதைபடிமங்களைத் தேடி அலைந்தார். வெவ்வேறு விலங்குகளின் படிமங்களைக் கண்டெடுத்து பரிணாமம் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரும் பங்களித்தார். ஆனால் அதுமட்டும் இங்கு விஷயமல்ல. மொரெனோ, அர்ஜெண்டின ராணுவம் பூர்வக்குடிகள் மீது நடத்திய படுகொலைகள் அனைத்தையும் ஆதரித்தார். நவீன யுகம் மலர வேண்டும் என்றால் பழமைவாய்ந்த பூர்வகுடிகள் மடிவதுதான் இயற்கையின் நியதி. இதுவே இயற்கைத் தெரிவு என்று வாதாடினார். கொன்றொழிக்கப்பட்ட மனித எலும்புகளை எடுத்து வந்து மனிதப் பரிணாம வளர்ச்சியையும் ஆராய்ந்தார் என்பது தனிக்கதை.

ஜப்பானிலும் இதேநிலைதான். 1877ஆம் ஆண்டு அமெரிக்க விலங்கியலாளர் எட்வர்ட் மோர்ஸ் ஜப்பானில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பரிணாமம் குறித்து விரிவுரையாற்றினார். அவரது உரை டார்வின் சுட்டிக்காட்டிய உயிரினங்களுக்கிடையேயான போராட்டம் என்பதை மையப்படுத்தி இருந்தது. அது ஜப்பானில் உள்நாட்டுப் போர் முடிந்து மெய்ஜி சீரமைப்பு எனும் நவீனமயமாக்கல் தொடங்கி இருந்த காலம். உள்நாட்டுப் போரில் ஜப்பானிய நிலவுடைமை அரசு வீழ்த்தப்பட்டு, நவீனமயத்தை உள்வாங்கும் அரசு உதயமாகி இருந்தது. இதனை உதாரணமாக வைத்தே மோர்ஸ் உரையாற்றினார். ‘மனிதர்களுக்கிடையே நடைபெறும் போரில் அதிநவீனப் போர்த் தளவாடங்களையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கைக்கொண்டிருப்பவர்களே பிழைப்பார்கள். இன்னமும் அம்பையும், வில்லையும் வைத்துச் சண்டையிட முனைபவர்கள் தோற்பார்கள். இதுவேதான் இயற்கையிலும் நடைபெறுகிறது’ என்றார்.

மெய்ஜி சீரமைப்பில்தான் ஜப்பானில் பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், ரயில்வே ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் ஜப்பானுக்கு அழைத்து வரப்பட்டு கல்வி நிலையங்களின் நியமிக்கப்பட்டனர். இதன் ஒருபகுதியாகத்தான் மோர்ஸும் வந்திருந்தார். மோர்ஸின் மாணவர் இஷிகாவா சியோமட்சு ஜப்பானின் மிகச் சிறந்த உயிரியலாளர். இவர் மோர்ஸின் உரையை ஜப்பானில் மொழிபெயர்த்து டார்வினியக் கொள்கையைப் பட்டித் தொட்டியெங்கும் பரவ வைத்தவர். டார்வினின் கோட்பாடு இப்படியாக அறிவியலாளர்களிடம் இருந்து அரசியல் சிந்தனையாளர்கள் கைகளுக்குச் சென்றது.

அரசியல் சிந்தனையாளரான ஹிரோயுகி கட்டோ, இருத்தலுக்கான போராட்டமும், இயற்கைத் தெரிவும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. மனிதர்களுக்கும் சொந்தமானதுதான். இந்தப் பிரபஞ்சமே ஒரு போர்க்களம் எனப் போதித்து ஜப்பானின் ராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்தினார். ஜப்பானியர்கள் டார்வினின் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே அவர்களிடம் தத்துவார்த்த அடித்தளம் இருந்தது. பெளத்தமும் ஷிண்டோ மதமும் பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் ஒன்றுகொன்று தொடர்புடையது, மாறக்கூடியது என்ற கருத்தை விதைத்திருந்தன. டார்வினின் இருத்தலுக்கான போராட்டம் என்பது மட்டும்தான் அவர்களுக்குப் புதிது. போர்களப் பின்புலத்தில் பிழைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் டார்வினின் கருத்துக்களை எளிமையாக உள்வாங்கிக்கொண்டனர்.

ஜப்பானின் மற்றொரு உயிரியலாளர் அசாஜிரோ ஓகா. இவர் பிரையோசோவா (Bryozoa) என்று அழைக்கப்பட்ட நீர்வாழ் முதுகெலும்பில்லாத உயிரினங்களை ஆய்வு செய்தார். இவரது ஆய்வில் அந்த ஒற்றைச் செல் உயிரினங்கள் பல லட்சக் கணக்கில் இணைந்து காலனியாக இயங்கி வருவதைக் கண்டுபிடித்தார். அதாவது அந்த உயிரினங்களால் தனியாக இயங்க முடியாது. ஒன்று சேர்ந்துதான் இயங்க முடியும். இதுவே அவருக்குத் தேசம் பற்றிய புதிய புரிதலைக் கொடுத்தது. 1904ஆம் ஆண்டு ஜப்பான் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் தொடங்கி நடைபெற்று வந்தது. 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஜப்பானியர்கள் போரில் பெரும் வெற்றி பெற்றிருந்தனர். அந்தப் போரில் ஓகாவின் கருத்துகள் பெரிதும் எதிரொலித்தன. அவர் வெளியிட்ட Lectures on Evolutionary Theory என்ற தொகுதியில், மனிதர்களைப்போலவே கடல் உயிர்களும் ஒன்றாக இணைந்து சண்டையிடுகின்றன. பிரையோசோவா செல்களின் கூட்டமைப்பைத் தேசம் என வரையறுக்கலாம் என்றார். அதேசமயம் பிரையோசோவாக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்கும்போது அவை உணவுக்காக தங்களுக்கிடையே சண்டையிடுவதும் உண்டு. அதேபோல இந்த உயிரினங்கள் உடலில் இருந்து நச்சைச் சுரந்து எதிரிகளை வீழ்த்துகின்றன. இதேபோல மனித இனமும் வேதியியல் ஆயுதங்களை உருவாக்கிப் போர் புரிவதுதான் பரிணாமத்தின் பார்வையில் அவசியம் என்றார். ரஷ்யாவுடனான போரில் ஜப்பான் ஆர்செனிக் நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் நிகழ்ந்த மாற்றம், 1984ஆம் ஆண்டு தொடங்கிய முதலாம் சீன – ஜப்பான் போரின் காரணமாகச் சீனாவிற்குள்ளும் ஊடுருவியது. ஜப்பானுக்கு எதிரான போரின்போது சீனா தொழில்நுட்பத்தில் மிகவும் பின் தங்கிய நாடாக இருந்தது. சீன அறிஞர்கள் நவீனமயமாக்கலைப் பரிந்துரைத்தனர். குறிப்பாக சீன ராணுவ அதிகாரியும், அறிஞருமான யான் ஃபூ என்பவர் டார்வின் கருத்துகளை அடிப்படையாக வைத்து தனது அரசியல் உரைகளை ஆற்றினார். யான் ஐரோப்பாவில் கல்வி கற்றவர். அப்போதே அவருக்கு உயிரினங்களின் தோற்றம் நூல் பரிச்சயமாகி இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த கருத்துகளை மையமாக வைத்து தேசத்திலும், சமூகத்திலும், ராணுவத்திலும் ஏற்படவேண்டிய மாற்றங்களை யான் பரிந்துரைத்தார். மனிதர்கள் இணக்கமாக வாழும்போது மாற்றம் நிகழாது. வளர்ச்சி என்பது பரிணமிக்காது. இணக்க வாழ்வு நம்மைப் பலவீனப்படுத்தும். போட்டி மட்டுமே நமது உடலையும், ஆன்ம பலத்தையும் வலுப்படுத்தும். இதனால் சீன அரசு முதலாளித்துவத்திலிருந்தும் போர்களில் இருந்தும் பின்வாங்காமல் ராணுவத்தைத் தயார்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நம் இனம் மடிந்துவிடும் என்றார்.

யானின் செல்வாக்கால் சீனாவில் கன்ஃபூசியன் பாரம்பரியம் ஒழிக்கப்பட்டு, நவீனப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்து புத்தகங்கள் சீன மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக டார்வினின் புத்தகங்கள் சீனாவில் கொண்டாடப்பட்டன. இப்படியாகச் சீனாவில் நவீன யுகம் தோன்றுவதற்கும், சீனா பிற நாடுகள் மீது படையெடுப்பதற்கும் டார்வினின் கருத்துகள் ஒரு முக்கியப் பங்கை வகித்துள்ளன.

ஆனால் இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அர்ஜெண்டினா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் டார்வினிசத்தை ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவும், போர் என்ற பெயரில் மக்களை அழித்தொழிக்கவும் மட்டுமே பயன்படுத்தின. ஆனால் ரஷ்யாவோ இதற்கு நேர்மறையாக சோசலிச கருத்துகளை டார்வினிசத்தின் அடிப்படையில் உள்வாங்கியது. டார்வினின் கருத்து ரஷ்யாவில் நுழைந்த சமயம், ரஷ்யா கிரிமியன் போரில் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஜார் மன்னரான அலெக்சாண்டர் 2 ரஷ்யாவை நவீனமயமாக்கும் கொள்கைகளை முடுக்கிவிட்டார். அப்போது உருவான அறிவியல் அமைப்புகள் டார்வினின் சிந்தனைகளை ஆராயத் தொடங்கின. மற்ற நாடுகளைப்போல டார்வினிய கொள்கைகளை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக டார்வினின் கொள்கையை விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக வளங்களுக்காக உயிரினங்களிடையே போட்டி எனும் கருத்தை ரஷ்ய அறிஞர்கள் பலமாக எதிர்த்தனர்.

இதற்கு வலுவான காரணமும் இருந்தது. டார்வின் சொல்லும் வளங்களுக்காகச் சக உயிரினங்களிடையே போட்டி எனும் கருத்து ரஷ்யாவில் செல்லுபடியாகவில்லை. ரஷ்யா நீண்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. ஏராளமான வளங்கள் அங்கிருந்தன. ஆனால் மக்கள் தொகையோ குறைவாக இருந்தது. இதனால் ரஷ்ய மக்கள் வளங்களுக்காகப் போட்டியிடும் மனப்பான்மையில் இல்லை. இந்த யதார்த்தம் டார்வினின் கொள்கைக்கு முரண்பாடாக இருந்தது. ஆனால் ரஷ்யர்கள் இயற்கைத் தெரிவை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அவர்களுக்கு வளங்கள் பிரச்னை இல்லையே ஒழிய, நோய்மை பெரும் பிரச்னையாக இருந்தது. காசநோய், காலரா, ஃப்ளூ என்று அவ்வப்போது ஏற்படும் நோய்த் தாக்குதல்கள் ரஷ்யர்களைக் கொன்று குவித்தது. ரஷ்யர்களைப் பொறுத்தவரை உயிர் வாழ்வதென்பது சக மனிதர்களிடம் போராடுவது அல்ல. நோயிடம் போராடுவது மட்டுமே. இதனை மையப்படுத்தியே ஆய்வுகளும் நடந்தன.

குறிப்பாக இலியா மெக்னிகோவ் எனும் விஞ்ஞானி விலங்குகளிடையே உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆராய்ந்து வந்தார். நட்சத்திர மீன்களை அவர் ஆராய்ந்தபோது அதன் கரு உருவாகும்போதே சில செல்கள் ஒன்றுகூடி நோய்களை எதிர்ப்பதைக் கண்டுபிடித்தார். இதை வைத்து நோயணு உண்ணி (Phagocyte theory) எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதற்காக 1908ஆம் ஆண்டு அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. அந்தக் கோட்பாட்டின்படி விலங்குகளின் உடலில் இருந்த சில செல்கள் ஒற்றுமையாக இருந்து நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுகின்றன என்றார். இதே கருத்தியலை அவர் டார்வினின் கோட்பாட்டுடனும் பொருத்திப் பார்த்தார்.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வளங்களுக்காகச் சண்டையிடுகின்றன என்பது முழு உண்மை அல்ல. முதலில் தோன்றிய செல்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான் பரிணமித்திருக்கின்றன. இதுவே இன்றைய நோயெதிர்ப்பு மண்டலத்திலும் நடைபெறுகிறது. முதலில் தோன்றிய செல்களின் இந்தக் கூட்டுறவு எல்லா உயிர்களின் உடலுக்குள்ளும் இருப்பதால் இதுவே நாம் பரிணாமம் அடைந்து வந்ததற்கான சான்று என்று வாதிட்டார். ரஷ்ய அறிஞர்கள் டார்வின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதில் இருந்த விடுபடல்களையும் நிரப்ப முயன்றனர்.

இந்தச் சிந்தனை அரசியலிலும் எதிரொலித்தது. குறிப்பாக ட்ராஸ்கி டார்வினைக் கொண்டாடினார். அதேபோல வேறு சில ரஷ்ய சோசலிசவாதிகளும் அராஜகவாதிகளும் உயிர் பிழைத்திருப்பதற்குப் போட்டி என்பதைவிட ஒத்துழைப்பே அவசியம் என்பதை எடுத்துரைத்தனர். சமூக ஒத்துழைப்பு இல்லாத உயிரினங்கள் அழியும், நோய்களை எதிர்க்க செல்கள் ஒன்று சேர்ந்து போராடுவதுபோல மனிதர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். அப்போதுதான் பரிணாமம் அடையும் என்றனர். தாவரவியலாளரும் சோசலிசவாதியுமான ஆண்ட்ரி பெகெடோவ் இந்தக் கருதுகோளை இயற்கைப்போக்கின் வாயிலாகவே விளக்கினார். பரிணாம மாற்றத்திற்கு உயிரினங்களிடையேயான போட்டி மட்டுமல்ல, அந்த உயிரினங்கள் புழங்கும் சுற்றுப்புறத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது. தாவரங்கள் பிழைத்திருப்பதற்காகச் சக தாவரங்களிடம் சண்டையிடுவதில்லை. அது சுற்றுப்புறத்தை எதிர்த்துச் சண்டையிடுகிறது. தாவரங்கள் கடும் பனியை, கொளுத்தும் வெப்பத்தை எதிர்த்துத்தான் போராடுகின்றன. சைபீரியாவில் வளரும் தாவரங்கள் இடைவெளியில்லாமல் அருகருகே வளர்ந்து குளிர்க் காற்றின் பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கின்றன. அதேபோல உலகெங்கிலும் உள்ள தாவரங்களும் விலங்குகளும் இயற்கையாகவே ஒன்றுக்கொன்று உதவிகளை பரிமாறிக்கொள்கின்றன. இதுதான் பிழைத்திருப்பதற்கான உத்தி. டார்வின் இங்குதான் தடுமாறுகிறார். புறச்சூழலுக்கு எதிரான போராட்டம்தான் அவற்றுள் பரிணாம மாற்றத்தை நிகழ்த்துகிறது. இந்தப் புறச்சூழலுக்கு எதிரான போராட்டத்தில் நமக்குள் சண்டையிடக் கூடாது. நாம் ஒன்றிணைந்துதான் இயங்க வேண்டும். இதனால்தான் உயிரினங்களிடம் ஒத்துழைப்பு எனும் பண்பு உருவாகியுள்ளது. மனிதர்களும் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எத்தகைய கடியச் சூழலையும் தாங்கி பிழைத்திருக்க முடியும் என்றார்.

கிட்டத்தட்ட சூழலியலையும் சோசலிசத்தையும் ஒன்றிணைக்கும் கருதுகோளை பெகடோவ்வின் பார்வை இருந்தது. இப்படியாக டார்வினியத்தின் மறுபக்கம் ரஷ்யாவில் மட்டும் வெளிப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் சமூக டார்வினிசம் வலுவிழந்த கோட்பாடு என்று அச்சு ரீதியில் நிறுவப்பட்டுவிட்டது. இருப்பினும் நவதாராளமயம் எனும் பொருளியல் கொள்கை சமூக டார்வினிசத்தை மறைமுக ரீதியில் வளர்த்து வருகிறது. இதற்கு சாட்சியாக இப்போது நடைபெற்றுவரும் இன அழிப்பு போர்கள் இருக்கின்றன என்பதே உண்மை.

0

Reference: Horizons: The Global Origins of Modern Science, James Poskett

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *