Skip to content
Home » எலான் மஸ்க் #5 – அங்கும் இங்கும் பாதை உண்டு

எலான் மஸ்க் #5 – அங்கும் இங்கும் பாதை உண்டு

எலான் மஸ்க்

அது 1988ஆம் ஆண்டு. கையில் வெறும் 300 டாலர்களுக்கும் குறைவான தொகையை எடுத்துக்கொண்டு எலான் மஸ்க் கனடா நோக்கிப் புறப்பட்டார். மனதில் நம்பிக்கையுடன், கனவுகளைச் சுமந்தபடி, புதிய நிலத்தை, புதிய வாழ்க்கையை நோக்கிய அவரது சாகசப் பயணம் தொடங்கியது.

மஸ்க்கிடம் பெரிய திட்டமெல்லாம் இல்லை. கனடாவின் மாண்ட்ரியல் நகரத்தில் தனது தூரத்து உறவு வகையில் மாமா ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். அவர் வீட்டிற்குச் சென்று தங்கிக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி யோசிக்கலாம் என்று முடிவெடுத்துதான் கனடாவிற்குக் கிளம்பினார். புறப்படுவதற்கு முன் தன் மாமாவிற்குத் தாயின் மூலம் கடிதம் ஒன்றையும் எழுதிவிட்டு விமானம் ஏறினார். ஆனால் அவர் கனடாவிற்குச் சென்று இறங்கியதும்தான், அவரது மாமா கனடாவைக் காலி செய்துவிட்டு அமெரிக்காவின் மினோசேட்டா மாகாணத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டார் என்னும் விஷயம் தெரியவந்தது.

மஸ்க்கிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீறாப்பாகக் கிளம்பி வேறொரு நாட்டிற்கு வந்தாகிவிட்டது. இங்கு யாரையும் தெரியாது. கையில் பணமில்லை, சாப்பிட உணவு இல்லை, தங்குவதற்கும் தூங்குவதற்கும் இடமில்லை. பையில் சில ஆடைகளும் புத்தகங்களையும் தவிர வேறு எதுவும் இல்லை. யாரைச் சந்திப்பது, எங்கு தங்குவது எதுவும் புரியவில்லை.

திரும்பித் தென் ஆப்ரிக்காவிற்கே செல்வதிலும் விருப்பமில்லை. என்ன செய்வது என்று மஸ்க் யோசித்தார். அவருக்குத் தன்னுடைய தாத்தா ஹால்டிமென் கூறியதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன. ஒரு செயலில் இறங்குவதற்கு முன் பலமுறை யோசிக்கலாம். இறங்கியபின் அடித்து ஆடுவதுதான் வீரனுக்கு அழகு. அதைச் செய்யத்தான் மஸ்க் முடிவு செய்தார்.

இனி என்ன ஆனாலும் சரி, பின் வாங்கக் கூடாது. எத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் கனடாவிலேயே ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். செல்வதற்குப் பாதை இல்லை என்றால் நாம்தான் நமக்கான பாதையை உருவாக்கிக்கொள்ளவேண்டும் எனத் தீர்மானித்தார். கையில் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு சிறிது நாட்கள் கனடாவைச் சுற்றலாம் என முடிவுக்கு வந்தார்.

மஸ்க் நினைத்திருந்தால் தென் ஆப்ரிக்காவிலேயே ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அவருக்கு இருக்கும் திறமைக்கு எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் இடம் கிடைத்திருக்கும். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பட்டம் பெற்று, அந்நாட்டிலேயே ஒரு நல்ல சம்பாத்தியத்தில், ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருக்கலாம். அல்லது தனது தந்தையின் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கலாம்.

ஆனால் மஸ்க்கிற்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. அவர் அசாதாரண வாழ்க்கையின் மீதே காதல் கொண்டிருந்தார். வாழ்க்கையைப் பற்றிய நிச்சயமின்மை அவரை சோர்வடையச் செய்யவில்லை. மாறாக தனக்கான இடத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத்தான் கொடுத்தது. பதினேழு வயது இளைஞனான எலான் மஸ்க்கிற்கு அந்த வயதில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு இருக்கும் சாதாரண ஆசைகள் எதுவும் இருக்கவில்லை. தனது கனவுகளை அடைய எத்தனை தூரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஒற்றைத் தீர்மானம் மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதற்காக தான் பட வேண்டிய துன்பங்கள் பற்றியெல்லாம் மஸ்க் கவலைகொள்ளவில்லை.

மாண்ட்ரியல் நகரத்திற்கு வந்த மஸ்க், முதல் நாள் இரவு மட்டும் அருகில் இருந்த ஒரு சிறிய விடுதியில் அறை எடுத்துத் தங்கி இரவைக் கழித்தார். விடிந்தவுடன் பையை எடுத்துக்கொண்டு கனடாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டார். முதல் வேலையாக அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்று ஒரு மாதத்திற்கு அனைத்துப் பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனுமதிச் சீட்டு ஒன்றை நூறு டாலருக்கு பெற்றுக்கொண்டார். அந்தச் சீட்டை வைத்துக்கொண்டு எந்தப் பேருந்தில் வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். அதுவே அவரது தங்குமிடமாகவும் அமைந்தது.

கனடாவைச் சுற்றிவந்த மஸ்க் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறுவார். சீட்டில் அமர்ந்தபடி நகரை வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவார். பேருந்து நிற்கும் ஓர் ஊரில் இறங்கி அங்கே கிடைக்கும் குறைந்த விலை உணவை உண்பார். பிறகு மீண்டும் வேறு ஒரு பேருந்தில் ஏறிப் புறப்பட்டுவிடுவார். இருட்டியவுடன் ஏதாவது பேருந்திலோ அல்லது பேருந்து நிறுத்தத்திலோ தூங்கி இரவைக் கழிப்பார். மஸ்க்கிற்கு இது கஷ்டமாக இருக்கவில்லை. உண்மையில் அவர் கடினமான விஷயங்களை விரும்பியேதான் செய்தார். தினமும் முடிவில்லாப் பயணங்களிலேயே அவரது ஆரம்ப நாட்கள் கழிந்தன.

தனது தாய் மேயின் உறவினர்கள் கனடாவில் மற்ற நகரங்களிலும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தார். அதனால் பேருந்தில் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் அங்கு தனது உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தேடலில் ஈடுபடுவார். அங்கிருக்கும் தொலைபேசி நிலையத்திற்குச் சென்று தொலைபேசி டைரக்டரியை எடுத்து அங்கு தனது குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் நபர்கள் யாரும் இருக்கிறார்களா என்று ஆராய்வார். அப்படி யாரும் தென்பட்டால் அவர்களுக்குப் போன் செய்து பேசுவார். பின் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவார்.

இப்படியாக அவர் சுற்றிக்கொண்டிருந்தபோது மாண்ட்ரியல் நகரத்தில் இருந்து சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்விஃப்ட் கரண்ட் என்ற சிறிய நகரை அடைந்திருந்தார். அங்கு மொத்த மக்கள் தொகையே 15000 பேர்தான் இருக்கும். அங்கு சென்று தொலைபேசி நிலையத்தில் டைரக்டரியை புரட்டிக்கொண்டிருந்தபோது டியுலான் என்ற தனது தாயின் உறவினர் ஒருவர் அந்த ஊரில் வசித்து வருவது தெரிய வந்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த மஸ்க் அவருக்குப் போன் செய்தார். சிறிது நேரத்தில் டியுலான் வந்து மஸ்க்கை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

டியுலான் ஒரு விவசாயி. சிறிய பண்ணை ஒன்றை வைத்திருந்தார். அவரது வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் மஸ்க் தங்கிக்கொள்வதற்கு இடம் கொடுத்தார். ஆனால் மஸ்க்கிற்கு இலவசமாக ஒருவரது வீட்டில் தங்கி, அவருக்குச் சிரமம் கொடுப்பதில் விருப்பமில்லை. அதனால் அந்த பண்ணையிலேயே தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டார். டியுலானும் சம்மதித்தார். அடுத்த சில மாதங்களுக்கு மஸ்க் அந்தப் பண்ணை வீட்டில் தங்கிப் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்.

மஸ்க், டியிலானின் நிலத்தில் காய்கறிகளைப் பயிர் செய்வார். உரம் தெளிப்பார். கால் நடைகளைப் பார்த்துக்கொள்வார். விளைவித்த தானியங்களைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று பராமரிப்பார். கிடங்கைக் கூட்டிச் சுத்தம் செய்வார். அருகில் இருந்த பண்ணைகளுக்குச் சென்று மரம் அறுக்கும் பணிகளில் ஈடுபடுவார். மாலை வேளைகளில் அங்கிருக்கும் அக்கம்பக்கத்தினரிடம் அரட்டையடித்தபடி பொழுதைக் கழிப்பார்.

தங்குவதற்குச் சிறிய அறை, படுப்பதற்கு ஒரு மெத்தை, வீட்டில் சமைத்த உணவு ஆகியவையே அவருக்குப் போதுமானவையாக இருந்தன. மஸ்க் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக்கூட அங்குதான் கொண்டாடினார். இரவு உணவருந்தும்போது தனது கனவுகளான சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், கணினிகள் குறித்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அங்கிருந்தவர்களுக்கு மஸ்க்கை மிகவும் பிடித்துப் போய்விட்டது. மற்ற இளைஞர்களைவிட மஸ்க் வேறுபட்டவராகத் தெரிந்தார். மற்றவர்களைவிட அதிகம் விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தார். அதேசமயம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடினமான உழைப்பிலும் ஈடுபட்டார். அறிவு மற்றும் கடின உழைப்பு, இந்த இரு விஷயங்களும்தான் பின்னாட்களில் அவரைப் பல சாதனைகளைச் செய்ய வைத்தது.

பண்ணை வாழ்க்கை சலித்துவிட, மஸ்க் அங்கிருந்து கிளம்பி வேறு வேலை கிடைக்கிறதா எனத் தேட ஆரம்பித்தார். அருகில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்று தன் பெயரைப் பதிவு செய்துகொண்டார். அங்கு அதிகம் கூலி கிடைக்கும் வேலையாக மரம் அறுக்கும் ஆலையில் கொதிகலன் (Boiler) சுத்தம் செய்யும் வேலை மட்டும்தான் இருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பதினெட்டு டாலர் கூலி. ஆனால் ஆபத்தான வேலை. பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு கொதிகலனில் இருந்து வரும் சூடான திரவங்களை வெளியே தள்ளிவிட வேண்டும். அரை மணி நேரம் அங்கு நின்றாலே உடல் முழுவதும் வெப்பமடைந்து நாம் இறக்கும் நிலைக்கே சென்று விடுவோம். அந்த வாரத்தில் எலான் மஸ்க் உட்பட முப்பது பேர் அந்தப் பணியில் இணைந்தனர். ஆனால் வார இறுதியில் அனைவரும் பணிக்குப் பயந்து ஓடிவிட்டனர். மூன்று பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர். அவர்களில் ஒருவராக மஸ்க்கும் இருந்தார்.

இவ்வாறு பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த மஸ்க், இடைப்பட்ட காலங்களில் உயர்கல்வி பயில்வதற்காகக் கனடாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எல்லாம் விண்ணப்பித்திருந்தார். அவற்றில் ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து அனுமதிக் கடிதம் கிடைப்பதற்காகத்தான் இத்தனை நாட்கள் பொறுமையாகக் காத்திருந்தார். அதேசமயம் அவர் தனது தாய் மேயையும் கனடாவிற்குக் கிளம்பி வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொள்ளுமாறு கிங்ஸ்டனில் உள்ள புகழ் பெற்ற குயின் பல்கலைக்கழகத்தில் இருந்து மஸ்கிற்கு அழைப்பு வந்தது. மற்றொருபுறம் அவரது தாய் மேயும், மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மற்றும் சகோதரி டோஸ்கா மஸ்க் ஆகியோருடன் கிளம்பி கனடாவுக்கு வந்து சேர்ந்தார். மஸ்க்கின் குடும்பம் நிரந்தரமாகக் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. 1989ம் ஆண்டு எலான் மஸ்க் குயின் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மாணவனாக இணைந்தார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *