Skip to content
Home » எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

எலான் மஸ்க் - குயின் பல்கலைக்கழகத்தில்

கல்லூரியை இரு வகைகளில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து, ஒழுங்காக வகுப்புகளுக்குச் சென்று, கொடுக்கும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்து முடித்து, தேர்வு எழுதி, தேர்ச்சிபெற்று, கிடைக்கும் வேலையில் சேர்பவர்கள் முதல் வகையினர். நம் சிந்தனையை வளர்த்துக்கொள்வதற்கான வளங்களையும், தொடர்புகளையும் பெறுவதற்காகவே கல்லூரிக்குச் செல்பவர்கள் இரண்டாம் வகையினர்.

இந்த இரண்டாவது வகையினர் கல்லூரியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள். எப்போதும் தாங்கள் விரும்பியதைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நன்றாகப் படித்து வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும் என்ற விருப்பமும் இருக்காது. ஆனால் வகுப்பில் கிடைக்கும் கல்வியைத் தாண்டிய தேடல் அவர்களிடம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பர்க் போன்றவர்களைக் குறிப்பிடலாம். எலான் மஸ்க்கையும் இந்த வரிசையில்தான் நாம் சேர்க்கவேண்டியிருக்கும்.

எலான் மஸ்க் என்ற ஆளுமைக்கான தொடக்கத்தை அவருடைய கல்லூரி நாட்களில் நம்மால் பார்க்கமுடிகிறது. அதுவரை கூச்ச சுபாவம், மற்றவருடன் பேசுவதற்கு அச்சம், காமிக்ஸ், வீடியோ கேம் என்ற தனி உலகில் வாழ்ந்த மஸ்க் முதன்முதலில் வெளி உலகைப் புரிந்துகொண்டது கல்லூரியில்தான். இன்று சிறந்த பொறியாளராகவும், வியாபாரியாகவும் மஸ்க் வளர்ந்து நிற்பதற்கான திட்டமிடல் அவரது கல்லூரி நாட்களில்தான் தொடங்கியது.

குயின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் இணைந்த மஸ்க்கிற்குக் கல்லூரி வாழ்க்கைப் பிடித்துப்போனது. பள்ளியைப்போல அவரது அறிவைக் கிண்டலடிக்கும் சக மாணவர்கள் அங்கு இல்லை. அவரது கருத்துகளையும், பார்வைகளையும் மனம் நோகும் வகையில் புண்படுத்துபவர்கள் அங்கு இல்லை. ஆற்றல், விண்வெளி என எதைக் குறித்துப் பேசினாலும் ஊக்கப்படுத்தும் மாணவர்களே அங்கு இருந்தனர். அவரது கனவுகளை மதிக்கும் நண்பர்களையே மஸ்க் அங்கே கண்டார். இதனால் அவருக்கு மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் சுபாவம் ஏற்படத்தொடங்கியது.

பெரும்பாலும் அவர் வகுப்பிற்குச் சென்றதில்லை. தன்னுடன் அறையில் தங்கியிருந்த மாணவன் எழுதி வந்த குறிப்புகளை ஒருமுறை பார்த்துப் படித்துக்கொள்வார். ஆனால் வகுப்பில் எப்போதும் மஸ்க்தான் முதல் மாணவராக வருவார். அவருடைய தேடல் வகுப்பறையைத் தாண்டிய விஷயங்களிலேயே இருந்தது. இதற்காக அவரை யாரும் கேள்வி கேட்டதில்லை, கண்டித்ததில்லை. அனைவரும் ஊக்கப்படுத்தவே செய்தனர். இதுவே மஸ்க்கின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.

மஸ்க் பள்ளியைவிடக் கல்லூரியில் பல விஷயங்களில் ஈடுபாடு காட்டினார். குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வார். பேச்சுப் போட்டிகள் என்றால் நமது பள்ளி, கல்லூரிகளில் இருப்பது போன்று சுதந்திரப் போராட்டவீரரைப் பற்றியோ, மனப்பாடம் செய்த கட்டுரைகளையோ வாசிப்பது இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு விஷயம் குறித்த கருத்து இருக்கும். அந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு, அவற்றை மற்ற மாணவர்களுக்குப் புரியும்வகையில் சிறப்பாகப் பேசவேண்டும். எதிரில் இருந்து கேள்விகள் வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் சலிக்காமல் பதிலடி தர வேண்டும்.

மஸ்க் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு தனக்குப் பிடித்த விண்வெளி, சூரிய ஆற்றல் குறித்தெல்லாம் பேசினார். பொதுவாகவே நண்பர்கள் அல்லாத யாரிடமும் சகஜமாகப் பேச முடியாத மஸ்க், தன்னுடைய கருத்தை மக்களுக்குப் புரியும்வகையில், அவர்களுக்குப் பிடித்த வகையில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அங்குதான் கற்றுக்கொண்டார்.

அந்தப் பேச்சுக்கலை எடுத்தவுடன் எல்லாம் அவருக்கு வந்து விடவில்லை. அதற்காக அவர் மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. பேசுவதற்காக தனியாக நேரம் ஒதுக்கிப் பயிற்சியெல்லாம் செய்துதான் அவர் அதை கற்றுக்கொண்டார். இயற்கையாகவே அவருக்கு சில விஷயங்கள் மேல் இருந்த விருப்பம், பேசுவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது. இன்று டெஸ்லா ஒரு புதிய காரை அறிமுகம் செய்தாலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவினாலும் அதைப்பற்றி மஸ்க் மேடைகளிலும், தொழிலதிபர்களுக்கு மத்தியிலும் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சியாக அந்தப் பேச்சுப் போட்டிகளே அமைந்தன.

அதே போல் கல்லூரிப் பாடங்களை உள்வாங்குவதிலும் மஸ்க்கிற்கும், பிற மாணவர்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. உதாரணமாகப் பொருளாதார வகுப்பில் விநியோகம் மற்றும் தேவை (சப்ளை அண்ட் டிமாண்ட்) குறித்த பாடம் நடத்தப்படுகிறது என வைத்துக்கொள்வோம். மற்ற மாணவர்கள் அதை வெறும் பொருளாதாரக் கோட்பாடாகவும், கணக்கு வழக்குகளாகவும் மட்டும் புரிந்துகொண்டனர். ஆனால் மஸ்க் அவ்வாறு அதைப் பார்க்க மாட்டார். அந்தப் பொருளாதாரக் கருத்து நிலவி வருவதற்குப் பின் இருக்கும் மனித உளவியல் என்ன என்பதை ஆராய்வார்.

மனித நடத்தை மற்றும் எண்ணங்கள் எப்படி விநியோகம் மற்றும் தேவையைப் பாதிக்கிறது என்று விளக்குவார். ஒரு பொருள் சந்தையில் களமிறங்கி வெற்றி பெறுவதற்கு மனித நடத்தை எவ்வாறு பெரும் பங்கு வகிக்கிறது என மற்றவர்களுக்கு எடுத்துரைப்பார். மனித உளவியலை வகுப்பில் படிப்பதைவிட சந்தையில் படிக்கவேண்டும் என்பதுதான் அவர் அடிக்கடி கூறும் கருத்து.

அறிவியல் மாணவனாக இருந்த மஸ்க்கிற்கு வியாபாரத்தின்மீது விருப்பம் வருவதற்குக் காரணமும் பொருளாதாரப் பாடம்தான். பல்கலைக்கழகத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவம் புதிய தொழிலதிபர்களைச் சந்திக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. இதனால் மஸ்க்கும் அவரது சகோதரர் கிம்பலும் இணைந்து யாராவது தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்து உரையாட வேண்டும் என விரும்பினர்.

யாரைச் சந்திப்பது? இருவரும் சேர்ந்து செய்தித் தாளில் காணப்படும் தொழிலதிபர்களை எல்லாம் தேர்வு செய்து, அவர்களின் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தனர். அவர்களுடன் மதிய உணவு உண்ண வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். இந்தச் செயல் அவர்கள் எதிர்பார்த்ததைப்போல் இல்லாமல் எதிர்மறையாக சென்று முடிந்தது. தொலைப்பேசியை எடுப்பவர்கள் மஸ்க்கைத் திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுவர். ஆனாலும் மஸ்க் சகோதரர்கள் நிறுத்தவில்லை. பிடிவாதமாக அழைத்தனர்.

அப்படி அவர்கள் அழைத்ததில் ஒருவர்தான் பீட்டர் நிக்கல்சன். பீட்டர் நிக்கல்சன் கனடாவின் டொரோன்டோ புளூஜேஸ் பேஸ்பால் அணியின் வணிகத் தலைவராக இருந்தார். மேலும் நோவா ஸ்காட்டியா வங்கியின் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். நிக்கல்சனுக்கு திடீரென்று ஒரு நாள் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியதில் இரண்டு இளைஞர்கள் தொழில் குறித்து ஆலோசிக்க வேண்டும் என அவரிடம் கேட்டனர். இதுவே அவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது. இருவருடனும் மதிய உணவுக்குச் செல்ல நிக்கல்சன் சம்மதித்துவிட்டார். ஆனால் அவரைச் சந்திக்க ஆறு மாதங்களுக்குப் பிறகே அனுமதி கிடைத்தது. அன்று எலானும், கிம்பலும் காலையே எழுந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து நிக்கல்சனைச் சென்று சந்தித்தனர்.

இருவரும் பேசியவிதமும், அவர்களுக்கு வாழ்க்கை பற்றி இருந்த பார்வையும் நிக்கல்சனை வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள் நிறைய விஷயங்கள் குறித்து உரையாடினர். இருவரும் விடைபெறும்போது, நிக்கல்சன், எலான் மஸ்க்கிற்கு தனது வங்கியில் கோடைக்கால இண்டர்ன்ஷிப்பில் சேர்ந்துகொள்ள அழைப்பு விடுத்தார். மஸ்க்கும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அன்று முதல் இன்று வரை நிக்கல்சன்தான் எலான் மஸ்க்கின் நம்பத்தகுந்த ஆலோசகராக இருந்து வருகிறார். இன்றும்கூட மஸ்க்கிற்கு ஏதாவது தனிப்பட்ட வாழ்விலோ, தொழிலிலோ குழப்பம் என்றால் முதலில் நிக்கல்சனிடம்தான் செல்வார்.

இவ்வாறு குயின் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்களைச் செலவிட்டுக்கொண்டிருந்த மஸ்க்கிற்கு திடீரென்று அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1991ஆம் ஆண்டு எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் கல்வி பயில்வதற்கான அழைப்பு வந்தது. அமெரிக்காவில் சிறந்த எட்டு பல்கலைக்கழகங்களை ‘ஐவி லீக்’ பல்கலைக்கழகங்கள் என்று அழைப்பார்கள். அதில் ஒன்றுதான் பெனிசில்வேனியா பல்கலைக்கழகம். அதில் இருந்து ஒருவருக்கு அழைப்பு வருவது என்றால் சாதாரண விஷயம் கிடையாது. மிகவும் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்பு இது. இதற்காகத்தான் இத்தனை நாட்கள் மஸ்க் காத்துக் கொண்டிருந்தார். தனது வாழ்க்கையில் மேலும் பல திறப்புகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக அவர் கருதினார். உடனே அங்கு செல்வதற்கு மஸ்க் தயாராகிவிட்டார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *