Skip to content
Home » எலான் மஸ்க் #16 – யுத்தக் களம்

எலான் மஸ்க் #16 – யுத்தக் களம்

ஃபிரிக்கருடன் சேர்ந்து மற்ற இரண்டு முதலீட்டாளர்களும் வெளியேறியதில், எக்ஸ் டாட் காம் நிறுவனம் நிதி இல்லாமல் தடுமாறியது. மஸ்க் முதலீடு செய்த 12 மில்லியன் டாலர்கள் மட்டுமே கஜானாவில் இருந்தன. அதுவும் ஊழியர்களுக்குச் சம்பளம், பிற கட்டமைப்புப் பணிகள் என செலவாகிக்கொண்டிருந்தது. இதனால் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் கட்டாயத்திற்கு மஸ்க் தள்ளப்பட்டார். நிலைமை மோசமாவதற்கும் முன் தாமதிக்காமல் ‘வெஞ்சூர் கேப்பிடலிஸ்ட்’ எனப்படும் முதலீட்டாளர்களைத் தேடத்தொடங்கினார். மஸ்க் கூச்சமெல்லாம் படவில்லை. என்னுடைய நிலைமை இதுதான். என் பெயரில் ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் எப்படி செயல்படப்போகிறது என்ற முழுமையான திட்டம் என்னிடம் இருக்கிறது. நன்றாக உழைக்கக்கூடிய சில ஊழியர்கள் இருக்கிறார்கள். என்னை நம்பி முதலீடு செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும் எனக் கூறினார்.

மஸ்க் கேட்டால் கொட்டிக் கொடுப்பதற்கு ஆயிரம் முதலீட்டாளர்கள் காத்திருந்தார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா? ஆனால் நிலைமை இப்போது கொஞ்சம் மாறி இருந்தது. மஸ்க்கிற்குத் திறமை இருக்கிறது. அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவரது நடத்தைதான் இங்கு பிரச்னை. நிறுவனம் தொடங்கப்பட்ட ஆறே மாதத்தில் மூன்று முதலீட்டாளர்கள் நிறுவனத்தை விட்டுச் செல்கிறார்கள் என்றால் இப்போது மஸ்க்கை நம்பி முதலீடு செய்யலாமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்தது. அதனால் அவர்கள் சற்று யோசித்தனர். அதுமட்டுமில்லாமல் வெளியே சென்ற ஃபிரிக்கர், மஸ்க்கின் நிறுவனம் ஆறு மாதங்களில் ஒன்றையுமே செய்யவில்லை என்று பிரசாரத்தையும் செய்துவிட்டுச் சென்றிருந்தார். இதுவேறு முதலீட்டாளர்களைத் தயக்கத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட சூதாட்டத்தில் பணத்தைக் கட்டுவதைப்போலத்தான் மஸ்க் நிறுவனத்தில் முதலீடு செய்வதை அவர்கள் நினைத்தனர். அதனால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் ஒதுங்கி நின்றனர். ஆனாலும் ‘செக்குயுவே’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மைக் மோர்டிஸ் என்ற முதலீட்டாளர் மஸ்க் என்ற குதிரை மீது பந்தயம் கட்டத் தைரியமாக முன் வந்தார். இதனால் மஸ்க் என்ற பந்தயக் குதிரை மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கியது.

வழக்கம்போல் சிலிகான் பள்ளத்தாக்கு முழுவதும் பயணம் செய்த மஸ்க் இணைய வங்கியின் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவாற்றி ஏராளமான புதிய பொறியாளர்களை எக்ஸ் டாட் காமிற்கு அழைத்து வந்தார். அவர்களுடன் வந்த இளம் கணினிப் பொறியாளர்களில் ஒருவர்தான் ஸ்காட் ஆன்டர்சன். மிகவும் திறமை வாய்ந்தவர். 1999ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி பணிக்குச் சேர்ந்த அவர், மஸ்க்கின் பார்வை என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். மஸ்க் எதிர்பார்த்ததுபோலவே ஓர் இணையதளத்தை வடிவமைத்துத் தந்தார். நாட்கள் செல்லச் செல்ல புதிய பொறியாளர்களும் வரத்தொடங்கினர். மஸ்க்கின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகத் தொடங்கியது. இதற்கிடையில் எக்ஸ் டாட் காம், வங்கி நடத்துவதற்கான உரிமத்தை ஒரு வழியாகப் பெற்றது. அத்துடன் மியூச்சுவல் ஃபண்டிற்கான உரிமத்தையும் கூட பெற்றது. நிதிப் பாதுகாப்புக்காக பார்க்ளே என்ற வங்கியுடன் இணைந்து எக்ஸ் டாட் காம் செயல்படத் தொடங்கியது.

1999ம் ஆண்டு நவம்பர் மாதம். எக்ஸ் டாட் காம் உலகின் முதன்மையான ஆன்லைன் வங்கிகளில் ஒன்றை உருவாக்கி இருந்தது. அமெரிக்க அரசின் காப்பீட்டின் துணையுடன் வங்கிக் கணக்குகளும், மூன்று வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மஸ்க் இதைச் சோதனை செய்வதற்காக தன் சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் டாலர்களைப் பொறியாளர்களுக்கு வழங்கி இருந்தார். அமெரிக்காவின் ‘நன்றி தெரிவித்தல் நாள்’ எனப்படும் தேங்க்ஸ் கிவ்விங் பண்டிகைக்கு முதல்நாள் இரவு எக்ஸ் டாட் காம் பயன்பாட்டிற்கு வந்தது. எலான் மஸ்க், எக்ஸ் டாட் காம் செயல்படத் தொடங்கிய முதல் இரண்டு நாட்கள் சிறிது நேரம் கூட கண் அசரவில்லை. எல்லாம் சரியாகச் செல்கிறதா எனக் கண்காணித்துக்கொண்டே இருந்தார். ஒரு பிரச்னையும் இல்லை என்றவுடன்தான் பெருமூச்சு விட்டார்.

மஸ்க்கின் வழிகாட்டுதலில் எக்ஸ் டாட் காம் அதிரடியாகப் பல திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன்படி எக்ஸ் டாட் காமில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 டாலர் மதிப்புள்ள பண அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை வைத்துப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். எக்ஸ் டாட் காமின் இணைய சேவையையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் புதிய நபர்களை எக்ஸ் டாட் காமில் சேர்த்துவிட்டால், கூடுதலாக 10 டாலர் போனஸும் உண்டு.

இதைத்தவிர வங்கிச் சேவைகளுக்கு அப்போது வசூலிக்கப்பட்டு வந்த சேவைக் கட்டணங்களையும் மஸ்க் ரத்து செய்தார். குறிப்பாக பாரம்பரிய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் அபராதத்தை இணைய வங்கிச் சேவையில் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்த மாற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதைத்தவிர அன்றைய வங்கிச் சேவை மிகவும் அயர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணம் போய் சேர்வதற்கு ஓரிரு நாட்கள் எடுத்துக்கொள்ளும். இந்த நேர தாமதத்தை மஸ்க் முற்றிலும் அழித்தொழித்தார். எக்ஸ் டாட் காம் வாடிக்கையாளர்கள் தங்கள் இ-மெயில் முகவரியை வைத்தே ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பிக்கொள்ளலாம். அதுவும் ஒரு சில மணி நேரங்களிலேயே பணம் கைக்குக் கிடைத்துவிடும். இது இன்றைய யூபிஐ காலக்கட்டத்தில் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் புரட்சிக்கர மாற்றமாகப் பார்க்கப்பட்டது. மஸ்க்கின் இத்தகைய திட்டங்களால் ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலேயே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எக்ஸ் டாட் காமின் வாடிக்கையாளர்களாக மாறினர்.

அமெரிக்க தெருக்களின் மூலை முடுக்கெல்லாம் எக்ஸ் டாட் காம் பற்றிய பேச்சுத்தான் அடிபட்டது. பாரம்பரிய வங்கிகள் மஸ்க்கை வியந்து பார்த்தன. மஸ்க்கின் மீது நம்பிக்கையற்று விலகியவர்கள் அவரைப் பொறாமையுடன் அணுகினர். பேச்சு மட்டும் தன் திறமையல்ல, செய்து முடிப்பதிலும் நான் கெட்டிக்காரன்தான் என மஸ்க் நிரூபித்திருந்தார். பாரம்பரிய வங்கிச் சேவையை இணையவழிக்குக் கொண்டு வந்து, இணைய வர்த்தகத்தின் முடிசூடா மன்னனாக மஸ்க் அமர இருந்த சமயத்தில்தான் மற்றொரு நிறுவனம் அவருக்குப் போட்டியாக சத்தமில்லாமல் உருவெடுத்து வந்தது.

மேக்ஸ் லெவ்சின் மற்றும் பீட்டர் தீயல், மஸ்க்கைப் போலவே இரண்டு இளைஞர்கள். ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான இவர்கள் கன்ஃபினிட்டி (Confinity) என்ற நிறுவனத்தைத் தொடங்கி பணப் பரிவர்த்தனைச் சேவையை உருவாக்கி வந்தனர். உண்மையில் அவர்கள் தங்கியிருந்த இடம் கூட எக்ஸ் டாட் காமில் இருந்து வாடகைக்கு எடுத்ததுதான். அந்த அளவிற்குச் சிறிய அறையில் இருந்துகொண்டு அந்த நிறுவனத்திற்கு எதிராகவே பெரிய திட்டங்களை உருவாக்கி வந்தனர். அவர்களின் திட்டம் இதுதான். அன்றைய காலக்கட்டத்தில் பாம் பைலட் ஹாண்ட் ஹெல்ட்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் சாதனம் ஒன்று புழக்கத்தில் இருந்தது. கிட்டத்தட்ட இன்றைய ஸ்மார்ட்போன் போல என்று சொல்லலாம். அதில் போன் பேச முடியும். மெசேஜ்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அதேபோல அந்தச் சாதனத்தில் இன்ஃபிராரெட் (infrared) அம்சமும் இடம்பெற்றிருக்கும். இந்த இன்ஃபிராரெட் மூலம் பணம் அனுப்பும் சேவையைத்தான் மேக்ஸும், பீட்டரும் உருவாக்கி வந்தனர். இரண்டு பாம் பைலட் சாதனங்களைப் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் போதும். உடனே பணம் பரிமாறிவிடும். ஆரம்பத்தில் தனிப்பாதையில் செல்வதுபோல இருந்த இந்தச் சேவை கொஞ்சம் கொஞ்சமாக மஸ்க்கின் பாதைக்கு இடைஞ்சலாக இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய போட்டியாகவும் வந்து நின்றது.

அதாவது இன்ஃபிராரெட் கருவிகளைத் தவிர, இ-மெயில் முகவரி மூலம் பணம் அனுப்பும் சேவையையும் கன்ஃபினிட்டி நிறுவனம் கொண்டு வந்தது. அந்தச் சேவைக்கு ‘பேபால் (Paypal)’ என பெயரும் வைத்தது. இதுதான் மஸ்க்கிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இரு நிறுவனங்களுக்கு இடையே மோதல் ஏற்படத் தொடங்கியது. பல்கலைக்கழக அவென்யூவில் சிறிய அலுவலகத்தில் நடந்தப்பட்ட எக்ஸ்டாட் காம் மற்றும் கான்ஃபினிட்டிக்கு இடையேயான போட்டி இணைய நிதித் தொழில் புரட்சியின் மையமாக அமைந்தது. யார் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வது என்ற யுத்தம் தொடங்கியது. இரு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு புதியப் புதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளரை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டன. கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. யாராவது ஒருவர் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இரு நிறுவனங்களும் இரவு பகல் பாராமல் சண்டையிட்டன.

இந்த யுத்த களம் வேட்டைக்காகக் காத்திருக்கும் வல்லூறுகளுக்கு விருந்து படைத்தது. எக்ஸ் டாட் காம், கன்ஃபினிட்டி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் கோடிக்கணக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதை அறிந்த ஹேக்கர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பையும் உடைத்து சில கோடிகளைச் சுருட்டிச் சென்றனர். ஹேக்கர்களுக்கு எதிரானப் பாதுகாப்பைக் கட்டமைக்கவே மேலும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டன.

இந்தப் போட்டியில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது எக்ஸ் டாட் காம் ஊழியர்கள்தான். கன்ஃபினிட்டி நிறுவனம் தனது பேபால் சேவையை விரிவுப்படுத்த இ-பே டாட் காமுடன் ஒப்பந்தம் செய்தது. இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிடக்கூடாது என்று கருதிய மஸ்க் பல்வேறு திட்டங்களை யோசித்தார். மேலும் அந்தத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியையும் ஊழியர்களுக்குக் கொடுத்தார். ஊழியர்கள் வீட்டிற்குக் கூடச் செல்ல நேரம் கிடைக்காமல் இருபது மணி நேரம் அலுவலகத்திலேயே பலிகடா போல கிடந்தனர். அவர்கள் மஸ்க்கிற்கு எதிராக அலுவலகத்திற்கு உள்ளேயே குரல் கொடுக்கத் தொடங்கினர்.

நிலைமை மீண்டும் கையைவிட்டுப் போவதை அறிந்த மஸ்க் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் போர் செய்வது ஒரு செயல்முறை என்றால், அவர்களை சுவீகரித்துக் கொள்வது மற்றொரு செயல்முறை. இதில் இரண்டாவது செயல்முறையை மஸ்க் கையில் எடுத்தார். நாம் இருவரும் மோதிக்கொண்டிருப்பதால் பெரும்பான்மையான பணம் உண்மையான மக்கள் சேவைக்கு என்று இல்லாமல் விளம்பரத்திற்காகவும், வீம்பிற்காகவும் செலவாகிக் கொண்டிருக்கிறது. இடையில் ஹேக்கர்களின் தொல்லை வேறு. பேசாமல் நாம் சண்டையிடுவதை விட்டுவிட்டு ஒன்றிணைந்து விட்டால் என்ன? அடித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு ஒன்றாக செயல்படுவோம். போட்டிகளற்ற ராஜ்ஜியத்தை இருவரும் சேர்ந்து ஆள்வோம் என அழைப்பு விடுத்தார்.

அப்போது கன்ஃபினிட்டி தரப்பும் பெரும் இழப்பைச் சந்தித்திருந்தது. விளம்பரத்திற்காக ஒரு நாளைக்கு 10 லட்சம் டாலர்கள் செலவழிக்கப்பட்டு வந்தன. இதற்கு மேல் செலவழிக்கக் காசு இல்லை. இனியும் செலவழித்தால் நிறுவனத்தை நடத்த முடியாது. இதைத்தவிர எக்ஸ் டாட் காமிடம் எக்கச்சக்கமான பணமும், பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய வங்கித் திட்டங்களும் இருந்தன. இந்த நேரத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுவதை மறுத்தால் திவாலாகி நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான் என்று கன்ஃபினிட்டியும் கருதியது. ஒரு சில நாட்களிலேயே மஸ்க்கின் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்தது.

இறுதியில் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. எக்ஸ் டாட் காமும், கன்ஃபினிட்டியும் இணைந்து செயல்படவுள்ளது. இனி எங்களுக்குள் போட்டி இருக்காது. மக்களின் சேவையே எங்களுடைய பிரதான குறிக்கோள். அதிகப் பங்குகளை வைத்திருப்பதால் எலான் மஸ்க், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிவிப்புக் கூறியது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *