கேன்டரலுக்கும் மஸ்க்கிற்கும் ஆரம்பநாட்களில் ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. கேன்டரலை பலமுறை தொடர்புகொண்ட மஸ்க், பொதுத் தொலைபேசியில் இருந்தே அழைத்தார். தன்னுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணைக்கூட அவருக்குத் தெரியப்படுத்தக்கூடாது எனக் கவனமாக இருந்தார். கேன்டரலுக்கோ மஸ்க் செய்வது எல்லாம் புதிராகவும், வில்லங்கமானதாகவும் தோன்றியது. இருப்பினும் மஸ்க் என்ற நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், அவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் மஸ்க், கேன்டரலைத் தொடர்புகொண்டு உங்களைச் சந்திக்க விரும்புகிறேன், எங்கே சந்திக்கலாம் என வினவினார். கேன்டரலுக்கோ பயம் தொற்றிக்கொண்டது. எங்கே குழிதோண்டிப் புதைக்கப்பட்ட பிரச்னைகள் மீண்டும் மேல் எழும்புகிறதோ என அச்சம் தோன்றியது. தன்னுடைய முன்னாள் எதிரிகள்தான் இந்தமுறை தன்னைப் பிடிப்பதற்காகக் கட்டம் கட்டித் திட்டமிடுகிறார்களோ எனப் பயந்துவிட்டார். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, சால்ட் டேல் நகரத்தின் விமான நிலையத்தில் நாம் சந்திக்கலாம் எனக் கூறினார்.
கேன்டரல், எலான் மஸ்க்கைச் சந்திப்பதற்கு விமான நிலையத்தைத் தேர்ந்தெடுத்ததில் ஒரு விஷயம் இருந்தது. விமான நிலையங்களில் சந்திப்பு அறை, விமானங்கள் தரையிறங்கும் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கும். அங்கே யாராவது வரவேண்டும் என்றால் கடினமான கண்காணிப்புகளையும், காவல் அதிகாரிகளின் பாதுகாப்புகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் உள்ளே வர முடியும். ஒருவேளை மஸ்க் என்ற நபர் தன்னைக் கொல்வதற்குத் துப்பாக்கியுடன் வந்தால் அங்கே பிடிபட்டுவிடுவார் என கேன்டரல் நினைத்தார்.
இறுதியாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. கேன்ட்ரலை எலான் மஸ்க் சந்தித்தார். ஆனால் கையில் துப்பாக்கியுடன் வருவார் என்ற நினைத்த நபர், நோட்டுப் புத்தகத்துடன் வந்திருந்தார். அதில் தனது திட்டங்களை எல்லாம் மஸ்க் எழுதி வைத்திருந்தார்.
கேன்டரலை முதன்முதலில் சந்தித்த மஸ்க் வழக்கம்போல மனிதர்களை ஏன் கிரகங்களுக்கு இடையே பயணிக்கும் உயிரினங்களாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற பரப்புரையை நிகழ்த்தினார். அத்துடன் தம்மிடம் இருக்கும் சொத்துக்கள் பற்றியும், தொடங்கப்போகும் நிறுவனங்கள் பற்றியும் ஆர்வம் தொற்றிக்கொள்ளும் வகையில் பேசி முடித்தார்.
சந்திப்பு நிறைவடைந்தபோது கேன்டரலுக்கு மஸ்க்கின் மீது இருந்த பயம் விலகி, ஆர்வம் தொற்றிக்கொண்டது. இந்த நபரைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இறுதியாக குறைந்த விலை ராக்கெட்டுகளை வாங்குவதற்கு ரஷ்யாவிற்கு வருவதாக வாக்குறுதி அளித்தார்.
0
அது 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது அல்கொய்தா விமானங்கள் தாக்குதல் நடத்தி ஒரு மாதமே ஆகியிருந்த சமயம். அமெரிக்கா முழுவதிலும் ஒருவிதப் பயம் தொற்றிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தீவிர கண்காணிப்பு. குறிப்பாக விமான நிலையங்களில் யார் வருகிறார்கள், யார் செல்கிறார்கள் என்று போலீசார் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் மஸ்க் ரஷ்யா செல்வதற்கு ஆயத்தமானார்.
மஸ்க், கேண்டரல், அடியோ ரெஸ்ஸி மற்றும் மைக் கிரிஃபின் ஆகிய நான்கு பேரும் மாஸ்கோவிற்கு சொகுசு விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அடியோ ரெஸ்ஸி, எலான் மஸ்க்குடன் கல்லூரியில் படித்த நண்பர். மஸ்க்கின் மீது அக்கறை கொண்டவர். மஸ்க்கைப்போலவே விண்வெளியில் ஆர்வம் உள்ளவர். ஆனால் யதார்த்த உலகில் இயங்குபவர். ராக்கெட்டுகள் வாங்குவதற்கு ரஷ்யா செல்லப்போகிறேன் என எலான் மஸ்க் கூறியதும், ரெஸ்ஸி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில், தேவையில்லாமல் இத்தனை பெரிய தொகையைச் செலவு செய்து அனைத்தும் நஷ்டத்தில் முடிந்துவிட்டால் என்ன ஆவது என்ற கேள்வி. இரண்டாவது, ஒருவேளை ரஷ்யர்களால் மஸ்க்கிற்கு ஆபத்து நேர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம்.
ராக்கெட்டுகளை வாங்கி மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வெட்டி வேலைகளில் எல்லாம் ஈடுபட வேண்டாம் என ரெஸ்ஸி சொல்லிப் பார்த்தார். ஆனால் மஸ்க் பிடிவாதமாக இருக்கவே, அவருடன் தானும் ரஷ்யாவிற்கு வருவதாகக் கூறிவிட்டார். இவர்களுடன் நாம் ஏற்கெனவே மேலே பார்த்த விஞ்ஞானி மைக் கிரிஃபினும் இணைந்துகொண்டார். நால்வரும் முன்னாள் சோவியத்தின் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கு இடையே ராக்கெட்டுகளை விலைபேசி வாங்குவதற்காகப் பயணம் மேற்கொண்டனர்.
மஸ்க் தலைமையிலான அந்தக் குழு வெறும் நான்கு மாதங்களில் மூன்று முறை ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டது. அவர்கள் ரஷ்யாவிற்குச் சென்று என்.பி.ஓ. லவோச்கின் (NPO Lavochkin), கோஸ்மோட்ராஸ் உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்களில் பணியாற்றி வந்த அதிகாரிகளைச் சந்தித்தனர். இதில் என்.பி.ஓ லெவோச்கின், ரஷ்ய விண்வெளி நிறுவனத்திற்காகச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான செயற்கைக்கோள் மற்றும் கருவிகளை உருவாக்கும் நிறுவனம். கோஸ்மோட்ராஸ் ராக்கெட் தயாரிக்கும் நிறுவனம். இவர்களிடம் இருந்த ராக்கெட்டுகள் மற்றும் கருவிகளைத்தான் மஸ்க் குழுவினர் பேரம் பேசி வாங்கலாம் என வந்தனர். ஆனால் அவர்கள் வந்த வேலை அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
ரஷ்யர்களுடனான அவர்களுடைய சந்திப்பு விநோதமாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் சரியாக காலை 11 மணிக்கு அவர்களுடைய சந்திப்பு தொடங்கும். பேச்சுவார்த்தையின்போதே இடையிடையில் சான்ட்விச்கள், சுட்ட இறைச்சி, வோட்கா மதுபானம் என உணவுகள் பரிமாறப்படும். இதற்கு எல்லாம் மஸ்க்தான் கட்டணம் செலுத்தவேண்டும். இந்த உணவு தீர்ந்தவுடன் ரஷ்யர்கள் எழுந்து புகைப்பிடிக்கச் சென்றுவிடுவர். பின் காபி அருந்திவிட்டு அவர்கள் திரும்பும்போது சில மணி நேரம் கடந்திருக்கும். ஒருநாளில் ஆறு, ஏழுமணி நேரம் நிகழும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் எட்டப்பட்டிருக்காது. ஒவ்வொரு சந்திப்பும் முடியும்போதும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கும்.
இதுவே அங்கு நிகழ்ந்த அத்தனை சந்திப்பிலும் வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பணம் செலவழித்து ரஷ்யாவிற்கு வந்தால், மேற்கூறிய வழக்கங்களே சம்பிரதாயமாக நடந்தது. மஸ்க்கிற்கும், அவருடைய நண்பர்களுக்கும் ரஷ்யர்கள் தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்று தோன்றியது.
‘எல்லாம் நல்லதாக நடக்கும், நம் மீது இன்னும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை’ என கேன்டரல் மஸ்க்கைச் சமாதானப்படுத்தினார். ஒருமுறை ராக்கெட்டுகளை வடிவமைக்கும் தலைமை அதிகாரி ஒருவரைச் சந்திக்க மஸ்க்கும் கேன்டரலும் தனியாகச் சென்றிருந்தனர். அப்போது நிகழ்ந்த சம்பவம், இருவரையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. மஸ்க்கும், கேன்ட்ரலும் அந்த அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த அந்த நபர் எச்சிலைக் குமுறி அவர்கள் மீது உமிழ்ந்தார். பின் எதுவும் நடக்காததுபோலச் சென்றுவிட்டார். அந்த அளவுக்கு ரஷ்யர்கள் எலான் மஸ்க்கையும் அவரது சகாக்களையும் மோசமாக நடத்தினர்.
ஒவ்வொருமுறையும் இதுபோன்ற சம்பவங்களே வாடிக்கையாகிக் கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்திருந்த மைக் கிரிஃபின் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். ரஷ்யர்களைப் பிடித்து, எங்களுடன் உண்மையிலேயே உங்களுக்கு வியாபாரம் செய்ய விருப்பமா எனக் கேட்டு கத்திவிட்டார். ரஷ்யர்கள் எதுவும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாக உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். 2001ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்து நடந்த சந்திப்புகளில் ஒரு முடிவும் எட்டப்படாமலேயே இருந்தது.
இறுதியாக அவர்களது சந்திப்பு, மாஸ்கோவில் ரஷ்யப் புரட்சிக்கு முன் கட்டப்பட்ட, அழகிய ஆனால் கைவிடப்பட்ட ஒரு மாளிகையில் நடைபெற்றது. வழக்கம்போல வோட்கா கொண்டு வரப்பட்டது. எலான் மஸ்க்கின் முகம் கடுகடுப்பில் இருந்தது. அத்தனை முறை நடந்த சந்திப்புக்குப் பிறகு முதன்முதலில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வாங்குவதுபற்றிப் பேசப்பட்டது.
மஸ்க்கிடம் இருந்த தொகை 20 மில்லியன் டாலர் என ரஷ்யர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் அவரிடம் அந்தத் தொகையைச் சுற்றியே பேரம் நடத்தினர். முதலில் மஸ்க், ரஷ்யர்களை நோக்கி ஒரு ஏவுகணையின் விலை என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஒரு ஏவுகணைக்கு 8 மில்லியன் டாலர் என்று விலை நிர்ணயித்தனர். மூன்று ஏவுகணைகளுக்கு 24 மில்லியன் டாலர். உங்களுக்காக 20 மில்லியன் டாலர் குறைத்துக் கொடுக்கச் சம்மதிக்கிறோம் எனக் கூறினர்.
மஸ்க் இரண்டு ஏவுகணைகளை 8 மில்லியன் டாலர்களுக்குத் தர வேண்டும் எனக் கேட்டார். அவர்கள் மஸ்க்கைக் கிண்டலாகப் பார்த்தனர். கையில் உடனடியாகக் கொடுக்க பணம் இருக்கிறதா என அவர்கள் மஸ்க்கிடம் வினவினர். அதற்கு மஸ்க், ஒப்பந்தம் முடிந்தவுடன் பணம் பரிமாற்றம் செய்யப்படும் எனக் கூறினார். ரஷ்யர்கள் கொஞ்சம் நேரம் சிந்தித்துவிட்டு, ஓர் ஏவுகணையின் விலையை 10 மில்லியன் டாலர் விலையாக உயர்த்தினர். நேரத்தைத் தாழ்த்த நினைத்தால் விலை ஏறிக்கொண்டே இருக்கும். இப்போதே 30 மில்லியன் டாலர்களைக் கொடுத்துவிட்டு, 3 ஏவுகணைகளை எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டனர்.
மஸ்க்கிற்குத் தெரிந்துவிட்டது. ஒன்று அவர்கள் நம்மிடம் விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். நம் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் என்னிடமிருந்து வேண்டிய அளவு பணத்தைக் கறந்துவிடலாம் என்ற நினைப்பில் இருக்கவேண்டும். இரண்டிற்கும் நான் இடம் தர மாட்டேன் எனக் கர்ஜித்தார்.
சட்டென்று எழுந்து சந்திப்பு நடக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்தார். நேராகச் சாலைக்கு வந்து, டாக்ஸி ஒன்றைப் பிடித்து விமான நிலையத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார். கிரிஃபினும், கேன்டரலும் அவருடன் வந்து டாக்ஸியில் ஏறிக்கொண்டனர். கேன்டரலுக்கோ பயம், ரஷ்யர்களைப்பற்றி இவருக்குப் புரியவில்லை. நாம் அவர்களை மதிக்கவில்லை எனத் தெரிந்தால் இனி வாய் வார்த்தைகளில் பேச மாட்டார்கள். துப்பாக்கியால்தான் பேசுவார்கள். எப்படியும் நம்மைப் பின் தொடர்ந்து வருவார்கள். இதை மஸ்க்கிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது எனக் குழப்பத்தில் இருந்தார்.
மஸ்க்கின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவர்கள் ஏறி இருந்த டாக்ஸி விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. செல்லும் வழியில் யாரும் எதுவும் பேசவில்லை. சாலையெங்கும் சிதறிக்கிடந்த மாஸ்கோ நகரத்து வெள்ளைப் பனி அவர்களிடம் வெறுமையைக் கடத்திச் சென்றது. மனித இனத்திற்குப் பெரும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் கனவில், உற்சாகத்தில் ரஷ்யா வந்த மஸ்க், இப்போது நம்பிக்கை இழந்து, விரக்தியில் அமர்ந்திருந்தார். மஸ்க் கேட்கும் விலையில் ராக்கெட்டுகள் ரஷ்யர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் அவர்கள் நடந்துகொண்ட விதம் மஸ்க்கைக் கோபப்படுத்தியது. வெறுப்பில் இருந்த அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
கேன்டரலுக்கோ எங்கே ரஷ்யர்கள் தங்களைப் பின் தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்று பயம். அப்படி எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டே வந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே விமான நிலையத்தை அடைந்தனர். லாஸ் ஏஞ்சலிஸ் புறப்படும் விமானத்தில் ஏறினர். விமானம் மாஸ்கோவில் இருந்து சீறிக்கிளம்பி, வானில் பறந்தது. இப்போதுதான் கேன்டரலுக்குப் போன உயிர் மீண்டும் வந்தது. கேன்டரலும் கிரிஃபினும் விமான பணிப்பெண்ணிடம் அமெரிக்க ரக மது ஒன்றைக் கிண்ணத்தில் வாங்கி அருந்தத் தொடங்கினர்.
விமானத்தில் அமர்ந்திருந்த மஸ்க், தான் கொண்டு வந்திருந்த மடிக்கணினியை எடுத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். கேன்டரலும் கிரிஃபினும் இனி மஸ்க்கின் சகவாசத்தை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். இந்த அமெரிக்கப் பணக்காரர்களுக்கு இதுவே வேலையாகிவிட்டது.
விண்வெளியில் சாம்ராஜ்யம் அமைக்கவேண்டும் என்ற கனவில் பல லட்சம் டாலர்களைச் செலவழிக்கின்றனர். இதுபோல விண்வெளிக்கு ஆசைப்பட்டுப் பலரும் பணத்தை இழந்த கதைகளெல்லாம் அமெரிக்காவின் வீதிகளில் உலா வருகின்றன. சில வருடங்களுக்கு முன் ஆண்ட்ரேவ் பீயல் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர், புதிய விண்வெளி நிறுவனம் ஆரம்பித்து சொத்தையெல்லாம் இழந்தார். அதேபோல் மஸ்க்கும் கிறுக்குத்தனமாக ஏதோ செய்கிறார். ஆனால் அவர்களாவது தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக்கொண்டனர். மஸ்க்கோ நம்மையும் இழுத்துவந்து ரஷ்யாவில் பலிகடாவாக்கப் பார்க்கிறார் என நினைத்துக்கொண்டனர்.
இந்தத் திட்டத்தை இத்துடன் கைவிட்டுவிடலாம் எனக் கூற நினைத்த அவர்கள், மஸ்க்கை அழைப்பதற்கு முன்பே, அவர் சட்டென்று திரும்பி கேன்டரலிடமும், கிரிஃபினிடமும் தன் கணினியைக் காண்பித்தார். அதில் கோப்பு ஒன்றில் வரிசையாகக் கணக்குள் போடப்பட்டிருந்தது. இப்போது பழைய உற்சாகம் மஸ்க்கின் முகத்தில் மீண்டும் குடியேறி இருந்தது. அவர், தன் சகாக்களை நோக்கி, ‘இப்படி வீணாக அலைந்துகொண்டிருப்பதற்குப் பதில், நாமே ஏன் ராக்கெட்டுகளை உருவாக்கக்கூடாது?’ என்ற கேள்வியை வீசினார்.
கிரிஃபினுக்கும், கேண்டரலுக்கும் அடித்த சரக்கு இறங்குவதுபோல இருந்தது. ராக்கெட்டுகளை வாங்குவதற்காக நான்கு மாதங்களாக ரஷ்யாவின் கடுங்குளிருக்குள் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தோம். இப்போதும்கூட தப்பித்தோம், பிழைத்தோம் என்றுதான் விமானம் ஏறி இருக்கிறோம்.
இந்த ஆள் இத்தனை நாட்கள் எதுவும் சொல்லாமல் சற்றுமுன் இணையத்தில் எதையோ பார்த்துவிட்டு நாமே ராக்கெட்டுகளை உருவாக்கலாம் என்று கேட்கிறானே என உள்ளுக்குள் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. நம்பிக்கையே இல்லாமல்தான் அவர்கள் மஸ்க்கின் கணினியை வாங்கிப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்த தகவல்களைப் பார்த்து உண்மையிலேயே வாய் அடைத்துப் போய்விட்டனர்.
மஸ்க் உருவாக்கி இருந்த அந்த ஆவணம் ஒரு ராக்கெட்டைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருள்கள் என்னென்ன, அதற்கு என்னவெல்லாம் செலவாகும், அந்த ராக்கெட்டை உருவாக்கத் தேவையான மனித ஆற்றல், அதை ஏவுவதற்கு வேண்டிய செலவு உள்ளிட்டவற்றை விளக்கமாகக் கணக்கிட்டிருந்தது.
அப்போது புழக்கத்தில் இருந்ததுபோன்ற மிகப்பெரிய ராக்கெட்டுகளை உருவாக்காமல், சிறிய அளவு ராக்கெட்டுகளை உருவாக்குவது பற்றி அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ராக்கெட் தயாரிப்புக்கான செலவு வெகுவாகக் குறையும் என்றும், இந்தச் சிறிய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள், ஆய்வு உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்துச்செல்லலாம் என்றும் கணித்திருந்தார்.
மேலும் அந்த ஆவணம், சிறிய ராக்கெட்டுகள் செயல்படுவதற்குப் பின் இருக்கும் அறிவியல் குறித்தும் துல்லியமான விவரங்களைக் கொண்டிருந்தது. கேன்டரலுக்கோ ஆச்சரியம். முதன்முதலில் உண்மையிலேயே ஒரு புத்தி ஜீவியுடன்தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்புக்கு அவர் வந்தார். கிரிஃபினுக்கும் அப்போதுதான் மஸ்க் வெறும் விளையாட்டுப் பிள்ளை இல்லை என்ற எண்ணம் உதித்தது.
மஸ்க்கால் எப்படி அத்தனை விவரமான ஒரு திட்டத்தைத் தயாரிக்க முடிந்தது? அவர் எப்போது விண்வெளி சார்ந்த தொழிலில் ஈடுபடப்போகிறோம் என முடிவுக்கு வந்தாரோ, அப்போதே விண்வெளி அறிவியல் சார்ந்த புத்தகங்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் படிக்கத் தொடங்கிவிட்டார்.
இதுகுறித்து கேன்டரல் விளையாட்டாகக் கூறும்போது, ‘என்னிடம் உடனே திருப்பித் தருவதாக மஸ்க் வாங்கிய நான்கு ராக்கெட் சயின்ஸ் புத்தகங்களை அவர் தொலைத்துவிட்டார் என்று கருதினேன். ஆனால் அவர் அதைப் படித்து ஒரு திட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்’ எனக் கூறுகிறார்.
அறியாமையை விலக்கினால்தான் ஞானம் பிறக்கும் என்பதுபோல ராக்கெட் தொழில்நுட்பம் குறித்துத் தேடித் தேடிப் படித்த மஸ்க்கிற்கு, ரஷ்யர்களைவிடக் குறைந்த விலையில் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது. அதன்பிறகு அவருடைய ஒட்டுமொத்த விண்வெளித் திட்டமே மாறிப்போய் இருந்தது.
எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதோ, செவ்வாய் கிரகத்தில் செடி வளர்த்து அதை வீடியோ எடுப்பதோ என் திட்டம் இல்லை. என் திட்டம் எளிமையானது. விண்வெளி என்றாலே பிரமாண்டமான செலவைக் கோரும் பணி என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. அதனாலேயே பலரும் விண்வெளியில் ஆர்வம் காட்டாமல் பின் வாங்குகின்றனர். ஆனால் நான் அதை மாற்றிக் காட்டப்போகிறேன். குறைந்த செலவில் விண்வெளியில் பயணம் செய்யமுடியும் என்பதை நிரூபித்து, புதிய சிந்தனையை மக்களிடையே விதைக்கப்போகிறேன். அவர்களிடையே வீழ்ந்து கிடக்கும் உத்வேகத்தைக் கட்டி எழுப்புவதே என் திட்டம் என மஸ்க் அறிவித்தார்.
(தொடரும்)