Skip to content
Home » எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

ஃபால்கன் 1-ஐ தயார் செய்வதற்கே ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களுக்குத் தாவு தீர்ந்துவிட்டது. அங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு முழு ராக்கெட்டை உருவாக்குவதற்கு வாரத்திற்கு நூறுமணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்துக்கொண்டிருந்தனர். இதுமட்டும் இல்லாமல் ராக்கெட்டைச் சோதனை செய்வதற்காக லாஸ் ஏஞ்செலஸிற்கும், டெக்ஸாஸிற்கும் இடையே மாறி மாறி பயணிக்க வேண்டியது இருந்தது. ஒருவழியாக ஃபால்கன் 1 தயாரானவுடன், இனி சற்று ஓய்வெடுக்கலாம் என ஆசுவாசத்தில் இருந்தபோதுதான், ஃபால்கன் 5 அறிவிப்பை மஸ்க் வெளியிட்டார்.

ஃபால்கன் 5 குறித்த சிந்தனை மஸ்க்கின் மனதிற்குள் ஸ்பேஸ்எக்ஸ் தொடங்குவதற்கு முன்னமே தோன்றி இருந்தது. அந்த ராக்கெட் 5 எஞ்ஜின்களைக் கொண்டு இயங்கும். அதனால் 9200 பவுண்ட் எடையைப் பூமியின் தாழ்வட்டப் பாதைக்குத் தாங்கிச் செல்ல முடியும். இதன்மூலம் மறுபயன்பாட்டுப் பொருள்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் செல்ல நிச்சயமாக அந்த ராக்கெட் உதவும் என மஸ்க் நம்பினார். அத்தகைய ராக்கெட்டை உருவாக்குவதற்கு அவருக்கு மற்றொரு நோக்கமும் இருந்தது. ஒருவேளை ஃபால்கன் 5 ராக்கெட்டைத் தயாரித்துவிட்டால், இதன்மூலம் நாசாவின் விலை மதிப்பு வாய்ந்த அரசாங்க ஒப்பந்தங்களை எளிதாகக் கைப்பற்றலாம் என்பது அவரது எண்ணம். இந்த ராக்கெட்டில் ஐந்து எஞ்ஜின்களில் அதிகபட்சம் மூன்று எஞ்ஜின்கள் செயலிழந்தால் கூட மீதமுள்ள 2 எஞ்ஜின்களைக் கொண்டு நாம் விரும்பும் இலக்கை அடைந்துவிடலாம் என்று அவர் அறிவித்தார். இத்தகைய நம்பகத்தன்மையை அப்போது சந்தையில் இருந்த வேறு எந்த ஒரு ராக்கெட் நிறுவனமும் நாசாவிற்குத் தரவில்லை.

ஆனால் ஊழியர்களுக்கோ மஸ்க்குடன் பயணிப்பதே பெரிய சாகசத்தில் ஈடுபடுவதைப் போல இருந்தது. அவர் நிர்ணயிக்கும் இலக்குகள், செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் எல்லாம் ஊழியர்களைப் பணி நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஃபால்கன் 1-ஐ விளம்பரப்படுத்துவதற்காகவே ஏகப்பட்ட பணம் செலவழிக்கப்பட்டது. மஸ்க் தனிப்பட்ட முறையில் ஆவணப்படக்குழு ஒன்றை ஏற்பாடு செய்து, அவர்களை ஸ்பேஸ்எக்ஸில் நடைபெறும் இறுதிக்கட்டப் பணிகளைப் படம்பிடிக்க அறிவுறுத்தி இருந்தார். அவர்கள் மஸ்க் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து சென்று அவர் ஆற்றும் உரையைப் படம்பிடித்து வந்தனர். அவர் பேசிய வார்த்தைகள் விண்வெளியை வெற்றிகொண்ட ஒரு பேரரசனைப்போல அவரைச் சித்தரித்தன.

மஸ்க் செய்வது எல்லாம் சரிதான், ஆனால் அடிப்படையிலேயே ஸ்பேஸ்எக்ஸிடம் ஒரு பிரச்னை இருந்தது. அது, அந்த நிறுவனம் இன்னும் ஒரு ராக்கெட்டைக் கூட விண்ணில் ஏவவில்லை என்பதுதான். இதை சுட்டிக்காட்டிய ஊழியர்கள் மஸ்க்கால் உளவியல் தாக்குதலுக்கு உள்ளாகினர். மஸ்க் தயாரித்து வைத்திருந்த ஃபால்கன் 5 ராக்கெட்டின் டிசைனில் உள்ள போதாமைகள் குறித்தோ, ஃபால்கன் 1-ஐ ஏவுவது குறித்தோ யாராவது கேள்வி எழுப்பினால், அவர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வைத்து மஸ்க் கட்டம் கட்டினார். சிலர் வேலையில் இருந்து நிரந்தரமாகவே நீக்கப்பட்டனர்.

ஒருவழியாக 2004ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பேஸ்எக்ஸ் தனது சோதனைகளை எல்லாம் நிறைவு செய்துவிட்டு, ஆகஸ்டு, செப்டெம்பர் மாதங்களில் ராக்கெட்டை ஏவுவதற்குத் தேதியைக் குறித்தது. முல்லரும் அவரது அணியும் தயாரித்த மெர்லின் எஞ்ஜின் ஏகப்பட்ட பரிசோதனைகளைத் தாண்டி, இறுதியில் அதீத திறன்வாய்ந்த எஞ்ஜின் என்ற வடிவத்தை அடைந்தது. எல்லோருக்கும் பரம திருப்தி. இனி ராக்கெட்டை ஏவுவதுதான் பாக்கி. இத்தனை நாட்கள் அனுபவித்த கடுமையானப் பணிச்சுமைகளை இறக்கி வைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று இருந்தனர். ஆனால் உடனேயே அடுத்த பிரச்னை கிளம்பிவிட்டது. இந்தமுறை ராக்கெட்டின் மின்னணுவியல் பயன்பாட்டில் (Avionics) குழறுபடி. ஏதோ ஒரு காரணத்திற்காக ஃபிளாஷ் டிரைவில் இருந்த தகவலைக் கணினி படிப்பதற்கு மறுத்துவிட்டது. இதனால் ஒட்டுமொத்த ராக்கெட் செயல்பாடும் குழம்பிப்போனது. வழிகாட்டல், தொலைத்தொடர்பு மற்றும் ராக்கெட்டின் ஒட்டுமொத்த மேலாண்மையிலும் சிக்கல் ஏற்பட்டது. ராக்கெட்டை நிர்வகிக்கப் பயன்படுத்தப்பட்ட மென்பொருளிலும் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் முடிந்து வழியனுப்பும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்னையா என முல்லர் நொந்துகொண்டார். இப்போது அவரது குழு மென்பொருள்களைச் சரி செய்ய மேலும் ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டது.

பிறகு 2005ம் ஆண்டு மே மாதம் ஃபால்கன் 1-ஐ விண்ணில் ஏவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டென்பெர்க் விமானப்படை தளத்திற்கு ராக்கெட்டை எடுத்துச் சென்று சோதனை செய்துவிட்டு, ஏவுவதற்குத் திட்டமிடப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸின் வருகையை விமானப் படை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். ஆனால் இந்தமுறை சோதனையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களுக்குச் சவாலாக இருந்தது லாக்ஹீட், போயிங் ஆகிய போட்டி நிறுவனங்கள்தான். அந்த இரு நிறுவனங்களும் வாண்டென்பெர்க்கில் இருந்துதான் ராணுவத்திற்குத் தேவையான 100 கோடி டாலர்கள் மதிப்பிலான உளவு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு எடுத்துச் சென்றன. இப்போது ஸ்பேஸ்எக்ஸின் வருகை அவர்களுடைய வியாபாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால் அவை வேண்டுமென்றே ஸ்பேஸ்எக்ஸிற்கு இடையூறு ஏற்படுத்தத் திட்டமிட்டன. இதற்கு அவர்களுக்கு ஒரு வழி கிடைத்தது. லாக்ஹீட், போயிங் நிறுவனங்களும் வாண்டன்பெர்க் விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்ததால், ராக்கெட்டை ஏவுவதற்கு ஏற்கெனவே அவை முன்பதிவு செய்து வைத்திருந்தன. அவைகளின் முறை முடிந்தபின்தான் ஸ்பேஸ்எக்ஸ் அந்த ஏவுதளத்தைப் பயன்படுத்த முடியும். இதனைப் புரிந்துகொண்டு வேண்டுமென்றே அந்த இரு நிறுவனங்களும் கால விரயத்தை ஏற்படுத்தின. எல்லாம் சரியாக இருந்தாலும், ராக்கெட்டை ஏவுவதற்கான அனுமதி இன்னமும் கிடைக்காமலேயே இருந்தது.

சில மாதங்கள் கழிந்தன. மஸ்க்கால் காத்திருக்க முடியவில்லை. அவர், தனது பொறியாளர்கள் ஷாட்வெல்லையும், ஹான்ஸ் கோயிங்ஸ்மேனையும் அழைத்தார். வாண்டென்பெர்க்கில் இருந்துதான் ராக்கெட்டை ஏவ வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நாம் நமக்கு வசதியான வேறு தளத்தைத் தேடுவோம். இவர்கள் வேண்டுமென்றே நம் திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். நாம் பொறுத்திருக்க வேண்டாம். ராக்கெட்டை ஏவுவதற்கு உலகில் வேறு ஒரு சிறந்த இடத்தைக் கண்டுபிடியுங்கள். அங்கே சென்று நாம் பணிகளைத் தொடங்குவோம் என்று உத்தரவிட்டார்.

உலக வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு குழு ஆராய்ந்தது. நிலநடுக்கோட்டிற்கு (Equator) அருகே ஏதாவது ஓர் இடத்தைத் தேர்வு செய்யலாம் என்பது அவர்களது திட்டம். காரணம், அங்குப் பூமியின் சுழற்சி வேகம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அது ராக்கெட்டிற்குக் கூடுதல் உந்து சக்தியை வழங்கும் என அவர்கள் கருதினர். அத்தகைய இடம் எங்கே இருக்கிறது என்று தேடியதில் அவர்களுக்கு குவாஜலின் தீவு (குவாஜ்) அகப்பட்டது. அந்தத் தீவு பசிபிக் பெருங்கடலில் குவாம் மற்றும் ஹவாயிக்கு இடையில் இருந்தது. மார்சல் தீவுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்தது. அந்த இடத்திலும் அமெரிக்க ராணுவம் பல தசாப்தங்களாக ஏவுகணைச் சோதனைகளைச் செய்திருக்கிறது. ஆனால் இப்போது அந்த இடம் பயனற்றுக் கிடக்கிறது. அதனால் அந்த இடம் ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட் ஏவுதளத்திற்குச் சரியானதாக இருக்கும் என அனைவருக்கும் தோன்றியது. உடனேயே அங்கு செல்வதற்கு அனுமதி கேட்டு மஸ்க் விண்ணப்பித்தார். சில வாரங்களிலேயே ஸ்பேஸ்எக்ஸை வரவேற்கும் வகையில் அவருக்குப் பதில் வந்தது. அடுத்த சில நாட்களிலேயே ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருள்களைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு குவாஜ் தீவிற்குப் பயணம் மேற்கொண்டனர்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பீட் வோர்டன் என்பவரை அமெரிக்க அரசாங்கம் ஆலோசகராக நியமித்தது. கிட்டத்தட்ட நூறு சிறிய சிறிய தீவுகள் சேர்ந்ததாக குவாஜ் பகுதி இருந்தது. அங்குள்ள மக்கள் எப்பை என்ற ஒரு தீவில் வசித்து வந்தனர். அமெரிக்க ராணுவம் அந்தத் தீவுகளின் தென்கோடியில் இருந்த குவாஜ்ஜை ஆக்கிரமித்து அவற்றைத் தங்களது ஏவுகணைச் சோதனைகளுக்கு ஏற்றவாறு மாற்றி இருந்தது. ஆனால் அங்கே வசிப்பதற்கு இடமில்லை. வேலை முடிந்தவுடன் பணியாட்கள் அங்கிருந்து கிளம்பி எப்பே தீவுக்குச் சென்றுதான் வசிக்க வேண்டும்.

ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் எப்பே தீவிற்கு ஹவாயில் இருந்து விமானத்தில் வந்தடைந்தனர். அந்தத் தீவில் அவர்களுக்கு இரண்டு படுக்கை கொண்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தீவு என்றவுடன் நட்சத்திர விடுதி என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்கள் விடுதியை விட மோசமான நிலையில் அந்த அறைகள் இருந்தன. ஊழியர்களுக்குத் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் மஸ்க் தன் சொந்த விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இல்லையென்றால் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் பொருள்கள் வந்தடைந்தன.

ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள் காலை 7 மணிக்கு எல்லாம் எழுந்து படகுகளின் மூலம் எப்பே தீவில் இருந்து குவாஜ் தீவிற்குச் செல்வர். பின் அந்தத் தீவில் மண்டியிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றிவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்து, தூசு படிந்து கிடந்த ஏவுதளத்தை மீண்டும் கட்டமைக்கத் தொடங்குவர். பணி கடுமையாக இருக்கும். ஒரு பக்கம் வெயில் வாட்டி எடுத்தது. மறுபக்கம் அடிமட்ட வேலைகளைக் கூட அங்குள்ள பொறியாளர்களே பார்க்க வேண்டியதாக இருந்தது. தினம் தினம் மஸ்க் வீடியோ அழைப்பு மூலம் உரையாடுவார். அன்றைய சவால்கள் என்ன, செயல் திட்டம் என்ன என்று அனைவருக்கும் தெரிவிப்பார். அவற்றுக்குத் தீர்வு என்ன என்று கலந்து ஆலோசிப்பார். ஆலோசனை முடிந்தவுடன் அனைவரும் வேலையில் இறங்கிவிட வேண்டும். இரவு ஏழு மணிக்குப் பணியை முடித்துவிட்டு, பொறியாளர்கள் கடற்கரையிலேயே அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, டிவிடி பிளேயர்களில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, துறையில் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டு இருப்பர். ஆரம்பத்தில் தினம் தினம் இரவில் குவாஜ் தீவில் இருந்து எம்பே தீவிற்குச் சென்று வந்த ஊழியர்கள், ஒரு கட்டத்தில் குவாஜ் தீவிலேயே தற்காலிகத் தங்கும் இடங்களை அமைத்து, அந்தத் தீவிலேயே தங்கத் தொடங்கினர்.

அமெரிக்காவில் இருந்து படகுகள் மூலம் இருந்து ராக்கெட் பாகங்கள் வந்தன. வரும் வழியிலேயே சந்தித்த கடுமையான சூழல்களால் சில பாகங்கள் உடைந்த நிலையில் கூட இருந்தன. அவற்றைச் சரி செய்ய வேண்டியது கூடுதல் பணியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ராக்கெட்டைக் கட்டமைக்கும் பணி தொடங்கியது. மற்றொருபுறம் மஸ்க் தன்னுடைய பங்கிற்கு ஊழியர்களை வதைத்துக்கொண்டிருந்தார். பொறியாளர்கள் தங்களுக்கு நிதி உதவி வேண்டி கோரிக்கை வைத்தால் உடனே அதை நிராகரித்துவிடுவார். ஒருமுறை இப்படித்தான் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தில் ஃபால்கன் 1-ஐ வடிவமைக்கும் சமயத்தில் 2 லட்சம் டாலர் மதிப்புள்ள முக்கியமான பாகம் ஒன்றை வாங்கப் பொறியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மஸ்க் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் அலுவலகத்தின் தரை பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சில ஆயிரங்களை வெட்டிச்செலவு செய்து அவற்றை அழகுபடுத்திக்கொண்டிருந்தார். இப்போது தீவில் இருந்த ஊழியர்கள் ராக்கெட்டை ஏவுதளத்திற்கும், கொட்டகைக்கும் இடையே எளிதாக நகர்த்துவதற்கு வழித்தளம் அமைக்க நிதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மஸ்க் வழக்கம்போல மறுத்துவிட்டார். இதனால் பண்டைய எகிப்தில் இருந்ததுபோல மரத்தால் ஆன சில உருளைகளைச் செய்து, அவற்றின் உதவியுடன் அவர்கள் ராக்கெட்டை நகர்த்திச் சென்றனர்.

அந்தச் சூழலே முட்டாள்தனமாக இருந்தது. ஓர் ஆரம்பக்கட்ட ராக்கெட் நிறுவனம், ஏதோ மூலையில் இருக்கும் ஒரு தீவில் அமர்ந்துகொண்டு யாருக்கும் புரியாத சில வேலைகளைச் செய்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. உண்மையில் அங்குள்ள ஊழியர்களுக்கே எப்படி நாம் ராக்கெட்டை ஏவப்போகிறோம் என்று தெரியவில்லை. அவர்கள் மஸ்க் சொன்ன சொல்லிற்கு ஏற்றாற்போல இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் ராக்கெட்டை இணைத்து ஏவுதளத்திற்குச் சென்று வைப்பார்கள். அங்கே பாதுகாப்புச் சோதனை செய்யும்போது புதிய பிரச்னை வெடிக்கும். ராக்கெட்டைச் செங்குத்தாக வைத்துச் சோதிக்கும்போது உப்புக்காற்று வீசி ஏதாவது கோளாறு ஏற்படும். மீண்டும் புதிய பாகங்கள், கருவிகள், மென்பொருள்கள் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டு தீவிற்குக் கொண்டு வருவதற்குச் சில காலம் பிடிக்கும். இப்படியே நாட்கள் கழிந்தன. ஒருவழியாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட்டை ஏவுவதற்கு மீண்டும் தேதி குறிக்கப்பட்டது.

மஸ்க், தனது சகோதரர் கிம்பல் மஸ்க்கையும் அழைத்துக்கொண்டு சொந்த விமானத்தில் தீவில் வந்து இறங்கினார். அவருடன் வேறு சில நிபுணர்களும் வந்திருந்தனர். நவம்பர் 26ம் தேதி சிலர் காலை மூன்று மணிக்கு எல்லாம் எழுந்து ராக்கெட்டில் திரவ ஆக்சிஜனை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். எல்லாம் முடிந்தது. பாதுகாப்பிற்காக அனைவரும் ஏவுதளத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த குட்டித்தீவிற்கு இடம்பெயர்ந்தனர். முக்கிய ஆட்கள் ஏவுதளத்தைக் கண்காணிப்பதற்காக 26 மைல் தொலைவில் அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்தனர். ராணுவம் ராக்கெட்டை ஏவுவதற்கு ஆறு மணி நேரத்தை நிர்ணயித்து இருந்தது. இத்தனை நாட்கள் பாடுபட்டு உருவாக்கிய அந்த ராக்கெட் வானில் எழும்புவதைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. முதற்கட்டமாக ராக்கெட் மணிக்கு 6850 மைல் வேகத்தில் மேலே எழும்பும், பின் அங்கிருந்து இரண்டாவது கட்டம் தொடங்கி, மணிக்கு 17000 மைல் வேகத்தில் வானில் சீறிச் செல்லும். இன்னும் சில மணி நேரங்களில் இது நிகழப்போகிறது என்பதை நினைப்பதற்கே அவர்களுக்குச் சிலிர்ப்பாக இருந்தது.

எல்லாம் சரியாக இருந்தது. கடைசிக் கட்ட சோதனை. திரவ ஆக்சிஜன் நிரப்பட்டிருந்த களத்தின் வால்வு (Valve) சரியாக மூடப்படவில்லை. அதில் இருந்த திரவ ஆக்சிஜன் மணிக்கு 500 கேலன் அளவில் காற்றில் எரிந்துகொண்டிருந்தது. இதைக் கண்டறிந்து சரி செய்வதற்கு முன்பே, தேவைக்கும் அதிகமான எரிபொருள் நாசமாகிவிட்டது. இதனால் முதல் ஏவுதல் முயற்சி, தொடங்கும் தறுவாயில் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஹவாயில் இருந்து திரவ ஆக்சினை கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அதனால் அடுத்த முயற்சியை டிசம்பரில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த மாதத்தில் அதீதக் காற்று, மீண்டும் வால்வுகளில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில பிரச்னைகள் சேர்ந்து ஏவுதல் முயற்சியை மீண்டும் முறியடித்தன. தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *