ராக்கெட் ஏவுதலின் அடுத்த முயற்சியில் ராக்கெட் மின்சார விநியோக அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது. இதை உடனேயே சரி செய்ய வேண்டும் என எண்ணிய ஊழியர்கள் குழு, மின்தேக்கி வாங்குவதற்கு அமெரிக்காவிற்குப் பயணம் செய்தது. ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் அடைத்திருந்தன. இதனால் எந்தக் கடை திறந்திருக்கும் என விசாரித்து மினசோட்டாவிற்குப் பயணம் செய்து மின்தேக்கியை வாங்கி வந்து மறுநாளே சரி செய்தது. ஆனால் அதற்குள் அடுத்த பிரச்னை. இப்படியே ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டே இருந்தது. இந்தப் பிரச்னைகளைக் கையாள்வதற்கு அந்நிறுவன ஊழியர்கள் போராடினர். ஆனால் இதுவே அமெரிக்க மக்கள் மத்தியில் ஒரு விளம்பரமாக அமைந்தது. 300 பேர் குழு கொண்ட ராக்கெட் நிறுவனங்களாலேயே செய்ய முடியாத அசாத்தியமான வேலைகளை எல்லாம் வெறும் 30 பேர் கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் குழு இத்தனை சாதுரியமாகச் செய்து முடிக்கிறதே என ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.
இறுதியாக 2006ம் ஆண்டு மார்ச் மாதம், 24ம் தேதி எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்தன. ஃபால்கன் 1 அதன் ஏவுதளத்தில் கம்பீரமாக நின்றது. அதன் எஞ்ஜின்களில் இருந்து நெருப்பு ஜுவாலைகள் பீறிட்டு வெளிவந்தன. ராக்கெட் வானில் சீறிக்கொண்டு பறந்தது. கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மஸ்க்கிற்குக் கண்களில் நீர் தேங்கியது. இனி அவ்வளவுதான் எனச் சொல்லும் தறுவாயில், சரியாக ராக்கெட் விண்ணில் பறந்த 25வது நொடியில் ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. ராக்கெட்டின் மெர்லின் எஞ்ஜினில் திடீரெனத் தீப்பற்றியது, நேராக வானில் பறந்துகொண்டிருந்த ராக்கெட், சுழலத் தொடங்கியது. பின் திசை மாறி பூமியை நோக்கித் திரும்பியது. நேராக ஏவுதளத்தை நோக்கிக் கீழே வந்து விழுந்தது. ராக்கெட்டில் இருந்த செயற்கைக்கோள் அறை, ஏவுதளத்திலேயே விழுந்து சிதறியது. மற்ற பாகங்கள் உடைந்து அருகே இருந்த கடல் நீரில் மூழ்கின. சிலர் உடனேயே கடலுக்குள் குதித்து உடைந்த பாகங்களை மீட்க விரைந்தனர். அனைத்தையும் சேகரித்து வந்து அடுக்கினர்.
அங்கே மயான அமைதி நிலவியது. எல்லோருக்கும் உள்ளுக்குள் பயம். மஸ்க் என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? இத்தனைத் தடங்கல்களையும் தாண்டி இறுதியாக மேற்கொண்ட முயற்சியும் இப்படி வானில் பாதி வழியில் சிதறி விட்டதே? இனி ஸ்பேஸ்எக்ஸின் எதிர்காலம் என்ன? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சிந்திக்கத் தொடங்கினர். மஸ்க் எதுவும் சொல்லவில்லை. அங்கிருந்து நகர்ந்துவிட்டார். பிறகு ராக்கெட்டை முழுமையாக ஆய்வு செய்துவிட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், ‘இன்று நாம் பார்க்கும் ஒவ்வொரு ராக்கெட் நிறுவனமும் பெரிய சவால்களைச் சந்தித்துவிட்டுத்தான் இந்த நிலையை அடைந்திருக்கின்றன. நாசா பெகாசஸ் ராக்கெட்டை ஏவியபோது 9 முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதில் 5 முயற்சிகள்தான் வெற்றி அடைந்தன. அரியானே ராக்கெட்டை ஏவுவதற்கு 5ல் மூன்று முயற்சிகள்தான் சாத்தியமாகின. அட்லஸை ஏவுவதற்கு 20 முறை முயற்சித்தும் 9 முறை மட்டுமே வெற்றி கிட்டியது. சோயஸ் ராக்கெட்டுக்கு 21 முறை முயற்சி செய்து 9 முறைதான் வெற்றி கிடைத்துள்ளது. ராக்கெட் ஏவுவது அவ்வளவு சுலபம் அல்ல. நாம் அனுபவத்தைச் சேகரிக்கிறோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன். பிடிவாதமாக இருந்தவர்கள்தான் இன்று விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாம் நீண்ட ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு ஓடத் தொடங்கியுள்ளோம். இடையில் வரும் சிறிய தடைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். வெற்றியோ, தோல்வியோ நாம் இதனை ஒன்றாகச் சேர்ந்து செய்து முடிப்போம்’ எனக் குறிப்பிட்டார்.
மற்ற ஊழியர்களைச் சமாதானப்படுத்தினாலும், இந்த முறை நடந்த தவறுக்கு யார் காரணம் என்று கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதில் மஸ்க் உறுதியாக இருந்தார். இந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு ஓர் ஊழியரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. ராக்கெட்டை ஏவுவதற்கு முதல்நாள் அந்த ஊழியர்தான் எரிபொருள் குழாயை இறுக்கமாக மூடுவதற்குத் தவறிவிட்டதாகப் பலரும் தெரிவித்தனர். அதுதான் அந்த விபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஓர் அடிப்படை தவற்றைச் செய்ததன் மூலம் இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக மஸ்க்கும், சக ஊழியர்களும் அந்த ஊழியர் மீது மொத்தப் பழியையும் சுமத்தினர். அந்த ஊழியர் வேறு யாருமில்லை. மஸ்க்கின் நம்பிக்கை வாய்ந்த பொறியாளர்களில் ஒருவரான ஹோல்மேன்தான். தன்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஹோல்மேன் மறுத்தார். நேரடியாகத் தலைமையகத்திற்கே சென்று மஸ்க்கைச் சந்தித்தார். தான் எரிவாயு குழாயை மூடும் அச்சை சரியான விதத்தில்தான் இறுக்கி இருந்ததாகவும், அதனை நாசாவின் ஊழியர்களே மேற்பார்வையிட்டு உறுதி செய்ததாகவும் சொன்னார். ஆனால் மஸ்க் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் வாய்ச் சண்டை முற்றியது. இறுதியில், தான் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு ஹோல்மேன் அங்கேயே தனது பொறியாளர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார்.
பின், ஃபால்கன் 1-ன் உடைந்த பாகங்களை அலசியதில், ராக்கெட்டில் இருந்த எரிபொருள் குழாய் திறந்ததற்கு, அதை மூடப் பயன்படுத்தப்பட்ட திருகாணியில் சில மாதங்களாக ஏற்பட்ட உப்புக்காற்றின் உராய்வே காரணம் எனத் தெரிய வந்தது. அதீத உப்புக்காற்று அந்தத் திருகாணியைத் துருப்பிடிக்க வைத்தது. விளைவு எரிபொருள் குழாய் திறந்துகொண்டது. ராக்கெட்டின் ஒரு பாகம் முழுவதும் உப்பு பூத்திருந்தது. பொறியாளர்கள் ராக்கெட்டின் எடையைக் குறைப்பதற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு (Stainless Steel) பதில் அலுமினியப் பாகங்களைப் பயன்படுத்தி இருந்தனர். இங்கேதான் பிரச்னை ஏற்பட்டு இருந்தது. தவறு எங்கே நிகழ்ந்தது என உறுதியாகத் தெரிந்தவுடன், அங்கிருந்தவர்கள் மீண்டும் ஹோல்மேனைப் பணிக்கு அமர்த்துமாறு மஸ்க்கிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் மஸ்க் மறுத்துவிட்டார். தன் தவறை உணர்ந்து குற்றவுணர்ச்சியால் அவ்வாறு செய்தாரா அல்லது தன் பிடிவாதத்தால் தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்தாரா என்று யாருக்கும் தெரியவில்லை.
அடுத்த சில மாதங்களுக்கு ஃபால்கனை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிதாக அனைத்துப் பாகங்களும் உருவாக்கப்பட்டன. 6 மாதத்தில் மீண்டும் ராக்கெட்டை ஏவலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முறை பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஆலோசகராக இருந்த வோர்டன் தன்னுடைய அனுபவத்தின் மூலம் சில ஆலோசனைகளை வழங்கினார். ஏற்கெனவே அவர் முதல் இரண்டு முறையும் மஸ்கிற்குச் சில எச்சரிக்கைகளை வழங்கி இருந்தார். ஆனால் மஸ்க் அவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்தமுறை மஸ்கே நேரடியாகச் சென்று தன் பணியாளர்களை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
மீண்டும் ஃபால்கன் 1 ஏவப்படுவதற்குத் தயாராக இருந்தது. இந்தமுறை 2007ம் வருடம் மார்ச் 15ம் தேதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பின் மார்ச் 21ம் தேதி ஃபால்கன் விண்ணில் பறந்தது. ராக்கெட் வானில் எழும்பிய சில நிமிடங்களில் எல்லோருக்கும் ஒரு பதற்றம். முதல் மூன்று நிமிடத்தில் முதற்கட்ட செயல்பாடு தொடங்கி ராக்கெட்டின் ஒரு பாகம் பிரிந்து பூமியில் விழுந்தது. அங்கிருந்து இரண்டாவது கட்டத்தில் கெஸ்ட்ரல் எஞ்ஜின் ராக்கெட்டை மேலே செலுத்தி சுற்றுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. அங்கிருந்தவர்கள் பரவசத்தில் ஆரவாரம் செய்தனர். முல்லர் தன் இரு கரங்களையும் கூப்பியபடி பெருமிதத்துடன் நின்றார். அவருக்குப் பக்கத்தில் எலான் மஸ்க் அமைதியாக வைத்த கண் வாங்காமல் ராக்கெட்டையே கவனித்துக்கொண்டிருந்தார். பின் எழுந்து வந்து அனைவரையும் கட்டி அணைத்துக் கொண்டாடினார். ஆனால் முல்லர் கேமராவில் பார்த்தபோது ராக்கெட்டில் அதிர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார். அவர் அதை மஸ்க்கிடம் சொல்வதற்குள் ராக்கெட் உடைந்து மீண்டும் சுக்குநூறானது.
ஆனால் இந்தமுறை என்ன பிரச்னை என்று உடனே தெரிந்துவிட்டது. ஏவூர்த்தி உந்து எரிபொருளில் (Rocket Propellant) ஏற்பட்ட குலுங்கல், எஞ்ஜினில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பின் ஒரு கட்டத்தில் எஞ்ஜினில் காற்று புகுந்துவிடத் தீப்பற்றி எரிந்துவிட்டது. இந்தமுறையும் ஸ்பேஸ் எக்ஸிற்கு பெரிய அடி. ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள் கிட்டத்தட்ட 2 வருடங்களாக அமெரிக்காவிற்கும் ஹவாய்க்கும் இடையே பயணித்து வருகின்றனர். பேயாக இரவு பகல் பார்க்காமல் உழைத்திருந்தனர். வெற்றியின் இத்தனை நெருக்கத்திற்குச் சென்று ஒரு ராக்கெட் வெடிப்பது என்பது அவர்களது உணர்வுகளைச் சுக்குநூறாக உடைப்பதுபோல இருந்தது.
இந்தமுறை மஸ்க்கைப் பல நிறுவனங்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர். எலான் மஸ்க் என்றால் பேச்சு மட்டும்தான் செயல்பாடு இல்லை எனத் தூற்றத் தொடங்கினர். அவர் செய்த விளம்பரங்கள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பத் தொடங்கி இருந்தது. மற்றொருபுறம் ஸ்பேஸ்எக்ஸின் நிதி நிலைமை மோசமாகிக்கொண்டு வந்தது. மஸ்க்கின் நிதி அதள பாதாளத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் நிதி வீணாகி இருந்தது. இதேமுறை தொடர்ந்தால் ஸ்பேஸ்எக்ஸை இழுத்து மூடிவிட வேண்டியதுதான் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இத்தனை நடந்தும் மஸ்க் நிதிச்சுமை குறித்து தன் ஊழியர்களிடம் மூச்சுக் கூட விடவில்லை. அவர்கள் அந்த அழுத்தத்தை உணரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அந்தக் கவலையில் தங்களுடைய கவனத்தைச் சிதைத்துவிடக்கூடாது எனக் கருதினார். அவர் ஒவ்வொருமுறை ஊழியர்களைச் சந்திக்கும்போது வெற்றிபெறுவதைக் குறித்து மட்டுமே இலக்காக வைத்துப் பேசிக்கொண்டிருந்தார். ஸ்பேஸ்எக்ஸின் மூன்றாவது முயற்சியும் சொதப்பியவுடன் தன் ஊழியர்களிடம் ஒன்றை மட்டும் அவர் சொன்னார். ‘இன்னும் இரண்டு முறை முயற்சி செய்வோம். அப்போதும் சரிவரவில்லை என்றால் ஃபால்கன் 1 திட்டத்தை மூட்டைக் கட்டிவிட்டு வேறு ராக்கெட்டைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்குவோம். அதற்கு மேல் நாம் நமது எண்ணத்தை இதில் செலுத்த வேண்டாம்’ என்றார்.
ஸ்பேஸ்எக்ஸைத் தொடங்கி மஸ்க் நிர்ணயித்த கால இலக்குடன் ஒப்பிடும்போது ஐந்து வருடங்கள் கழிந்திருந்தது. சரியாக 2008ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, மாலை 4.15 மணிக்கு நான்காவது முயற்சியில் ஃபால்கன் 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தமுறை எல்லாம் கச்சிதமாக இருந்தது. ராக்கெட்டின் ஒவ்வொரு பாகமும் சரியான ஒத்திசைவுடன் இயங்கின. திட்டமிட்டபடி ஒவ்வொரு செயல்பாடும் பரிபூரணமாக இருந்தன. இறுதியாக ஃபால்கன் 1-ன் செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் பகுதி, துல்லியமாகப் பூமியின் சுற்றுப்பாதையைச் சென்று அடைந்தது. இந்தமுறை யாரும் எதையும் கொண்டாடவில்லை. ஆனால் எல்லோருடைய மனமும் நிறைந்திருந்தது. ஃபால்கன் 1 வெற்றி பெற்றதன் மூலம் ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கிய முதல் திரவ எரிபொருள் ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்தது என்ற பெருமையை ஸ்பேஸ்எக்ஸ் பெற்றது.
ஃபால்கன் 1 திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்தத் தோல்விகளை, மன உளைச்சல்களை மஸ்க் சந்தித்து இருந்தாலும், இது எதுவும் அவரைத் தளரச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. இத்தனை இடையூறுகளிலும் தன்னுடைய திறமை குறித்தோ, எதிர்காலத் திட்டம் குறித்தோ அவருக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை. எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் வென்று காட்டிவிட வேண்டும் என்ற அவரது மனதிடம் ஸ்பேஸ்எக்ஸின் முதல் வெற்றியை உறுதி செய்தது. எல்லாம் முடிந்தபிறகு சாவகாசமாக வோர்டனை தீவில் சென்று சந்தித்த மஸ்க், செவ்வாய் கிரகத்தில் குடியேறும் தன்னுடைய திட்டத்தை அவரிடம் விவரிக்கத் தொடங்கினார்.
(தொடரும்)