Skip to content
Home » எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

ஜே.பி. ஸ்ட்ராபெல்

இடது கன்னத்தில் இரண்டு இன்ச் தழும்புடன் காட்சியளிக்கும் அந்த நபரின் பெயர் ஜே.பி. ஸ்ட்ராபெல். பரம சாது. அவருடைய முகத்தில் இருக்கும் தழும்பு அடிதடி சண்டையின்போது வந்தது அல்ல. பள்ளியில் அறிவியல் வகுப்பு ஒன்றில் தவறான இரண்டு ரசாயனங்களைக் கண்ணாடிக் குடுவையில் கலந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தோன்றியது.

சிறுவயதில் இருந்தே ஸ்ட்ராபெல்லுக்கு ரசாயனங்கள், இயந்திரங்கள் மீது ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் கீழ் அறையில் எதையாவது உடைத்துக்கொண்டிருப்பதுதான் அவருடைய பொழுதுபோக்கு. பதிமூன்று வயதாக இருக்கும்போது பழைய கோல்ஃப் வண்டி ஒன்று குப்பையில் கிடப்பதை ஸ்ட்ராபெல் கண்டார். வீட்டிற்குத் தூக்கி வந்து, அதில் உள்ள மின்சார மோட்டார்களை நோண்டி எடுத்து, ஏதேதோ செய்து ஓட வைத்துவிட்டார். அப்போதிலிருந்து அவருக்கு வாகனங்கள் மீதான ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.

இயந்திரங்கள் மேல் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1994ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மாணவராகச் சேர்ந்தார். ஆனால் இயற்பியலைப் பாடத்திட்டம் அணுகிய முறையில் அவருக்கு விருப்பம் இல்லை. காரணம், வகுப்பில் இயற்பியல் முழுவதும் கோட்பாடு ரீதியாகவே அவருக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஸ்ட்ராபெல்லுக்கோ களத்திற்குச் சென்று இயந்திரங்களுடன் விளையாட வேண்டும். புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும். வெறும் மதிப்பெண் வாங்குவதற்காகச் சூத்திரங்களை மனப்பாடம் செய்வதில் அவருக்கு மனம் செல்லவில்லை.

கணினி, மின்பொறியியல், ஆற்றல் ஆகிய துறைகளில் அவருக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. மென்பொருளையும், மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியுமா என அவர் சிந்திக்கத் தொடங்கினார். ஆனால் ஸ்ட்ராபெல்லின் காலகட்டத்தில் அவர் விரும்பியதுபோன்ற தொழில்நுட்பம் பரவலாக இல்லை. ஏதோ ஒரு சில நிறுவனங்கள் சூரிய ஆற்றலையும் மின்சார வாகனங்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன. அதையும் சரியாகக் கையாளத்தெரியாமல் திணறி வந்தன. ஸ்ட்ராபெல் இதுபோன்ற நிறுவனங்களைக் கண்டுகொண்டு அவர்களிடம் தன்னுடைய யோசனைகளைச் சொல்வார். அவர்களுடைய வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கே சென்று தன்னுடைய திட்டங்களை விவரிப்பார். ஆனால் இவர் பேசும் எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது.

ஒருமுறை போர்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று சேதமடைந்த நிலையில் கிடைத்தது. அதனை 1600 டாலர்கள் கொடுத்து வீட்டிற்கு வாங்கி வந்தார். பின் அதைச் சரி செய்து மின்சாரத்தில் இயங்கும் காராக மாற்றினார். அந்த காரில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்கான கட்டுப்பாட்டுக் கருவிகள், சார்ஜர், மென்பொருள் ஆகியவற்றைப் பகுதி பகுதியாக அவரே உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த கார் அரை கிலோமீட்டர் தூரத்தை வெறும் 17.28 நொடியில் கடந்து, உலகின் மிக வேகமான மின்சாரக் கார் என்ற சாதனையைப் படைத்தது. பின்பு அந்தக் காரை மேலும் மெருகேற்றி, அதில் 643 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து, போக்குவரத்திற்கும் பயன்படுத்தலாம் என நிரூபித்தார்.

2002ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தை முடித்த அவர், ரோஸென் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நிறுவனம் உலகின் முதல் மின்சார – எரிவாயு கலப்பு இயந்திர வாகனங்களை உருவாக்கிய முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அங்கே அவருக்குத் தலைமை அதிகாரியாக இருந்தவர், அந்நிறுவனத்தின் நிறுவனர் ஹாரல்டு ரோஸென். ரோஸென், ஏற்கெனவே புவிநிலை துணைக்கோளை (Geo Stationary Satellite) முதன்முதலில் உருவாக்கியதற்குப் பெயர்போனவர். அத்துடன் மின்சார ஆற்றலில் இயங்கும் விமானங்களையும் தயாரித்தவர். அதனால் ரோஸென் மீது ஸ்ட்ராபெல்லுக்கு இயல்பாகவே ஒரு மரியாதை இருந்தது. கிட்டத்தட்ட அவரைத் தனது குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றத் தொடங்கினார்.

ஆர்வம் மிகுதி காரணமாக ரோஸென் நிறுவனத்தில் ஊழியராக இருந்ததோடு மட்டும் இல்லாமல், புதிதாக உருவாகி வரும் வாகன நிறுவனங்களுக்கும் மின்னணுவியல்துறை குறித்த ஆலோசகராகப் பகுதி நேரமாக ஸ்ட்ராபெல் பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில்தான் அவரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சந்திக்க வந்தனர்.

அந்த மாணவர்கள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியாளராகப் பயில்பவர்கள். அவர்களுக்கு ஏற்கெனவே ஸ்ட்ராபெல்லுடன் பழக்கம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அந்த மாணவர்கள் சூரிய ஆற்றலில் இயங்கும் கார் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அதற்காக அவர் விஷ வாயுக்களை எல்லாம் பயன்படுத்திய நிலையில், அவர்களுடைய கார் தயாரிப்புக்குப் பல்கலைக்கழகம் தடை விதித்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொறியாளர்களுக்கு ஸ்ட்ராபெல் ஆதரவுக் கரம் நீட்டி சூரிய ஆற்றலில் இயங்கும் வாகனம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். அந்த வாகனத்தை வைத்து அவர்கள் பல பந்தயங்களில் பரிசுகளை வென்று குவித்தனர். அந்த மாணவர்கள்தான் இப்போது ஸ்ட்ராபெல்லைப் பார்ப்பதற்கு 3500 கிலோ மீட்டர்கள் பயணித்து சிகாகோவில் இருந்து லாஸ் ஏஞ்சலெஸிற்கு வந்திருந்தனர்.

அவர்கள் ஸ்ட்ராபெல்லின் வீட்டிலேயே சில நாட்கள் தங்க நேர்ந்தது. இரவு வேலையை முடித்துவிட்டு திரும்பும் அவர், அங்கிருக்கும் மாணவர்களுடன் விடிய விடிய வாகனங்களைக் குறித்து உரையாடுவார். அப்போது ஒருமுறை அவர்கள் லித்தியம் அயான் பேட்டரிகளை மின்சார வாகனங்களில் பயன்படுத்துவது குறித்துப் பேசி வந்தனர். விளையாட்டாகப் பேசிய அவர்கள், விடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஆனால் அவர்கள் பேசிய விஷயம் ஸ்ட்ராபெல்லின் ஆழ்மனதில் நிரந்தரமாகத் தங்கிப்போனது.

அப்போது விற்பனையில் இருந்த லேப்டாப்கள் 18650 என்ற ஒருவகை லித்தியம் பேட்டரிகளைப் பயன்படுத்தி வந்தன. அவை பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட நாம் வீடுகளில் பயன்படுத்தும் AA பேட்டரிகளைப்போல இருந்தன. அந்த லித்தியம் பேட்டரிகளை ஆயிரக்கணக்கில் எடுத்து, ஒன்றாக இணைத்து, வாகனங்களில் பயன்படுத்தினால் என்ன என்று ஸ்ட்ராபெல்லுக்குத் தோன்றியது. கணக்கிட்டுப் பார்த்ததில் இந்த பேட்டரிகளைப் பயன்படுத்தி சில ஆயிரம் கிலோமீட்டர்களுக்காவது கார்களில் பயணிக்க முடியும் என அவர் கணித்தார். இதுகுறித்த செயல்திட்டம் ஒன்றை உருவாக்கினார்.

ஆனால் இந்த வாகனத்தைத் தயாரிப்பதற்காகத் தனக்கு உதவ யார் முன்வருவார்கள் என அவருக்குத் தயக்கமாக இருந்தது. நாம் ஏன் ஸ்டான்ஃபோர்ட் மாணவர்களிடமே உதவி கேட்கக்கூடாது என அவருக்குத் தோன்றியது. நேராக விமானத்தைப் பிடித்து பாலோ ஆல்டோ சென்றார். பின் விமான நிலையத்தில் இருந்து சைக்கிள் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத்தை அடைந்தார். அங்கே அந்த மாணவர்களைச் சந்தித்து தனது லித்தியம் பேட்டரி கார் திட்டத்தை விவரித்தார்.

ஸ்ட்ராபெல்லின் திட்டம் காற்றியங்கு மின்சார வாகனத்தை (Aerodynamic Vehicle) உருவாக்குவதாக இருந்தது. அதாவது லித்தியம் பேட்டரியால் இயங்கும் அந்த வாகனத்தை இயக்குவதற்கு அதிக ஆற்றல் தேவையில்லை. சிறிய அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தினால் போதும், காற்றின் உதவியைப் பயன்படுத்தி கார் வேகமாக இயங்கும் வகையில் அந்தக் காரின் புற வடிவமைப்பு இருந்தது. இதனை வைத்து அவர்கள் கார் பந்தயத்தில்கூடக் கலந்துகொள்ள முடியும் என்று ஆசை காட்டினார்.

இந்த மின்சார கார் திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு சிக்கல் இருந்தது. இந்தக் காரை உருவாக்க நிறையப் பணம் வேண்டும். அது எங்களிடம் இல்லை. நீங்கள் பணத்தை மட்டும் ஏற்பாடு செய்தால் இந்தத் திட்டத்தில் நாங்கள் இணைந்து உங்களுக்கு உதவி செய்கிறோம் எனச் சொல்லிவிட்டனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஸ்ட்ராபெல், அடுத்ததாக எப்படியாவது பணத்தைப் புரட்டிவிட வேண்டும் என யோசிக்கத் தொடங்கினார். இதற்கான ஒரு வழியையும் கண்டறிந்த அவர், கார் குறித்த தனது திட்டத்தை ஒரு காகிதத்தில் அச்சடித்துப் போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் விநியோகித்தார்.

ஊரில் எங்காவது வணிகக் கண்காட்சிகள் நடைபெற்றால் அங்கு முதல் ஆளாகச் சென்று நோட்டீஸ் வழங்குவார். எந்தெந்தக் கார் நிறுவனங்கள் எல்லாம் லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கின்றன எனப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இ-மெயில் மூலமும் தன் திட்டத்தை விளக்கினார். அவர் வேலை பார்த்த நிறுவனத்திடம்கூட ஸ்ட்ராபெல் தன் யோசனையைச் சொன்னார். ஆனால் யாருமே அவரது திட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை. அவர் சந்தித்த முதலீட்டாளர்கள் எல்லாம் சொல்லிவைத்ததுபோல அந்த யோசனையை நிராகரித்தனர்.

மாதங்கள் கழிந்தன. பலரைச் சந்தித்து முறையிட்டும் லித்தியம் பேட்டரி கார் தயாரிப்புக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இப்படியே நாட்கள் உருண்டோடிய நிலையில் சரியாக 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எதேச்சையாக எலான் மஸ்க்கை ஸ்ட்ராபெல் சந்தித்தார்.

ஸ்ட்ராபெல் வேலை பார்த்து வந்த ரோஸென் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹாரல்ட் ரோஸென், தனது புதிய மின்சார விமான வடிவமைப்பு குறித்துப் பேசுவதற்காக எலான் மஸ்க்கைச் சந்திக்கச் சென்றார். அவருடன் துணைக்கு இருக்கட்டுமே என ஸ்ட்ராபெல்லையும் அழைத்துச் சென்றிருந்தார். அவர்களுடைய சந்திப்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அருகே உள்ள உணவகத்தில் நடைபெற்றது.

ஹாரல்ட் ரோஸெனும் எலான் மஸ்க்கும் மணிக்கணக்கில் மின்சார விமானங்கள் குறித்துப் பேசினர். ஆனாலும் இறுதிவரையிலும் மஸ்க்கிற்கு அந்தத் திட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. மிகப்பெரிய ஆளுமையைச் சங்கடத்துடன் அனுப்ப வேண்டாமே என்பதற்காக உங்களிடம் வேறு ஏதாவது ஒரு திட்டம் இருக்கிறதா என மஸ்க் பேச்சுக்குக் கேட்டார்.

சட்டென்று எழுந்து நின்ற ஸ்ட்ராபெல் தனது மின்சாரக் கார் திட்டத்தை அவரிடம் விவரித்தார். அவர் பேசியது சில நிமிடங்கள்தான். ஒரே ஒரு வாய்ப்புதான். கிடைத்த நேரத்தில் தன் மனதில் இருந்த மொத்தத் திட்டத்தையும் மஸ்க்கிடம் ஒப்பித்துவிட்டார். எப்படியும் கிடைக்காது என்ற எண்ணத்தில்தான் ஸ்ட்ராபெல் இருந்தார். ஆனால் கேட்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று பலரால் நிராகரிக்கப்பட்ட அந்தத் திட்டம் எலான் மஸ்க்கிற்கு ரொம்பவே பிடித்துப்போனது. மஸ்க்கும் தனது கல்லூரி காலக்கட்டத்தில் இருந்தே மின்சார வாகனங்கள் தயாரிப்பது குறித்துச் சிந்தித்து வந்தவர் என ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? அவர் தன்னுடைய மின்சார வாகனங்களை இயக்குவதற்கு அல்ட்ரா கெபாசிட்டர்களைப் பயன்படுத்தலாம் எனக் கருதிவந்த நிலையில், ஸ்ட்ராபெல் முன்வைத்த லித்தியம் பேட்டரி தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியக்கூறுகள் மஸ்க்கைக் கவர்ந்தன. ‘ஏன் ஸ்ட்ராபெல்லின் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது?’ என அவருக்குத் தோன்றியது. ‘நிச்சயம் நான் முதலீடு செய்கிறேன்’ என ஒன்றை வார்த்தையில் தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.

உண்மையில் ஸ்ட்ராபெல்லே இதை நினைத்துப் பார்க்கவில்லை. பல முதலீட்டாளர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் மஸ்க்கிற்கு எப்படிப் பிடித்துப்போனது என, ஆச்சரியத்தில் அவருக்குப் பேச்சே வரவில்லை. இந்தத் திட்டத்திற்காக உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என மஸ்க் அவரிடம் வினவியபோது, என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்த அவர், ஒரு லட்சம் டாலர்கள் என பதிலளித்தார். அதற்கு மஸ்க், இப்போதே 10,000 டாலர்களைத் தருகிறேன். உங்கள் செயல்திட்டம் முழுமை அடைந்தவுடன் மீதத்தைத் தருவேன் என ஒப்புக்கொண்டார். அந்தக் கணத்தில் மஸ்க்கிற்கும் ஸ்ட்ராபெல்லுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று நிறைவேறியது.

ஒரே ஒரு வாகனத்தை உருவாக்குவதற்கான பைத்தியக்காரத் திட்டத்துடன் நிதி வேண்டி வந்த ஸ்ட்ராபெல்லிடம், ‘உன்னுடைய திட்டத்தை வைத்து உலகையே மாற்றலாம் வா’ என அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் மஸ்க்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *