Skip to content
Home » எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

Ze'ev Drori

இயக்குநர்கள் குழு, எபர்ஹார்ட் தலைமைச் செயலதிகாரியாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என முடிவு செய்தது. அவருடைய நாட்கள் மறைமுகமாக எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. மஸ்க் ஒவ்வொரு துறை தலைவர்களையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர்களும் எபர்ஹார்ட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தனர்.

தொழில்நுட்ப ரீதியாக எபர்ஹார்ட் ஒரு புத்தி ஜீவிதான். டெஸ்லா பொறியாளர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஹீரோ. ஆனால், பிற துறைகளில் அவருக்குப் போதுமான அனுபவம் இல்லாமல் இருந்தது. குறிப்பாக மஸ்கைப் போல அவருக்கு விலையை அடித்துப்பேசி வாங்கும் திறன் இல்லை. வேண்டியதை அடம்பிடித்து சாதிக்கத் தெரியவில்லை. காரின் தயாரிப்பு விலை, டிரான்ஸ்மிஷன் பிரச்சனைகள், விநியோக சங்கிலியில் ஏற்பட்ட கோளாறு ஆகியவற்றை எப்படிக் கையாள வேண்டும் என அவருக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. இந்தத் தேதியில் கார்களை விநியோகம் செய்வோம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்குகள் தவறிக்கொண்டிருந்தன. டெஸ்லாவை நம்பி பைத்தியக்காரத்தனமாகப் பணத்தைக் கொட்டிய கோடீஸ்வர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தனர்.

அவ்வளவுதான். இதற்கு மேல் தாமதிக்க முடியாது. கூடாது. அவரைத் தவிர அங்குள்ள எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. டெஸ்லாவைத் தொடக்கிய எபர்ஹார்ட், அதை வழிநடத்தும் தகுதியை இழந்துவிட்டார் என்று. மஸ்கைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அவருக்கு எபர்ஹார்ட் மீது விரோதமில்லை. காரின் வடிவமைப்பிற்காக இருவரும் பல ஆண்டுகளாகச் சண்டையிட்டு வந்தாலும், பிற விஷயங்களைப் பொறுத்தவரை ஒருமித்த கருத்துக்களையே கொண்டிருந்தனர். இருவரும் பேட்டரி தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரே விதமான பார்வையைப் பகிர்ந்தனர். மின்சாரக் கார்களால் உலகில் ஏற்படப்போகும் மாற்றங்களை நோக்கி கனவு கண்டனர். ஆனாலும், என்னதான் ஒத்த லட்சியம் கொண்டவராக இருந்தாலும் நிர்வாகத்தில் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய இயலாத எபர்ஹார்ட்டின் அப்பாவித்தனத்தை மஸ்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரோட்ஸ்டருக்காக எபர்ஹார்ட் செய்த செலவுகள்தான் அவருக்குத் தேதிக் குறித்தன.

இயக்குநர்கள் குழு கூடியது. பாகங்கள் வாங்குவதற்கான செலவில் தவறான கணக்குகளைக் காட்டி, எபர்ஹார்ட் மோசடி செய்துவிட்டதாக மஸ்க் குற்றம்சாட்டினார். அதேபோல இந்த மாதிரியான ஓர் இக்கட்டான சூழலின் தீவிரத்தன்மையை இயக்குநர்கள் குழுவிடம் அவர் ஏற்கெனவே தெரியப்படுத்தாமல் மறைத்துவிட்டார் என்பதும் சிலருடைய குற்றச்சாட்டாக இருந்தது. இயக்குநர்கள் குழு முடிவு எடுத்தது. மஸ்கிடமும் அதைத் தெரிவித்தது.

செய்தி எபர்ஹார்டை எட்டியபோது அவர் மோட்டார் பிரஸ் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் வழக்கம்போல உத்வேக உரைகளை ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மஸ்கிடம் இருந்து அழைப்பு வந்தது. இவர் ஏன் இந்த நேரத்தில் அழைக்கிறார் என்று உரையைப் பாதியில் நிறுத்திவிட்டு போனை எடுத்துப் பேசினார்.

வெறும் சில நிமிடங்கள்தான் அந்த உரையாடல் நிகழ்ந்தது. அதில் மஸ்க் எபர்ஹார்டிடம் அந்த செய்தியைச் சொன்னார்.

‘எபர்ஹார்ட், உங்களைத் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து தூக்கிவிட்டோம்’

ஆகஸ்டு 2007 அன்று இயக்குநர்கள் குழு எபர்ஹார்ட்டை டெஸ்லாவின் தலைமைச் செயலதிகாரி பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நியமித்தது. இதன்பின் சில மாதங்கள் கழிந்தன. ஆனாலும் எபர்ஹார்ட்டால் தனக்கு ஏற்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு டெஸ்லா ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அநீதி இழைத்துவிட்டதாகக் கருதினார். அலுவலகத்தில் அனைவரிடம் சிடுசிடுவென இருந்தார். மஸ்க்குடன் எப்போதும் வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. ஊழியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் எபர்ஹார்ட்டின் பக்கம் நிற்பதா, மஸ்க்கின் பக்கம் நிற்பதா என்ற இக்கட்டான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

டெஸ்லா நிர்வாகத்துக்குள் நடந்த குழாயடிச் சண்டை கட்டுக்கடங்காமல் போகவே, இறுதியாக டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறப் போவதாக எபர்ஹார்ட் அறிவித்தார். இதைப் பார்த்த டெஸ்லா நிர்வாகம், அவருக்கு ஆலோசனைக் குழுவின் தலைமைப் பொறுப்பை வழங்கியது. ஆனால், அதையும் அவர் மறுத்துவிட்டார்.

‘இனி டெஸ்லா மோட்டாருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் இயக்குநர்கள் குழுவிலும் இல்லை. சாதாரண ஊழியனாகவும் இல்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

எபர்ஹார்ட் கிளம்பியவுடனேயே எலான் மஸ்க் செய்தித்தாள் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். ‘எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. டெஸ்லாவில் நிர்வாகரீதியாகச் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைச் சரி செய்ய வேண்டும். அதற்கான தீர்வை எட்டுவதற்கு எபர்ஹார்ட் உதவுவார் என இயக்குநர்கள் குழு கருதினால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எபர்ஹார்ட்டை அழைக்கலாம்’ என்றார்.

ஆனால், எபர்ஹார்ட்டோ இனி டெஸ்லாவுக்கு மீண்டும் திரும்ப விருப்பம் இல்லை எனக் கறாராகச் சொல்லிவிட்டார்.

பிரச்னை சுமுகமாக முடிந்ததுபோலத் தோன்றினாலும், மஸ்க்குக்கும் எபர்ஹார்ட்டுக்கும் இடையேயான போர் இன்னமும் கூட நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. டெஸ்லா கார்களில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி எபர்ஹார்ட் அறிக்கை வெளியிடுவதும். அதற்கு மஸ்க் ஏடாக்கூடமாகப் பதிலளிப்பதும் இன்றும் தொடர்கிறது. டெஸ்லாவில் இருந்து வெளியேறிய புதிதில், அந்நிறுவனத்தின் வரலாற்றில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கிவிட்டு, தானே அந்த நிறுவனத்தை உருவாக்கியது போன்ற பிம்பத்தை மஸ்க் கட்டமைக்க நினைக்கிறார் என்று எபர்ஹார்ட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சில ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில், எபர்ஹார்டுக்குத் துணை நிறுவனர் என்ற உரிமையை நீதிமன்றம் பெற்றுத்தந்தது. இதேபோல எலான் மஸ்க் மீது அவதூறு வழக்குகள், மோசடி வழக்குகள் எனப் பல வழக்குகளை எபர்ஹார்ட் தொடர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டில்கூட சீனாவில் டெஸ்லா கார்களின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தால் விபத்து ஒன்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்து இருந்த எபர்ஹார்ட், டெஸ்லா கார்களின் தரத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கும் மஸ்க் சலிக்காமல் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறார். இத்தனைக்கும் எபர்ஹார்ட் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையிலேயே வெளியேறிவிட்டார்.

2007ஆம் ஆண்டு டெஸ்லாவுக்கு மோசமான ஆண்டாக இருந்தது. டெஸ்லாவின் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. ரோட்ஸ்டரின் தயாரிப்பு ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தினமும் ஒவ்வொரு சிக்கல்களாக முளைத்த வண்ணம் இருந்தன. முதலில், ரோட்ஸ்டரில் கார்பன் ஃபைபர் உடலை உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், கார்பன் ஃபைபரில் பெயிண்ட் அடிக்கும் பணி சிரமமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அடுத்ததாகப் பேட்டரி பிரிவில் பிரச்னைகள் எழுந்தன. ரோட்ஸ்டரின் மோட்டார்களிலும் அவ்வப்போது மின்கசிவு ஏற்பட்டுத் தொல்லை கொடுத்தது. டிரான்ஸ்மிஷன் பணிகளில் இரட்டை டிரான்ஸ்மிஷன் முயற்சிகள் வேலைக்கு ஆகவில்லை. டெஸ்லா எதிர்பார்த்ததைப்போல பூஜ்ஜியத்தில் இருந்து 60 மைல்களை எட்டுவதற்குள் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்பட்டன. இதனால் அந்தக் காரின் எடையைக் குறைக்கும் வேலை நடைபெற்றது. இறுதியில் ரோட்ஸ்டரின் வடிவமைப்பையே மாற்றும் நிலைக்கே நிலைமை சென்றுவிட்டது. ஊழியர்களுக்கோ வேலைப்பளு கூடிக்கொண்டே இருந்தது.

எபர்ஹார்டின் நீக்கத்துக்குப் பிறகு மைக்கேல் மார்க் என்பவர் இடைக்காலத் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டார். நிர்வாகத்தில் நல்ல அனுபவம் இருந்ததாலும், எலெக்ட்ரானிக் நிறுவனங்களிடையே நல்ல உறவுகளை மேற்கொண்டதாலும் அவரைத் தலைமைச் செயலதிகாரியாக இயக்குநர்கள் குழு நியமித்தது. அவரும் டெஸ்லாவின் பிரச்னைகளைச் சரி செய்யப் பல நிறுவனங்களை அணுகி உதவி கோரி வந்தார். மறுபுறம் அலுவலகத்தில் கடும் கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தொடங்கினார். எல்லோரும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும். யாரும் யாருடனும் பேசக் கூடாது. குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்பட்ட வேலையை வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் முடித்திருக்க வேண்டும் என்பதுபோன்ற கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதைத்தவிர நூறு நாள் திட்டம், காலாண்டு திட்டம் என வேலைகளைப் பிரித்து பல்வேறு இலக்குகளை நிர்ணயித்தார். பல விதங்களில் ஊழியர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நெருக்கடியைக் கொடுத்தாலும், உள்ளுக்குள் இருந்த அரசியல் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகி வேலை நடைபெறத் தொடங்கியது.

முதலில் பேட்டரி பிரச்னைகள் தீர்ந்தன. பேட்டரிகள் தயாரிப்பில் தாய்லாந்து நிறுவனத்தை நம்பி இருப்பதை விட நாமே உள்ளுக்குள் அவற்றை உற்பத்தி செய்யலாம் என்று டெஸ்லா கருதியது. டெஸ்லா தொழிற்சாலைகளில் சொந்தமாகவே பேட்டரிகளை உருவாக்க உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. இப்படியாக அந்நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி தொடர்பான பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகின. ஆனால் டெஸ்லாவின் எதிர்காலத் திட்டம் குறித்த மார்க்கின் கருத்து, மஸ்க்கின் கருத்தில் இருந்து விலகத் தொடங்கியவுடன் மீண்டும் பிரச்னை வெடித்தது.

முதலில் சாதாரண ஒரு விஷயத்தில் இருந்துதான் பிரச்னை தொடங்கியது. டெஸ்லாவில் ஸ்மார்ட் மின்சாரக் காரை உருவாக்க வேண்டும் என்பது மஸ்க்கின் விருப்பம். அதற்காக ஸ்ட்ராபெல்லுடன் இணைந்து சிறிய அளவு ஸ்மார்ட் கார் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அலுவலக நேரம்போக மற்ற நேரங்களில் அந்தக் காரின் வடிவமைப்பு வேலைகள் நடைபெற்றன. வேலை முடிந்தவுடன் அந்த ஸ்மார்ட் கார் அங்கேயே ஏதாவது ஓரிடத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இப்படி ஒரு விஷயம் நடப்பதே மார்க்குக்குத் தெரியாமல் இருந்தது. இதுதான் பிரச்னையாக உருமாறியது. ஒருநாள் மார்க் நிறுவனத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அந்தக் கார் அவர் கண்ணில் பட்டது. இப்படி ஒரு திட்டமே டெஸ்லாவிடம் இல்லையே என யோசித்த அவர், யார் இதைச் செய்தது என்று ஊழியர்களிடம் கேட்டார். எல்லோரும், மஸ்க்தான் இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்பவர் என்று சொல்ல மார்க்குக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு முதலீட்டாளர் தயாரிப்பில் தலையிடலாமா என்று கண்டித்த அவர், எல்லோருக்கும் நேராகவே ‘இந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி யார் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்’ என எச்சரித்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் மூலம்தான் மஸ்க்குக்கும் மார்க்குக்கும் மோதல் தொடங்கியது.

இதைத் தவிர டெஸ்லா தொடங்கப்பட்ட நோக்கத்தையே மார்க் மாற்றத் தொடங்கியதும் மோதல் பூதாகரமாகியது. மார்க்கைப் பொறுத்தவரை டெஸ்லா ஒரு தோல்வி கண்ட ஸ்டார்ட்அப் நிறுவனம். அதை எந்த அளவுக்கு முன்னேற்ற முடியுமோ முன்னேற்றிவிட்டு, வேறு ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்திடம் விற்றுவிடலாம் என்பதுதான் திட்டம். மேலும் அவருக்கு உலக அளவில் விநியோகச் சங்கிலி அமைப்பு, உற்பத்தித் துறையில் இருந்த அனுபவம், டெஸ்லாவின் செயல்பாடுகள் மீது அவநம்பிக்கையையே ஏற்படுத்தியது. ஒரு காரைக்கூட உருப்படியாக உருவாக்கத் தெரியாத நிறுவனத்தை நம்பி அதிகம் நிதியைச் செலவிட வேண்டாம். டெஸ்லாவைப் பொறுத்தவரை ஏகப்பட்ட செலவுகள் ஆகின்றன. சொன்ன தேதிக்குக் கார்களை விநியோகிப்பதில்லை என்று மக்கள் மத்தியில் கெட்ட பெயரும் இருக்கிறது. இதனால் அந்த நிறுவனம் வீழ்ச்சியைச் சந்திப்பது உறுதி. அதற்குள் ஒரு நல்ல விலைக்கு டெஸ்லாவை விற்றுவிடுவதுதான் நல்லது என நினைத்தார்.

நம்முடைய திட்டம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்றாலும், நஷ்டத்தையாவது தராமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார். மார்க் நினைத்தது நியாயமாகவே இருந்தது. டெஸ்லாவை நம்பி இருந்த எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில்தான் அவர் கவனமாக இருந்தார். ஆனால் மஸ்க்குக்கு டெஸ்லாவைப் பழுது பார்த்துப் பெரிய கைகளுக்குத் தள்ளிவிடுவதில் விருப்பமில்லை. மக்களின் மின்சாரக் கார்கள் குறித்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதால்தான் அவர் வாகனத்துறையில் முதலீடு செய்வதற்கே முன்வந்தார். இப்போது இந்த நிறுவனத்தை வேறு கைகளுக்கு மாற்றுவதைக் குறித்துச் சிந்திப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. மார்க்கின் செயலைக் கோழைத்தனம் என்று விமர்சித்தார் மஸ்க்.

‘டெஸ்லாவில் நிறைய பிரச்னைகள் இருக்கலாம். எல்லாம் தாமதமாக நடக்கலாம். நிதி சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இந்த நிறுவனத்தை விற்பதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு இந்த நிறுவனத்திடம் இருக்கும் உரிமையையும் நான் இழக்க விரும்பவில்லை. என் விருப்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களையும் மாற்றுவேன்’ என்று சூளுரைத்தார். அவர் சொன்னதைப் போலவே செய்தும் காட்டினார்.

2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மைக்கேல் தலைமைச் செயலதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஜீவ் ட்ரோரி (Ze’ev Drori) என்பவர் புதிய தலைமைச் செயலதிகாரியானார்.

ட்ரோரி, சிலிகான் பள்ளத்தாக்கில் கணினி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மைக்ரோ டிவைஸ் என்ற பெரிய நிறுவனத்திடம் விற்றவர். ஆனால் வாகனத்துறையில் அனுபவம் இல்லாதவர். மஸ்க்கின் அதிகாரத்தால் மட்டுமே அவர் நியமிக்கப்பட்டார். உண்மையில் மஸ்க்கின் முதல் தேர்வு ட்ரோரி அல்ல. முதல் தேர்வாக இருந்தவர் ஒரு முக்கிய ஆளுமை. அவரது பெயரை மஸ்க் வெளியிட விரும்பவில்லை. அவர் நிச்சயம் டெஸ்லாவை உயர்த்திவிடுவார் என்று மஸ்க் நம்பினார். ஆனால், அந்த ஆளுமைக்கோ, தான் இருக்கும் இடத்தில் இருந்து டெஸ்லா அமைந்திருக்கும் கலிஃபோர்னியாவுக்கு வருவதே பிடிக்கவில்லை. இந்த ஒரே காரணத்தினால் அவர் மஸ்க்கின் கோரிக்கையையும் நிராகரித்தார். அதனால் மஸ்க்கின் அடுத்த தேர்வாக ட்ரோரி நியமிக்கப்பட்டார்.

ட்ரோரிக்கு டெஸ்லா பற்றியும் தெரியாது. அதன் பிரச்னைகள் பற்றியும் தெரியாது. மஸ்க் சொல்வதை ஊழியர்களுக்கு உத்தரவாகப் பிறப்பிப்பார். மஸ்க் வேண்டாம் என்று சொன்னால் அவ்வாறே செய்வார். மஸ்க் கேட்டுக்கொண்டார் என்பதற்காகவே ட்ரோரி தலைமைப் பொறுப்பை ஏற்றவர். சுயமாகச் சிந்தித்துக் கட்டளைகளை இடும் அதிகாரத்தை அவர் விரும்பவில்லை. மஸ்க்கின் கட்டளைகளே எனது சாசனம் எனக் கூறிக்கொண்டு பொறுப்பேற்றவர் எனச் சொல்லலாம். கிட்டத்தட்ட மஸ்க்கின் ராஜ்ஜியத்தை நடத்துவதற்காக வந்த பொம்பை அதிபராகவே அவர் செயல்பட்டார். அதனால் மஸ்க்கின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத் அவர் விருப்பப்படியே ஆடப்பட்டது.

(தொடரும்)

 

படம்: ஜீவ் ட்ரோரி

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *