Skip to content
Home » எலான் மஸ்க் #50 – சூரியக் கனவு

எலான் மஸ்க் #50 – ’சூரிய’ கனவு

எலான் மஸ்க்

மின்சார வாகனங்கள் உண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? அதில் இருந்து காற்றை மாசுப்படுத்தும் வாயுக்கள் வெளிவரப்போவதில்லை என்பதால் மட்டும் மின்சார வாகனங்களைப் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியுமா? மின்சாரக் கார்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சாரங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? நிலக்கரியை எரித்தும், அணுசக்தியின் மூலமாகத்தானே? பிறகு எப்படி எலான் மஸ்க் முன்வைக்கும் ‘சுற்றுச்சூழல் காப்பான்’ கார்கள் வாதத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

– சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

இந்தியாவில் ஜாதிக்கு ஒரு கூட்டம், மதத்துக்கு ஒரு கூட்டம், இனத்துக்கு ஒரு கூட்டம், மொழிக்கு ஒரு கூட்டம் என்று இருப்பதுபோல அமெரிக்காவில் தொழில்நுட்பங்களைப் பற்றி எந்நேரமும் விவாதித்துக்கொண்டு திரியும் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்தில் லிண்டன் ரைவ், பீட்டர் ரைவ் என்ற இரண்டு சகோதரர்களும் இருந்தனர். அவர்களை ரைவ் சகோதரர்கள் என்று சமூகம் அழைத்தது. தொழில்நுட்பம் தொடர்பாகத் தேவைக்கும் அதிகமான அறிவை வைத்திருந்த அந்தச் சகோதரர்கள் வீணாக ஊரைச் சுற்றாமல் தங்களுக்கு இருக்கும் அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சிறு தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்று முடிவு செய்தனர்.

தாங்கள் வசித்து வந்த சாண்டா குரூஸ் பகுதியில் தெருத் தெருவாக அலைந்த அவர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உங்கள் கணினியில் ஏதாவது பிரச்னையா? நாங்கள் உதவி செய்கிறோம். பதிலுக்கு உங்களால் முடிந்த கூலியை மட்டும் கொடுத்தால் போதும் எனக் கேட்கத் தொடங்கினர். மக்களும் அவர்களை நம்பி தங்களது கணினியைச் சரி செய்வதற்கும் புதிய கணினிகளை வடிவமைப்பதற்கும் அவர்களை நாடத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வீடு வீடாகச் செல்வதை நிறுத்திய அவர்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்தி மென்பொருள் ஒன்றை உருவாக்கினர். அந்த மென்பொருளை வாடிக்கையாளர்களின் கணினியில் நிறுவுவதன் மூலம் அந்தக் கணினியில் ஏதாவது பிரச்னை என்றால் தங்கள் வீட்டில் இருந்தே இணையம் மூலம் அதை சரி செய்யலாம் என்று நிரூபித்தனர்.

இவர்களது திறமையைக் கண்டு வியந்த பெரிய நிறுவனங்களும் அவர்களை நாடி வரத் தொடங்கினர். அந்த நிறுவனங்களை எல்லாம் இணையத்தின் மூலம் இணைத்த சகோதரர்கள், மனிதர்களின் துணை இல்லாமலேயே அவர்களது கணினிகளை அன்றாடம் பரிசோதனை செய்து, புதிய அப்டேட்களை நிறுவி எல்லாவற்றையும் தானியங்கி முறையில் செய்யும் வகையில் மென்பொருளை மாற்றி அமைத்தனர். அந்த நிறுவனம் கொஞ்ச நாட்களில் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது. அந்த நிறுவனத்தின் பெயர்தான் எவர்ட்ரீம். அந்த நிறுவனத்தை உருவாக்கிய ரைவ் சகோதரர்கள்தான் நாம் ஏற்கெனவே பார்த்த மஸ்க்கின் அண்ணன் மகன்கள். இந்த எவர் ட்ரீம் நிறுவனத்தை டெல் வாங்கியது மூலம் அதில் முதலீடு செய்திருந்த மஸ்க்குக்குக் கிடைத்த தொகைதான் டெஸ்லாவை மீட்க உதவியது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

இந்தச் சகோதரர்கள் மென்பொருள்களை உருவாக்கும் திறமையை வைத்து வேறு ஏதாவது தொழில் செய்தால் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினர். 2004ஆம் ஆண்டு கோடைக்காலம் ஒன்றில் இருவரும் வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வந்தனர். அவர்களுடன் இன்னொரு நபரும் வந்தார். அவர்தான் எலான் மஸ்க். ஊரைச் சுற்றும் வழியில் தங்களுக்குத் தோன்றிய வியாபார யோசனைகளை எல்லாம் அவர்கள் மஸ்க்கிடம் பரிமாறிக்கொண்டனர். அவர்களுடைய மன ஓட்டத்தை நன்கு புரிந்துகொண்ட மஸ்க், சூரிய ஆற்றல் துறை குறித்துச் சொல்லத் தொடங்கினார். தான் சூரிய ஆற்றல் மூலம் உலகுக்கு ஒளி ஊட்டும் எண்ணத்தில் இருப்பதாகவும், அந்தத் துறையைப் பற்றி ஆராய்ந்து வருவதாகவும், நீங்கள் தேடும் தொழில் வாய்ப்பு அதில் இருப்பதாகவும் சொன்னார். அதன்பிறகு மூவரும் அந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.

மஸ்க்கிடம் பேசியதில் இருந்து ரைவ் சகோதரர்களுக்கு அந்தத் துறையில் ஒரு வாய்ப்பைக் கண்டறிந்து கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இருவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மற்ற எல்லா வேலைகளையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சூரிய ஆற்றல் தொழில்நுட்பம் குறித்து தேடித் தேடி விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அதுவரை அந்தத் துறை குறித்து வெளியான ஆய்வுகள், செய்யப்பட்டுள்ள முதலீடுகள், அதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வரலாறு என ஒன்றுவிடாமல் படித்தனர். சூரிய ஆற்றல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்தித்துப் பேசினர். நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் கலந்துகொண்டனர்.

அப்போதுதான் சூரிய ஆற்றல் குறித்த சர்வதேச மாநாடு ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. அந்த மாநாடுதான் தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையை ரைவ் சகோதரர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.

அந்த மாநாட்டில் ரைவ் சகோதரர்களையும் சேர்த்து வெறும் 2000 பேர் மட்டுமே பங்குபெற்றிருந்தனர். ஒரு விடுதியின் அறையில் நடைபெற்ற அந்தச் சிறிய மாநாட்டில் அந்தத் துறையைச் சார்ந்த பல தரப்பு நிபுணர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் சூரிய ஆற்றல் என்றால் என்ன? சூரிய ஆற்றலைச் சேகரிக்கும் தொழில்நுட்பங்கள் என்னென்ன? மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படும் சூரிய ஆற்றல் தகடுகளின் விற்பனை குறித்த விவரங்கள் எனப் பலவும் அந்த நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் வீடுகளுக்குச் சூரிய ஆற்றல் வழி மின்சாரம் அமைத்துக் கொடுக்கும் வியாபாரிகளும் பங்கேற்றனர். அவர்கள் இந்தத் தொழில்நுட்பத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றே கூறிக்கொண்டிருந்தனர். அது ஏன் என்று கேட்டபோது சூரிய தகடுகளின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு முன்வரவில்லை என்று புலம்பினர். அந்தப் பிரச்னையைப் பற்றி பலவாறு பேசிய அவர்களுக்கு அதைத் தீர்க்கும் வழி மட்டும் தெரியவில்லை. அந்தத் தீர்வைக் கண்டுபிடித்தால் அதன் வணிகத்தையும் தாங்கள் கட்டுப்படுத்தலாம் என்று கணித்த ரைவ் சகோதரர்கள், அதற்கான தீர்வைத் தேடத் தொடங்கினர்.

உண்மையில் நிலைமை அவர்கள் சொன்னதுபோலத்தான் இருந்தது. வாடிக்கையாளர்களுக்குச் சூரியத் தகடுகள் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. தேடிக் கண்டுபிடித்து சூரியத் தகடுகளை அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டும். பிறகு அதை நிறுவுவதற்குத் தனியாக ஒரு நிபுணரைப் பிடிக்க வேண்டும். சூரியத் தகடுகளை நிறுவியவுடன் அதில் இருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியுமா என்றும் தெரியாது. இதைத்தாண்டி நீங்கள் நிறுவும் சூரியத் தகடுகள் அடுத்த ஆண்டே பழையதாகி இருக்கும். சந்தையில் அதைவிட அதிகச் செயல்திறனைக் கொண்ட தகடுகள் வந்திருக்கும். பிறகு அதனை மாற்றுவதற்கும் நீங்கள் செலவு செய்ய வேண்டும். இப்படிப் பல பிரச்னைகள் இருந்தன.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொண்ட ரைவ் சோதரர்கள், மக்களுக்குச் சிரமம் இல்லாமல் எளிய முறையில் எப்படிச் சூரிய வழி மின்சாரத்தை வழங்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினர். இதை மனதில் வைத்து அவர்கள் தொடங்கிய நிறுவனம்தான் ‘சோலார் சிட்டி’. 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், மற்ற சூரிய ஆற்றல் நிறுவனங்களைக் காட்டிலும் மாறுபட்ட வணிகத் திட்டத்தைக் கொண்டிருந்தது. மக்களுக்குக் குறைந்த செலவில் சூரிய வழி மின்சாரம் கிடைக்க வழி வகை செய்து கொடுத்தது.

சோலார் சிட்டி மற்ற நிறுவனங்களைப்போல சூரியத் தகடுகளை அவர்களே தயாரிக்கவில்லை. வெளியில் இருந்து வாங்கி, அதனை வீடுகளுக்கு நிறுவும் வேலையை மட்டும் செய்தனர். நீங்கள் சோலார் சிட்டியை அணுகினால் போதும், அவர்கள் சூரியத் தகடுகளை வெளியில் இருந்து வாங்கி வந்து உங்கள் வீடுகளில் நிறுவுவார்கள். பின் மென்பொருள்கள் மூலம் அந்தச் சூரியத் தகடுகளை இணைத்து, அதன்மூலம் எவ்வளவு சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்ற முடியும் என்று கணக்கிடுவார்கள். பின் தேவையான மாற்றங்களைச் செய்து, உங்களுக்கு வேண்டிய மின்சாரம் கிடைக்க வழி செய்வார்கள். அது மட்டுமல்ல, சோலார் சிட்டியின் மென்பொருள் மூலம் உங்கள் வீட்டுக்கு இதுவரை ஆகி வந்த மின்சாரக் கட்டணத்தையும், தற்போது நீங்கள் மிச்சப்படுத்தும் தொகையையும் கணக்கிடலாம்.

சரி, சூரியத் தகடுகளை வாங்கும் செலவு கூடுதலாக இருக்கும்தானே? கிடையாது. சோலார் சிட்டியிடம் நீங்கள் சூரியத் தகடுகளை வாங்கவே தேவையில்லை. அவர்கள் தங்களிடம் இருக்கும் தகடுகளை உங்களுக்குக் குத்தகைக்குத்தான் வழங்குவார்கள். அதற்கு உங்களிடம் மாதம் மாதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மின்சாரக் கட்டணத்தை விடவும் குறைவாகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்கள் வீடு மாறினால் சோலார் சிட்டியே சேவை கட்டணம் வசூலித்துக்கொண்டு சூரியத் தகடுகளை மாற்றித் தரும். அதேபோல புதிய சூரியத் தகடுகள் சந்தைக்கு வந்தால் அதையும் அந்நிறுவனமே புதுப்பித்துக் கொடுக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தலைவலியும் கிடையாது.

இந்தத் திட்டத்தை ரைவ் சகோதரர்கள் மஸ்க்கிடம் சொன்னவுடனேயே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக அந்தத் திட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுத்து, வேண்டிய முதலீடுகளைச் செய்து அந்த நிறுவனத்தின் தலைவராகவும், அதிக பங்குகளுக்குச் சொந்தக்காரராகவும் மாறினார். சோலார் சிட்டி தங்களது சேவையைத் தொடங்கிய அதே நேரத்தில் சீனாவில் இருந்து விலை மலிவான சூரியத் தகடுகள் ஏகப்பட்டது சந்தையில் குவிந்தன. இவற்றை வாங்கி சோலார் சிட்டி பயன்படுத்திக்கொண்டது.

ஆறு ஆண்டுகளில் அந்நிறுவனம் அதீத வளர்ச்சி கண்டது. சோலார் ஆற்றல் வணிகத்தின் மிக முக்கிய நிறுவனமாக வளர்ந்தது. முதலில் வீடுகளுக்கு மட்டும் மின்சாரத்தை வழங்கி வந்த அந்த நிறுவனம், சிறிது நாட்களில் இன்டெல், வால்கிரீன்ஸ், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது. 2012ஆம் ஆண்டு அந்நிறுவனம் பொதுப் பங்குகளைச் சந்தையில் விட்டது. 2014ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மதிப்பு 7 பில்லியன் டாலர்களாக இருந்தது. இத்தனை பெரிய வளர்ச்சியைப் பார்த்து, போட்டி நிறுவனங்களும் உருவாகின. அவர்கள் சோலார் சிட்டியின் வணிகத் திட்டத்தை அப்படியே பிரதியெடுத்துப் பயன்படுத்தினர்.

சிலிகான் பள்ளத்தாக்கில் இருக்கும் நிறுவனங்களும் சூரிய ஆற்றல் உள்ளிட்ட பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யத் தொடங்கின. ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்போது ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் மஸ்க்கின் சோலார் சிட்டிக்குப் போட்டியாகத் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு நிறையக் கடன்களை வாரி வழங்கினர். ஆனால் ஒன்று விடாமல் அத்தனை நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன.  எலான் மஸ்க் என்ற ஒருவர் மட்டும் இந்தத் துறையில் எப்படி சாதித்துக்கொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அப்போதுதான் அவர் தொடங்கி இருந்த டெஸ்லாவின் மாடல் எஸ் பெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது. இப்போது அவர் முதலீடு செய்த சோலார் சிட்டியும் அசுர வளர்ச்சி. டெஸ்லாவுக்கு எதிராகக் குடியரசுக் கட்சியில் வேட்பாளர் ரோம்னி பேசியதற்கு இதுவும் ஒரு காரணம்.

மஸ்க்கின் வெற்றியைக் குருட்டுத் தனமானது என்று யாராலும் கடந்து செல்ல முடியவில்லை. உண்மையில் சோலார் சிட்டியும் மஸ்க்குடைய சிறு வயது கனவின் நீட்சியில் உருவானதுதான். புதைபடிம எரிபொருளுக்கு எதிராகச் சூரிய ஆற்றலை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற தனது சேவை நோக்கத்துடன் வணிக திட்டத்தை இணைத்ததன் வெற்றியே சோலார் சிட்டிக்கு கிடைத்த வரவேற்பு. உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு விழும் சூரிய ஆற்றலைக் கொண்டு ஒட்டு மொத்த உலகின் ஓர் ஆண்டுக்கான ஆற்றலின் தேவையை ஈடு செய்துவிடலாம் என்று மஸ்க் கூறினார். ஒவ்வொரு நாளும் சூரியத் தகடுகளின் தொழில்நுட்பம் நவீனமாகிக்கொண்டே வந்தது. எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கு வற்றாத சூரிய ஆற்றல் மட்டுமே ஒரே வழியாக அமையும் என்று கருதியதால், அந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் முதலீடு செய்தார்.

2014ஆம் ஆண்டு அந்நிறுவனம் டெஸ்லாவுடன் இணைந்து மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரிகளை உருவாக்கத் தொடங்கியது. சோலார் சிட்டி உருவாக்கும் பேட்டரிக்கள் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவில்தான் இருக்கும். அந்தப் பேட்டரிகள் சூரியத் தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் உங்கள் வீடுகளுக்குத் தேவையான ஆற்றல் அதில் சேமிக்கப்படும். இந்த மின்சாரத்தை நீங்கள் இரவிலோ, மின்வெட்டின் போதோ பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சோலார் சிட்டி அதிக அளவில் லாபம் ஈட்டத் தொடங்கியது. அதனால் அந்நிறுவனம் தனது வணிகத்தையும் பெரிதாக்குவதற்குத் திட்டமிட்டது. இதுவே அந்நிறுவனத்தின் முடிவாகவும் அமைந்தது. தனது சேவையை விரிவு செய்வதற்காக அந்நிறுவனம் ஏகப்பட்ட கடன்களை வாங்கத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் சந்தையில் சூரியத் தகடுகளின் விலை குறையத் தொடங்கின. 2006ஆம் ஆண்டு 40,000 டாலர்களில் இருந்த சூரியத் தகடுகள் 2016ஆம் ஆண்டு 20,000 டாலர்களுக்குக் குறைந்தன. இத்துடன் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோருக்கு அரசு 30% வரி கழிவையும் வழங்கி வந்தது. இதனால் மக்கள் சோலார் சிட்டியிடம் குத்தகைக்கு மின்சாரத்தை வாங்குவதைவிட தாங்களாகவே சூரியத் தகடுகளை வாங்கி நிறுவுவது செலவைக் குறைக்கும் என்று நினைக்கத் தொடங்கினர். இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்கினார்கள்.

வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதை உணர்ந்த அந்நிறுவனம் சூரியத் தகடுகளை வெளியில் இருந்து வாங்குவதை நிறுத்திவிட்டு தாங்களே தயாரித்து விற்றால் அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்று தனது வணிகத் திட்டத்தை மாற்றியது. இந்த முடிவால் அந்நிறுவனத்துக்கு மாதம் மாதம் கிடைத்து வந்த வருமானம் குறையத் தொடங்கியது. மேலும் சோலார் சிட்டியின் சேவையை ரத்து செய்யும் வாடிக்கையாளர்களிடம் 45% சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பலரும் அந்நிறுவனத்தில் இருந்து விலகத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். வீழும் வியாபாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக லிண்டன் சில லட்சியப்பூர்வமான இலக்குகளை அதன் ஊழியர்களுக்கு நிர்ணயித்தார். ஓர் ஆண்டில் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த விற்பனையைச் சாத்தியமாக்க சோலார் சிட்டியின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றி விற்பனைச் செய்யத் தொடங்கினர். இது அந்நிறுவனத்தின் மீதான நம்பகத் தன்மையைச் சிதைத்தது. இதுபோன்ற தவறான கொள்கைகளால் அந்நிறுவனத்துக்கான கடன் 300 கோடி டாலர்களாக அதிகரித்தது. சோலார் சிட்டியின் நிறுவனர்களான லிண்டனும் பீட்டரும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கினர். தங்களது சம்பளத்தையும் குறைத்துக்கொண்டனர்.

மஸ்க் பார்த்தார். இனி அந்த நிறுவனம் தாக்குப்பிடிக்காது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. தனது சகோதரர் லிண்டனைப் போனில் அழைத்தார். சோலார் சிட்டியை நான் டெஸ்லாவுடன் இணைக்க விரும்புகிறேன். சம்மதமா என்று கேட்டார். நஷ்டத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை நல்ல தொகைக்கு டெஸ்லா கேட்கிறது என்றால் வேண்டாம் என்றா சொல்லத் தோன்றும். லிண்டனும் சரி என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக மஸ்க், டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவிடம் சோலார் சிட்டியை வாங்குவது குறித்துப் பேசினார். ஆனால் இயக்குநர்கள் குழுவுக்கு இந்த உடன்படிக்கையில் துளிக்கூட விருப்பமில்லை. யாராவது வீழ்ந்துகொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கி, அதன் கடனையும் ஏற்றுக்கொள்வார்களா? வேண்டாம் என்று மறுத்தனர். அப்போது டெஸ்லாவுடைய மதிப்புமே கொஞ்சம் தள்ளாடிக்கொண்டிருந்தது. அந்நிறுவனம் ஒரு டாலர் ஈட்டுகிறது என்றால் அதில் பாதித் தொகை செலவாகிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் சோலார் சிட்டியை வேறு ஏன் வாங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் மஸ்க் கேட்பதாக இல்லை, சோலார் சிட்டியின் ஒவ்வொரு பங்குக்கும் ஈடாக டெஸ்லாவின் 0.110 அளவு பங்குகளைக் கொடுத்து, 2.6 பில்லியன் டாலர்கள் செலவில் அவர் சோலார் சிட்டியை இணைத்துக் கொண்டார். இதற்கு மஸ்க்குக்கு எதிராக கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தனது குடும்ப நலனுக்காக அவர் டெஸ்லாவின் எதிர்காலத்தையே காவு கொடுக்க இருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் மஸ்க் விமர்சனங்களுக்குச் செவி சாய்க்கவில்லை. டெஸ்லா இயக்குநர்களின் வாயை அடைத்தால் போதும் என்று நினைத்துக்கொண்டார். சோலார் சிட்டியை வாங்கிய டெஸ்லாவின் பெயரை டெஸ்லா எனர்ஜி என்று மாற்றினார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் பல்வேறு சூரிய ஆற்றல் சேமிப்புச் சாதனங்களைத் தயாரித்து வருகிறது.

மஸ்க் சோலார் சிட்டி நிறுவனத்தை வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக முதலீட்டாளர்கள் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இன்றும் கூட அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. என்னதான் விமர்சகர்கள் குடும்ப நலனைக் காக்கவே மஸ்க் சோலார் சிட்டியை வாங்கியதாகக் கூறினாலும், மஸ்க்கின் கனவு அவர்களுடைய எண்ணத்தை விடப் பெரியது. புதைபடிம எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சார ஆற்றலில் இயங்கும் கார்களை உருவாக்க வேண்டும் என்று மஸ்க் நினைத்தபோதே அவர் சூரிய ஆற்றலைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். உலகம் முழுவதும் பெருமளவில் நிலக்கரிகளைக் கொண்டே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால், அதன்பின் மின்சாரக் கார்களை மட்டும் உருவாக்கினால் என்ன பயன்? சீரழியும் சுற்றுச்சூழலுக்கு மாற்றாக ஒரு நிலையான ஆற்றலுக்கான தீர்வையும் வழங்க வேண்டுமல்லவா? அதனைத் திட்டமிட்டுத்தான் அவர் சோலார்சிட்டியில் முதலீட்டைக் குவித்தார். அந்த நிறுவனம் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியவுடன், அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. ஏற்கெனவே சூரிய ஆற்றல் நிறுவனங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பைப் பெறாத நிலையில் அந்த வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட ஒரே நிறுவனமான சோலார் சிட்டியின் வீழ்ச்சி மக்களுக்குச் சூரிய ஆற்றல் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும். இரண்டாவது, புதிதாக ஒரு சூரிய ஆற்றல் நிறுவனத்தைத் தொடங்கிக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சோலார்சிட்டியின் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மஸ்க் கருதினார். விளைவு, அந்நிறுவனத்தை வாங்கிவிட்டார்.

சரி, வீழ்ச்சியடைந்த நிறுவனத்தை டெஸ்லா வாங்கியவுடன் என்ன செய்தது? மஸ்க்குக்கு சோலார் சிட்டியின் கட்டமைப்புகளைப் பயன்படுத்திச் சில திட்டங்களைச் செயல்படுத்தும் எண்ணம் இருந்தது.

முதலில் பவர்வால் என்ற தயாரிப்பை டெஸ்லா உருவாக்கத் தொடங்கியது. இந்த பவர்வாலை சோலார் சிட்டியுடன் இணைந்து இருக்கும்போதே டெஸ்லா உருவாக்கியது. இதைத் தொடர்ந்து மெகாபேக், பவர் பேக் என்ற பெயரில் வீடுகள், நிறுவனங்கள் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்கே மின்சாரம் வழங்கும் அமைப்புகளையும் டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. இரண்டாவது சூரியக் கூரைகள். சூரியக் கூரைகள் என்பது சாதாரண வீட்டுக் கூரைகளுக்குப் பதிலாகச் சூரியத் தகடுகளைக் கொண்டு கூரைகள் அமைக்கப்படும். இதன்மூலம் சூரிய ஆற்றல் சேமிக்கப்பட்டு அவற்றை வீடுகளில் மின்சாரமாகப் பயன்படுத்தலாம் என்றார். இருப்பினும் டெஸ்லா எனர்ஜி தொடங்கப்பட்ட புதிதில் மக்களிடத்தில் அந்தச் சேவைகளின் மீது பெரிதாக மதிப்பில்லை. ஆனால் அதன்பின் நடைபெற்ற ஓர் இயற்கைப் பேரிடர் டெஸ்லா மீதான மரியாதையை உலகெங்கும் உயர்த்தியது.

செப்டம்பர் 20, 2017. கரீபியத் தீவுகளில் ஒன்றான புவேர்டோ ரிகோவை ‘மரியா’ என்று பெயருடைய புயல் ஒன்று தாக்கியது. முதலில் சிறியதாகத் தொடங்கிய மரியா நேரம் செல்லச் செல்லப் பிரமாண்ட வடிவமெடுத்து வழியில் கண்ட அனைத்தையும் வீசியெறிந்தாள். மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த மரியா ஏற்படுத்திய பாதிப்பு நான்கு புயல் காற்றுகள் ஏற்படுத்தும் பாதிப்புக்கு நிகரானது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

மரியாவின் கோர தாண்டவத்தால் அந்தப் பகுதியில் இருந்த மரங்கள் அனைத்தும் நிலத்தில் இருந்து பிடுங்கி வீசப்பட்டன. கடலில் இருந்த நீர் நிலத்துக்குள் நுழைந்து நினைத்தே பார்க்க முடியாத சேதாரத்தை ஏற்படுத்தியது. வீடுகள் இடிந்தன. மின்சாரக் கம்பங்கள் நொறுங்கின. மின்சாரக் கம்பிகள் காற்று செல்லும் திசையில் பிய்த்து எறியப்பட்டன. அந்தத் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளடைந்தது. அந்தத் தீவுகளின் உட்கட்டமைப்புகளை நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குச் சிதைத்து மரியா நாசம் ஏற்படுத்தி இருந்தாள். சாலை முழுவதும் உடைந்த கட்டடங்களின் குப்பைக் கூளங்களாகக் கிடந்தன. புயல் கடந்து சில நாட்கள் கழித்தும் கூட நிலைமை சரியாகவில்லை. யாருக்கும் சிதைந்துபோன உள்கட்டுமானங்களை எப்படிச் சரி செய்து மின்சாரத்தைத் திரும்பிக் கொண்டுவருவது எனத் தெரியவில்லை. புயல் ஏற்படுத்திய பாதிப்பை விட, மின்சாரம் இல்லாமல் ஏற்பட்ட பாதிப்பு மோசமாக இருந்தது. மின்சாரத் துண்டிப்பால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைகூடப் பெற முடியவில்லை. உயிர்கள் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருந்தன. வாரங்கள் கடந்தன. ஆனாலும் தீவுக்கு மின்சாரம் வரவில்லை.

அந்தத் தீவின் கவர்னர் எலான் மஸ்க்கை நேரடியாக ட்விட்டரில் குறிப்பிட்டுப் பதிவு ஒன்றை எழுதினார்.

‘எலான். உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் டெஸ்லாவின் சக்தியை உலகறியச் செய்ய வேண்டுமா? எங்களுக்கு உதவுவதன் மூலம் செய்ய முடியும்’ என்றார்.

‘எங்கள் டெஸ்லா குழு தயாராக இருக்கிறது. எங்களுக்குக் கட்டுப்பாடு என்பதே கிடையாது. உங்கள் தீவுக்கும் எங்களால் மின்சாரம் வழங்க முடியும். ஆனால் உங்கள் அரசாங்கம் அனுமதி வழங்குமா?’ மஸ்க் கேட்டார்.

‘வழங்கும்.’ பதில் வந்தது.

டெஸ்லா குழு உடனே களத்தில் இறங்கியது. டெஸ்லா எனர்ஜியின் தயாரிப்புகள் அந்தத் தீவுக்குக் கப்பலின் மூலமும் விமானத்தின் மூலமும் கொண்டு செல்லப்பட்டன. 2 வாரங்கள் டெஸ்லா ஊழியர்கள் ஓய்வில்லாமல் உழைத்தனர். சூரியத் தகடுகள், பேட்டரிகளைக் கொண்டு மைக்ரோ கிரிட் எனப்படும் மின்சாரத்தை உருவாக்கும் தன்னிறைவான உள்கட்டுமானம் உருவாக்கப்பட்டு முதலில் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு வீடுகளிலும் மின் விளக்குகள் எரிந்தன. தொடர்ந்து, கழிவு நீர் தொழிற்சாலை இயக்கப்பட்டது. இப்படியே அந்தத் தீவு முழுமைக்குமான மின்சாரத்தை டெஸ்லா வழங்கியது.

புவேர்ட்டோ ரிக்கோவில் டெஸ்லா நிகழ்த்திய அதிசயத்தைக் கண்டு அங்கிருக்கும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பவர் வால் பேட்டரிகளை வாங்கினர். 2018இல் மீண்டும் சூறாவளிக் காலம் தொடங்கியபோது அந்தத் தீவு முழுவதும் பதினோராயிரம் பேர் டெஸ்லாவின் வாடிக்கையாளராக இருந்தனர். இந்தச் சம்பவம் டெஸ்லா எனர்ஜியை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. அதன்பின் நிலையான வளர்ச்சியை டெஸ்லா எனர்ஜி ஈட்டி வருகிறது. 2023 முதலாம் காலாண்டின் கணக்கின்படி டெஸ்லாவின் மொத்த வருமானத்தில் 6.6% வருமானம் டெஸ்லா எனர்ஜி மூலம் கிடைத்துள்ளது. இதில் 3.7% லாபம்.

டெஸ்லா எனர்ஜி சேவையின் மூலம் ஈட்டப்படும் லாபம் அந்நிறுவனத்தின் வாகனத் தயாரிப்புகளில் இருந்து கிடைக்கப்பெறும் லாபத்தை விட குறைவானதாகத்தான் இருக்கிறது. இருப்பினும் அதைப் பற்றி மஸ்க் கவலைப்படுவதாக இல்லை. காரணம், டெஸ்லா எனர்ஜி முழுக்க முழுக்க எதிர்கால நோக்கத்தை, நீண்ட கால இலக்கை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் அவரது கருத்து.

இன்னும் உலகம் முழுதாகச் சூரிய ஆற்றலைக் கிரகிக்கும் மனநிலையை அடையவில்லை. ஆனால் ஒருநாள் அது நிகழும் என்கிறார். அதனை நோக்கமாகக் கொண்டே டெஸ்லா எனர்ஜி இயங்கி வருகிறது. விரைவில் மின்சாரக் கார்களின் தேவையை விடச் சூரிய ஆற்றலின் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது டெஸ்லா எனர்ஜி உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும் எனக் கூறுகிறார்.

மின்சாரக் கார்களின் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு அதற்கான ஆற்றல் நிலக்கரிகளில் இருந்து கிடைப்பது என்றே சொல்லப்படுகிறது. இதனை மாற்றுவதற்காகத்தான் டெஸ்லா எனர்ஜி இயங்கி வருகிறது. சந்தையில் மின்சாரக் கார்கள் அதிகரிக்கும்போது, டெஸ்லா எனர்ஜியின் சேவையும் அதிகரிக்கும் என்கிறார். அதனால் சோலார் சிட்டியை வாங்கியதை நான் லாபகரமானதாகவே பார்க்கிறேன் என்று சொல்கிறார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *