Skip to content
Home » எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

எலான் மஸ்க்

டெஸ்லா மாடல் எஸ்ஸை தயாரிக்கத் தொடங்கியவுடன் லித்தியம் அயன் பேட்டரிகளின் தேவை வெகுவாக அதிகரித்தது. உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்தாலும் டெஸ்லாவின் தேவைக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனை நிவர்த்தி செய்வதற்காக அவர் தொடங்கியதுதான் கிகா தொழிற்சாலை என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள். இந்தத் தொழிற்சாலையில் 6500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றார். இருபத்தி நான்கு மணி நேரமும் சுழற்சி முறையில் பேட்டரிகளைத் தயாரிக்க முடியும் என்று சொன்னார்.

இந்த ‘கிகா’ தொழிற்சாலையின் நோக்கம் மிகவும் லட்சியகரமானது. உலகம் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் பெரும்பாலும் புதைபடிம எரிபொருள்களால்தான் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதனை மாற்றி அனைத்தையும் சூரிய ஆற்றலால் இயங்க வைக்க வேண்டும் என்பதுதான் மஸ்க்கின் திட்டம். ஆனால் அந்த ஆற்றலைச் சேமிக்க லித்தியம் அயன் பேட்டரிகள் வேண்டுமல்லவா? அதனை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் தொழிற்சாலைகள். கிகா தொழிற்சாலையின் மூலம் உற்பத்தியாகும் பேட்டரிகளின் மூலம் உலகில் உள்ள அத்தனைச் சாதனங்களையும் சூரிய ஆற்றலில் இயங்க வைக்கக்கூடியதாக மாற்ற முடியும் என்பது மஸ்க்கின் நம்பிக்கை.

அதுமட்டுமில்லாமல் கிகா தொழிற்சாலைகளால் பேட்டரிகளின் விலையும் குறையும் என்று மஸ்க் கணித்துள்ளார்.

பேட்டரித் தயாரிப்புக்கு வேண்டிய அனைத்து மூலப்பொருள்களும் பூமியில் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது. ஆனாலும் பேட்டரிகளின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்றால் பேட்டரித் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களைச் சுரங்கம் அமைத்துத் தோண்டி எடுத்து, அதனைச் சுத்திகரித்து, கலனில் அடைத்து, பேட்டரிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வரை அந்த மூலப்பொருள்கள் உலகம் முழுவதையும் மூன்று முறை பயணம் செய்கின்றன. இதனால்தான் பேட்டரியின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஊர் சுற்றும் நிலையைத் தவிர்க்கும் வகையில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் கிகா தொழிற்சாலை வடிவமைக்கப்படும். மேலும் உற்பத்தி அதிகரிக்கும்போது இயல்பாகவே சந்தையில் நிலவும் பேட்டரிகளின் விலையையும் குறைக்கும் என்று கூறுகிறார்.

சரி, இந்தத் தொழிற்சாலைகள் இயங்குவதற்கான ஆற்றல்? இந்தத் தொழிற்சாலை முழுக்க முழுக்க சூரிய ஆற்றலின் மூலமாகவே இயங்கும். அந்த ஆற்றலையும் கிகா தொழிற்சாலையே உற்பத்தி செய்துகொள்ளும் என்கிறார். அதேபோல டெஸ்லா மட்டும்தான் கிகா தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கவில்லை. உலகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 100 தொழிற்சாலைகள் தேவை என்றால் அதில் டெஸ்லா மட்டுமே அத்தனையையும் செய்ய முடியாது என்று அவர் தெளிவாக இருந்தார். கிகா தொழிற்சாலைகளைத் தொடங்க அமெரிக்கா, சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள மற்ற நிறுவனங்களும் களத்தில் இறங்க வேண்டும். குறிப்பாக மிகப்பெரிய கார் நிறுவனங்கள் இதில் முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டும். கிகா தொழிற்சாலைகள்தான் எதிர்காலத்தின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யப்போகிறது. அதை மற்ற நிறுவனங்கள் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று மஸ்க் சொல்கிறார்.

ஜூலை 29, 2016 அன்று அமெரிக்காவின் நெவேடா பகுதியில் முதல் கிகா தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவு செய்யப்பட்டு இன்று சீனா, ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய நாடுகளையும் சேர்த்து மொத்தம் 6 இடங்களில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. . நேவேடா தொழிற்சாலையின் தொடக்கத்தின்போதே டெஸ்லா பேனசோனிக் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரிகளைத் தயாரிக்க முடிவு செய்தது. இன்று கிகா தொழிற்சாலைகளில்தான் டெஸ்லாவின் அனைத்துத் தயாரிப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், மின்சார திறன் பொறித் தொடர், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பவர் வால், பவர்பேக், மெகாபேக், டெஸ்லா சார்ஜிங் நிலையங்களுக்குத் தேவையான சாதனங்கள், மின்சார ஆற்றல் என அனைத்தும் இந்தக் கிகா தொழிற்சாலையின் மூலமாகத்தான் கிடைக்கின்றன.

இன்று, டெஸ்லாவைத் தொடர்ந்து வேறு சில மின்சார வாகன நிறுவனங்களும், ஆற்றல் நிறுவனங்களும் கூட கிகா தொழிற்சாலைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஜாகுவார், வோல்ஸ்வேகன் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகளை கிகா தொழிற்சாலைகள் என்றே அழைக்கின்றன. அவர்களைத் தவிரச் சூரிய ஆற்றல் நிறுவனங்களும் இந்தக் கிகா தொழிற்சாலைகளுக்கான முன்னெடுப்பை எடுத்து வருகின்றன.

டெஸ்லாவின் கிகா தொழிற்சாலை லட்சியப்பூர்வமான நீண்ட காலத் திட்டங்களை மனதில் கொண்டு தொடங்கப்பட்டாலும், அதன் உடனடித் திட்டம் அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரக் கார்களுக்கான பேட்டரிகளைத் தடையில்லாமல் தயாரிப்பதாகவே இருந்தது. குறிப்பாக மஸ்க்கின் கனவுகளில் முக்கியமானதான மலிவு விலை டெஸ்லா கார்களைப் போதிய அளவு சந்தையில் கொண்டு வருவதற்கு வேண்டிய அதிக எண்ணிக்கையிலான பேட்டரிகளைத் தயாரிப்பதாகவே இருந்தது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *