2008ஆம் ஆண்டு மரணத்தின் வாசலைத் தொட்டு வந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்று உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்று. 2023 ஜனவரி மாதக் கணக்குப்படி ஸ்பேஸ் எக்ஸின் வருமானம் 137 பில்லியன் டாலர்கள். இதை எப்படி ஸ்பேஸ் எக்ஸால் சாதிக்க முடிந்தது? அந்நிறுவனம் மற்ற நிறுவனங்களிடமிருந்து அப்படியென்ன வித்தியாசமாகச் செய்கிறது? ஸ்பேஸ் எக்ஸின் வெற்றிக்குக் காரணமாக இரண்டு மனிதர்களை நாம் சுட்டிக் காட்டலாம். ஒன்று மஸ்க். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்னொருவரும் இருக்கிறார். அவர் பெரும்பாலும் வெளியே அறியப்படாதவர். ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் தொடக்கக் கால வெற்றிக்கு அவர்தான் முக்கியக் காரணம். அவர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர் குவைன் ஷாட்வெல்.
2009ஆம் ஆண்டு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த ஸ்பேஸ் எக்ஸை நாசா ஒப்பந்தம் காப்பாற்றியது இல்லையா? அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஷாட்வெல்தான். நாசா ஒப்பந்தம் மட்டுமல்ல ஸ்பேஸ் எக்ஸ் பல்வேறு நாடுகளுடனும் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டு அசைக்க முடியாத இடத்தில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமும் அந்தப் பெண்மணிதான். ஸ்பேஸ் எக்ஸின் மூளை எலான் மஸ்க் என்றால், இதயம் குவைன் ஷாட்வெல்.
ஸ்பேஸ் எக்ஸில் ஷாட்வெல்லுக்கு நிறையப் பொறுப்பு இருக்கிறது. அதில் முக்கியமான பொறுப்பு மஸ்க் செய்யும் தவறுகளைச் சரி செய்வது. ஸ்பேஸ் எக்ஸின் ஒவ்வொரு துறைக்குமே ஷாட்வெல் பங்களித்தார். ஸ்பேஸ் எக்ஸுக்கு வலுவான வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் ஷாட்வெல் முக்கியமானவர். ஆரம்பத்தில் அந்நிறுவனம் திணறிய காலங்களில் மற்ற நிறுவனங்களிடம் பேசி ஒப்பந்தம் மேற்கொள்வதில் ஷாட்வெல் கில்லாடியாக இருந்தார். ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவும் முன்பே பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் பேசி பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை நிறைவு செய்திருந்தார். அவருடைய பேச்சுத் திறனும், வியாபார உத்தியும்தான் நாசாவின் ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்கும் ஸ்பேஸ் எக்ஸ்ஸுக்கும் உதவியது. அவரது அசாத்தியத் திறமையைக் கண்டு வியந்த மஸ்க், 2008ஆம் ஆண்டு அவரை ஸ்பேஸ் எக்ஸின் தலைவராகவும், முதன்மை நடவடிக்கை அதிகாரியாகவும் (COO) ஆக்கினார். இன்று வரை அவர்தான் அந்தப் பதவிகளில் நீடித்து வருகிறார்.
ஷாட்வெல்லின் பலமே அவரது பேச்சும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையும்தான். அதுதான் அவரை மஸ்க்குக்கு அடுத்த இடத்தில் உயர்த்தி இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றைச் செயல்படுத்துபவர் ஷாட்வெல்தான். ஸ்பேஸ் எக்ஸில் பணிக்குச் சேரும் புதிய ஊழியர்களைப் பயமுறுத்தாமல் வழி நடத்துவதில் இருந்து, ராக்கெட் ஏவப்படுவதைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பது வரை ஷாட்வெல்லின் பங்கு பலதரப்பட்டது. ஷாட்வெல், ஸ்பேஸ் எக்ஸுக்கு வருவதற்கு முன்பு சில சிறிய விண்வெளி நிறுவனங்களில் பணியாற்றி இருந்தார். தன் நண்பரின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் பற்றி அறிந்துகொண்டு அங்கு விண்ணப்பித்தார். அவருடைய வியாபாரத் திறமைகளையும், அபாரத் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்த மஸ்க், ஸ்பேஸ் எக்ஸின் ஏழாவது ஊழியராக ஷாட்வெல்லை சேர்த்துக்கொண்டார்.
ஷாட்வெல் மஸ்க்கைப்போல ஆத்திரப்படமாட்டார். கோபத்தில் கத்த மாட்டார். அவருடைய மென்மையான பேச்சே ஒருவரை மயக்கி அவர் சொல்லும் வேலைகளைச் செய்யத் தூண்டிவிடும். ஸ்பேஸ் எக்ஸின் லட்சியம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றைச் சுற்றி வியாபார உத்திகளை அமைப்பதில் ஷாட்வெல் கில்லாடி. ஸ்பேஸ் எக்ஸ் குறைந்த விலையில் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்புவதால், அவற்றை அடிக்கடிச் செய்தால் மட்டுமே லாபம் எடுக்க முடியும். இதனை நன்றாகப் புரிந்துகொண்ட ஷாட்வெல் அதற்கு ஏற்றாற்போல் நிறையச் சிறிய ஒப்பந்தங்களைக் கைப்பற்றினார். இதுதான் ஸ்பேஸ் எக்ஸைக் கடினமான காலங்களில் பிழைத்திருக்க வைத்தது. உலகின் பல்வேறு நாடுகளையும் தங்கள் விண்வெளி நோக்கத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்தை அணுக வைத்ததில்தான் ஷாட்வெல்லின் வெற்றி அடங்கி இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸின் மூளை என்றால் அது மஸ்க்தான் சந்தேகமே இல்லை. மஸ்க் இல்லை என்றால் அப்படி ஒரு நிறுவனமே இருந்திருக்க முடியாது. ஜிப்2, பேபால், டெஸ்லா, போரிங் கம்பெனி, நியூராலிங், ட்விட்டர் எனப் பல நிறுவனங்களை மஸ்க்கின் உடல் பாகங்களாகக் கற்பனை செய்துகொண்டால், ஸ்பேஸ் எக்ஸ்தான் அவருடைய உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர். அதன் ஒவ்வொரு அங்கத்திலும் மஸ்க் கலந்திருக்கிறார். அதன் ஒவ்வொரு அசைவும் மஸ்க்கின் மேற்பார்வையில்தான் நடைபெறுகிறது.
மஸ்க்கின் வளர்ச்சியும் ஸ்பேஸ் எக்ஸின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தது. ஸ்பேஸ் எக்ஸைத் தொடங்கியபோது மஸ்க் ஒரு திறமையான மென்பொருள் பொறியாளர் மட்டுமே. ஜிப்2விலும், பேபாலிலும் தனக்குக் கீழ் இருந்த கணினிப் பொறியாளர்களை அவர் கட்டளையிட்டு வழிநடத்தி இருக்கிறார். அதைத்தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. ஸ்பேஸ் எக்ஸ்தான் அவருக்குப் பல சவால்களைக் கொண்டு வந்து கொடுத்து, பல பாடங்களை கற்றுத் தந்தது. வியாபாரம் என்றால் என்ன, நிர்வாகம் என்றால் என்ன, ஒரு நிறுவனத்தை எப்படி வழி நடத்த வேண்டும், ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை எப்படி அணு அணுவாகக் கட்டமைக்க வேண்டும் எனப் பல விஷயங்களைப் புரிய வைத்தது.
ஆரம்பத்தில் மஸ்க்குக்கு ராக்கெட் பற்றிய புத்தக அறிவு மட்டுமே கொஞ்சம் இருந்தது. அங்கிருக்கும் ஊழியர்களிடம் இருந்துதான் அவர் விஷயங்களையே கற்றுக்கொண்டார். ஸ்பேஸ் எக்ஸின் தொடக்கத்தில் அங்குப் பணிக்குச் சேர்ந்த விஞ்ஞானிகளிடமிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை ஒவ்வொருவரையும் சந்தித்து ஆயிரம் கேள்விகளை மஸ்க் கேட்பார். ஒரு கருவி வாங்க வேண்டும் என்று கேட்டால்கூட, அந்தக் கருவியைக் குறித்து ஆயிரத்தெட்டு குறுக்கு விசாரணை செய்வார். மஸ்க் இப்படிச் செய்வதைக் கண்ட ஊழியர்கள் தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அவர் இவ்வாறு நடந்துகொள்வதாகக் கோபப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் தான் அறிந்துகொள்வதற்குத்தான் அவர் கேள்விகளைக் கேட்டிருப்பார். இறுதியில் ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 90 சதவிகித அறிவையாவது பெறாமல் விடமாட்டார்.
அதேபோல தான் கற்றுக்கொண்டதை எந்தச் சூழலில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருந்தார். தேவையான இடத்தில் அதனை நினைவுகூரும் அபார அறிவாற்றலும் மஸ்க்குக்கு உண்டு. இதுபோன்ற தகவல்களும் அனுபவமும் சேர்ந்துதான் அவர் ராக்கெட் துறையின் முன்னோடியானார். இந்த அறிவுதான் அவர் விண்வெளித்துறையின் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிச் சிந்திக்கவும், தனக்கு வேண்டியதை விஞ்ஞானிகளிடம் கேட்டுப் பெறவும் உதவுகிறது. இத்துடன் நிர்வாகத் திறமையும் சேர்ந்து ஸ்பேஸ் எக்ஸை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸுக்கு என்றே தனிக் கலாச்சாரத்தையே மஸ்க் உருவாக்கி வைத்திருந்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் ஒருவரைப் பணிக்கு அமர்த்துவதே வித்தியாசமாக இருக்கும். சாதாரணமாக நீங்கள் கல்லூரி முடித்துவிட்டெல்லாம் அங்கு வேலைக்குச் சேர்ந்துவிட முடியாது. ஆனால் படிப்பை இன்னும் முடித்திராத மாணவர்களுக்குக் கூட அங்கு வேலை கிடைக்கும். 2023 ஜூன் மாதம் கைரன் குவாசி என்கிற 14 வயது சிறுவனைப் பணிக்கு அமர்த்திய ஸ்பேஸ் எக்ஸ், அவருக்கு ஸ்டார்லிங்கின் மென்பொருள் பணியாளராகப் பொறுப்பு வழங்கியது. கரன் பள்ளிப் படிப்பு முடிக்காதவர். ஆனால் 10 வயதிலேயே கலிஃபோர்னியாவில் உள்ள சான்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அவரது திறமையைப் பார்த்த ஸ்பேஸ் எக்ஸ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணிக்கு அமர்த்திவிட்டது. ஆனால் 18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் வேலை செய்யக்கூடாது என்று அமெரிக்காவில் சில மாநிலங்களில் சட்டம் இருப்பதால் சமூக ஆர்வலர்கள் ஸ்பேஸ் எக்ஸின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உங்களுக்குத் திறமை இருந்தால்போதும் ஸ்பேஸில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம். வேறு எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது. ஸ்பேஸ் எக்ஸ் நிர்வாகிகள் ரோபோட் தயாரிப்புப் போட்டி, மென்பொருள்கள் எழுதும் போட்டி, கார்களை வடிவமைக்கும் போட்டி போன்றவை நடைபெறும் இடங்களுக்குச் சென்று திறமைசாலிகளைத் தேடுவார்கள். அங்கே உங்கள் திறமை வெளிப்பட்டால் நேராக உங்களைத் தூக்கிச் சென்று மஸ்க்கிடம் அமர்த்திவிடுவார்கள். அங்கு நேர்காணல் நடைபெறும். தேர்ச்சிபெற்றால் கை நிறையச் சம்பளத்துடன் வேலை. அதேபோல கல்லூரிகள் ஆராய்ச்சி மாணவர்கள் வெளியிடும் ஆய்விதழ்களையும் ஸ்பேஸ் எக்ஸ் குழு கண்காணித்து வருகிறது. அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களையும் உடனேயே அவர்கள் பணிக்குச் சேர்த்துவிடுவார்கள்.
ஸ்பேஸ் எக்ஸ் நேர்காணலே வித்தியாசமாக இருக்கும். சில நேரங்களில் உங்களிடம் கடினமான கேள்விகள் கேட்கப்படும். சில நேரங்களில் குழந்தைத்தனமாக ஒரு பேப்பரைக் கொடுத்து மஸ்க் பற்றியும், ஸ்பேஸ் எக்ஸில் இரண்டு பக்கங்களுக்குக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். நீங்கள் கணினியில் கைதேர்ந்தவராக இருந்தால் 500 வரி கணினி கோடிங்கைக் கொடுத்து 10 வரிகளில் சுருக்கி தரச் சொல்வார்கள். இதில் எல்லாம் வெற்றி பெறுபவர்களுக்கு மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
யாராக இருந்தாலும் மஸ்க்தான் இறுதியாகப் பணியாளர்களைத் தேர்வு செய்வார். ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கப்பட்ட புதிதில் தூய்மைப் பணியாளர் முதற்கொண்டு மஸ்க்தான் தேர்ந்தெடுப்பார். இன்று முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு மட்டும் மஸ்க் நேர்காணல் செய்கிறார். மஸ்க்கின் அறைக்குச் செல்வதற்கு முன்னமே விண்ணப்பதாரருக்கு அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் வழங்கப்படும். சில நேரங்களில் எளிய கேள்விகளுடன் மஸ்க் விட்டுவிடுவார். சில நேரங்களில் கடினமான புதிர்களை விடுவித்து அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தொந்தரவு செய்வார். அந்தக் கேள்விகளுக்கு விண்ணப்பதாரர்கள் பதில் கண்டடைகிறார்களா என்பதில் அவருக்கு அக்கறை இல்லை. அந்தப் பிரச்னையை அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு, அதைத் தீர்ப்பதற்கு எத்தகைய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள் என்பதைப் பார்க்கத்தான் மஸ்க் விரும்புவார்.
உண்மையில் ஸ்பேஸ் எக்ஸில் பணிச்சுமை கடுமையாக இருக்கும். சில நேரங்களில் வாரத்துக்கு 90 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணியாற்ற வேண்டியது இருப்பதால் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு சில மாதங்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவர். ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் சூழலுக்குப் பழகிவிட்டவர்கள் அங்கிருந்து கிளம்பவே மாட்டார்கள். பல நேரங்களில் ஊழியர்களை மயக்கும் வகையில் மஸ்க் உரையாற்றுவார். அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டுப் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள்.
மஸ்க்கின் மீது ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு கடுமையான இலக்குகளை நிர்ணயிப்பது. ஸ்பேஸ் எக்ஸில் மட்டுமில்லை மஸ்க் தொடங்கிய எல்லா நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தது. இதுகுறித்து ஒருமுறை பேசிய மஸ்க், ‘நான் செய்ய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. கடினமான இலக்குகள் உங்களைச் சோர்வாக்கும். தலையால் இடித்துச் சுவரை உடைக்க வேண்டும் என்று யதார்த்தத்துக்குப் புறம்பான இலக்குகளையா நான் நிர்ணயிக்கிறேன்? எல்லாரையும் கொஞ்சம் விரைவாக வேலை செய்யும்படிதான் பணிக்கிறேன்’ என்றார்.
தொடக்கத்தில் பெரும் சங்கடமாக இருந்த இந்தப் பிரச்னை போகப்போக வழிக்கு வந்தது. ஊழியர்கள் மஸ்க்கிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரிதலை வளர்த்துக்கொண்டனர். அவர் யதார்த்தத்துக்குப் புறம்பான காலக்கெடுவை விதித்தால் அப்போது சரியென்று தலையாட்டிவிட்டு, பிறகு தெளிவான தரவுகளுடன் பிரச்னையை விளக்கினால் அவர் புரிந்துகொள்வார் என்பது ஊழியர்களுக்குத் தெரிந்துபோனது.
அதேபோல ஒரு செயலைச் செய்யச் சாத்தியமில்லை என்றும் மஸ்க்கிடம் சொல்லக்கூடாது. இந்தக் கருவியை உருவாக்குவது கடினம், இந்தத் தேதிக்குள் அந்தத் திட்டத்தை முடிக்க முடியாது போன்ற பதில்களை அவரிடம் சொன்னால் அவ்வளவுதான். உடனே மஸ்க் எழுந்து, ‘நல்லது. நீங்கள் கிளம்பலாம். நான்தான் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. நான் வேறு சில நிறுவனங்களுக்கும் தலைவராக இருக்கிறேன். இப்படிப் பல பெரிய பொறுப்புகளில் இருக்கும் எனக்கு, உங்களுக்குரிய சிறிய வேலையையும் சேர்ந்துப் பார்க்க முடியாதா? அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்’ என்று பணியிலிருந்து நீக்கிவிடுவார்.
இதுபோன்ற பல நடவடிக்கைகளால் ஊழியர்கள் வாட்டி வதைக்கப்பட்டனர். அவர்கள் மஸ்க்கைத் தூற்றினர். அதேசமயம் அவருடைய அசாத்தியத் திறமைகளை வியந்து கொண்டாடவும் செய்தனர். ஸ்பேஸ் எக்ஸில் இருந்து மஸ்க்கால் நீக்கப்பட்டவர்கள் கூட அவரைப் புகழ்ந்து பேட்டியளித்ததற்கான சாட்சியங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. அவர்கள் அவரைக் கடவுளைப்போல வணங்குவதாக மஸ்க்கின் சரிதையை எழுதிய ஆஷ்லி வேலஸ் குறிப்பிடுகிறார்.
மஸ்க் தொடக்கத்தில் சாத்தியமில்லா இலக்குகளைத்தான் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களுக்கு நிர்ணயித்தார். பின்பு அதைப் புரிந்துகொள்ளவும் செய்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கிய புதிதில் ஊடகங்களைச் சந்தித்த மஸ்க் 2003ஆம் ஆண்டு ஃபால்கன் ராக்கெட் ஏவப்படும் என்றார். ஆனால் அவர் சொல்லியபடி செய்யவில்லை. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் தன் மேல் இருந்த தவறுகளை ஒப்புக்கொள்ளவும் செய்தார்.
‘உண்மையாக நான் அப்படியா சொன்னேன்? இருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் அது முட்டாள்தனமானது. ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கப்பட்டபோது எனக்கு மென்பொருள் துறையில்தான் அனுபவம் இருந்தது. அங்கு உங்களால் ஒரு வருடத்திற்கு உள்ளேயே திட்டமிட்ட மென்பொருள்களை உருவாக்கிவிட முடியும். அதை வைத்து நான் அப்படிச் சொல்லி இருப்பேன். ஆனால் விண்வெளித் துறை என்பது மென்பொருள் துறை கிடையாது. அதனைப் புரிந்துகொண்டுவிட்டேன்!’ என்றார்.
பெரும் நிறுவனங்களில் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிமுறைகளில் மஸ்க்குக்கு நம்பிக்கை இல்லை. மின்னஞ்சல் அனுப்பும் சம்பிரதாயம், ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்கும் சம்பிரதாயம், விளக்கம் அளிக்கும் சம்பிரதாயம் எதிலும் மஸ்க்குக்கு விருப்பமில்லை. ஒரு சட்டதிட்டம் முன்னேற்றத்தை அளிக்கவில்லை என்றால் நாம் அதைத் தூக்கியெறிந்துவிட வேண்டும் என்பதே மஸ்க் கூறும் அறிவுரை. ஸ்பேஸ் எக்ஸின் தாரக மந்திரமே இதுதான் – உங்கள் வேலையை விரும்புங்கள். வெற்றிகரமாகச் செய்து முடியுங்கள். யாருடைய வழிகாட்டுதல்களுக்காகவும் கட்டளைக்காகவும் காத்திருக்காதீர்கள். அப்படிச் செய்வதால் நேரம்தான் வீணாகும். அதேபோல ஒவ்வொரு செயலுக்கும் உங்களை யாராவது பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்ப்பவர்களால் உருப்பட முடியாது.
இதுபோன்ற வித்தியாசமான அணுகுமுறைகளால் திறமைசாலிகளிடம்கூட மஸ்க்குக்கு முட்டல் மோதல் ஏற்படுவதுண்டு. அந்தத் துறையில் பெரும் திறமைசாலிகளாக அறியப்பட்ட பலரைத் தன் போக்குக்கு ஒத்துவரவில்லை என்று பணியை விட்டே நீக்கி இருக்கிறார். உயர் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். அவரைப் பற்றி பெரும்பாலான அதிகாரிகள் கூறும்போது, ‘மஸ்க்குடைய மிகப்பெரிய எதிரியே அவர்தான். அவர் சக மனிதர்களை நடத்தும் விதத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான்’ எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
0
அமெரிக்க விண்வெளித்துறையை நவீனப்படுத்தியதிலும், அதன் பொருளாதாரப் போக்கை மாற்றியமைத்ததிலும் மஸ்க்குக்குப் பெரும் பங்குண்டு. ஸ்பேஸ் எக்ஸ் களத்துக்கு வருவதற்கு முன் வரை பழைய பாணியிலான ராக்கெட் தொழில்நுட்பங்களும், சாதனங்களுமே அமெரிக்காவில் பயன்பாட்டில் இருந்தன. அந்தத் தொழில்நுட்பங்களும் சோவியத் கால ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவையாக இருந்தன. அவற்றை முழுவதுமாக தூக்கியெறிந்துவிட்டு மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள், சொகுசு விண்கலன்கள் என 21ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பங்களைப் புகுத்தியதே ஸ்பேஸ் எக்ஸ்தான்.
ஸ்பேஸ் எக்ஸ் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் வந்தாலும் அங்கு முட்டல், மோதல் ஏற்பட்டது. நாசா, அமெரிக்க விமானப்படை, கூட்டமைப்பு விமான நிர்வாகம் என அத்தனை நிறுவனங்களுடனும் ஸ்பேஸ் எக்ஸ் சண்டையிட்டு வைத்திருந்தது. இதற்குக் காரணம் ஸ்பேஸ் எக்ஸ் கடைப்பிடித்த வேகம். குவாஜ் தீவில் ஃபால்கன் 1ஐ ஏவும் முயற்சி நடைபெற்றது அல்லவா? அப்போது ஸ்பேஸ் எக்ஸ் காட்டிய அவசரம் அரசாங்க அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. உலகம் முழுவதும் அரசாங்க அமைப்புகள் என்றால் ஒன்றுபோலத்தான் இருக்கும்போல. அமெரிக்காவிலும் ராக்கெட்டை ஏவ வேண்டும் என்றால் அரசாங்க அதிகாரிகளிடம் ஆயிரத்து எட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி வாங்க வேண்டியது இருந்தது. சிறிய வேலை முடிவதற்குக்கூட மாதக் கணக்கில் ஆனது. ஆமை வேகத்தில் வேலை நடைபெற்றது. இது மஸ்க்குக்குப் பிடிக்கவில்லை. கூட்டமைப்புகளுடன் சந்திப்பு ஒன்று நடந்தபோது மஸ்க் சண்டைக்குச் சென்றுவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. பிறகு அவருக்கு வேண்டியவர்கள் வந்து பஞ்சாயத்து செய்து பிரச்னையை முடித்து வைத்தனர்.
ஆனால் போகப்போக ஸ்பேஸ் எக்ஸின் அணுகுமுறையை நாசா ஏற்றுக்கொண்டுவிட்டது. ஸ்பேஸ் எக்ஸ் கையாளும் உத்திகள் நேரத்தையும், நிதியையும் சிக்கனப்படுத்துவதாக நாசாவுக்குப் புரிந்தது. சில திட்டங்களுக்கு நாசா கணக்கிடும் தொகையை விட ஐந்து மடங்கு குறைவான தொகையை ஸ்பேஸ் எக்ஸ் முன்வைக்கும். இந்த வெளிப்படையான அணுகுமுறை நாசாவைக் கவர்ந்தது. அதனால்தான் ஒரு கட்டத்தில் தன்னாலான அத்தனை தார்மீக ஆதரவையும் ஸ்பேஸ் எக்ஸுக்கு நாசா வழங்கியது.
அதேபோல மற்ற விண்வெளி நிறுவனங்களை அணுகுவதை விட ஸ்பேஸ் எக்ஸை அணுகுவது அரசாங்கங்களுக்குச் சுலபமாக இருந்தது. ஸ்பேஸ் எக்ஸில் ஒரு விஷயத்தைச் செய்வதற்கு நூறு சம்பிரதாயங்கள் கிடையாது. உனக்கு விண்வெளிக்குச் சரக்கைக் கொண்டு செல்ல வேண்டுமா? நேராக இணையதளத்துக்குச் சென்று ராக்கெட்டை முன்பதிவு செய்து கொள். அதிலேயே அத்தனை விவரங்களும் தரப்பட்டிருக்கும். இணையத்தில் ஒரு பொருள் வாங்குவதைப் போன்று ராக்கெட் புக் செய்யலாம் என்கிற சுலபமான அணுகுமுறையை ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியது. நேரடியான பேச்சு. சமரசமற்ற தன்மை. செயல்வேகம். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் இயங்கும் விதம். இதில் கேள்விகளே வரக்கூடாது என்பதில் மஸ்க் உறுதியாக இருந்தார்.
அதேபோல விண்வெளித்துறையில் ஜனநாயகமுறையை அறிமுகப்படுத்தியதும் ஸ்பேஸ் எக்ஸ்தான் எனலாம்.
விண்வெளித்துறையில் குறைவான நிறுவனங்களே இயங்கி வந்ததால் அரசாங்க ஒப்பந்தங்கள் பெரும்பாலும் போயிங், லாக்ஹீட் மார்டின் ஆகிய இரு நிறுவனங்களுக்கே செல்லும். ஒருகட்டத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து யு.எல்.ஏ என்கிற கூட்டு நிறுவனத்தை உருவாக்கிப் போட்டியே இல்லாமல் ஆக்கியது. அதனால் அந்த நிறுவனங்கள் நிர்ணயித்ததுதான் விலையாக இருந்தது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் தட்டிக்கேட்டது.
அமெரிக்காவில் ராணுவச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவுவது தொடர்பான வேலைகள் அனைத்தும் யு.எல்.ஏ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக ஏலம் கூட நடத்தப்படவில்லை. அதனால் அங்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. இதை எதிர்த்து மஸ்க் வாதிட்டார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஸ்பேஸ் எக்ஸ் தரப்பில் மஸ்க்கும், யு.எல்.ஏ தரப்பில் ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இருவரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதில் பேசிய மஸ்க், ‘போயிங், லாக்ஹீடும் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டி என்பதே இல்லாமல் ஆக்கிவிட்டன. அதனால் அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக இருக்கிறது. அமெரிக்க ராணுவ திட்டங்களுக்காக ராக்கெட் ஏவுவதற்கு 380 மில்லியன் டாலர்கள் வரை வசூலிக்கப்படுகின்றன. ஸ்பேஸ் எக்ஸால் வெறும் 90 மில்லியன் டாலர்களில் அதைச் செய்துவிட முடியும். நான் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்கவில்லை. போட்டிகளை உருவாக்குங்கள். அதன் மூலம் உங்களுக்குத்தான் நிதிச் செலவு குறையும். இதனால் அரசாங்கம் கணிசமான தொகையைச் சேகரித்து அதைச் செயற்கைக்கோள் தயாரிப்புக்குச் செலவிடலாம்’ என்றார் மஸ்க்.
யு.எல்.ஏவுக்கு ஆதரவாகப் பல செனட் உறுப்பினர்களே இருந்தனர். இருந்தாலும் மஸ்க் விடாப்பிடியாகப் போராடினார். இறுதியாக விண்வெளி ஒப்பந்தங்களை ஏலம் விடும் நடைமுறையை மீண்டும் ராணுவத் துறை கொண்டு வந்தது. அதேபோல நாசாவின் சில ஒப்பந்தங்களும் போட்டி இல்லாமலேயே நடைபெற்று வந்தன. இதற்கு எதிராகவும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன. அந்த நிறுவனங்களுக்கு நாசாவின் நிர்வாகத் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த லோரி கார்வெர் என்பவர் ஆதரவு தெரிவித்தார். உடனே அவருக்கு யு.எல்.ஏ மிரட்டல்களை விடுக்கத் தொடங்கியது. இதைக் கேள்வி கேட்ட மஸ்க்குக்கு எதிராகவும் குற்றச்சாட்டை வைத்தது. மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் வரி ஏய்ப்பு செய்தவர். அவர் ரகசியமாக அங்கே குடும்பம் ஒன்றை வைத்திருக்கிறார் என்பது போன்ற அவதூறுகளைப் பரப்பியது. ஆனாலும் அவர் உறுதியாக நின்று போராடி நாசாவின் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஏலம் விடும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.
மேலே சொன்ன உதாரணங்களை வைத்து ஸ்பேஸ் எக்ஸ் போட்டி நிறுவனங்களிடம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தது என்பது இல்லை. வேண்டிய நேரத்தில் பல்வேறு உதவிகளையும் செய்திருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை எடுத்துச் செல்வதில் ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய போட்டியாளராக ஆர்பிட்டல் சயின்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனமும் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்றுதான். அவற்றின் வேலை சிறிய செயற்கைக்கோள்களைப் பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு எடுத்துச் செல்வதாகும். ஆர்பிட்டல் சயின்ஸ் நிறுவனம் சொந்தமாக ராக்கெட்டுகளைத் தயாரித்ததில்லை. அது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு நிறுவனங்களையே நம்பி இருந்தது. அங்கிருந்து எஞ்ஜின் பாகங்களை வாங்கி இங்கே ராக்கெட்டை ஒருங்கிணைப்பது மட்டும்தான் அவர்களது வேலை.
ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கிருக்கும் சில சாதனங்களைப் பூமிக்குத் திரும்பி எடுத்து வரும் வேலையில் ஆர்பிடல் சயின்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. அந்நிறுவனத்தின் விண் கப்பல் ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கிய டிராகனின் தரத்துக்கு இல்லை. சோதனைகளின்போதே பலமுறை விண்வெளியில் செயலிழந்துவிட்டது. இருப்பினும் ஆர்பிடல் சயின்ஸின் ராக்கெட் ஏவ முயற்சி செய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படவே ராக்கெட் வெடித்துவிட்டது. மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யலாம், ஆனால் அதற்குச் சில லட்சம் டாலர்களாவது செலவாகும். உடனே அந்நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸிடம் உதவி கேட்டது. ஸ்பேஸ் எக்ஸ் மறுக்கவே இல்லை. அந்த வாரத்தில் விண்வெளிக்குப் புறப்பட்ட தன்னுடைய ராக்கெட் ஒன்றில் ஆர்பிடல் சயின்ஸ் கொண்டு செல்ல இருந்த பொருள்களையும் சேர்த்து எடுத்துச் சென்றது. இதனால் பல லட்சம் டாலர்கள் நஷ்டத்தில் இருந்து அந்நிறுவனம் தப்பித்தது.
இப்படிப் பல அதிரடி மாற்றங்களை ஸ்பேஸ் எக்ஸ் செய்திருந்தாலும் அது தன்னுடைய அடிப்படை லட்சியத்தில் இருந்து பாதை விலகியதே இல்லை. மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப வேண்டும். அவர்களை அங்கே குடியமர்த்த வேண்டும். அதுதான் அதன் பிறப்பின் நோக்கம். இதில் மஸ்க் உறுதியாக இருக்கிறார். இதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தும் எந்தத் திட்டங்களையும் அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. இதற்காகக் குறுகிய கால லாபம் தரும் பல திட்டங்களை அவர் மறுத்து இருக்கிறார். அதில் ஒன்றாகத்தான் அவர் இன்னும் ஸ்பேஸ் எக்ஸைத் தனியாராகவே வைத்திருக்கிறார்.
மஸ்க்கின் லட்சியம் எப்படி நீண்ட காலத்தைக் கருத்தில் கொண்டது என்பதை ஒரே ஒரு நிகழ்வு சாட்சியம் சொல்லும்.
டிசம்பர் 2010இல் ஸ்பேஸ் எக்ஸ் தனது டிராகன் விண்கலத்தைப் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாக இருந்தது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பல மாதங்கள், ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் உழைத்ததற்குக் கிடைத்த வெற்றி. இதைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ்க்கு இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றை மஸ்க் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அந்தத் திட்டத்தில் பணியாற்றிய முக்கியமான 30 ஊழியர்களைக் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அந்த ஊழியர்களும் குடும்பம், குட்டிகளோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
கொண்டாட்டம் தொடக்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு அவசர அவசரமாகத் தனது ஊழியர்களை அழைத்த மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் அடுத்ததாகச் செய்ய வேண்டிய பணிகள், எதிர்கால ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த சாத்தியங்கள் ஆகியவற்றைக் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு வந்திருந்த ஊழியர்களின் மனைவிமார்கள் பொறுமை இழந்தனர். இவர் என்ன கொண்டாட்ட நிகழ்ச்சி என்று கூப்பிட்டு வந்து இப்படிப் பாடம் எடுக்கிறாரே என ஆத்திரமடைந்தனர்.
அப்போது தனது ஊழியர்களுடன் வெளியே வந்த மஸ்க் அவர்களுக்குச் சிறப்பு வெகுமதி ஒன்றை அளிக்கப்போவதாக அறிவித்தார். கோபமான சூழல் எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறியது. மஸ்க் பேசத் தொடங்கினார்.
‘நீங்கள் நாசாவின் திட்டத்துக்காகக் கடுமையாக உழைத்தவர்கள். அதற்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் நான் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்போகிறேன். நீங்கள் பணியாற்றியதற்குப் பலனாக ஸ்பேஸ் எக்ஸின் சில பங்குகளுக்கான உரிமையை நான் வழங்க இருக்கிறேன். எதிர்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸின் பங்குகள் விற்பனைக்கு வந்தால் அன்றைய விலையில் இந்தப் பங்குகள் உங்களுக்குக் கிடைக்கும்’ என்றார்.
மஸ்க்கின் அறிவிப்பைக் கேட்ட ஊழியர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் மஸ்க் தங்களுக்கு ஏதோ பணத் தொகையோ, சம்பள உயர்வோ அறிவிக்கப்போகிறார் என்று நினைத்தனர். ஆனால் அவரோ அப்படி எதுவும் செய்யாமல், பங்குகளைத் தருவதாக ஒப்பந்தம் போடப்போகிறேன் என்கிறார். இத்தனைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்கு நிறுவனம்கூட இல்லை. தனியார் நிறுவனமாகவே இருக்கிறது. அந்நிறுவனம் எப்போது பொதுப் பங்குகளை வெளியிட்டு, எப்போது தங்களுக்குப் பணம் கிடைக்கும்? கையில் பணமாகக் கொடுத்தால்தானே நல்லது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
உடனே மஸ்க் சொன்னார். ‘இந்தப் பங்குகளின் மதிப்பு உங்களுக்கு இப்போது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆயிரம் டாலர்களுக்கு அதிகமான தொகை ஒவ்வொரு பங்கின் மூலமும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உடனேயே வெகுமதியைக் காண வேண்டும் என்று இருக்கிறீர்கள். நான் தரப்போகும் பரிசு அதைவிட மதிப்பு வாய்ந்தது’ என்றார்.
இப்போதும் ஊழியர்களுக்குத் திருப்தி இல்லை. ஸ்பேஸ்க் எக்ஸை எப்போது பொதுப் பங்கு நிறுவனமாக்க மாற்றுவீர்கள் என்றாவது சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினர். மஸ்க் எதுவும் சொல்லவில்லை. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய உடனேயே ஒரு மின்னஞ்சலை எழுதினார்.
அன்புள்ள ஸ்பேஸ் எக்ஸ் நண்பர்களே,
நான் கொடுத்த பரிசு உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் எல்லோரும் எப்போது ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்கு நிறுவனமாக மாறும். எப்போது கைக்குப் பணம் வந்து சேரும் என்பதில் குறியாக இருக்கிறீர்கள். ஸ்பேஸ் எக்ஸின் பங்குகள் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும். அதில் துளிகூட எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அந்நிறுவனம் எப்போது பொதுப் பங்கு நிறுவனமாக மாறும் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது.
ஸ்பேஸ் எக்ஸின் லட்சியத்துக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் நான் செய்யத் தயாராக இல்லை. அதனால் செவ்வாய் கிரகப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு முன் ஸ்பேஸ் எக்ஸை பொதுப் பங்கு நிறுவனமாக மாற்றுவதிலும் எனக்கு விருப்பமில்லை. செவ்வாயில் மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதே ஸ்பேஸ் எக்ஸின் அடிப்படை லட்சியம். அந்த லட்சியத்தில் பொதுப் பங்கு நிறுவனம் என்ற ஆசை மண்ணை வாரி இறைத்துவிடும்.
டெஸ்லா மற்றும் சோலார் சிட்டி ஆகிய நிறுவனங்களை நடத்தியவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். நமது லட்சியத்தின் நீண்ட காலத் தேவையைக் கருத்தில் கொண்டு நான் ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்கு நிறுவனமாவதைத் தவிர்க்கிறேன். ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் பொதுப் பங்கு நிறுவனத்தில் ஏற்படும் சிக்கல்களை அனுபவித்தது இல்லை என்பதால் அவசரப்படுகிறார்கள். பொதுப் பங்கு நிறுவனம் அதிக லாபம் தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை.
பெரிய தொழில்நுட்ப மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் பொதுப் பங்குகள் நிலைத்தன்மை இல்லாததாக இருக்கும். பொது முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால லட்சியங்கள் குறித்த அக்கறை கிடையாது. அவர்கள் எப்போதும் குறுகிய கால லாப நோக்கில் செயல்படுபவர்கள். அப்போதைக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள். செவ்வாய் கிரகத்துக்குக் குடிபெயர வேண்டும் என்ற நமது லட்சியம் அவர்களுக்கு உடனே லாபத்தைக் கொடுக்கவில்லை என்றால் அதை மாற்றவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். அவர்கள் லாபத்துக்காக நமது லட்சியத்தில் இருந்து வழிதவறிச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.
செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளையாவது செய்தவுடன்தான் ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்குகளுக்கு வழியைத் திறக்கும். அப்போது உங்களுக்கான பலனும் கிடைக்கும். அதுவரை பொறுமை கொள்ளுங்கள். உங்களுக்கு நான் உத்தரவாதம் அளித்த பங்குகள் உங்களுக்குத்தான். அதில் எந்தக் குளறுபடியும் இல்லை. பிறகு எதற்காக அவசரப்படுகிறீர்கள்? இல்லை, அதுவரை என்னால் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஸ்பேஸ் எக்ஸில் வேலை இல்லை. அவர்கள் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பார்த்துக்கொள்ளலாம்.
அன்புடன்
மஸ்க்.
மஸ்க் நினைத்திருந்தால் ஸ்பேஸ் எக்ஸை எப்போதோ தனியார் நிறுவனமாக மாற்றி அதை மேலும் லாபகரமானதாகச் செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. லட்சியத்துக்கும், லாபத்துக்கும் உள்ள வேறுபாடுகளை மஸ்க் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். லட்சியத்துக்கு இடையூறாக லாபம் வருகிறது என்றால் அதையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை. மஸ்க் தனது கனவுக்குக் கொடுக்கும் சிறிய விலை அது.
(தொடரும்)