Skip to content
Home » எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

எலான் மஸ்க் #60 – ஒரு போரிங் கதை

எலான் மஸ்க்

2018 ஆண்டு ஒரு நிகழ்ச்சி. எலான் மஸ்க் மேடையில் ஏறினார். அவருடன் அவர் வளர்க்கும் கேரி என்கிற நத்தையும் முதுகில் அமர்ந்துகொண்டு வந்தது. என்னைப்போலக் கேரியும் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் வசித்து வருகிறது. அந்த நகரம் முழுக்கச் செல்வந்தர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களால் நிரம்பியது. அதனால் எங்குத் திரும்பினாலும் நடிகர்கள், முகவர்கள், சொகுசுக் கார்கள்… விளைவு, கடும் போக்குவரத்து நெரிசல். நீங்கள் சென்னையில் வசித்து வந்தால் பெருங்களத்தூரை நினைவுகொள்ளலாம். பெங்களூரில் வசித்து வந்தால் சில்க் சாலை. இடம் மாறினாலும் நெரிசல் ஒன்றுதான். ஒரு மணி நேரத்துக்கு உங்களால் ஒரு கிலோ மீட்டர்தான் நகர முடியும். வாகன நெரிசலில் நின்றிருப்பதே உங்களுக்கு மன அழுத்தம், கோபம், ஆற்றாமை எல்லாவற்றையும் வரவழைத்துவிடும்.

வாகன நெரிசல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறது. ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. நீங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில் வாழ்ந்தால் வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த நேரம் உங்களுக்குக் கிடைத்திருந்தால் நீங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் செலவழித்து இருக்கலாம். புதிதாக ஒன்றைக் கற்றிருக்கலாம். நிம்மதியாக ஒரு குட்டித் தூக்கமாவது போட்டிருக்கலாம். ஆனால் இப்போது வேறு வழியே இல்லை. சிக்கிச் சின்னாபின்னமாக வேண்டியதுதான்.

‘இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது!’ என்றார் மஸ்க்.

‘பெரிய நகரங்களுக்குக் கீழே சுரங்கம் தோண்டுவோம். அந்தச் சுரங்கத்தின் வழியாகப் போக்குவரத்தை அமைப்போம்.’

‘சுரங்க வழிப் போக்குவரத்தா? அதுதான் பல்வேறு நகரங்களில் இருக்கிறதே. அங்கேயும் வாகனங்கள் வரிசை கட்டித்தான் நிற்கின்றன. பின் செலவழித்துச் சுரங்கம் தோண்டி, என்ன பயன்?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதில் கேள்வி கேட்டார்.

‘இல்லை வாகனங்களுக்குச் சுரங்கத்துக்கு அடியில் அனுமதி கிடையாது!’ இது மஸ்க்.

‘அப்படியென்றால் ரயில் விடப்போகிறீர்களா? ஏற்கெனவே சுரங்க ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் எல்லாமும் இருக்கிறது. மீண்டும் புதிதாக ஒரு ரயில் திட்டமா?’

‘அதுவும் இல்லை. ரயில்கள் நல்ல திட்டம்தான். ஆனால் தாமதமாகப் பயணிப்பவை. நீங்கள் விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லும் இடத்துக்கு, ரயிலில் ஐந்து மணி நேரம் ஆகிறது. நான் சொல்வது அதிவேகப் பயணம்.’

‘என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை.’

‘நான் வெற்றிடச் சுரங்கத்தை (Vaccum Tunnel) அமைக்கப்போகிறேன். அதில் மக்களையும், வாகனங்களையும் ஏற்றிச் செல்லும் ‘லூப்’ எனப்படும் போக்குவரத்தை ஏற்படுத்தப்போகிறேன். இந்தப் போக்குவரத்தின் மூலம் நீங்கள் மின்னல் வேகத்தில் பயணிக்கலாம். இதனால் உங்களுடைய நேரம், செலவு, உடல்நிலை எல்லாமும் மிச்சப்படும்.’

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மஸ்க் ஏதோ விளையாடுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மஸ்க் விளையாடவில்லை. அவர் சொன்னபடியே லூப் எனப்படும் சுரங்கப் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் ‘போரிங் கம்பெனி’.

ஸ்பேஸ் எக்ஸ்ஸின் துணை நிறுவனமாக போரிங் கம்பெனி தொடங்கப்பட்டது. போரிங் நிறுவனத்தின் திட்டம் இதுதான். பெரும் நகரங்களில் நூற்றுக்கணக்கான சுரங்கத்தை அமைக்க வேண்டும். அவற்றை ஒன்றுக்கு ஒன்று இணைக்க வேண்டும். இந்தச் சுரங்கத்துக்குள் ‘போட்’ எனப்படும் தன்னிச்சையாக இயங்கும் அதிவேக மின்சார வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வாகனத்தில் மக்கள் ஏறி மணிக்கு 1120 கி.மீ வேகத்தில் பயணம் செய்யலாம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம்.

எல்லாம் சரிதான். ஆனால் அதில் பெரிய சிக்கல் ஒன்று இருந்தது. பூமிக்கு அடியில் சுரங்கம் அமைப்பது சாதாரண விஷயம் அல்ல. சிறிய ஊர்களில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்குக் குழி தோண்டி வைத்திருந்தாலே சாலை ஸ்தம்பித்துவிடும். பெரும் நகரங்களை எல்லாம் இணைக்கும் வகையில் சுரங்கம் அமைப்பது என்றால் நடக்கிற காரியமா?

‘பிரச்னை இல்லை!’ என்றார் மஸ்க். ‘போரிங் கம்பெனி வேலையில் இறங்கினால் அதைப்பற்றி கவலையே பட வேண்டாம். மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தொந்தரவு செய்யாத வகையில் இந்தப் போக்குவரத்து அமையும். பூமியைக் குடையும்போது இரைச்சல், அதிர்வு என ஒன்றுமே இருக்காது. அப்படி ஒரு வேலை நடப்பதே உங்களுக்குத் தெரியாது. திடீரென்று ஒருநாள் இந்தப் போக்குவரத்தைத் தொடங்கிவிட்டோம் என்ற அறிவிப்பு மட்டும் உங்களுக்கு வரும்’ என்றார்.

அவர் விளையாட்டாகச் சொல்லவில்லை. மக்களைத் தொந்தரவு செய்யாமல் பூமியைத் துளையிட்டு சுரங்கம் தோண்டுவதற்கு வேகமாகச் சுரங்கம் தோண்டும் இயந்திரம், புதிய தொழில்நுட்பம், புதிய சிந்தனை எனப் பல விஷயங்கள் தேவைப்பட்டன. இதை எல்லாவற்றையும் போரிங் நிறுவனம் உருவாக்கியது. பொதுவாகச் சுரங்கம் தோண்டும்போது இயந்திரம் சிறிது தூரத்துக்குத் துளையிடும். பிறகு அதில் ஏற்பட்டிருக்கும் மண் சரிவுகளை, தூசுக்களை அகற்றிவிட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். பிறகு மீண்டும் தோண்ட வேண்டும். ஆனால் போரிங் நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கும் தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் தொடர்ந்து துளையிடவும், அங்கேயே கட்டமைப்புகளை ஏற்படுவதையும் நிகழ்த்தக்கூடியதாக இருந்தது.

சரி, இந்த நிறுவனத்துக்கும் மஸ்க் வளர்க்கும் நத்தைக்கும் என்ன சம்பந்தம்?

2017 ஆம் ஆண்டில் இருந்து போரிங் நிறுவனம் சோதனை முயற்சியாகச் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது. இந்தப் பணி எவ்வளவு வேகமாக நடைபெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத்தான் கேரி என்ற நத்தையைத் தான் வளர்த்து வருவதாக மஸ்க் கூறினார்.

சுரங்கம் அமைப்பது என்று சாதாரணப் பணியல்ல. பூமியைக் குடைந்து உள்ளே செல்ல வேண்டும். எவ்வளவு சக்தி வாய்ந்த இயந்திரமாக இருந்தாலும் மெதுவாகத்தான் துளையிட்டு உள்ளே நுழைய முடியும். இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வேகத்தை நத்தையுடன் ஒப்பிட்டால் 14 மடங்கு குறைவு. ஒரு நத்தை நகரும் வேகத்தை விட மெதுவாகத்தான் அந்த இயந்திரம் நகர முடியும். அதனால் அந்த நத்தையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக நகரும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குவதுதான் போரிங் நிறுவனத்தின் இலக்கு. அத்தகைய இயந்திரத்தை உருவாக்கிவிட்டால் அதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும். சுரங்கம் அமைப்பதற்குப் பின் இருக்கும் பொருளாதாரத்தையும் வளர்க்க முடியும் என்றார் மஸ்க்.

மேலும் இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை மனிதர்கள் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும் வகையிலும் உருவாக்க மஸ்க் திட்டமிட்டிருந்தார். போரிங் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் மற்ற நிறுவனங்களை விட 10 மடங்கு குறைந்த விலையில் மேம்பட்ட பணியைச் செய்தன. இந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காகத்தான் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கப்போவதாக மஸ்க் அறிவித்தார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலிருந்து அதன் விமான நிலையத்துக்கு வெறும் 8 நிமிடங்களில் சென்றுவிடலாம். இந்தப் பயணச் செலவு வெறும் 1 டாலர்தான் ஆகும் என அறிவித்தார். இந்தப் போக்குவரத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இலவசப் பயணமும் அனுமதிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

இந்தத் திட்டத்தைச் சுற்றி வேறு ஒரு யோசனையும் மஸ்க்குக்கு இருந்தது. பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஏராளமான மணல், தூசு, கசடுகள், கற்கள் ஆகியவை வெளியேறும் இல்லையா? இவற்றை வெளியில் எடுத்துச் சென்று கொட்ட முடியாது. உள்ளேயும் வைக்க முடியாது. பிறகு என்ன செய்வது? சுரங்கம் தோண்டும்போது கிடைக்கும் மணல் கசடுகளையும் சிறிய அளவு கான்கிரீட்டையும் கலந்து, அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்போது சிமெண்ட் கற்களை உருவாக்கலாம் என்பது அவரது திட்டம். இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டடம் கட்டும்போது அது கலிஃபோர்னியாவில் ஏற்படும் கடுமையான நில நடுக்கத்தைக் கூடத் தாங்கும் வலிமையைக் கொண்டிருக்கும் என்றார். இந்தக் கற்கள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் வரும்போது அதன் விலையை 10 சென்ட் டாலர்கள் வைக்க போரிங் நிறுவனம் திட்டமிட்டது. இதுவும் மற்றக் கற்களின் விலையை (25 சென்ட்) விடக் குறைவு.

இப்படியாக போரிங் நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் அந்நிறுவனத்துக்கான முதல் ஒப்பந்தம் 2018 ஜூலையில் முடிவானது. சிகாகோ நகரின் அப்போதைய மேயர் ராஹ்ம் இமானுவேல் சிகாகோவின் டவுன்டவுனில் இருந்து, ஓஹேர் சர்வதேச விமான நிலையத்துக்குச் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை அதற்கு வழங்கினார். சாதாரணமாக வார நாட்களில் டவுன்டவுனில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு ஒரு மணி நேரமாகும். ஆனால் இப்போது எக்ஸ்பிரஸ் லூப் எனப்படும் போக்குவரத்துத் தொடங்கப்படவுள்ளது. நிலத்தில் இருந்து 30 முதல் 60 அடி ஆழத்தில் அமையவுள்ள இந்த லூப்பில் வெறும் 12 நிமிடங்களில் நாம் விமான நிலையத்துக்குச் சென்றுவிட முடியும். சாதாரணமாக டாக்சியில் செல்வதற்குப் பயணிகளுக்கு 50 டாலர்கள் செலவாகும் என்றால், இந்த லூப்பில் வெறும் 25 டாலர்களுக்குச் செல்ல முடியும் என்றார் இமானுவேல்.

இந்தச் சுரங்கத்தில் இயக்கப்படும் வாகனத்தில் 20 பேர் வரைப் பயணிக்கலாம். ஒரு மணி நேரத்தில் 2000 பேர் பயணிக்கும் வகையில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் வாகனங்களை இயக்கத் திட்டமிடப்பட்டது. சிகாகோவில் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதில் மஸ்க்குக்கு ஒரு பெருமிதம் இருந்தது. காரணம் முதன் முதலில் அமெரிக்காவில் ரயில் திட்டத்தைத் தொடங்கியது சிகாகோதான். முதல் விமானப் போக்குவரத்தை அமைத்தது சிகாகோதான். அதேபோல இந்த லூப் போக்குவரத்தையும் சிகாகோவில் ஏற்படுத்திவிட்டால் அந்த வரலாற்றுப் பெருமைக்குப் போரிங் நிறுவனம் காரணமாக இருக்கும் என்று மஸ்க் கருதினார்.

ஆனால் அவர் நினைத்தது நடைபெறவில்லை. போரிங் நிறுவனம் தனது பணிகளைத் தொடங்கிய சில மாதங்களிலேயே திட்டம் கைவிடப்பட்டது. சிகாகோ மேயர் இமானுவேலின் பதவிக் காலம் 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது. புதிதாகப் பதவியேற்ற மேயருக்கு மஸ்க்குடன் மோதல். அவருக்கு இந்தத் திட்டத்தைத் தொடர விருப்பமில்லை. அதனால் அத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. ஆனால் போரிங் நிறுவனம் விடவில்லை. அமெரிக்காவில் ஏதாவது ஒரு நகரத்தில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தே தீருவேன் என மஸ்க் பிடிவாதமாகச் செயல்பட்டார்.

அதன் நிர்வாகிகள் தினம் தினம் ஒவ்வொரு நகரமாகச் சென்று மேயர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். இரவு பகலாக அவர்கள் அமெரிக்க முழுவதும் பயணித்தனர். இறுதியாக லாஸ் வேகாஸ் நகர மேயர், மஸ்க்குடைய போக்குவரத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். லாஸ் வேகாஸ் நகரில் ஒரு பகுதியில் வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் சிறிய திட்டம் இது. ஆனாலும் அது முக்கியமான திட்டமாக இருந்தது.

அதுவரை லாஸ் வேகாஸ் நகரத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் பயணிக்க 3 கிலோ மீட்டருக்கு 45 நிமிடங்கள் எடுத்தது. போரிங் நிறுவனம் பணியில் இறங்கி சத்தமில்லாமல் வேலையை முடித்துக் கொடுத்தது. உண்மையில் கூட்ட நெரிசல் உள்ள அந்த நகரில் அப்படி ஒரு வேலை நடப்பதே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. திட்டமிட்டபடி வேலையை முடித்து 2021ஆம் ஆண்டு முதல் லூப் போக்குவரத்துச் சேவை அமலுக்கு வந்தது. அதன்பிறகு கூட்ட நெரிசல் மிகுந்த அந்தப் பகுதியை வெறும் 2 நிமிடங்களில் பொதுமக்களால் கடக்க முடிந்தது. இப்போது அந்தச் சுரங்கத்தில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு 4500 பயணிகள் வரை பயணித்து வருகின்றனர். மஸ்க்கின் வேலையைப் பார்த்துப் பிரமித்த வேகாஸ் நகரம் வேறு சில பகுதிகளிலும் இந்த லூப் போக்குவரத்தை அமைப்பதற்கு போரிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஹைப்பர்லூப் அதிவேகப் போக்குவரத்து

நகரம் முழுவதும் இணைக்கும் லூப் போக்குவரத்துச் சேவை கவனத்தைப் பெறத் தொடங்கியவுடனேயே மஸ்க் வேறு ஒரு திட்டத்தையும் முன்வைத்தார். அந்தத் திட்டத்தின் பெயர் ஹைப்பர் லூப் திட்டம். ஹைப்பர் லூப் என்பது தற்போது நடைமுறையில் உள்ள லூப் போக்குவரத்தைவிட அதிவேக பொதுப் போக்குவரத்து அமைப்பு. இதில் 1200 கிலோ மீட்டர் பயணத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் செய்ய முடியும் என்றார் மஸ்க்.

உண்மையில் இந்த ஹைப்பர் லூப் என்ற திட்டம் போரிங் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவரது யோசனையில் உதித்த திட்டம். அதை யாரிடமும் அவர் சொல்லவில்லை. பின்பு 2013ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை மஸ்க் வெளியிட்டுவிட்டார். அந்தக் கட்டுரை பெரும்பாலானோர் கவனத்தைப் பெற்றது. மஸ்க்கின் கட்டுரையை வாசித்த அவரது நண்பரும் முதலீட்டாளருமான ஹெர்வின் பீஷ்வார் என்பவர், அந்தத் திட்டத்தைப் பற்றி அப்போதைய அதிபர் ஒபாமாவிடம் ஒரு சந்திப்பின்போது பேசினார். ஒபாமாவுக்கும் அந்தத் திட்டம் மிகவும் பிடித்துவிட்டது. உடனே மஸ்க்கைச் சந்திக்க வேண்டும் என்றார். இருவரும் கலந்து பேசினர். அதன்பிறகுதான் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் மஸ்க் இறங்கினார்.

போரிங் நிறுவனமும் ஸ்பேஸ் எக்ஸும் இணைந்து இந்தத் திட்டம் குறித்த போட்டி ஒன்றை 2015 முதல் 2019 வரை நடத்தின. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு சுரங்கத்தில் பயணிக்கும் அதிவேக ஹைபர் லூப் வாகனத்தை வடிவமைக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் விதித்தது. இந்தப் போட்டியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் இறுதியில் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களிடம் அதிவேகத்தில் செல்லக்கூடிய, அதே நேரத்தில் விபத்து நிகழ வாய்ப்பில்லாத ஒரு வாகனத்தை உருவாக்குவதற்குப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒரு மாணவர்கள் குழு வெற்றி பெற்றது. அந்த மாணவர்கள் குழு உருவாக்கிய வாகனம் நேரத்துக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பயணிக்கும்படி இருந்தது. அவர்களிடம் பெற்ற திட்டத்தை மேம்படுத்தி ஹைப்பர்டியூப் எனப்படும் முதல் சோதனை அமைப்பை போரிங் நிறுவனம் உருவாக்கியது.

8.8 மைல் தூரத்தில் 6 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்துக்கு வெளியே அமைந்துள்ளது. அதில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் உருவாக்கிய வாகனம் 200 மைல் வேகத்தில் பயணித்தது. அடுத்ததாக 300 மைல்கள் வேகத்துக்குப் பயணிக்கும் வாகனத்தை அந்நிறுவனம் உருவாக்க முயன்று வருகிறது.

சரி, ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்றால் என்ன? அது எப்படி இயங்கும்?

ஹைப்பர் லூப் என்பது சுரங்கப் போக்குவரத்து அமைப்புதான். நகரங்களுக்கு இடையே சுரங்கங்கள் தோண்டி அதில் பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் குழாய்க்குள்தான் மக்கள் பயணிக்க முடியும். இந்தக் குழாய்க்குள் இயங்குவதற்குத் தனி வாகனம் பயன்படுத்தப்படும். வாகனம் என்றவுடன் ஒரு காரையோ, ரயிலையோ கற்பனை செய்ய வேண்டாம். அதுவும் ஒரு குழாய்தான். அந்தக் குழாய் குறைந்த மின்காந்த அழுத்தத்தால் இயங்கும். அந்தக் குழாயில் நீங்கள் ஏறி அமர்ந்தால் காற்றில் மிதந்து செல்வதுபோல இருக்கும். போக்குவரத்து இடையூறு, விபத்து ஏற்படும் ஆபத்து எதுவும் கிடையாது.

இது எப்படி இயங்கும்? ஹைப்பர்லூப் குழாய்களுக்குள் மின்காந்த விசை செலுத்தப்படும். இதன்மூலம் கிடைக்கும் உந்து சக்தியில் வாகனம் நகரும். பொதுவாக ஒரு பொருள் காற்றில் இயங்கும்போது அதில் உராய்வு ஏற்படுவதால் அந்தப் பொருளின் வேகம் மட்டுப்படும். ஆனால் ஹைப்பர் லூப் சுரங்கங்களில் காற்று கிடையாது. அதனால் உராய்வும் கிடையாது. இதன்மூலம் நாம் நினைக்கும் உட்சபட்ச வேகத்தில் வாகனங்களை இயக்கலாம். இந்தப் போக்குவரத்தை இயக்குவதற்கு வேண்டிய மோட்டார்கள், பேட்டரிகளை டெஸ்லாவே உருவாக்கித் தரும் என்று மஸ்க் கூறியுள்ளார். சூரிய ஆற்றல் மூலம் இதற்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்துகொள்ளலாம் என்றும், இந்த ஹைப்பர் லூப்பில் பயணிக்க வெறும் 20 டாலர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்.

சரி நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தச் சுரங்கம் இடிந்து விடாதா? கிடையாது. விஞ்ஞானிகள் நில அதிர்வு ஏற்படும்போது பாதுகாப்பான இடமே சுரங்கம்தான் எனச் சொல்கின்றனர். நில அதிர்வு மேற்பரப்பை எட்டும்போதுதான் கடுமையாக இருக்கும். அதனால் சுரங்கங்கள் பொதுவாக அதிர்வைத் தாங்கும் வகையிலேயே கட்டப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக ஹைப்பர் லூப்பை முன்வைக்கிறார் மஸ்க்.

போரிங் நிறுவனம் மட்டும் இந்த ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தில் ஈடுபடவில்லை. உலகம் முழுவதும் விர்ஜின், ஹைப்பர் லூப் டிடி என வேறு சில நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு வருகின்றன. விர்ஜின் நிறுவனம் இதற்கான சோதனை ஓட்டத்தை 2020ஆம் ஆண்டே நடத்திவிட்டது. போரிங் நிறுவனமோ 2022ஆம் ஆண்டு இறுதியில்தான் முழு வேகச் சோதனைகளையே தொடங்கியது. அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அந்தப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் டெஸ்லா கார்களே இந்தியாவுக்கு வராத நிலையில் போரிங் நிறுவனத்தின் ஹைப்பர் லூப் திட்டம் இப்போதைக்கு வருமா என்று தெரியவில்லை. ஆனால் விர்ஜின் நிறுவனம் சில இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்துக்கான சோதனைகளைச் செய்து வருகிறது. இந்தத் திட்டம் மட்டும் வந்துவிட்டால் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *