பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன்.
ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த முகத்தோடிருக்கும் ஒரு சிறுமியுடன் குடை பிடித்தபடி நடந்துவருகிறார் கோர்பசேவ். இருவரும் ஓர் உணவகத்துக்குள் நுழைகிறார்கள். வெளியில் ரஷ்ய மொழிப் பெயர்ப்பலகை தொங்குகிறது. அதை நம்மால் படிக்கமுடியாவிட்டாலும், அவர்கள் செல்வது பீட்சா ஹட்டுக்குள் என்பதை முதல் பார்வையிலேயே நம்மால் சொல்லிவிடமுடியும்.
அவர்கள் நுழைந்ததும், ‘ஓ, கோர்பசேவ்’ என்று உள்ளே அமர்ந்திருக்கும் பலர் வியப்போடு திரும்பிப் பார்க்கிறார்கள்.
அவரைப் பார்த்தபடி ஒரு ரஷ்யக் குடும்பம் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறது.
‘அவரால்தான் நமக்குப் பொருளாதாரக் குழப்பம் ஏற்பட்டது’ என்கிறார் அப்பா.
‘அவரால்தான் நமக்கு வாய்ப்புகள் பெருகின’ என்கிறார் மகன்.
‘அவரால்தான் நிலையற்ற அரசியல்தன்மை உருவானது.’
‘அவரால்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது.’
‘கடும் குழப்படிகள்.’
‘நம்பிக்கை.’
‘நிலையற்ற அரசியல்தன்மை.’
அதுவரை அமைதியாக இருந்த அம்மா குறுக்கிடுகிறார்.
‘அவரால்தான் நமக்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன.’ பார்வையைச் சுழலவிட்டபடி அவர் சொல்கிறார். ‘பீட்சா ஹட் போல.’
இப்போது என்ன சொல்கிறீர் என்பதுபோல் மகன் அப்பாவைப் பார்க்க, அவர் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். தனது இருக்கையிலிருந்த எழுந்து நின்று முழங்குகிறார். ‘கோர்பசேவ் வாழ்க!’
அம்மாவும் எழுந்துகொள்கிறார். ‘கோர்பசேவ் வாழ்க!’
கோர்பசேவ் நாணம் கலந்த புன்னகையொன்றை அவர்களை நோக்கி வீசுகிறார்.
இப்போது பீட்சா ஹட்டிலுள்ள எல்லோரும் ஒரு குரலில் முழங்குகிறார்கள். ‘கோர்பசேவ் வாழ்க!’
காட்சி மறைகிறது. பீட்சா ஹட் முத்திரைக்குக் கீழே, ‘நல்ல நண்பர்கள். நல்ல பீட்சா’ எனும் வாசகத்தைப் பார்க்கிறோம்.
இந்த விளம்பரம் வெளிவந்தபோது சோவியத் யூனியன் சரிந்து சில ஆண்டுகள் கழிந்திருந்தன. அந்தச் சரிவை முன்நின்று சாத்தியப்படுத்தியவராகப் பரவலாக அறியப்படும் சோவியத்தின் கடைசி தலைவர் மிகெய்ல் கோர்பசேவ் தன் பதவியைத் துறந்திருந்தார். தன் செல்வாக்கையும்தான். சிதிலங்களிலிருந்து ஒரு புதிய ரஷ்யாவைக் கட்டமைக்கவேண்டும் என்னும் அவர் கனவு முடிவுக்கு வந்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதவியில் அமர்ந்தவர், மிகுந்த மனக்கசப்புகளோடு விலகவேண்டியிருந்தது.
தன் சொந்த நாட்டைவிட எல்லைக்கு வெளியில் நிறைய நண்பர்கள் இப்போது அவருக்குக் கிடைத்திருந்தனர். ரஷ்யர்களைவிட மற்றவர்களால் அவரைப் புரிந்துகொள்ளமுடிந்தது, அங்கீகரிக்கமுடிந்தது, கொண்டாடவும் முடிந்தது. மேற்குலகம் விரும்பி நேசிக்கும் ஒரு ரஷ்யராக அவர் மாறிப்போனார். நீங்கள் எந்தப் பக்கத்தில் நின்று பார்க்கிறீர்கள் என்பதை வைத்து ஒரே நேரத்தில் காத்தவராகவும் அழித்தவராகவும்; உருவாக்கியவராகவும் உடைத்தவராகவும்; தோழராகவும் துரோகியாகவும்; கடவுளாகவும் சாத்தானாகவும் மாறிப்போனார்.
பீட்சா விளம்பரம் ரஷ்யாவில் ஒளிபரப்பப்படவில்லை. மேற்குலகம் தயாரித்த அந்த விளம்பரத்தை மேற்குலகம்தான் கண்டது, கொண்டாடியது.
0
கோர்பசேவின் மறைவைத் தொடர்ந்து (30 ஆகஸ்ட் 2022) மேற்குலகம் அவரை எப்படியெல்லாம் நினைகூர்ந்திருக்கிறது என்பதைக் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறேன்.
‘வரலாற்றில் இவர் அளவுக்கு அதிகாரங்களை விட்டுக்கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. அவ்வாறு செய்ததன்மூலம் வரலாற்றில் வேறேவரையும்விட அதிகம் பேரை இவர் மீட்டிருக்கிறார்’ என்கிறார் யுவால் நோவா ஹராரி.
ஜெர்மன் நாடாளுமன்றம் கோர்பசேவுக்காக ஒரு நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தியிருக்கிறது. நவீன ஜெர்மனியின் வரலாற்றில் அவர் வகித்த பாத்திரம் முக்கியமானது. ‘1989ஆம் ஆண்டு சுவர் இடிக்கப்பட்டபோது நான் பெர்லினில் இருந்தேன். என் வாழ்வை மாற்றியமைத்ததற்கும் வரலாற்றுத் தருணமொன்றை நான் தரிசிப்பதற்கு உதவியதற்கும் கோர்பசேவுக்கு நன்றி’ என்கிறார் ஓர் சுதந்தர அரசியல் விமரிசகர் (@MuftiMufta).
‘வரலாறு அவரை அன்போடு நினைகூரும்’ என்கிறார் பில் கிளிண்டன்.
கோர்பசேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கு விளாதிமீர் புதினுக்கு நேரம் கிடைக்கவில்லை. கடுமையான பணிச்சூழல் என்று ஒதுங்கிக்கொண்டுவிட்டார். மாற்று ஏற்பாடாக, கோர்பசேவ் மறைந்த மருத்துவமனைக்குச் சென்று அவர் உடலுக்குச் சில விநாடிகள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். 1 நிமிடம் 28 விநாடிகள் நீளும் அந்தக் காணொளியை இணையத்தில் கண்டேன்.
கோர்பசேவின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. திறந்திருக்கும் கதவு வழியாக ஒரு பூங்கொத்தைச் சுமந்துகொண்டு வரும் புதின் கோர்பசேவை அமைதியாக அவதானிக்கிறார். அவருக்கு இடதுபுறம் கோர்பசேவின் பெரிய கறுப்பு வெள்ளை புகைப்படம் நிறுவப்பட்டிருக்கிறது. அதையும் சில விநாடிகள் பார்வையிட்டுவிட்டு மீண்டும் கோர்பசேவின் முகத்தைப் பார்க்கிறார். தலை குனிந்து வணங்கிவிட்டு, தனது இடது கையைச் சவப்பெட்டியின்மீது பதிக்கிறார். சிலுவைக் குறி இட்டுக்கொண்டு கதவை நோக்கி நடந்து போகிறார்.
கோர்பசேவ் என்னென்ன சாதனைகளுக்காக மேற்குலகால் கொண்டாடப்படுகிறாரோ அவை அனைத்தையும் புடின் ஒன்றுவிடாமல் அகற்றிக்கொண்டிருக்கிறார் என்கிறது புளூம்பெர்க் கட்டுரையொன்று. அதன் சாரம் பின்வருமாறு.
தான் ஆரம்பித்து வைத்த சீர்திருத்தங்கள் தனக்குப் பின்பும் தொடரப்படும். தான் அறிமுகப்படுத்திய ஜனநாயக சோஷலிசத்தை அடுத்தடுத்து வருபவர்கள் பலப்படுத்துவார்கள் என்று கோர்பசேவ் நினைத்திருந்தார். ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கோர்பசேவுக்கு நேர் எதிரானவராக புதின் இருக்கிறார். கோர்பசேவ் அமைதியான ரஷ்யாவை விரும்பினார். புதின் பலமான ரஷ்யாவை, அகண்ட ரஷ்யாவை, அதன் பண்டைய பெருமிதங்களோடு மீட்டெடுக்க விரும்புகிறார். கோர்பசேவ் ஒரு தோல்வியாளர். நான் அவர் வழியில் செல்லப்போவதில்லை என்பதை புதின் அழுத்தமாக தன் மக்களுக்கு உணர்த்த விரும்புகிறார். கோர்பசேவ் வழியில் சென்றால் தோல்வியும் அவமானமும்தான் சேரும். வெற்றியும் பெருமிதமும் வேண்டுமென்றால் உக்ரேனில் நடப்பதைப் போன்ற போர் நடைபெற்றாகவேண்டும். இதுதான் புதின்.
தி ஃபைனான்ஷியல் டைம்ஸ் கட்டுரையின் பார்வையும் இதுதான். ‘மறைந்த சோவியத் தலைவரும் இன்றைய ரஷ்ய அதிபரும் இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள். கோர்பசேவ் ஓர் அமைதிப் புறா என்றால் புதின் ஒரு வல்லூறு. கோர்பசேவ் கதவுகளைத் திறந்துவிட்டவர் என்றால் புதின் அக்கதவுகளை அறைந்து சாத்துபவர். முந்தையகாலக் கெடுபிடிகள் இனியும் இருக்கக்கூடாது என்று கோர்பசேவ் நினைத்தார். கட்டற்றச் சுதந்தரம் அவசியமல்ல என்பது புதினின் வாதம். கோர்பசேவ் சோவியத்தை நொறுக்கினார் என்றால் புதின் அதை மீள உருவாக்கத் துடிக்கிறார். அரசியலுக்காக மக்கள் ரத்தம் சிந்துவது தவறல்ல என்பது புதின் வழி. என்ன காரணத்துக்காகவும் வன்முறை கூடாது என்பது கோர்பசேவ் வழி. ரஷ்யா செழுமையடைய வேண்டுமானால் மரியுபோல் போன்ற நிகழ்வுகளைப் பொருட்படுத்தக்கூடாது. உக்ரைனில் மும்முரமாக இருக்கும் புதினுக்கு கோர்பசேவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள நேரம் இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.’
புடின் இந்த அளவுக்காவது கோர்பசேவின் உடலை நின்று பார்த்துவிட்டு சென்றாரே அதுவரை மகிழ்ச்சிதான் என்று நியூ யார்க்கரில் கிண்டலடிக்கிறார் புலிட்சர் விருது பெற்ற டேவிட் ரெம்னிக். ‘காரில் பறந்துசென்றுகொண்டிருக்குபோது அப்படியே ஜன்னல் வழியாகப் பூங்கொத்தை கோர்பசேவின் அறைக்குள் தூக்கி எறியாமல் இருந்ததற்கு அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’.
ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி செய்தியில் கோர்பசேவ் எவ்வாறு நினைகூரப்பட்டார் என்பதை பிபிசியைச் சேர்ந்த ஸ்டீவ் ரோஸன்பெர்க் கவனப்படுத்தியிருக்கிறார். ‘மேற்கத்திய தலைவர்கள் ஒரு பக்கம் கோர்பசேவைக் கட்டியணைத்துக்கொண்டே மறுபுபறம் சோவியத் யூனியனை அழித்துவிட்டார்கள். சோவியத்தை அழிப்பதுதான் அன்று அவர்கள் கனவு. ஆனால் இன்று ரஷ்யா இறந்துவிட்டது’
ரோஸன்பெர்க் கோர்பசேவை இறுதியாக 2019இல் நேர்காணல் செய்திருக்கிறார். ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான மோதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு கோர்பசேவ் அளித்த விடை இது.
‘அணு ஆயுதங்கள் இருக்கும்வரை பேரபாயம் நிலவத்தான் செய்யும். இன்று தீயவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள். அவர்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் என்னாகும்? அணு ஆயுதங்கள் அழிக்கப்படவேண்டும் என்று எல்லா நாடுகளும் முன்வந்து அறிவிக்கவேண்டும். நம்மையும் நம் கோளையும் காப்பதற்கு அது ஒன்றுதான் வழி.
‘நான் ஜப்பானைக் கண்டிருக்கிறேன். அமெரிக்கா குண்டு வீசிய நாகசாகி இன்னமும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அமெரிக்கா ஏன் அவ்வாறு செய்தது? எல்லோரையும் எச்சரிப்பதற்குதான். எங்கள் சொல்படி நடந்துகொள் இல்லாவிட்டால் ஜப்பானில் வீசியதுபோல் ஒரு சிறிய குண்டை உங்கள்மீது வீசுவோம். இதுதான் அமெரிக்காவின் செய்தி. இப்படிப்பட்டவர்கள் இன்னமும் நம்மிடையே இருக்கிறார்கள். போரின் அழிவுகளை கண்ட எங்களால், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைக் கண்ட எங்களால் இந்த அச்சத்தை உணரமுடிகிறது.
‘நான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளாராக வந்தபோது நகரம், கிராமம் என்று நாடெங்கும் சென்று மக்களைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, உரையாடினேன். அவர்கள் எல்லோரும் என்னிடம் சொன்னது ஒன்றுதான். மிகெய்ல் செர்கெயெவிச், எங்கள் பிரச்சனைகள் பற்றியெல்லாம், எங்கள் உணவுப் பற்றாக்குறை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். போதுமான உணவு எங்களுக்குக் கிடைத்துவிடும். நாங்கள் எப்படியாவது அவற்றை விளைவித்துக்கொள்வோம். எப்படியாவது சமாளித்துக்கொள்வோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். போர் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள், போதும்.’
சோவியத் யூனியன் சிதறுண்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். தற்சமயம் பிரிட்டனிலும் பிரெக்ஸிட் குரல் வலுத்துவருகிறது. நாங்களும் சிதறிவிடுவோம் என்று நினைக்கிறீர்களா? எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனும் கேள்விக்கு கோர்பசேவ் புன்னக்கிறார். ‘பிரிட்டன் சக்திவாய்ந்த நாடு. உங்களுக்கு நான் அறிவுரை கூற விரும்பவில்லை.
0
கோர்பசேவ் ஆட்சியில் அமர்ந்து, கிட்டத்தட்ட ஓராண்டில் செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது. கோர்பசேவ் அரசு அதை முதலில் மூடி மறைப்பதில்தான் அக்கறை காட்டியது. செர்னோபிலில் என்ன நடந்தது என்பது சொல்லப்படாததால் பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கதிர்வீச்சின் தாக்கத்துக்கு ஆட்பட்டனர். மூன்று வாரங்கள் கழித்தே கோர்பசேவ் வாய் திறந்தார். நடந்திருப்பது இயல்பான ஒரு விபத்துதான் என்றும் மேற்குலகம் இதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறது என்றும் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். செர்னோபிலின் உண்மையான தாக்கத்தை கோர்பசேவ் பின்னர் தெரிந்துகொண்டபோது மிகுந்த அவமானம் கொண்டார். ‘சோவியத்தின் பிரச்சனை ரகசியம் காப்பதுதான் என்பதை அவர் புரிந்துகொண்டுவிட்டார். இதன் நீட்சியாகவே வெளிப்படைத்தன்மையை (கிளாஸ்னாஸ்ட்) அவர் கொண்டுவந்தார்’ என்று ‘தி அட்லாண்டிக்’ இதழில் எழுதுகிறார் ஆன் ஆப்பிள்பாம்.
ஆப்பிள்பாம் சொல்வதை ஏற்கவேண்டுமானால் ஒரு குழந்தை பொம்மையை எடுத்துப் போட்டு உடைப்பதுபோல் கோர்பசேவ் சோவியத்தை உடைத்திருக்கிறார். இதைச் செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் அறியார். ஜனநாயக அமைப்புகளை அவர் வடிவமைத்துக் கொடுக்கவில்லை. ரஷ்யப் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கான அடித்தளம் அவர் அமைத்ததல்ல. அவர் செய்ததெல்லாம் பழைய அமைப்புகளைப் போட்டு உடைத்தது மட்டும்தான். உடைத்த இடத்தில் வேறு எதையும் அவர் நிர்மாணிக்கவுமில்லை. ஆனால் உடைத்தபின் நடந்தவற்றைப் பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
சோவியத் என்பது ஒடுக்குமுறை அமைப்பு என்பதை மக்களிடம் அவர் போதுமான அளவுக்கு எடுத்துச் சொல்லவேயில்லை என்கிறார் ஆப்பிள்பாம். தொடர்ந்து புதினை அவர் ஆதரித்து வந்ததையும் கிரீமியாவை புதின் ஆக்கிரமித்தபோது அவருக்கு ஆதரவு அளித்ததையும் சுட்டிக்காட்டுகிறார். கோர்பசேவ் எடுத்த முடிவுகள் அல்ல, எடுக்காமல் விட்ட முடிவுகள்தான் முக்கியமானவை என்பது ஆப்பிள்பாமின் பார்வை. அதாவது, வன்முறையைப் பிரயோகிக்கவேண்டிய தருணங்களிலெல்லாம் அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார். வன்முறையைப் பயன்படுத்தி அவர் தன் பதவியைத் தக்க வைத்திருக்கலாம், செய்யவில்லை. கோர்பசேவ் இதற்காகவே நினைவுகூரப்படுவார் என்கிறார் ஆப்பிள்பாம்.
0
கோர்பசேவின் காணொளிப் பேட்டிகள் சிலவற்றைப் பார்த்தேன். நிறையவும் நன்றாகவும் பேசக்கூடியவர்தான். ஆனால் எங்கோ தொடங்கி வேறொங்கோ திசைமாறிச் சென்றுவிடுவது அவர் வழக்கம் என்கிறார்கள் அவரைப் பேட்டிக் கண்டவர்கள். தனது இறுதிக்காலங்களில் பெருமளவு அமைதியாகவே இருந்திருக்கிறார்.
தன் மனைவியை ஆழமாகக் காதலித்தவர். இதை நினைவிலிருந்து எழுதுகிறேன். நீங்கள் இன்னொரு உலகில் பிறக்கவேண்டுமென்றால் எங்கே பிறக்க விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டபோது கோர்பசேவ் அளித்த பதில் இது. என் மனைவி எங்கே பிறப்பாரோ அங்கே!
கோர்பசேவின் மனைவி ரெய்ஸா 1999ஆம் ஆண்டு ரத்தப் புற்றுநோய் வந்து இறந்துபோனார். 46 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு திடிரென்று ஒரு நாள் ரெய்ஸா மறந்துபோவார் என்பதை கோர்பசேவால் ஏற்கமுடியவில்லை. மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும்போது வாய்விட்டுக் கதறியழுதிருக்கிறார். தனது சுயசரிதை நூல்களுள் ஒன்றை அவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். ‘என் வாழ்க்கைக் அதன் பிரதான அர்த்தத்தை இழந்துவிட்டது. இதற்குமுன்பு இப்படியொரு கொடுந்தனிமையை நான் உணர்ந்ததில்லை’ என்று தன் டைரியில் எழுதி வைத்திருந்தார். நான் சோவியத்தையோ ரஷ்யாவையோ அல்ல, ரெய்ஸாவைத்தான் திருமணம் செய்துகொண்டிருந்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
அவர் பாடினால் ரெய்ஸாவுக்கு மிகவும் பிடிக்குமாம். கோர்பசேவின் அலுவலத்தில் ரெய்ஸாவின் படங்கள் நிரம்பியிருந்ததை அவரைப் பேட்டி கண்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். பேட்டி கொடுக்கும்போது சட்டென்று குரல் உடைந்து, கண் கலங்கிவிடுவாராம். ரெய்ஸா இல்லாமல் போயிருந்தால் என்னால் எதுவும் செய்திருக்கமுடியாது என்பதை அழுத்தமாகப் பல முறை குறிப்பிட்டிருக்கிறார் கோர்பசேவ்.
0
கோர்பசேவ் குறித்து பல அஞ்சலிக் கட்டுரைகளை மேற்குலகம் வெளியிட்டுள்ளது உண்மை. ஆனால் அவரைத் துல்லியமாக எப்படி மதிப்பிடுவது, எப்படி அவரை நினைகூர்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்கிறது ஜேகோபின் எனும் இடதுசாரி இதழில் வெளிவந்துள்ள கட்டுரையொன்று. ஆட்சி முடியும்போது கோர்பசேவ் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார் என்பது உண்மை. ஆனால் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோவின் பிடி விரிவாகிக்கொண்டே போவதை அவர் எச்சரிக்கவும் தயங்கவில்லை.
கோர்பசேவ் ஸ்டாலினியத்தை எதிர்த்தார். தனக்குப் பின்னால் வந்த முதலாளித்துவமும் அவருடைய தேர்வு அல்ல. இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு பாதையை அவர் உருவாக்க விரும்பினார். ஸ்டாலின் வகை கம்யூனிசத்துக்கும் மேற்குலகின் முதலாளித்துவத்துக்கும் நடுவில் ஒரு புதிய வகை சோஷலிசத்தை உருவாக்கமுடியுமா என்று முயன்றார் கோர்பசேவ். அவ்வாறு முயன்றதுதான் அவர் சாதனை. அதுதான் அவர் பங்களிப்பும்கூட என்கிறது ஜேகோபின். இதைக் கடந்து மேலதிகம் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதற்கான சாத்தியங்களும் அப்போதைய அமைப்பில் நிலவவில்லை.
ஆப்கனிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புகளை கோர்பசேவ் திரும்பப்பெற்றுக்கொண்டதை அவருடைய பலகீனம் என்று புலிட்சர் விருது பெற்ற வில்லியம் டாம்பமன் அழைத்தார். குருஷேவைத் தொடர்ந்து கோர்பசேவின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர். அது பலகீனமல்ல, கோர்பசேவின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று என்கிறார் டேவிட் ரெம்னிக்.
ஜோ பைடனைக் காட்டிலும் கோர்பசேவ் நாகரிகமாக ஆப்கனிலிருந்து வெளியேறினார். ஆயிரம் இருந்தாலும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்கிறது ஜேகோபின் கட்டுரை.
0
கோர்பசேவுக்கு இறுதிச் சடங்குகளில் புதின் கலந்துகொள்ளாவிட்டாலும் ரஷ்யர்கள் பலர் வரிசையில் நின்று கலந்துகொண்டிருக்கின்றனர். கோர்பசேவைவிட ஸ்டாலினை விரும்புபவர்கள் அதிகம் பேர் என்றொரு கருத்துக் கணிப்பையும் பார்த்தேன். ரஷ்யர்கள் எல்லோரும் கோர்பசேவை வெறுக்கிறார்கள் என்பது எப்படி உண்மையில்லையோ அவ்வாறே மேற்குலகில் எல்லோரும் கோர்பசேவை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் உண்மையல்ல.
பெர்லின் சுவர் இடிக்கப்படவேண்டும் என்பது அவர் எடுத்த முடிவல்ல. ஆனால் அவர் எடுத்த வேறொரு முடிவின் விளைவாக சுவர் இடிந்து விழுந்தது. பீட்சா விளம்பரத்தில் தோன்றியவர் என்றாலும் ரஷ்யாவை ஒரு முழுமையான முதலாளித்துவ நாடாக மாற்றவேண்டும் என்பது அவர் எடுத்த முடிவல்ல. அவர் எடுத்த முடிவுகளின் விளைவால் ரஷ்யா அவ்வாறு இன்று மாறியிருக்கிறது. சோவியத் யூனியன் சிதறவேண்டும் என்பது அவர் எடுத்த முடிவல்ல. அவர் எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் சிதறியது. அவருக்குப் பின் வந்த யெல்ட்சின் அப்பணியை முழுமையாக நிறைவு செய்து வைத்தார்.
மேற்குலகின் அடிவருடி என்று கோர்பசேவை இடதுசாரிகள் உள்ளிட்ட சிலர் அழைக்கின்றனர். ‘மேற்குலகம் அவரை முதலில் வெறுத்தது. பின்னர் அணைத்துக்கொண்டது. அதன்பின் மீண்டும் ஒதுக்கியது’ என்று மேற்குலகில் இருந்தே சிலர் எழுதுகின்றனர். பீட்சாவோடு சேர்ந்து மேற்கத்திய ஜனநாயகமும் ரஷ்யாவுக்குள் வரும் என்று கோர்பசேவ் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. நடப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்பதை அவர் உணரவில்லை.
சோஷலிசத்தின்மீது பற்று கொண்ட பலரால் கோர்பசேவை மன்னிக்கவோ மறக்கவோ முடியவில்லை. கம்யூனிச விரோதி என்றும் எதிர்ப்புரட்சியாளர் என்றும் துரோகி என்றும் அவரை அழைக்கின்றனர். அல்லது அவர் மறைவை அமைதியாகக் கடந்து செல்கின்றனர்.
இனியும் இதேபோல் தொடரமுடியாது என்று தன் மனைவிக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார் கோர்பசேவ். பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது, கிழக்கு ஜெர்மன் தலைவர்கள் சரியான முடிவையே எடுத்திருப்பதாக ஜார்ஜ் புஷ், மார்க்ரெட் தாட்சர் உள்ளிட்டோரிடம் தெரிவித்திருக்கிறார். கம்யூனிசத்தின் வீழ்ச்சி பற்றிய செய்திகள் பிற இடங்களிலிருந்து வந்தபோதெல்லாம் அமைதியாகவே இருந்திருக்கிறார்.
சோஷலிசத்தின் பெயரால் கடும் குழப்பங்களை ஏற்படுத்திவிட்டோம். இனி அது பயன்படாது என்று தன் ஆலோசகரிடம் ஒருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறார் கோர்பசேவ். ஆனால் நெருக்கடி நேரங்களில் லெனினின் உரைகளை எடுத்து வைத்துக்கொண்டு வாசித்திருக்கிறார். ‘சீர்திருத்தப்பட்ட கம்யூனிசம்’ என்பதில் கோர்பசேவ் ஆர்வத்தோடு இருந்தார் என்கிறார் ஆன் ஆப்பிள்பாம்.
தன்னைப் படர்க்கையில் அழைத்துக்கொள்ளும் வழக்கம் கோர்பசேவுக்கு இருந்திருக்கிறது. என்னைப் பற்றி நீங்கள் எழுதி வரும் புத்தகம் எப்படி வந்துகொண்டிருக்கிறது என்று ஒருமுறை வில்லியம் டாப்மனிடம் கேட்டிருக்கிறார் கோர்பசேவ். கடினமாக இருக்கிறது என்று அவர் சொன்னதும் புன்னகைத்திருக்கிறார். ‘கோர்பசேவைப் புரிந்துகொள்வது கடினம்.’
கோர்பசேவைப் புரிந்துகொள்ளவும் அவரை மதிப்பிடவும் நமக்கு இன்னும் அதிகக் காலம் தேவைப்படும் என்றுதான் ஆனந்த விகடனில் நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையிலும் குறிப்பிட்டிருப்பேன்.
0